Number 1 Place in “Amazon Best Sellers” List for Tamil Language eBooks on August 22, 2020
சட்டென அபர்ணாவுக்கு விழிப்பு வர, எதிர்பக்க சுவரில் இருந்த டிஜிட்டல் கடிகாரம், அதிகாலை மூன்று மணி எனக் காட்டியதை, ஆச்சர்யத்துடன் பார்த்தாள்
“இது நான் எப்பவும் எழுந்துக்கற டைமுக்கு ரெம்பவே சீக்கரம் தான். ஆனா இன்னைக்கி அலாரம் கூட இல்லாம எழுந்தாச்சு” என தனக்கு தானே பெருமையாய் தட்டிக் கொடுத்துக் கொண்டாள் அபர்ணா
“தினமும் அலாரம் அடிச்ச பின்னாடியும் கூட, அபி நேரமாச்சு அபி எழுந்திருனு பத்து வாட்டி கார்த்திக் கத்தினா தான் எழுந்திருப்பேன். இன்னக்கி அதிசயம் தான். கார்த்திக் கண்டிப்பா கிண்டல் பண்ணப் போறார்” என கணவன் பற்றிய நினைவில், வழக்கம் போல் அபர்ணாவின் முகம் மலர்ந்தது
இந்த நாள், தன் வாழ்வில் நிச்சயம் மறக்க முடியாத ஒரு நினைவை உருவாக்கப் போகும் நாள். அதை எதிர் கொள்ளும் ஆர்வம் தான், தன் புலன்களை விழிக்கச் செய்தன போலும் என நினைத்தாள் அபர்ணா
ஜன்னலில் கசிந்த நிலவொளியின் அரை வெளிச்சத்தில் பிள்ளைகளையும் கணவனையும் ரசித்தவள், “இந்த நிமிடம் இந்த நிமிடம், இப்படியே உறையாதா…” என்ற பாடலை மனதிற்குள் பாடினாள்
கார்த்திக்கு இது மிகவும் பிடித்த பாடல் என உடனே தோன்றியது
கண் விழித்த பின்னும், ஏனோ அபர்ணாவுக்கு படுக்கையை விட்டு எழ மனம் வரவில்லை
மெல்லிய தூறலின் லயமும், அதற்கேற்ப கீச் கீச்சென குருவிகள் இசைக்கும் ஸ்வரமும் இணைந்து, இனிய கானம் இசைத்தது இயற்கை
“இப்படியே ரசிச்சுட்டு இருந்தா நாள் பூரா ரசிக்கலாம்” என்றபடியே கடிகாரத்தை பார்த்தவள், “ஐயோ அதுக்குள்ள மூணே கால் ஆயிடுச்சா?” என துள்ளி எழுந்தாள்
குளியல் முடிந்து அபர்ணா அறைக்குள் வர, கடிகாரம் 3.40 என்றது
மெல்லிய கொட்டாவியுடன், அரைக்கண் திறந்து பார்த்த கார்த்திக், மனைவியின் நடமாட்டம் உணர்ந்து, ஆச்சர்ய பாவனையுடன் எழுந்து அமர்ந்தான்
“ஏய் அபி… நீயா இது? இது கனவொன்னும் இல்லையே” என கேலியில் இறங்க
“ஆரம்பிச்சுட்டீங்களா? நெனச்சேன் இப்படி சொல்லுவீங்கனு” என சிரித்தாள் அபர்ணா
“நமக்கு கல்யாணம் ஆகி இந்த ஒம்பது வருசத்துல, இன்னைக்கி தான் நீ எனக்கு முன்னாடி எழுந்துருக்க” என கார்த்திக் கண் சிமிட்டி சிரிக்க
“லேட்டா எந்திரிச்சலும் லேட்டஸ்ட் இந்த அபி” என ரஜினி டைலாக்கை ரீமிக்ஸ் செய்து, இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டு சிரித்தாள் அபர்ணா
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?” என சரண்டர் ஆனான் கார்த்திக்
“ஆனா, இனி வாரத்துக்கு ஒரு நாளாச்சும் இப்படி நேரத்துல எழுந்து இயற்கைய ரசிக்கணும் கார்த்திக்” என லயிப்புடன் கூறியபடி, ஜன்னலருகே சென்றாள் அபர்ணா
“ஆஹா…என்னடா கவிதையா பேச ஆரம்பிச்சுட்ட?” என்றபடி மனைவியின் அருகே வந்து, தோளோடு அணைத்து நின்றான் கார்த்திக்
“இல்ல கார்த்திக், அங்க பாருங்களேன். அந்த நந்தியாவட்ட செடியோட இலைல, பொடித் தூறல் கோலம் போடற மாதிரி பாக்கவே அழகா இருக்கில்ல” என ரசிப்புடன் அபர்ணா கூற
இயற்கையை மட்டுமின்றி, மனைவி அதை ரசிப்புடன் கூறிய அழகையும் ரசித்தவன், “ஹ்ம்ம்… அழகாவே இருக்கு” என அவளுக்கும் சேர்த்தே உரைத்தான்
“இந்த குருவியெல்லாம் இவ்ளோ நேரத்துல எந்திரிச்சு என்னப்பா பண்ணும்?” என அபர்ணா கேட்க
“ம்… ஜாக்கிங் போகும்” என கேலி செய்தான் கார்த்திக்
முழு நாவலையும் வாசிக்க, கீழே உள்ள Amazon Linkஐ click செய்யவும் 👇
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
GIPHY App Key not set. Please check settings