in ,

நிராகரிப்பு !! (சிறுகதை) – ✍ மா. சித்திவினாயகம், கனடா

நிராகரிப்பு !! (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 99)

சோமசுந்தரம் எனப்படும் சோமனாகிய நான், நிராகரிப்பின் எல்லையிலிருந்தேன். புறக்கணிப்பு என்ற பெரும்பூதம் என்னை திரும்பும் திசையெங்கும் விரட்டி விரட்டி விழுங்குகின்ற வேளை

ஈழத்தமிழனின் வாழ்வு தான்  நிராகரிப்பின் சரியான வரைவிலக்கணம். 

இந்தப் புவியின் ஒவ்வொரு நிராகரிக்கப்பட்டவனும், புறக்கணிப்பு எனும் பெரும்  சாபத்தோடு  தான் அலைகின்றான். முடிவில் எல்லாம் இழந்தவனாகி, தொங்கிய முகத்தோடு தனிமையில் அமுங்கிச் செத்துப் போகின்றான், அல்லது சாகடிக்கப்படுகின்றான்

நான் எக்லிங்க்ரன் வீதியின் (Eglington Street) பெரு நெருக்குவாரத்தினுள் தலை கவிழ்ந்து நடந்த பொழுது, என் அனைத்து நம்பிக்கைகளும் என்னை விட்டு விலகி ஓடின

நான் ஒரு நிராகரிக்கப்பட்ட அகதி. செத்துப் போன நாயிடமிருக்கும் உண்ணிகள், ஒன்றன் பின் ஒன்றாக மெல்ல உதிர்வதைப் போல, என்னிடம் குடி கொண்டிருந்த அனைத்து ஒட்டு உறவுகளும், நம்பிக்கைகளும், தமிழெனும் கௌரவ அடையாளங்களும் விட்டு விலகிப் போயின

நான்… எல்லாம் விடுபட்ட மனிதன். அவமதிப்புகளும் ஏளனங்களும் காரியுமிழ்தலும் மட்டுமே எஞ்சிக் கிடக்கிற புலம்பெயர் அகதி. 

இயக்க முகாம்களில் சமைத்துக் கொடுத்தது, அவர்களுக்கு பதுங்குகுழி வெட்டிக் கொடுத்தது, அதனாலே இராணுவம் பிடித்தது அல்லது இயக்கத்தால் பிரச்சனை, இப்படிக் கதை பின்னிக் கொண்டு போனால் தான், மேற்குலகம் அகதியாக ஏற்றுக் கொள்ளும் என்றார்கள்

அப்படிக் கதையெழுதியும் நான் நிராகரிகப்பட்டேன். அகதிக் கதை எழுதுவதில் வல்லவனான அன்ரன் சொன்னான். 

“என் கதைகள் எவரிடமும் இதுவரை தோற்றதில்லை. நீ ஒரு அதிஸ்டமிலாதவன்” என

உண்மை தான், யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான், தீவான், மலையகத்தான் என்று கூறு போட்ட நானின்று, முகமிழந்துஅகதியற்ற வெறும் கூறாய் நின்றேன்.

இத்தனைக்குப் பின்னரும் கூட, முதன் முதலாக டிஷ் வாஷிங் எனப்படும் கோப்பை கழுவுதலை ஓர் உணவகத்தில் பெற்றைக் கொடுத்தவன் சந்திரன்

எல்லா நிராகரிப்பினுள்ளும் அந்த வேலைய நான் கனேடிய மண்ணில்   பெற்ற பொழுது, ஆனந்த மோகத்தில் மனம் மத்தளமடித்தது

அந்தக் கழிவு நீருள் அமிழ்ந்து, இரசாயன மருந்துகளில் குளித்து, சூட்டாவியினுள் ஒன்றிக்கலந்து, மூடி திறக்கக் கிளம்பும் வெள்ளைப் புகையினுள் பறக்கிற போது, ஒரு தென்னிந்திய நட்சத்திரமாகி வானம் தொட்டேன்

அப்படி மனம் கிறங்கிய வேளையில் தான், யாரோ சாப்பிட்ட ஒரு எச்சில் இலையை அல்லது தட்டை அல்லது கோப்பையை முதன்முதலாக எடுப்பதில் உள்ள சிரமத்தைப் புரிந்தேன்

“பிறகு அது பழகிப் போயிற்று. நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?” சந்திரன் பெரும் தோரணையோடு இந்தப் பழமொழியை திரும்ப திரும்ப சொல்வான்

அவனைப் ‘பேப்பர் சந்திரன்’ என்றால் தான் இங்கு எல்லாருக்கும் தெரியும். அவன் நிராகரிக்கப்படாத அகதி.

அவனுக்கு இந்த மண்ணில் பேப்பர் இருந்தது. அவனும் முதலில் கோப்பை கழுவி, பின் சலட் போட்டு, பிறகு சமையற்காரனாகி இன்றைக்கு சமையற்கலையில் சகலகலா வித்தகன் அவன்

அதனால் தான் என்னை அவனால் இவ்வேலைக்குச் சிபார்சு செய்ய முடிந்தது. நாப்போலி சோஸ், போலானீஸ், லாசன்யா சோஸ், கனலோனி என்றெல்லாம், தான் செய்கின்ற செய்யத் தெரிந்த உணவு வகைகளைப் பற்றி விடிய விடிய புலம்பியபடியே என்னைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்வான்

அவனும் நானும் ஒன்றாக தங்கிய ஆறு மாதமும் எனக்குச் சிவராத்திரி. அந்த ஆறு மாதத்திற்குள் அவன் எனைப் பலான இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வான்

பலான இடமென்றால் நீங்கள் வேற … நான் சொல்ல வந்தது தமிழ்க் கடைகள், கோவில்கள், பண்பாட்டைக் காக்கும் ஊர்ச்சங்க விழாக்கள், ஆளையாள் போர்த்துகிற விருது விழாக்கள் என்று பல…..வேலை முடிய தினமும் தமிழ் கொண்டாட்டம் தான்

தமிழர் நல்லாத்தான் இருக்கினம், ஈழத்திற்கு அப்புறம் கனடாவில் தான் நம் தமிழ்ச்சனம் அள்ளு கொள்ளையாய் இருக்காம்

அந்த மாதிரி தமிழ்ப் பண்பாடு காக்கிற தெய்வங்கள் அத்தனையையும் இங்க கொண்டு வந்திட்டாங்களாம். மெய்யே… நான் சொன்னது சந்திரனுக்கு வேடிக்கையாய் இருந்தது

“இங்கு எல்லாம் நல்லது போல் தான் இருக்கும், ஆனால் அது நல்லதில்லை. வேலை செய்யாமல் முதலாளிக்கு வாலாட்டும் நடிப்பு ஊழியக்காரனுக்குத் தான் சம்பளம் இங்கு  அதிகம் உனக்குத் தெரியுமோ?” என்றான் சந்திரன்

“நான் இப்ப உன் முதலாளிக்கு என் வாலையாட்டவோ” என்றேன் நான் அவன் சொன்னது புரியாமல் 

“நான் உன்னைச் சொல்லேல்ல, இந்த ஊரையும் எங்கிட ஆட்களின்ர நடைமுறையையும் சொன்னன். அவன் அவனுக்கு எண்டு இஞ்ச ஒவ்வொரு குரூப் இருக்கு. குரூப் எண்டால் மன்றம், சங்கம், ஒன்றியம், கட்சி எண்டு எதை வேண்டுமானாலும் வைச்சுக் கொள்ளலாம்

கேள்வி கேட்காத, அவனவனுக்கு வாலாட்டி சாமரம் வீசுகிற, ஆட்டுக்கால் சூப்பு வச்சுக் கொடுக்கிறவனை, பபிக்கியூ போடுபவனை, முதுகு சொறிபவனை மட்டுமே அந்த மன்றம் விசுவாசம் ஆனவர்கள் என்கின்ற பட்டம் வழங்கி விருதழித்துக் கௌரவிக்கும்

அச்சுப்பிசகில்லாமல் இது மாதிரி ஒரு சங்கத்தை தாயகத்திலும் கட்டுவார்கள். இவர்கள் தாயகத்திற்கு போற போது அது இவர்களை தூக்கி காவடியாடும்

அங்குள்ள கோவில்களின் சுவர்களில் இவர்கள் பெயர் தான் எழுதியிருக்கும். இவர்கள் தர்மவான்கள் கண்டியோ, அதற்கெல்லாம் அவர்களுக்கு ஒரு நிறுவனப்படுத்திய திட்டம் இருக்கிறது, அதிலிருந்து பிறழ்ந்தால் முடிஞ்சுது கதை

அறுவான் தறுதலை துரோகி,  ஒன்றுக்கும் உதவான் என்று  தூக்கிக் கடாசி விடுவார்கள் கண்டியோ?

ஊர் சங்கத்திலிருந்து இந்நாட்டை  ஆளும் அரசியல்  கட்சிகள் வரை  இதற்கு  விதிவிலக்கல்ல.  சிலர் மதம் பிடித்து அலைகின்றார்கள். தெருவில் போகிற போக்கில் சில பேரை அவர்கள் பிடித்துக் கொண்டு போகின்றார்கள்” என சந்திரன் இவ்வூரைப்  நீண்ட பிரசங்கம் செய்ய

“அப்ப இதென்ன ஆட்களை ஆட்கள் பிடிக்கிற  வில்லங்கமான நாடோ சந்திரன்” வெகுளியாய்க் கேட்டேன் நான்

“அப்படிச் சொல்லேலாது, ஆனால் துல்லியமாகப் பார்த்தால் அது அப்படித் தான். சாதி மதம் சார் சமூகப்பாகுபாடுகள், பிரிவினைகள் இன்னும் விட்டு போகேல்ல. அது ஊடுஞ்சுழியுமாய் ஆட்களுக்குள், ஆடைக்குள் என்று ஒழிந்தும் மறைந்தும் அப்பப்ப தேவையான போது வெளிப்படும்

ஆளுக்காள் கெப்பரடிக்கிற, நான் பெரிசு நீ பெரிசு என்று திமிர் கொண்டு அலைகிற கூட்டம், என்றைக்கும் நல்லாய் வாழாது. நாய் வாலை நிமிர்த்தேலுமே?”

“ஓமோம் சந்திரன், போனகிழமை இந்த சந்தியில் நிண்ட கோட்டு சூட்டு போட்ட பொடியன்  என்னையும் ஒரு கூட்டத்திற்கு வரச் சொன்னவன். கொத்து ரொட்டி இலவசம் எண்டவன். நான் தான் பயந்து  போகேல்ல” என்றேன் நான்

“உண்மையில் கடவுளைப் பற்றி, மதம் மாறிப் போறவனுக்கும் தெரியாது. அவனைக் கடவுளை காட்டுறேன் வா எண்டு மதம் மாற்றிக் கொண்டு போகின்றவனுக்கும் தெரியாது

ஆணடவன் ஒருத்தன் இருக்கின்றான், அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் என்று ‘சின்னவி’ முந்தி கள்ளுக் கொட்டிலில் இருந்து பாடக்  கேட்டிருக்கிறன். அன்பு இப்ப எங்க கிடக்கு

ஆளுக்காள் குரோதம் கொண்டு அலைகிற தெருவில் அக்கடவுள் இருக்கத் தான் முடியுமோ? கோவிலுக்குள் நிற்கிற போது எல்லோரும் தருமவான்களாய்த் தான் இருக்கிறான்

வெளிய வந்தால் ‘பாக்கிங்’க்கு அடிபிடி. நீ பெரிசு, நான் பெரிசு எண்டு ஒருத்தன் சிண்டை மற்றவன் பிடித்தாட்டுகின்றான். பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு என்று பாட்டு போட்டால் மட்டும் சரியா?  அது மாதிரி வாழ வேண்டாமா? 

ஒருத்தனோடு ஒருத்தன் போட்டி போட்டு ஆளுக்காள் அலைமோதி பெரிய வீடாய்த் தேடி வாங்கி அதில் எதைக் கொண்டு வந்தோம்? எதைக் கொண்டு போகப் போகின்றோம்? என்று பெரிசாய் கீதோபதேசம் எழுதி தூக்கி மாட்டினால், இந்தப் படம் சொல்வது எதை என்பதை பிரேம் போட்டவனுக்கும் தெரியாது. வீட்டினில் தூக்கிறவனுக்கும் தெரியாது” பெருமூச்சோடு நிறுத்தினான் சந்திரன்

அவன் சொல்றதிலும்  உண்மை இருக்குத் தான் கண்டியளோ …

சோமன் கனடாவிற்கு வந்து, முதன்முதலில் அவன் கண்டு திகைத்து மகிழ்ந்தது இந்த தமிழ்க்கடைகளில்   குவிந்து கிடக்கிற இலவசமான தமிழ்ப் பேப்பர்களை பார்த்துத் தான்

ஆசையோடு அதைப் புரட்டினால் கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, பார்ப்பானும் மந்திரங்களும் ஏமாற்று என்று இருந்தது அடுத்த பக்கத்தில் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

அவனன்றி அணுவும் அசையாது என்று பெரிதாக எழுதி கும்பாவிஷேகத்திற்கும் கோவிலுக்கும் பெரிய விளம்பரம் போட்டிருந்தார்கள். அடுத்த பக்கத்தில் சாத்திரமும் சோதிடமும் ஏமாற்று என்றிருக்கும். மறுபக்கத்தில் காண்டம்,சோதிடம் கைநாடி அவைகளின் விளம்பரமும் விலாசமும் தூள் பறக்கும்.

கமராவோடு அலைகிற எலிச் செல்வராஜன் போற வாற ஆளெலாம் பாய்ஞ்சு பாய்ஞ்சு படம் பிடித்துப் போடுவான். அவன் எதுக்குள்ளாலும் நுழையக் கூடிய ஆள் என்பதால் தான், அவன் எலிச் செல்வராஜன் ஆனானோ?

சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுத்தில்லா படங்கள் பத்திரிகையை நிறைக்கும்.    பத்திரிகை பக்கத்திற்கு பக்கம் முரண்பாடு தான்

எது சரி? எது பிழை? சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்க்கிறது என்பதன் அர்த்தத்தை கனடாவின் ஒரு சில தமிழ்ப் பேப்பரைப் பார்த்த பின்பு தான் புரிந்து கொண்டேன்?

நம்ம   ஊரவர் சங்கரப்பிள்ளை வீட்டிற்கு  ஒருநாள் போகலாமெண்டு போனன். 

அவர் “தன்னை உணர்ந்த தத்துவஞானி, முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பான். பின்னை வினையைக் பிடித்துப் பிசைவான்” என்கின்ற திருமந்திரத்தை பாடிக் கொண்டிருந்தார். 

பக்கத்தில் அவர் பேரப்பிள்ளை  தமிழ் கொப்பியை  கையில் வைத்திருந்தது. தாங்கோ என்று வாங்கிப் பார்த்தேன்.

எருது உயர்திணை மாடு அஃறிணை என்று தமிழ் டீச்சர் எழுதிக் கொடுத்திருந்தா. எனக்குச் சரியான கேந்தி

டீச்சரைக் கண்டு இது சரியோ ரீச்சர் என்று கேட்பமெண்டு சங்கரப்பிள்ளையரும் நானும் போனால், “இருக்கிறதையும் இப்படி கெடுத்துப் போடாதீங்கோ, இவையள் இருக்கிறதால தான் இங்க தமிழ்ச் சமூகமும் தமிழும் இன்னமும் சாகாமல் இருக்கு, அதையும் கெடுத்துப் போடாதீங்கோ” என்கிறார் அந்த பள்ளிக்கூட மேசையில் இருந்த கோட்டுப் போட்ட தமிழ் கனவான்

தமிழ் இங்க இருக்குது என்றால் எப்பிடி இருக்கு? கேள்வி கேட்க ஆசை தான். ஆனால் ஒண்டும் இங்க எடுபடாது

ஏறச் சொன்னால் கழுதைக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்?

கனடாவில தமிழர் வாழ்வு பெரிய இடைஞ்சலாக தான் இருக்குது

சங்கரப்பிள்ளையரும் என்னை மாதிரித் தான் ஒற்றைப் புத்தி.

கனடாவிற்கு வந்த புதிதில் நத்தார் தினத்தையொட்டி நத்தார் பாப்பாவைக் கொண்டு வந்து பெரிய “மோல்”(சந்தை)களுக்குள் வைத்து பந்தா காட்டிப் போட்டோ பிடிக்கிறதை பார்த்திட்டு

பட்டிப் பொங்கலுக்கு ஒரு மாடு ஒன்றைக் கொண்டு, போய் தானும் மோலுக்க  வைத்து எங்கிட பந்தாவைக் காட்டுவம் எண்டு, மோலுக்கு (Mall) மாட்டையும் திருமந்திரப் புத்தகத்தையும் கொண்டு போக, நாலு பக்கமும் போலிஸ் கார் வந்து வழிமறிச்சு மாட்டைப் பறிச்சுக் கொண்டு போனது மட்டுமல்லாமல், அந்தாளையும் புடிச்சு உள்ளுக்க போட்டிட்டாங்களாம்

அவங்கட நத்தார் பாப்பாவுக்கு ஒரு சட்டம், எங்கட மாட்டுக் கடவுளுக்கு ஒரு சட்டமா? எண்டு கேட்கிற அந்தாளின்ர கேள்விக்கு என்னிட்டப் பதில் இல்லை  

பறம்பு மலைப் பாரியின் கொடையை பேத்திக்கு சங்கரப்பிள்ளையர்  விளங்கப்படுத்தப் போய், பேத்திகாரி  கேட்டிருக்கிறாள்.

“மக்கள் வரிப்பணத்தில் வாழ்கின்ற அரசன், தன் அரச வாகனத்தை முல்லைக்கு கொடுக்கலாமா?  தேரை ஏன் அரசன் முல்லைக்கு விட வேண்டும்? இரண்டு காவலரை ஏவி இரண்டு தடி வெட்டி சிறு பந்தல் போட முடியாத கையாலாகாத அரசனா பாரி? மலையுச்சியில் இருக்கிற பறம்பு மலையில தேர் தான் ஓடுமா?” எண்டு கேள்வியளை கனடாவில பிறந்த அந்தப் பிள்ளை சரமாரியாய்க் கேட்டிருக்கு.

சங்கரப்பிள்ளையருக்கு இதற்கெல்லாம் பதில் தெரியாது. ஆனால் “பேத்தி என்ன மாதிரி கேள்வி கேட்கிறாள்” எண்டு என்னிடத்தில் புழுகினார்

நானும்,   “பிள்ளை கேட்ட கேள்வி சரி தானே. இந்த நாட்களில் கூட, எங்கட ஜனாதிபதிகளின் அரச உலங்கு வானூர்திகள் தங்கள் சொந்த பிள்ளைகளை சுமந்து செல்கின்றன. அரசுக்கார்கள் அவர்களின் சொந்தங்களின் கார்களாகி நிற்கின்றன. அதை யாரும் ஏன் என்று கேட்க்கிறனீங்களோ? அல்லது அப்படிக் கேட்கத் தான் முடியுமோ? கனடாவில் பிறந்த பிள்ளை, என்ன மாதிரி சிந்திக்கிறாள் கெட்டிகாரப் பிள்ளை” எண்டன்

சங்கரப்பிள்ளையருக்கு சரியான சந்தோஷம்.

‘துன்பம் கண்டால் துடிக்கிற மனம் பாரிக்கு, தேரில்லா விட்டால் தானே முல்லை படர்வதற்காக நின்றிப்பான்’ எண்டு சிலர் சொல்லுவினம், அதெல்லாம் சும்மா. துன்பம் கண்டால் துடிக்கிற மனம் இங்க யாருக்கு இருக்கு

பிள்ளைகள் பழகற நடனம் சங்கீதம் கலைகள் மற்றும் பண்பாடு காக்கும் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் எல்லாம் மனிசரை மனிசரோட சேர்க்கத் தான் கண்டியளோ

ஆனால் இங்கு ஆளுக்கொரு ஊடகங்கள், தங்களின் பிழைப்பிற்காக மனிசரை வைத்து மனிதர்களை பிரித்தாள்கிற தந்திரத்தில் தாங்கள் பிழைத்துப் போகின்றார்கள்

இந்த வியாபாரப் போட்டியில் சிக்கி, எம் பிள்ளைகள் மண்ணாகிப் போகின்றன. பல பிள்ளைகள் கணணிகளின் முழுநேர ஊழியக்காரராகி, மன நோயாளிகளாகி, பெற்றோர் சகோதரங்களையே எதிரிகளாக்கிப் பகைத்து நிற்கின்றார்கள்

அதைத் தான் இணையங்கள் game வீடியோ விளையாட்டு என்று கற்றுக் கொடுக்கிறது. 

நம் எதிர்காலச் சந்ததிக்கு நாமே குழி வெட்டுகின்றோமா? நமக்கு எதிர்காலச் சந்ததி குழி வெட்டுகின்றதா?  உருவத்தில் நம் எதிர்காலச் சமுகம் துள்ளியோடும் மான்களாகவும் பறக்கிற மயில்களாகவும் இருக்கின்றன தான்

ஆனால் இவர்களின் இதயம், இனிய வசந்தமாக இல்லை. பிஞ்சிலே பழுத்த சோகம் ஒவ்வொரு முகங்களிலும் ஒட்டபட்டு இருக்கின்றது. தவிர அவர்களிடம் எந்தச் சொந்தமும் ஒட்டவில்லை

அவர்களின் மொழி வேறு, கலாச்சாரம் வேறு, அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றும் எமக்கு  குற்றம். நாங்கள் செய்வதெல்லாம் அவர்களுக்குக் குற்றம்

இங்குள்ள புதுத் தலைமுறையின் தலைவிதியைத்  தீர்மானிப்பது  கருணை இரக்கம் அன்பு  இல்லை. பார்க்கிற விழிகளும், கையினில் சுமக்கிற சின்ன சின்ன இலத்திரன் கருவிகளும் தான்

அவற்றால் உலக பயங்கரவாதத்தை நண்பனாக்கவும், ஊர் பேர் தெரியாதவர்களை உத்தமன் எனவும் முடிகிறது

வரலாறுகளை அறியவும் வரலாறுகளைத் திரிவுபடுத்தவும் முடிகின்றது. அத்தனை அபத்தங்களையும் அங்கீகரித்து அனுசரித்துப் போகின்றன முதலாளித்துவ வல்லரசுகள்

பிறகு அவையே தண்டனையும் கொடுக்கின்றன. அவை தான் தட்டியும் கொடுக்கின்றன, மருந்தும் சொல்கின்றன. முள் படர்ந்த சமூகமாக மாறப் போகிறதா இனி வரும் சந்ததி?

இலையுதிர் காலக் காற்றில் உதிர்த்து மண்ணில் சிதறிச் சிதைகிற மஞ்சள்  இலைகளாய், இந்த மண்ணிலே பல  இளைஞர்  யுவதிகள் தனித்தெறியப்பட்ட  தீவாகி விடப்பட்டதை நான் இங்கு காண்கின்றேன்.   

நான் நம்பியிருந்த கோப்பை கழுவும் வேலையும் எனை விட்டுப் போய் விடும் நிலையிருந்தது. சந்திரன் என்னை இவ்வேலையில் சேர்க்கும் போதே சொல்லியிருந்தான் 

“6 மாதத்திற்குள் அவன் மனைவி வந்து விட்டால், அறையை காலி செய்து வேலையையும் விட வேண்டும்” என்று

அவன் மனைவி இந்தக் கிழமை இங்கு வந்து விடுவாள். அதற்குப் பிறகு அவள் தான் டிஷ்வாசர். இந்த உலகம் ஒவ்வொரு உச்ச வேலைக்கும் ஒரு கணக்கு போட்டபடியே இருக்கிறது

மேலதிகாரியே எல்லாக் கட்டத்திலும் கீழுள்ளவனின் தலைவிதியை நிர்ணயிக்கின்றான். அரசிலிருந்து சாதாரண சமயற்கட்டுவரை இதற்கு விதிவிலக்கல்ல

ஒரு குக் தனக்குகீழுள்ள எடுபிடியின் விதியை நிர்ணயிப்பதில்   வியப்பொன்றுமில்லை. நான் சந்திரனால் வேலைக்கு வந்தேன், இப்போது சந்திரனால் வேலையை இழக்கின்றேன். இது தான் விதி

நான் இனி ஒரு வேலைக்கு போக வேண்டும். வேலை இல்லாவிடில் வெறும் பிணம் தான் வெளிநாட்டில் 

வீதி முனையில் திரும்பும் போது தான் அந்த விளம்பரம் என்னை கவர்ந்தது.

‘ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். உடல்வாகு உள்ளவர்கள் அழைக்கப்படுகிறார்கள்’

எனக்கந்த விளம்பரம் முதலில் என்னவென்றே புரியவில்லை. உண்மையில் அந்த விளம்பரம் எதனைச் சொல்ல வருகின்றது என்பதனை அறிய, விளம்பரத்தில் இருந்த விலாசத்திற்கு சென்றேன்

அது வட்ட  வடிவில் இருந்த ஒரு அழகான பாலியல் விடுதி. நிர்வாணங்கள் தெரிய சுழலும் மேசைகளில் ஆண்களும் பெண்களும் சுற்றிவருகிற பீப் சோ (peep show)

இது ஐரோப்பாவில், காணும் இடம் தோறும் இருக்கின்றதாம். விண்ணப்பத்தில் பெயரையெழுதிக் கொடுத்தேன்.

ஆண்குறியின் அங்குலத்தை அளந்தெடுத்தார்கள். இனம்புரியா வெட்கம் என்னைத் தின்றது. எல்லாம் இழந்தவன் எதனைக் கண்டு வெட்கப்படுவான்?

வர்ணஜால  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட   இது, ஒரு கனவுலகின் சொர்க்கமா? என்னால் நம்ப முடியவில்லை  

கண்ணாடித் திரைகளினூடாக உள்ளிருக்கின்ற மேசையில் சுழல்கிற நிர்வாணக் கோலத்தை பார்ப்பதற்கு, ஐந்து டொலர்களை போட வேண்டும் . போட்டால் திரை விலகும். 30 வினாடிகளில் திரை மூடிக் கொள்ளும்

மறுபடியும் திறக்க மறுபடியும் ஐந்து  டொலர்கள். கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கின்ற முதலாளித்துவ யுக்தி. ஆணும் பெண்ணுமாய் இக்காட்சியைக் காண அலை மோதுகிறது கூட்டம்

இக்காட்சி மேலை நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தொழில். கீழை நாடுகளில் அது ஒரு பாவ காரியம் என்கின்றார்கள். 

ஆனால் எம் கோபுர உச்சிகளில் நிர்வாணங்களே சிற்பமும் சிலையும். நான் வியப்பின் உச்சியில் இருந்தேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே பலரும் வந்தார்கள், விண்ணப்பங்களை நிரப்பினார்கள்

வந்தவர்களில் பலரும் அழகானவர்களாகவும், தோற்றத்தில் மல்யுத்த வீரர்களைப்போல் திடகாத்திர  பயில்வான்களாயும்   இருந்தார்கள்

ஒரு ஆசிய    நோஞ்சான் பூனை என அவர்கள் என்னைப் பார்த்து கேலியாகச் சிரிப்பது எனக்கு கேட்கிறது. ஆனாலும் அவர்களோடு மல்லுக்கு போக முடியாது, நான் மௌனமாயிருந்தேன்

இந்தத் தேர்வில் தேர்வு செய்யப்படடால் சொர்க்கம் வேறு உலகில் இல்லை என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்

வர்ண விளக்குகள் எரியும்  நவயுக அரண்மனை  அது என்றும், ஆண்குறி  காட்டும் அவதார புருசன் ஆகி இந்த  அரண்மனையில் இருந்தாலே நாம்  ஒரு செங்கோல் தரித்த  மகராசன் தான் என  பலத்த சிரிப்பொலியோடு அவர்கள் பேசுவது  கேட்கிறது. 

இந்த விடயத்தில் மட்டும் தான், உலகில் வாட்டசாட்டமான ஆப்பிரிக்கர்கள் உயர்ந்து நிற்கின்றார்கள்

வந்தவர்கள் எவரும் என்னை ஒருபொருட்டாக மதிக்கவில்லை.நேரம் கடந்து கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லோரும் போய் விட்டார்கள். என்னை எவரும் கூப்பிடவில்லை 

வரவேற்பறையில் விசாரித்தேன், ஆட்களை தெரிவு செய்து விட்டார்களாம்

அட இதற்கு கூட லாயக்கில்லாதவனா நான்?

நிராகரிப்பு என்பது என்ன எனக்குப் புதிதா? நிராகரிப்புத் தானே மொத்தத்தில் நான். சொல்லப் போனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சரித்திரம் உணடு என்று போதனை செய்யவும், புல்லிற்கும் ஒரு தனித்துவம் உண்டு என்று வாதிடவும் முடியும் தான்

அவனவன் வாழ்க்கையில் அவனவன் தான் ஹீரோ என்று சிந்திக்க சுகமாய் இருக்கு. ஆனால் நடைமுறையில் யாரோ ஒரு ஹீரோ தானே மறுபடி மறுபடி வென்றுதொலைக்கின்றான்

“பகையோ சினமோ நமக்கெதற்கு, சிலநாள் வாழ்வில் வெறுப்பெதற்கு” என்று பாட வேண்டும் போல் இருந்தது. பாடினால் மட்டும் நிராகரிப்பின்மையும், நிம்மதியும் கிட்டி விடுமா?

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அன்பைத் தேடி (சிறுகதை) – ✍ அனுராஜ், போடிநாயக்கனூர்

    பெண்களின் காவலன் (சிறுகதை) – ✍ வசுராஜ், சென்னை