நாட்டுப்பண் ஒலிக்கின்ற போதெ ழுந்து
நாம்நின்று மரியாதை செய்த லோடு
நாட்டினுடை மூவண்ணக் கொடித னக்கு
நாம்மதிப்பு கொடுப்பதுதான் நாட்டுப் பற்று !
நாட்டின்மேல் அந்நியர்கள் படையெ டுத்து
நமைதாக்க வருகின்ற போதொன் றாகிக்
கூட்டாகச் சேர்ந்தவரை எதிர்ப தோடு
குலையாமல் நிற்பதுதான் நாட்டுப் பற்று !
பேரிடர்கள் வந்தபோது கடல்தான் பொங்கிப்
பெருமழைதாம் பெய்தபோது வெள்ளம் பாய்ந்தே
ஊரிலுள்ள குடியிருப்பைச் சூழ்ந்த போது
உணவின்றி நீரின்றி மக்க ளெல்லாம்
ஏறிவீட்டுக் கூரைமீது தவித்த போது
எனக்கென்ன எனப்பார்த்து நின்றி டாமல்
வாரிவாரி உதவிகளை ஓடி வந்து
வழங்கிஉயிர் காப்பதுதான் நாட்டுப் பற்று !
காடுகளை மலைகளினை கனவ ளங்கள்
காணுகின்ற ஆறுகளைக் காப்ப தோடு
வாடுகின்ற சாலையோர மக்கள் தம்மை
வாஞ்சையுடன் அணைப்பதுதான் நாட்டுப் பற்று !
ஏடுகளில் இல்லாமல் மதங்கள் சாதி
ஏற்றதாழ்வு மொழிகளாலே பிரிவு மின்றி
பீடுடனே இந்தியர்தாம் அனைவ ரென்ற
பிணைப்புடனே வாழ்வதுதான் நாட்டுப் பற்று !
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings