இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 91)
அந்தக் கடிதம் இத்தனை வருடம் கழித்து என் கையில் கிடைத்தது அதிர்ச்சியா அல்லது ஆனந்தமா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒரு வகையில் அரவிந்தனின் அறியப்படாத இன்னொரு பக்கத்தை உணர வைத்தது.
ஐசக் பலத்த பீடிகையோடு தான் அந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்தார். ஒரு தபால்காரர் என்பதையும் மீறி, ஐசக்கோடு எனக்கு ஆத்மார்த்தமான நட்பு இருந்தது
கொடுக்க வேண்டிய தபால் எதுவும் இருந்தால், “ஒரு கடுதாசி இருக்கு, கடைசியா வர்றேன்” என்றபடி கையசைத்து விட்டுச் செல்வார்
பட்டுவாடா எல்லாம் முடிந்த பிறகு சாவகாசமாக என் கடைக்கு வருவார். ஊர்க்கதை உலகக் கதை எல்லாம் பேசிவிட்டு நிதானமாகச் செல்வார்
நகரமும் அல்லாத கிராமமும் இல்லாத புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு மளிகைக் கடை, அத்தனை பரபரப்பாய் இருப்பதில்லை. மாடம்பாக்கம் தாம்பரத்திலிருநது ஒன்பது கிலோ மீட்டரில் இருக்கிறது
மாடம்பாக்கத்தின் எல்லை முடிகிற சாந்தா நகரில் இருக்கிறது என் கடை. பாலில் இருந்து தக்காளி வரை எல்லாமும் கிடைக்கிற மாதிரிதான் சரக்கு வைத்திருக்கிறேன்
இன்னமும் முழுமையாக குடியிருப்புகள் வந்து சேராததால், ஆள் நடமாட்டம் குறைவு தான். மரம் மட்டைகள் வெட்டி வீழ்த்தப்பட்ட பிறகு பொட்டலாய் கிடக்கும் செம்மண்திடலை நீள் செவ்வக வடிவில் அறுத்து எடுத்து போட்டது போல சாலைகள் குறுக்கும் நெடுக்குமாய் கிடக்கும்
இந்த நகரில், காக்கைகளின் குரல் அவ்வப்பொழுது கேட்கும். அதைத் தவிர வேறு குரல்களை அவ்வளவு சுலபமாக பெரிதாக, சப்தமாகக் கேட்க முடியாது.
நடக்கும் தூரத்தில் தேனுபுரீஸ்வரர் ஆலயம் இருப்பது தான் மிகப் பெரிய ஆறுதல்.
ஒரு மளிகைக் கடையின் கல்லாப் பெட்டியில், அதுவும் ஆள் வரத்து அதிகம் இல்லாத கடையில் அமர்ந்திருப்பது போன்ற ஆயுள் தண்டனை வேறொன்று இருக்க முடியாது.
யாரும் தான் வரவில்லையே என்று கல்லாவை விட்டு எழுந்து வந்து, காற்றாட தெருவில் நின்றால், அப்பொழுது தான் அரக்கப் பறக்க ஒருவர் வருவார்
அவர் வாங்க விரும்பிய பொருட்களை நாம் தயாராக கையில் வைத்துக் கொண்டு தெருவில் நிற்க வேண்டும் என்பது போல், ஒரு பதட்டத்துடன் கையில் சீட்டைக் கொடுப்பார்.
நின்று நிதானித்து தருவதற்கு வழி விடாமல், “சரி, சரி இருக்கறதை கொடுங்க.. மீதியை அப்புறம் பாத்துக்கலாம்” என அவசரப்படுத்துவார்.
அதுக்கப்புறம் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஈ, காக்கா வராது. எதிர்காலத்தில் நல்லா டெவலப் ஆகிவிடும் என்று ஒரு நம்பிக்கையில் கடைக்கு ஒரு பையனைக் கூடப் போடாம காலத்தை ஓட்டுகிறேன்
பொருட்களின் பரிமாற்றத்தைத் தவிர மனிதர்களைப் பொருட்படுத்தும் வழக்கம் கிராமங்களைத் தாண்டி இருப்பதே இல்லை.
கும்பகோணம் சக்கரபாணி மளிகைக் கடையில் சதா ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். ஏன் அப்பாவின் தறி நெசவுக்கூடத்தில் கூட அரட்டைப் பட்டாளம் ஒன்று எப்பொழுதும் இருக்கும்
சட்டைப் போடாத வெற்றுடம்புடன் அப்பா ஒரு பக்கம் தறி நெய்து கொண்டிருக்க, சகல விஷயம் பற்றியும் அவரிடம் கருத்துக் கேட்டு விட்டு தான் அந்தக் கூட்டம் நகரும்
எனக்கு இருக்கும் அதே ஏக்கம் ஐசக்குக்கும் இருக்கும் போலும். தபால் சேவை முன்பு போல் சுமையானதாக இல்லை. அலுவலகக் கடிதங்கள் தவிர, அதிகம் கடிதப் போக்குவரத்துக்கள் இல்லை.
எனவே பட்டுவாடா முடிந்ததும், என்னுடைய கடை தான் ஐசக்குக்கு சரணாலயம். அன்றைக்கும் ஒரு கடிதத்துடன் தான் வந்தார் ஐசக்
“அண்ணாச்சி இன்னிக்கு ஒரு பொக்கிஷத்தை உங்களுக்குத் தரப் போறேன்” என்றார்
“ஏதாவது வெயிட்டான மணியார்டரா?”
“அதில்லை அண்ணாச்சி, இது அதுக்கும் மேலே”
“பீடிகை பலமா இருக்கே, எனக்கு அப்படி என்ன பொக்கிஷம் வரப் போவுது? ரெண்டு மூணு பேங்குல லோன் தான் அடையாம கெடக்கு, அவனுக எதுனாச்சும் டாக்குமெண்ட்-ஐ கத்தையா அனுப்பி வச்சிருப்பானுக”
“இல்ல அண்ணாச்சி, இது நெசமாலும் பொக்கிஷம் தான், பாத்தா அசந்துடுவீங்க”
கொஞ்சம் போக்கு காட்டிவிட்டு அந்தக் கடிதத்தை நீட்டினார். அப்பாவின் கையெழுத்து..
“என்ன ஐசக்கு இது? அப்பா செத்துப் போயி ஒண்ணரை வருஷம் ஆவுதே, இப்ப எப்படி இது?” ஆச்சரியத்துடன் கேட்டேன்
“சொன்னேல்லே பொக்கிஷம்னு, எப்பவாச்சும் இப்படி எங்க டிபார்ட்மென்ட்ல நடக்கறது உண்டு. 60 வருஷம் கழிச்சுக் கூட ஒரு தபால் போய் சேர்ந்திருக்கு. தபால் பெட்டியிலயோ, லாக்கர்லயோ இந்த மாதிரி அபூர்வமா ஒரு சில கடிதம் சிக்கிக்கறது உண்டு. அப்புறம் யார் கண்ணுலயாவது மாட்டிக்கும், இல்ல எப்படியோ வழி மாறி வடநாட்டு பக்கம் போயிடும். தமிழ் தெரிஞ்சவன் கையில சிக்கும், அப்படி வந்த கடிதாசி இது”
அப்பா அதிகம் பேசுகிறவர் இல்லை, என்ன நினைக்கிறாரோ அதை எழுதுகிறவர். வருஷம் தவறாமல் அவரது டைரி நிரம்பி தான் கிடக்கும்
அதில் கணக்கு வழக்குகள் இருக்காது. சுந்தர ராமசாமிக்கும், கி.ரா.வுக்குமெல்லாம் பக்கம் பக்கமாக கடிதம் எழுதியிருக்கிறாராம்.
அவரது கடிதங்கள் சம்பிரதாய எழுத்துக்களாக இருக்காது.. ஒரு கதை மாதிரி அழகாக விரியும்.. ஐசக்கிடம் எப்பொழுதாவது அவரது சுவாரசியமான கடிதங்களைப் படித்துக் காண்பித்திருக்கிறேன்.
“உங்கப்பாவோட கடுதாசி ஒவ்வொண்ணும் இலக்கியம் அண்ணாச்சி” என்பார் ஐசக்.
உறையைப் பிரித்து உள்ளிருந்த கடிதத்தைப் எடுத்து படித்தேன்
“அன்புள்ள சின்னவனுக்கு,
நலம் தானே? பேரன் அரவிந்தன் எங்களோடு இருந்த நாட்களில், நானும் உன் அம்மாவும் பத்து வயது குறைந்தது போல் உணர்ந்தோம். வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவன் நிற்பது போலவும், விளையாடுவது போலவுமே இருக்கிறது
அவனும் உன்னை மாதிரியே புத்திசாலி. எத்தனைக் கேள்விகள் கேட்டான் தெரியுமா? பல சமயம் பதில் தெரியாமல் நாங்கள் இருவருமே விழித்திருக்கிறோம்.
குழந்தைகளுக்கு முன்னால் முட்டாளாய் இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் இல்லையா?
பத்து வருஷம் தவமிருந்து பெற்ற பிள்ளை இல்லையா அவன்? அரவிந்தன் ஒரு அற்புத சிருஷ்டி. சில சமயம் உன்னையும், சில சமயம் உன் அம்மாவையும், சில சமயம் என் அம்மாவையும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.
என்ன வேண்டும் என்று கேட்டால்.. ‘ஒண்ணும் வேண்டாம் தாத்தா, எல்லாம் என்கிட்ட இருக்கு’ என்கிறான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இத்தனை வருடங்கள் வாழ்ந்தும், கழிந்தும் அந்த வார்த்தைகளை என்னால் சொல்ல முடியவில்லையே என வெட்கப்பட்டுக் கொண்டேன்
ஆனாலும் அவனுக்கு ஒரு சந்தனக்கலர் சட்டை ஒன்று எடுத்துத் தரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. மழைத்தூறலின் சிறு கோடுகள் படுக்கை வாட்டத்தில் இருப்பது போல அதில் ஒரு டிசைன் இருக்க வேண்டும்.
தலை வழியே உள் நுழைத்து பிரஸ் பட்டன்களை அமுக்கி போடுவது போல இருந்தால் இன்னும் விசேஷம். உண்மையில் அது எனக்கு கனவுச் சட்டை
இப்பவெல்லாம் அழகழகான டிசைன்களில் அசர வைக்கும் வண்ணங்களில் ரெடிமேட் சட்டைகள் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் காலத்தில் அப்படி இல்லை. தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ ஒரு சட்டை எடுப்பார்கள். அதுவும் பெரும்பாலும் அப்பாவின் தேர்வாகவே இருக்கும்.
வளர்ற பையன் கொஞ்சம் தொள தொளன்னு இருக்கட்டும்னு டெய்லர் கிட்ட முன் கூட்டியே சொல்லிடுவார் அப்பா. அவர்தானே காசு குடுக்கப் போகிறவர். அதனால் அவர் பேச்சு தான் எடுபடும்
அண்ணன் தம்பி நாலு பேருக்கும் ஒரே மாதிரி சட்டை, ட்ரவுசர் ஒண்ணு கோடு போட்டதா இருக்கும் இல்ல கட்டம் போட்டது. ஜெயில் கைதிங்க மாதிரி போட்டுகிட்டுத் திரிவோம்.
உங்க அத்தைங்க பாடு இன்னும் மோசம். சீட்டித்துணியில பூ போட்ட டிசைன் கண்ணுல அடிக்கிற மாதிரி கலர்ல வாங்கி தைச்சிக் கொடுத்துடுவாங்க. அதுங்க பாவாடை நாடாவை இறுக்கிப் பிடிச்சுக் கட்டறதும், ஓடறச்சே அது கழல்றதும் பாக்க பரிதாபமா இருக்கும்
ஒரு கல்யாணத்துக்கு போனப்ப, அங்க நாயனக்காரரு ஒருத்தர் சந்தனக் கலர் சட்டை, அதுல வெள்ளையில தீட்டுனா மாதிரி சின்ன சின்னக் கோடுகள், ஜிப்பா ஸ்டையில்ல பொத்தான், கழுத்துல தேர் வடம் கணக்கா செயின், வாயில பன்னீர் புகையிலைன்னு அமர்க்களமா இருந்தார்.
அவரு தான் எனக்கு அப்ப ஹீரோ. அங்க பிடிச்சுது எனக்கு சந்தனச் சட்டை பைத்தியம். ஜன்னி கண்ட மாதிரி அதையே பினாத்திக்கிட்டுக் கெடந்தேன்.
கனவுல எல்லாம் அந்த சட்டையை போட்டுகிட்டு அந்த நாயனக்காரரு மாதிரியே நடந்தேன். ஒரே ஒரு வித்தியாசம் நெசத்துல அவரு நாயனம் ஊதுவாரு. கனவுல நான் நடந்து வருவேன் எனக்கு பின்னால யாராச்சும் ஊதிகிட்டு வருவாங்க
ஒரு தீபாவளிக்கு உங்க தாத்தாகிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த சந்தனக்கலர் சட்டைக்கு பெர்மிஷன் வாங்கிட்டேன். கடையில போயிப் பார்த்தா அந்த மழைக்கோடு இல்லை. சரி போவட்டும்னு பிளையினா எடுத்துகிட்டேன். தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கறப்பதான் அப்பா துணியே எடுப்பாரு
தைக்க கொடுக்க பின்னேயும் ரெண்டு நாளு தள்ளுவாரு. மொள்ள தேரை அசைக்கிற மாதிரி அவரை நவுத்தி துரைசாமி டெய்லர் கடைக்குத் தள்ளிட்டுப் போனோம்.
அவரு தானே நம்ம குடும்பத்துக்கு ஆஸ்தான டெய்லரு. எப்பொழுதும் அவரது கடையில் சின்ன சைஸ் டிரான்சிஸ்டரில், இலங்கை வானொலியின் தேர்ந்தெடுத்த பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்
அந்தப் பாடல்கள் பல சமயம் துணி வாங்க வருகிறவர்களுடைய காத்திருப்பின் சலிப்பை அல்லது கோபத்தை சாந்தப்படுத்தும் தந்திரமோ என்று கூட நினைப்பேன். ரேடியோ பாடாத சமயங்களில் துரைசாமியின் வாய் பாடிக் கொண்டிருக்கும்.
அன்றைக்கும் அப்படித் தான் துரைசாமி உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தார்.
‘நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகாராணி உனக்காக ஓடோடி வந்தேன்’
அப்பாவையும் எங்களையும் பார்த்ததும் இன்னும் முகம் மலர்ந்து பாடினார் துரைசாமி. மறக்காமல் அப்பா தனது இன்ஸ்ட்ரக்ஷனை ஒற்றை வரியில் சொல்லி விடுவார்
“துரைசாமி எப்பவும் போல வளர்ற புள்ளைங்க, பார்த்து தைச்சிடு”
“நீங்க சொல்லனுமா எனக்குத் தெரியாதா?” என்று சிரித்தபடியே சொல்லி விட்டு
“நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன், உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்..”
அளவு எடுக்கும் போது, அப்பாவுக்குத் தெரியாமல் ‘டைட்டா’ என்று சைகைக் காட்டினேன். துரைசாமி புரிந்தது போல தலையை ஆட்டி கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.
தைக்க கொடுத்தப் பிறகு அப்பா கடைத்தெரு போயிட்டு வர்றப்ப எல்லாம் அவரு கையையே பாத்துகிட்டு இருப்போம்.
அவரு எந்த சலனமும் இல்லாம “சோத்தைப் போடு, அப்பளம் வையி”ன்னு யதார்த்தமா இருப்பாரு. ஆனா எங்களுக்குத்தான் திக் திக்குன்னு இருக்கும்
ஒரு வேளை சட்டை, வண்டி பெட்டியில இருக்குன்னு சொல்லுவாரோன்னு பாத்துகிட்டு இருப்போம். ஆனா அவர்கிட்டே இருந்து எந்த அறிகுறியும் இருக்காது.
அம்மா மென்னு முழுங்கி, “டெயிலரைப் பார்த்தீங்களா”ன்னு கேப்பாங்க
“ஆஹா அதைத் தான் மறந்துட்டேன்” அப்படிம்பாரு. எங்களுக்கு எல்லாம் வடிஞ்சிடும்.
அடுத்த நாள் இதே காட்சி தொடரும். ஒருநாள் அவராகவே “நாளைக்குத் தர்றேன்”னு சொன்னான் அப்படின்னாரு. அதாவது தீபாவளிக்கு ரெண்டு நாளு முந்தி
எப்படா விடியுமுன்னு காத்துக் கெடந்து அடுத்த நாளு அப்பாவை எதிர்பார்க்காம, நாமளே கடைக்குப் போயி கேட்டுருவோம்னு கெளம்பிட்டேன்.
என்னைப் பார்த்ததும் தொரைசாமி “ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன். அட சின்ன மொதலாளி, இங்கப் பாருடா, சந்தனச்சட்டையை பாக்க வந்திருக்காரு. டேய் காதரு எங்கடா அந்த சட்டை?” அப்படின்னாரு சிரிச்சுகிட்டே.
“அது காஜா எடுக்கப் போயிருக்கும்” அப்படின்னான் காதர், தலையை நிமிர்த்தாமல்
“அதுக்கு ஸ்பெஷல் பட்டன் வைக்கணும்ல அதான் அக்காகிட்ட தைக்க வீட்டுக்கு அனுப்பி இருக்கேன். ஒரு எட்டு மணிக்கு ரெடியாயிடும். நீ கவலைப்படாம வீட்டுக்கு போ ராசா … உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்” அதே உற்சாகத்தோடு துரைசாமி
மணி நாலு தான் ஆகி இருந்தது. வீட்டுக்கு வந்தேன். அன்று பார்த்து எல்லா கடிகாரமும் அநியாயத்துக்கு மெல்லமாக ஓடியது. வந்த கோவத்துக்கு கடிகாரத்துக்கு உள்ளாற போயி முள்ளை தள்ளி விடலாமான்னு நெனச்சேன்
அவ்வளவு ஆத்திரம். ஏழரைக்கு மேல தாக்குப் பிடிக்க முடியலை. கடைக்குப் போனா தொரைசாமி தலையை நிமித்தாம தச்சிகிட்டு இருந்தாரு. நெருப்பை கால்ல கொட்டுனது கணக்கா நெளிஞ்சுகிட்டு நின்னேன்.
ஒரு வழியா நிமிர்ந்துப் பாத்தவர் “டேய் காதரு, என்னடா பண்றான் அந்த லாண்டரி கடைக்காரன். போயி அவன்கிட்ட ரெடியான துணியை மட்டும் வாங்கி வா? அப்படியே எஸ்.என் ஆர் கடையில ரெண்டு பாபின் வாங்கிட்டுவா” என்று
சொல்லி விட்டு, பாடாத ரேடியோவை எடுத்து மேலும் கீழுமாக மும்முரமாக தட்டினார்.
காதர் கிளம்பினான். எனக்குள் மல்லிகைப்பூ பூக்கத் தொடங்கி அந்தக் கடைதெரு முழுவதும் வாசனை பரவுன மாதிரி இருந்துச்சு. காரணம் இல்லாம எல்லாரையும் பார்த்து சிரிச்சேன்.
“டைட்டா தச்சிருக்கிங்களா?”
“பின்ன… செம டைட்டு. தங்கச்சுரங்கத்துல சிவாஜி கணேசன் போட்டுருப்பாரே அது மாதிரி. உங்க அப்பாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தான் தெரியலை. அவரு கண்டிப்பா என்ன திட்டப் போறாரு, பாத்துக்குவோம். இத கூட சின்ன மொதலாளிக்கு செய்யலன்னா எப்படி?”
பெருமிதமாய் சிரித்தேன்.
“அண்ணன் அக்காங்களோட சட்டை?”
“எல்லாம் ஓட்டுக்கா அயனிங்குக்கு போயிருக்கு” காதர் காற்றில் பைக் ஓட்டிக்கொண்டே வந்து கடைக்கு முன் ஸ்டாண்ட் போட்டான். அவன் கையில் துணி ஏதுமில்லை. கால்சட்டையிலிருந்து பாபினை டேபிளில் வைத்து விட்டு தன் வேலையில் ஐக்கியமாயிட்டான்.
“போன வேலை என்னடா ஆச்சு.. என்ன சொன்னான் லாண்டரி”
“இடையில கரண்டு போயிடுச்சாம், அதான் லேட்டாம். பத்து மணிக்கு வரச்சொன்னாரு”
“பத்து மணியா? ஏண்டா புள்ளை எப்பத் தூங்கி எப்ப எந்திரிச்சு எப்ப வெடி வெடிக்கறது. நின்னு வாங்கிட்டு வரதில்லை.. தீவட்டி.. தீவட்டி.. ஓண்ணு பண்ணுங்க தம்பி, நீங்க நேரா வீட்டுக்கு போங்க.கடைய சாத்திட்டு வர்றச்ச நானே வந்து வீட்டுல குடுத்துடறேன்.. கவலைப்படாம போயி தூங்குங்க”
வீட்டுக்கு வந்த எனக்கு தூக்கமே இல்லை. மறுபடியும் ஒரு தலையணை நனைந்தது. ராத்திரி ஏதோ வேலையா கடைக்குப் போன அப்பாவும் வெறுங்கையோடதான் திரும்பினார்.
“கடையை சாத்திட்டு வரச்சே வீட்டுல குடுத்துடறேன்னு சொல்றான். காலையில படைக்கறச்ச சட்டை இருந்தா போதுமில்ல அதுக்கு மின்னாடி வந்து என்ன பண்ணப் போறீங்க” என்று அம்மாவிடம் அப்பா சத்தம் போட்டது காதில் விழுந்தது.
ரொம்ப நேரம் தூங்காமயே இருந்த நான், எப்பத் தூங்கினேன்னு எனக்குத் தெரியாது.
மறுநாள் காலையில அம்மா எழுப்பினப்ப தான், வெடி சத்தமெல்லாம் கேட்டு, “அய்யோ தீபாவளியாச்சே.. அது தெரியாம தூங்கிட்டமா?”னு அரக்க பரக்க எந்திரிச்சேன்.
ஓடிப்போய் சாமி ரூம்ல பார்த்தேன். அங்க தானே புதுத் துணியை படைக்க வச்சிருப்பாங்க..ஆனா தட்டுல பழம், பணியாரம், வெத்தலை, சூடம் எல்லாம் இருந்துச்சு புதுத் துணிங்களைத்தான் காணும்.
ஏற்கனவே எழுந்திருந்த என் அண்ணனுங்க, அக்காங்க எல்லாம் அழுது கண்ணு வீங்கிக் கெடந்தாங்க. அப்பா குளிச்சுட்டு இடுப்புல துண்டைக் கட்டிகிட்டு வந்தவர்
“கயவாலிப்பய இப்படி பண்ணிப்புட்டானே, தெரிஞ்சவன்னு தானே அவன்கிட்ட குடுத்தோம்..சரி வுடுங்க.. காலையில கடை தொறந்ததும் வாங்கிடலாம்”னாரு
அந்த வயதில் தீபாவளிக்கு புதுத் துணி போடாமல் வெடி வெடிப்பது போன்றதொரு அவமானம் உலகத்தில் வேறொன்று இல்லை. நான் பலகாரங்களை சாப்பிடாமல் புறக்கணிப்பு செய்தேன்.
ஒன்பதானதும் வேகமாகக் கடைக்கு ஓடினேன். கடை பூட்டி தான் கிடந்தது. காதர் வெளித்திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான்
நான் காதரை எழுப்பினேன். கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்தவன், என்னைப் பார்த்ததும், ”இன்னுமா உன் துணி வரலை?”னு கேட்டான்
நான் உதட்டைப் பிதுக்கி இல்லை என்பது மாதிரி தலையை ஆட்டினேன்.
காதர் எழுந்து கடையின் ஜன்னலைத் திறந்து “உள்ளப்பாரு உன் சட்டை இருக்கான்னு” அப்படின்னான்
நான் ஜன்னல் வழியே பார்த்தேன். என் சட்டைத்துணி இருந்தது அதற்கு கீழே பத்திரமாக அண்ணன் அக்காக்களோட தைக்காத துணிகள். தொரைசாமி உட்கார்ந்திருந்த ஸ்டூல் மீது.
எப்படி கொடுத்தமோ அப்படியே இருந்தன. அதன் மீது உட்கார்ந்தபடி தான் தொரைசாமி எல்லா ரீலையும் ஓட்டி இருக்கிறார் என்று நினைத்தபோது கோபம் கோபமாக வந்தது.
நான் அழுதுகொண்டே துரைசாமி வீட்டுக்குச் போனேன். துரைசாமி உடம்பை அசைக்க கூட முடியாமல் படுத்துக் கிடந்தார். என்னவோ தசை கூட்டு பிரச்சினையாம் கழுத்திலிருந்து இடுப்பு வரை அசைக்க கூட முடியவில்லையாம்.
யாரையும் திரும்பிப்பார்க்க கூட அவரால் முடியவில்லை. ஒவ்வொரு அசைவுக்கும் “அய்யோ அம்மா” என்று கத்தினார். அவரது மனைவி சாரதா அழுது கொண்டே இருந்தாள்.
உள்ளூர் வைத்தியரின் அதிரடி வைத்தியங்கள், அக்கம் பக்கம் உள்ளவர்களின் கைவைத்தியங்கள் இப்படி எதுவும் பலிக்கவில்லை. ஆம்புலேன்ஸ் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போலவே இன்னும் சிலர் அங்கு வெளியே நின்றிருந்தனர்
“சொல்ல சொல்ல கேக்கவே இல்லைங்க .. ஆறு மாசமா அவருக்கு கழுத்து வலி இருக்குதுங்க. மோஷன் சரியாவே போகலை. அதுக்கு டாக்டர்கிட்ட காமிச்சப்பவே அவரு சொன்னார். இன்னும் ரெண்டு மாசத்துக்கு தையல் மெஷின்ல உக்காரவே கூடாதுன்னு.. கேக்கவே இல்லைங்க.
புள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டனும், ராமசாமிகிட்ட வாங்குன பணத்துக்கு வட்டி கட்டணும்னு வலிக்க வலிக்க தச்சாரு. இப்ப இப்படி படாத பாடு படறாரு. எழுந்து உக்கார முடியலை. திரும்ப முடியலை. நிமிரக்கூட முடியலை” என்று கதறிய சாரதாவிடம் என்னவென்று கேட்பது?
கடைசியில் ஆடிய காலும் பாடிய வாயும் முடங்கிப் போனது. ஒரு முறை நெல்லு மண்டி சம்மந்தம் அவர் வீட்டுப் பக்கம் போனப்ப, இன்னும் இளைத்து மோசமாகி படுத்த படுக்கையா கெடந்திருக்காரு.
ரெண்டு பழம் வாங்கிக் குடுத்துட்டு சம்மந்தம் திரும்ப வந்துட்டாரு.
கடை வாடகை பாக்கின்னு கடைக்கு ஓனர் தங்கப்பன் தையல் மெஷினையும், மிஞ்சினத் துணியையும் எடுத்துக்கிட்டாரு. அவரு ஒரு அடாவடியான ஆளு அவர்கிட்ட போயி எப்படி கேக்கறதுன்னு பயந்து எல்லாரும் விட்டுட்டாங்க
அந்தத் தீபாவளி முடிஞ்ச மூணாவது மாசத்துல உங்க தாத்தா விஷக் காய்ச்சல் கண்டு செத்துட்டாரு. அதுக்கப்புறம் எனக்கு தறிதான் கதின்னு ஆயிடுச்சு.
தறியில உக்காந்தப்புறம் எங்க சட்டை போடறது. வேர்வை கசகசப்புல எந்த சட்டையையும் போட முடியாது. அவ்வளவு தான் நம்ம சட்டைக் கனவு
கலைஞ்சு தீஞ்சு போயிடுச்சு.. இப்ப எனக்கு தொரைசாமி மேல கோவம் இல்லை. பாவம் இந்த சின்ன ஊர்லே தீபாவளிக்கு தீபாவளி தான் சம்பாதிக்க முடியும். மஸ்கிலொ ஸ்கெலெட்டல் டிஸிஸ் அப்படின்னு அவருக்கு வந்த நோய்க்கு பேரு கூட சொன்னாங்க.
தையல்காரர்கள் சிலருக்கு அதிகபட்ச பணிச்சுமை காரணமாக வருமாம். உடல்தான் அவருக்கு மூலதனம். அதுவும் நைந்து பழந்துணி மாதிரியானால் என்ன பண்ண முடியும்?
பாவம் எங்க இருக்காரோ என்ன சிரமப்படுகிறாரோ? அவரது கை வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எத்தனை பண்டிகைகள் அவரால் மறக்க முடியாததாக அழகானதாக இருந்திருக்கின்றன.
எத்தனை பிள்ளைகளை மாப்பிள்ளைகளாய் மாற்றி இருப்பார். எங்களின் இளம்வயது ஹீரோக்களில் அவரும் ஒருவர்தான். தையல் மெஷின் முன் அவரது குனிந்த உருவம் பலரை நிமிர வைத்து காலரை தூக்கி நடக்க வைத்திருக்கிறது.
இப்பவும் பிடிதுணிக்காக அம்மா வைத்திருந்த உன் தாத்தாவோட சட்டையின் காலர் உள்பகுதியில் துரைசாமி டைலர் என்கிற பெயரைப் பார்க்கும் பொழுது ஒரு சிலிர்ப்பு வரத்தான் செய்கிறது.
போனதரம் அரவிந்தன் ஊருக்கு வந்தப்ப தான் சொன்னான். அவனுக்கும் சந்தனக்கலர் சட்டை, அதுவும் ஜிப்பா மாதிரி இருந்தா புடிக்கும்னு. அடடா இந்த குரோமோசோம் என்ன வித்தையை எல்லாம் பண்ணுது பாரு
எங்கக் கெடந்த ஆசையை, எங்கக் கொண்டி சேர்க்குது பாரு. அதான் அவனுக்குன்னுத் தேடி அந்த சட்டைத்துணியை புடிச்சேன். நேத்திக்கு போன்ல பேசறச்ச சொன்னான், நீ அத இன்னும் தைக்கக் குடுக்கலைன்னு
கெழப்பய மாதிரி இருக்கும்னு கிண்டல் பண்ணினியாம்.. சின்னவனே…. மனுசப்பயலுக ஆசைக்கு வரைமுறையெல்லாம் கெடையாது.. அடுத்தவங்க எண்ணத்துக்கு எல்லாம் தகுந்த மாதிரி ஆசையை வடிவமைக்க முடியாது..
அதுவும் சின்ன வயசுல வர்ற ஆசைக்கு யாரும் அணை போடவும் முடியாது.. சீக்கிரம் அத அவன் ஆசைப்படி தைக்கக் குடுத்துடு..
ஒரு டெய்லர் கிட்ட பழியா கெடந்து, அப்புறம் அந்த துணியை வாங்கித் தொட்டுப்பாக்கறதுல இருக்கற சந்தோஷம் இருக்கே.. அடடா.. ரெடிமேட் ட்ரெஸ் வந்தப்புறம் புதுத்துணி சந்தோஷமெல்லாம் ஒரு சில நிமிஷம் தான்..
அந்த சந்தனக்கலர் துணியை மொதல்ல தைக்கக் குடு.. முக்கியமா அத அரவிந்தனையே போய் வாங்கிட்டு வரச்சொல்லு.. அப்பதான் ஒரு துணியை நேசிக்கிற பழக்கம் வரும்..
அது கசங்கும்போதோ, கிழியும் போதோ அவ்வளவு துக்கமா இருக்கும்..
தீப்பெட்டி மாதிரி சின்னக் கடையில இருந்துகிட்டு அந்த டெய்லருங்க தைக்கறது துணியை மட்டுமில்ல.. துணிக்கும் நமக்குமான பந்தத்தை.. அடுத்த முறை அரவிந்தனை அந்தச் சட்டையில பாக்க ஆசை…
வேணும் பதில்.. வேணும் நலம்..
இப்படிக்கு
அப்பா”
படித்து முடித்ததும் இருவரும் ஒன்றும் பேசவில்லை. சரியான சமயத்தில் கிடைத்திருந்தால், அப்பாவின் விருப்பத்தையும் அரவிந்தனின் விருப்பத்தையும் புரிந்து கொண்டிருக்கலாம்
அவரின் ஆசைக்குரிய சந்தனச்சட்டையை அரவிந்தன் அணிந்து அவர் பார்க்கின்ற விருப்பத்தையும் தன் அலட்சியமான கிண்டல் பொசுக்கி இருந்தது இப்பொழுது தான் புரிகிறது.
அது இன்னமும் துணியாகத் தான் கிடப்பது நினைவுக்கு வந்தது. அரவிந்தன் அப்பா மாதிரி… வாயைத் திறந்து அதிகம் பேச மாட்டான்
எதையும் நேரடியாக சொல்ல மாட்டான்… தனக்கு பிடித்தது பிடிக்காதது என்று எதையும் வரையறுத்து வலியுறுத்த அவனுக்குத் தெரியாது. அவனுக்குள் அப்படி ஒரு ஆசை இருப்பது இதுநாள் வரை தெரியாமல் போயிற்றே என்று வெட்கமாக இருந்தது.
ஒரு விதத்திலே அடம் பண்ற பிள்ளைங்க தேவலை என்று தான் தோன்றிற்று.
“ஐசக்கு… கோழிப்பண்ணைகிட்ட ஒரு டெய்லர் இருக்காரே. அவரு கடை எத்தனை மணி வரை தொறந்திருக்கும்?” என விசாரித்தேன், என் மகனை அழைத்துச் செல்ல
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
அருமையான கதை. அப்படியே அந்தப் பெரியவர் பேசறது போலவே இருந்தது.