in ,

ரட்சகன் (குறுநாவல் – இறுதி அத்தியாயம்) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8

இதுவரை

உலகத்தின் கடைக்கோடி கதவு மூடப்பட்டு விட்டது. உயிர்கள் யாவும் கடவுளின் கருணையால் ரக்ஷிக்கப்பட்டுவிட்டது. நடராஜனுக்கும், ரகுவிற்கும் நடந்த சம்பவங்களிலிருந்து மீண்டு வரவே சில நிமிடங்களானது.

இனி

ரகுவையும், நடராஜனையும் அழைத்த மன்னர்,  “உலகத்தில் நல்லதுன்னு ஒன்னு இருந்தா கெட்டதுன்னு ஒன்னு நடமாடீண்டு தான் இருக்கும். ஸ்வாமியோட பதக்கத்தைத் திருடிய  கும்பலை அதிகாரிகள் கூடிய சீக்கிரத்துல பிடிச்சிடுவாங்கன்னு செய்தி கிடைச்சுருக்கு.

உங்களோட இந்த உதவியை திருவாங்கூர் சமஸ்தானம் என்னைக்கும் மறக்காது. உங்க குடும்பத்தில் ஒருவர் எப்போதும் கோவில் பூஜையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட சாசனம். இந்தப் பெருமை எல்லோருக்கும் கிடைக்காது. இனியும் உங்களோட அந்த பணி தொடரணும்.

அதே போல, உங்க குடும்பத்திற்கான நிரந்தர மானியம்  எங்க சமஸ்தானத்திலிருந்து இனி தொடர்ந்து வரும்.  ஒரு சிறிய வெகுமதியா உங்களோட பழைய வீடு முழுதாக புனரமைக்கப்படும். எப்பவும் இனிவரும் காலத்துல எங்க பரம்பரை உங்க குடும்பத்தை அரவணைக்கும்” என்று சமஸ்தானத்தின் சார்பில் வாக்கு கொடுக்க, கூட இருந்த அரச குடும்பத்தினரும் அதனை ஆமோதித்தவாறே தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

மாலை மரியாதையை ஏற்றுக் கொண்டு இருவரும் அங்கிருந்து கிளம்ப, “என்ன தான் நடக்கறது சித்தப்பா. ஒரு மன்னர் குடும்பம் நமக்கு இத்தனை மரியாதை எதுக்குக் குடுக்கணும்?” என்றான் ரகு.

“இது அவா நமக்கு மட்டும் கொடுக்கற மரியாதை இல்லடா.  இந்த மரியாதையெல்லாம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம இத்தனை வருஷமா எல்லா கோவில்களையும் பாதுகாத்துண்டு வர எல்லா ரட்சகர்களுக்கானது-டா” என்ற நடராஜ சித்தப்பா,

“இங்க யாரும் பெரியவாளும் கிடையாது. சின்னவாளும் கிடையாது. பணம், காசு, புகழ் இதெல்லாம் ஒரு எல்லை வரை தான். மனுஷாள மனுஷா ஒருத்தருக்கொருத்தர் அரவணைச்சுப் போகணும். எல்லோரும் அன்பா ஒரே சமூகமா வாழணும்னு தான் நமக்கு முன்ன இருந்தவா எல்லாருமே பாடுபட்டிருக்கா” என்றார்.

இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை கேட்டபடியே அருகில் வந்த நம்பூதிரி, “சரியா சொன்னேள்.  எங்க காலத்துல நாங்க வளர்ந்த போது வீட்டுக்கும் கோவிலுக்கும் பெருசா எங்களுக்கு வித்தியாசமே தெரிஞ்சதில்ல ரகு. தினமும் செய்யற வேலையில பக்தி ஒரு விஷயமா கலந்தே இருந்தது. வீடு, கோவில், பூஜை, ஊர்க்காரான்னு  எல்லோரோட பழகின அனுபவங்கள்-லாம் தான் எங்க மனசுல இன்னும் பசுமையா இருக்கு.  கோவில் இல்லாத ஊர்-ல குடியிருக்கக் கூடாதுன்னு ஒரு பழமொழியே உண்டு.

நாம படிக்கற படிப்பு, வேலை எல்லாமே நம்மள பக்குவப்படுத்தணுமே தவிர கர்வத்தைக் குடுக்கக் கூடாது. பக்திங்கறது மூடத்தனம்-னு நுனிப்புல்  மேயறவா வேணா பேசலாம். ஆனா, ஒரு விதைல இருந்து தான் ஒரு பெரிய ஆலமரமே வளரும். அது நியதி. அது மாதிரி, இந்த அண்டத்தோட ஆரம்பத்தை, ஆரம்பத்தைப் படைச்சவனை, அந்த சக்தியோட நாம நம்மள இணைச்சுக்கற அறிவார்ந்த புத்திசாலித்தனத்தை தான் பக்தி-ன்னு சொல்லறோம்.  அதை  இந்த காலத்து குழந்தேளும் புரிஞ்சுண்டு க்ஷேமமா இருந்தா போறும்.

“நீயே நெனச்சுப் பாரு. ஒருவேளை இந்த மாத்துச்சாவியான “ஓம்” பதக்கத்தை  நாம மட்டும் சரியான நேரத்துல இங்கு வந்து கொடுக்காம இருந்திருந்தா,   திறக்கப்பட்ட அந்தக் கதவிலிருந்து வந்த சக்திகள்-னால உலகத்துல இருக்கற எல்லா உயிர்க்கும் ஆபத்து  வந்திருக்கும். ஆனா, நல்லபடிக்கு ஆண்டவன் புண்ணியத்தால கதவை தாழிட்டாச்சு.

ஆனா,  ஸ்வாமி விக்ரஹத்தோட கிரீடத்துல ஒரு வேற்றுலகத்துக்கான அறையோட சாவி இருக்கும்-னு  நாம யாரும் கனவுல கூட நினைச்சு பார்த்திருப்போமா?

நமக்கு முன்ன இருந்தவா எல்லாரும், சத்தியத்துக்கு எத்தனை புத்திசாலிகளா இருந்திருக்கா பாத்தியோ. ரகசியங்களை லோகத்துக்கு தெரியப்படுத்தினா, பொக்கிஷத்தை அழிக்கும் முயற்சி  நடக்கும்-னு தான் சில விஷயங்களை ரகசியமாகவே வச்சுருந்திருக்கா.

இத்தனை ஒரு பாதுகாப்பு அரணை அமைச்சு மனித குலத்தை காப்பாத்த கஷ்டப்பட்டவா யாருமே, அவாளை வெளி உலகத்துக்குக் கூட  காட்டிக்க விரும்பல.

இன்னைக்கும் ரூபமா, அரூபமா நடமாடற சித்தர்கள் தங்களோட ஞானத்தை அநாவசியமா வெளிய காட்டறது இல்ல. நல்லதை செய்யறவா நல்லதை எப்பவும் செஞ்சுண்டே தான் இருக்கா”  என்ற நாராயண நம்பூதிரி,

“காலங்காலமாக இருந்துவரும் இந்த பிரபஞ்ச சக்திகளைக் காக்கும் பொறுப்பு சில குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மலைநாட்டின் தொடர்ச்சியில் வரும் தேசத்தினைக் காக்கும் பொறுப்பு உங்க நங்கவள்ளி சோமேஸ்வரர் சிவன்கோவில் குடும்பப் பொறுப்பாக்கும்” என்றார்.

“சத்தியமா பாத்துப்போம். அது எங்க கடமை” என்று இருவருமாய்ச் சொல்ல,

“சரி…..சரி….. இன்னும் நிறைய நல்லது பண்ண காலமிருக்கு. இதுக்கே வாயடைச்சுப் போனா எப்படி? முதல்ல  எங்காத்துக்குப் போய்  ஒரு நாள் தங்கீண்டு அடுத்த நாள் ஊருக்கு கிளம்புவேளாம். வரும்போதே சரியானபடிக்குத் தூக்கமில்ல. என்னென்னவோ நடந்தூடுத்து. மன்னிம்மாட்ட உங்களை பத்திரமா அனுப்பிச்சுத்தரேன்னு வாக்கு வேற குடுத்திருக்கேன்” என்றார் நம்பூதிரி.

“அது சரி” என்ற ரகு, எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் . கோவில்ல நீங்க ஏதோ ராகம் பாடினதும் கதவு பூட்டற சத்தம் கேட்டதே. அதை மட்டும் சொல்லுங்களேன்?” என்றான்.

“ஓ…..அதுவா……கதவின் முதல் பூட்டு பூட்டிய பிறகு, கதவிற்கான இரண்டாவது பூட்டு நாகராகம். எந்த அலைவரிசை-ல மந்திரத்தைப் பாடி பூட்டினேனோ அந்த அலைவரிசையில திரும்பப் பாடினா தான் கதவைத் திறக்க முடியும்” என்ற ரகசியத்தைச் சொன்ன நாராயண நம்பூதிரி இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வீட்டின் ஓர் அறையை இவர்கள் தங்குவதற்கு ஒதுக்கி கொடுத்தவர், “சித்த ஓய்வெடுத்துக்கோங்கோ. கொஞ்சம் கழிச்சு எல்லாருமா சாப்பிடுவோம்” என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்றார்.

கேரளா பாணியில் அக்ரஹார வீடு. தாங்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தான் ரகு. வீட்டிற்குப் பின்னாடியே வாய்க்காலும், பச்சைப் பசேலென வயல்வரப்பும், கிணறும், பறவைகளின் கீச்சென்ற ரம்யமான சத்தத்தையும் கேட்டவன்,

“நான் பாட்டுக்கு சிவ பூஜை பண்ணீண்டு இருந்தேன். இவர் எங்கயிருந்து எதுக்கு வந்தார்-னு கூட அப்ப எனக்குத் தெரியலை. ஆனா, இப்படி ஒரு அப்பாவுக்கு இணையான பந்தம் இவரோட உண்டாகும்-னு நான் நெனக்கல சித்தப்பா” என்றான்.

“உண்மைதாண்டா ரகு” என்றவர் “நாளைக்கு காலைல எது எப்படியிருந்தாலும் நாம ஊருக்கு கிளம்பி போயாகணும். மன்னிம்மா வேற கவலையா இருப்பா. நீ திரும்ப வேற ஏதாவது திட்டம் போடாத” என்றார்.

“சரி” என்று ஆமோதித்த ரகு வீட்டைச் சுற்றிப் பார்க்க,  அறையின் சுவற்றில் ராஜாமணி மற்றும் ஒரு தாத்தாவின் படமும், நாகராஜன் மற்றும் நாராயண நம்பூதிரியின் படமும் மாட்டப்பட்டிருந்தது. அப்போது தான் முந்தைய இரு தலைமுறை நட்பினையும் புரிந்து கொண்டான் ரகு.    வந்த அசதியில் சித்தப்பா ஏற்கனவே தூங்கியிருக்க, தன்னை மீறி ரகுவும் அசந்து உறங்கிப் போனான்.

சிறிது நேரம் கழித்து, “அண்ணா.. அண்ணா ……அப்பா , உங்க ரெண்டு பேரையும் சாப்பிட வரச் சொன்னா. வரேளா” என்று நாராயண நம்பூதிரியின் மகன் ஹரிஹரன் ரகுவிடம் அறிமுகமாக, அடுத்த தலைமுறை ரக்ஷகர்களைத் தயார் செய்திருந்தார் இறைவன்.

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரட்சகன் (குறுநாவல் – பகுதி 8) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    அன்புடையார் பிறர்க்கு (சிறுகதை) – M.மனோஜ் குமார்