2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
இதுவரை
தங்கள் குடும்பத்தில் நடந்த அசம்பாவிதங்களுக்கு நாராயண நம்பூதிரியின் பூஜை ஒரு விமோசனத்தைப் கொடுக்கும் என எண்ணிய ரகுவின் குடும்பத்தினர் பிரஸ்னம் பார்த்த பிறகு அவர் சொல்லும் மலைநாட்டு அரண்மனை பொக்கிஷ வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இனி
எண்கள் வரிசையில் ஒவ்வொரு அறையிலும் காணிக்கைகள் வைக்கப்பட்டன. தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், அணிகலன்கள் என்று ஒவ்வொரு அறையிலும் அடுக்கி வைக்கப்பட்டு கடைசி பத்து அறைகள் மட்டும் காலியாக விடப்பட்டன.
தலைமைக் கட்டுமானரிடம் அந்த அறைகளைக் காலியாக விடவேண்டிய அவசியத்தைப் பற்றி கேட்ட போது , “கடைசி கதவு இவ்வுலகின் கடைவாயில் என்றும் மறுபக்கம் காட்டின் கடைக்கோடியின் மறு பக்கம் என்றார். அதுவே உலகத்தின் மறுபக்கத்திற்கான வாயில் என்றும் அக்கதவு திறந்தால் உலகம் அங்கிருந்து வரும் வினோத ஜீவராசிகளின் மூலம் அழியும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்” என்று
நடந்த வரலாற்றுச் சம்பவங்களைக் கண்களை மூடி ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்ட நாராயண நம்பூதிரி எல்லோரிடமும் சொல்லிவிட்டு நீண்டதொரு பெருமூச்சை விட்டார்.
“நீங்க சொல்றத நம்பவும் முடியல. நம்பாமலும் இருக்க முடியல” என்று ரகு சொல்லவும்,
“சில விஷயங்கள் அனுபவப்பட்டா மட்டும் தான் உணர முடியும். நடப்பதெல்லாம் அவனாக்கும் நடத்தறது” என்றவர்,
ஒரு முக்கியமான வேலைக்காக ரகுவையும், நடராஜ சித்தப்பாவையும் திருவனந்தபுரம் வரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று மன்னிம்மாவிடம் அனுமதி கேட்டார்.
“ஏதோ முக்கியமான விஷயத்துக்காகதான் கூட்டீண்டு போக கேட்கறேள்-னு தெரியும். ஆனா, இந்த வீட்டு வாரிசுன்னு இவா தான் உயிரோட இருக்கா. பத்திரமா பார்த்துக் கூட்டீண்டு போய்ட்டு வரது உங்க பொறுப்பு” என்று மனதிற்குள் ஒரு பயத்துடனேயே வாழ்த்தி அனுப்பினாள் மன்னிம்மா.
ரகுவும், நடராஜன் சித்தப்பாவும் ஸ்வாமிக்கு பதினோரு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து விட்டு, காரியத்தை நல்லபடியாக முடித்துக் கொண்டு வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு நம்பூதிரியுடன் கிளம்பினார்கள்.
நங்கவள்ளியிலிருந்து கிளம்பி சேலம் நகரத்தின் கூட்டநெரிசலுக்கு நடுவே மெதுவாக பயணித்துக் கொண்டிருந்த கார் நான்கு வழிச்சாலையில் லாவகமாக வேகம் பிடித்தது. நாமக்கல்லைத் தாண்டும் போது ஆஞ்சநேயரை மனதிலேயே வேண்டிக் கொண்டு மதுரை நோக்கி பயணப்பட்டணர். வழியில் சாப்பிட்டுவிட்டு கொடைக்கானலைத் தாண்டி கார் போய்க் கொண்டிருந்த போது இருள் சூழ்ந்த மேகங்களும், அடித்துக் கொண்டு வீசிய சூரைக்காற்றும், பேய் மழையும் எல்லோரின் மனதிலும் ஒருவித குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது.
ஏதோ விபரீதம் ஏற்படப் போவதை உணர்ந்த நம்பூதிரி டிரைவரிடம் காரை மெதுவாக ஓட்டச் சொன்னார். காரில் இருந்த டிரான்சிஸ்டர் வழியே வந்த செய்தி அவர்களுக்கு மேலும் குழப்பத்தை அதிகரித்தது.
திருவனந்தபுரத்திலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு சிறு கிராமத்தில் அடையாளம் தெரியாத காட்டுமிருகம் ஒன்று கொடூரமாக தாக்கியதில் ஆறு பசுமாடுகள் இறந்ததாக செய்திகள் செய்திகள் வந்துகொண்டிருந்தது.
காயங்கள் வித்தியாசமாக இருப்பதாலும், ஆழமாக இருப்பதாலும், தாக்கியிருக்கும் விலங்கினைப் பற்றிய குழப்பத்தில் இருக்கும் மருத்துவர்கள், உண்மையினைக் கண்டறிய மருத்துவ விஞ்ஞானிகள் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் குழுவை அரசு சார்பில் உடனே களத்திற்கு அனுப்பியிருப்பதாகவும் மேலும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
தனது சிஷ்யர்களின் மூலம் விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த நாராயண நம்பூதிரி, அவருக்குத் தெரிந்த அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலின் மேலதிகாரிக்கு தாங்கள் வரும் விஷயத்தினைத் தெரிவித்து விட்டு வேண்டிய ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கு நடுவே கொட்டும் மழையில் திடீரென சென்று கொண்டிருந்த கார் தன் கட்டுப்பாட்டை இழக்க, எத்தனை முயன்றும் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத டிரைவர், சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் காரை வேகமாக முட்டி நிறுத்தினார்.
தெய்வாதீனமாய் சிறுசிறு காயங்களுடன் தப்பித்தவர்கள் தட்டுத்தடுமாறி காரிலிருந்து இறங்கி ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பிறகு சுதாரித்துக் கொண்டு சாலையோரமாய் உட்கார்ந்து கொண்டனர். வரும் வண்டியை நிறுத்தி எப்படியாவது எல்லோரும் ஏறிப் போய்விடலாம் என்று ரகு நீண்ட நேரம் லிஃப்டுக்காக காத்திருக்க, வந்த ஒரு காரும் நிற்காமல் சென்று விட்டது.
பின்பு எந்த வண்டி வந்தாலும் தடுத்து நிறுத்தி ஏறியாகவேண்டும் என்ற மனநிலையில் நால்வரும் நிற்க, குருவாயூரப்பன் படம் தரித்த கார் ஒன்று அந்த வழியே வரவும், நால்வரும் சாலையின் நடுவே நின்று வழியை மறித்தனர்.
தாங்கள் அனைவரும் அவசரமாகப் ஒரு முக்கியமான காரியத்திற்குப் போகும் வழியில் கார் பழுதடைந்து விட்டதால் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்கவும், இவர்களின் காயத்தையும் சூழ்நிலையையும் புரிந்து கொண்ட டிரைவர் உதவ சம்மதித்தார்.
பக்கத்து ஊரில் தங்கள் கார் டிரைவரை இறக்கிவிட்ட நாராயண நம்பூதிரி, “ஆள்காராட்ட வண்டிய சரியாக்கீண்டு ஜாக்கிரதையா நம்ம ஆத்துக்கு எடுத்துண்டு வந்துடு, கேட்டயா. நாங்க ஒரு முக்கியமான விஷயத்தை முடிச்சுண்டு வீட்டுக்கு வந்துடுவோம்” என்று மற்ற இருவருடனும் அனந்தபத்மநாப கோவிலுக்கு காரில் விரைந்தார்.
நாராயண நம்பூதிரி மூலம் விஷயத்தைத் தெரிந்து கொண்ட கோவில் தர்மகர்த்தா, திருவாங்கூர் மன்னர் பரம்பரை குடும்பத்தாருக்கு நடந்தவற்றை விளக்கிச் சொல்லவும், மன்னர் குடும்பமும், அரசு அதிகாரிகளும் எல்லா ஏற்பாடுகளுடன் இவர்களின் வருகைக்காக கோவில் வாசலில் காத்துக் கொண்டிருந்தனர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings