in ,

நினைவுகள் ஓய்வதில்லை (சிறுகதை) – தி .வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இந்த ஒரு வாரமாகவே மனசு சோர்வாக இருந்தது. வழக்கமான உற்சாகம் இல்லை ராகவன்- மங்களா தம்பதிக்கு…

சாய்வு நாற்காலியில் ஓய்வாக படுத்திருந்தார் ராகவன். வேலையெல்லாம் முடித்த மங்களம், கடுமையான முட்டு வலியால் கீழே உட்கார முடியாமல் நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.

“பிள்ளைங்க மூணு பேரும் வெளிநாட்டுல ..யாராவது ஒருத்தர் இங்க இருந்தா கூட நம்மள கவனிச்சுக்குவாங்க. இப்பப் பாருங்க, இந்த வீட்டை விட்டுட்டு முதியோர் ஓய்வு இல்லத்துக்கு போக வேண்டியதாயிருக்கு.”

“மங்களம்.. புலம்பறதுனால எதுவும் மாறிடப் போறதில்ல. நம்மளுக்கும் இயலாமை… தனியா சமாளிக்க முடியல..பிள்ளைகளாலும் அடிக்கடி வந்து போக முடியல …இப்ப அவங்க பார்த்திருக்கிறது சகல வசதியும் உள்ள இடம் தான். அங்க போனா நம்மள ஒத்த நாலு பேர் சிநேகிதங்களாக கிடைப்பாங்க ..”

“உங்கள மாதிரி என்னால விட்டாத்தியா பேச முடியாது. இந்த வீடு பாத்து பாத்து கட்டினது .இதன் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு கதை சொல்லும். நாம வாழ்க்கைய ஆரம்பிச்சது.. மாமா அத்தை நம்ம கூட இருந்தது.. பிள்ளைகள் பிறந்து, வளர்ந்தது…. அவங்க கல்யாணமாகி, பேரப்பிள்ளைகள் வந்து போக இருந்தது… ஒரு பெரிய சகாப்தம் இந்த வீடு”

“என்ன ரெண்டு பேரும் பழைய ஞாபகங்கள்ல மூழ்கியாச்சா.”

“சரவணனா வா..வா.. ” 

சரவணன் அவர்கள் மூத்த பிள்ளை செந்தில்நாதனின் நெருங்கிய நண்பன். பிள்ளை மாதிரி கூட இருந்து கவனித்துக் கொண்டிருந்தான். இப்போதும் இவர்கள் நல்ல சௌரியமான முதியோர் ஓய்வு இல்லத்தில் தங்க எல்லா ஏற்பாடும் செய்து கொண்டிருந்தான்.

“சரவணா உங்கம்மா தான் புலம்பிக்கிட்டே இருக்கா”

“நீயே சொல்லு சரவணா.. அவ்வளவு ஈஸியா இந்த வீட்டோட ஞாபகங்களை, மறக்க முடியுமா? இத பாரு இந்த உத்தரத்துல தொங்கற கொக்கி.. இதுல தான் செந்திலும், கார்த்தியும் சேலையை தொட்டில் கட்டி ரொம்ப நாள் விளையாடுவாங்க. ஒருநாள் சேலை அறுந்து டம்முன்னு கீழ விழுந்தாங்க…அதுக்கப்புறம் தான் அந்த பழக்கத்தை விட்டாங்க..அந்த முக்கு ஸ்டாண்ட்ல இருக்கிற காந்தி பொம்மை பள்ளிக்கூடத்துல பேச்சு போட்டியில, சின்னவன் பரிசு வாங்கினது .”

“பழசப் பேசி என்ன செய்ய? பரணியில் இருக்கிற சாமானை இறக்கிடுவோம்.. “

“அம்மா நீங்க உக்காருங்க. ஒரு பையனை கூட்டிட்டு வந்திருக்கேன். நாங்க ரெண்டு பேரும் இறக்கிடறோம்…” 

சரவணன், மேலேயிருந்து ஒவ்வொரு சாமானாக கீழே கொடுக்க அந்த பையன் வாங்கி அறையின் ஓரத்தில் அடுக்கினான் .

“இதோ இந்த கிடாரமும், கொப்பரையும் ..என் மாமியாருக்கு அவங்க அம்மா வீட்டு சீரு..உளியா இருக்கும்..சரவணா இந்த நடைவண்டிய பாரு …கடைக்குட்டி நடராசு இந்த வண்டிய தள்ளிகிட்டு வீடு முழுக்க சுத்திகிட்டு வருவான். ஆசாரி வச்சு அவன் தாத்தா செஞ்சது. இந்த குட்டி சைக்கிள …செந்தில் ஓட்டுவான் பின்னால இருக்குற சீட்டுல உட்கார கார்த்தியும், நடராசும் போட்டி போடுவாங்க…அடிச்சு உருளுவாங்க.

மேலே இருந்த பித்தளை உருளியை இறக்கி கீழே வைத்து அப்பாடா என்று நிமிர்ந்தார்கள்..

“ஏங்க உங்களுக்கு நினைவிருக்கா? உங்க அம்மா நாலு லிட்டர் பால், பால் ஊத்துற முத்தம்மாச்சிகிட்ட சொல்லி கொண்டாற சொல்லுவாங்க. அதுக்கு தகுந்த வெல்லம், தேங்காய திருவச் சொல்லி, பாசிப் பயறை வறுத்து, ஆட்டுரல்ல அரைச்சு, திரட்டுப்பால் கிண்டுவாங்க. வீடே மணக்கும்”

“ஆமாம் நல்ல நினைவிருக்கு கரண்டிய வழிச்சு வழிச்சு சாப்பிடுவேன்” என்ற ராகவன், “அப்பா சரவணா… அந்த மர ஸ்டாண்டை எடுத்து தனியா வை. ராமாயணம், மகாபாரதத்த கையில வச்சு படிக்க முடியாது. அதுக்காக அந்த ஸ்டாண்ட். இது எங்க தாத்தா உபயோகிச்சது. ஏண்டி மங்களா.. இந்த பூச சாமான்களை எல்லாம் பரணியில போட்டு வச்சிருக்க.. இந்த உத்தரணி, மணி, தூபக்கால் எல்லாம் நம்ம குடும்பத்தில வழிவழியா பூச பண்ண உபயோகப்படுத்தியது. அத தனியா ஒரு பெட்டியில எடுத்து வை. “

“அப்பா.. இல்லத்துலயே உங்களுக்கு தேவையானதெல்லாம் இருக்கும். அதனால துணிமணி, மருந்து, மாத்திரை, ரொம்ப தேவைப்படுற ஒன்னு ரெண்டு சாமான் தவிர வேறு எதையும் கொண்டு போனால் அங்க வைக்க இடமிருக்காது”

“சரவணா… நாளைக்கு பிள்ளைங்க வரும்போது இந்த சாமான்கள் அவங்களுக்கு எங்களுடைய வாழ்க்கைய ஞாபகப்படுத்தும். செந்தில் இந்த வீட்டை வாடகைக்கு கொடுக்கிறதுல எனக்கு இஷ்டமில்ல .சரி பிள்ளைங்க முடிவு பண்ணிட்டாங்க. இனி வெந்ததை தின்போம் விதி வந்தா போவோம்..எதுக்கு இந்த ஆசாபாசமெல்லாம்” என்றார் வேதனையோடு ராகவன் ..

அதற்கு மேல் இருவரும் ஒன்றும் பேசவில்லை..சரவணனுக்கு அவர்கள் மௌனமே மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. அவர்களை அந்த மாதத்திலேயே கொண்டு போய் ஓய்வு இல்லத்தில் சரவணன்விட்டு வந்தான்.

வெளிநாட்டிலிருந்து செந்தில் மற்றும் அவன் தம்பிகள் குரூப் காலில் வர, சரவணன் எல்லா விஷயங்களையும் கூறினான். 

“சரவணா அவங்க வயசானவங்க இப்படித்தான் சென்டிமென்ட் பார்த்துகிட்டு எதயும் கழிக்க விட மாட்டாங்க …நீ எல்லாத்தையும் விலைக்குப் போட்டுடு …”

“நீங்க அங்க இருந்துட்டு பேசுறது எளிதப்பா.. எனக்கு அப்பா அம்மாவின் வாடிய முகம் மனச விட்டுப் போக மாட்டேங்குது. இந்த சாமான்கள் எல்லாம் உயிரற்றவையில்ல, அவங்களப் பொறுத்தவரை ஒவ்வொன்றுக்கும் ஜீவன் இருக்குது .அந்த ஜீவன் அவர்களுடைய ஜீவனுடன் கலந்திருக்குது. அத நாம பிரிக்கிறது தப்பு. அதனால அந்த சாமான்களின் மதிப்பை உங்களுக்கு பணமா அனுப்பிடறேன். இந்த சாமான்கள் எல்லாத்தையும் என் வீட்டுல ஒரு ரூம்ல போட்டு வச்சிருக்கேன். அப்பா அம்மா ஆயுசு வரைக்கும். அவங்களும் சாமான்கள் பத்திரமா இருக்குன்னு சந்தோஷப்படுவாங்க. அவர்களுடைய உணர்வுகளை நாம மதிக்கலைன்னாலும் மிதிக்க கூடாது” என்ற சரவணன், மேலே பேச பிடிக்காமல் போனை வைத்தான்.

விக்கித்துப் போனார்கள் அண்ணன் தம்பி மூவரும்.. நிதர்சனமான அந்த உண்மை அவர்களை சுடத்தான் செய்தது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெண்ணியம் (சிறுகதை) – ச. பூங்குழலி, தஞ்சாவூர் மாவட்டம்.

    முள் பாதை (அத்தியாயம் 2) – பாலாஜி ராம்