in ,

ஒலியற்ற மொழி ❤ (சிறுகதை) – ✍ ஆ.ஆனந்தன், குற்றாலம் சாலை, இலஞ்சி

ஒலியற்ற மொழி ❤
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 18)

னக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது, அது நன்றாகத் தெரியும் இருந்தாலும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை

அப்படி அதை பெரியதாக எடுத்துக் கொண்டாலும், என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. 

கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தாலும் சரி, இல்லை அளவாக இருந்தாலும் சரி, எதாவது வாங்கப் போனால்,வாங்கப் போன பொருள்களுக்கு மேல் எதையாவது வாங்கிக் கொண்டு  வந்து, அதற்காக அவளிடம் அவ்வப்பொழுது வாங்கிக் கட்டிக் கொள்வதும் நடக்கிறது. இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த எழுபது வயதிற்கு மேல், “இனி எப்படி இருந்தால் தான் என்ன?” என நானும் 

“இனி என்ன செய்ய இந்த வயசான காலத்தில” என அவளும், எங்களை நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு விட்டோமோ என்னவோ, வாழ்க்கை அதன் போக்கில் எங்களை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. 

“சார்… பில் போடவா?” என அந்த சூப்பர் மார்க்கெட்டின் பணியாள் கேட்க 

“கொஞ்சம் இருப்பா, இந்தக் கூடையைக் கொஞ்சம் கீழே வச்சுரு.நான் ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன், எதையோ மறந்த மாதிரி இருக்கு” என விலகினேன்

“சரி சார், மெதுவா வாங்க” என கூடையை இறக்கி வைத்தான் அவன் 

நான் மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து, அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்குகளுக்குள் காணாமல் போனேன்

‘ஜெம்ஸ் சாக்லேட் வாங்கலாமா வேண்டாமா?’ என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, கடையின் மானேஜர் பக்கத்தில் வந்தார்

”என்ன சார் அப்படியே நின்னுட்டீங்க? ஏதாவது உதவி வேணுமா?” எனக் கேட்டார் 

நான் கொஞ்சம் சங்கடப்பட்டுக் கொண்டே,”அதெல்லாம் ஒண்ணுமில்லை, எதையோ மறந்துட்டேன் அதான்” என்று சொல்லி சமாளித்தேன்

சரி இருக்கட்டும் என்று இரண்டு பெரிய நீளமான பாக்கெட்டுகள் ஜெம்ஸ் சாக்லேட்டுகளை எடுத்து கூடையில் போட்டுக் கொண்டேன். அந்தப் பெரிய பாக்கெட்டுகளை எடுத்துப் போடும் பொழுது, பாக்கெட்டுகளுக்குள் அங்கும் இங்கும் உருண்டு ஓசையெழுப்பிய அந்த வண்ண வண்ண சாக்லேட்டுகளின் ஒலி, எனக்கு பிடித்து இருந்தது

இந்த ஜெம்ஸ் சாக்லேட்டுகளை குழந்தைகள் இருவரும் பிரித்து சாப்பிடும் பொழுது,  ‘எனக்கு இந்த கலர் உனக்கு அந்தக் கலர்’ என சண்டை போட்டுக் கொள்வது, இன்னும் ரசனையாகவும் எனக்கு மிகவும் பிடித்த விஷயமாகவும் இருக்கும், அதற்காகவாவது இருக்கட்டும் என மனசு சொல்லியது

அடுத்த வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாம்புகள், முகப்பூச்சுகள் என்னை யோசிக்க வைத்தது 

‘போன முறை மகளும் பேத்தியும் வந்தபொழுது இதெல்லாம் வாங்கினோமா, இல்லை அவர்களே கொண்டு வந்தார்களா?’ எனத் தெரியாமல், சரி இருக்கட்டும் என அந்த சிவப்புக் கலர் ஷாம்பு பாட்டிலில் இருப்பதிலேயே பெரிய பாட்டிலாக எடுத்து வைத்துக் கொண்டேன்

இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கிளம்பிப் போனதும்,பாத்ரூமில் இந்த சிவப்புக் கலர் பாட்டில் இருந்ததாக ஞாபகம். இப்பொழுது கூடை கொஞ்சம் கனக்க ஆரம்பித்தது

அந்த வரிசையின் கடைசியில் இருந்த செருப்புக் குவியலைப் பார்த்தேன்.போன முறை அவர்கள் வந்த பொழுது, ‘நால்வருக்கும் வீட்டிற்குள் போட்டுக் கொள்வதற்கு செருப்பு வேண்டுமென்று மகள் போனில் சொன்னதனால் வாங்கித் தயாராக வைத்திருந்தோமே, இப்ப வாங்கலாமா?’ என யோசித்தேன்

அவரவர் அளவுகளும் தெரியாது, பிள்ளைகள் மிகவும் வளர்ந்து விட்டார்கள், மகளும் இது பற்றி போனில் ஒன்றும் சொல்லவில்லை.

அதோட  இங்க வாங்கிறதுக்கு செருப்புக் கடையில் போய் வாங்கினால் நிறைய டிசைன் இருக்குமேன்னு மனசு சொன்னவுடன் அடுத்த வரிசைக்கு நகர்ந்தேன்

பிறகு பாத்ரூமுக்குள் வைப்பதற்கு என வாசனை பொருட்களை கொஞ்சம் வாங்கிக் கொண்டேன். 

வரப் போகிற பேரனும், பேத்தியும் போனமுறையே, ‘நாட்டுச் சக்கரைன்னா என்ன? பனங்கல்கண்டுன்னா என்ன?’னு கேட்டாங்களே என  ஞாபகம் வர, அவைகளில் ஒரு அரைக் கிலோ பாக்கெட் வாங்கி வைத்துக் கொண்டேன்

அவர்கள் சிறு தானியங்களில் எதையுமே பார்த்ததில்லை என்று எனக்குத் தெரியும், அதனால் அவைகளையும் ஒவ்வொரு பாக்கெட்டுகள் என பார்த்துப் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டேன்

ஆனாலும் அவர்கள் கிளம்பிப் போன பிறகு இதை எப்படி உபயோகிப்பது என்பதில் எனக்கும் அவளுக்கும் பெரிய வாக்குவாதமே நடக்கப் போவது எனக்கு இப்போதே தெரியும்.

இருந்தாலும் பிள்ளைகள் தெரிந்து கொள்ளட்டுமென வாங்கிக் கொண்டேன். 

கொஞ்சம் கை துடைக்க டிஸ்யூ பேப்பர்கள், சானிடைசர் என சிலவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டேன் 

மகள் இங்க வந்தா தேங்காய் எண்ணெய் தேய்ப்பாளே என ஞாபகம் வர, அதில் ஒரு பாட்டிலும் ஒரு சீயக்காய் பொடி பாக்கெட்டும், கை துடைப்பதற்கு புதுத் துண்டு கேட்பாங்களேன்னு அதில் ஒரு அரை டஜன் என சேகரித்துக் கொண்டேன். 

பேரனும், பேத்தியும் பொழுது போகலைன்னா படம் வரைய உட்கார்ந்துவிடுவார்களேன்னு ஞாபகம் வர, கொஞ்சம் பேப்பர் பென்சில்கள், கிரேயான் குச்சி டப்பாக்கள், வாட்டர் கலர் பாக்ஸ்கள், சில பிரஷ்கள் என,  அவைகளும் என் கூடைக்குள் சேர்ந்தன. 

எனக்கு என்னை அறியாமலேயே சிரிப்பு வந்தது, இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்த பொழுது, ‘தாத்தா அசையாமல் உட்காருங்கள்’ என, என்னைக் கேட்டுக் கொண்டு, பேரன் என்னை வரைய முயற்சி செய்ததையும், அவன் வரைந்த படத்தைப் பார்த்து அவள் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்ததையும் நினைத்துத் தான் சிரிப்பு வந்தது

சிரிப்பை அடக்கக் கொஞ்சம் நேரமானது, நல்லவேளை யாரும் பார்க்கவில்லை.

வீட்டிலிருக்கிற மூன்று பாத்ரூமுக்கும் கால் மிதியும் வாங்கி கூடையில் இட்டுக் கொண்டேன். பில் போட கவுண்டரை நெருங்கினேன். இப்பொழுது தான் ஞாபகம் வந்தது நல்லவேளை. போன வாரமே கல் உப்பு வேண்டுமென்று கேட்டிருந்தாள்

ஞாபகம் வர மீண்டும் போய் கல் உப்புப் பாக்கெட் ஒன்றை சேகரித்துக் கொண்டு வந்தேன். 

“என்ன சார் முடிஞ்சிச்சா?” என பணியாள் கேட்க 

“முடிஞ்சிச்சு, ஆனா இதில ஏதாவது வேண்டாமென்று நினைத்தால் திருப்பிக் கொடுக்கலாமா?” எனக் கேட்டேன் நான் 

”தாராளமா கொண்டாங்க சார், ஆனா இந்த பில்லை பத்திரமா வச்சிருந்து அதோட கொண்டாங்க. பணம் தர மாட்டோம், அந்தத் தொகைக்கு வேற ஏதாவது வாங்கிக்கலாம்” என்றான் அவன் 

“சரி இவ்வளவு நாளைக்குள்ள கொண்டு வரனும்ன்னு ஏதாவது கண்டிஷன் இருக்கா?” என நான் மீண்டும் கேள்வியெழுப்ப 

“ஒரு மாசம்னு சொல்வோம் சார், ஆனால் உங்களைப் போல வாடிக்கையாளர்களிடம் அதெல்லாம் பார்க்கிறதில்லை சார். பொருள் காலாவதி தேதிக்குள்  கொண்டு வந்துடனும்” என்றான்  

”ரொம்ப நன்றி… பில்லைப் போடுப்பா” என பணத்தைக் கொடுத்ததும், அந்தப் பையன் பைகளில் போட்டுக் கொடுத்த அவ்வளவு சாமான்களையும் என்னால் வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போக முடியாது என உணர்ந்தேன் 

“டோர் டெலிவரி பண்ணிருப்பா” என கூறிவிட்டு, பில்லுக்குப் பின்னால் என் வீட்டு முகவரி கைபேசி எண் எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்துவிட்டு, “சாயங்காலத்துக்குள்ள வந்திருமில்ல” எனக் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டு வெளியே வந்தேன். 

ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழையும் போதே, ஒரு அற்புதமான வாசனை வரவேற்றது

‘நெய் வாசனையா, எண்ணெய் வாசனையானு தெரியல ஆனா பலகாரம் தயாராகிக் கொண்டிருக்கிறது’ என தெரிந்து போனது. 

கூடவே பேச்சுச் சத்தமும் கேட்டது. ‘பக்கத்து விட்டு மாலதியாக இருக்கும், இவளுக்கு உதவிக்கு வந்திருப்பா அல்லது வந்தவள இவ உதவிக்கு புடிச்சு வெச்சுருப்பா’ என நினைத்தபடி உள்ளே நுழைந்தேன் 

நான் நுழைந்த ஓசை கேட்டு அடுப்படியிலிருந்து எட்டிப் பார்த்த சாவித்திரி, “வாங்க… கையக் கால கழுவிட்டு வந்து இதைக் கொஞ்சம் சாப்ட்டு பார்த்து சொல்லுங்க” என்றாள்

நான் மனசுக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். போன வாரம், “மழையா இருக்கு ரெண்டு பஜ்ஜி போடேன்”னு நான் சொன்னதுக்கு

“வயசான காலத்தில வாயை அடக்குங்க, எண்ணெய் பலகாரமெல்லாம் வேண்டாம், பிரிஜ்ஜில இருக்கிற கடலை மிட்டாயை வாயில போடுங்க கொஞ்ச நேரத்தில சாப்பிட்டுப் படுக்கலாம்”னு சொன்ன சாவித்திரி, இன்னைக்கு மக குடும்பம் வரப் போகுதுன்னு தெரிஞ்சு ரெண்டு நாளா ஓய்வில்லாம பலகாரமா செஞ்சு அடுக்கிக்கிட்டு இருக்கா

இப்ப இருந்து இன்னும் இரண்டு மாசத்துக்கு எது கேட்டாலும் எப்ப வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் கிடைக்கும் என நினைத்து மீண்டும் சிரித்துக் கொண்டேன். 

எனக்கு நன்றாகத் தெரியும் அவள் செய்யும் எந்தப் பலகாரமும் அமெரிக்காவிலிருந்து இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் மகளை அல்லது மருமகனை நினைத்து செய்யவில்லை, எல்லாமே பேரனுக்கும் பேத்திக்கும் தான் என்பது

போன முறை வந்த பொழுதே சாவித்திரி செஞ்ச தேன்குழலை ஒரே வாரத்தில் இரண்டு பேரும் காலி செய்து விட, இவள் வேறு பலகாரம் செய்ய வேண்டியதாகி விட்டது

பேரனும், பேத்தியும் “சூப்பர்”னு சொல்லிக் கொண்டே தேன்குழலை வாங்கி வாங்கி சாப்பிட்டதைப் பார்த்து, அவள் அடைந்த சந்தோஷம் இருக்கே, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது

அதோட எனக்கு ரெண்டு திட்டு வேற,”கல்யாணம் ஆகி வந்து எத்தனை தடவ இந்த மாதிரி தேன்குழல் செஞ்சிருப்பேன், வாய் விட்டு பாராட்டுனதும் கிடையாது இப்படி ஆசை ஆசையா வாங்கி சாப்பிட்டதும் கிடையாது, நீங்கெல்லாம் சாப்பிடறதுக்கே லாயக்கில்லை, இனிமே எதுவும் செய்யக் கூடாது” என்று 

“ஆமா சூப்பர் மார்க்கெட் போனீங்களே எங்க சாமான்களைக் காணோம்” என அவள் கேட்க 

“சாயங்காலம் வரும்” என்றேன் 

“வருமா? வாங்கப் போனது ரெண்டே ரெண்டு சாமான், அதுக்கு எதுக்கு டோர் டெலிவரி? வழக்கம் போல அள்ளிப் போட்டு கண்டத வாங்கி போட்டிருக்கீங்களா? நான் தான் அத்தனையும் எடுத்து அடுக்கி வைக்கணும். அதுல பாதி சாமான் உபயோக்கிக்கவே போறதில்லை, எதுக்கு இப்படி பணத்தை வீணாக்கீறீங்களோ” என திட்ட ஆரம்பிக்க 

”இல்ல அவளும், மாப்பிள்ளையும், பிள்ளைகளும் வர்றாங்கல்ல” என சமாளித்தேன்

“வந்தா.. என்ன வேணுமின்னு கேட்டுட்டு போய் வாங்கிக்கிறது” 

“நீ மட்டும் பலகாராமா செஞ்சு குவிக்கிற” 

“என் கூட போட்டியா? பலகாரம் என்ன அவ மட்டுமா சாப்பிடப் போறா, நாம இரண்டு பேரும் சாப்பிட மாட்டோமா” இப்படி பேச்சு வளர்ந்து கொண்டே போனது

நல்லவேளையாய் மாலதி வந்து “அம்மா எண்ணெய் காயுது” என சொன்னவுடன் தான், சாவித்திரி அடுப்படியை நோக்கி நகர்ந்தாள்

இன்னும் சாமான்களைப் பார்க்காமலேயே சத்தம் போடும் சாவித்திரி, நான் பாட்டுக்கு அள்ளிப் போட்டு வாங்கி வந்திருக்கிற சாமான்களைப் பார்த்தால் நிச்சயம் கொஞ்ச நேரம் மகாபாரத யுத்தம் தான் என நினைத்துக் கொண்டேன் 

“சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க” என சின்னத் தட்டில் வைத்திருந்த பாதாம் அல்வா என்னை இழுக்க, அப்படியே வழித்து வாயில் போட்டேன் 

‘அடடா… என்ன சுவை இன்னும் கொஞ்சம் கேட்டா கிடைக்குமோ என்னவோ என நினைத்தபடி, “சாவித்திரி… இந்த பாதாம் அல்வா, மிகப் பிரமாதம்” என சத்தமாகச் சொன்னேன். அங்கிருந்து பதிலே இல்லை.  

வீடு முழுவதும் ஒட்டடை அடிச்சாச்சு, வேண்டாத பழைய சாமான்கள் எல்லாம் விலைக்குப் போட்டாச்சு, பழைய பேப்பர் புத்தகங்கள் எல்லாம் விலையாக்கியாச்சு

பழைய துணிகள் எல்லாம் பல பேருக்கு கொடுத்தாச்சு, படுக்கையறைய சுத்தம் பண்ணி புதுத்துணிகள் கொண்டு படுக்கையெல்லாம் கவர் பண்ணியாச்சு

தலையணை மெத்தையெல்லாம் வெயில்ல போட்டு எடுத்து வச்சாச்சு, போனதடவையே துணி மாட்ட ஹேங்கர் பத்தலையேன்னு  சொன்னாளேன்னு மேலும் இரண்டு டஜன் வாங்கிப் போட்டாச்சு

வீட்டிலிருக்கிற பேன், டியூப் லைட் எல்லாம் ஆளை வச்சு துடைச்சு எடுத்தாச்சு, ஓவர் ஹெட் தண்ணீர் தொட்டியை சுத்தம் பண்ணியாச்சு, வீட்டைச் சுற்றி இருக்கிற களைகள் எல்லாம் சுத்தம் பண்ணி செடிகளும் மரங்களும் பண்ணை பிடிக்கப்பட்டு பளீரென்று இருக்கிற மாதிரி ஆக்கியாச்சு

பாத்ரூம்களுக்கு முன்னால் மிதியடிகள் மாத்தியாச்சு, துணி காயப் போடுற கொடியெல்லாம் புதிதாக கட்டியாச்சு, மேலும் ஒரு ஸ்டென்லெஸ் ஸ்டீல் துணி காயப்போடுற ஸ்டாண்டும் வாங்கிப் போட்டாச்சு, இன்னும் என்ன என்ன எதிர்பாப்பாங்கன்னு யோசிச்சு யோசிச்சு வாங்கி வச்சாச்சு

பலகாரங்கள் பல பாத்திரங்கள், டின்களில் செஞ்சு அடுக்கியாச்சு, விமான நிலையம் போய் அழைத்து வர டாக்ஸி சொல்லியாச்சு, டிவியில் கார்டூன் சேனல்கள் எல்லாம் இந்த மாதம் முதல் இரண்டு மாதத்துக்கு இருக்கட்டும் என பணம் கட்டியாச்சு

பால் அதிகம் வேண்டும் என பால்காரரை ஞாபகப் படுத்தியாச்சு, வாரத்துக்கு ஒரு முறை வரும் காய்கறிக்காரரிடம், சில காய்களின் பெயரைச் சொல்லி அவைகளோடு தினமும் வரவேண்டுமென கேட்டுக் கொண்டாச்சு

வேலைக்காரம்மாவை இரண்டு மாசத்துக்கு அதிக வேலையிருக்கும் கொஞ்சம் நின்னு பார்க்கணுமின்னு கேட்டுக் கொண்டு அதற்கு அதிக சம்பளம் தர்றோம்ன்னு பேசி சம்மதம் வாங்கியாச்சு

இண்டெர்நெட்டின் வேகத்தைக் கூட்டியாச்சு, அது இடையூறு இல்லாமல் இரண்டு மாசத்துக்கு வேலை செய்யணுன்னு அந்த சேவை மையத்திடன் கேட்டுக் கொண்டாச்சு. 

எல்லாமே கொஞ்சம் கூட சிரமமில்லாமல் நடந்ததாக தோண, அன்று இரவு, “சாவித்திரி வா வந்து சீக்கிரம் படு, ரெண்டு நாள் நல்லா தூங்கு. அப்புறம் அவங்க வந்தா உனக்கு பொழுது பத்தாது, பேரனும் பேத்தியும் உன்னைத்தான் சுத்தி சுத்தி வருவாங்க” என்றேன். 

படுக்கையறைக்குள் வந்த சாவித்திரி எனக்கு புது மாதிரி தோன்றினாள். இரண்டு நாட்களில் பார்க்கப் போகிற மகள், மருமகன், பேரன், பேத்தி பற்றி ஒரு அக்கறையில்லாத பாட்டியாகத் தோன்றினாள். முகம் வேறு வாடிப் போயிருந்தது

நான் அவளை கைத்தாங்கலாகப் பிடித்து கட்டிலில் உட்காரவைத்து, ”என்ன சாவித்திரி, ஒரு மாதிரி இருக்கேன்னு” கேட்டேன்

அவள் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள். 

“சாவித்திரி?” 

“உம்” 

“என்ன ஆச்சு, ஏதாவது உடம்பு சரியில்லையா?” 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல” 

“பின்ன என்ன?” 

“இரண்டு நாள் கழிச்சு, அவங்கெல்லாம் வந்திருவாங்க, ஆனா நான்தான் ஒரு தீவு மாதிரி அடுப்படியிலே கிடக்கணும்” 

“அதெல்லாம் வேண்டாம், வேணுமின்னா, மெஸ்ஸில இருந்து மூணு வேளையும் சாப்பாடு கொண்டு வரச் சொல்லீரலாம்” 

“மெஸ்ஸில சாப்படுறதுக்கா அவங்க இங்க நம்மளைத் தேடி வர்றாங்க, வீட்டு சாப்பாடு மாதிரி வருமா, என்னால முடிஞ்ச மட்டும் செய்றேன்” 

“அப்புறம் என்ன?” 

“இல்ல பேரனும் பேத்தியும் உங்ககூடயே இருப்பாங்க, எங்கூட பேசக்கூட மாட்டாங்க” 

“அதெல்லாம் கிடையாது, நீ பாட்டுக்கு பேசு அவங்களும் பேசுவாங்க” 

“பேசுவாங்க, ஆனா எனக்குத் தான் புரியாதே. அவங்களுக்கு இங்கிலீஷ் தவிர எதுவுமே தெரியாதே. எனக்கு இங்கிலீஷ் தெரியாதே. நீங்க அவங்களுக்கு சமமா பேசுறதுனால உங்க பின்னாடியே தான் அலைவாங்க. எது வேணும்னாலும், உங்கக்கிட்ட தான்  எல்லாம் கேட்பாங்க” என அங்கலாய்த்தாள் 

“அதெல்லாம் இல்ல சாவித்திரி, போன தடவையே அவகிட்ட சொல்லித் தான அனுப்பிச்சிருக்கோம். அவ வீட்ல தமிழ் பேசிப் பேசி பழக்கியிருப்பா. பிள்ளைகளும் இப்ப பேசுவாங்க, கவலையை விடு” என்றேன் 

“எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லைங்க, வாழ்க்கைலே கடைசி காலத்தில பேரன்,பேத்தியோட சகஜமா பேச, கதையெல்லாம் சொல்லி சந்தோசப் படாத வாழ்க்கை என்ன வாழ்க்கைங்க” என வருந்தினாள் 

“அட பைத்தியம், மொழி ஒண்ணும் அவ்வளவு முக்கியமில்லை. அது தெரியாமலேயே நாம சந்தோஷமா இருக்கலாம், நான்தான் உங்கூடவே இருப்பேன்ல” என சமாதானப்படுத்தினேன் 

அன்று இரவு வெகு நேரம் சாவித்திரியை சமாதனப்படுத்த பல உதாரணங்களைச் சொல்லி அவளை தூங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிப் போனது எனக்கு 

மறுநாள், ஆங்கிலத்தில் சில வாக்கியங்களைக் கூட சொல்லிக் கொடுத்தேன்

அவள் அதை அடிக்கடி மறந்து விட்டு,  “இன்னொருக்கா சொல்லுங்க சொல்லுங்க” என கேட்க,  திருப்பி திருப்பிப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தேன். அவளும் கொஞ்சம் உற்சாகமாக இருந்தாள்

மறுநாள் விமான நிலையம் போகும் பொழுது, பேத்தியைப் பார்த்ததும், “ஹவ் ஆர் யூ னு கேட்கவா?” என்றாள். 

“இல்லை அதெல்லாம் தேவையில்லை, பேரனையும், பேத்தியையும் பார்த்தவுடன் கட்டிப்பிடி. அப்புறம் எல்லாம் அதுவே நடக்கும். வீட்டுக்கு வந்தபறம் நான் சொல்லிக் கொடுத்ததை, சமயம் பார்த்து உபயோகி, எல்லாம் சரியாக இருக்கும்” என்றேன்

விமான நிலைய பரபரப்பு அடங்கி,மிகக் கடைசியாக டிராலிகளைத் தள்ளிக் கொண்டு மகளுடைய குடும்பம் வெளியே வர,உற்சாமானாள் சாவித்திரி. 

என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டாள். 

வேகமாக ஓடி வந்த பேத்தி, பாட்டியை கட்டிக் கொண்டு, “ஹலோ பாட்டி, ஹவ் ஆர் யூ? டுடேய் யூ லுக் வெரி பிரட்டி, யூ ஆல்சோ லுக் வெரி யங்க். வாட் ஹேப்பண்ட், தாத்தா, சீம்ஸ் டூ பி ஓல்டு வென் கம்பேர்ட்டு டு யூ, ஆர் யு டூயிங்க் எனி ஸ்பெஷல் எக்ஸசைஸ்சஸ்?ஓகே ஷெல் வீ கோ ஹோம், அண்ட் ஹேவ் யுவர் ஸ்பெஷலி மேட் லஞ்ச் பார் அஸ்” என, பாட்டியின் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல், நீள நீளமாக பேசிக் கொண்டிருந்தாள் பேத்தி

நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். சாவித்திரியின் சின்னப் பதிப்பு போலவே இருந்தாள் பேத்தி. வயதுக்கு மீறி வளர்ந்து உயரமாக இருந்தாள்.

சாவித்திரி பக்கம் வந்து பேத்தி கையை அகலமாக விரித்துக் கொண்டு கட்டிக் கொண்டாள்.

நீளம் நீளமான கைகளால் ஆரம் போல இடுப்பில் வளையம் இட்டு, “லவ் யூ பாட்டி” என்று மேலும் இறுக்கி, சாவித்திரியின் மார்பில் தலையைப் புதைத்துப் புரட்டி முத்தினாள்

சாவித்திரி எதுவுமே பேசவில்லை. இரண்டு மூன்று முறை பேத்தியின் உச்சந்தலையில் முத்தம் இட்டாள். விரலால்  சிகைக்குள் அளைந்தாள். 

நிரம்பித் தளும்பும் கண்களுடன் என் பக்கம் திரும்பி, “நல்லா வளர்ந்துட்டா… சீக்கிரம் உக்காந்திருவா” என்றாள் சாவித்திரி

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

 

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. அநேகத் தாத்தா/பாட்டிகளின் நிலைமை இது தான். பிரிட்டனின் ஆங்கிலத்தைப் புரிஞ்சுக்கறாப்போல் அமெரிக்க ஆங்கிலத்தைப் புரிஞ்சுக்க முடியாது. குழந்தைகளின் வாயைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாப்போல் ஆயிடும்.

கனவுத் தொழிற்சாலை (சிறுகதை) – ✍ ஜெயஸ்ரீ சடகோபன், அமெரிக்கா

புதுச்சட்டை (சிறுகதை) – ✍சுதா.மு (முனைவர் பட்ட ஆய்வாளர்)