மற்றவை

சிறகுகள் ஒடிந்த பின்னும் …! By K.S.ஸ்ரீனிவாசன்

சில வாரப்  பத்திரிகைகளில்  ஒவ்வொரு  இதழிலும் பல துறைகளிலும் பிரபலமானவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியாகிறது. சாதனைகள் படைத்த மாற்றுத் திறனாளிகளைக் குறித்த  கட்டுரைகளும் வாரா வாரம் வெளியாகிறது.

இங்கே அப்படி ஒரு ஊனமுற்றவரின் வரலாறைச்  சொல்லப் போகிறேன். ஆனால் இவர் சாதனையாளரல்ல, வேதனையாளர். சிறக்குகள் ஒடிந்த பின்னும் சிகரமேறத் துடித்தவர்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சி என்னும் அழகிய கிராமத்தில் எல்லாக் குழந்தைகளையும் போல் நன்றாகத் தான் பிறந்தான் அவன். ஏதோ அவசரம் போல ஒரு வயதுக்குள்ளேயே நடக்கவும் பேசவும் தொடங்கி விட்டான்.

சிட்டுக் குருவியைப் போல துருதுருவென்று தெருவிலிறங்கி ஓடி விளையாடவும் ஆரம்பித்தான். ‘கிருஷ்ண விக்ரகம் போலிருக்கிறது’ என, அந்தத் தெருவில் அனைவருக்கும் குழந்தையை ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.

அவன் பட்ட அவசரமோ அல்லது யார் கண் பட்டதோ… ஒன்றரை வயதிருக்கும், ஒருநாள் சோர்ந்து படுத்த குழந்தையை தொட்டுப் பார்த்தால், உடம்பு அனலாகக் கொதித்தது

அப்படி மூன்று நாட்கள் வருத்தெடுத்து விட்டுப் போன கொடும்  சுரம் விட்ட போது, குழந்தையை தூக்கினால்  கை கால்கள் இயக்கமில்லாமல் உடலே துணியாகத் துவண்டது. தலை நிற்காமல் ஆடியது

இந்நிலை கண்டு பெற்றவர்களுக்கும் உற்றவர்களுக்கும் எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போய் இருந்திருக்கிறார்கள்

அந்தக் காலத்தில் வைத்திய வசதிகள் இப்போதைப் போல் முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. அதுவும் கிராமாந்திரத்தில்?  ஏதேதோ செய்து பார்த்து விட்டு கடைசியில் வர்மப்பிடி வைத்தியம் செய்திருக்கிறார்கள்.

ஒன்றரை வயதுக்கு குழுந்தைக்கு வர்மப்பிடி வைத்தியம்! அது  எப்படித் துடி துடித்திருக்கும்?

ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு, இடுப்பு வரை சரியாகி உட்கார முடிந்தது. இதற்கு மேல் சரியாகாது என்று வைத்தியர் சிகிச்சையை நிறுத்தி விட்டார்

ஓடி விளையாடிய கால்கள், ஓய்ந்து போய் துவண்டு கிடந்தன. பிறகு என்னென்னவோ சிகிச்சைகள்.

அவனை சுவர் மூலையில் நிற்க வைத்து, நெஞ்சு வரை மணலைக் குவித்து ஒருமணி நேரம் நிற்க வைப்பது. மீன் எண்ணை, மருந்தெண்ணைகளை  கால்களில் தடவி வெய்யிலில் உட்கார்த்தி வைப்பது, ஆயுர்வேதம், அல்லோபதி என்றிப்படி அசுர வைத்தியங்கள்

எல்லாம்  நம்பிக்கையூட்டி பின்பு எதோ ஓர் காரணத்தால் பொய்த்துப் போய் விடும். வயதாக ஆக அவனுக்கு உடல் நோவுடன் மன வலியும் கூடியது தான் மிச்சம்

சீக்கிரமே சிறகடித்துப் பறக்கத் துடித்த அந்தச் சின்னச் சிட்டின் சிறகுகளை கொடூரமாகப் பிய்த்தெறிந்தது விதி

அந்தக் கால எண்ணப் போக்குகளின் படியும் வசதியின்மையாலும் அவனால் பள்ளி சென்று கல்வி கற்க முடியவில்லை, வசதிகளும் இல்லை

சுய முயற்சியால் தமிழும் ஆங்கிலமும் அடிப்படை கணிதமும் கற்றுக் கொண்டான்.

காலம் ஓடிக் கொண்டிருந்தது. முறையான கல்வி கற்காததால், வேலைக்குச் செல்வதற்கோ வருமானம் ஈட்டுவதற்கோ வழியில்லாமல் போய் விட்டது

சூழ்நிலைகளின் சோதனைகளால் அவனிடம் இயற்கையாய் அமைந்திருந்த திறமைகளையும் வளர்த்துக் கொள்ள  முடியவில்லை. அவனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது, இனிமையாகப் பாடுவான்

இந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பினான், ஆனால் வசதியில்லை. திரைப்படங்களில் பாட மிகுந்த ஆசை இருந்தது, ஆனால் அதிர்ஷ்டமில்லையே

இந்த நிலையிலும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற அவனுடைய ஆவலும் ஏக்கமும் இன்னமும் அப்படியே இருக்கிறது. ஆனால் அவனுக்குத் தோல்விகளையும் துன்பங்களையுமே கொடுத்து வந்துள்ள விதி, இனியும் என்ன தீர்மானித்திருக்கிறதோ?

மூன்று தலைமுறையாக உறவினர்களால் அன்புடன் ஆதரவளிக்கப் பட்டு வருவதில் மட்டும், அவனுக்கு நல்வினை இருக்கிறது போலும். ஆனால் தங்கக்  கூண்டில் வைத்து வளர்த்தாலும், சுதந்திரமாக பறந்து திரியும் பறவைக்கு அது சிறை தானே!

வாழ்க்கையின் இறுதிச் சுற்றில் பல விதமான உடல் கோளாறுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் அவன்,  இப்போது தன் தாய்மொழி தமிழில் சிறுகதைகள் எழுதுகிறான்

மனது சோர்ந்து ஓய்ந்து விடாமல் இயக்கத்தில் இருப்பதற்கான முயற்சி

பத்துக்கும் மேற்பட்ட கதைகள் கைவசமுள்ளன. கடைசி மூச்சு விடுமுன்னாவது சிகரம் தொடும் சாதனைகள் செய்ய முடியாவிட்டாலும், சிறு பாறையையாவது தொட்டு விடும் அவன் ஆசை நிறைவேருமா ?

பல பத்திரிகைகளுக்கு அவன் எழுதிய  கதைகளை பிரசுரிக்கக் கோரி அனுப்பினான். எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்க முன்வரவில்லை. அங்கும் அவன் விதி குறுக்கே வந்து நிற்கிறது போலும்.

அவன்  இதுவரை எழுதியுள்ள கதைகளில் ஒன்றிரண்டு திரைப் படம் எடுக்கத்தகுந்த வகையில் இருக்கிறது. அதனால் இன்னும் சிகரமேறத் துடிக்கும் அவனின் நப்பாசையால்  சில திரைப்பட இயக்குனர்களை தொடர்பு கொண்டிருக்கிறான்! ஆனால் அங்கும் அவனுக்கு என்ன காத்திருக்கிறதோ

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார். அவன் அழுது கொண்டே சிரிக்கின்றான்!

அந்த அவன் நான் தான். ஆதரவான பதிலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி

#ad

    

   

#ad 

             

       

Similar Posts

One thought on “சிறகுகள் ஒடிந்த பின்னும் …! By K.S.ஸ்ரீனிவாசன்
  1. மிகவும்.. வேதனை. தங்களின் முயற்சி சிகரம் எட்டும் வரை இடைவிடாது உழையுங்கள். நிச்சயம் சிகரத்தை எட்டுவீர்கள் சகோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!