எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கல்யாணம் ஆனி சில மாதங்களிலேயே கல்யாணிக்கு அந்த சந்தேகம் வந்தது, அவர் ஒரு ‘ஜொள்ளு‘ பார்ட்டியோ என்று.
போனில் பேசும்போது அப்படியே வழிந்து வழிந்து பேசுவார். அன்றும் அப்படித்தான் நெடுநேரம் பேசினார். இப்போது நிறுத்துவார், அப்போது நிறுத்துவார் என்று பொறுத்து பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்த கல்யாணி எழுந்து போனாள். எதேச்சையாக அவரும் பேச்சை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தார்.
‘ ரொம்ப நேரமா பேசினீங்க போல.. ‘ இவள் கேட்டாள்.
‘ எங்க ஸ்டெனோ, ரமா ‘ பதில் வந்தது அவரிடமிருந்து..
‘ ரமாவுக்கு எத்தனை வயசு இருக்கும் ‘ என்று கேட்க நினைத்து பிறகு பேசாமல் விட்டுவிட்டாள். அப்படி கேப்டது அநாகரீகம் என்றும் தோன்றியது. அவரது முகத்தை மட்டும் பார்த்தாள். உண்மைதான் பேசுகிறாரா இல்லை பொய் பெசுகிறாரா என்று அவரது முகத்தைப் பார்த்து புரிந்துகொள்ள முடியவில்லை.
‘ அந்தம்மாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா… ‘ என்று கேட்க நினைத்து அதையும் கேட்காமல் விட்டுவிட்டாள். இவள் நம்மேல் சந்தேகப் படுகிறாளோ என்பது போல உணருவாரோ என்று தோன்றவே அதையும் விட்டுவிட்டாள்.
சட்டென ஒரு யோசனை தோன்றி, அதை வேறுவிதமாக கையாள வேண்டி, ‘ ஒரு நாளைக்கு அவங்க ரெண்டுபேரையும் டிஃபனுக்கு கூப்பிடுங்களேன் ‘ என்றாள்.
‘ எந்த ரெண்டு பேரை ‘ வந்தது கேள்வி.
‘ அதான் உங்க ஆபிஸ் ஸ்டெனோ ரமாவையும் அவங்க வீட்டுக் காரரையும் ‘ என்றாள் இவள்
‘ பைத்தியம்… அவங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை… ’ என்று பதில் வந்தது.
‘ அதான் அப்படி சிரிச்சு சிரிச்சு பெசிநீன்களோ… ‘ நினைத்துக் கொண்டாள் இவள்
தொடர்ந்து அவரே சொன்னார்.
‘ அதுல ஒரு தமாசு… போனமாசம் அவளுக்கு ஒரு பேங்க் மாப்பிள்ளை ஜாதகம் வந்திருக்கு. போட்டோவ பார்த்திருக்காங்க. முன்பக்கம் முடி இல்லாமல் நெற்றி அகலமா இருந்திருக்கு… ‘
உடனே இவளுக்கு உள்ளுக்குள் தோன்றியது, ‘ இங்கே மட்டும் என்ன வாழுதாம்… ‘ சிரிப்பு வந்து அடக்கிக் கொண்டாள்.
இவலது எண்ணவோட்டம் எதையும் புரிந்து கொள்ளாமல் அவரே தொடர்ந்தார்… ‘ உடனே வேண்டாம்னுட்டாங்களாம். ரெண்டு நாள் கழிச்சு அவங்கப்பா புலம்பினாராம். ‘ தலை முடியைத் தவிர வேற என்னம்மா குறையை கண்டே.. இப்படியே சொல்லிட்டிருந்தீன்னா உனக்கும் முடியெல்லாம் கொட்டிடும். நீயும்தான் என்னன்னவோ தளமெல்லாம் போட்டு பார்க்கறே. தினமும் கத்தைக் கத்தையா சீப்புல முடி சேர்ந்ததுதான் மிச்சம். நாளைக்கு உனக்கு முடி அடர்த்தி இல்லைன்னு மாப்பிள்ளைகள் சொல்ல ஆரம்பிச்சுட மாட்டாங்களா… நீ நல்ல வரனை மிஸ் பண்ணிட்டியேம்மா… ‘ அப்படினாராம். அதைச் சொல்லிட்டு சிரிச்சாங்க ரமா.
‘‘நீங்க நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஒரு நல்ல வரனை மிஸ் பண்ணிட்டீங்க… ‘ அப்படினேன். திருதிருன்னு முழிச்சாங்க. அப்புறமா நான் சொன்னேன், இப்போத்தான் எனக்கு முடி இப்படி. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நிறைய முடி இருந்துச்சு…’ ன்னேன். ‘
என் தோள்ல தட்டிட்டு, ‘ போங்க சார் ஜோக்கடிக்காதீங்க… அப்படினுட்டாங்க… ’ என்றார்.
வந்தது கோபம் சுர்ரென்று அவளுக்கு.. ‘அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, அவங்களையே கட்டிக்க வேண்டியதுதானே…‘ என்று சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டு விட்டாள்.
மறுநாள் போனில் பேசிக்கொண்டிருந்தாள். இவள் எதிர்முனையில் பேசிக் கொண்டிருந்தது அவளது தோழிதான். அந்த நேரம் பார்த்து எதேச்சையாய் உள்ளே வந்தார் அவர். ஆபீஸ் முடித்து வருகிறார் என்று அவளுக்குத் தெரியும்.
அவளுக்குத் தோன்றியது, இவர் மட்டும்தான் போனில் சிரித்து சிரித்துப் பேசுவாரா. நான் பேச மாட்டேனா, அவரைக் கண்டுகொள்ளாமல் ரொம்ப நேரம் சிரித்து சிரித்து பேசி கொண்டே இருந்தாள். சிலசமயம் கொஞ்சலாய் பேசினாள். சிலசமயம் விழுந்து விழுந்து சிரித்தாள். அவருக்கு எரிச்சலை உண்டுபண்ண வேண்டும் என்றே அப்படி பேசினாள்.
ரொம்பநேரம் பேசிகொண்டிருந்துவிட்டு பிறகுதான் போனை கட் செய்தாள். பிறகு மெல்ல எழுந்து வந்தாள். அவர் அவளை நிமிர்ந்து பார்த்தபடி சொன்னார், ‘இடையில மூணு தடவை நான் கூப்பிட்டேன், டீ போட்டுத் தரச் சொல்லி. அதை கவனிக்காமகூட நீ பேசிட்டேயிருந்தே. சிரிச்சு சிரிச்சிக்கிட்டு… ’
‘பேச்சு ஜாலியா போனா நமக்கு சிரிப்பு வரத்தானே செய்யும்… ’ என்றபடியே போய் டீ போடலானாள்.
அப்படியே, நாம் யாரிடம் பேசினோம் என்று கேட்பாரோ என்றும் நினைத்துக் கொண்டாள். ஒருவேளை நாம் அப்படி விழுந்து விழுந்து சிரித்ததால் அவருக்கு ஒரு சந்தேகம் வந்து யாரிடம் பேசினோம் என்று கேட்பாரோ என்றும் நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அவர் கடைசிவரை கேட்கவே இல்லை.
இப்போதெல்லாம் கல்யாணி ரொம்பவும் மாறிவிட்டாள்.
யாரிடமாவது அவர் சிரித்துச் சிரித்துப் பேசினால்கூட அவள் கண்டுகொள்வதே இல்லை.v
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
சூடுபட்ட பூனை?