சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 64)
தென்னாபிரிக்காவின் கபரோன் சார் செரட்ஸ் ஹமா விமான நிலையத்திலிருந்து கட்டார் விமானம், பீஷ்மனைக் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கி விட, உள்ளத்தை விட்டு அறுத்தெறிய முடியாத நினைவுகளுடன் தொடர் வண்டியில் அவன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமானான்.
அவனால் நம்ப முடியவில்லை. எப்படித் தான் ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. போரின் கருணையில்லா விளையாட்டால் ஒரு கட்டத்தில் விளையாட்டை ஆட முடியாமல், திராணியற்றுப் பிறந்த மண்ணை விட்டோடியவன், இப்பொழுது பட்டங்கள் பதவிகளுடன் மீண்டும் பிறந்த மண்ணில் காலடி பதிக்கிறான்
ஓடிக்களைத்தவன் ஓய்வெடுப்பது போல் பிறந்த மண்ணைத் தொடும் சுகம். ஏழு வருடங்களுக்கு முன்னர் பார்த்த கிராமம் நடந்தேறிய போரின் உக்கிரத்தால் இப்படி உருக்குலைந்து கிடக்கிறதே
அவனின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றாகிவிட்ட பரந்து விரிந்த ஆலமரம். அது தான் அவனின் போதி மரம். கல்விக் கூடத்தில் கற்பிக்காத இதிகாச புராணங்களையெல்லாம் அவன் அந்த மரத்தினடியிலிருந்த மேடையிலிருந்து தானே கற்றான், கற்பித்தான்
அது நின்றவிடம் இப்பொழுது வெட்டவெளியாகக் கிடக்கிறதே!
குளத்தடிப் பிள்ளையார்… அதனோடொட்டிய வேப்பமரம்… சற்றுத் தள்ளிப் பத்துப் பதினைந்து பனை மரங்கள், இவைகளெல்லாம் எங்கே போயின?
மனமெனும் வெளியில் பழைய நினைவுகள் பிரவாகமெடுக்க அவனுடைய உடையாத கண்ணீர்ப் பாறையிலிருந்து கசிந்த கண்ணீர்த் துளிகள் கோபுரக் கலசத்தின் நீரை விடப் புனிதமாகிப் பிறந்த மண்ணை நனைக்க, கையில் வைத்திருந்த பெட்டியை அம்மாவிடம் நீட்டியவாறு, அந்தக் கடந்த காலத் துன்ப நினைவுகளில் மூழ்கிப் போகிறான்.
குளத்தங்கரையையொட்டிய ஓர் குக்கிராமம். அங்கு தான் ஓலையால் வேயப்பட்ட குடிசை வீடு. பீஷ்மனின் குடும்பமென்று சொல்லிக் கொள்ள அந்தக் குடிசையில் மூன்று பேர் தான்.
அவன், அவனின் தந்தை, தாய். யுத்தம் கோரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்த காலத்தில், காலையும் கையையும் மட்டுமே நம்பிக் குடும்பப் பாரத்தைத் சுமந்த தந்தையின் மூச்சுக் காற்றை வயல் வெளியில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு நிறுத்தி விட, குடும்பப் பாரத்தை பீஷ்மன் சுமக்க வேண்டியதாகி விட்டது.
தந்தை சொத்தென அவர்களுக்கு விட்டுச் சென்றது அவர் கட்டிக் காத்த நேர்மை மட்டுமே. தாலியிழந்த தாயும், அவனும் அண்டை வீட்டில் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவினார்கள். ஒரு வேளை சாப்பிட்டாலும் முழுநாளும் மானத்தோடு வாழ வேண்டுமென்பதே அவர்களின் இலட்சியம்.
குடிக்கப் பாலில்லையென ஏங்கும் ரகமில்லை. கூழுக்கு உப்பில்லையென ஏங்கும் வறுமையின் அடிமட்டம். அண்டை வீட்டுக் கோவற் கோமானார் கடையேழு வள்ளலில்லை. வட்டிப் பணத்தில் வாழ்க்கை நடத்தும் கோடீஸ்வரர்.
அவருடைய ஆண் வாரிசுகளிரண்டும் மனைவியும் புலம்பெயர் நாடான கனடாவில் வசிக்க, சொத்தே பெரிதென சொந்தக் கிராமத்தில் வாழ்பவர்.
நெற்றியில் வீபூதி, வெள்ளை நிற வேட்டி, உயரமான உடல்வாகு. அந்தக் கிராமத்தின் வட்டிக்கு பணம் கொடுக்கும் வங்கி.
யுத்த சூழ்நிலை அந்தக் குடும்பத்தை நெருக்கடிக்கும் துன்பத்துக்கும் உள்ளாக்கியிருந்தாலும், பீஷ்மன் கூலி வேலையுடன் பள்ளிப் படிப்பிலும் கவனம் செலுத்த மறந்தானில்லை.
பள்ளியிலும், பதுங்கு குழியிலும், ஆலமரத்தடியிலும் பாடுபட்டுப் படித்த பாடங்கள் அவனுக்குப் பல்கலைக்கழக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தன. அவனின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் ஒளிவிட்டுப் பிரகாசிக்க தொடங்கியது. எதிர்கால வாழ்க்கை இனிக் கவலையில்லை.
பீஷ்மனின் கல்விச் சான்றிதழ் கோமனின் வீட்டில் கூலி வேலையிலிருந்தவனைக் கோமனரின் குமாஸ்தாவாகத் தூக்கிப் போட்டது. மட்டுமில்லாமல் அவருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாக்கியது.
எனினும் பீஷ்மனுடைய மூளையில் எண்ணற்ற கேள்விகள் சுழன்றடிக்கத் தொடங்கின. அந்தவூர் ஆலமரம் இப்போது போதி மரமாகி அவனைக் கேள்விகள் கேட்பது போல ஓர் உணர்வு.
“பீஷ்மா கோமானிற்கு நீ குமாஸ்தா வேலை செய்யாதே. வட்டிக்கு நீ கணக்குப் பார்ப்பதா? வேண்டவே வேண்டாம். நீ எனதடியிலிருந்து படித்த குறளை உனக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன்
‘நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றலாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு’
பூவோடு சேர் நாரும் மணக்கும். நீயும் கோமனைப் போல் ஏழைகளிடம் வட்டி வாங்குவாய்” பேசி முடித்தது ஆலமரம். யோசி என்றது மூளை. வா வா என்றார் கோமானார்.
அவனுக்கோ மனமெங்கும் கனம். கனத்த மனத்துடன் காலை நேரக் கதகதப்பான வெயிலில் கோமானார் வீட்டை நோக்கி குளத்தங் கரையேறி நடந்தான். அழைப்பு மணியை அழுத்தினான். அதிர்ச்சி காத்திருந்தது.
“இன்னும் வெளிக்கிட இல்லையா?” எனக் கட்டைத் தொண்டையில் கத்தினார் கோமனார்
“இன்னும் கொஞ்ச நேரமும் தாமதிக்காமல் இந்தக் கிராமத்தை விட்டு வெளிக்கிடட்டாம்”
யாரு சொன்னார்கள் என்று கேட்டு முடிக்கு முன்னர் பாதையெங்கும் மூட்டை முடிச்சுகளுடன் மனிதத் தலைகள். நாற்புறமும் துப்பாக்கி ரவைகளின் சத்தம். பூமி செவிடாகக் குலுங்கியது. யுத்த நர்த்தனம் அரங்கேறி விட்டது
வேகமாக வீடு திரும்பிய பீஷ்மன், தானும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு அம்மாவுடன் வாசற்பக்கம் வர, கோமனாரும் கட்டிய மூட்டையுடன் அவர்களுடன் இணைந்து கொள்ள, மூவரும் மூட்டைகளுடன் முடிவிலாப் பாதை வழியே பயணிக்கலானார்கள்
கிராமத்தின் மூலை முடுக்குகளிலிருந்து மக்கள் சுமைகளுடன் ஒரே திசையில் ஊர்ந்த வண்ணமிருந்தனர். நடக்க முடியாத வயோதிபர்கள் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டார்கள்.
சிலர் நடக்கும் போது விழுந்தார்கள். விழுந்தவர்கள் எழ முடியாமல் கிடந்தார்கள். ஷெல் வீச்சில் சிதையுண்ட சில மரங்கள் வழிகளை மூடிக் கிடந்தன. தலைகள் அறுக்கப்பட்ட பனை மரங்களும், தென்னை மரங்களும் தமதுயிர்களைப் புகைகளாக வெளியேற்றிக் கொண்டிருந்தன.
திடீரென எங்கேயோ இருந்து வந்த குண்டொன்று அவர்களுக்கு அருகிலுள்ள மரத்தின் கிளைகளை முறித்தவாறு வெடித்துச் சிதறியது. எங்கும் மக்களின் அவலக்குரல்கள். அவர்கள் விழுவதும் எழுவதுமாக உயிரைக் கையில் பிடித்தவாறு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சிலருடைய உயிர்கள் பறிக்கப்பட்டன. காயப்பட்டவர்கள் விழுந்து கிடந்தார்கள். சிலரின் வாயிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர்கள் காயப்பட்டவர்களா? அல்லது பிணமா? எதுவும் பீஷ்மனுக்குத் தெரியவில்லை.
ஐயோ! “இங்கு யாரும் உதவிக்கில்லையா?” என யாரோ அலறுவது கேட்டது. அந்த அரவம் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.
“ஐயகோ… இவர்களுக்கு நான் என்ன செய்வேன்?” என பீஷ்மனின் மனம் ஓலமிட, துயரத்துடன் வெண்ணிலா அவனை நோக்கியது.
வேட்டியை மடித்துக் கட்டிய கோமனாரின் மெய் தளர்ந்து கால்களும் வலியெடுக்க, “பீஷ்மா இருளில் இனி நடக்க முடியாது, முன்னே தெரியும் குறுக்கு வழியில் இறங்கி நடந்து எங்கேயாவது களைப்பாறுவம்” என ஈனக் குரலில் கூற, மூவரும் குறுக்காகத் தெரிந்த சந்துப் பாதயைத் தேர்ந்தெடுத்து நடக்கத் தொடங்கினர்
எங்கும் நிசப்தம் குடி கொண்டிருந்தது, இரவு நெருங்க நெருங்கப் திகிலும் அதிகரித்தது. திடீரென அந்தப் பாதையில் வளைந்து உயர்ந்த மரமொன்று நிலவொளியில் தென்பட மூவரும் முன்னிலும் வேகமாக நடந்து அதை ஓட்டினால் போல அமர்ந்து கொண்டனர்.
மரத்தின் கிளைகளினூடாக வானத்தில் விண் மீன்கள் கண் சிமிட்டின. துப்பாக்கிகள் வெடிக்குமொலி தூரத்தில் எங்கேயோ கேட்டது.
“அப்பாடா” என கோமனார் தலையில் சுமந்து வந்த மூட்டையை மரத்தினடியில் வைத்தவாறு களைப்பாறினார். பீஷ்மன் அம்மாவின் மூட்டையையயும் கீழே வைத்தவாறு தனது பையிலிருந்த வட்ட ரொட்டிகளையும் தண்ணீர்ப் போத்தலையும் எடுத்து கோமனாருக்கும் அம்மாவுக்கும் கொடுத்தான்.
அம்மாவின் முகம் களையிழந்து கன்னங்கள் கரிபோலக் கறுத்திருந்தன. நெற்றியில் வியர்வை காய்ந்து உப்புப் படிவாகக் கிடந்தது.
“பீஷ்மா… இந்த மரத்தடியில் இரவைக் கழித்துவிட்டு நாளைக்கு விடிய எங்கேயாவது போவமா?” என ரொட்டியை வாய்க்குள் வைத்தவாறு வினவினாள்.
“அப்படித் தான் அம்மா போக வேணும். இப்ப இந்த மரத்தடியில் தங்குவம்” என்றவாறு தண்ணீரைக் குடித்து ரொட்டியையும் சாப்பிட்டான்
கோமனார் ரொட்டியைச் சாப்பிட்டவாறே, “தம்பி பீமா, நாளைக்கு விடிந்தவுடன் இந்த இடத்தை விட்டு வேறிடம் தான் போக வேணும். ஏனென்டா, இஞ்ச இருப்பது அறிவீனம். ஒரே வெளியாயிருக்கு, ஷெல் நேரா இஞ்ச தான் வரும். நிச்சயமா ச்சாவு வரும்” எனத் தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் சொன்னார்
பீமனும் “ஓமையா” என்றவாறு ஒரு துணியை நிலத்தில் விரித்தான். அம்மாவும் அவனும் விரித்த துணியில் உறங்க, கோமனார் தானும் ஒரு சால்வையை விரித்து மூட்டையைத் தலையணையாக்கி உறங்கினார்.
உறக்கம் அவர்களை ஆட்கொள்ள மறுத்தது. எனினும் கண்களை மூடிக் கொண்டார்கள்.
மறுநாள் வெண்நீலமும் கருநீலமும் கலந்த மேகக் கூட்டங்களுக்கிடையில் கதிரவனின் சிறு வட்டம் மேலெழுந்தது. அவர்கள் மூவரும் கண்களைத் திறந்து பார்த்தார்கள். மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
திடீரென்று பேச்சுக் குரல்களும் வாகனங்களின் இரைச்சலும் கேட்டன. அவர்களும் இவர்களை போல் தான் இடம் பெயர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் கோமனார், “ஐயா இந்தப் பக்கம் ஏதாவது கிணறு இருக்குமா?” என வினவ
வந்தவர்களில் ஒருவன், “இப்படியே போய் இடக்கைப் பக்கம் திரும்பினால் ஒரு தோட்டம் வரும் ஐயா” என்று சொல்லிக் கொண்டே ஓடினான்.
கோமனார், “நீயும் அம்மாவும் கொஞ்சநேரம் இங்கேயே இருங்கள் நான் போய் கிணற்றைப் பார்த்து வாறன்” என்று பீமனின் பதிலுக்கு காத்திராமல், இடக்கைப் பக்கம் நடந்தார்
நடந்த பாதை கல்லும் குழியுமாகக் கிடந்தது. அங்கு கிணறும் ஒரு மலசல கூடமும் காணப்பட்டது. அந்த இடம் மனித நடமாட்டம் இல்லாத சூனியப் பிரதேசமாக இருந்தது. அதில் ஒரு வாளி தண்ணியை அள்ளி முகத்தைக் கழுவிக் காலைக் கடனையும் முடித்தவாறு வேக வேகமாக மீண்டும் மரத்தினடியில் தஞ்சமடைந்தார்.
“பீமா நீயும் அம்மாவும் முகத்தை கழுவிக் கொண்டு கெதியா வாருங்கள். இங்கிருந்து நாங்கள் கெதியாக வேறிடம் போக வேண்டும். இங்கு மனித நடமாட்டமே இல்லை” என்றவாறு, பீஷ்மனின் அம்மா கைவசம் இருந்த பிளாஸ்டிக் குடுவையிலிருந்த தேநீரைக் கொடுக்க மட மட எனக் குடித்தார்
அது கொஞ்சம் தொண்டை வறட்சியைப் போக்கியது. பின் பீமனும் அம்மாவும் அந்தக் கிணற்றில் முகத்தைக் கழுவிக் காலைக் கடன்களையும் முடித்தவாறு பிளாஸ்டிக் குடுவையிலிருந்த மீதித் தேனீரையும் அருந்தி விட்டு, மீண்டும் வேறிடம் புறப்பட ஆயத்தமானார்கள்.
அன்று கடும் வெயில் போல் காணப்பட்டது. அம்மாவின் முகம் வாடியிருப்பதைக் கண்ட பீஷ்மன், “அம்மா உங்கட மூட்டை கனமாய் இருக்கிறது. அதை என்னிடம் கொடுங்கள் உங்களுக்கு சிரமமாய் இருக்கும்” என்றவாறு தானே அந்த மூட்டையையும் தலையில் வைக்க, அம்மா கைப்பையை எடுக்க, கோமனாரும் மூட்டைய கையிலெடுக்க மூவரும் மீண்டும் நடக்கத் தொடங்கினர். இப்போது வாழ்க்கைப் பயணம் நடை பயணமானது.
சந்துத் தெருவிலிருந்து தார் போட்ட சாலைக்கு வந்து விட்டார்கள். சாலையின் இருமருங்கிலும் கடல் பந்து விரிந்து கிடந்தது. சூரியன் கடலுக்கு மேலே மேலே வந்து கொண்டிருந்தது. கடற்கரையில் கடல் காகங்கள் மிதந்து கொண்டிருந்தன
தண்ணீர் படிகம் போல இருந்தது. கடலலைகள் மேலெழுந்து கரையில் விழுந்து திரும்பின. வர வர சனக் கூட்டம் அதிகரித்தது. கார்களிலும் லொறிகளிலும் மக்கள் மூட்டைகளுடன் பயணித்தனர்.
கோமனார் ஏதாவது காரில் மூவரும் போகலாமாவென சாலையைத் திரும்பித் திரும்பி பார்த்தவாறே நடந்தார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஓர் பாலம் தென்பட்டது. பாலத்தின் இருமருங்குகளிலும் சரளைக் கற்கள் குவிக்கப்பட்டிருந்தன.
“கார் எதுவும் வரக் காணோம். பாலத்தை கடப்போம் பாலத்தின் மேல் குண்டுகள் விழுந்து பாலம் உடைந்தால் மறுபக்கம் போகேலாது” என்று பீஷ்மனுக்குத் தாழ்ந்த குரலில் சொன்னவாறு ஓடி ஓடி நடந்தார்
பீஷ்மனும், “உண்மை உண்மை” என அம்மாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தான்.
அந்தப் பாலம் வரை ஒருவாறு ஓடி ஓடி வந்து விட்டார்கள். இங்கு சனக்கூட்டம் கிலியுடன் பாலத்தைக் கடக்க முண்டியடித்துக் கொண்டிருந்தது. ஏன் கிலியுடன் அவசர அவசரமாகப் பாலத்தைக் கடக்க நெரிசல் படுகிறார்களென பீஷ்மனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவன் தலையைத் திருப்பி நாற்புறமும் பார்த்தான். அப்போது தான் ஆபத்ததுக் காத்திருப்பது தெரிந்தது.
அந்தச் சரளைக் கற்குவியல்களின் மேல் யாரோ கூனிய உருவங்கள் மரங்களைப் போல பாதி உடம்பை இலை குழைகளால் மூடியவாறு உட்காத்திருந்தனர். யாரென்று அவனால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
முற்றிலும் அச்சம் விளைவிக்கத்தக்க இந்த இடத்திலிருந்து எங்கே ஓட முடியும். இனி எங்கள் உயிர் இருப்பது கடவுளின் சித்தம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
திடீரென்று பாலத்துக்கு மேலே பேரிரைச்சலுடன் விமானங்கள் வட்டமிடும் சத்தம் கேட்கத் தொடங்கின. அவை பாலத்தைக் குறியாகக் கொண்டு அங்குமிங்குமாக வானத்தைக் கிழித்துக் கொண்டு பறந்தன.
பயப் பீதியில் மக்கள் பதற்றத்துடன் காணப்பட்டார்கள். சிலர் கடலினுள் பாய்ந்தார்கள். வேறு சிலர் குப்புறப்படுத்தார்கள். இன்னும் சிலர் தெருவோடு ஓடினார்கள்.
பீஷ்மன் தப்பியோடுவதற்கு வழியில்லாமல் அம்மாவையும் கோமனாரையும் பார்த்து “குப்புறப்படுங்கள்” என்று கத்தியவாறு கீழே விழுந்த மாத்திரத்தில் றொக்கட் குண்டுகள் விழுந்து வெடித்த வண்ணமிருந்தன.
வெடியோசை இடியோசை போலக் காதைச் செவிடாக்கியது. விமானங்கள் விலகிய பின், மயிரிழையில் உயிர் தப்பிய பீஷ்மன் எழுந்து பார்த்தான்.
அருகில் கிடந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள், சதைத் துண்டங்கள் சரளைக் கற்களுடன் சேர்ந்து சிதறிக் கிடந்தன.
படிகம் போன்ற கடல் தண்ணீர் கரைகளில் செந்நிற நுரைகளைப் பிரசவித்திருந்தது. கடலில் பாய்ந்தவர்களில் சிலர் நீந்திக் கரையேறிக் கொண்டிருந்தார்கள்.
பீஷ்மன் அம்மாவையும் கோமனாரையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களிடையே தேடித் தேடிப் பார்க்கிறான். அம்மா ஒரு மூட்டைக்குக் கீழ் கிடக்கிறாள். அவளால் பேச முடியவில்லை.
கண்ணில் நீர்வடிய “அம்மா” எனக் குழறியவாறு கை நாடியை நடுங்கும் கைகளால் பிடித்துப் பார்க்கிறான். கை நாடி உயிர் நாடியாகத் துடித்துக் கொண்டிருந்தது. அவள் கைகளில் சிறு சிறு ரணங்கள்.
இப்போது பதற்றம் அதிகரிக்க கோமனார் ஐயாவைப் பிணக் குவியல்களுக்கிடையில் தேடினான். அவன் கண்ட காட்சி இரத்தத்தை உறைய வைத்தது. சிதையாமலிருந்த சிரசு மட்டும் அவருடய மூட்டையின் அருகில் கிடக்க மிகுதி சரீரம் போனவிடம் தெரியவில்லை. அந்த சிரசு அவருடைய மறைவை ஊர்ஜிதப்படுத்தியது.
“’ஐயோ! ஐயா!” போய்விட்டாரே! “ஐயா! ஐயா”! என்று குழறினான், தேம்பித் தேம்பி அழுதான். அங்கிருந்தவர்கள் அனைவரும் அவனைப் போலவே அழுது புலம்பினார்கள். யார் யாருக்கு ஆறுதல் கூறுவது?
ஐயா இனித் திரும்ப வரப் போவதில்லை. ஐயாவுக்கு அவனுக்கும் இருந்த உறவை ஒரு குண்டின் சக்தி பிரித்தது. இந்தச் சம்பவம் அவனின் வாழ்வின் ஒரு துண்டு. இந்த வாழ்க்கைத் துண்டை எந்தக் கதாசிரியனும் விற்பனயாகும் புத்தகங்களில் வார்த்தைகளால் வடிக்க முடியாது.
நேரம் பிரியவிருக்கும் பகலும் வரவிருக்கும் இரவும் கலந்த மாலைப் பொழுதாகியது. கடற்கரையில் கடற்பறவைகள் சத்தமிட ஆரம்பித்தன.
பீஷ்மன் கடலில் இறங்கிக் கைகால்களைக் கழுவியவாறு ஐயாவின் ஆத்மா சாந்தி அடையக் கடலன்னையைப் பிரார்த்தித்து, அவருடைய சிரசை ஓர் துணியில் கட்டிக் கடலில் விட்டு விட்டு, அம்மாவின் காயங்களையும் கடல் நீரால் கழுவி விட, அம்மா அழுத கண்ணீரும் கடலுடன் சங்கமமானது.
பீஷ்மன் அம்மாவினுடைய கைக் காயங்களை துணியால் கட்டி விட்டு ஐயாவின் மூட்டையையும் எடுத்துத் தங்களுடைய மூட்டையுடன் ஒன்றாகச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல பின்புறமாக லொறியில் வந்த மக்கள் அவர்களையும் அதிலேற்றி அடுத்த ஊரில் இறக்கி விட்டார்கள்.
ஆயிரம் துயரங்கள் மனதை வாட்ட, அம்மாவை ஊர் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைப்பாறச் சொல்லி விட்டு, அருகிலிருந்த தேநீர்க் கடையினுள் நுழைந்தான் பீஷ்மன்.
கையில் கொண்டு வந்த சொற்ப பணத்தில் தேநீர் வாங்கவெனப் பணத்தை நீட்டிய போது, அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. பணத்தை வாங்கியவன் வேறு யாருமில்லை, அவனுடைய பால்ய நண்பன் சோமநாதன்.
ஆலமரத்தடியில் சடு குடு விளையாடியதில் ஆரம்பித்த அவர்களது நட்பு ஐந்தாம் வகுப்பு வரைத் தொடர்ந்தது. சோமனின் தந்தை மாரடைப்பால் மரணமாக, கிராமத்தை விட்டு தனது சொந்த ஊரில் தனது சொந்த பந்தங்களுடன் சோமனின் அம்மா சோமனுடன் குடியேறி விட்டாள்.
சோமன் கிராமத்தை விட்டுப் போனாலும், அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பீஷ்மனின் இதயத்தினொரு மூலையில் நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்தது.
“பீஷ்மா நீயாடா?” எனக் காசை வாங்காமல் கைய இறுக்கப் பிடித்தவாறு ஆச்சரியத்துடன் நோக்கினான் சோமன். சில நிமிடம் அமைதி நிலவியது.
“நான் தான்டா பீஷ்மன்” எனத் தலையை மேலும் கீழும் மெதுவாக அசைத்தவாறு, “முதலில் தேநீர் கொடு, அம்மா பஸ் தரிப்பிடத்தில் இருக்கிறா, தேநீரை கொடுத்துவிட்டு வாறன்” என அவசரப்பட
சோமன், ”இரண்டு தேநீர் இரண்டு வடை” என்று மணியை அழுத்த, அது எழுப்பிய ஒலியால், “இதோ உங்கள் தேநீரும் வடையும்” என, ஒரு வயதானவர் கொண்டு வர அதை வாங்கிக் கொண்’டு நடந்தான், பின் ஓடினான் பீஷ்மன்
அம்மாவிடம் தேநீரை நீட்டியவாறு சோமனைப் பற்றிச் சொல்ல வாயெடுக்க, பின்னாலிருந்து யாரோ முதுகில் தட்டினார்கள். திரும்பிப் பார்த்தான். சோமன் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவைப் பார்த்ததுமே நிலைமை புரிந்து விட்டது. பொங்கி வந்த கண்ணீரைச் சிரமப்பட்டு அடக்கினான்.
அம்மா தேநீரை உறிஞ்சிக் குடித்தவாறு கொஞ்சம் களையாறினாள். சோமன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, பத்திரிகை படித்துக் கொண்டு பின்னாசனத்தில் சாய்ந் திருந்த முச்சக்கர வண்டிச் சாரதியை சைகையால் அழைக்க, அவனும் பத்திரிகையை மடித்தவாறு அருகினில் வந்து நின்று “போகலாமா?” என்றான்.
“நேரே பக்கத்திலிருக்கும் வைத்தியசாலைக்குப் போவம்” என்று சோமன் பீஷ்மனுடைய மூட்டைகளை அதில் ஏற்றியவாறே கூற, வண்டி வைத்தியசாலை நோக்கிப் பறந்தது.
அது தனியார் வைத்தியசாலை. தாதியர் அம்மாவின் காயங்களுக்கு மருந்திட்டார்கள். சோமன் தான் பணத்தைச் செலுத்தினான். பின் மூவரும் சோமனின் வீட்டை அடைந்தனர்.
அவர்கள் அவனுடைய வீட்டுக்குள் நுழையும் போதே, சோமனின் அம்மா அவர்களை இலகுவாக அடையாளம் கண்டு கொண்டாள்.
அவர்களுக்கு எதோ துரதிஷ்டம் நிகழ்ந்து விட்டதாக அவர்கள் வந்த கோலத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டவளாக, அவர்களைக் கேள்விகள் கேட்பதோ, எதையும் தெரிந்து முயல்வதோ முறையல்லவென, அவர்களுடைய மூட்டையளைத் தூக்கி வீட்டினொரு மூலையில் வைத்தவாறே, அடுக்களையை நோக்கிப் பதற்றத்துடன் ஓடினாள்.
வேக வேகமாகச் சோறையும் சாம்பாறையும் சமையல் செய்து அவர்களுக்கு அன்புடன் பரிமாறினாள். சாப்பிட்ட களைப்பும், நீண்டதூரம் நடந்து வந்த களைப்பும், கவலையும் அவர்களை வாட்ட, சோமன் புல்லால் வேயப்பட்ட பாய்களை வீட்டின் கூடத்தில் விரிக்க, அதில் பீஷ்மனும் அம்மாவும் பீதியற்று உறங்கினார்கள்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையைப் பூட்டி விட்டு வீட்டிலேயே தங்கினான் சோமன்
பீஷ்மன் நடைபெற்று முடிந்த சோக சம்பவங்கள் அனைத்தையும் தழுதழுத்த தாழ்ந்த குரலில் ஒன்று விடாமல் சோமனிடம் விவரித்தான். சோமனோ அவனருகிலிருந்து எல்லாவற்றையும் சிரத்தையுடன் கேட்டான்.
அவன் விவரித்த சம்பவங்கள் இவனுடைய ரத்தத்தை சூடாக்க, அதனால் மேலெழுந்த உணர்வுகள் கண்ணோரம் ஈரத்தை வர வைத்தன.
எனினும் நிதானமாகச் சிந்தித்த பின், “பீஷ்மா… இப்பொழுதே கோமனார் ஐயா மரணித்த தகவலை, இங்கிருக்கும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மகனுக்கு அறிவிக்கலாம். அதற்கு முதல் ஐயாவின் மூட்டையில் என்னவிருக்கிறதென்று பார்க்கலாம்” என்றான்.
பீஷ்மன் ஐயாவின் மூட்டையை நடுங்கும் கரங்களால் எடுத்து சோமனிடம் கொடுத்தான். மூட்டைக்குள்ளிருந்து ஐயா பேசுவது போன்ற பிரமை அவனுக்கு ஏற்பட்டது.
பயம் பதற்றம் படபடப்பு எல்லாம் அவனைச் சுற்றியடித்ததால், தலை கிறுகிறுக்க தரையில் உட்கார்ந்தான் பீஷ்மன்
அவன் இருக்கும் நிலையில் ஆறுதல் கூறுதல் பொருத்தமற்றதென எண்ணியவாறு, மூட்டையின் முடிச்சுகளை அவிழ்கலானான் சோமன்
அதில் சில உடுப்புகளும், ஒரு மரப்பெட்டியும், காணி உறுதிப் பாத்திரமும், நாள் குறிப்பேடுமிருந்தன. மரப் பெட்டியைத் திறக்கக் கைகள் உள்ளே சென்றன. கைகளில் பண நோட்டுக்கட்டுகள். அக்கட்டுகளை எண்ணுவது அவனுக்கு கஷ்டமாகத் தெரியவில்லை. மொத்தம் மூன்று இலட்சம் ரூபா.
“பீஷ்மா இவைகளை நாம் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மகனுக்கு அனுப்பலாம்”
சோமன் சொல்ல, பீஷ்மனும் தன்னைத் சுதாகரித்துக் கொண்டு தாமதியாமல் ஐயாவின் நாட்குறிப்பேட்டிலிருந்த மகனின் விலாசத்தை எழுதி, அவருடைய பொருட்களையும் எடுத்துக் கொண்டு உந்துருளியில் செஞ்சிலுவைச் சங்கம் நோக்கி போனார்கள்.
அங்கு போகு முன், ஐயாவின் மகனிற்கு தொலைபேசி அழைப்பை எடுத்து செய்தியை அறிவிக்க, வழியிலிருந்த தனியார் தொலைபேசிக் கடையினுள் நுழைந்தார்கள்.
ஐயாவின் மகனின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை பீஷ்மனே மேற் கொண்டான். ஐயாவின் மகன் மறுமுனையில், “ஹலோ” என்றார்.
தந்தையாரான கோமனார் கூற்றுவன் கையில் போன பொல்லாச் செய்தியை தனயனிடம் எப்படிச் சொல்ல முடியும்?
சோமன் ஆறுதல் வார்த்தைகளால் பீஷ்மனைத் தேற்ற, மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தழுதழுத்த குரலில் செய்தியைக் கூறினான்.
ஐயாவின் மகனும் தழுத்த குரலில், “தங்களுக்கு உறவினர் மூலம் செய்தி அறிவிக்கப்பட்டதாகவும், தந்தையாரின் காணி உறுதிப் பாத்திரங்களை மட்டும் அனுப்பும் படியும், பணத்தை பீஷ்மனைப் படிப்புச் செலவுக்கு எடுக்குமாறும்” கூறினார்
பீஷ்மன் பலமுறை மறுத்தும், ஐயாவின் மகன், “அப்பாவே இல்லையாம் பணம் என்னத்துக்கு” என மீண்டும் தாழ்மையுடன் சொல்ல, பீஷ்மன் சொல்வதறியாமல் திகைக்க, மறுமுனையில் தொலைபேசி அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
‘ஏற்பது இகழ்ச்சி’ என்றாலும், படிப்பது மகிழ்ச்சி என்று இறுதியில் ஏற்றுக் கொண்டான் பீஷ்மன்
மகன் சொன்னது போலவே, காணி உறுதிப் பாத்திரங்களை அவரின் விலாசத்திற்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பி விட்டு, அருகிலிருந்த மரத்தின் கீழ் அமர்ந்து மேற்கொண்டு என்ன செய்யலாமென சிந்திக்கலானார்கள்.
“பீஷ்மா உனக்கு பல்கலைக்கழக அனுமதிச் சான்றிதழ்கள் இருப்பதால், நீ வெளிநாட்டுப் புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்கலாம். யுத்தத்தால் பாதிக்கப்படடவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். வேலைவாய்ப்பும் தருவார்கள். அதுவரை அம்மா என் பொறுப்பு. கோமனார் ஐயாவின் பணமும் இருப்பதால், அதை பிரயோசனப்படுத்தினால் ஐயாவின் குடும்பத்தினரும் சந்தோஷப்படுவார்கள்” எனச் சோமன் போட்ட பிள்ளையார் சுழி தான், பீஷ்மன் இன்றிருக்கும் இந்த நிலைக்குக் காரணமானது.
அவனின் சொற்படியே புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பித்து, தென்னாபிரிக்காவிற்கு புலமைப்பரிசில் பெற்றுச் சென்று, இப்போது பட்டயக்கணக்காளாராக, தனியார் நிறுவன மேலதிகாரியாக மீண்டும் சொந்த மண்ணுக்கு வந்திருக்கிறான்.
இப்பொழுது யுத்தம் முடிந்து ஒரு வருடம் உருண்டோடி விட்டது. அம்மாவும் சோமனின் வீட்டிலிருந்து சொந்தக் கிராமத்துக்கு வந்து விட்டார்.
“தம்பி இளநியைக் குடி” என்ற அம்மாவின் குரல் கேட்க
பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு இளநீரைப் வாங்கிப் பருகியவாறு, “நடந்து முடிந்த யுத்தத்தால் இந்தக் கிராமம் எப்படி அழிஞ்சிருக்கு அம்மா, எத்தனை உறவினர்கள் மரணித்துப் போனார்கள். ஆலமரத்தினடியிலிருந்த அத்தனை அடையாளங்களும் அழிந்து”
மேற்கொண்டு வார்த்தைகள் தொடையில் சிக்க, கண்ணீர் கண்ணோரம் வழிய, அம்மாவை வாஞ்சையுடன் நோக்கினான்
அம்மாவும் பதிலுக்கு, “எல்லாம் இந்தப் பாழா போன யுத்தத்தால் தான்” என்றாள் சற்றுக் கோபமாக.
இப்போது பீஷ்மன் தன்னைச் சிறிது சுதாகரித்துக் கொண்டு, அவனின் நிலைக்கு சோமனும் கோமனாரும் தானே காரணகர்த்தாக்கள் என்று மனதினுள் நினைத்தவாறு வீட்டிலிருந்து வெளியே வர, சோமனும் அவனைப் பார்க்க வந்து விட்டான்
பீஷ்மனைக் காண அந்தக் கிராம மக்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர். பலரை அவன் அவர்கள் அறிமுகப்படுத்தாமலே அடையாளம் கண்டு கொண்டான்.
சிறுவர்களும் பெரியவர்களின் பின்னால் கோழிகளின் பின் குஞ்சுகள் ஓடி வருவதைப் போல் ஓடி வந்தார்கள். சிறுவர்களை அவனுக்கு, யார் யாருடைய பிள்ளைகளென அடையாளம் தெரியவில்லை.
அவர்களுடைய முகத்தில் கனிவும், கண்களில் கருணையும் தெரிந்தன. அவன் அவர்களைக் கண்டதும் எட்டாத இன்பம் அடைந்தான். தான் கொண்டு வந்திருந்த இனிப்புப் பண்டங்களையெல்லாம் அவர்களுக்கு வாரி வாரி வழங்கினான்.
அவர்கள் அதையுண்டு தித்திப்பில் திளைத்தார்கள். இவர்களின் தித்திப்பே பீஷ்மனுக்கு சந்தர்ப்பமாகியது.
இவர்களுக்கு எங்களுடைய கிராமத்தில் யுத்தம் விட்டுச் சென்ற வரலாற்றை என்னவென்று காட்ட வேண்டும். இவர்களுக்குப் பிறகு வரும் சந்ததிகளுக்கு இவர்கள் இந்த வரலாற்றை எடுத்தியம்ப வேண்டும்.
இவ்வாறு எங்கள் வரலாறு சங்கிலி சங்கிலியாகத் தொடர வேண்டும். இந்தப் பிஞ்சுக் கரங்களையெல்லாம் ஒன்றாகச் சேர்க்க வேண்டுமென நீண்ட நாள்களாக அவனுள் கனன்று கொண்டிருந்த ஆசைகளுக்கெல்லாம், இப்பொழுது சந்தர்ப்பம் கைகூடி விட்டதென எண்ணினான்.
ஆம்! கால்கோள் விழா ஆரம்பமாகி விட்டது. அவன் வந்திருந்த சிறுவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு குளக்கரை நோக்கிப் போகிறான்
குளத்தங்கரையில் வளர்திருந்த ஆலமரங்களை வேருடன் பெயர்த்தெடுத்து அவர்களிடம் கொடுக்கிறான். பழைய ஆலமரமிருந்த இடத்தில் அவன் குழிகளை வெட்ட, சிறார்கள் குழிகளில் ஆலமரங்களை நாட்டுகிறார்கள்.
குளத்திலிருந்து நீர் கொண்டு வந்து ஒருவர் பின் ஒருவராக ஊற்றுகிறார்கள். அம்மா சேர்த்து வைத்திருந்த பனை, வேப்பம் விதைகளையும் அவன் அவர்களிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவன் வெட்டிய குழிகளில் விதைக்கின்றனர்.
போரால் அழிந்து போன ஒரு கிராமத்தின் வரலாறு, மூல ஆதாரங்களின் துணையுடன் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
குளத்தடி ஆலமரம் மீண்டும் வளரும். குளத்தடிப் பிள்ளையாரை இக்கிராம மக்கள் வணங்கப் போகிறார்கள். அந்தப் பனை, தென்னை மரங்கள் போல, பற்பல மரங்கள் வளர்ந்து இக்கிராமம் சோலையாகக் காட்சியளிக்கும்.
இச்சோலையில் புள்ளினங்கள் புலரும் பொழுதை வரவேற்றுத் திருப்பள்ளியெழுச்சி பாடும். சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு பாடசாலை கோமானரின் ஞாபகார்த்தமாகக் கட்டப்படும்.
பழைய குளம் புனரமைக்கப்படும். இது ஒரு தொடக்கம். ஒருநாளில் ஆகிற காரியமில்லை. ஆனால், ஒரு சந்தோசம்.
பீஷ்மனுடன் பல பிஞ்சுக் கரங்கள் சேர்ந்து விட்டன. இன்னும் பிஞ்சுக் கரங்கள் நிறையச் சேரும். நம்பிக்கை பிறக்கிறது. அடுத்த தலைமுறை எங்களுடைய வரலாற்றைப் பேசப் போகிறார்கள்.
(முற்றும்)
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings