in , ,

சூலித்தெருவில் ஒரு சிறுவன் – சுசிதா அகர்வால் (தமிழில் பாண்டியன்)

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

ருபுறமும் சிறிதும் பெரியதுமான வீடுகள் கொண்ட பரபரப்பான தெரு அது. காய்கனிகளைக் கூவி விற்கும் வியாபாரிகள்,  பெருத்த கூச்சலில் பிறரிடம் வேலை ஏவிவிட்ட பின்னர்,  பால்கனிகளில் ஆபத்தான முறையில் வெளியே தன் உடலை வலைத்து கிசுகிசுக்கும் இல்லத்து வாசிகள், என அங்கு ஒருவரும் உலகை ஒரு பொருட்டென கொள்ளவில்லை. அங்கே இருக்கும் செவியை பிளக்கும் கூச்சல்களும், எண்ணவொன்னா வண்ணங்களும், நாசியை முக்கித் திணரடிக்கும் வாசனைகளும் வீச்சங்களும்  அந்தத் தெருவைச் சேராத எந்த ஒரு மனிதனையும் மூர்ச்சை அடையச் செய்துவிடும். ஆனால் அந்தத் தெருவின் குடியிருப்பாளர்கள் மட்டும் என்னவோ அதில் குதூகலித்திருந்தனர். அந்த சூலி தெருவை சுற்றிப் பிணைந்துள்ள அந்த கலந்து கட்டிய வாசனைப் பிரவாசத்தில் அவர்கள் செழித்து வளர்ந்தனர்.

ஒரு சிறுவன் – பாதி வாய் வியப்பு மேலிட திறந்த நிலையில், முகத்தில் ஒரு வித திகைப்புடன் நடந்து செல்வதைக் காண முடிந்தது. அந்த சூலித்தெருவிற்கு அது அவனுடைய முதல் திக்விஜயம் என்பது தெளிவாகிறது. அவனை உன்னித்து நோக்கினால், அவன் மிகவும் இளமையாக இருப்பதை உணரலாம், ஒரு பதினான்கு வயது இருக்குமா?  ஏதோ ஒன்றைக் கையில் ஏந்திக்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் எதையோ கேட்டுவிட்டு, அவர்களின் நகைத்து விரட்ட, சுவற்றில் அடித்த பந்து போல திரும்பிக் கொண்டிருந்தான்.

அச்சிறுவனிடமிருந்து சிறிது தூரம் தள்ளி, தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, அவனை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி ஒரு தங்க ஒளி வட்டம் இருப்பதாக அவளுக்குத் தெளிவான பிரம்மை இருந்தது, ஆனால் அது உண்மையா அல்லது அவளுடைய மனம் அவ்வாறு கற்பனை செய்து கொள்கிறதா என்று அவளால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. தன் சுருங்கிய நெற்றி மேலும் சுருங்க, வீடு வீடாகச் சென்ற அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரே இருந்த வீட்டை அவன் தட்டினான். வீட்டுக்கு வீடு பலமுறை நகைத்து நிராகரிக்கப்பட்டபின் கூட அவன் சோர்வடைபவனாகவோ விரக்தி அடைபவனாகவோ தெரியவில்லை. கிழவிக்கு ஒரே வியப்பு. எதிர்வீட்டுப் பெண்ணும் அவனைப் பார்த்துச் பகடியாகச் சிரித்து, அவனைத் திருப்பி அனுப்பினாள். இறுதியில் அவன் கிழவியின் பக்கம் திரும்பினான்.

கிழவி வீட்டுத் திண்ணையில் உரிமையுடன் அமர்ந்த அவன், தன் நெற்றி வியர்வையை தன் தோள்பட்டையை உயர்த்தி துடைத்துக் கொண்டே, அவளிடம் பேச்சு கொடுத்தான். “பாட்டி, எனக்கு கொஞ்சம் பாயசம் செய்து தருவியா? என்கிட்ட கொஞ்சம் அரிசி இருக்கு,” என்று அவன் தனது உள்ளங்கையில் சில தானியமணிகளைக் காட்டினான். “பாலும் சர்க்கரையும் கூட இதில இருக்கு”. சர்க்கரையும் பாலும் நிரம்பிய ஒரு வெள்ளிக் கிண்ணத்தைக் காட்டினான்.

வயதான பெண்ணும் சிரித்தாள். “இதைத்தான் வீடு வீடா போய் கேட்டு வரியோ?” என்றால், சிரிப்புக்கு மத்தியில். சற்றும் வெட்கம்இன்றி புன்னகைத்துக் கொண்டே “ஆமாமா” என்றான் சிறுவன். அச்சிறுவனை திருப்பி அனுப்ப அவளுக்கு மனமில்லை. அவனிடமிருந்து அரிசி, சர்க்கரை, பால் ஆகியவற்றை எடுத்து, சொச்சத்திற்கு தன்னுடைய பங்கையும் சேர்த்து, பானையில் போட்டு உலையைக் கொதிக்க வைத்தாள். பாயசம் சமைத்து முடிக்கும் வரை அங்கே எங்காவது ஓய்வெடுக்கலாமா என்று அவன் கேட்டான், மந்தகாசம் ததும்பும் புன்னகையோடு. வெளுக்கப்பட்ட சுத்தமான மெத்தை வைக்கப்பட்டிருந்த ஒரு மூலைக்கு அவனை வழிநடத்தினாள், பாட்டி.

மூதாட்டி பாயசப் பானையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்க, சிறுவன் உறங்கச் சென்றான். பாயசத்தின் அளவு அவள் நினைத்ததை விட அதிகமானது கண்டு அவள் வியப்படைந்தாள். அவள் அதில் அரிசியோ பாலோ அப்படி ஒன்றும் அதிகம் சேர்த்திருக்கவில்லை. இந்தப் பையன் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று எண்ணி, பானையை விடுத்து, தன் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

வீடெல்லாம் மணக்க பாயசம் விரைவிலேயே தயாரானது. ஆனால் அந்தப் பையனை எழுப்புவதற்கு முன்னரே, அவன் சமையலறையில் உட்கார்ந்து, கொதித்த பாயசத்தை சுவைக்கத் தொடங்கி விட்டதைக் கண்டாள். வாஞ்சையுடன் சிரித்துக் கொண்டே, “பார்த்துடா. ஜாக்கிரதை. கொஞ்சம் ஆரட்டுமே. என்ன அவசரம்?” என்றாள்.

“இது ரொம்பவே சுவையா இருக்கு பாட்டி, வாசனை வேறு மூக்கைத் துளைக்கிது. என்னை என்னாலேயே கட்டுப்படுத்திக்க முடியலையே!”

அவளும் அவனிடம் சேர்ந்து பாயசத்தைப் பகிர்ந்து கொள்ளலாமா என்று கேட்டு, தனக்கென ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டாள். அதுவரை அவள் ருசித்த பாயசங்களிலேயே சுவையானதாக இருந்தது அது. அவள் மீண்டும் சிறுவனைக் கண்டாள். நிச்சயமாக அவன் ஒரு சாதாரண சிறுவனாக அவளுக்குத் தோன்றவில்லை, ஆனால் அவள் முன்னர் பார்த்ததாக நினைத்த தங்க ஒளியை தற்சமயம் கண்டுபிடிக்க இயலவில்லை.

இருவரும் சாப்பிட்ட பின்னரும் கூட பானையில் உள்ள பாயசம் மிக சிறிதளவே குறைந்திருந்தது. அவனுக்கு வயிறு நிரம்பியவுடன் அவர் அந்த கிழவியிடம்  கழிவறையைப் பயன்படுத்தலாமா என்று கேட்டான்.

உள்ளே சென்ற சிறுவன், காலம் கழிந்தும்  வெளியே வராததால், மூதாட்டிக்கு ஏதோ தவறாக நடப்பதாகத் தோன்றியது. கவலை மேலிட அவள் கதவைத் தட்டினாள். பதில் இல்லை. அவன் பெயரைக் கூப்பிட்டு, ஏதாவது பதில் சொல்கிறானா என்று பார்த்தாள், அப்பொழுதும் பதில் இல்லை. அவள் கதவைத் திறக்க முயன்றாள், வியப்புக்குரிய வகையில் அது தாழிடப்படாமல் இருந்தது. சிறுவனின் தனிப்பட்ட நேரத்தில் இடையூறு செய்வதற்கு சஞ்சலப்பட்டவள், தான் உள்ளே வருவதை அவனுக்குத் தெரியப்படுத்தும் அளவிற்கு கூச்சல் போட்டுக் கொண்டே உள்ளே சென்றாள்.

உள்ளே எஞ்சியிருப்பதைக் கண்டதும் அவள் இதயம் ஏறக்குறைய துடிப்பதை மறந்தது.

பல தங்க நாணயங்கள். முதல் பார்வையில் பத்து, மறுமுறை எண்ணும்போது பதினைந்து, பிறகு அமைதியடைந்து மீண்டும் ஒரு முறை எண்ணும்போது முப்பது. வந்தவன் மாறுவேடத்தில் இருந்த இறைவன் என்பது அவளுக்கு இப்போது உறுதியாகிவிட்டது.

*

கிழவி ஒரே இரவில் செல்வந்தர் ஆகிவிட்டாள். சூலித் தெருவில் இருந்து அவள் வேறொரு நல்ல வீட்டிற்குக் குடிபெயர்ந்து விட்டாள். ஆனால் அவளுடைய திடீர் செழிப்பின் பின்னணியில் உள்ள உண்மை அவளுடைய அண்டை வீட்டில் இருந்த இர்ஷாவிற்கு மட்டுமே தெரியும். கோபத்தால் சிவந்து, பொறாமையால் எரிந்த அவள், அந்த மாயச்சிறுவன் திரும்பி வருவதற்காகக் காத்திருந்தாள்.

அந்தப் பையனும் மீண்டும் சூலிததெருவிற்கு வந்தான். இர்ஷா திகைப்படைந்தாள். ஆனால் சீக்கிரம் திகைப்பிலிருந்து மீண்டு, தன் பிரார்த்தனைக்கு விடையாக அவன் வந்திருக்கிறான் என்று எண்ணி,  அவனுக்குப் பிடித்த பாயசம் சமைக்க, பையனைத் தன் வீட்டிற்கு இழுத்துச் சென்றாள். ஆனால் அவளுக்கு நடந்தது அவள் எதிர்பார்த்தது அல்லவே!

தங்கக் காசுகளுக்காக பாயசம் கிண்டப்போன அவளது சமையலறை முற்றிலும் எரிந்து போய்விட்டது. அவன் ஏன் தனக்கு இவ்வளவு அநீதி செய்தான், கிழவிக்கு மட்டும் அவ்வளவு கரிசனமாக நடந்துகொண்டான் என்று அவள் அவனிடம் கேட்டபோது, அவன் அதே புன்னகை மாறாமல் பதிலளித்தான், “கிழவி எதையும் எதிர்பார்த்து அதைச் செய்யலையே. ஆனால் நீ பொறாமையால தானே இதையெல்லாம் செய்யறே. நீங்க செஞ்சதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் அதோட விலை என்னவோ அதைக் கொடுத்திட்டேன்.”

First appeared at https://talesofsuchita.com/2019/04/17/the-old-womans-good-fortune/

ஆசிரியர்: சுசிதா அகர்வால்

ஒரு எழுத்தாளர். வெவ்வேறு காலங்களில், நான் ஒரு ஆசிரியராகவும், ஒரு ஏஜென்சி ஆட்சேர்ப்பாளராகவும், முதுகலை பட்டதாரியாகவும், சமூக ஊடக நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். இலக்கிய உலகைக் கைப்பற்றும் அவரது திட்டத்திற்கு அனைத்தும் திரைமறைவு அடையாளங்களாக செயல்படுகின்றன.

தற்போது Blog chatter உடன் பணிபுரிகிறார், அங்கு நிறுவனம் சார்ந்த தளத்தின் மூலம் பிராண்டுகள் மற்றும் பதிவர்களை இணைக்க உதவுகிறார். talesofsuchita.com என்கிற இணைய தளத்தை நடத்தி வருகிறார்.

மொழி மாற்றம்: பாண்டியன் இராமையா

kadaisibench.wordpress.com என்கிற தளத்தில் தமிழிலும் dwaraka.wordpress.com என்கிற தளத்தில் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர். இந்திய வலைப்பதிவர்களின் திரட்டியான  grassfield.co.in என்கிற தளத்தை நடத்தி வருகிறார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மறக்க முடியுமா ❤ (சிறுகதை) – சுஶ்ரீ

    நான் யார் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி