sahanamag.com
சிறுகதைகள்

பெயர் சொல்லும் பிள்ளைகள்… (ஆசிரியர் தின சிறப்புச் சிறுகதை)

“ஸ்ருதி இது தப்பும்மா. இங்க பாரு, இப்படி எழுதணும்”

“நீ தான் தப்பு, எங்க ரஞ்சனி மிஸ் இப்படி தான் சொல்லி குடுத்தாங்க”

“உங்க மிஸ் தப்பா சொல்லி குடுத்தாலும் அதான் சரியாடி?” என ராதிகா கோபமாய் கேட்க

“ஆமா, எங்க மிஸ் சொல்றது தான் கரெக்ட், நீ தப்பு” என நாலு வயது ஸ்ருதி தர்க்கம் செய்ய

“அடி வாங்க போற ஸ்ருதி இப்ப, சொன்னா கேக்கணும்” என அடிக்க கை ஓங்கினாள் ராதிகா

“ஏய் ராதி, என்னதிது?” என தடுத்தான் ராதிகாவின் கணவன் ஜெகன்

“பின்ன என்னங்க? மிஸ் தப்பா சொல்லி குடுத்து இருக்காங்கனு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறா”

“இது ஒரு ஸ்டேஜ் ராதிகா, தன்னோட டீச்சர் தான் ஹீரோனு நினைக்கற ஒரு அழகான ஸ்டேஜ், அதை ஸ்பாயில் பண்ணாத விடு” என்றான் சிரித்தபடி

“ஓ, நீங்க உங்க கலைவாணி டீச்சர் மேல பைத்தியமா இருந்தீங்களே அது மாதிரியா?” என ராதிகா கேலியாய் கேட்க, ஜெகனுக்கு உடனே தன் மனம் கவர்ந்த ஆசிரியையின் முகம் கண் முன் வந்தது

“எனக்கு மட்டுமில்ல, எல்லாருக்கும் அப்படி ஒரு டீச்சர் இருப்பாங்க ராதி. எனக்கு என்னோட கலைவாணி டீச்சர் அப்படித் தான், அவங்ககிட்ட படிக்கற எல்லாரையும் சொந்த பிள்ளைங்க மாதிரி தான் பாப்பாங்க. டீச்சர் வேலையை ஒரு தவம் மாதிரி செஞ்சவங்க அவங்க

என்னோட படிச்ச நிறைய பேர் இன்னைக்கி நல்ல நிலைல இருக்கறதுக்கு அவங்களோட ஒழுக்க போதனையும் வழிக்காட்டுதலும் ஒரு முக்கிய காரணம். எங்கப்பாகிட்ட வந்து நீங்க கலைவாணி டீச்சரை கல்யாணம் பண்ணிகோங்க, அப்ப தான் அவங்க நம்ம கூடயே இருப்பாங்கனு சொல்ற அளவுக்கு அவங்க மேல பைத்தியமா இருந்தேன். அம்மாகிட்ட தர்ம அடி வாங்கினது தனிக் கதை” என பழைய நினைவில் புன்னகைத்தான் ஜெகன்

“ஆரம்பிச்சுட்டீங்களா உங்க கலைவாணி டீச்சர் புராணத்த, கல்யாணமாகி இந்த அஞ்சு வருசத்துல அஞ்சாயிரம் வாட்டி கேட்டாச்சு. ஊருக்கு போறப்பவெல்லாம் உங்க டீச்சரையும் பாத்துட்டு தானே இருக்கோம். அது சரி, இப்ப ஸ்ருதிக்கு சப்போர்ட் பண்றதுக்கு வேற எதாச்சும் உள்காரணம் இருக்கோனு சந்தேகம் வருது எனக்கு” என ராதிகா பொய் கோபத்துடன் முறைக்க

“அட, இந்த ஐடியா எனக்கு தோணவே இல்லையே. வேணும்னா ரஞ்சனி மிஸ் என்ன நினைக்கறாங்கனு கேட்டு பாப்போமா ராதி?” என ஜெகன் விளையாட்டாய் வம்பு செய்ய, ராதிகா அவனை முறைத்தபடி எழுந்து சென்றாள்

போன முறை ஊருக்கு சென்ற போது கலைவாணி டீச்சரை சந்தித்த நினைவு, ஜெகனின் கண் முன் விரிந்தது

வீட்டு திண்ணையில் கால் நீட்டி அமர்ந்து, ஒரு பக்கம் கழண்டுவிட்ட மூக்கு கண்ணாடியை வலது கையில் தாங்கியபடி, மறுகையில் நாளிதழை பிடித்து, ஊன்றி படித்துக் கொண்டிருந்தார் கலைவாணி டீச்சர்

அந்த கோலத்தை கலைக்க மனமின்றி, தன் மகளையும் அமைதியாய் இருக்க சொல்லி செய்கை காட்டி விட்டு, ரசித்தபடி நின்றான் ஜெகன்

சற்று நேரத்தில் அருகில் சலனம் உணர்ந்து தலை உயர்த்திய டீச்சர், ஒரு கணம் யாரென புரியாமல் கண் இடுங்க பார்த்தார்

புரிந்ததும், புன்னகை விரிய பத்து வயது குறைந்தது போன்ற உற்சாகத்துடன், “டேய் ஜெகன், எப்ப வந்த டெல்லில இருந்து? வாம்மா ராதிகா. குட்டி பொண்ணே, வா வா வா. உனக்கு குடுக்க ஒண்ணுமில்லையே, ஒரு நிமிஷம் உக்காருங்க, இதோ கடைக்கு போயிட்டு வந்துடறேன்” என கிளம்பியவரை தடுத்தான் ஜெகன்

“ஒண்ணும் வேண்டாம் டீச்சர், நீங்க உக்காருங்க. உங்கள பாக்கணும்னு தான் வந்தோம். என்னாச்சு டீச்சர்? கண்ணு சரியா தெரியரதில்லையா?” என ஜெகன் கவலையாய் கேட்க

“வயசாச்சில்ல… இதோ, உனக்கே ஒண்ணு ரெண்டு நரை எட்டி பாக்குதே” என கேலி செய்து சிரித்தவரை பார்த்து, ஸ்ருதியும் சிரித்தாள்

“குட்டி வாலு, ஸ்கூல் போறியா? உங்க அப்பா உன்ன மாதிரி இருக்கறப்ப இருந்தே எனக்கு தெரியும்” என வாஞ்சையாய் ஜெகனை பார்த்தவர்

“போன வருஷம் பாத்ததுக்கு இப்ப மெலிஞ்சுட்ட ஜெகன், வேலை அதிகமோ? என்னம்மா ராதிகா, உன் புருஷன் நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடறது இல்லையா?” என அக்கறையாய் விசாரித்தார்

“இல்ல டீச்சர்… வேலை வேலைனு நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதில்ல, நீங்க சொன்னாலாச்சும் கேக்கராறானு பாப்போம்” என கிடைத்த சாக்கில் குற்ற பத்திரிக்கை வாசித்தாள் ராதிகா

“சரி சரி, நின்னுட்டே இருக்கீங்களே, உக்காருங்க, இதோ வரேன்” என தடுத்தும் கேளாமல் சென்றவர், பிஸ்கட் பழம் என வாங்கி வந்து தட்டை பரப்பினார்

“எதுக்கு டீச்சர் இதெல்லாம்? இப்ப தான் சாப்பிட்டதும் வரோம்” என ஜெகன் சொல்ல

“ஏன் சாப்டுட்டு வரே? நான் சமைச்சு போட மாட்டேனா? நான் வெக்கற மோர் கொழம்பு ஜெகனுக்கு உசுரு தெரியுமா ராதிகா? உங்க மோர் கொழம்பு சாப்ட்டு தான் மாத்ஸ்ல சென்டம் வாங்கினேன்னு ஐஸ் வெப்பானாக்கும்”, என ஏதோ தன் சொந்த பிள்ளையை பற்றி பேசுவது போல் சிலாகித்தார் கலைவாணி. ஜெகன் எதுவும் பேசாமல் ரசித்தபடி இருந்தான்

“டாக்டர்கிட்ட போனீங்களா? உடம்புக்கு இப்ப பரவாயில்லையா டீச்சர்?” என ஜெகன் விசாரிக்க

“வயசானா எல்லாமும் தான் வரும், அதையெல்லாம் நினைக்காம இருக்க வேண்டியது தான். எவ்ளோ நாளாச்சுடா உன்னை பாத்து, ஒரு வருஷம் இருக்குமல்ல ஜெகன்” என வாஞ்சையாய் தோளில் கை பதித்தவரை அன்புடன் பார்த்தவன்

“ஆமாம் டீச்சர், வேலை ஜாஸ்தி. அதோட இப்ப அம்மா அப்பாவும் எங்களோடவே டெல்லில இருக்கறதால, அடிக்கடி வர்ற வேலை இருக்கறதில்ல” என்றான்

“சரிப்பா, எங்க இருந்தாலும் நீங்கெல்லாம் நல்லா இருந்தா அதுவே போதும் எனக்கு” என ஆசிர்வாதம் போல் உரைத்தார்

கைப்பேசி அழைப்பின் சத்தத்தில், பழைய நினைவில் இருந்து மீண்டான் ஜெகன்

பால்ய சிநேகிதன் மணியின் எண் பேசியில் ஒளிரவும், மகிழ்வுடன் “டேய் மணி… எப்பட்றா இருக்க?” என்றான் உற்சாகமாய்

“இருக்கேண்டா” என்றான் சுரத்தின்றி

“என்னடா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பேசற?”

“ஜெகன், உனக்கு நம்ம கலைவாணி டீச்சர் ஞாபகம் இருக்கா?” எனவும்

ஆச்சர்யத்துடன் “சொன்னா நம்ப மாட்ட மணி, இப்ப தான் அவங்கள பத்தி நெனச்சேன், போன வாட்டி ஊருக்கு வந்தப்ப பாத்தது, ரெம்ப நாளாச்சுடா” என்றான் நெகிழ்வுடன்

“டீச்சர் இறந்துட்டாங்கடா” என்றான் மணி சோகமாய்

“வாட்? டேய் என்னடா சொல்ற?” என ஜெகன் அதிர்ச்சியில் உறைந்தான்

அவன் அதிர்ச்சியான குரலில் பயந்து, “என்னங்க… என்னாச்சு?” என பதறியபடி வந்தாள் ராதிகா

ஒன்றுமில்லை என்பது போல் ஜாடை காட்டியவன், ஏனோ பேச இயலாமல் தொண்டையை அடைப்பது போல் இருக்க “தண்ணீர் வேண்டும்?” என ராதிகாவிடம் செய்கையில் கேட்டான்

ராதிகா அகன்றதும், “என்ன ஆச்சு மணி? எப்போ? நீ இப்ப நம்ம ஊர்லயா இருக்க?”

“ஆமா ஜெகன், அம்மாவுக்கு கண் ஆபரேஷன் பண்ணி இருக்குனு ஊருக்கு வந்தேன். வந்ததும் தம்பி சொன்னான், ஹார்ட் அட்டாக்னு சொல்றாங்க. நம்ம க்ளாஸ்மேட்ஸ் சுந்தர், கணேசன் எல்லாரும் இங்க தான் இருக்காங்க. நீ டெல்லில இருந்து வர முடியாதுனு தெரியும், ஆனா உனக்கு கலைவாணி டீச்சர்’னா ரெம்ப பிடிக்குமேனு தான் சொல்லணும்னு கூப்ட்டேன். சாயங்காலம் ஆறு மணிக்கி தகனம் பண்றதா சொன்னாங்க”

அதன் பின் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் அடுத்த நான்கு மணி நேரத்தில் ஊரில் இருந்தான் ஜெகன்

சாவு வீட்டின் சாயல் இன்றி, அவ்விடம் ஏதோ யுத்தகளம் போல் காட்சி அளித்தது

ஆண் பெண் பாகுபாடின்றி சிலர் வாக்குவாதத்தில் இருக்க, என்னவென புரியாமல் குழம்பிப் போய் நின்றான் ஜெகன்

எதிலும் மனம் பதியாமல், கடைசியாய் ஒரு முறை தன் ஆசிரியையின் முகத்தை பார்க்க விழைந்தவனுக்கு, தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் கோர்த்தது

நண்பன் மணியின் கரம், ஆதரவாய் தோளில் விழ, “டேய் மணி… உயிரோட இருந்தா இத்தனைக்கு எவ்ளோ ஆசையா அதை சாப்டு இதை சாப்டுனு…” என அதற்கு மேல் பேச இயலாமல் நிறுத்தினான் ஜெகன்

அதற்குள் கூட்டத்தில் வாய் சண்டையாய் இருந்தது கைகலப்புக்கு மாறியது

“என்ன மணி பிரச்னை? ஏன் இப்படி இவங்க சண்டை போட்டுக்கறாங்க?” என்றான் ஜெகன் புரியாமல்

“வேற என்னடா, எல்லாம் சொத்து பிரச்சனை தான். டீச்சரோட பசங்க ரெண்டு பேரும், வீடு அவங்க பேருக்கு தான் வரணும்னு தகராறு, இல்லைனா கொள்ளி வெக்க மாட்டோம்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க… என்ன மனுஷங்களோ?” என்றான் மணி வருத்தமாய்

“பேரு சொல்ல புள்ளை இல்லைனு கோவில் கோவிலா ஏறி தவமா தவமிருந்து புள்ள பெத்த மவராசி, இன்னைக்கி கொள்ளிக்கு வழியில்லாம கெடக்குதே… ஹ்ம்ம் என்ன சாபமோ இந்த மனுசிக்கி” என்றார் கூட்டத்தில் ஒருவர்

அதற்கு மேல் பொறுக்க இயலாமல், “நிறுத்துங்க” என்றான் ஜெகன் சத்தமாய்

“யார் இவன்?” என்பது போல், எல்லோர் கவனமும் ஜெகனின் மீது திரும்பியது

“எங்க வீட்ல வந்து எங்கள நிறுத்த சொல்றதுக்கு நீ யார்ரா?” என ஜெகன் மீது பாய்ந்தான் டீச்சரின் மூத்த மகன்

“நான் கலைவாணி டீச்சர்கிட்ட படிச்சவன். தயவு செஞ்சு உங்க சண்டைய ஒதுக்கி வெச்சுட்டு டீச்சருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்யுங்க, அவங்க ஆத்மாவ நிம்மதியா போக விடுங்க” என கெஞ்சுவது போல் கூறினான் ஜெகன்

“உன்னோட புத்திமதி இங்க யாருக்கும் தேவை இல்ல. வீடு என் பேருக்கு தான் வரணும், எனக்கு தான் கொள்ளி வெக்கற உரிமை இருக்கு. இல்லைனா கெழவி அனாத பொணமாத்தான் நாறணும் சொல்லிட்டேன்” என்றான் ஒருவன்

அதற்கு மேல் பொறுமையை இழுத்து பிடிக்க இயலாமல் அவனை ஓங்கி அறைந்தான் ஜெகன்

எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, “மனுசனாடா நீ… ச்சே… பெத்த தாய அனாத பொணம்னு சொல்ற நீ உயிரோட இருந்தும் சவம் தாண்டா. நீ கொள்ளி வெச்சா எங்க டீச்சரோட ஆத்மா நிம்மதியா போகாது. நீங்க கொள்ளி வெக்கலைனா அவங்களுக்கு யாரும் இல்லையா? ஆயிரக் கணக்குல இருக்கோம், அவங்ககிட்ட படிச்ச புள்ளைங்க. பெத்த புள்ளை வெக்காட்டி என்ன, பெறாத புள்ள நான் வெக்கறேன் என் அம்மாவுக்கு கொள்ளி, போடா வெளிய” என கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான் ஜெகன்

“டேய்…” என மறுபடி சீறியவனை எச்சரிப்பது போல் பார்த்த ஜெகன், “பாதகம் செய்வோரைக் கண்டால் பயங்கொளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பானு சொல்லி குடுத்தவங்கடா எங்க டீச்சர். அதை அவங்க சொந்த பந்தங்ககிட்டயே காட்ட வெச்சுடாத. அந்த தெய்வத்தோட வயத்துல பொறந்த ஒரே காரணத்துக்காக, உன்னை உயிரோட விடறேன். இல்லைனா நீ தாண்டா இப்ப அனாத பொணமா போவ. என்னோட ஐபிஎஸ் பவர் என்னனு காட்ட வெச்சுடாத” எனவும், போலீஸ் என்ற வார்த்தையில் பயந்து பின் வாங்கினான் அவன்

அதன் பின் அமைதியாய் காரியங்கள் நடந்தன. சொன்னது போல் மகனாய் இருந்து, ஜெகன் தன் ஆசிரியைக்கு இறுதி மரியாதையை செய்தான்

ஊரே மெச்சும் படி இறுதி ஊர்வலம் நடந்தது. அதோடு தன் செல்வாக்கை பயன்படுத்தி டீச்சர் இருந்த வீட்டை யாரும் ஆக்ரமிக்க முடியாதபடி செய்தான்

காலம் வேகமாய் சென்றது

கலைவாணி டீச்சர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் ஒரு நாள், திடீரென அவரின் வீடு சுத்தம் செய்யப்பட்டு, வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு, விழாக்கோலம் பூண்டது

ஆர்வமாய் வீட்டின் முன் ஊர்மக்கள் கூடி இருக்க, ஜெகன் ஒலிப்பெருக்கியில் பேசத் தொடங்கினான்

“எல்லாருக்கும் வணக்கம், என் பேரு ஜெகன், கலைவாணி டீச்சர் பெறாத பிள்ளைகளில் ஒருத்தன். எங்க அம்மா இந்த உலகத்த விட்டு போய் ஒரு வருஷம் ஆச்சு

தன்கிட்ட படிச்ச பிள்ளைககிட்ட இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்து, அவங்கள வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமா இல்லாம, நல்ல மனுசங்களாவும் உருவாக்கினவங்க எங்க கலைவாணி டீச்சர்

அவங்க இருந்த இந்த வீடு, இனிமே இலவச நூலகமா செயல்படும். இன்னைக்கி நிலவரப்படி இந்த வீட்டுக்கு என்ன விலையோ, அதை டீச்சரோட பிள்ளைகளுக்கு கொடுத்துட்டோம். அவங்ககிட்ட படிச்சவங்க எல்லாரும் சேந்து, ஒரு கல்வி அறக்கட்டளை ஆரம்பிச்சு இருக்கோம்

என்னைப் போல எத்தனையோ ஐபிஎஸ் ஐஏஎஸ்’களை உருவாக்கின ஆத்மாவோட நினைவா, இந்த அறக்கட்டளைய உருவாக்கி இருக்கோம். இதோட முக்கிய நோக்கம், திறமை இருந்தும் வசதி இல்லாத பிள்ளைங்களை படிக்க வெக்கறது தான்

‘கலைவாணி கல்வி அறக்கட்டளை’ய திறந்து வெக்கறதுக்கு நம்ம ஸ்கூல் ஹெட்மாஸ்டர் குமாரசாமி சாரை அன்போடு அழைக்கிறேன்” என உரையை முடித்தான் ஜெகன்

கலைவாணி கல்வி அறக்கட்டளை மற்றும் இலவச நூலகம்

இப்படிக்கு, கலைவாணித்தாயின் பெயர் சொல்லும் பிள்ளைகள்”

என்ற பெயர்ப் பலகையை திறந்து வைத்தார் அவ்வூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரசாமி

“குரு ப்ரம்ஹா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர

குரு சாக்ஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ:”

என்ற பாடல் பின்னணியில் ஒலித்தது !!!

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே

இந்த இனிய நாளில், எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பணமாய் இந்த சிறுகதையை பகிர்கிறேன். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்” 🙏💐❤

(கண் பேசும் வார்த்தைகள்” என்ற எனது சிறுகதை தொகுப்பில் இடம் பெற்ற கதை இது

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

(முற்றும்)

Similar Posts

4 thoughts on “பெயர் சொல்லும் பிள்ளைகள்… (ஆசிரியர் தின சிறப்புச் சிறுகதை)
  1. நல்லா இருக்கு. பிள்ளைகள் இப்படிச் சண்டை போட்டுக் கொள்வது அபூர்வமே இல்லை. ஆனால் உடனடியாக நிலைமையைப் புரிந்து கொண்டு ஜெகன் செய்த செயல் பாராட்டுக்குரியது!

  2. அருமையான கதை. பெருபாலும் சமுதாயத்தில். மிகவும் மதிப்பு உடையவர்கள்தன்வீட்டு மக்களிடம்மதிப்பிழந்து தான்காணப்படுகின்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!