சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 59)
கீழப்பூங்குடி கிராமம். எப்பவாவது பஸ் வரும். அந்த பஸ்சில் வரும் மக்களெல்லாம், கையில் பூ, பழங்களுடன் வந்து, தேரடிக் கொட்டகையில் காத்திருப்பார்கள். எந்தெந்த ஊரிலிருந்தோ வருவார்கள்.
அங்கே காட்டுக்குள் ஆற்றோரம் உள்ள ஐயனார் கோயில் மிகவும் பிரபலம். ஐயனார் சாமியின் குதிரைக்கு சலங்கை கட்டி, வைகாசி திருவிழாவில் பிரார்த்தனை செய்வார்கள். அந்த ஐயனார் கோயிலின் பூசாரி, வேலுசாமி. அவனைப் பார்க்கவே பயமாக இருக்கும்.
வேலுசாமி, ஐயனார் கோயில் பூசாரியாக மட்டுமில்லாமல், தேரடிக் கொட்டகையில், பௌர்ணமி அன்று, அருள்வாக்கு சொல்லுவது பழக்கம். அவன் அருள்வாக்குக்காக பாதி ஊர் திரண்டு, படி வாசலில் நிற்கும்.
பால்குடிக்க அடம் பிடிக்கும் குழந்தையிடம், சாமியாடி வர்றார் என்று சொன்னால் போதும். அழுத குழந்தை பால் குடித்து விட்டு, தூங்கி விடும். தெருவில் குரைக்கும் நாய், வாலைச் சுருட்டிக் கொண்டு, ஒரு மூலையில் படுத்து விடும்.
ஐயனார் கோயிலில் சித்திரை, வைகாசியில் திருவிழா அமோகமாக நடக்கும். அங்கு வரும் மக்கள், பிரார்த்தனை செய்து விட்டு, உண்டியலில் தான் பணத்தைப் போட வேண்டும். பூசாரிக்கோ, வேறு யாருக்கோ எதுவும் கொடுக்கக் கூடாது என்பது, தர்மகர்த்தாவுடன் சேர்ந்து எடுத்த ஊர்க் கட்டுப்பாடு.
திருவிழாவில் கரகம், நய்யாண்டி, மேளம் என்று பாரம்பர்ய கூத்தெல்லாம் நடந்தது. அங்கு வெடி, மத்தாப்பு போடும் முருகன், பூசாரி வேலுசாமிக்கு மைத்துனன். வேலுசாமிக்கு அவனைப் பிடிக்காது
காரணம், பூசாரியின் மகள் செவந்தி, முருகனைத் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், என்று ஒரே பிடிவாதமாக இருப்பது தெரியும்
பூசாரி வீட்டுக்கருகே ஐயனார் தேரில் வர, முருகன், காது செவிடாகும்படி வெடிகளைப் போட்டான். கலர் கலராக மத்தாப்பூவை வானத்தில் ஜொலிக்க விட்டான்.
செவந்தியும், முருகனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டதை பூசாரி பார்த்தான். தேர் நிலை குத்தியது. திருவிழா முடிந்தது
பூசாரி வீட்டில் அவன் மனைவி மயிலம்மா, செவந்தியைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.
“என்னங்க, நம்ம பொண்ணு செவந்தி…”
“யாரு இல்லேன்னு சொன்னது? அது நம்ம பொண்ணு தான். வெவரத்தைச் சொல்லு”
“பள்ளிக்கூடத்துல படிச்சு முடிச்சுட்டா. காலேஜிக்கு போகணும்னு ஆசைப்படுறா”
“அவ ஆசைப்படுறது சரி. காசுக்கு எங்கே போறது?”
“என் தம்பி முருகன், அவளைப் படிக்க வைக்குறேங்குறான்”
“அந்த வெடிப்பய, வெட்டிப்பயட்ட ஏது அவ்வளவு பணம்?”
“அவன் தான அக்கம் பக்கம் உள்ள கோயில் திருவிழாவுக்கு வெடி மத்தாப்பெல்லாம் போடுறான்.
“இத பாருடி, எங்க குடும்பம் பரம்பரை பரம்பரையா சாமியாடி குடும்பம். எங்களுக்கு என்ன செய்யணும்னு, சாமிக்கும் தெரியும், பூமிக்கும் தெரியும்”
“ஆமாமா, அதான் இந்தப்பக்கம் நாலு ஏக்கர் நஞ்சை, அந்தப்பக்கம் ஏழு ஏக்கர் புஞ்சை கெடக்குது. வேகாத வெயில்ல, செருப்பு வாரு அறுந்து போயி, கால்ல கருவேல முள்ளு குத்தி, என் மகளுக்கு விஷக்காய்ச்சல் வந்தச்சு. அப்ப உங்க சாமி வந்தா அவளைத் தூக்கிட்டு, ஆஸ்பத்திரிக்கு ஓடுச்சு. என் தம்பி முருகன் தான் தூக்கிட்டு ஓடினான்.
எத்தனையோ குருக்கள்கள் கோயில்ல, தட்டுல தட்சணை வாங்கி வீடு, வாசல், காரு, கன்னின்னு இருக்காங்க. உங்க ஐயனாரு கோயில்ல அதுவும் இல்லை. எல்லாம் உண்டியல் தான். பூசாரியா சம்பாதிக்கலே, சாமியாடியாவது சம்பாதிச்சீங்களா? கேட்டா, கடவுள் கைங்கர்யம்னு ஒரே வார்த்தையோட முடிச்சிடுறீங்க” மனதில் உள்ளதை எல்லாம் எரிச்சலுடன் பேசினாள் மயிலம்மா
மௌனமாய் எழுந்து சென்றான் வேலுசாமி
ஆண்டுதோறும் நடைபெறும் சூரபத்மனை வதம் செய்யும் திருவிழா துவங்க, எட்டுக் கிராமமும் கட்டுக் கடங்காமல் கூட்டம் கூடியது.
ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே.
வேல் வேல்.
மாறுபடு சூரரை வதைத்த முகமொன்றே.
வேல் வேல்.
கூறுமடியார்கள் வினைதீர்க்கு முகமொன்றே.
வேல் வேல்.
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகமொன்றே.
வேல் வேல்.
அந்த ஊர் முக்கியப்புள்ளி, உண்ணாமலை ஆச்சி, முருகனை வேண்டி சத்தம் போட்டுப் பாடினார்கள். சிலர் தீவட்டி பிடித்து வந்தார்கள்.
வேலுசாமி குளத்தில் குளித்துவிட்டு, வெற்றுடம்புடன், இடுப்பில் துண்டு கட்டி, நெற்றி நிறைய திருநீறு பூசி, ஜல் ஜல் என்று காற்சிலம்புடன் வந்தான். அவன் கையில் சின்ன வேல் இருந்தது. அதில் குங்குமம் தடவி, எலுமிச்சம் பழம் குத்தி இருந்தது.
முருகன் வெடியை விடாமல் வெடித்தான். வானத்தில் கலர் கலராக மத்தாப்பூ ஜொலித்தது. தெருவெல்லாம் சாணம் தெளித்து கோலம் போட்டு, வேலுசாமி காலைத் தொட்டுக் கும்பிட்டு, அவன் கொடுத்த விபூதியையும், தேங்காய் பழத்துடன் தந்த கற்பூரத்தையும் அவரவர் வீட்டு பூஜை அறையில் வைத்தார்கள்.
சூரபத்மன் மகாயுத்தம் ஆரம்பமானது. வேலுசாமி வீறு கொண்டு வேலால் குத்தி குத்தி, கீழே சாய்த்தான். அதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தார்கள்.
வேல் கொண்ட மணிவேல்
வீறுகொண்ட செவ்வேல்
முக்தி கண்ட சக்திவேல்
வேல் வேல் வெற்றிவேல்.
எங்கு பார்த்தாலும் பக்திப்பரவசம்
சூரனை வதம் செய்த கோலத்தில், உடம்பெல்லாம் வலி கண்ட நிலையில், வீட்டில் வந்து படுத்தான் வேலுசாமி
அவனுக்கு நினைவு வர இரண்டு நாட்களாயிற்று.இப்படி ஆண்டுதோறும் சூரபத்மனை வதம் செய்யும் வேலுசாமிக்கு, இந்த ஆண்டு எழுந்து உட்காரக் கூட முடியாத நிலையில் காய்ச்சல் கொளுத்தியது.
இருந்தாலும் வேலுசாமி, அந்த திருவிழாவுக்கு வந்து, வழக்கம் போல் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய வேண்டும் என்று தர்மகர்த்தாவிடம் கேட்டான்.
தர்மகர்த்தா அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தலை சுற்றிக் கீழே விழுந்தான். அவனை பக்கத்தில் உள்ள சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
பத்து நாட்கள் போயின. இங்கு திருவிழா முடிந்தது. வேலுசாமி உடல்நிலை தேறி வீட்டுக்கு வந்தான்
அன்று இரவு அவன் மகள் செவந்தி, கொஞ்சம் தாமதமாக வந்து, அவள் கையிலிருந்த ஒரு மூட்டையை, அங்கு இருந்த மரப்பெட்டியில் பயந்து கொண்டே வைப்பதை, வேலுசாமி பார்த்தார்.
“செவந்தி என்னது?”
செவந்தி பதில் பேசாமல், மயிலம்மாவை ஒரு பார்வை பார்த்தாள்.
“அவளை என்ன பாக்குறே, பதில் சொல்லு”
“நீ சூரபத்மனை வதம் செய்யுற அன்னைக்கு போட்டுக்குவியே, அந்த காவித்துணி, சலங்கை, வேல் எல்லாம் தான். மூட்டைக்குள்ள வச்சு, பெட்டிக்குள்ள வச்சேன்.
“அதை ஏன் வெளியே எடுத்திட்டுப் போனே?”
“அது… அது…” செவந்தி அழ ஆரம்பித்தாள்
அவள் தலை முடியை ஒரு இழு இழுத்து, சுவற்றில் தள்ளினான் வேலுசாமி
அதற்கு மேல் மயிலம்மாவால் பொறுக்க முடியவில்லை. செவந்தியைக் கைகளால் தாங்கிக் கொண்டாள்.
“நான் சொல்றேன், நான் சொல்றேன்”
“சீக்கிரம் சொல்லு. நான் மிருகமா மாறுறதுக்குள்ள சொல்லு” வேலுசாமி கத்தினான்
“உங்களுக்கு பத்து நாளா ரொம்ப உடம்பு சௌகர்யமில்லாம சிவகங்கை ஆஸ்பத்திரியில இருந்தீங்க, சூரபத்மனை வதம் செய்யுற விழாவுல நீங்க வழக்கமா செய்யுற வதத்தை, என் தம்பி முருகன் செஞ்சான். அதுக்குத் தான் இதை எல்லாம் அவன் போட்டுக்கக் கொடுத்தோம்”
வேலுசாமி தலையில் வானம் வெடித்து, விழுந்தது போல இருந்தது.
“நாய்களா, ரெண்டு பேரும் என்ன காரியத்தை செஞ்சீங்க. பரம்பரை பரம்பரையா, சாமியாடுன குடும்பத்திலே வச்சிருந்த சொத்தை, பரதேசி நாய்க்குப் போட்டுட்டிங்களேடி”
“நீ நெனைக்குற மாதிரி ஒன்னும் குடி முழுகிப் போகலே அப்பா. கிராமத்துல எல்லாரும் பாத்திட்டு, உன் அப்பா மாதிரியே ஆக்ரோஷமா சூரபத்மனை வதம் செஞ்சான், முருகனைப் பாத்தா, வேலுசாமியைப் பாத்த மாதிரியே இருக்குன்னாங்க.
“ஆங்.. இன்னமும் என்னைக் கோபக்காரனாக்கி, கொலை காரனாக்கிடாதீங்க. ரெண்டு பேரும் என் கண்ணு முன்னால நிக்காதீங்க. போங்க போங்க”
அவர்கள் பதில் பேசாமல் வீட்டு வாசலில் போய் உட்கார்ந்தார்கள்.
பூஜை அறையில் போய், கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தான் வேலுசாமி
குமரப்பன், முருகனும் பெயரில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், மனதளவில் அப்படி அவனால் சிறிதளவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
கார்த்திகை, ஐப்பசி மழை பொய்த்தது. ஆடு மாடுகளுக்கு ஒரு குடம் தண்ணீரில்லை. நெடுந்தூரம் ஓடும் சின்ன வாய்க்காலில் குளிக்கும் நிலை ஏற்பட்டது.
கீழப்பூங்கொடி கிராமத்து வயல்கள் எல்லாம், வெடிப்புப் பாளமாகக் கிடந்தன.
அக்கம் பக்கம் எல்லாம் சாமியாடி வேலுசாமியிடம் வந்து, சாமி குறையா, ஏன் இந்த பஞ்சம்? என்று அருள்வாக்கு சொல்லச் சொன்னார்கள்.
“எல்லாம் திருவிழாவுல நீங்க எல்லாரும் சேர்ந்து செஞ்ச குத்தம் தான். பரம்பரை சாமியாடியை மறந்திட்டீங்க. அந்த சாமி குத்தம் தான் பூமி வெடிச்சுக் கிடக்கு. ஆடு மாடு தவிச்சுக் கெடக்கு” என்றான் வேலுசாமி
தர்மகர்த்தா வேலுசாமியைத் தேடி வந்தார்.
