in ,

ரகசியத்தைச் சொல்லி விடாதே (சிறுகதை) – ✍ தீபா வேலு, வெள்ளக்கோவில், திருப்பூர் 

ரகசியத்தைச் சொல்லி விடாதே
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 20)

மாணிக்கம் மற்றும் ஜானகி தம்பதிகளின் மகளான நித்யாவிற்கு. நிச்சயதார்த்த ஏற்பாடு வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது

சிதம்பரம் மற்றும் சுலோச்சனா தம்பதிகளின் மகனான கௌதமுக்கு தான் நித்யாவை மணம் முடிப்பதாகத் தேதி குறித்து, இன்று நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது

நித்யாவும் கௌதமும் மணமக்களாக மேடையில் நின்று கொண்டு, இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்

“நித்தி இந்த சாரில நீ சூப்பரா இருக்க”

“நீங்க செலக்ட் பண்ணின சாரி தான, எனக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.  இதை எப்ப கட்டலாம்னு அடிக்கடி எடுத்து பாத்துக்கிட்டே இருந்தேன்”

“ஹே…நிஜமாவா சொல்ற? உனக்கு அவ்ளோ புடிச்சிருக்கா, இந்த சாரி?”

“ஆமா கௌதம், நிஜமாத் தான் பிடிச்சிருக்கு”

“சாரிய மட்டும் தான் பிடிச்சிருக்கா? அதை செலக்ட் பண்ணின என்னைய பிடிக்கலையா?”

“சாரிய எவ்வளவு பிடிச்சு இருக்கோ, அதை செலக்ட் பண்ணின உங்கள அதை விட பிடிச்சிருக்கு. இப்போ நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க? அதையே சொல்லிட்டீங்கனா, நானும் அப்படியே சொல்லிடுவேன்”

“நான் எதுவும் எதிர்பார்க்கலப்பா, நீ ஏதாவது எதிர்பார்க்கறியா? அது தான் இப்படி எல்லாம் பேசுறியா?”

இப்படி அவர்களுக்குள்ளான ஸ்வீட் நத்திங்ஸ் அங்கே தொடர்ந்து கொண்டிருந்தது.

ஜானகியும் சுலோச்சனாவும், சில உறவினர்களுடன் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு தேவையான சீர் வரிசைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்

எல்லா சடங்குகளையும் முடித்த அய்யர், “இனி தாம்பூலத்தட்டை மாத்திக்கலாம். பொண்ணோட அம்மா அப்பாவும், மாப்பிள்ளையோட அம்மா அப்பாவும் மேடைக்கு வாங்க. முக்கியமான உறவினர்கள் எல்லாரும் வந்துட்டாங்களா? இல்ல இன்னும் யாராவது வரணுமா? நல்ல நேரம் இன்னும் இருபது நிமிஷம் இருக்கு”   என்றார்

“சம்மந்தியின் தங்கச்சி வெளிநாட்டிலிருந்து வந்துட்டு இருக்கிறதா சொன்னாங்க. இன்னொரு பத்து நிமிசத்துல வந்திருவாங்க. அதனால கொஞ்ச நேரம் காத்திருக்கலாம்” என்று மணப்பெண்ணின் தந்தை மாணிக்கம் சொன்னார்

மாணிக்கம் சொன்னதைக் கேட்ட சிதம்பரம், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை கொடுக்கும் சம்மந்தி அமைந்த சந்தோஷத்தோடு, “இன்னும் அஞ்சு நிமிஷத்துல அவங்க வந்துடுவாங்க சம்மந்தி. ரொம்ப சந்தோஷம், எனக்கு முன்னாடி நீங்க இதை சொன்னதுல” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

“இதிலென்ன இருக்கு சம்பந்தி?  நாம எல்லாரும் ஒரே குடும்பம் தான, அவங்க எங்களுக்கும் சொந்தக்காரங்க தான”

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, மண்டபத்திற்குள் அரக்கப்பரக்க நுழைந்தனர் சிவனேசன், மணிமேகலை மற்றும் அவர்களின் பிள்ளைகளான ரஞ்சன், ரஞ்சனி எல்லோரும்

அவர்கள் வந்ததைக் கவனித்த சிதம்பரம், ஓடிச் சென்று அவர்களை வரவேற்றார். மாணிக்கமும் வணக்கம் சொல்லி அவர்களை வரவேற்றார்

“வாங்க மாப்ள, வாம்மா மணிமேகலை, வாங்கடா தங்கங்களா. எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே, ரஞ்சன் ரஞ்சனி இருவரையும் இரு கைகளால் தழுவிக் கொண்டார்

“வர்றங்க மச்சான், கொஞ்சம் லேட்டாயிடுச்சு. கௌதம் மாப்பிள்ளை ஜோரா ரெடியாகிட்டாரா?” என்று மேடையை பார்த்துக் கேட்டார் சிவனேசன்

“ஆமாங்க மாப்ள, எல்லாரும் உங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்கோம். வாங்க மேடைக்குப் போகலாம்”

மாணிக்கத்தை தன்னுடைய தங்கை குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிதம்பரம். எல்லோரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்

“அண்ணா… நல்ல நேரம் முடியறதுக்குள்ள நிச்சயதார்த்தம் முடிக்கணும். சீக்கிரமா மேடைக்குப் போகலாம்” என்று மணிமேகலை அனைவரையும் அவசரப்படுத்தினார்

மேடைக்குச் சென்றவுடன் அங்கிருந்த ஜானகியை மணிமேகலைக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிதம்பரம்

மணிமேகலை ஜானகியை பார்த்து வணக்கம் சொன்னாள். ஜானகிக்கு மணிமேகலையை பார்த்தவுடன், பயத்தில் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது

‘ஐயோ இவளா? நம்ம பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கப் போற இந்த நேரத்துலயா நான் இவள பார்க்கணும்? அதுவும் மாப்பிள்ளைக்கு இவ அத்தை. ஏதாச்சும் சொல்லி இந்த நிச்சயத்தை நிறுத்திடுவாளோ?’ என பல யோசனை தோன்றி மறைந்தது ஜானகிக்கு

இப்போது இருக்கும் நிலைமையை யோசித்து, சற்று சுதாரித்துக் கொண்டு, ஜானகியும் மணிமேகலைக்கு வணக்கம் சொன்னாள்

மணிமேகலை ஜானகியை தெரிந்தது போல காட்டிக் கொள்ளவேயில்லை.ஏதோ புதிய நபர் போல, வணக்கம் சொன்னதைக் கண்டு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், இப்போதைக்கு தன் மகளின் விசேஷம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை வைத்துக் கொண்டு, மணிமேகலையை பார்ப்பதை தவிர்த்து, தன்னுடைய வேலைகளில் கவனத்தைச் செலுத்த முயற்சி செய்தாள் ஜானகி

என்ன தான் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும், மணிமேகலையைச் சுற்றியே ஜானகியின் எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன

‘இவளுக்கு நெஜமாலுமே என்னைத் தெரியலையா? ரொம்ப நாள் பாக்காததால மறந்துட்டாளா? இல்ல மறந்த மாதிரி நடிக்கறாளா?’ என்று ஏகப்பட்ட கேள்விகள் ஜானகியின் மண்டைக்குள் புழுவாய் குடைந்தன

இப்படி குழப்பத்துடனேயே இருந்ததால், ஜானகியால் தன்னுடைய மகள் நித்யாவின் நிச்சயதார்த்தத்தில் கவனம் செலுத்த முடியாமல் பதட்டத்துடன் இருந்தாள்

“நிச்சயத்தாம்பூலம் மாத்திக்கலாம், பொண்ணோட அப்பா அம்மாவும், மாப்பிள்ளையோட அப்பா அம்மாவும், மேடைக்கு வாங்க” என்று ஐயர் கூறியதும், எல்லோரும் மேடையேறினார்

மணிமேகலை தன்னுடைய அண்ணன்  சிதம்பரத்திடம், ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார். அதன் பின்பு ஜானகியை பார்த்து கை நீட்டிப் பேசுவது போல ஜானகிக்குத் தோன்றியது. அது நிஜமா? இல்லை பிரமையா? என்று கூட அவளால் பிரித்துப் பார்க்க முடியவில்லை

‘ஒருவேளை தனக்கு தெரிந்த உண்மையை, தன் அண்ணனிடம் மணிமேகலை சொல்கிறாளோ?’ என்று அவள் மீது சற்றே கோபம் வந்தது ஜானகிக்கு

‘அப்படி உண்மை தெரிந்துவிட்டால், இந்த நிச்சயதார்த்தம் நின்று விடுமோ?’ என்று எண்ணும் போதே கண்கள் கலங்கியது.  ஐயர் அழைத்ததால் எல்லோருடனும் ஜானகியும் மேடைக்குச் சென்றார்

சிதம்பரமும், சுலோச்சனாவும்  நிச்சயதாம்பூலத்  தட்டை நீட்ட, அதை மாணிக்கமும் ஜானகியும் பெற்றுக் கொண்டனர். நிச்சயதார்த்தம் இனிதே முடிவடைந்தது

நித்யாவும், கௌதமும் மோதிரம் மாற்றி, தங்களின் வாழ்க்கை துணை இனி நீ தான் என்று ஒருவருக்கொருவர் சந்தோஷத்தோடு மோதிரத்தை அணிந்து கொண்டனர்

நிச்சயதார்த்தம் முடிந்ததும், அனைவரும் அங்கே தயாராகி இருந்த விதவிதமான உணவு வகைகளை ருசி பார்க்க எல்லோரும் பந்திக்கு முந்தி சென்றனர்

எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தனர்.  நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தாலும், ஜானகிக்குள் ஆயிரம் கேள்விகளும், கவலைகளும் சூழ்ந்து, அவளைப் பாடாய் படுத்தியது

இரண்டு நாட்களாக சரியாக தூங்காமலும், நேரத்திற்கு சாப்பிடாமலும், வேலை செய்து கொண்டிருந்ததால் உடலும் சற்று சோர்ந்து விட, மனதிலும் ஆயிரம் கேள்விகளும், குழப்பங்களும் போட்டி போட்டுக்கொண்டு நர்த்தனமாட, அதன் விளைவாய் பிரஷர் அதிகமாகி மயக்கம் அடைந்தார் ஜானகி

அவர் மயக்கம் போட்டதை பார்த்த உறவினர்கள் அனைவரும், பதறி ஓடி வந்து ஜானகியை தூக்கி அமர வைத்தனர்.  நித்யாவும் அழுது கொண்டே தன்னுடைய தாயை அழைத்து பார்த்தாள், ஆனால் ஜானகியிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை.

இதுவரை ஜானகிக்கு, எந்த வித உடல் தொந்தரவுகளும் இல்லாததால், மாணிக்கம் சற்று பதறிப் போனார். அங்கிருந்த உறவினர்கள் சிலரின் உதவியோடு, ஜானகியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் மாணிக்கம்

இப்பொழுது தான் நிச்சயம் முடிந்து இருப்பதால், நித்யாவை மண்டபத்திலேயே இருக்குமாறு சொல்லி விட்டு, மருத்துவமனைக்கு விரைந்தனர் மாணிக்கமும், ஜானகியும்

அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மருத்துவமனையை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மயக்கம் தெளிந்து சுயநினைவுக்கு வந்து விட்டார் ஜானகி

“என்ன ஜானகி? என்ன ஆச்சு? ஏன் இப்படி மயக்கம் போட்டு விழுந்த? உனக்கு உடம்புக்கு எப்படி இருக்கு? ஏதாச்சும் தொந்தரவு பண்ணுதா?” எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் மாணிக்கம்

“எனக்கு ஒண்ணும் இல்லைங்க. லேசா தலை சுத்துற மாதிரி இருந்துச்சு, கீழ விழுந்துட்டேன் அவ்வளவு தான். நாம எங்க போய்க்கிட்டு இருக்கோம்?”

“டாக்டர்கிட்ட போய் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடலாம்”

“எனக்கு ஒண்ணும் இல்லைங்க, நான் நல்லா தான் இருக்கேன். நித்யா எங்கிங்க?”

“அவ மண்டபத்தில தான் இருக்கா. இப்ப தான நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கு, அதுக்குள்ள ஏன் அவள தொந்தரவு பண்ணனும்னு அவள் அங்கேயே இருக்கச் சொல்லிட்டு உன்னை கூட்டிட்டு வந்தேன்”

“அங்க நித்யா தனியா இருப்பா, வாங்க போகலாம். நான் நல்லாத்தாங்க இருக்கேன்”

“நம்ம சொந்தகாரங்க எல்லாரும் இருக்காங்க ஜானகி, அவங்க நித்யாவை பார்த்துக்குவாங்க. அதுவுமில்லாம நித்யா என்ன சின்ன பொண்ண கவலைப்படறதுக்கு. இப்ப டாக்டர்கிட்ட போய் பாத்துட்டு வந்திடலாம். அவ்வளவு தான், நீ பேசாம இரு”

“சரி” என்று ஒத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர் ஜானகியும் மாணிக்கமும்.

அங்கே ஜானகியை பரிசோதித்த டாக்டர், “பிரஷர் கொஞ்சம் அதிகமா இருக்கு அவ்வளவு தான்” என்று இரண்டு நாட்களுக்கு மட்டும் மருந்துகளை எழுதிக் கொடுத்தார். மறுபடியும் ஏதாவது தொந்தரவு இருந்தால் மட்டும் வருமாறு சொல்லி அனுப்பினார். இதைக் கேட்ட பின்பு தான், மாணிக்கத்திற்கு சற்று நிம்மதி ஆனது.

உடனே மாணிக்கம் தன்னுடைய போனை எடுத்து நித்யாவிற்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னார். பின்பு மாணிக்கமும் ஜானகியும் காரை நோக்கி நடந்தனர்.

“ஜானகி, என்ன ஆச்சு சொல்லு? உனக்குள்ள ஏதோ ஒரு குழப்பம் இருக்கு, எனக்கு அது நல்லாவே தெரியுது” என்று கேட்டார் மாணிக்கம்

“எனக்கு என்னங்க குழப்பம்? நான் நல்லா தான் இருக்கேன்”

“பொய் சொல்லாத ஜானகி, உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நிச்சயதாம்பூலம் மாத்தும் போது உன் முகமே சரியில்லை. ஒரு மாதிரி பதட்டத்தோட இருந்த, முகமெல்லாம் வேர்த்துக் கொட்டுச்சு, நான் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருந்தேன்”

‘ஐயையோ எல்லாத்தையும் சரியா சொல்றாரே? இவர்கிட்ட மணிமேகலைய பத்தி சொன்னா என்ன ஆகறது? இவரும் ரொம்பவே மனசு உடைஞ்சு போயிருவாரு, அதனால இந்த உண்மையை எப்பவுமே அவர்கிட்ட சொல்ல கூடாது’ என்று நினைத்துக் கொண்டு

“அப்பவே எனக்கு கொஞ்சம் படபடப்பா இருந்துச்சுங்க. மயக்கம் வர்ற மாதிரி தான் இருந்தது, இருந்தாலும் கொஞ்சம் சமாளிச்சேன். அதனால தான் உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுச்சு, மத்தபடி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைங்க”

ஜானகி அழுத்தம் திருத்தமாக தெளிவாகப் பேசுவதைக் கண்ட மாணிக்கத்திற்கு, அவர் சொல்வது உண்மை போல தோன்றினாலும், மனதில் ஏதோ நெருடிக் கொண்டிருந்தது

மாணிக்கமும் ஜானகியும் தாங்கள் வந்த காரில் கிளம்பி மண்டபத்திற்குச் சென்றனர்.  அங்கே இவர்களைக் கண்ட உறவினர்கள் எல்லோரும், இவர்களைச் சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர். அனைவருடைய கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு, ஜானகியை மணப்பெண்ணின் ரூமிற்கு அழைத்துச் சென்றார் மாணிக்கம்

இவர்கள் சென்ற பொழுது நித்யாவும் கௌதமும் சாப்பிட சென்றிருந்ததால், அந்த ரூமில் வேறு யாரும் இல்லை. அதனால், “ஜானகி நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்று  சொல்லி விட்டு, அந்த ரூமை விட்டு வெளியே வந்தார் மாணிக்கம்

தன்னுடைய தாய் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து விட்ட செய்தி கேட்ட நித்யா, வேகவேகமாக உணவருந்திவிட்டு தன்னுடைய தாயை பார்க்க ரூமிற்கு விரைந்து சென்றாள்.  அவளுடன் கௌதமும் சென்று ஜானகியை பார்த்தான்

“அம்மா… என்னம்மா ஆச்சு உனக்கு?” என்று கண்களில் கண்ணீருடன் கேட்டாள் நித்யா

“எனக்கு ஒண்ணும் இல்ல நித்தி, பிரஷர் கொஞ்சம் அதிகமாயிடுச்சு அதான். கவலைப்பட ஒண்ணும் இல்ல” என அவளைத் தேற்றினார் ஜானகி

“அத்தை உங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம நாங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டோம். நித்யா அப்பவே அழ ஆரம்பிச்சிட்டா. டாக்டரை பார்த்த உடனே, மாமா எங்களுக்கு போன் பண்ணி நீங்க நல்லா இருக்கீங்கன்னு சொன்னதுக்கு அப்புறம் தான், கொஞ்சம் சமாதானம் ஆகி அழுகைய நிறுத்தினா. இப்ப கூட சாப்பிட வர மாட்டேன்னு ரொம்ப அடம் புடிச்சா, நான் தான் அவளை வலுக்கட்டாயமாக கூட்டிட்டு போனேன்”

“சரிங்க மாப்பிள்ளை… ஒன்னும் பிரச்சனை இல்ல. ரெண்டு பேரும் போய் கொஞ்சம் போட்டோஸ் எல்லாம் எடுங்க. நிச்சய  ஆல்பத்தில் நிறைய போட்டோ இருந்தா தான நல்லாருக்கும்?” என்று எப்போதும் போல சகஜமாக பேசும் தன்னுடைய தாயை பார்த்ததும் தான், சற்று நிம்மதி ஆனது நித்யாவிற்கு

சுலோச்சனாவும், மணிமேகலையும் ஜானகி இருக்கும் அறைக்கு வந்தனர். அதற்குள் சுலோச்சனாவை ஏதோ வேலையாக உறவினர் ஒருவர் அழைக்க, மணிமேகலை மட்டும் ஜானகி இருக்கும் அறைக்குள் சென்றாள்

அப்பொழுது சற்று சகஜ நிலைக்கு திரும்பி இருந்த ஜானகி, மணிமேகலையை பார்த்தவுடன் மறுபடியும் பதட்டம் அடைந்தார். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், சகஜமாக இருப்பது போல இருந்தார்

மணிமேகலை ஜானகியிடம் சென்று,  “அக்கா இப்ப உங்க உடம்பு நல்லா இருக்கா? ஒன்னும் தொந்தரவு இல்லையே?” என்று வினவினார்

“இப்ப பரவால்ல மா, நல்லா தான் இருக்கு” என்று பதில் சொன்னார் ஜானகி

இப்படி மணிமேகலை கேட்டவுடன் ஜானகிக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ‘நிஜமாலுமே தன்னை மணிமேகலைக்கு அடையாளம் தெரியவில்லை போலும்’ என்று மனதை சற்று தேற்றிக் கொண்டார்

என்ன தான் மணிமேகலைக்கு தன்னை அடையாளம் தெரியாவிட்டாலும், அவளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருப்பதை உணர்ந்த ஜானகி, எப்படியாவது ‘தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க சந்தர்ப்பம் எப்பொழுது அமையுமோ தெரியவில்லையே?’ என்று அடிக்கடி நினைத்துக் கொண்டே இருந்தார்

நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் சென்ற நிலையில், திருமணத்திற்கு ஜவுளி எடுப்பதற்காக நித்யாவின் குடும்பமும், கௌதமின் குடும்பமும் கிளம்பிச் சென்றது. அவர்களுடன் மணிமேகலையும் வந்திருந்தார்

ஜவுளி எடுக்கப் போய் இருந்த இடத்தில் எப்படியாவது மணிமேகலையுடன் தனியாக பேச வேண்டும் என்று ஜானகி நினைத்துக் கொண்டே இருந்தார். அது போன்ற ஒரு சூழ்நிலையும் அமைந்தது

மணிமேகலை சுலோச்சனாவிடம், “அண்ணி வாங்க போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம், எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது” என்று கூப்பிட்டார்

“எனக்கு கொஞ்சம் அல்சர் அதிகமா இருக்கு, அதனால நான் இப்போ டீ குடிக்கிறது இல்ல மணிமேகலை. நீயும், ஜானகி அண்ணியும் போய் டீ குடிச்சிட்டு வர்றீங்களா?” என்று கேட்கவே, ஜானகியும் இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு, மணிமேகலையுடன் டீ குடிப்பதற்காக தனியாகச் சென்றார்

அங்கே சென்று அமர்ந்த உடன் ஜானகி, மணிமேகலை பார்த்து, “உங்களுக்கு என்னை அடையாளம் தெரியுதா?” என்று கேட்டார்

“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனா எனக்கு சரியா ஞாபகம் இல்லை” என்று பதில் சொன்னார் மணிமேகலை

தன்னை ஒரு துளிகூட ஞாபகமே இல்லை என்று சொல்லும் மணிமேகலையிடம், மறுபடியும் விஷயத்தைச் சொல்லி ஞாபகப்படுத்தி, நன்றி சொல்வதா? இல்லை போனால் போகட்டும் என்று விட்டு விடலாமா? என்று யோசனை தோன்றியது ஜானகிக்கு. அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், நிச்சயம் சொல்ல வேண்டும் என்று மனசாட்சி ஒருபுறம் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.

இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு நடந்த அந்த உணர்ச்சிபூர்வமான நிகழ்வை நாமும் ஜானகியுடன் சேர்ந்து சற்று அசை போட்டு விட்டு வரலாம் வாருங்கள்

ஜானகிக்கு கல்யாணமாகி பத்து வருஷம் குழந்தை இல்லை. அதனால் வைத்தியம் பார்ப்பதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு  போய்க் கொண்டு இருந்தனர்

மணிமேகலையை பார்த்த அன்று, ஹாஸ்பிடலுக்கு ஜானகி மட்டும் தான் தனியாக வந்து இருந்தார். மாணிக்கத்திற்கு ஏதோ வேலை இருந்ததால் அவர் வரவில்லை.

ஜானகியை பரிசோதித்து பார்த்த டாக்டர், “உங்களுக்கு கருமுட்டை வளர்ச்சி சரியா இல்லம்மா. ஆனாலும் டெஸ்ட் டியூப் மூலமாக நீங்க குழந்தை பெத்துக்கலாம், அதுவும் உங்களோட சொந்த கருமுட்டைனால கரு உருவாகிறது ரொம்பவே கஷ்டம். நீங்க பேசாம வேற யார்கிட்ட இருந்தாவது, கருமுட்டை தானம் வாங்கிக்கங்க” என்றார்

இதைக் கேட்டு ரொம்பவே மனசு உடைஞ்சு போய் உட்கார்ந்து அழுதுட்டு இருந்தாங்க ஜானகி.

அப்பத் தான் மணிமேகலை பக்கத்துல வந்து, “என்ன விஷயம்?”னு கேட்டாங்க. 

எல்லார்கிட்டயும் சட்டுனு  தன்னோட கஷ்டத்தை சொல்லாத ஜானகிக்கு, மணிமேகலையை பார்த்தவுடன் அவரிடம் சொல்லலாம் என்று தோன்றியது

“எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷமா குழந்தை இல்ல. அதனால ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மென்ட்க்காக வந்தோம். ஹாஸ்பிடல்ல டெஸ்ட்டியூப் மூலமாக குழந்தை பிறந்தாலும், அது நம்ம ரெண்டு பேருக்கும் பிறக்கும் குழந்தையா இருக்கணும், யாராவது ஒருத்தருக்கு ஏதாவது பிரச்சனை இருந்து, அதனால குழந்தை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுதுனா, நமக்கு குழந்தையே வேண்டாம். குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு எங்க வீட்டுக்காரர் ஏற்கனவே சொல்லி இருந்தார்.

அவரு ஆம்பள, சொல்லிட்டு போயிடுவாரு. ஆனா எனக்கு ஒரு குழந்தையை நான் என்னோட வயித்துல சுமக்கணும், அணு அணுவா அதோட அசைவுகள ரசிக்கணும், என்னோட மார்ல இருந்து தாய்ப்பால் கொடுத்து வளர்க்கணும்னு எத்தனையோ ஆசைகள் இருக்கு. ஆனா அதையெல்லாம் அவர்கிட்ட சொல்லி என்னால புரிய வைக்க முடியாது.

டாக்டர் இப்போ எனக்கு கருமுட்டை வளர்ச்சி சரியா இல்ல, அதனால கருமுட்டை தானம் வாங்கிக்கலாம்னு சொல்றாங்க. ஆனா என்னோட கணவர் அதுக்கு ஒத்துக்க மாட்டார்.  என்ன செய்ய?” என்று கண்ணீருடன் ஜானகி சொன்னார்

“அக்கா நீங்க கவலைப்படாதீங்க, என்னோட கருமுட்டையை தானமாக கொடுக்கச் சொல்லி இப்ப தான் டாக்டர்கிட்ட சொல்லிட்டு வந்தேன். அதை யாருக்கோ கொடுப்பதற்கு பதிலா உங்களுக்கு கொடுக்கிறேன். நான் தானமாக கொடுத்ததை  பத்தி யார்கிட்டயும் சொல்லலை. நீங்களும் யார்கிட்டயும் சொல்லாதீங்க. இது நமக்குள்ள ரகசியமாக இருக்கட்டும். உங்களுக்கு இதுல சம்மதமா?” எனக் கேட்டார் மணிமேகலை.

ஜானகிக்கு தான் கும்பிடும் தெய்வமான மாரியம்மனே நேரில் வந்து சொன்ன மாதிரி இருந்தது. தன்னோட கஷ்டத்தை எல்லாம் போக்க வந்த சாமி மாதிரி தான் மணிமேகலையை பார்த்தாள் ஜானகி.

“எனக்கு  இதில் சம்மதம்” என உணர்ச்சிப் பெருக்குடன், கண்களில் கண்ணீரோடு சொன்னாள் ஜானகி

“சரிங்க அக்கா, இதோ இப்பவே டாக்டர்கிட்ட விஷயத்தை சொல்றேன்” என்று டாக்டரின் அறைக்குள்  சென்றார் மணிமேகலை

சற்று நேரத்திற்கெல்லாம் மணிமேகலை வெளியே வந்து ஜானகியை டாக்டரின் அறைக்குள் அழைத்துச் சென்றார்

“மணிமேகலை கருமுட்டையை தானம் கொடுப்பதற்காக ஏற்கனவே என்கிட்ட கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டு போயிருந்தாங்க. இப்ப அதை உங்களுக்குக் கொடுக்க விரும்புவதாகச் சொன்னாங்க. எனக்கு இதுல சம்மதம் தான், உங்களுக்கு இதுல சம்மதமா ஜானகி சொல்லுங்க?” என டாக்டர் கேட்க

“எனக்கும் இதுல சம்மதம் தாங்க டாக்டர், ஆனா எங்க வீட்டுக்காரருக்கு இதுல சம்மதம் இருக்காது. அதனால இந்த விஷயத்தை அவர்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். இதனால வருங்காலத்துல எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன். இது தப்பா இருந்தாலும், எனக்கு வேற வழி தெரியல. எனக்கும் ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கணும்னு ஆசை, அதனால இந்த விஷயத்தை நீங்க அவர்கிட்ட சொல்ல வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டாள் ஜானகி

“இல்லமா, இது சரியான வழிமுறை இல்லை. நான் உனக்கு ஒரு மாசம் டைம் தரேன். அதுக்குள்ள உங்க வீட்டுக்காரர்கிட்ட எப்படியாச்சும் விஷயத்தை சொல்லி புரிய வெச்சு, அவருக்கும் சம்மதம்னு கையெழுத்து போட  ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வாங்க. அப்ப தான் மேற்கொண்டு உங்களுக்கு டெஸ்ட் டியூப் பேபி டிரீட்மென்ட் பண்ண முடியும், இல்லன்னா இது பெரிய சட்ட சிக்கலை உருவாக்கிடும்” என மறுத்தார் டாக்டர்

“சரிங்க டாக்டர், நீங்க சொல்றது எனக்கு புரியுது. நான் எப்படியாச்சும் அவரோட மனசை மாத்தி சம்மதம் சொல்ல வைக்கிறேன்” என்று ஜானகி கிளம்பிப் போனார்.

வீட்டிற்குப் போன ஜானகி மாணிக்கத்திடம் தன்னுடைய ஆசைகளையும், கனவுகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லி, எப்படியாவது தன் கருவில் ஒரு குழந்தையை தானே சுமந்து பெற வேண்டும் என்று, ஒவ்வொரு விஷயமாக சொல்லி அவருக்குப் புரிய வைத்து சம்மதம் வாங்கினார்

தன்னுடைய பெயரை ஒருபொழுதும் சொல்லக் கூடாது என்று மணிமேகலை கேட்டுக் கொண்டதால், மணிமேகலையை பற்றி மாணிக்கத்திடம் எதுவுமே சொல்லவில்லை ஜானகி.

அதன் பின்பு ஹாஸ்பிடலுக்கு சென்று மணிமேகலையின் கருமுட்டை மூலமாக பிறந்தவள் தான் நித்யா

மணிமேகலையை ஜானகி முதலும் கடைசியுமாக பார்த்தது அந்த ஒரு நாள் மட்டுமே. அதன் பின்பு இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

இனி நிகழ்காலத்திற்கு வருவோம்….

“இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள், ஹாஸ்பிடல்ல பார்த்த ஞாபகம் இல்லையா?” என ஜானகி கேட்க

“ஞாபகம் இல்லையேங்க அக்கா” என்றாள் மணிமேகலை 

“உனக்கு வேணா ஞாபகம் இல்லாம இருக்கலாம், ஆனா எனக்கு உன்ன நல்லா ஞாபகம் இருக்கு. உன்னை எப்படி நான் மறக்க முடியும் மணிமேகலை? என்னோட வாழ்க்கைக்கே அர்த்தம் கொடுத்தவ நீ தான். சொல்லப்போனா நான் உன்னைய சாமியா நினைத்து கும்பிட்டு இருக்கணும். ஆனால் அந்த ஒரு நாளுக்கு அப்புறம், உன்னை என்னால பார்க்கவே முடியல” என ஜானகி வருத்ததுடன் கூற

“அக்கா… நான் உண்மையை சொல்லிடறேன். எனக்கு உங்களை பாத்ததுமே அடையாளம் தெரிஞ்சுது. ஆனா இந்த விஷயத்தை எல்லாரும் ஓரேப் போல எடுத்துக்க மாட்டாங்கன்னு தான் உங்களை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல. நீங்களும் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். இந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும்” என்று சொன்ன மணிமேகலையை, ஆச்சரியமாக பார்த்தார் ஜானகி

கண்ணீருடன் மணிமேகலையை ஆரத்தழுவி கொண்டு, “சரி மா, இனிமேல் நான் இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” என மணிமேகலைக்கு வாக்குக் கொடுத்தார் ஜானகி 

தன் கருமுட்டையில் உதித்த மகளே, தன் அண்ணன் வீட்டிற்கு மருமகளாகப் போவதை நினைத்து, மிகவும் மகிழ்ந்தாள் மணிமேகலை. காலம் மனிதர்களுக்குள் எப்படியெல்லாம் பிணைப்பை ஏற்படுத்துகிறது என்பது ஆச்சரியமே !!!

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

 

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. மிகவும் உணர்வு பூர்வமான கதை.
    தனக்கு கருமுட்டை கொடுத்தவளைப்பார்த்ததும் ஜானகிக்கு பிரஷர் ஏறி மயக்கம்போட்டது. மணிமேகலை அவர்களுடன் துணி எடுக்க சென்று. ஜானகி மணிமேகலையிடம் தன்னை தெரியலியானு பிளாஷ்பேக் சொல்லி தெரிய வைத்தது. மணிமேகலை தெரியும்கா. இது ரகசியமா இருக்கட்டும் சொல்லிய விதம் அருமை. எப்படியோ! மணிமேகலை கருமுட்டையின் தானத்தால் உருவான நித்யா, தன் அண்ணன் வீட்டிற்கு,மருமகள்.

  2. நல்ல கதை. நல்ல முடிவும் கூட. உணர்ச்சிகரமான கதைக்குப் பாராட்டுகள்.

  3. அழகான ரகசியம். இப்படியொரு உறவுமுறை பற்றியும், அது சுமூகமாக முடிவோடு அமைவது பற்றியும் படிப்பது இதுவே முதல் முறை. நன்று..!

சின்னராசு (சிறுகதை) – ✍ மா.மணிகண்டன், கோம்பை, தேனி மாவட்டம்

சூரசம்ஹாரம்… (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி