2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஏண்டா உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தி வராதா. ஒழுங்காவே படிக்க மாட்டியா? உன்ன டியூஷன் சேர்த்து காசு போனது தான் மிச்சம். உன்ன திட்டி திட்டியே என் தொண்ட தண்ணி எல்லாம் வத்தி போச்சு. எப்ப பாத்தாலும் ஃபோன் பாக்க வேண்டியது, இல்லைனா தெருவுல போய் கிரிக்கெட் ஆட வேண்டியது. நீ எப்பத்தான் உருப்படப் போறியோ. நான் கையெழுத்து போட மாட்டேன், போய் உங்க அப்பா கிட்ட போய் வாங்கிக்கோ. அவர்தான் உன்னை ஒண்ணுமே சொல்ல மாட்டாரு. நான் கிளம்புறேன், எனக்கு வேலைக்கு டைம் ஆச்சு”
தலையை குனிந்தபடியே தன் தாயின் எதிரில் பரீட்சை பேப்பரோடு நின்று கொண்டிருந்தான் ரமேஷ்.
“எல்லா சப்ஜெக்ட்ளையும் நீ எண்பதுக்கு மேல மார்க் வாங்கினா தான் நான் உனக்கு கையெழுத்து போடுவேன்”
ரமேஷ் மெதுவாக திரும்பி தன் தந்தையிடம் சென்றான். தன் கணவனை இங்கிருந்தே ஒருமுறை முறைத்து விட்டு, தன் மாமியார் பக்கம் திரும்பினாள்.
“அம்மா… எனக்கு இன்னிக்கு மூணு ஸ்டூடியோக்கு போய் ஆகணும், ஈவினிங் வர, கொஞ்சம் டைம் ஆகும். நீங்க குக்கர் மட்டும் வச்சிருங்க. வரும்போது உங்களுக்கு இரண்டு இட்லி வாங்கிட்டு வரேன் கோமதி கஃபேல, சாம்பார் நிறைய கொடுப்பாங்க. அத வச்சு ராத்திரி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”
சொல்லிக் கொண்டே தன் ஹேண்ட் பேக்கில் மதியஉணவு டிபன் பாக்ஸை வைத்துக் கொண்டு பர்சை எடுத்து பணம் எவ்வளவு இருக்கிறது என்று சரி பார்த்தாள் ஜோதி.
ரமேஷ் தன் தந்தையிடம் சென்று பரீட்சை பேப்பரில் கையெழுத்து வாங்கினான்.
“பாடத்த நல்லா கவனிச்சு படிங்க ராசா. உன்ன நம்பி தான் நான் இருக்கேன். நான் தான் படிக்கல பியூன் வேலை பார்க்கிறேன். நீங்க நல்லா படிச்சு நல்லா பெரிய வேலைல சேர வேணாமா?”
“ஆமா, அவன கெஞ்சுங்க… முதுகுல நாலு சாத்து சாத்தாம”
“விடுமா, இப்பதானே எட்டாங்கிளாஸ் தான படிக்கிறான். சின்ன பையன் தானே, போகப் போக சரியாயிடுவான்”
“ஆமா நீங்க அவனுக்கு இப்படியே சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருங்க, அவன் உருப்பட்ட மாதிரிதான்”
அவள் கோபத்தை தணிக்க நினைத்த அவள் மாமியார், “இங்க பாரு, என் பேரன் என்னை எப்படி வரைஞ்சிருக்கான் பாரு எப்படி தத்ரூபமா இருக்கு பாரு”
“ஆமா… படிப்பத் தவர மிச்ச எல்லாம் பண்ணுவான். சரி, நீங்களே இன்னிக்கு அவன ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுருங்க. எனக்கு இன்னைக்கு ரெக்கார்டிங் 10 மணிக்கு ஆரம்பம், நான் இப்பவே கிளம்பினா தான் எனக்கு சரியா இருக்கும் நான் போயிட்டு வரேன்”
வாசலில் நிறுத்திருந்த ஸ்கூட்டி சிஸ்ட்டை எடுத்து விரைந்தாள்.
“வாங்க ஜோதி…. கரெக்டா வந்துட்டீங்க இந்தாங்க உங்களோட டயலாக் பேப்பர். இது ரொம்ப முக்கியமான சீன், டைரக்டர் சொன்னார். நல்ல உணர்ச்சி பூர்வமா இருக்கணும்”
வேலை முடித்து வண்டியில் வரும் பொழுது அவள் மனம் மிகவும் குழப்பமாக இருந்தது, வேதனையாகவும் இருந்தது. தன் மகன் ரமேஷை பற்றி சிந்தித்துக் கொண்டே வந்தாள்.
இரண்டு நாள் கழித்து… ரமேஷ் தன் அறையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஃபோன் கால் அடித்தது. அவன் நண்பன் கிரிக்கெட் விளையாட கூப்பிட்டான்.
அதற்கு ரமேஷ், “இல்லடா…….நான் வரல எங்க அம்மா திட்டுவாங்க. நாளைக்கு பீரியாடிக் டெஸ்ட் ஆரம்பம், இப்ப விளையாட வந்தா என் காலை ஒடிச்சிருவாங்க நான் வரல டா”
போனை வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தான்.
“ஐயா கண்ணு… அந்த ‘வானம் ‘ டிவியை கொஞ்சம் போட்டு விடு, ராணி டீச்சர் சீரியல் .ஆரம்பிச்சிருக்கும். அஞ்சு நிமிஷம் ஆச்சு கொஞ்சம் போட்டு குடுடா கண்ணா”
“இந்த வரேன் பாட்டி”
பாட்டிக்கு டிவி ஆன் செய்துவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.
“பெற்றோர்களே, இப்போ உங்களுக்கு ஒன்னு சொல்றேன் உங்க குழந்தைகளை படினு சொல்லுங்க. ஆனா மார்க் நிறைய வாங்கணும்னு டார்ச்சர் பண்ணாதீங்க, படிப்பு மட்டுமே வாழ்க்கை கிடையாது”
அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் ரமேஷ்.
“வாங்குற மார்க் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்காது. ஒழுக்கமாக வாழ்வதற்கும், தனக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் அறிவை வளர்ப்பதுமே தான் படிப்பு. உங்கள் குழந்தை படிக்கவில்லை, நிறைய மார்க் வாங்கவில்லை என்று கவலைப்படாதீர்கள்m அவனுள் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டுபிடிங்கள். அவனுள் ஒரு சச்சின் டெண்டுல்கர் இருக்கலாம், ஒரு பில்கேட்ஸ் இருக்கலாம், ஏன் ஒரு சிறந்த ஓவியன் இருக்கலாம், ஒரு சிறந்த எழுத்தாளன் இருக்கலாம். அதை கண்டுபிடிங்கள் பெற்றோர்களே. படிப்பறிவில்லாத நமது காமராஜர்தான் சமூக அக்கறையுடன் பல மாற்றங்களை செய்தார். ஏன், என்னையே எடுத்துக்கோங்க. நான் ஒரு பள்ளிக்கூடத்துல டீச்சர் வேலை பார்க்கிறேன். ஆனாலும் இந்த மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் என்ற இதுல தான் எனக்கு மனசு நிறைஞ்சுருக்கு”
‘டப்பிங் ஆர்டிஸ்ட்’டான தன் தாயின் குரலில் பேசிக் கொண்டிருந்த அந்த நடிகையை பார்த்து விட்டு சொன்னான் ரமேஷ்.
“நான் அவங்களுக்கு மகனா பொறந்து இருக்கலாம்”
கடைக்கண்ணால் தன்னை பார்த்துக் கொண்டே சொன்ன மகனிடம், “சரி, போய் ஒன் ஹவர் விளையாடிட்டு வா” என்றாள் ஜோதி சிரித்தபடி.
ரமேஷ் சென்றதும், அவன் வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் ஃபிரேம் போட.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை.