2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
காலையில் தூங்கியெழுந்தாள் மரிக்கொழுந்து. ரம்யா இன்னும் தூங்கிக் கொண்டு தானிருந்தாள். ராமனைக் காணவில்லை. அவன் ஏற்கனவே எழுந்து வேலைக்குப் போய்விட்டான் என்று புரிந்தது.
ஜன்னலைத் திறந்தாள். வெளியே வெயில் சுள்ளென்று அடித்து கொண்டிருந்தது. ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தபிறகு அப்போதுதான் அவளால் வெயிலைப் பார்க்க முடிந்தது. பளிச்சென்ற வெளிச்சம் கண்ணுக்குக் கொஞ்சம் இதமாக இருந்தது. சோம்பல் முறித்த போதுதான் உணர்ந்தாள், எங்கிருந்தோ மசாலா வாசனை வந்து மூக்கில் நுழைந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அல்லவா, அதுதான் யாரோ கறிக்குழம்பு வைக்கிறார்கள் போல என்று நினைத்தபடி ஒரு பெருமூச்சு விட்டவள், கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். இப்போது அந்த வாசனை இன்னும் தூக்கலாய் தெரிந்தது. கூடவே நாசிக்குள் புகுந்து உசுப்புமேற்றியது.
வலது பக்கம் குருவம்மாவின் வீடு. இடது பக்கம் ஒரு காலி மனை. ஆக குருவம்மா வீட்டில்தான் இன்று விசேஷம் போல என்று நினைத்தபடி, உள்ளே போய் பல்பொடியை எடுத்து பல்லைத் தேய்க்க ஆரம்பித்தாள். சோப்பைப் போட்டு முகம் கழுவிக் கொண்டாள்.
வெளியே இருந்த வாளியில் தண்ணீரை ஊற்றி, வாசலைத் தெளித்து கோலமாவு எடுத்துவந்து ஒரு கோலம் போட்டாள். உள்ளே போய் காசை எடுத்துக் கொண்டு போய் அடுத்த தெருவில் இருக்கும் பால் பூத்திலிருந்து பால் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு திரும்பியபோதுதான் பார்த்தாள், காம்பவுண்டு சுவரின் உள்பக்கமாய் குருவம்மாவின் மகன் பன்னீர் எதையோ அள்ளி அள்ளி ஒரு பிளாஸ்டிக் பையில் திணித்துக் கொண்டிருந்தான்.
உற்றுப் பார்த்தாள், அது கோழி முடி என்று புரிந்தது. பன்னீர் எப்போதும் கோழியை அங்கேதான் பொசுக்குவான் என்று அவளுக்குத் தெரியும். ஆக, ‘குருவம்மா அரைத்த மசாலா வாசனைதான் மூக்கைச் சுண்டியதோ‘ என்று நினைத்துக் கொண்டபோது லேசாய் ஒரு ஏக்கப் பெருமூச்சும் வரத்தான் செய்தது மரிக்கொழுந்துக்கு..
வீட்டுக்கு வந்து பாலைக் காய்ச்சி டீயைக் கலக்கி டம்ளரில் ஊற்றி குடித்துக் கொண்டே வந்தவளுக்கு நமது கோழிகளுக்கு தீவனம் போட வேண்டுமே என்ற நினைவு வர, டீ டம்ளரை வைத்துவிட்டு பழைய சாக்குப் பையில் இருந்து கொஞ்சம் கோழித்தீவனத்தை அள்ளிக் கொண்டு வந்து ‘கெக் கெக் கெக்‘ என்று சத்தம் கொடுத்தாள்.
அவளிடம் ஏழு உருப்படிகள் வளர்கின்றன. ஒரு சேவலும் மூன்று பெட்டைக் கோழிகளும் ஓடிவந்தன. இன்னும் இரண்டைக் காணவில்லை. ஒன்று முட்டைப் போட்டு அடை காத்துக் கொண்டிருக்கிறது. பத்து முட்டைகள் இட்டபிறகுதான் அடைகாக்க ஆரம்பித்தது.
இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்தி மறுபடியும் குரல் கொடுத்தாள். இன்னும் ஒன்று மெல்ல ஓடி வந்தது. யோசித்துப் பார்த்துவிட்டு கறுப்பியை மட்டும் காணவில்லையே என்று யோசித்தாள்.
எப்பொழுதும் அவளது குரலைக் கேட்டவுடன் எல்லாமே ஓடிவந்து விடும். மற்ற வீட்டுக் கோழிகளும் சேர்ந்து வருவதுண்டு. இன்றைக்கு அந்த கறுப்பி மட்டும் எங்கே போனாள் என்று யோசித்துக் கொண்டு திரும்பவும் கூப்பிட்டாள்.
இன்னும் மூன்று கோழிகள் ஓடிவந்தன. அவைகள் பக்கத்து வீட்டினுடயவை என்று தெரிந்தது. ‘ச்சூ…’ என்று அவைகளை விரட்டினாள். இரண்டு ஓடிப் போயின. ஒன்று மட்டும் இவளது சேவல் அருகில் வந்து ஜோடி போட்டுக் கொண்டு தீவனத்தை கொத்திக் கொத்தி தின்னவாரம்பித்தது. ஒரு சிறிய கல்லை எடுத்து குறி பார்த்து அதன் மேல் விட்டெறிந்தாள். குறி சரியாக பட, அது ‘ க்ராக் ‘ என்று கத்திக் கொண்டு ஓடிப்போனது.
திரும்பவும் கூப்பிட்டுப் பார்த்தாள். கறுப்பியை மட்டும் காணவேயில்லை. பகீர் என்றது அவளுக்கு. கறுப்பி இப்போதுதான் முட்டைப் போட ஆரம்பித்திருக்கிறது. என்னவாயிற்று அதற்கு, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
யோசித்து பார்க்கும்போது சொரேல் என்றது. ஒருவேளை பன்னீர் அள்ளிய கோழி முடி நமது கருப்பியின் முடியா… அப்படியென்றால் குருவம்மா நிஜமாகவே கறுப்பியை போட்டு விட்டாளா என்று நினைத்தபோது திகீரென்றது அவளுக்கு..
நான்கு நாட்களுக்கு முன்னால் அவளுடைய வாசலில் காய்ந்து கொண்டிருந்த கம்பை இவளது கோழிகள் ஓடிப் போய் கொத்தி தின்றிருக்கின்றன.
அப்போது, ‘இதுகளுக்கு இதே வேலையாயிடுச்சு, அடுத்தவள் வீட்டுல வந்து தின்னாத்தான் இதுகளுக்கு வயிறு நிறையும் போல‘ என்று திட்டியபடி ஒரு குச்சியை எடுத்து வீசியிருக்கிறாள் குருவம்மா. எல்லாம் கத்திக்கொண்டு பறந்திருக்கின்றன.
அப்போதே குருவம்மா சொல்லியிருக்கிறாள், ‘திரும்ப வாங்க இங்கே, கழுத்தைத் திருகி குழம்புலப் போட்டுடறேன்‘ என்று! அன்றைக்குச் சொன்னவள் இன்றைக்கு சாதித்துக் காட்டி விட்டாளோ என்று நினைத்தபோது கோபம் மண்டைக்குள் ஜிவ்வென்று ஏறியது.
எதற்கும் ஒருமுறை நன்றாகத் தேடித் பார்க்கலாம் என்று நினைத்து வீட்டைச் சுற்றி ஒரு வலம் வந்தாள். எல்லா கோழிகளும் அங்கே சுற்றிக் கொண்டிருக்கும்போது கறுப்பி மட்டும் எப்படி காணமல் போகும்.
சண்டைக்குப் போகலாமா என்று எழுந்தவள், கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நின்று விட்டாள். சண்டைப் போட்டு ஆகப் போவதென்ன. உன்னுடைய கோழியைத்தான் நான் அடித்து குழம்பு வைக்கிறேன் என்று நிரூபித்துக் காட்டுடி என்று அவள் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு வந்தால் நாம் என்ன செய்ய முடியும்.
அது நம்முடைய கறுப்பியாகக் கூட இருக்கலாம்தான். இல்லாமலும் இருக்கலாம். பன்னீர் கருப்பு முடிகளை அல்லி நானே என்று சொல்லலாம். ஆனாலும் கிட்டத்தட்ட எல்லா கோழிகளுமே ஓரளவுக்கு கருப்பாய்த்தானே இருக்கின்றன. வேறு எப்படி நிரூபிப்பது.
ஆனாலும் குருவம்மா மேல் கோபம் பற்றிக் கொண்டுதான் வந்தது. சண்டைப் போட்டால் அது வளர்ந்து கொண்டேதான் போகும், முடிகிற காரியமா என்ன என்று யோசித்தபோது மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டியது.
‘ பழிக்குப் பழி… ‘
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings