in ,

போதையேறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கலெக்டர் சரிதாவின் கார் போக்குவரத்து நெரிசல்களுக்கிடையே திக்கி திணறி சென்று கொண்டிருந்தது. சிக்னலில் வண்டி நின்றபோது வெளியே நடைபாதையில் அமர்ந்திருந்த பெண்ணின் பக்கம் பார்வை சென்றது. கலைந்த தலையும், கிழிந்த புடவையுமாய் இருந்தாலும்,  அவள் முகத்தை பார்த்த மாத்திரத்தில் இவளுள் ஏற்பட்ட இனம்புரியா உணர்வு, இருதயத்தை பிசைந்தது. இருவர் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட தருணத்தில், நியூரான்களின் மின்வேதி சமிக்ஞைகள் நினைவுத் தேக்கத்துக்குள் வேகமாக ஓடிச் சுழன்று எதையோ தேட முனைந்தன. அவை சுழன்ற வேகத்தில் ஏற்பட்ட வினை மாற்றங்களில் உடல் முழுதும் அதிர்வலைகள் தோன்றி மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

“அவள்… ஜ… ஜ… ஜமுனாவா, அவள்? எப்படி? இப்படி…?” இவள் சிந்தைக்குள் பூகம்பங்கள் வெடித்ததில், சிக்னல் பச்சை நிறத்துக்கு மாறி வண்டி அவ்விடத்தைத் தாண்டிச் சென்றதை தெரிவிக்க இயலாமல் நியூரான்கள் க்ளியா(நரம்பு நாண்கள்)க்களுக்குள் தடைபட்டன. சட்டென உணர்வு வந்து, “டிரைவர்! வண்டிய திருப்புங்க!” என்று கத்தினாள்.

இவளுக்குள் நடந்த போராட்டத்தை இம்மியும் உணராத ஓட்டுநர், சிக்னல் கிடைத்த சந்தோஷத்தில் வண்டியை வேகமாக ஓட்ட யத்தனிக்கையில், இவளிடமிருந்து வந்த அலறல் கேட்டு, ஒரு நிமிடம் திடுக்கிட்டு சடாரென பிரேக்கிட்டார். பின்னால் வந்த வண்டிகளும், “க்ரீச்… க்ரீச்” என சத்தமிட்டு ஒன்றையொன்று முத்தமிட யத்தனித்தன. நிதானத்துக்கு வந்த சரிதா, “ஐ’ம் ஸாரி சேகர்!. வண்டிய யூ டர்ன் பண்ணி திரும்ப அந்த சிக்னலாண்ட போங்க… ப்ளீஸ்! ” என்றாள். ஓட்டுநர் வண்டியை நிதானமாக ‘யூ டர்ன்’ எடுக்க, இவள் சிந்தை மின்னல் வேகத்தில் ‘யூ டர்ன்’ எடுத்து அவ்வூர் அரசினர் மகளிர் பள்ளியில் போய் நின்றது.

இவள் பத்தாம் வகுப்பு ‘இ’ பிரிவிலும் ஜமுனா ‘அ’ பிரிவிலும் பயின்று கொண்டிருந்தனர். ஜமுனா அழகு, அறிவு, பண்பு எல்லாவற்றிற்கும் பெயர் பெற்றவள். சாமுத்ரிகா சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட, ‘மேடிட்ட நெற்றி, விலென வளைந்த புருவம், மாவடு கண்கள், கூரான நுனி மூக்கு, திரண்ட பவள இதழ்கள், பயத்தங்காய் விரல்கள், குறுகிய இடை, வாழைத்தண்டு கால்கள், செந்தாமரைப் பாதங்கள் ’ என பெண்ணின் அத்தனை லட்சணங்களும் ஒருங்கே பொருந்தியவள்.

அந்தப் பள்ளியின் முடிசூடா இளவரசி. பள்ளி மாணவர் தலைவி. அவள் மேடை ஏறியவுடன் அவள் அழகை இரசிக்கும் கண்களும், பொறாமையால் விசிக்கும் நெஞ்சங்களும் அவளை மொய்க்கும்.

ஆசிரியர் பாடம் எடுக்குமுன்னே முந்திப் படித்து வந்து பதில் சொல்லி,  முந்திரிக் கொட்டை என்று செல்லத்திட்டு வாங்குவாள். ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே பிரதிபலிக்கும்  முகபாவனைகளால் பாடம் நடத்தும் ஆர்வத்தை தூண்டுபவளாகையால், அவள் வராத நாட்களில் பாடமே எடுக்கமுடியாதவாறு அவர்களையும் ஆக்கிரமித்திருந்தாள். ஆனாலும் யாரிடமும் அதிகம் பேசமாட்டாள். திமிர் பிடித்தவள் என்றுகூட சிலர் கருதியிருக்கிறார்கள்.

சரிதா அவளது இரசிகைகளில் ஒருத்தியாக இருந்ததாலும், இருவரும் இறகுப் பந்தாட்டத்தில் பள்ளிக்காக ஒரே குழுவாக விளையாடுவதாலும், அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. விளையாட்டளவிற்கு படிப்பில் ஆர்வமில்லாத சரிதாவிற்கு படிப்பில் ஆர்வமூட்டியவளே ஜமுனாதான்.

ஓய்வு நேரங்களில் அவள் சொல்லித் தரும் பாடங்களை காதால் கேட்டே நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்தாள் சரிதா. அந்த மதிப்பெண்கள் பெற்றுத் தந்த பாராட்டால் படிப்பிலும் ஆர்வம் அதிகரித்தது. அதனால், ஜமுனாவின்மேல் பாசமும் அதிகரித்தது. திடீரென சரிதாவின் தந்தைக்கு ஏற்பட்ட பணி மாறுதலால், சென்னைக்கு குடிபெயர்ந்தபின் ஜமுனாவைப் பார்க்க இயலவில்லை.

“சிக்னலாண்ட வந்தாச்சும்மா” சேகரின் குரல் கேட்டு நடப்புக்கு வந்த சரிதா அங்கே ஜமுனாவைக் காணாமல் திடுக்கிட்டு, சாலையைக் கடந்து கொண்டிருந்த  ஜமுனாவைக் கண்டு, காருக்கு இழுத்து வந்தாள்.

“என்னாச்சு ஜமுனா? உனக்கேன் இந்த நிலைமை?” என்று கேட்டாள், கண்ணீர் மல்க. அவளோ மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.

அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிக்கச் செய்து, வேறு உடை கொடுத்து, மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்த ஜமுனா, தன்னிலை கண்டு தவிக்கும் தோழியின் கண்ணீர் நிறைந்த கண்களுக்குள் மூழ்கி, அவளைப் பிரிந்த நாட்களுக்குச் சென்றாள்.

இதே கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஜமுனாவின் தோள்களைப் பற்றிக் கொண்டு, “எங்கப்பாக்கு திடீர்னு டிரான்ஸ்ஃபர் ஆய்டுச்சி. நான் கிளம்பறேண்டி” என்று சொல்லி சரிதா சென்றுவிட, பேருந்து நிறுத்தத்தில் தனியே அமர்ந்திருந்தாள் ஜமுனா.

எதிரில் ஏதோ அசைவு தோன்ற நிமிர்ந்தவள் பைக்கில் சாய்ந்துகொண்டு அசப்பில் கிட்டத்தட்ட கதாநாயகன் போல் ஒருவன் தன்னையே பச்சாதாபத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு வந்த பேருந்தில் ஏறிச் சென்றாள்.

மறுநாள் அவன் இவள் பின்னே பேருந்தில் ஏறி இவள் அருகில் நின்றுவிட்டு அடுத்த பேருந்தில் இறங்கிப் போய்விட்டான். வீட்டில் சென்று பையைத் திறந்தால், ஒரு பரிசுப் பொட்டலம். அதனுள்ளே தேரில் பவனி வரும் இளவரசி பொம்மை. அதன் காலடியில் ஒரு காகிதம்.

“ஒரு பூ கசங்கினாலே மனம் பொறுக்காது ;  ஒரு பூங்காவனமே தினமும் நசுங்கி கசங்குவதை என் சிற்றிதயம் தாங்குமா?” என்ன பார்க்கிறாய், என் அன்பே, உன் கண்கள் ரோஜாக்கள், உன் மூக்கு முல்லை மொட்டு, உன் இதழ்கள் செந்தாமரை, உன் விரல்கள் செங்காந்தள், உன் பாதங்கள் வெண்தாமரைகள். (நீ பூங்காவனம் தானே!) என் பூங்காவனம் அனுதினம் பேருந்தின் நெரிசலில் சிக்கி கசங்கலாமா? என்னோடு வா என் தேவதையே, தினமொரு ரதத்தில் உன்னை பவனி வரச் செய்கிறேன். காலம் முழுதும் உன் காலடியில் சேவை செய்யும் வரத்தை இந்த அடிமைக்கு அருள்வாயா?”

புத்திசாலிகூட உண்மையென நம்பும் புகழ்ச்சிக்கு மயங்கித்தானே போகிறாள். உடனடியாகப் படியாவிட்டாலும், சில நாட்களிலேயே ‘அவன் பத்தாவதில் தோற்ற சாதாரண பைக் மெக்கானிக், தனக்கு எழுதின கவிதைகள் கூட அவன் வேறொருவனிடம் கடன் பட்டது’ என்று தெரியாமலே தேவதை சிறைபட்டாள்.

அவன் கொடுத்த கஞ்சா சாக்கலேட்டை முதலில் தெரியாமல் தின்றாள். பிறகு அது இல்லாமல் எரிச்சலும், கோபமும், பதட்டமும், தலை வலியும் அதிகரித்து, கை கால்கள் பதற ஆரம்பித்தன. அவனிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.

வகுப்பில் பாடங்களை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணும், வாயும் கிறங்கிக் கிடந்தன. போதையேறிப் போனதில், புத்தி மாறிப்போய், அவனிடம் தன்னை இழந்தாள். அவளது மாற்றாந்தாய் இதுதான் சாக்கென்று வீட்டைவிட்டுத் துரத்தினாள். இருவரும் முதலில் சந்தித்த பேருந்து நிறுத்தத்திலேயே தாலிகட்டிக் கொண்டு சென்னை வந்தனர்.

போதைப் பழக்கத்தால் இவளுக்கு குறைப்பிரசவமாகி குழந்தையும் இறக்க, இவள் உடல் மேலும் மேலும் நலிவடையவும், வருமானமும் போதாமல் வீட்டைவிட்டு அவன் ஓடிவிட, வாடகைகூட கொடுக்கமுடியாமல் வீட்டுக்காரர்கள் இவளைத் துரத்த, தெருவில் கிடந்தவளை … பேருந்தில் கூட கசங்கக்கூடாத பூங்காவனம், தெருவில் போன மதயானையால்   கசக்கப்பட்டது. தேவதை நினைவிழந்து, பேச்சிழந்து தெருவில் அலைந்தது.

ஜமுனாவின் உடல் பதறித்துடிக்க ஆரம்பித்தது. டாக்டர் அவளுக்கு ஊசியில் மருந்தைச் செலுத்த உறங்க ஆரம்பித்தாள். சரிதாவுக்கோ மனம் கதறித் துடித்தது.

‘எப்பேர்ப்பட்ட தேவதை நீ!  உனக்கா இந்த நிலை?!. உன்னைப் போன்ற தேவதைகளை சீரீழிக்கும் இந்த போதை அரக்கனை ஒழித்தேயாக வேண்டும்’ என எண்ணிக்கொண்டு தனது அந்தரங்க காரியதரிசிக்கு அழைப்பு விடுத்தாள்.

உடனடியாக அனைத்து துறை அதிகாரிகளைக் கூட்டி,  மாவட்டம் முழுதும் குறிப்பாக பள்ளிகளின் அருகில் இருக்கும் கடைகளில் சோதனை நடத்தி, கூல் லிப், கஞ்சா சாக்கலேட் போன்ற போதை வஸ்துக்களை முற்றிலுமாய் ஒழிக்க வேண்டும், அதை விற்பவர்களையும், விநியோகிப்பவர்களையும் கைது செய்ய வேண்டும்.

ஆமையை வெந்நீரில் போடுகிறார்கள்; அந்த நீர் மிதமான சூட்டில் இதமான இன்பம் அனுபவிக்கிறது அய்யோ பாவம்; சூடு மிகுகிறது; துடிக்கிறது; உயிர் வெடிக்கிறது. தன்னை இழக்கிறது, அழிவு பெற்றுவிட்டது. இதுபோல உன்நிலைமை ஆகக்கூடாது.” என்று நாலடியாரில் சொல்லப்பட்டபடி, முதலில் இன்பம் பயக்கும் பின்பு உயிரைக்குடிக்கும் இந்த போதை அரக்கன் இலவசமாய்க் கிடைத்தால் கூட அதைத் தொடக் கூடாது, தெரியாத புதிய சாக்கலேட் போன்ற பொருட்களை யார் கொடுத்தாலும் உண்ணக்கூடாது” போன்ற விழிப்புணர்வை பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் உணர்ச்சிபொங்க பொறிந்து தள்ளினாள்.

மாவட்ட ஆட்சியர்களுக்கான வாட்ஸப் குழுவிலும் அவர்கள் மாவட்டத்திலும் அவ்வாறே செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாள்.

ஜமுனாவிற்கு நல்லபடியாக உடலும், மனமும் தேறியவுடன் அஞ்சல் வழி கல்வி பயில ஏற்பாடு செய்தாள். தேவதையின் வெற்றிச் சிறகு மறுபடியும் முளைக்குமென நம்புவோம்!.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 5) – ஸ்ரீவித்யா பசுபதி

புதிய பாதை (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி