in

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 12) -✍ விபா விஷா

நீரினைத் தேடிடும்... ❤ (பகுதி 12)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

றுநாளுக்கான அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் எதிர்பார்த்தே உறங்கச் சென்றவர்களை, சிறிதும் ஏமாற்றுவதாய் இல்லை என்று அறிவித்துக் கொண்டே புலர்ந்தது  பொழுது

இரவு வெகுநேரம் கழித்தே உறங்கியதால், காலையில் அலாரம் அடித்த பின்பும் கூட எழ முடியவில்லை இருவருக்கும். கஷ்டப்பட்டு எழுந்து அடித்துப் பிடித்து தத்தமது அலுவலுக்குச் சென்றனர், ஜானவியும் யாதவ்வும் 

காவல் நிலையத்தில் இருந்த தன் அறைக்குள் யாதவ் நுழைந்ததும், அவனைப் பின் தொடர்ந்த குகன் சல்யூட் அடித்தான் 

பதிலுக்கு யாதவ் சம்பிரதாயமாய் சல்யூட்அடிக்க , “சார் நைட் டியூட்டி பார்த்தவங்க நம்ம வீட்டுல நடந்த கன் சூட் பத்தி விசாரிச்சதுல, அந்தச் செத்துப் போனவன், ஒரு ரவுடி கூட்டத்தைச் சேர்ந்தவனாம். அவனை நாம போன வருஷம் ஒரு கொலை கேசுல ஜெயில்ல போட்டோம். இப்போ பெயில்ல வந்ததும் உங்கள கொல்ல முயற்சி பண்ணியிருக்கான். இது சாதாரணப் பழிவாங்கல் தான்னு சொல்றாங்க” என்றான் குகன் 

“அவங்க அப்படிச் சொல்றாங்க சரி… நீ என்ன சொல்ற குகன்?” என யாதவ் கேட்க 

“நீங்களும் இந்தப் பாயிண்ட்ல யோசிக்க மாட்டீங்கனு  எனக்குத் தெரியும் சார். அதனால தான் இந்த விசயத்த என்கிட்ட சொன்னதுமே என்னோட விசாரணையை ஆரம்பிச்சுட்டேன். என் சந்தேகம் என்னன்னா, இது நாம அவனை ஜெயில்ல போட்டதுக்கான பழிவாங்கல் விஷயம்னா, ஏன் அவன் விஷத்தை சாப்பிட்டு சாகனும்? மறுபடியும் இப்போ நாம அவனை ஜெயில்ல போட்டாலும், கொலை முயற்சி கேஸ்ல தான அவனை நாம உள்ள தூக்கி போட முடியும்? இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாதவன் இல்ல அவன்

அது மட்டுமில்லாம இவன் லோக்கல் ரவுடி. இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு அதிநவீனமான துப்பாக்கி கிடைச்சுருக்கும். ஏன்னா அவன் உங்க எதிர்த்த வீட்டு மாடி படிக்கட்டுல இருந்து சுட்டுருக்கான். சோ இது ஸ்னைப்பரா இருக்கும்னு நான் சந்தேகப்படறேன். சந்தேகம் தான். ஏன்னா உங்கள அவன் சுட்ட துப்பாக்கி கிடைக்கல. மினிஸ்டரோட ஆளுங்க அவன கூட்டிட்டு வர்றப்பவே அவன் வெறுங்கையோட தான் வந்தான்.

தடவியல் துறையில இருந்து அந்தத் துப்பாக்கிக் குண்டோட அறிக்கை வந்தா தான் இத என்னால உறுதிப்படுத்த முடியும். என்னோட சந்தேகத்துல மினிஸ்டர். இளங்கோவும் வராரு. ஏன்னா, சரியா அவன் நம்ம வீட்டுல சுட்டப்ப உங்களுக்குப் பக்கத்துல ஜானு இருந்தா. ஏன் இந்தக் கொலை முயற்சி ஜானுவுக்கானதா இருக்கக் கூடாது? அதை ஏன் மினிஸ்டர். இளங்கோ செஞ்சுருக்கக் கூடாது?

ஏன்னா, இவ்வளவு நாள் வெளிஉலகத்துல இருந்து மறைஞ்சு இருந்தவ, இப்போ உங்க கல்யாணம் மூலமா வெளியுலகத்துக்குத் தெரிய ஆரம்பிச்சுட்டா, அது தன்னோட அரசியல் வாழ்க்கையைப் பாதிக்குமோனு நினைச்சு ஏன் அவர் இத செஞ்சுருக்கக் கூடாது?

ஒருவேளை குறி தப்பியத பார்த்த அவர், நல்லவர் மாதிரி வீட்டுக்குள்ள புகுந்து கூட இருந்தே குழிபறிக்கலாம்னு நினைச்சு ஏன் திட்டம் போட்டிருக்கக் கூடாது?” என்று தன் சந்தேகங்களைக் கூறினான் குகன் 

அவன் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட யாதவ், “ஹ்ம்ம்.. சரி, அந்த அக்கியூஸ்ட்ட போஸ்ட் மார்ட்டம் செஞ்ச ரிப்போர்ட் படிச்சியா?” எனக் கேட்க 

“இல்ல சார், அத வாங்கிட்டு வர ஆள் அனுப்பியிருக்கேன்” என குகன் பதிலளிக்க, அவன் முன்பு ஒரு கோப்பை எடுத்துப் போட்டான் யாதவ் 

அதை எடுத்துப் பார்த்த குகன், “ஹோ… நீங்களே வாங்கிட்டு வந்துட்டீங்களா சார்” என வியப்புடன் கேட்க, ஆமாம்  என்பது போல் தலையசைத்தான் யாதவ்

அந்தப் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் படித்த குகனின் கண்கள் விரிந்துக் கொண்டே போனது

பின், “சார்… இதுல நாம நினைச்சதை விடவும் ரொம்பவே சக்தி வாய்ந்த யாரோ ஈடுபட்டிருக்கற மாதிரி தெரியுது. ஏன்னா… இவன் சாப்பிட்ட விஷம்.. ரொம்ப அபூர்வமானது. முக்கியமா மருத்துவ ஆராய்ச்சியில இருக்கறவங்க பயன்படுத்தறது. இப்படி ஒரு விஷம் இருக்குன்னே சாதாரண மக்கள் யாருக்கும் தெரியாதுனு நினைக்கறேன். அப்படி இருக்கும் போது இவனுக்கு எப்படிச் சார் இது கிடைச்சுருக்கும்?” என தன் சந்தேகத்தை வாய்விட்டு உரைத்தான் குகன்

சற்று நேரம் கண்மூடி இருந்த யாதவ், “நீ இனி இந்தக் கேஸ்ல இருக்க வேணாம் குகன்” என அறிவித்தான்

அதைக் கேட்டு அதிர்ந்த குகன், “என்னாச்சு சார்? எதுக்காக இப்படிச் சொல்றீங்க?” எனக் கேட்க

“இது முழுக்க முழுக்க என்னையும் ஜானவியையும் சம்மந்தப்பட்டது குகன். நீங்க யார் விசாரிச்சாலும் அந்தக் குற்றவாளி வெளிய வர மாட்டான். நானே நேரடியா ஈடுபட்டாத் தான் அவன் தன்னை வெளிப்படுத்திப்பான். இதுக்கும் ஆதி சாரோட மறைவுக்குமே சம்மந்தம் இருக்கு. இத நானே பார்த்துக்கறேன்” என்றான் யாதவ் 

“சார் ,இதுல நீங்க சம்மந்தப்பட்டிருக்கறீங்கனு சொன்னா கூட ஒரு அர்த்தம் இருக்கு, ஆனா இதுக்கும் ஜானுவுக்கு என்ன சம்மந்தம்” என்றான் புரியாதவனாய் 

பதிலாய் ஒரு மர்ம சிரிப்பை உதிர்த்த யாதவ், “சில விஷயங்கள் யாருக்குமே தெரியாம இருந்தால் தான் நல்லது குகா”  என்றதோடு, அறையை விட்டு வெளியேறினான் 

அப்பொழுது யாதவின் செல்போன் சிணுங்க, அதை எடுத்தவன் மறுமுனையில் இருப்பது ஜானவி என்பதை அறிந்ததும்,” சொல்லு ஜானு… என்ன விஷயம்?” என்றான் 

“யாதவ்.. நீங்க உடனே கிளம்பி என்னோட சைட்டுக்கு வாங்களேன்… உடனே.. சீக்கிரம்..” எனவும், அவளுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்தவன், தனது பைக்கில் அதிவேகமாகப் பறந்தான்.

அங்குச் சென்று ஜானவியைத் தேடியவன், அவள் அருகிலிருக்கும் ஒரு கூடாரத்தினுள் இருப்பதாக அறிந்து உள்ளே சென்று பார்க்க, ஒரு நீண்ட மேஜையின் பின்னிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள் ஜானவி.

அவனின் “ஜானு” என்ற விளிப்பில் சுயநினைவடைந்தவள், மெல்ல எழுந்து நின்று அவனுக்கு வரவேற்பாய் தலையசைத்தாள் .

அவள் கண்களைக் கண்டே ஏதோ பெரிய பிரச்சனை என உணர்ந்தவன், “என்னாச்சுடா…” என்று கேட்டவாறே வேகமாக அவளருகே சென்றான் 

யாதவ் நெருங்கியதும், தனது ஒரு கையால் அவன் கையை இறுகப் பற்றியவள், மறுகரத்தால் மேஜை மேல் வெள்ளைத் துணி போர்த்தியிருந்ததை நடுங்கும் விரல்களால் விலக்கினாள் 

அங்குச் சிறிது சிதிலமடைந்த ஒரு எலும்புக்கூடு, கையில் ஏதோ ஒன்றினை இறுக்கப் பற்றியபடி கிடத்தப்பட்டிருந்தது.

அதையே பார்த்தவாறு யாதவிடம்,  “இது யாருனு தெரியுதா? இது நான், ஞமலி. என்னோட.. என்னோட எலும்புக்கூடு  தான் இது” என்றவள், யாதவ்வை நேராய் பார்த்து கண்ணீருடன், “அரசே” என காற்றாகிப் போன குரலில் அழைத்தாள்.

அவள் அவ்வாறு அழைக்கவும்,  உடலெல்லாம் மயிர்க் கூச்செறிய, நெஞ்சமும் விம்மித் தணிய. “தமிழினி…” என்றழைத்தான் கண்ணீருடன் 

சிறிது நேரம் இருவருமே வேறெதுவும் பேசிக் கொள்ளாது ஒருவரை ஒருவர் ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்தனர்

சட்டென ஏதோ நினைத்த யாதவ், திரும்பி அந்த எலும்புக் கூட்டினைப் பார்த்தான். அதன் கைகளில் இருந்த குடுவையை உற்று நோக்கினான்

பின்னர், “அப்போ நிஜமாவே இந்தக் குடுவைய நீ தான் எடுத்துட்டுப் போனியா? அப்பறம் எப்போ… எப்படி… இப்படி..” என சற்றுத் தள்ளி நின்று யாதவ் கேட்கவும், அவன் விலகலே அவனது மனநிலையை உணர்த்தியது

சட்டென ஜானவியின் கண்களும் கூர்மையானது, “நான் மண்ணுக்குள்ள புதைஞ்சது.. போர் நடக்கறதுக்கு அஞ்சு நாளைக்கு முன்னாடி, அதாவது இந்தக் குடுவையை நான் எடுத்த அன்னைக்கே. அப்படின்னா, நான் இத எடுத்துட்டுப் போனது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டாள்

அதற்கு யாதவோ, ” நீ என்ன என்னைக் கேட்டா எடுத்துட்டுப் போன?” எனவும், 

ஜானவி அதி ஆவேசத்துடன், “அப்படின்னா.. அப்படின்னா.. என்ன சொல்றீங்க நீங்க?” என்று கேட்கவும்

“நான் சொல்றது இருக்கட்டும்.. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நீ முழுசா சொல்லு” என்று கேட்டான் யாதவ் 

ஆனால் அவனது கேள்வியைக் காதில் வாங்காத ஜானவி, “நான் இத திருடிட்டேன்னு நினைச்சுட்டீங்க இல்ல? ஞமலி உங்களுக்குத் துரோகம் பண்ணிட்டானு நினைச்சுட்டீங்க இல்ல? இதுக்காகவா ஒவ்வொரு ஜென்மமும் உங்கள உருகி உருகி காதலிக்கறேன்?” என அழுகையும் ஆத்திரமுமாய்  கேட்டாள்

“எனக்கு என்ன நடந்ததுனு முழுசாத் தெரியாம நீ பேசாத” என யாதவ் சீற 

“உங்களுக்கு ஏதாவது கெட்டது நடந்தா நான் துரோகி ஆகிடுவேனா?” என பதிலுக்கு சீறினாள் 

“இல்ல ஜானவி.. நீ அன்னைக்கு என்ன நடந்ததுனு முழுசா சொல்லு.. அப்ப தான்…” என்று மீண்டும் யாதவ் கேட்க

“இப்போ கூட எனக்கு என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்கறதுக்காக நீங்க விளக்கம் கேட்கல, இல்லையா? உங்க சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தறதுக்கோ… இல்ல தெளிய வைக்கறதுக்காகவோ தான் இதக் கேட்கறீங்க, அப்படித்தான?” என்றவள் கோபத்தில் தடுமாறினான் யாதவ் 

“தயவுசெஞ்சு என் நிலைமையில இருந்து யோசி ஜானு..” என கெஞ்சலாய் பார்க்க, அவனைச் சுட்டெரிக்கும் விழிகளால் முறைத்தவள், தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளப்பினாள் 

அவனும் அவளையே பின் தொடர்ந்தான். ஆனால், வேலை செய்யும் இடத்தில் மற்றவர் பார்வைக்குக் காட்சிப் பொருளாக ஆகவேண்டாமென அமைதி காத்தான் 

அவள் தனது சகாக்களிடம் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிக் கூறிவிட்டு தனது வண்டியில் ஏறிப் புறப்பட, தனது வாகனத்தில் அவளைப் பின் தொடர்ந்தான் யாதவ் 

வீடு வந்து சேர்ந்த பிறகும் கூட அறைக்குள் வராது மற்றவர் பார்வையில் சுற்றிக் கொண்டு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள் ஜானவி 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த யாதவ், தன் தாய் தந்தை முன்னிலையிலேயே அவள் கையைப் பற்றி அறைக்குள் இழுத்து வந்தான்

அறைக்குள் நுழைந்ததும் கதவை மூடி தாளிட்டவன், “ஏய்… இப்ப என்ன நடந்துடுச்சுனு நீ இப்படிக் கோபமா இருக்க. வாழ்க்கையில சும்மாவே நமக்கு நிறைய அமானுஷ்யங்கள் நடக்குது. ஏதோ முன்னாடி நாம செஞ்ச புண்ணியத்தால், நமக்கு முன்ஜென்மத்தோட நினைவுகள் வந்திருக்கு. அத பயன்படுத்தி அப்போ நாம செஞ்ச தப்புகளைத் திருத்திகிட்டு, நமக்கான இந்த வாழ்க்கையையாவது நல்லபடியா வாழ்ந்தா தான் இந்த ஞாபகங்கள் நமக்குத் திரும்ப வந்ததுக்கான அர்த்தமே. ஆனா, நான் விவரம் கேட்டதுக்கே இப்படிக் கோபிச்சா, நம்மள பிரிக்க நினைக்கறவங்க ரொம்பச் சுலபமா நம்மள பிரிச்சுட்டு அவங்களுக்கு என்ன வேணுமோ அத சாதிச்சுட்டு போய்டுவாங்க” என்றான் கோபமாய் 

யாதவின் இவ்வளவு பெரிய சொற்பொழிவிற்குப் பின்பும் கூட, ஜானவி எதுவும் பேசாது அமைதியாகவே இருந்தாள்.

அதைக் கண்டு மனம் சலித்தான் யாதவ். “ஜானு ப்ளீஸ்… ஒவ்வொரு முறையும் உன்னை நான் தொலைச்சுட்டே இருக்கேன். இனியும் உன்னையும் நம்ம காதலையும் நான் தொலைக்க விரும்பல” எனவும், சற்று விழி உயர்த்திப் அவனைப் பார்த்தாள் ஜானவி 

“சரி… எனக்கு என்ன நடந்ததுனு நான் சொல்றேன். ஆனா, அந்த எலும்புகளோட வயசை கார்பன் டேட்டிங் செஞ்சு.. அது நாம வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தது தான்னு ரிப்போர்ட் வரட்டும், அப்புறம்  சொல்றேன்” என்று கூறிவிட்டுத் தனது கைப்பையில் இருந்து போனை எடுக்க முயல, அதோடு வேறொரு பொருள் வெளியே வந்து விழுந்தது.

அதை என்னவென்று பார்ப்பதற்காகக் குனிந்து எடுத்த யாதவ் அதிர்ந்து போய் ஜானவியைப் பார்க்க, அவளும் அதே அதிர்ச்சி குறையாமல் கணவனைப் பார்த்தாள்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… வெள்ளி தோறும்)

Click Pictures here to view April 2021 Contest Entry Videos👇

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அரிசி தேங்காய் பாயசம்! – 👩‍🍳 Adhi Venkat

    அரிசி வடாம் செய்முறை (👩‍🍳ஆதி வெங்கட்)