இந்த சிறுகதையின் முன் பாதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நாள்: செப்டம்பர் 17, 2022
“எக்டோஜெனிசிஸ் டெக்னலாஜியோட சக்ஸஸ் ரேட் இப்போதைக்கு ரெம்ப குறைவு தானே, அதுல நிறைய ரிஸ்க்கும் இருக்கே. ரோபோக்கள் மனித டாக்டர்கள் உதவி இல்லாம சூழ்நிலைக்கு தக்க செயல்பட முடியுமா?” என கேள்வி எழுப்பினார் டாக்டர் கிரீன்பெர்க்
“நிச்சயம் முடியும் டாக்டர், இந்த ரோபோக்கள் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் டெக்னலாஜியின் உச்சபட்ச கண்டுபிடிப்பு. அது டாக்டர், விஞ்ஞானி, டீச்சர், சமையல் வல்லுநர், இன்னும் என்னவெல்லாம் தேவையோ எல்லாமும் செய்யக்கூடிய விதமா வடிவமைக்கப்பட்டிருக்கு. இதை நாங்க நிரூபிச்சுருக்கோம்” என்ற நந்திதா, டாக்டர் ராம் பிரசாத்தை பார்க்க
“நிஜம் தான், நந்திதாவோட டீம் அதை செயல்படுத்தி காட்டி இருக்காங்க. அதுக்கான ஆதாரம் இதோ” என விரலசைவில் திரையில் விடியோவை ஓடச்செய்து காட்டிய டாக்டர் ராம்பிரசாத், அது நிறைவு பெற்றதும், “யு கேன் கண்டினியூ நந்திதா” என்றார்
“அந்த கருக்கள் முழுமை அடையற நாப்பது வார காலத்துக்குள்ள, மற்ற உயிரினங்கள், தாவரங்கள், மற்றும் அந்த குழந்தைகள் வளரத் தேவையான அடிப்படை வசதிகளை அந்த ரோபோக்கள் உருவாக்கும். அதுக்கான ப்ரோக்ராமிங் எல்லாமும் செய்யப்பட்டிருக்கு. அது மல்டிபங்க்ஷன் ரோபோக்கள் அப்படிங்கறதால, நம்மோட அடுத்த தலைமுறைக்கு தேவையான எல்லாத்தையும் கத்து குடுக்கப் போறதும் அந்த ரோபோக்கள் தான்
அந்த அறுநூறு பேர்ல இருந்து தான் இனி உலகம் உருவாகணும்ங்கறதால, அந்த அறுநூறு கருக்களில் முன்னூறு பெண்ணாவும் முன்னூறு ஆணாகவும் வைக்கப்பட்டிருக்கு, எம்பிரியாலஜிஸ்ட்ஸ் கருக்களின் பாலினத்தை உறுதி செஞ்சுருக்காங்க. ப்ரோஜெக்ட் பத்தின தகவல்கள நான் சொல்லி முடிச்சுட்டேன், இனி கேள்விகள் ஏதாச்சும் இருந்தா நீங்க கேக்கலாம்” என்றார் நந்திதா
“இந்த கேப்ஸ்யூல் வேலை முழுமை அடைஞ்சுடுச்சா?” என்ற டாக்டர் நரேனின் கேள்விக்கு
“முழுமை அடைஞ்சு நேத்து சீல் பண்ணிட்டோம்” என பதிலளித்தார் நந்திதா
“அதை எங்க வெச்சுருக்கீங்க?” என்ற கேள்வி பலரிடமிருந்து எழுந்தது
“மன்னிக்கணும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது” என்ற டாக்டர் ராம்பிரசாத்
“சயின்ஸ் பியாண்ட் இமாஜினேஷன்னு (Science Beyond Imagination) சொல்லுவாங்க. இப்ப அதை நாம கண்கூடா பாத்துட்டுருக்கோம், இந்த ‘ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025’ அதுக்கு ஒரு சிறந்த உதாரணம். எந்த சக்தியாலும் மனித இனத்தை அழிக்க இயலாதுனு நம்ம விஞ்ஞானிகள் மறுபடி நிரூபிச்சுருக்காங்க
அதேப் போல், எத்தனை நூற்றாண்டு கடந்தாலும், எல்லாத்தையும் தாண்டிய ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தை செலுத்திக்கிட்டு இருக்கறதை மறுக்க இயலாது. அந்த சக்தி என்னங்கறது தனிநபர் நம்பிக்கையை பொறுத்த விஷயம். இந்த கணத்துல, இந்த ப்ரொஜெக்ட்டுக்கு வித்திட்ட டாக்டர் சந்தோஷ்குமாருக்கு நன்றி செலுத்த வேண்டியது நம்ம எல்லோரின் கடமைனு நான் நினைக்கிறேன், டூ யு அக்ரீ?” என எல்லோரையும் பார்த்து ராம்பிரசாத் கேட்க
“நிச்சயமா…” என ஒலித்த குரல்களில், பல நெகிழ்ந்திருந்தன
“இனி எத்தனை நாள் நாம இந்த உலகுல வாழப்போறோம்னு தெரியல, வாழும் காலம் வரை மகிழ்ச்சியோட வாழ்வோம். ஒரு விஷயம் நம்மகிட்ட இருக்கறப்ப அதோட அருமை தெரியாது, இனி இந்த உலகம் நமக்கில்லைங்கற நிலை வரும்போது தான், அதோட உன்னதம் புரியுது. முன்னேற்றம்’ங்கற பேர்ல, உலகத்தின் இயற்கை வளத்தை சூறையாடாம இருந்துருக்கலாமோனு தோணுது
அதோட, இந்த வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் ரசிச்சு வாழ்ந்து இருக்கலாமோங்கற ஆதங்கம் மனசுல வர்றதை தடுக்க முடியல. இந்த உலகத்தின் உன்னதத்தை பற்றி, இங்க வாழ்ந்த மனிதர்களை பற்றி, இதன் பாரம்பரியம், இன்னும் நிறைய விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு நந்திதாவின் டீம் உருவாக்கின ரோபோக்கள் எடுத்து செல்லும்னு உறுதி குடுத்துருக்காங்க. அதுக்கு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
அறிவியலை ஆக்கப்பூர்வமா உபயோகிச்சா அது ஆக்கும் சக்தியை கொடுக்கும், அழிவுக்கு பயன்படுத்தினா பேரழிவு தான் முடிவுனு நம்ம தலைமுறை காலம் கடந்து தான் உணர்ந்துருக்கோம். இனி உருவாகப்போற புது உலகத்துல, ஆக்கப்பூர்வமா சிந்திக்கிற தலைமுறையா, சகமனிதனை நேசிக்கற சமூகமா உருவாகும்னு நம்புவோம். அனைவருக்கும் நன்றி” என தன் உரையை முடித்தார் டாக்டர் ராம் பிரசாத்
“ஐயோ கீரை சூப்பா, எனக்கு வேண்டாம்” என தன் அன்னையை கோபமூட்டிக் கொண்டிருந்தாள் பதினான்கு வயது மித்ரா
“மித்ரா…” என ஜனனி முறைக்க, வேண்டா வெறுப்பாய் சூப்பை குடிக்கத் தொடங்கினாள்
சில நிமிடங்களுக்கு பின், “மாம் ….” என்ற மகளின் அலறலில், பதறியபடி முன்னறைக்கு வந்த ஜனனி, மகள் ஜன்னலில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக் கண்டு எரிச்சலுற்றாள்
“எதுக்கு மித்து இப்படி கத்தற? என்னமோ ஏதோனு பயந்து ஓடி வந்தேன்” என ஜனனி சிடுசிடுக்க
“ஐயோ அங்க பாரு மம்மி, டாடியோட கார்” என மித்ரா கூற, நம்ப இயலாமல் மகள் காட்டிய திசையில் பார்த்தாள் ஜனனி
அடுத்த நிமிடம் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கதவருகே ஓட, தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்த கதவினுள் நுழைந்த ராம் பிரசாத், இருவரின் பதட்டத்தைக் கண்டு திகைத்து நின்றான்
“என்னாச்சு?” என பதறிய தந்தையை கண்ட மித்ரா
“அதான் டாடி நானும் கேக்கணும்னு நினைச்சேன். என்னாச்சு? எப்படி இவ்ளோ சீக்கிரம் வந்தீங்க? இன்னும் சன் செட் கூட ஆகலியே?” என பதட்டத்துடன் ஆரம்பித்த மித்ரா, கேலிக்குரலில் முடிக்க, அவளோடு சேர்ந்து ஜனனியும் கேலியாய் சிரித்தாள்
“ஏய்… என்ன… என்னை பாத்தா கிண்டலா இருக்கா ரெண்டு பேருக்கும்” என பொய் கோபத்துடன் மனைவியையும் மகளையும் துரத்திய ராம், அவர்கள் வசமாய் சிக்கியதும், அன்புமேலிட அணைத்துக் கொண்டான்
ராமின் அன்பில் நெகிழ்ந்த இருவரும் இருபுறமும் அணைத்து நிற்க, “இந்த சுகம் எத்தனை நாளைக்கோ?” என்ற நினைவில், இதயம் கனக்க நின்றான் ராம்
“சீரியஸ்லி ராம், எப்படி இவ்ளோ சீக்கரம் வந்தீங்க? மித்ரா சொன்ன மாதிரி நீங்க வெளிச்சத்துல வீட்டுக்கு வந்து பல மாசம் ஆச்சே” என கேலியும் ஆதங்கமுமாய் ஜனனி கேட்க
“நான் என்ன உன்னை மாதிரி கிண்டர் கார்டனுக்கு கிளாஸ் எடுக்கவா போறேன்? என் வேலை அப்படி, ரிஸர்ச்ல இருக்கறவன் நெனச்ச நேரம் வர முடியுமா?” என்ற ராம், அதற்கு பதிலாய் மனைவியின் முறைப்பை பரிசாய் பெற்றான்
“டாடி…. இன்னைக்கி டின்னருக்கு வெளில போலாமா ப்ளீஸ்?” என மித்ரா கேட்க
“அதெல்லாம் வேண்டாம், எங்க பாத்தாலும் வைரஸ் பயமா இருக்கு” என தடுத்தாள் ஜனனி
“இனி பயந்து ஆகப் போறதென்ன…” என ராம் முணுமுணுக்க, அவனின் சோர்ந்த குரலில் இருந்தே ஏதோ சரியில்லை என உணர்ந்த ஜனனி, மகளின் முன் கேட்க தயங்கி மௌனமாய் நின்றாள்
“ரெடியாகு மித்தும்மா, டின்னருக்கு வெளில போலாம்” என மகளை உற்சாகப்படுத்தினான் ராம்
“ஹேய்…” என்ற உற்சாகக் கூவலுடன் கிளம்பச் சென்றாள் மகள்
“என்னாச்சு ராம்?” என ஜனனி கவலையுடன் கேட்க
மௌனமாய் மனைவியின் கரம் பற்றிய ராம், “நிறைய பேசணும் ஜனனி, பட் நாட் நவ்… இப்போதைக்கு டின்னரை என்ஜாய் பண்ணலாம், கெட் ரெடி” என்றான் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன்
அன்றைய இரவு உணவு நேரம் உற்சாகமாய் கழிந்தது. மகளின் சந்தோஷம் ராமையும் தொற்றிக் கொள்ள, சற்று நேரம் எல்லாம் மறந்து மகிழ்வாய் இருந்தான்
அன்றிரவு வீடு திரும்பியதும், “தேங்க் யூ சோ மச் டாடி, இன்னைக்கி நான் ரெம்ப ஹாப்பியா இருக்கேன்” என்ற மகளை
“இட்ஸ் மை ப்ளஷர் பேபி” என்றபடி அன்போடு அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் ராம்
அதைக் கண்டு மனம் நிறைந்த போதும், “லேட் ஆச்சு மித்ரா, போய்த் தூங்கு” என்றாள் ஜனனி
“மம்மிக்கு பொறாமை டாடி” என தந்தையிடம் ரகசிய குரலில் கூறி கண்சிமிட்டி மித்ரா சிரிக்க, வயதுக்கு மீறிய மகளின் குறும்பு பேச்சில் வாய்விட்டு சிரித்தான் ராம்
பெற்றவளின் முறைப்பை உணராதவள் போல், “குட்நைட் மாம், குட்நைட் டாட்” என்றபடி மித்ரா அவள் அறைக்குச் செல்ல, அவள் சென்ற திசையையே பார்த்து நின்றான் ராம்
“ஜஸ்ட் ஒரு டின்னர் கூட்டிட்டு போனதுக்கு மித்ரா எவ்ளோ ஹேப்பி ஆகிட்டா பாரேன் ஜானு. வேலை வேலைனு எத்தனை சந்தோசங்களை மிஸ் பண்ணி இருக்கேனு தோணுது” என்ற கணவனின் ஆதங்கமான பேச்சு, ஜனனிக்கு புதிதாய் இருந்தது
தன் மீதும் மகள் மீதும் ராம் அதீத அன்பை கொண்டவன் தான் என்ற போதும், வேலை தான் முதல், அதன் பின் தான் எல்லாம் என்ற மனநிலையை கொண்டவன், இன்று இப்படி பேசுவதை நம்ப இயலாமல் பார்த்தாள் ஜனனி
அப்போது தான் ராம் அன்று மாலை, “நிறைய பேசணும்” என்றது நினைவுக்கு வர, “என்னப்பா பிரச்சனை, நிறைய பேசணும்னு சொன்னீங்களே” என நேரடியாய் விசயத்திற்கு வந்தாள் ஜனனி
அன்று நடைபெற்ற கூட்டத்தில் நடந்த பேச்சின் சாராம்சத்தை, அடுத்த அரைமணி நேரம் மனைவியிடம் பகிர்ந்தான் ராம்
ராம் சொன்ன தகவல்களை கேட்டதும், அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் ஜனனி
“வேற வழியே இல்லையா ராம்? ஏதாச்சும் பண்ணுங்களேன், நம்ம மித்துவுக்காக ப்ளீஸ்” என ஜனனி அரற்ற
சமாதானமாய் மனைவியை அணைத்தவன், “நம்ம மித்துவுக்காக மட்டுமில்ல ஜனனி… இதை போல இருக்கற கோடிக்கணக்கான மித்ராகளுக்காகவும் நாங்க ஒன்றரை வருசமா போராடி பாத்துட்டோம். இனி ஒண்ணும் செய்யறதுக்கில்ல. இறுதிக் கட்டத்தை நெருங்கிட்டோம். இனி இருக்கற நாட்களை சந்தோசமா கழிக்கணும், அவ்ளோ தான்” என்றான் ராம் விரக்தியாய்
“ஏன் ராம் இப்படி? யாரோ அஜாக்கிரதையாய் இருந்ததுக்கு எல்லாரும் தண்டிக்கப்படறது என்ன நியாயம்” என தார்மீக கோபத்துடன் ஜனனி கேட்க
“என்ன செய்யறது? அறிவியலை ஆக்கப்பூர்வமா உபயோகிச்சா அது ஆக்கும் சக்தியை கொடுக்கும், அழிவுக்கு பயன்படுத்தினா பேரழிவு தான் முடிவு” என்றான் வேதனையாய்
“இதை எப்படி ராம் மித்ராகிட்ட சொல்றது?” என ஜனனி வேதனையுடன் வினவ
“கொஞ்ச நாள் போகட்டும்…. நானே பக்குவமா சொல்லிக்கறேன்” என்றான் ராம்
“டெலிவரி வார்டுல இருந்து வெளிய வந்து, மித்ராவை முதல் முதலா கைல வாங்கினதும், அவகிட்ட நீங்க என்ன சொன்னீங்கனு ஞாபகம் இருக்கா ராம்?” என ஜனனி கண்ணில் நீர் வழியக் கேட்க
“ஜனனி ப்ளீஸ்… நானே ரெம்ப நொந்து போயிருக்கேன், என்னை அழ வெக்காத” என்றான் ராம் உணர்வுகளை கட்டுப்படுத்தி
அவனின் வேண்டுதல் காதில் விழாதவளாய், “உன்னை எந்த ஆபத்தும் நெருங்காம நான் பாத்துப்பேன்னு அன்னைக்கி உங்க மகள்கிட்ட சொன்னீங்களே ராம், உங்களால அந்த பிராமிஸ் கீப் அப் பண்ண முடியலயா ராம்?. அவளோட லைப் பத்தி நாம எவ்ளோ கற்பனைகள் வெச்சுருந்தோமே ராம்” என ஜனனி கட்டுப்படுத்த இயலாமல் கதற
“ஜானு ப்ளீஸ்…. என்னை குற்ற உணர்ச்சில தள்ளாத” என கண்ணில் நீர் துளிர்க்கக் கெஞ்சினான் ராம்
கணவனின் வேதனை புரிய, தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட ஜனனி, “எந்த நூற்றாண்டுல இருந்தாலும், என்ன டெக்னலாஜி வளர்ந்தாலும், பிள்ளைகனு வர்றப்ப பெத்தவங்க கோழைகள் ஆயிடறோம், இல்ல ராம்” என வருத்தத்துடன் வினவினாள்
“எது மாறினாலும் அடிப்படையில நாம எல்லாரும் அன்புக்கு அடிமைகள் தான் ஜனனி, அது தான் நம்மை செலுத்தற சக்தியாவும் பல தலைமுறைகளா இருந்துட்டு இருக்கு” என்றபடி மனைவியை அணைத்துக் கொண்டான் ராம்
நாள்: ஏப்ரல் 20, 2023
அன்று முழு சூரிய கிரகணம் என கணிக்கப்பட்டிருந்தது
நிலவு, உலக பந்திற்கும் சூரியனுக்கு இடையே திரை போட்டது
அதே கணத்தில் உலகத்தின் வட கோடியில் இருந்த கடைசி பயோ சென்சாரும் ஓலமிட்டது
அந்த ஓலம், உலகில் இனி எந்த உயிரினமும் இல்லை என்பதை பறைசாற்றியது
ஆராய்ச்சியாளர்கள் கணித்தது போல், அந்த இறுதி நாள், அந்த இறுதி நொடி, சூரிய கிரஹணம் கொண்ட இருண்ட அந்த நாழிகையில் வந்தது
அழிவை கணிக்க தெரிந்தவர்களுக்கு, அதை தவிர்க்க வழி தெரியாமல் போனது தான் சோகமான உண்மை
நாள்: ஜூன் 1, 2024
‘ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025’ என தங்கநிற எழுத்துக்கள் மின்ன, வெள்ளை நிற சதுரப் பெட்டகம் போன்ற அமைப்பில் இருந்த கேப்ஸ்யூல் சிறிதே அதிர்ந்தது
நந்திதாவின் குழுவினர் அமைத்த திட்டத்தின் படி, ரோபோக்கள் உயிர்த்தெழுந்தன. பெண் ரோபாட் ஆண் ரோபாட்டை பார்த்து “ஹாய் சந்தோஷ்” என விளித்தது
அடுத்த கணம், “ஹாய் மித்ரா” என்றது ஆண் ரோபாட். ஆம், ராம் பிரசாத்திடம் பெண் ரோபோவுக்கு பெயர் சூட்டும் படி நந்திதா கேட்க, தன் மகளின் பெயரை முன் மொழிந்தான் ராம்
அவனே சொன்னது போல், எது மாறினாலும் அடிப்படையில் அன்புக்கு அடிமை தான் மனித இனம். அதே அன்பின் அடிப்படையில், தன் பெண்ணின் பெயரேனும் இந்த உலகில் நிலைத்து இருக்கட்டுமென பெயர் சூட்டினான் ராம்
ஆண் ரோபோவுக்கு தன் ஆசானும், இந்த ஆராய்ச்சிக்கு வித்திட்டவருமான சந்தோஷ் அவர்களின் பெயரே பொருத்தமென சூட்டினாள் நந்திதா. அவளும் தன் குருவின் மீது கொண்ட அன்பிற்கு அடிமை போலும்
இயந்திர பொம்மை போலன்றி நிஜ மனித உருவம் போல் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ரோபோக்கள், ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தபடி வெளியுலகை உள்ளிருந்தே ஆராய்ந்தன. எல்லாமும் சாதகமாய் இருப்பதாய் தோன்ற, பயோபேக் (Biobag) எனப்படும் செயற்கை கருவறைகளை உருவாக்கத் தொடங்கின
இயந்திர வேகம் என்றாலும், சற்றே நுண்மையான பணி என்பதால் இரு நாட்கள் அதிலேயே கழிந்தது
ஜூன் 3, 2024 அன்று, ரோபோக்கள் சந்தோஷும் மித்ராவும் அறநூறு கருக்களை செயற்கை கருவறைகளுக்குள் செலுத்தின
அடுத்து வந்த நாற்பது வாரங்களும் கருக்கள் வளர வளர, ரோபோக்கள் தங்களுக்கு இட்ட பணியான மற்ற உயிரின உருவாக்கத்தையும், அந்த பிள்ளைகள் வளர வேண்டிய அடிப்படை வசதிகளையும் உருவாக்கியது
நாள்: மார்ச் 10, 2025
சுமார் இரண்டு வருடத்திற்கு பின், புதிய பூமியில் ஜனித்த முதல் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதை தொடர்ந்து 599 அழுகுரல்களும் பின்னோடு கீதமாய் இசைத்தன
நாள்: அக்டோபர் 12, 2020 (இன்று)
“இல்ல இல்ல… நான் சாக விரும்பல. ப்ளீஸ் டாக்டர் ராம்பிரசாத், எப்படியாச்சும் இந்த உலகத்த காப்பாத்துங்க” என்ற முகுந்தனின் அலறலில்
“என்னங்க… என்னங்க, என்னாச்சுங்க உங்களுக்கு? யாரு டாக்டர் ராம்பிரசாத்?” என மனைவி மலர்விழி உலுக்க, மலங்க மலங்க விழித்தபடி எழுந்தமர்ந்தான் முகுந்தன்
“இன்னைக்கி தேதி வருஷம் என்ன?” என பதட்டமாய் முகுந்தன் கேட்க
“அக்டோபர் 12, 2020, ஏன் கேக்கறீங்க?” என்றாள் மலர்விழி
“எல்லாம் கனவா…” என ஆசுவாசப்படுத்தியவன், தான் கண்ட கனவை மனைவியிடம் பகிர்ந்து கொள்ள, அடக்கமாட்டாமல் சிரித்தாள் மலர்விழி
“எதுக்குடி இப்ப சிரிக்கற? நானே மிரண்டு போய் கெடக்கறேன்” என இன்னும் பயம் விலகாத குரலில் முகுந்தன் கூற
“வீட்ல சும்மா இருக்கோம்னு சைன்ஸ் பிக்ஸன் படமா பாத்து பாத்து, கனவும் சைன்ஸ் பிக்ஸனாவே வருதா? அதுவும் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு நடக்கற மாதிரியா?” என கேலி செய்தவளை முறைத்தான் முகுந்தன்
“நீங்க கண்டது கனவா இருந்தாலும், நிலைமை இப்படியே இருந்தா அது நிஜத்துல நடந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல” என்றாள் மலர்விழி
“நீ வேற ஏன் மலரு பீதிய கெளப்பற? எப்பா சாமி… இனி தேவையில்லாம வெளிய போக மாட்டேன், பத்திரமா இருந்துக்கணும்” என்றான் முகுந்தன் அதிர்ச்சி விலகாமல்
“ஆறு மாசமா பிரெண்ட்ஸ பாக்க போறேன், கடைக்கு போறேன், நிலவரம் பாத்துட்டு வரேன்னு வீட்டுலேயே அடங்காம சுத்துனீங்க. நானும் அத்தை மாமாவும் அரசாங்கமும் எத்தனை சொல்லியும் கேக்காத உங்களை, ஒரு கனவு திருத்திடுச்சே” என்றாள் மலர்விழி கேலியாய்
“சாதாரண கனவில்ல மலர், அப்படியே நிஜம் மாதிரியே, இப்ப நெனச்சாலும் நடுங்குது” என்றான் முகுந்தன்
“டென்ஷன் ஆகாதீங்கப்பா, அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. எத்தனையோ போர்களையும், இயற்கை சீற்றங்களையும் தாண்டி மீண்டு வந்த நம்ம உலகம், நிச்சயம் இந்த கொரோனவுல இருந்தும் மீண்டு வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்கு நாம எல்லாரும் அரசாங்கமும் மருத்துவர்களும் சொல்றதை சுயகட்டுப்பாட்டோடு கடைபிடிப்போம்னு உறுதிமொழி எடுத்து அதுபடி நடந்தாலே போதும்” என ஆசானாய் மாறி போதித்த மனைவியை, அன்புடன் பார்த்தபடி ஆமோதித்தான் முகுந்தன்
சமூக இடைவெளியை கடைபிடிப்போம்… சந்ததியை காப்போம் !!!
உறுதிமொழி எடுப்போம்… உலகை காப்போம் !!!
(முற்றும்)
#ad – Amazon.in Deals 👇
#ad – Amazon.com Deals 👇
நல்ல கற்பனை வளத்துடன் உருவான கதை கடைசியில் கனவாக மாறிப் போனது. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இதன் மூலம் கொரோனா பாதுகாப்பு விதிகளை அழுத்தம் திருத்தமாகக் கூறியமைக்கு நன்றி/வாழ்த்துகள். அறிவியல் கற்பனை கொடி கட்டிப் பறந்தது. நன்கு ரசித்தேன். வாழ்த்துகள்.
நன்றிங்க மாமி, உன்மையை சொல்ல வேண்டுமெனில், முதலில் அந்த கனவு வரும் முடிவை சேர்க்கவில்லை. ஆனால், நிகழ்காலத்தில் இருக்கும் ஒரு தொற்று நோய் என்பதால், கதையில் கூட அப்படி நெகடிவ் ஆக முடிக்க மனம் வரவில்லை. எல்லாம் சரியாகி விடும், ஆனால் நாம் சரியாக இருக்க வேண்டும் என சேர்த்தேன். படித்து உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்