“வேலுசாமி, வழக்கம் போல திருவிழாவுல எந்த கொறையும் இருக்கக் கூடாதுன்னு தான்ப்பா கூட்டத்துல சொன்னேன். திருவுளச்சீட்டு போட்டு பாத்துத் தான், உன் மச்சினன் முருகனைத் தேர்ந்தெடுத்தோம். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து போச்சு. நீ வந்து அருள்வாக்கு சொல்லுப்பா” எனவும் வேலுசாமி சம்மதித்தான்.
தேரடித் தெருவில், பஞ்சாயத்து நடக்கும் இடத்தில், கிராம மக்கள் ஏக்கத்துடன் வேலுசாமியின் அருள் வாக்குக்காகக் காத்திருந்தார்கள். உண்ணாமலை ஆச்சி முருகனைப் பற்றிப் பாடப் பாட, வேலுசாமி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்
கண்களை மூடினான். எல்லோரும் “ஐயனார் சாமியே” என்று கத்தினார்கள். வேலுசாமி அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்தான்.
“எல்லாக் குத்தத்திலேயும் பெரிய குத்தம் தெய்வகுத்தம். பரம்பரை பரம்பரையா விரதமிருந்து உடுத்துன காவி உடையைக் கந்தலாக்கிட்டீங்க. வேல் பூசிய திருநீரை கால் தூசியாக்கிட்டீங்க. அந்த கோபம் தான், இந்த பச்சைக்காடு பட்டுக் கிடக்குது. பௌர்ணமி நிலவு, சுட்டுப் பொசுக்குது” பெருமூச்சு விட்டான் வேலுசாமி
தர்மகர்த்தா உண்ணாமலை ஆச்சியைப் பார்த்து வேலுசாமியிடம் பேசச் சொன்னார்
“சாமி குத்தம் பொல்லாதது தான். யாரோ ஒருத்தர் செஞ்சதுக்காக, ஊரைப் பழி வாங்கலாமா? நாங்கள்லாம் யாரு, உங்க புள்ளைங்க தான. சாமி குத்தம் தீர நாங்க என்ன செய்யணும் சொல்லுங்க”
“வர்ற அமாவாசை அன்னைக்கு, ஊர்ல எந்த ஆம்பளையும் இருக்கக் கூடாது. வெளியூர் போய்ட்டு அடுத்த நாள் தான் வரணும். அன்னைக்கு ராத்திரி ஒரு கன்னிப் பொண்ணு உடம்பிலே இருக்குற ஆடையை தீப்பந்தமா கொலுத்திக்கிட்டு, ஐயனார் கோயிலை மூனு தடவை வலம் வந்து, ஆடையில்லாம கிணத்துல குளிச்சிட்டு திரும்பிப் பாக்காம வீட்டுக்குப் போயிடணும். அப்புறம் அவ கல்யாணத்தன்னைக்குத் தான், அவ வீட்டை விட்டு வரணும்” என வேலுசாமி கூற, கிராம மக்கள் தவித்துப் போனார்கள்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யார் வீட்டில் கன்னிப் பெண்கள் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் தேம்பி அழும் நிலைக்கு வந்து விட்டார்கள். மீண்டும் உண்ணாமலை ஆச்சி, பயபக்தியுடன் சந்தேகத்துடன் கேட்டார்.
“சாமி, நீங்க சொல்றதை, நாங்க யாரும் தட்டிப் பேச மாட்டோம். ஆனா, இந்த ஊர்ல, எத்தனையோ கன்னிப் பெண்கள் இருக்காங்க. அதுல யாருன்னு நீங்களே சொன்னாத் தானே புரியும்” என உண்ணாமலை ஆச்சி கேட்க, கிராம மக்கள் நெஞ்சில் நெருப்பி எரிய ஆரம்பித்தது. ஆவி வந்த வீட்டில், இருப்பது போல இருந்தார்கள்
வேலுசாமி கண்களை மூடி தலையைச் சாய்த்து மெல்லச் சிரித்தார். எல்லோரும் சாமியாடி என்ன சொல்லப் போகிறார் என்று பயந்து நிற்க, மெள்ள விழித்துப் பார்த்தார் வேலுசாமி
“சாமியாடி வேலுசாமி மக செவந்தி, கன்னிப் பொண்ணு தானே. அவ இந்த நல்ல காரியத்தை, ஊருக்காக செய்வா” எனவும் எல்லோரும் அதிர்ந்து போனார்கள்
உண்ணாமலை ஆச்சி பதறி, “சாமி, அவ உங்க மக” எனவும்
“இல்லை, அவ ஐயனாரோட மக. அவ நான் சொன்ன காரியத்தை, வர்ற அமாவாசை ராத்திரி செஞ்சா, ஊர்ல மழை பெய்யும். காடு கன்னி விளையும். ஆடு மாடு நல்லாருக்கும், ஊருக்கு சுபிட்சம் வரும்”
சாமியாடி வேலுசாமி இதை கூறி முடித்ததும், தர்மகர்த்தா திகைத்துப் போனார். அவர் ஒரு கேள்வியை வேலுசாமியிடம் கேட்டார்.
“சாமி, ஒரு கன்னிப் பொண்ணு இப்படி, ஆடையில்லாம ஊருக்குள்ள தீவட்டியோட கோயிலைச் சுத்தி வந்தது தெரிஞ்சா, அவளை யாரு அப்புறம் கல்யாணம் பண்ணிக்குவா”
“அதுக்குப் பரிகாரமா, ஐயனார் குதிரைக்கு தங்கக் கொலுசு கட்டி பிரார்த்தனை செஞ்சா, அவ கல்யாணம் ஜாம் ஜாமுன்னு நடக்கும், அவ்வளவு தான்” என மௌனமாக, உண்ணாமலை ஆச்சி தீபம் காட்டினார்
கற்பூரத்தை ஏற்றி,வேலுசாமி உள்ளங்கையில் வைத்து, எல்லோரிடமும் காட்டினார். கிராம மக்கள் அதைத் தொட்டுக் கும்பிட்டார்கள்.
அதன் பின் நிகழ்ந்தவை இது தான்
வேலுசாமி வீட்டில், அவன் மனைவி மயிலம்மா சமையல் செய்து நான்கு நாட்களாயிற்று. மகள் செவந்தியின் முகம் அழுது அழுது வீங்கி விட்டது. எதற்கெடுத்தாலும் மயிலம்மா, வேலுசாமியிடம் சண்டை போட ஆரம்பித்தாள்
இன்னும் சொல்லப் போனால், வேலுசாமியிடம் இருந்த மரியாதையைக் குறைத்து, நீ வா போ என்று பேச ஆரம்பித்தாள்.
“நீ நம்ம மகளுக்கு அப்பன் தானே. இப்படி பொய்ச்சாமி ஆடிட்டு வந்திருக்கியே, நீ மனுஷனா. அந்த சாமி உன்னை விட மாட்டாரு”
“ரொம்பப் பேசாத, என் சாமியைப் பத்தி எனக்குத் தெரியும். இஷ்டம்னா இருங்க, இல்லே ரெண்டு பேரும் வீட்டை விட்டே, ஏன் இந்த ஊரை விட்டே போங்க.
“அந்த சாமிக்குத் தெரியும், யாரை ஊரை விட்டு விரட்டுறதுன்னு”
அவர்கள் மேலும் சண்டை போடாமலிருக்க, அங்கு எதிர்பாராமல் தர்மகர்த்தா வந்தார். ஆனால் வந்தது தெரியாமலேயே திரும்பிப் போய் விட்டார்.
“அம்மா, நான் அப்பாவை ஒரு நாள் கூட என் அப்பாவா பாத்ததில்ல. நான் ஆசைப்பட்டு என்ன கேட்டாலும், அவரு எனக்கு வாங்கித் தந்ததா ஞாபகம் இல்லை. அப்படிப்பட்டவரு நான் ஆசைப்பட்ட என் மாமா முருகனையா எனக்கு கட்டி வைப்பாரு. சண்டை போடாதேம்மா. நான் ஊருக்காக, ஆடையில்லாம தீவட்டி புடிச்சு, தீ மிதிக்கத் தயாராயிட்டேன்” என கேவிக்கேவி அழுதாள் செவந்தி
சாமிக் குத்தம் வந்தாலும் சரி. அமாவாசைக்கு அப்புறம் என் தம்பிக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைப்பேன். என் தம்பிக்கு என்ன குறை. இந்தக் குடும்பத்துக்கு அவன் என்னென்ன உதவி செஞ்சிருக்கான்னு எனக்கில்ல தெரியும்” என தீர்மானமாய் சொன்னாள் மயிலம்மா
ஒரு வழியாக குடும்ப சண்டை குடுமிப்பிடி சண்டையாய் நடந்து முடிந்தது.
அமாவாசை வந்தது
ஊரில் ஆண்கள் எல்லாரும்,ஊர் கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட்டு, முதல் நாளே வெளியூர் சென்று விட்டார்கள். கிராமம் வெறிச்சோடியது
இருளில் மின்மினிப் பூச்சிகள் மட்டும், நன்றாகக் குடித்து விட்டு நடக்க முடியாமல் தள்ளாடி வீட்டுக்குச் செல்பவர்களைப் போல, அங்குமிங்கும் போயின.
தீராக்கடனைத் தீர்த்த ஒரு குடும்பஸ்தன் மனம் நிம்மதி அடைந்ததைப் போல, செவந்தி தெய்வக் கடனை மனதால் ஏற்றுக் கொண்டு, வேலுசாமி சொன்னது போல நிறைவேற்றி முடித்தாள்
ஊர்க்கட்டுப்பாடு முடிந்து, முருகன் ஊர் திரும்பினான். தனிமையில் செவந்தியைச் சந்தித்தான். அவன் கையில் ஒரு மஞ்சள் கயிற்றைக் கொடுத்தாள் செவந்தி
“செவந்தி, உன் அப்பா எனக்கு யாரோ இல்லை. என் அக்கா புருஷன் தான். என் அப்பா, உன் அப்பாவை பல வருஷங்களுக்கு முன்னால, பஞ்சாயத்துல பல பேர் கால்ல விழுந்து, கும்பிட்டு மன்னிப்பு கேக்க வச்சாரு. அந்த கோபம் இன்னும் உன் அப்பாட்ட கொறையலே”
“மாமா, நான் ஆடையில்லாம ஊர்ல நடந்ததுக்கு, என்னை மன்னிச்சிடு”
“நீ என்ன பண்ணுவே. ஊர்க் கட்டுப்பாட்டை மீற முடியுமா? அதுக்குப் பரிகாரமா, ஐயனாரு குதிரை காலுக்கு, தங்கக்கொலுசு கட்ட முடியுமா? தங்கம் என்ன அஞ்சு ரூபாயா பத்து ரூபாயா?”
“அப்போ என்ன தான் பண்றது மாமா?”
“நம்ம வாழ முடிஞ்சா இந்த மஞ்சக் கயிறு, இல்லேன்னா நம்ம ரெண்டு பேரும் சேந்து தாம்புக் கயித்துல தொங்கிடலாம். என்ன சொல்றே?”
“சரி மாமா, சேந்து தான் வாழ முடியலே, சேந்து சாவோமே”
இருவரும் ஒருவருக்கொருவர் பிரம்மை பிடித்த நிலையில், பார்த்தபடி பிரிந்து சென்றார்கள்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை, மயிலம்மா கவனித்ததை, செவந்தியோ முருகனோ அறியவில்லை. மயிலம்மாவுக்கு தூக்கம் தொலைந்தது. அவள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.
தர்மகர்த்தாவை, அவர் தென்னந்தோப்பில் போய் சந்தித்து வந்தாள். அடுத்த நாள் தென்னந்தோப்பு தீப்பிடித்தது.
அடுத்த நாள் ஐயனார் கோயிலில், தர்மகர்த்தா வேலுசாமியிடம் “தென்னந்தோப்புக்கு தீ வைத்தது யார்?” என்று, சாமியிடம் கேட்டு சொல்லச் சொன்னார்
வேலுசாமி அவன் ஆத்திரத்தை வெளிக்காட்டாமல் அமைதியாகச் சொன்னான
“அய்யா, நம்ம கூப்பிட்ட நேரத்துக்கெல்லாம் கைகட்டி சேவகம் செய்ய, ஐயனார் சாமி என்ன ஆபீஸ் பியூனா? இன்னையிலேருந்து நான் பூசாரி மட்டும் தான், சாமியாடி இல்லை. வேற யாருட்டேயாவது குறி கேளுங்க”
தர்மகர்த்தாவின் பதிலுக்குக் காத்திருக்காமல், வேலுசாமி போய் விட்டான்.
அன்றிலிருந்து வேலுசாமி, எதையோ இழந்தது போல, சோகமாகக் காட்சி அளித்தான். ஒரு காலத்தில், வாரத்துக்கு ஒரு தடவையாவது காட்டுக்குள் சென்று கள் குடிப்பது அவன் வழக்கமாக இருந்தது.
ஐயனார் கோயில் பூசாரியானதும், அந்தப் பழக்கத்தை அறவே விட்டொழித்தான். அன்று இருந்த மனப்போராட்டத்தில், மீண்டும் கள் குடிக்கப் போனான்
முழு மனிதனாக இருந்தவன், பாதி மிருகமாக வீட்டிற்குள் வந்தான். அங்கு கிடந்த அரிவாளை எடுத்தான். மயிலம்மாவின் கூந்தலைப் பிடித்தான்.
“எங்கேடி உனக்கு தர்மகர்த்தா கொடுத்த தங்கக் கொலுசு? தென்னந்தோப்புக்குள்ள போயி, நீ படுத்து வாங்கிட்டு வந்ததை, இந்த பாவி கண்ணால பாத்தேண்டி. அது தான் தென்னந்தோப்புக்கு தீ வச்சேன். உன்னை இந்த அரிவாளால இளநீரை வெட்டுற மாதிரி வெட்டுனா என்னடி?”
“அந்த தங்கக்கொலுசை, ஐயனார் குதிரை கால்ல கட்டி பிராயசித்தம் செஞ்சு என் மகளுக்கும், என் தம்பி முருகனுக்கும் கல்யாணம் செய்யப் போறேன்” நிமிர்ந்து நின்றாள் மயிலம்மா
தொடர்ந்து பேசினாள். “இப்ப வெட்டுய்யா, நல்லா வெட்டு. ஊர்ல திருவிழா ஆட்டம் பாட்டம்னா, இடுப்புல காவி உடுத்தி, உடம்பெல்லாம் திருநீறு பூசி, கையில வேலேந்தி நின்னு, ஊருக்கெல்லாம் அருள்வாக்கு சொல்லுவியே. ஏய்யா உன் குடும்பத்துக்கு சொல்லலே. இதுக்கு பதில் சொல்லிட்டு வெட்டு
புள்ளை படிக்கலே, பொண்ணுக்குக் கல்யாணம் ஆகலே, என் அம்மாவுக்கு நோய் தீரலே, ஆட்டைக் காணோம், மாட்டைக் காணோம்னு கேட்டு வர்றவங்களுக்கெல்லாம் நல்ல வாக்கு சொல்லுவியே, அதை நம்ம குடும்பத்துக்கு ஏன் சொல்லலே?
பொய்ச் சாமியாடி, சொல்லக் கூடாத ஒரு பொய்யைச் சொல்லி, என் பொண்ணை என் தம்பி கட்டிக்காம செஞ்சியே. கோயில்ல காப்பு கட்டிட்டா, வீட்ல கூட படுக்காம, விரதமிருந்து கோயில் வாசல்ல படுப்பியே, அப்படிப்பட்ட உன் பொண்டாட்டி, உத்தமியா இருந்தவ, தட்டுக் கெட்டுப் போனாளே, ஏன்? அதைத் தெரிஞ்சுகிட்டு வெட்டு”
“சிறுக்கி, என்னடி. செய்யுற தப்பை செஞ்சிட்டு, அதுக்கொரு நியாயம் சொல்றியா?”
“தப்புத் தான், இல்லேங்குலே. ஆனா அந்த தப்பை அரிப்பெடுத்து செஞ்சேனா கொழுப்பெடுத்து செஞ்சேனா? நீ செய்ய வச்சே. ஊருக்கெல்லாம், விளக்கேத்தி வைப்பே. உன் குடும்பத்தை மட்டும் இருட்டுல வைப்பே.
குடும்பம்னா ஒத்தை நெல்லுன்னாலும், அதை கட்டுன பொண்டாட்டியோட சேந்து சாப்பிடணும். அவன் தான் புருஷன். பொண்டாட்டியை பட்டினி போடுறவன் புருஷனில்லே. சாமியாடி பொண்டாட்டின்னா, எல்லாரும் கையெடுத்து கும்பிடுவாங்கன்னு பாத்தியா? உன் தர்மகர்த்தா கையைப் புடிச்சு இழுத்தான்.
சாமியாடி பொண்டாட்டி சந்தன மரமா, தேக்குமரமான்னு என் உடம்பை உரசிப் பாத்தான். பெத்தது ஒரே பொண்ணு. அது படிக்க ஆசைப்பட்ட போதெல்லாம், அதுக்கபுத்தகமாவது வாங்கிக் கொடுத்திருப்பியா? ஏதோ வயிறு காயாம ரெண்டு வேளை சோறு போட்டே. அறுவடை முடிஞ்ச வயல் மாதிரி போச்சு என் பொழைப்பு
சில சமயம் அங்கேயும் இங்கேயும் உனக்குத் தெரியாம கடன் வாங்குவேன். என் புருஷன் தந்ததும் தர்றேம்பேன். உன் புருஷன்ட்ட, விபூதியைத் தவிர வேற என்ன இருக்குன்னு கேப்பாங்க. தலையைக் குனிஞ்சு நிப்பேன்
நான் சாகலாம்னு சில சமயம் நெனைப்பேன். நமக்கிருக்குற அந்த ஒரு பொண்ணு முகத்தை, நெனைச்சுத் தான் என் கண்ணை மூடிட்டு முந்தானையைத் தொறந்தேன். இப்போ வெட்டுய்யா. காப்பு கட்டியாச்சுன்னா, கட்டுன பொண்டாட்டி கூட சமைக்கக் கூடாதுன்னு, புதுப்பானை வச்சு நீயே பொங்கி சாப்பிடுவியே, அந்த புதுப்பானையை ஏய்யா கொள்ளிப்பானையா நெனைச்சே.
உனக்கு எத்தனையோ வேலை கெடைச்சுது. மாசாந்திரம் ஒரு நெலையான வருமானம் வருத்துன்னு அதுக்கு நீ போனியா? சாமியாடிங்க வேற வேலைக்குப் போகக் கூடாதுன்னே. அது மட்டுமா சொன்னே, நான் உனக்கு புருஷனில்லே, தெய்வம்னே. அந்த தெய்வம் ஏய்யா என்னை தெருப்புழுதி ஆக்குனுச்சு.
மளிகைக் கடையில அப்பப்ப கடன் கேப்பேன். எதுக்கு தினமும் வந்து கேக்குறே, மொத்தமா மாசம் ஒரு தடவை கொடுத்து விட்டுடுறேன், அப்பப்ப முந்தானையை விரிக்கிறியான்னு மளிகைக் கடைக்காரன் கேட்டான். ஒருத்தனுக்கு விரிச்சாத் தான் அது முந்தானை, பத்து பேருக்கு விரிச்சா, அது படுக்கைன்னு காரித் துப்பிட்டு வந்தேன். அந்த படுக்கையில என்னை படுக்க வச்சிட்டியே. என்னை வெட்டுய்யா
என் ஒரே பொண்ணு பொன்னை ஆசைப்பட்டாளா, இல்லை மண்ணை ஆசைப்பட்டாளா? மனசுக்குப் புடிச்ச புருஷனை ஆசைப்பட்டா. அதை புதை குழியாக்க விடக் கூடாதுன்னு நெனைச்சேன். அவ இப்போ சீக்குக்கோழியா சித்ரவதைப்படுறதை பாக்க சகிக்கலே. வெந்ததை தின்னுட்டு, விதி வந்தா சாகலாம்னு நெனைச்சேன்
அந்த விதியை நீ மாத்தி எழுதிட்டே. வீட்ல வச்சிருக்கியே, வெள்ளிச் சலங்கை, பித்தளை வேலு, இரும்பு அருவா எல்லாத்தையும் பழைய சாமான்காரன்ட்ட எடைக்குப் போட்டுட்டு வந்து என்னை வெட்டுய்யா”
அவன் கையிலிருந்த அரிவாளைப் பிடித்து அவள் கழுத்தில் வைத்தாள்
வீறிட்டு அழுத வேலுசாமி, அவன் கையிலிருந்த அரிவாளைத் தூக்கி எறிந்தான்.
அடுத்த நாள். கீழப்பூங்குடியிலிருந்து டவுன் பஸ் போய்க் கொண்டிருந்தது.
“பாகனேரிக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” கண்டக்டரிடம் கேட்டான் வேலுசாமி
“சாமியாடியா, எப்பவும் சிவகங்கைக்குத் தானே டிக்கெட் எடுப்பீங்க?”
கண்டக்டரின் கேள்விக்கு வேலுசாமி பதில் சொல்லவில்லை. பஸ் மதகுப்பட்டியில் நின்றது. ஒரு கிழவி பஸ்சில் ஏறி, வேறு இடம் இல்லாததால், சாமியாடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“அட சாமியாடியா. எங்கே இப்படி? வீட்ல வரலையா? என் பேரனுக்கு பொறந்ததிலேருந்தே காய்ச்சல் சளி. கொஞ்சம் விபூதி கொடுங்களேன்”
வேலுசாமி கிழவிக்கும் பதில் சொல்லவில்லை. யாருக்கும் பதில் சொல்ல வில்லை. காரணம் அவன் தான் சாமியாடி இல்லையே.
ஊரில் சாமியாடியைக் காணவில்லை என்று பேசினார்கள்.
ஐயனார் குதிரைக்கு பிராயசித்தமாக, தர்மகர்த்தா கொடுத்த தங்கக் கொலுசைக் கட்டினாள் மயிலம்மா. ஆனால் முருகனும் செவந்தியும், சாமியாடி வரட்டும் என்று காத்திருந்தார்கள்.
(முற்றும்)
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings