இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இரவுப் பறவைகள் கூடத் தங்களது பணியை முடித்து விட்டு உறங்கிக் கொண்டிருந்த அந்த ராப்பொழுதில், சிலர் மட்டும் உறக்கம் எனும் நினைவும் கூட இன்றி, ஜானவியின் வீட்டில் குழுமியிருந்தனர்
அவர்கள்… யாதவ், குகன், ஜானவியின் பெற்றோர், சார்விக், மகிழவன், மாதுரி, விபின், கவின் மற்றும் யாதவின் அப்பா சர்வேஸ்வரன்
அனைவரின் விழிகளும், ஒருசேர ஜானவியை கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் ஜானவியோ, மிகவும் பயந்து போய் இருந்தாள்
ஆதரவாக அவளது கையைப் பற்றிக் கொண்டு அருகே அமர்ந்து இருந்தான், அவள் தமையன் குகன்
வந்திருந்தவர்களுக்கு அந்த இரவுப்பொழுதிலும் சற்று தெம்பு வேண்டுமென்பதற்காக, சுக்கு காபி போட்டு எடுத்து வந்திருந்தார் ஜானவியின் தாயார்
அனைவரும் அந்தப் பானத்தைப் பேருக்குக் கூட வேண்டாமென மறுக்காது வாங்கி அருந்தி முடிக்கையில், தொடர்ந்தான் யாதவ்
“லுக் ஜானவி.. நீ ஏதாவது விவரம் சொன்னா தான் எங்களால ஆதி சாரக் கண்டுபிடிக்க முடியும். சோ, உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதெல்லாம் மறைக்காம சொல்லிடு” என கட்டுப்பாட்டையும் மீறிய கறார் குரலில் கேட்டான்
உடனே அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்த ஜானவி, “எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் D.C.P சார்.. இதுக்கு மேல உங்களுக்குச் சந்தேகம் இருந்தா, என்னை கைது பண்ணி ஜெயிலுக்குக் கூட்டிட்டு போங்க” என்று கோபத்துடன் எகிறினாள்
அதைக் கண்ட குகன், “ரிலாக்ஸ் ஜானு மா… ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற? நீ தான் ஆதி சாருக்கு ஆபத்துனு எங்ககிட்ட சொன்ன, நீ சொன்ன இடத்துல அவர் இல்ல. அதனால தான சார் உன்கிட்ட விவரம் கேக்கறாரு. நீ தான் அவரைக் கடைசியா பார்த்ததா சொல்லற, அவர் கடைசியா பேசியதும் உன்கூடத் தான். அதனால தான் உனக்கு வேற ஏதாவது விவரம் தெரியுமா இல்ல இந்த டென்சன்ல ஏதாவது மறந்துட்டியானு சார் கேக்கறாரு. ப்ளீஸ் டா… நீ புரிஞ்சுக்கணும்ல?” என தங்கையின் கோபத்தை தணிக்க முயன்றான்
“ஆமா ஜானு… அப்பா உன்கிட்ட தான் கடைசியா பேசி இருக்காரு. அவர் தனக்கு யார் மூலமாவது ஆபத்து வரப்போகுதுனு உன்கிட்ட சொன்னாரா? இல்ல அங்க யாரையோ பார்த்து பயந்தாருனு சொன்ன இல்லையா? அது யாரு என்னனு ஏதாவது குறிப்பு கொடுத்தாரா?” என்று சிறு விசும்பலுடன் மாதுரி கேட்கவும், மனம் சற்றுக் குன்றத்தான் செய்தது ஜானவிக்கு
“சாரி மாது… நான் யார் மேலயோ இருக்கற கோபத்தை இந்தச் சூழ்நிலையில காமிச்சுருக்கக்கூடாது” என்று வருந்திய ஜானவி
குகனிடமே திரும்பி, “அண்ணா.. நான் அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன். அங்க மலையில ஏதோ ஒரு பொருள் சாருக்கு கிடைச்சுருக்கறதா எனக்குச் சொன்னாரு. அப்போ தான் யாரோ வர்ற மாதிரி இருந்துச்சு. நான் அப்பறம் பேசறேன்னு சொல்லி போன வச்சுட்டார்” என்று சொல்லிக் கொண்டே போனவள்
திடீரென்று நினைவு வந்தவளாக, “அண்ணா.. இந்த விஷயம் எனக்கு மட்டுமில்லாம, இன்னொருத்தருக்கும் சொல்லி இருக்கறதா என்கிட்ட சொன்னார். ஆனா அது யாருனு எதுவும் சொல்லல” என்றாள்
“அப்ப அந்த இன்னொருத்தர் தான் அப்பாவ கொல பண்றதுக்கு முயற்சி செஞ்சுருப்பாங்களா யாதவ்?” என்று மாதுரி கேட்கவும்
“இல்ல மாது… அப்படி ஆதி சாரே தன்னோட ரகசியத்தைச் சொன்ன அந்த இன்னொரு ஆள் அங்க திடீர்னு வந்து நின்னா, ஆச்சர்யம் தான் வருமே தவிர, அவருக்கு பயம் வராது” என்றான் யாதவ்
மேலும் சில நிமிடங்கள் அமைதியில் கரைய, ஜானவியிடம் திரும்பிய யாதவ், “ஆதி சார் உன்கிட்ட எதுவுமே சொல்லலைனே இருக்கட்டும். ஆனா இதுக்கு முன்னாடி எப்பவாச்சும் அவர் யார்கிட்டயாவது பயப்பட்ட மாதிரி உனக்குத் தெரிஞ்சுதா? யார பத்தியாவது சந்தேகப்படற மாதிரி?” எனக் கேட்டான்
அதற்கு பதிலளிக்கச் சற்று நேரம் எடுத்துக் கொண்ட ஜானவி, “அப்படிக் குறிப்பிட்டு இவருக்குத் தான் பயப்பட்ட மாதிரி அவரு காமிக்கல சார். ஆனா இந்த ஆராய்ச்சி பற்றிய குறிப்புகள் எல்லாமே அவர் ரொம்பப் பாதுகாப்பா வச்சிருந்தார். அதோட நகல் கூட நான் தான் எடுத்துட்டு வந்தேன்.
அதுல சில பக்கங்கள் கொஞ்சம் பழைய கிரேக்க மொழி மாதிரி இருந்துச்சு. பாதியில கொஞ்சம் தேவநாகரி, சில பக்கங்கள் எதோ சங்கேதக் குறிப்பு எழுத்துக்களை வச்சு வார்த்தைகள் கோர்த்துருக்கறதா சொன்னாரு. சில பக்கங்கள் மட்டும் என்ன மொழினு எனக்குப் புரியல, கடைசி ரெண்டு பக்கங்கள் பழைய தமிழி எழுத்துக்கள். அத சார் எனக்கு முழுசா படிச்சு காண்பிக்கறேன்னு சொன்னார்.
என்னால அத கொஞ்சம் கூடப் படிக்க முடில. அத நான் நகல் எடுத்து வந்ததுக்கு அப்பறம், அவர் அத பத்திரமா கொண்டு போய் வச்சுக்கிட்டாரு. இந்த வாரக் கடைசியில எனக்கு அதோட முழு விளக்கத்தையும் சொல்லி, அத நாம ரெகார்ட் பண்ணி வச்சுக்கணும்னு கூடச் சொல்லிருந்தார்” என விளக்கமாகக் கூறினாள் ஜானவி
“ஓ” என்று மட்டும் கூறிய யாதவ், அவள் சொன்னதை உள்வாங்கிக் கொள்ளச் சற்று நேரம் எடுத்துக் கொண்டான்.
பின், “ஜானவி சொல்றத வெச்சு பாக்கறப்ப, ஏதோ தப்பு நடக்கப் போகுதுனு சாருக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்குனு தோணுது. அந்த ஆள் யாருனு கூடச் சாருக்கு ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சுருக்கணும். அதனால தான் இந்த ப்ரொஜெக்ட்டுக்கு புது ஆளுங்களா வேணும்னு சொல்லிருக்காரு. நாளைக்கு உங்க டீம்ல இருக்கற எல்லார்கிட்டயும் நான் விசாரணை நடத்தணும்” என திட்டமிட்டுக் கொண்டே போனவனை
“ஒரு நிமிஷம்” என்று கூறிய ஜானவியின் குரல் தேக்கியது
“என்ன?” என நோக்கியவனிடம்
“எங்க டீம்ல ஆதி சாருக்கு தெரிஞ்ச ஒருத்தர் இன்னும் ஜாயின் பண்ணல. அவர் வெளிநாட்டுல இருக்கறதால, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் வருவாருனு சொன்னாரு. அவர பத்திய விவரம் எல்லாம் அவரோட போனுல தான் இருக்கும்” என்று சொன்னாள்
“என்ன உங்க டீம்ல இன்னொரு ஆளா? அவர் பேர் ஏதாவது?” என்று யாதவ் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செல்போன் சிணுங்கிட, அதை எடுத்தவன், புருவத்தைச் சுளித்தவாறே அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து சற்றுத் தள்ளிப் போய் பேச ஆரம்பித்தான்.
பேசி முடித்துவிட்டுத் திரும்பி வந்தவன், “இன்னொரு பத்திரிகை ஆபிசுல இருந்து கூப்படறாங்க, எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கறதுக்கு வாழ்த்து சொல்லி. அதுவும் காதல் திருமணம்னு சொல்றதால, என்னையும் என் வருங்கால மனைவியையும் பேட்டி எடுக்கணுமாம்” என கூறியவன், ஜான்வியைப் பார்த்து பெருமூச்சினை வெளியேற்றினான்
ஜானவியின் பெற்றோருக்கு இன்னும் நடந்த விஷயங்கள் தெரிவிக்கப்படாததால், அவர்கள் புரியாமல் விழித்தனர்
அதைக் கண்ட யாதவ்’ன் தந்தை சர்வேஸ்வரன், “ஹ்ம்ம் எனக்குத் தெரியாம என்னென்னமோ திட்டம் போட்டீங்க இல்ல? ஆனா நீங்க மனசுல நினைக்கறத கூடச் சரியா கண்டுப்பிடுச்சுடுவேன் நான். என்னை யாருனு நினைச்சீங்க? நீங்க படிச்ச ஸ்கூல்ல நிஜமாவே நான் ஹெட்மாஸ்டர் டா…” என வீராவேசமாக மொழிந்தார்
அதைக் கேட்ட சார்விக், கவின், விபின் மூவரும் நமட்டுச் சிரிப்புடன், “என்னமோ ஒசாமா ஒளிஞ்சிருந்த இடத்தை ஒபாமா கண்டுபிடிச்ச மாதிரி அலட்டிக்கறாரு. நாம எல்லாரும் பேசினத அரையும் குறையுமா ஒட்டு கேட்டுட்டு பிரஸ்கிட்ட உளறிக் கொட்டி இருக்காரு. இதுல பெருமை வேற, இதுல நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மஸ்டர்னு பன்ச் டைலாக் வேற. சரி விடு இவர் இப்படி உளறிக் கொட்டி கிளறி மூடினதுலையும் நல்லது தான் நடந்துருக்கு. ஜானவியும் யாதவ்’வும் ஒண்ணு சேர்றதுக்கு இது நல்ல சான்ஸ்” என தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர்
அவர்கள் பேசியதைக் கண்டு கொள்ளாத யாதவ், ஜானவியிடம் அவள் பெற்றோருக்கு நடந்ததை விளங்கும்படி பார்வையாலேயே சைகை காண்பித்தான்
“உங்கப்பா பண்ணின குழப்பத்துக்கு நான் என் குடும்பத்துக்கிட்ட வாங்கிக் கட்டணுமா? என்னால முடியாது” என்று கூறுவது போல் அவனை முறைத்து விட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஜானவி
அவர்களது இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சர்வேஸ்வரனோ, இம்முறையும் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்
“அது ஒண்ணுமில்ல மிஸ்டர். நம்பிராஜன், நம்ம யாதவும் ஜானவியும் விரும்பறாங்க. ஆதித்யன் விஷயம் தெரிஞ்சதும், ஜானவி யாதவுக்குத் தகவல் சொல்லிட்டு கிளம்பி இருக்கா. அவளுக்கு என்னாச்சோனு பதறிப் போய் யாதவும் அங்க போயிருக்கான். ரெண்டு பெரும் அர்த்த ராத்திரியில சந்திச்சது பத்திரிக்கைகாரங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. அவங்க இவங்ககிட்ட ஏதேதோ கேள்வி கேட்க, அங்க வந்த நான் இவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ஒருவாரத்துல கல்யாணம் ஆகப் போகுதுனு சின்னப் பொய் சொல்லிட்டேன். அதைத் தான் உங்ககிட்ட எப்படிச் சொல்றதுனு பசங்க திணறிட்டு இருக்காங்க” இடையில் யாதவ் பேச முயன்றதை பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டே போனார்
அதுவரை வெறும் பார்வையாளர்களாக மட்டுமே நின்றிருந்த ஜானவியின் பெற்றோர் நம்பிராஜனும், நிர்மலாவும், இப்போது அதிர்ச்சியுடன் ஜானவியையும், யாதவையும் மாறி மாறி பார்த்தனர்
ஏதோ சொல்ல ஆரம்பித்த ஜானவியை, தனது சிறு கை அழுத்தத்தில் தடுத்த குகன், “ஆமாம்’ப்பா, அங்கிள் சொல்றது உண்ம தான். ஆனா உங்களுக்கு யாதவ் சாரப் பத்தி நல்லாத் தெரியும். அதனால உங்களுக்கு இவங்க காதல்ல எந்தப் பிரச்சனையும் இருக்காதுனு நினைக்கறேன். நாம தேடினாலும் இப்படிப்பட்ட மாப்பிள்ளை நம்ம ஜானவிக்குக் கிடைக்காது ப்பா…” எனவும், அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஜானவி
“அமைதியா இருடா ப்ளீஸ்” என்று தன் அண்ணன் காதோரம் கெஞ்சியதற்காக மட்டுமின்றி, தன் தந்தை கண்டிப்பாக இந்த விசயத்திற்குச் சம்மதம் தெரிவிக்க மாட்டார் என உறுதிபட எண்ணியே, அமைதி காத்தாள் ஜானவி
ஆனால் நம்பிராஜனோ, “எனக்குக் காதல் பத்தி எல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்ல, ஆனா இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்னு யோசிச்சா தான் மலைப்பா இருக்கு” எனவும், இம்முறை பரிதாபமாக நோக்குவது ஜானவியின் முறையாயிற்று. ஆனால் அவளைக் கண்டுகொள்ளத் தான் ஆளில்லை.
பெரியவர்கள் இருவரும் யாதவ் மற்றும் ஜானவியின் திருமணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியதும், யாதவ் குகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்
“என்ன குகா ஏன் உன் அப்பாகிட்ட நடந்தத நீ சரியா சொல்லல? ஏன் இப்படிப் பண்ற?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டான்
அதற்கு வார்த்தையால் எதுவும் பதிலளிக்காத குகனோ, தனது கைப்பேசியை எடுத்து யாதவ் கைகளில் திணித்து விட்டு, வேறுபுறம் திரும்பி நின்று கொண்டான்.
என்னவென யோசித்தவாறே அதை வாங்கிப் பார்த்தவனின் மனம், ஒருகணம் அதிர்ந்து பின் அடங்கியது
“ஏய்… ஏய்… இது எப்படி உன்கிட்ட வந்துச்சு. நிஜமா இது நீ நினைக்கற மாதிரி இல்ல குகா. உன் தங்கச்சி பயந்து இருந்தப்ப, அவளுக்கு ஆறுதலா இருக்கற மாதிரி தான் நான் அவளைக் கொஞ்சம் அணைச்சேன். ஆனா… இத யார் போட்டோ எடுத்தது? இத வச்சு யாராவது உன்ன மிரட்டறாங்களா?” என சிறிது குரல் நடுங்கிட கேட்டான் யாதவ்
ஆனால் சிறிதும் பதட்டப்படாமல் மெதுவாய்த் திரும்பிய குகன், “ஒரு போலீஸ்காரனை யாரும் போட்டோ காமிச்சு மிரட்ட முடியாது சார். அது மட்டும் இல்லாம இது எந்த மார்ப்பிங்கும் பண்ணாத ஒரிஜினல் போட்டோ. எனக்கு இந்தப் போட்டோ எந்தச் சூழ்நிலையில எடுத்ததுனு எல்லாம் முக்கியம் இல்ல. இந்தப் போட்டோவால நடக்கப் போற விளைவுகள் தான் முக்கியம். ஒருவேளை நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறதிலைனா, நாளைக்கு இந்தப் போட்டோ பத்திரிக்கைல வந்தா, என் தங்கையோட உயிருக்கே ஆபத்து. அதனால தான் நான் உங்க கல்யாணம் நடக்கணும்னு உறுதியா இருக்கேன்” என்றான்
அதற்கு, “என்ன குகா.. என்ன சொல்ற? செய்யாத தப்புக்கு உன் தங்கச்சி தண்டனை ஏத்துக்க மாட்டா. அது மட்டும் இல்லாம, ஒரு தப்பான போட்டோக்காக தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு ஜானவி ஒண்ணும் கோழை இல்ல” என வாதாடினான் யாதவ்
“ஜானு இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் மனசு விடற பொண்ணு கிடையாது தான் சார். சொல்லப்போனா, தற்கொலை எண்ணத்துல இருக்கறவங்களுக்கு கவுன்சலிங் குடுக்கறதுக்காக ஒரு தன்னார்வ நிறுவனத்துல பகுதி நேரமா வேலை செஞ்சுட்டும் இருக்கா. ஆனா, அவளைப் பத்தி எந்தச் செய்தி வெளி உலகத்துக்கு வந்தாலும் சரி, அவ உயிர் போறது நிச்சயம்” என குகன் கூற, குழப்பத்தின் உச்சிக்கே சென்றான் யாதவ்
குகன் கூறியதற்கு விளக்கம் கேட்க கூடத் தோன்றாது அதிர்ச்சியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, தானாகவே சில உண்மைகளைக் கூறினான் குகன்
அவன் கூறியதைக் கேட்ட யாதவ், “இந்த நாளுக்கான அதிர்ச்சி இதோட முடியட்டும் டா சாமி” என தலை சுற்றிப் போய் அமர்ந்தான்
மேலும், “சரி குகா… இந்த ஒரு போட்டோனால இவ்வளவு பிரச்சனை வரும்னு தெரியல. இந்தக் கல்யாணம் நடக்கறத தவிர வேற வழி இருக்கற மாதிரி எனக்கும் தெரில. ஆனா நம்ம பெரியவங்க மத்ததெல்லாம் பேசி முடிக்கறதுக்கு முன்னாடி, நான் ஜானவிகிட்ட மட்டும் கொஞ்சம் பேசிடறேன். அதுக்கப்பறம் நாம மத்த விஷயங்களைப் பார்த்துக்கலாம், நீ போய் அவள வரச் சொல்லு” என்றான் யாதவ்
பின்பு குகன் சென்று ஜானவியிடம் விவரம் உரைத்து விட்டு, அவளையும் திருமணத்திற்கு ஒருவாறு தயார்படுத்த முயன்றான். ஆனாலும் அவள் மனம் முழுதும் தெளியாமலே இருந்தது
அதனாலேயே அவளிடமும் அந்தப் புகைப்பட விஷயத்தைக் கூறியவன், மேலும் சில விளக்கங்களையும் வேண்டுதல்களையும் வைத்த பின்பே, அவள் மனம் ஓரளவு சம்மதத்திற்கு வந்தது.
அதற்குப் பிறகே, யாதவை சந்திக்க வந்தாள் ஜானவி
ஏதோ யோசனையில் இருந்தவன், அவள் புறம் பார்வையைத் திருப்பி நேருக்கு நேராக அவள் கண்களைப் பார்த்து, “குகன் உன்கிட்டயும் இந்தக் கல்யாணம் எவ்வளவு முக்கியம்னு சொல்லிருப்பான்னு நினைக்கறேன். உனக்கும் சரி, எனக்கும் சரி வேற வழியில்ல. அதனால நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுனு முடிவெடுத்துட்டேன். அதனாலேயே என்னைப் பத்தின ஒரு உண்மைய உன்கிட்ட சொல்ல கடமைப்பட்டிருக்கேன்” என்றவன்
சிறு தயக்கத்தின் பிறகு, “நான் ஒரு பொண்ண காதலிக்கறேன், ரொம்பச் சின்ன வயசுக் காதல். நான் ஸ்கூல் படிக்கறப்ப உண்டானது. இத்தனை வருஷம் கழிச்சும் கூட அவளை என்னால மறக்க முடியல. ஆனா அந்தப் பொண்ண என்னால இப்போ வரைக்கும் கண்டுபிடிக்க முடியல. எஸ்.. அவளைப் பத்தின எந்த விவரமும் என்கிட்ட இல்ல. நானே நேரிடையா அவளைத் தேடினா விஷயம் வெளில கசிஞ்சுடும்னு டிடெக்ட்டிவ் ஏஜென்சி மூலமா கூட அவளைத் தேடிட்டேன். ஆனா ரிசல்ட் பூஜ்ஜியம் தான்.
ம்ம்.. கிட்டத்தட்ட உன் பேர் தான் அவளுக்கும். ஜானகி.. இது தான் அவ பேர், இங்க சேலத்துல இருக்கற ஸ்கூல்ல தான் படிச்சா. என்னைவிடச் சின்னப் பொண்ணு. நான் பத்தாவது படிச்சப்போ அவ ஆறாவது ஐந்தாவதோ தான் படிச்சா… அவ்வளவு தான் எனக்கு அவளைப் பத்தி தெரிஞ்ச விஷயம். இந்தத் தகவல் எல்லாம் வச்சுட்டு அவளை ரொம்ப வருஷமா தேடிட்டேன்.
இனி தேடறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லனு அந்த டிடெக்ட்டிவ் ஏஜென்சியே சொல்லிட்டாங்க. ஆனா இத உன்கிட்ட மறைக்கக் கூடாதுன்னு நினச்சேன் அவ்வளவு தான். கூடிய சீக்கிரம் அவளை மறக்க முயற்சியும் பண்றேன், பாக்கலாம் மஞ்சள் கயிறு மாஜிக் எப்படினு” என்று கண்ணுக்கெட்டாத முறுவலுடன் கூறி விட்டு, வேறு பேச ஒன்றுமில்லை என்பது போல, அவளை மீண்டும் திரும்பியும் பார்க்காது சென்று விட்டான் அவன்
அவன் கூறியதற்குப் பதிலோ, விளக்கமோ, அல்லது இன்னொருத்தியை மனதில் வைத்துக் கொண்டு என்னுடன் எப்படிக் குடும்பம் நடத்துவாய் என்று சண்டை கூடப் பிடிக்காது, அவன் சென்ற பாதையை ஏக்கத்துடன் பார்த்திருந்தவளின் இடக்கண்ணில் இருந்து, நேர்கோடாய் நீர்ச்சரம் கீழிறங்கியது
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
(தொடரும்…வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings