சிற்பியின் முன்
வடிவம் இல்லாத
ஒரு கல்லாய் நான்…
எனை நானே
செதுக்கிக்கொள்ள முனைகிறேன்
முடியவில்லை…
என்னிடம் உளியில்லை
அவரிடம் கற்பனையுண்டு
ஒரு கல்லாய்
மட்டுமே இருக்கிறேன்
செதுக்கும்போது கண்ணில்முகத்தில் கைகளில்
சிறுதுகள்கள் பட்டுத் தெறிக்கும்
விரைவில் நான் சிற்பமாவேன்
உளியின் வலிகளை மறந்து
உருவமாக மாறுவேன்
சிற்பியே,
அடிமேல் அடிகொடுத்து
அழகிய உருவம்தந்தாய் நீ
உன்னாலே நானானேன் சிற்பமாக
மலையின் கல்லே என்தந்தையாக
உருவம்தந்த சிற்பியே என்தாயாக
நான் அவர்களின் குழந்தையாக
பகட்டாய் ஒளிரும் முன்னறையில்
திருதிருவென நிற்கும் உருவமோ
பட்டணத்து பெரியவீட்டின் நடுவறையில்
கம்பீரமாய் வீற்றிருக்கும் உருவமோ
பலரும் வணங்கும் கருவறையில்
சாந்தமாய் அமர்ந்திருக்கும் தெய்வமோ
செல்லுமிடம் அறியாது காத்திருக்கிறேன்
சிற்பக்கிடங்கில் பலசிற்பங்களுக்கு நடுவே
நானும் ஒரு சிற்பமாய்…!
சிற்பம் (கவிதை) – கவிஞர் அராதா – ஜனவரி 2021 போட்டிக்கான பதிவு
