in

ஊருக்கு ஒரே அடுப்பு… (ரோட்டோருஆ பயணம் – பகுதி 2 ) – எழுதியவர் : துளசி கோபால்

ஊருக்கு ஒரே அடுப்பு... (நியூசிலாந்து பயணம் - பகுதி 2)

வொரிகளின்  கிராமம் ஒண்ணு  உங்கள்  பார்வைக்கு இருக்கு இங்கே. உண்மையைச் சொன்னால், இது ஒண்ணு தான் காட்சிக்கு வச்சுருக்கும் கிராமம்! The only Maori Living Village

இப்போதைய நிலையில்  வெள்ளையரும் மவொரிகளும் ஒருவிதக் கலப்பினமாத்தான் ஆகிட்டாங்க.  நூறு சதமான மவொரி ரத்தம் (இப்படி ரத்தத்துலே  வித்தியாசம் இருக்கா என்ன ?) ரொம்ப அதிகம் இல்லை. மூணு தலைமுறைக்கு முன்பு வரை இருந்த மவொரி மக்கள் எண்ணிக்கை, இப்ப குறைஞ்சுருக்கு

வெள்ளையர்கள்  இங்கே குடியேறி ஒரு 170 வருஷம் தான் ஆச்சு.  இங்கிலாந்து மக்கள் 753 பேர்  சுமார் 100 நாட்கள்,  நாலு கப்பல்களில் பயணம் செஞ்சு 1850ஆம்  ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு இங்கே வந்து சேர்ந்தாங்க.  இதைப் பற்றி விரிவாகவே நியூஸிலாந்து என்னும் புத்தகத்தில் எழுதி இருக்கேன்.  சந்தர்ப்பம் கிடைச்சால்  வாங்கி வாசிக்கலாம் (சும்மா ஒரு சுய விளம்பரம்தான்……ஹிஹி  )

நியூஸியின் சுற்றுலாத்துறை ரொம்பவே நல்ல மாதிரி செயல்படுது. அருமையான சாலைகளும், பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களுக்குப் பாதுகாப்பாய்ப் போய் வரும் ஏற்பாடுகளும், முக்கியமா  தகவல் சொல்லும் விவரங்களுமா… information is wealth  என்பது ரொம்பச் சரி, இல்லையோ?

தகவல்கள் அடங்கிய Brochures எல்லா இடங்களிலும்  வச்சுருப்பாங்க.  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விஸிட்டர்ஸ் சென்டர் இருக்கு.  அங்கே போயும் தகவல்களைக் கேட்டுக்கலாம்.

எல்லாத் தகவல்களும்  அடங்கிய புத்தகங்கள்,  நகரின் வரைபடம், Brochures எல்லாமே இலவசம்தான்!  முக்கியமா இங்க சொல்ல வேண்டியது, நியூஸியின் சாலை விதிகள். நம்ம ட்ரைவிங் சரி இல்லைன்னா, ‘போறது’ நாம் மட்டும் இல்லையே….. ஒண்ணும் செய்யாத அப்பாவிக்கு ஆபத்து ஏற்படுத்திடக் கூடாது பாருங்க

ஒரு ஊருக்குள் போனதும், அங்கிருக்கும் எல்லா சமாச்சாரங்களையும் சேகரிச்சுக்கிட்டு, நிதானமா ஒவ்வொன்னையும் பார்த்து, நமக்கு விருப்பம் உள்ளவைகளைத் தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் போய் வரலாம். நேரமும், காசும்  கையிருப்பா  வச்சுக்கணும் 🙂

காலையில் கடமைகள் முடிச்சு ரெடியாகி காஃபி மட்டும் அறையில் தயாரிச்சுக்கிட்டு, நேற்று வாங்கி வந்தவைகளை வச்சுக் காலை  ப்ரேக்ஃபாஸ்டை  உள்ளே தள்ளிட்டு, நம்ம ஏரிக்கரை வரை ஒரு நடை.  ஏகப்பட்ட ஸீகல்ஸ் (Seagulls) வரிசை கட்டி உக்கார்ந்து நமக்கு ஹலோ சொன்னது அருமை 🙂

ஒரு எட்டேகால் மணிக்குக் கிளம்பி மவொரி கிராமத்துக்குப் போனோம், எட்டரை கிமீ தூரம்.  கார் பார்க்கில் வண்டியை நிறுத்தும் போதே  ஒரே புகை மூட்டம்.  எதாவது எரியுதா என்ன ?   சுடுகாடா இருக்குமோனு தோணுச்சு….. ஒரே  முட்டை நாத்தம் வேற… அதுவும் கெட்ட முட்டை…..   உண்மையில் ஊருக்குள்ளும் இந்த ‘மணம்’  லேசா இருக்கும் தான். பயப்பட வேண்டியதில்லை. கந்தகமணம்தான்…..

கிராமத்துக்குள்ளே போய்ப் பார்க்க  ஒரு கட்டணம் உண்டு. டிக்கெட் வாங்கும் போதே , உள்ளே என்ன ஏது எப்போ எனும் விவரங்கள் அடங்கிய வரைபடத்தைக் கொடுத்துருவாங்க.  ஒன்பது மணிக்கு ஒரு வழிகாட்டி நம்மோடு வருவார்,  கைடட் டூர் அது

இன்னும் காமணி (கால் மணி நேரம்) இருக்குனு  ச்சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்.  வழிகாட்டிகளுக்கு இங்கே ஏகப்பட்ட மரியாதை.  சுற்றுலாப்பயணிகள்  வர ஆரம்பித்த  காலங்களில்  வழிகாட்டிகளாக இருந்தவர்களின் படங்கள், விவரங்கள் எல்லாம்  பெரிய அளவில் வச்சுருக்காங்க.

மற்ற நாடுகளின்  (முக்கியமா இங்கிலாந்து நாட்டின் ) அரசகுடும்பங்கள் வந்து போயிருக்காங்க.  (அதானே…. அவுங்க ஆட்சிக்குட்பட்ட நாட்டுக்கு வருகை தரும்போது,  குடிமக்களின் நலம் விசாரிப்பது முக்கியமில்லையா?)

இந்த கிராமத்துக்குண்டான மவொரி பெயர்  ரொம்பவே நீளம். Te Whakarewarewatanga O Te Ope Taua A Wahiao  சொல்லிப் பார்க்க முடியலை. சுருக்கமாச் சொன்னா  Whakarewarewa !  ஆஹா….  வாரே வா!  வாகாரேவரேவா  !

பொதுவாவே இந்த நாட்டுக்கும், ஊர்களுக்கும், முக்கிய இடங்களுக்கும் மவொரி பெயர்கள்  இருக்கு.  வெள்ளையர் வந்த பின் அவுங்க வசதிக்காக அவுங்க பெயர் வச்சுக்கிட்டாங்க. இவுங்களுக்குக் கற்பனை வளம் கொஞ்சம் குறைவுன்றதாலோ என்னவோ,  அவுங்க நாடுகளில் பழக்கப்பட்டு இருந்த பெயர்களோடு ஒரு நியூ சேர்த்துக்கிட்டாங்க. Zealand, Brighton, Plymouth, Haven, Castle இப்படி …..

அப்புறம்  1920ல்  மவொரிப் பெயர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும் என்ற ஒப்பந்தப்படி  சில பல ஊர்களுக்கும் இடங்களுக்கும்  ரெட்டைப் பெயர்னு ஆகி இருக்கு. நியூஸிலாந்து என்னும் நாட்டுக்கு மவொரிப் பெயர் Aotearoa.  எங்க ஊர் க்றைஸ்ட்சர்ச் =  Ōtautahi. முழுப்பெயர் சொன்னா விடிஞ்சுரும்…   Te Whenua o Te Potiki-Tautahi.

நான்  டூர் ஆரம்பிக்கும் இடத்தில் இருந்த செல்லத்தைத் தடவிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.  அதுவும் வாகா தலையைக் காமிச்சுக்கிட்டு இருந்தது.

சரியா ஒன்பது மணிக்கு வழிகாட்டி வந்து, டூர் ஆரம்பிக்கும் இடத்தில் நின்னார். மவொரி இனத்தவர். இன்றைக்கு அவர் கூடப் போய் சுத்திப் பார்க்க நல்ல கூட்டம்தான். எங்களையெல்லாம் வரவேற்றதும் மவொரி கலாச்சாரத்தைப் பற்றி நாலு வார்த்தை சொல்லிட்டு, நேரில் பார்க்கலாம் வாங்கனு  உள்ளே கூட்டிப் போனார்.

லேசான புகை மண்டலமா அங்கங்கே… ஆதிகாலத்து மக்கள் வசித்த குடில்கள், ரொம்பவே சின்னது.  கீழே குனிஞ்சு தவழ்ந்துதான் போகணும்.

ஆனால்  வெள்ளையர் வருகைக்குப்பின்  கிராமங்களும் கூட மாறித்தான் போயிருக்கு.  இப்ப இருக்கும் வீடுகள் ஒரு நூற்றியிருபது வருஷப் பழசுகளே.  இந்த கிராமத்தை சுற்றுலாத்துறை ஏற்றெடுத்த பிறகு வழித்தடம், அங்கங்கே பாதுகாப்புக்கானத் தடுப்புகள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க.  பயணிகள் வந்து பார்த்துட்டுப் போறதெல்லாம் ஆரம்பிச்சே  நூறு வருஷத்துக்கும் மேலே ஆகியிருக்கு.

மராய் என்னும் சமூகக்கூடம், மவொரிகளுக்கு முக்கியமானது. நல்லது, கெட்டது எல்லாம் அங்கேதான்.  பொதுவா எல்லா ஊர்களிலும் ஒரு மராய் இருக்கு. இங்கே எங்கூரிலும் ரெண்டு இடங்களில் உண்டு.  இங்கேயும் விஸிட்ட்டர்ஸ் போய்ப் பார்க்கலாம். அங்கே போனால் எப்படி நடந்துக்கணும் என்பதற்குக்கூட சில நியமங்கள் கட்டுப்பாடெல்லாம் உண்டு.  விருப்பம் இருந்தால் ஒரு நாள் அங்கே தங்கிட்டுக்கூட வரலாம்.

மவொரி இனத்துக்குத் தனி மதம் இல்லை.  நம்ம இந்தியர்களுக்கும் இவர்களுக்கும்  சாமி விஷயத்திலும் கலாச்சாரம் பழக்க வழக்கங்களிலும்  சில பல ஒற்றுமைகள் உண்டு. பூமியே தாய், வானமே தகப்பன், அக்னி,  மழை, காற்று, காடு, மலைன்னு எல்லாத்துக்கும் கடவுள்கள் இருக்காங்க

விருந்தினர் உபசரிப்பு, குழந்தை பிறந்தவுடன் அதுக்கொரு விழா, யாராவது ‘சாமிகிட்டே போயிட்டால்’ கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வச்சு அழறதுனு …..  ஆரம்பத்துலே இது தெரிஞ்சதும் எனக்கு ரொம்பவே ஆச்சரியமாப் போயிருச்சு !. நானும் கூட நெத்தியில்  பொட்டு வைக்கலைன்னா…. ஏறக்கொறைய மவொரி மாதிரி தான் இருக்கேனோனு எனக்குத் தோணும்

ஒரு பதினாலு மவொரி கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துருக்கேன்.  அதுலேகூட நம்ம கதைகளின் சாயல் உண்டு. என்ன ஒண்ணு …. கதை மாந்தர்கள் பெயர் தான்  நமக்கு ஒரே கடமுடா….

முதலில் கிராமத்து மராய் போய்ப் பார்த்தோம்.  உள்ளே ஒரு பெரிய ஹால் மரவேலைப்பாடுகளுடன் ( மவொரி டிஸைன் மரச் செதுக்கல்கள்). மராய்கள் எல்லாம்  வெளியே பார்க்க ஏறக்கொறைய ஒண்ணுபோல் தான் இருக்குமே தவிர, உள்ளே ஒவ்வொன்னும் ஒரு வித சிற்பச் செதுக்கல்களும், பின்னிய பாய்களுமா அட்டகாசமா இருக்கும்

மரச் சிற்பங்கள் , செதுக்கல்கள்  எல்லாம் மவொரிகளின் கலாச்சாரத்தில் ரொம்பவே புனிதமானவை.  மராய் கட்டடத்தின் முகப்பில் உச்சியில் ஒரு மனித உருவம் செதுக்கப்பட்டுருக்கும்.  Tekoteko  என்று பெயர்.  நம் மூதாதையர் இவர். இவர்கள்  நம்மைக் காத்து வழிநடத்துவார்கள் , நாம் எப்பவும் அவர்கள் கண்காணிப்பில்தான் இருப்போம் என்ற  நம்பிக்கை மவொரிகளுக்கு உண்டு. (சாமி பார்த்துக்கிட்டே இருக்கார் ! )

வானவில் போல வண்ணம் சிந்தும் பாவா சிப்பிகள், இங்கே நியூஸியில் கிடைக்கும் ஒரு வித பச்சைக்கல் (‘ஜேடு’ வகையில் ஒண்ணு) இவைகளை கண்களுக்கு வச்சு அலங்கரிப்பாங்க.

வெளியே கொஞ்ச தூரத்துலே ஒரு மாடத்தில் தொங்கும் மணியும் பக்கத்துலே ஒரு கொடிமரம் மாதிரி ஒரு தூணும்! மாடத்தின் தலையில் ஒரு சிலுவை.  வெள்ளையர் கொண்டு வந்த மதம், இவர்கள் வாழ்க்கைக்குள்ளும் புகுந்ததின் அடையாளம்.

நடந்து போகும் பாதைகளின் ஓரங்களில் இருக்கும்  வேலிக் கட்டைகளில் எல்லாம் அங்கங்கே  மூதாதையரின் மனித உருவங்கள் ! மொத்த இடமும் அவர்கள் கண்காணிப்பில் !   நாம் வணக்கம் சொல்றதைப் போல் மவொரிகள் வரவேற்புனு சொன்னால்  மூக்கோடு மூக்கை லேசா உரசிக்கறதுதான்.   இதுக்கு  நீயும் நானும் ஒண்ணு என்ற பொருள்.  நானும்  மூதாதையர்களுக்கு அவுங்க முறையில் வணக்கம் சொல்லிக்கிட்டேன் 🙂

கிராமம் முழுசும் புகையுதுனு சொன்னேன்ல… இது நிலத்துக்கடியில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் இருந்து வரும் புகையும் சூடும்தான். சில பல இடங்களில் நிலத்தில் இருந்து வரும் சூட்டை  வச்சுச் சமையல் (!) நடக்குது. ஊரையும் வீட்டையும் சூடு படுத்திக்கவும் இதைப் பயன்படுத்திக்கிறாங்க

தரையில் இருக்கும் வட்ட இரும்பு தகட்டின்  துளைகள் வழியா இதமான சூடு !  நிறைய வர்ற இடங்களில்  சமையல்.  ஒரு மரப்பொட்டியைத் திறந்து காமிச்சார் கைடு. உள்ளே நிறைய விதவிதமான பொதிகள்.  குழு வாழ்க்கை என்றபடியால்  பொது அடுப்பு. அவரவர் குடும்பத்துக்கான சாப்பாடு சமாச்சாரங்களை  பார்ஸல் போலப் பொதிஞ்சு இந்த மரப்பொட்டிக்குள் வச்சுட்டால்  அது  ‘அவன்’  போல வேக வச்சுரும்.  பொட்டிக்குள்ளே உருளைக் கற்களைப் பரப்பி வச்சுருக்காங்க. அது சூடாகிக்கிட்டே சூட்டோடு சூட்டாச் ச்சூட்டைத் தக்க வச்சுக்குது !

ரொம்பவே சூடான இடங்களை எல்லாம், சனங்களின் பாதுகாப்புக்காக வேலித்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. நெருப்பில்லாமப் புகையுமானு  கேட்டா …. புகையுதே  இங்கே !

தண்ணீர் தேங்கி இருக்கும் குட்டைகள் அதிகம். எல்லாம் கொதிக்கிற  வெந்நீர்தான்.  இதுலேயும் கிழங்கு வகைகள் , மக்காச் சோளம் எல்லாம் ஒரு கம்பிக்கூடையில் வச்சுத் தண்ணிக்குள்ளே இறக்கி வச்சால்  போதும்.  கொஞ்ச நேரத்துலே வெந்துருது.  ஒருத்தர் அங்கே நமக்கு டெமோ காமிக்கிறார். அங்கே விற்பனைக்கும் வச்சுருக்கார்.  அந்தத் தண்ணீரில் கந்தக வாசனை இருக்காது? ஒருவேளை அவுங்களுக்கு அந்த  மணம், ருசி பழகிப் போயிருக்கும். அவ்வளவு பராக்கிரமம் காமிக்க என்னால் முடியுமா என்ன?  ச்சும்மாப் பார்த்து வச்சுக்கிட்டேன் 🙂

நம்ம பத்ரிநாத்  பக்கங்களில் கூட இப்படி வெந்நீர் ஊற்றுகள் இருக்கு.   அந்தக் காலத்தில் அங்கே  அரிசி, பருப்பையெல்லாம் துணிகளில் மூட்டை கட்டி, அந்த வெந்நீருக்குள் இறக்கி வச்சுட்டுச் சோறா சமைச்சுக்கறாங்கனு, ஒரு 80 வருஷங்களுக்கு முன்னே வட இந்திய யாத்திரை போய் வந்த எங்க சித்தி, கதை கதையாச் சொன்னது இப்போ ஞாபகத்துக்கு வருது !

குளிக்கறதுக்கான பொது இடங்களில் இந்த வெந்நீரைத் தொட்டிகளில் பாய்ச்சி, பச்சைத் தண்ணீர் கலக்கி விளாவியும் வச்சுருக்காங்க. வெவ்வேற சூட்டில் தொட்டிகள். அவரவர் தாங்கும் சூடு அவரவருக்கு !

கொஞ்ச தூரத்துலே  வெந்நீர் சீறிபாயும்  குளம் ஒண்ணு ( Pohutu Geyser) இருக்கு.  புகையும் நீருமா  பொங்கிக்கிட்டே இருந்தாலும் அப்பப்ப சீறிப்பாயும் வெந்நீர் 100 அடி உசரத்துக்குப் போகுது. பாதுகாப்புக் கருதி, ரொம்பப் பக்கத்துலே போய்ப் பார்க்க முடியாது. பயங்கர சூடுனு சொன்னார் கைடு.

அங்கங்கே முன்னோர்களின் சமாதிகள் வேற …..    அவ்வளவா சூடு இல்லாத  ஏரிப் பகுதிகளும், காடுமா இருக்குமிடங்களைப் போய் பார்க்க நடைபாதைகளும் அங்கங்கே தகவல் குறிப்புகளுமா இருப்பதால், பயணிகள் கஷ்டமில்லாமப் போய்ப் பார்க்க முடியுது.

வெள்ளையர் வருகைக்குப்பின் அங்கங்கே அவுங்க வசதிக்குச் சாமி கும்பிட சர்ச்  கட்டிக்கிட்டாங்க இல்லையா….  அதைப் பார்த்தோ என்னவோ….   மதம் மாறிய/ மாற்றப்பட்ட மவொரிகளும் கிராமத்துலே சின்னதா  ரெண்டு சர்ச் கட்டி வச்சுருக்காங்க.

பொதுவா மவொரிகளுக்கு  மதம் இல்லை.   நம்ம நாட்டு சநாதன தர்மம் போலவே  இது ஒரு வாழ்க்கை முறைதான்
சுத்திப் பார்த்த்துக்கிட்டே இன்னொரு பெரிய கொட்டாய்க்குள்  போனோம்.  இங்கே தினமும் ரெண்டு முறை,  கலைநிகழ்ச்சி ஷோ ஒண்ணு  நடத்தறாங்க.  காலை 11.15க்கும்  மதியம் 2 மணிக்கும்.  ஹாக்கா  என்ற வரவேற்பும், மவொரி பாட்டுகளும், நடனங்களுமா  ஒரு அரை மணி நேரம்.

கண்களை உருட்டி முழிச்சுப் பார்த்து நாக்கை நீட்டி வச்சுக்கறதுகூட ஒரு வகையான வரவேற்பு தான்.  நானும் அவுங்க முறையில் வரவேற்றேன் 🙂

சுமார் ரெண்டே முக்கால் மணிநேர கைடட்  டூர் இதோடு முடிஞ்சுருது. இனி நம்ம விருப்பம் போல் ஊரைச் சுத்திப் பார்த்துக்கலாம். பயணிகளுக்கான தீனிக்கடைகள், நினைவுப் பொருள் சமாச்சாரங்கள் விற்கும் கடைகள் ரெண்டு இருக்கு ஒரு பக்கம்

இன்னொரு இடத்துலே இங்கே பொதுவா வரும் வெளிநாட்டுச்  சுற்றுலாப் பயணிகளின் தாய் நாட்டுக் கொடிகள் தொங்க விட்டுருக்காங்க. அதில் நம்ம இந்தியக்கொடி பார்த்ததும், மனசுக்கு மகிழ்ச்சியா இருந்ததுனு  தனியாச் சொல்ல வேணாம் தானே ?

நாங்க  இன்னும் ஒரு மணி நேரம் சுத்திப் பார்த்தோம்.  அதான் இடமெல்லாம் தெரிஞ்சு போச்சுல்லே!   சில இடங்களில்  மண்குழம்பு கொதிக்கும் இடங்கள் இருக்கு.  லேசான சூடுனு நினைக்கிறேன், புகை ஒண்ணும் இல்லை. ஆனால் சட்டியில் குழம்பு கொதிக்கறதைப் போல ‘ப்ளக் ப்ளக்’ன்னு அங்கொன்னும் இங்கொன்னுமா குமிழ்கள் வந்து  உடைஞ்சுக்கிட்டு இருக்கு.

மவொரி மக்கள் கலாச்சாரம் , பண்பாடு, குடும்ப உறவு, சமூக உணர்வு  எல்லாம் ரொம்பவே  அருமையானதுனு கொஞ்சம் ‘உள்ளே’ போய்ப் பார்த்தால் புரிஞ்சுருது.  இதுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் விதம் இப்படி ஒரு கிராமத்தை நமக்காக வச்சு ஆதரிக்கும் சுற்றுலாத்துறையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

நாளின் பாதி, நல்லபடியாக முடிஞ்சது. இனி அடுத்த பாதிநாளைப் அடுத்த வாரம் பாக்கலாம். நன்றி

தொடரும் 🙂

இந்த தொடரின் முதல் பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. புதிய தகவல்கள். அரிய தகவல்கள். இது வரை கேட்டதில்லை. உங்கள் மூலம் பார்த்துத் தெரிந்து கொண்டேன். நன்றி.

கேயாஸ் தியரியும் தங்கமணியும்…🤣😂😃❤

காதலே என் காதலே ❤ (சிறுகதைத் தொகுப்பு) – சஹானா கோவிந்த்