இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்தப் பெரும் போர்த்தினத்தன்று துர்கா பெரும் வேட்கையோடு தேர்வு அறையை அடைந்தாள். மிகவும் சாமர்த்தியத்துடன் பதற்றமில்லாமல் வினாத்தாளை வாங்கினான் ஆனந்த். காலையில் சரியாக தூங்காததால் வெறியின் அழுத்தத்தால் இரத்த வாந்தி எடுத்து குடும்பத்தினரை பயப்பட வைத்தான் மருது.
மூவரும் நெல்லையில் தான் அந்தத் தேர்வினை எதிர்கொண்டனர். வினாத்தாளை பார்த்தவுடன் துர்கா தன் வெற்றியை உறுதி செய்தாள். ஆனந்தும் அத்தேர்வினை முடித்தவுடன் தன்னுடைய வெற்றியை முன் முடிவு செய்தான். தேர்வறையை அடையும்வரை பதற்றத்தில் இருந்த மருதுக்கு ஆசிரியர் ஒருவர் இறைவனை வேண்டி எழுத்தைத் தொடங்குங்கள் என்று உரைத்தவுடன் பெரும் நம்பிக்கை பிறந்தது. தேர்வு முடிந்தவுடன் அவனின் மன அழுத்தமும் குறைந்தது.
அன்று மாலையே துர்கா ஆனந்தை அழைத்து தேர்வினை சிறப்பாக எழுதியதாகவும் தனக்கு அரசுப்பணி கிடைக்க வாய்ப்பு உளளதா எனவும் சந்தேகத்துடன் கேட்டாள். தேர்வு எழுதும் வரை மட்டுமே அதைப்பற்றி கவலைப்பட வேண்டும். அது முடிந்த பின்பு அடுத்த தேர்விற்கு தயாராக வேண்டும். தேர்வின் முடிவினை பற்றி கவலைப் படக்கூடாது என பல அறிவுரைகள் வழங்கினான்.
அந்த அழைப்பு முடிந்த அடுத்த நொடியே ஆனந்தை அழைத்த மருது அடுத்த கட்ட திட்டங்களைப் பற்றி கேட்டான். அவனோ இலட்சியத்தை அடையும் வரை பேனாவினை கீழே வைக்கவே கூடாது என்று மருதுவை உற்சாகப்படுத்தினான்.
அடுத்த நாளே வரும் தேர்விற்கு தயாரானாள் துர்கா. 15 தினங்களில் வரும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு சிரத்தையுடன் படித்தாள்.
அந்தத் தேர்வை எதிர் நோக்கிய மருது அதற்கு முன்பு நடந்த தமிழக அரசு நடத்தும் இலவச மாதிரித் தேர்வினை எதிர்கொண்டான். அத்தேர்வில் ஆனந்த் கலந்து கொள்ளவில்லை. நெல்லையில் நடந்த அந்த தேர்வில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். அதில் முதல் மதிப்பெண் பெற்றவரை அறிவிக்க அதிர்ச்சி அடைந்தான் மருது.
உடனே ஆனந்தை அழைத்து தான் முதலிடம் பெற்றதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தான். அதற்கு ஆனந்தோ அந்த மையத்து மாணவர்களுக்கு மட்டும் தான் முதலிடம் கொடுப்பார்கள் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்க எப்படியோ கிடைத்து விட்டது என்றான்.
முதல் பரிசினை வாங்கச் சென்ற மருதுவைப் பார்த்து ஒரு பெண் ‘பாருடா’ என்றாள். உண்மைதான் நெல்லையில் முதலிடம் பெரும் மாணவன் மருதுவாகத்தான் இருந்தான். பெரும்பாலும் முதல் இடத்தினை பெண்களே பெற்று வந்தனர்.
மூன்று மாதங்கள் கழித்து தொகுதி 2 தேர்வுக்கான முடிவு வந்தது. முதல் 200 இடங்களுக்குள் வந்த துர்கா ஆனந்தை அழைத்து தனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று கேட்டாள். நினைத்த வேலையை நினைத்த துறையே நினைத்த இடமே கிடைக்க வாய்ப்புள்ளது என்றான். தானும் முதல் நானூறு இடங்களுக்குள் வந்துள்ளதாக தெரிவித்தான் ஆனந்த்.
உடனே தன் தாய் சக்திகனிடம் கண்ணில் நீர்மழ்க சென்று அவளைக் கட்டி அணைத்தாள். அவளோ பரிதவித்து ‘என்ன ஆயிற்று’ என்றவுடன் துர்கா ‘உன் மகள் அரசு அலுவலர் ஆயிட்டா அம்மா’. அந்த திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை வணங்கி திருநீறு எடுத்து பூசி விட்டு ‘கடவுள் கண்ணைத் திறந்துட்டான்’ என்றாள் சக்தி கனி.
ஆனந்திடம் அழைப்பில் வந்து மருது ‘தலைவரே எண்ணூற்று பதிமூன்றாவது இடம் எதுவும் வாய்ப்பு இருக்கா?’ அதற்கு ஆனந்த் அரசு வேலை கிடைக்கும் ஆனால் நினைத்த துறை கிடைக்காது என்றான். வேலை கிடைச்சா போதும் தலைவரே இங்கே நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என்று பதில் சொன்னான்.
முதல் நாளே கலந்தாய்வுக்குச் சென்ற துர்கா சிறந்த துறையை நெல்லையிலேயே தேர்வு செய்தாள். மூன்றாம் நாள் கலந்தாய்வுக்குச் சென்ற ஆனந்த் சென்னையில் ஒரு நல்ல துறையை தேர்வு செய்தான். ஐந்தாம் நாள் கலந்தாய்வுக்கு செல்வதற்கு முன் எந்த துறையை தேர்வு செய்ய என்ற குழப்பத்தில் இருந்தான் மருது. ஆனந்தைத் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு கூறினான்.
தலைவரே ஒரு துறை இருக்கிறது அதில் திருநெல்வேலியில் காலியிடம் உள்ளது என்றவுடன் மருது அடுத்த நாள் ஒரே ஒரு காலி இடம் மட்டும்தான் அந்தத் துறையில் இட ஒதுக்கீடு அடிப்படையில் தன்னுடைய வகுப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று கவலையுடன் கூறினான். நம்பிக்கைதான் பாசு வாழ்க்கை நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் என்று அவனுக்கு நம்பிக்கையூட்டினான் ஆனந்த்.
கலந்தாய்வுக்கு சென்ற ஆனந்த் தன்னுடைய இட ஒதுக்கீட்டு வகுப்பில் எத்தனை பேர்கள் உள்ளனர் என்பதை விசாரித்தான். மூன்று பேரை கண்டவுடன் அவர்கள் என்ன என்ன துறைகள் எடுக்கும் விருப்பத்தில் உள்ளனர் என்பதையும் விசாரித்தான். இருவர் வேறு துறையை சொல்ல ஒருவன் மட்டும் மருது நினைத்த துறையைச் சொன்னான்.
மேலும் அவன் தொடர்ந்து மற்றொரு துறையும் தனக்கு விருப்பம் உள்ளதாகவும் இரு மனநிலையில் உள்ளதாகவும் கூறினான். அடுத்து கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்று உள்ளதாகவும் தெரிவித்தான். உடனே இடைமறித்து மருது அவனிடம் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்ல விருப்பம் உள்ளதா என்று கேட்க சட்டென்று ஆமாம் என்றான்.
உடனே மருது இன்று இங்கு நீ வந்ததே தப்பு ஒழுங்கா தான் நினைத்திருக்கும் துறையை விடுத்து ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்துக் கொள் என்று அதற்றினான். தனக்கு அந்தத் துறையில் திருநெல்வேலியில் காலியிடம் இருக்கிறது என்றான். அவனும் புன்முறுவலோடு சரி என்றான்.
துர்காவும் மருதுவும் வெவ்வேறு துறைகளில் நெல்லையில் பணிபுரிய ஆனந்தோ சென்னையில் ஒரு துறையில் சேர்ந்தான். அலுவலகத்தில் முதல் அடி எடுத்து வைத்த துர்காவை புன்முறுவலோடு வரவேற்றனர்.
அடுத்தடுத்த நாட்களில் துர்கா உயர்ந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதைக் கண்ட அவளின் உயர் அதிகாரி ‘அரசு வேலைக்கு வந்தாச்சு இதில் முன்னேற பாரு’ என்று போலியான அக்கறையுடனும் சில நேரம் அதற்றலுடனும் கூறினாள்.
அதனை சற்றும் பொருட்படுத்தாது தன்னுடைய குடும்பத்தின் நிலையை உயர்த்த உயர்ந்த பணிகளுக்கு ஆசைப்பட்டாள் துர்கா. அந்த இலவச மையத்தை அடைந்து தன் வெற்றியை கூறியவுடன் அம்மைய ஆசிரியர்கள் இத்துடன் படிப்பினை விட்டு விடக்கூடாது மேலும் பல உயர்ந்த பதவிகளை பெற வேண்டும் என வாழ்த்தினர்.
தன்னுடைய வெற்றியில் முக்கிய பங்கு இந்த மையத்திற்கு உண்டு எனவும் இங்கு உள்ள தன்னுடைய நண்பர்கள் செய்த உதவியை ஒருநாளும் மறப்பதில்லை என்றும் தெரிவித்தாள். தனக்கு நேரம் கிடைக்கும் போது தானும் அங்கு வந்து பாடம் எடுப்பதாக கூறி விடை பெற்றாள்.
நெல்லையில் உள்ள பெரிய தேர்வு மையத்தில் ஆறு பேர் மட்டுமே அந்த தேர்வில் வெற்றி அடைய சாத்தான்குளத்தில் உள்ள இந்த சிறிய தேர்வு மையத்தில் 12 பேர் அரசு பணியை அலங்கரித்தனர்.
அந்த சிறிய தேர்வு மையத்தில் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு மருதுவை ஆனந்த அழைத்தான். ஒரு பெரிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சிறப்பு விருந்தினராக வந்து உரையாற்றுவதாக தெரிவித்தான். அதைக் கேட்க நிச்சயம் மருது வர வேண்டும் என அன்புக் கட்டளையிட்டான்.
வெற்றி பெற்ற அரசு பணியாளர்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. பாடநடத்திய ஆசிரியர்களுக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டையும் பெற்ற ஆனந்த் ஒரு புத்தகத்தினை மருதுவுக்கு அன்பளிப்பாக அளித்தான்.
உயர்ந்த பதவிகளுக்கு எப்போதும் தேர்வுஎழுத வேண்டும் என்று தீவிரமாக உரையாற்றினார் அந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. அதைக் கண்டு தனக்குள் பெரும் தீயை வளர்த்தாள் துர்கா.
புறநானூறு பாடல் ஒன்றில் புலி ஒன்று தானே இடம் விழுந்த பன்றியை நோக்காது வலம் நின்ற யானையை வீழ்த்தித் தன் பசியைப் போக்கும் என்ற கதை துர்காவின் நினைவில் வந்தது. தொகுதி ஒன்று தேர்விற்கு விண்ணப்பித்தாள். தமிழக அரசு நடத்தும் உச்சபட்ச தேர்வு அதுவாகும்.
முப்பதைத் தாண்டிய அண்ணனுக்கு திருமணப் பேச்சை எடுத்தாள் சக்திகனி. அவனோ பிடி கொடுக்காமல் பேச வருத்தம் அடைந்தாள். குகனின் பிரச்சினை துர்காவிடம் சொல்ல அவன் நட்பு வட்டாரத்தில் விசாரித்ததில் விசயம் தெரிந்தது.
உடனடியாக சென்னை சென்ற துர்கா அண்ணனிடம் அந்த அண்ணியை தன்னுடன் பேச கட்டளையிட்டாள். மூன்று தங்கைகள் திருமணமாகாமல் வீட்டில் இருக்கையில் தனக்கு தற்போது என்ன அவசரம் என்று தலை கவிழ்ந்தான். தங்கைகளுக்கு பின்னரே தனக்கு திருமணம் என்று உறுதிபடக் கூறினான்.
பத்திரகாளி போல் மாறிய துர்கா அவனிடம் ‘அதற்குள் அந்தப் பெண்ணுக்கு வயதாகிடும் இல்லை திருமணம் ஆகிடும் நீ கிழவன் ஆயிடுவ’ என்று கொந்தளித்தாள். சென்னையில் வாங்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி பின்பு வீட்டிற்கும் பணத்தை எவ்வாறு அனுப்புவது என்று நொந்தான்.
அதெல்லாம் தான் பார்த்துக் கொள்வதாக கூறிய துர்கா குகனின் திருமணத்தை முன்னிருந்து நடத்தி வைத்தாள். தந்தையை இழந்து பரிதவித்த குடும்பத்தின் பொறுப்பை தன் தலையில் சுமந்த அண்ணனுக்காக குடும்பப் பொறுப்பை ஏற்றாள்.
இதனிடையே எப்போதும் அருகில் சக்தி கனியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சொந்த குடும்பத்திற்கு துர்காவின் வேலை நெருடலாய் இருந்தது. துர்காவின் வேலையை பறிக்க ஒரு சதி வேலை செய்தனர். ஒரு நாள் சண்டை அதிகமாகிவிட காவல் நிலையத்தில் துர்காவின் பெயரில் புகார் தெரிவித்தனர்.
சண்டையைப் பற்றி அறியாத துர்கா அலுவலகத்திலிருந்து மாலை வீட்டை அடைந்தவுடன் குடும்பத்துடன் அவளை காவல் நிலையம் அழைத்துச் சென்றது காவல்துறை. கண்ணீருடன் என்ன செய்வது யாரிடம் போய் சொல்வது என்று அறியாமல் திகைத்து நின்றாள். அவளுக்குத் தெரிந்த ஒரே பெயரான ஆனந்தை அழைத்தாள். விடுப்புக்கு வந்திருந்த ஆனந்தும் அந்த காவல் நிலையத்தை அடைந்தான்.
நான்கு பெண்கள் கண்ணீருடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டவுடன் கொதிப்படைந்து காவல் அதிகாரிகளிடம் சீறினான். புகார் வந்துள்ளதாகவும் அதை விசாரித்து விட்டு தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் காவல்துறை அதிகாரி பதிலுரைத்தான்.
இரண்டு அரசு அலுவலர்கள் அங்கு இருக்கும்போதும் ஒரு பொய்ப்புகாருக்காக இவ்வாறு செய்யலாமா என்று ஆனந்த் கேட்க சற்று அமைதியாக புகார் கொடுத்தவர்கள் கட்சி சார்ந்து வந்ததால் எதுவும் செய்ய முடியாது என்ற தங்களின் இயலாமையை கூறியது. விடியும் வரை பொட்டுத் தூக்கம் இல்லாமல் ஐவரும் அழுது கொண்டே அந்த இரவைக் கடந்தனர்.
பொய்ப்புகார் என்பது உறுதியானவுடன் அவர்களை வீட்டிற்கு அனுப்பியது காவல் துறை. அரசு அலுவலராக இருந்த போதும் அதிகாரம் இல்லாததால் ஒரு பொய்ப்புகாருக்காக தன் குடும்பமே காவல் நிலையத்தில் நின்றதை எண்ணி அவளுக்கு பல நாள் தூக்கம் கெட்டது.
எதையும் நினைக்காமல் தொகுதி 1 தேர்வுக்குத் தயாராகுமாறு ஆனந்த் அவளிடம் அறிவுரை கூறினான். அந்த சாத்தான்குளம் தேர்வு மையத்தில் தொகுதி 1 தேர்வுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெறாத சூழலில் நெல்லையில் உள்ள அந்த பெரிய தேர்வு மையத்திற்கு படிக்கச் சென்றாள் துர்கா.
இதுவரை துர்காவை நேரில் பார்க்காத மருதுவிடம் அவளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு அன்புக்கட்டளை விடுத்தான் ஆனந்த். மருதுவின் உருவ அமைப்பும் கிடா மீசையும் துர்காவுக்கு அவன் மீது முதலில் பயத்தை ஏற்படுத்தியது.
பிறகு மருதுவின் அன்பான அணுகுமுறை துர்காவின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தன் உடன்பிறவா சகோதரனாக மருதுவை ஏற்றாள் துர்கா.
இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings