இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இன்னும் ஒரு வாரத்தில் யாதவிற்கும் ஜானவிக்கும் திருமணம் என்பதை அறிந்த அவன், அடிபட்ட நாகமெனத் தன் ஆட்களிடம் சீறிக் கொண்டிருந்தான்
“இன்னும் ஒரு வாரத்துல அவங்களுக்குக் கல்யாணமா? என்ன இந்த முறையும் அவன் ஜெயிச்சுடுவானா? இல்ல இல்ல இல்ல… விடமாட்டேன்… விடவே மாட்டேன்…” என இருந்த இடம் அதிர கத்தினான்
பின்பு தன்னைத் தானே சாந்தப்படுத்திக் கொண்டவன், “அவ எனக்குத் தான். எப்பவும் அவ என் பொண்டாட்டியா தான் வாழணும். இல்ல சாகும் போதாவது என் பொண்டாட்டியா தான் சாகணும். அவ கழுத்துல ஏறுற தாலி என் கையால தான் இருக்கணுமே தவிர, வேற யாருடைய கையாலயும் இருக்கக் கூடாது” எனத் தனக்குள்ளாகவே முணுமுணுத்தவன்
தன்னருகே நின்றிருந்த தனது வலதுகையிடம் திரும்பி, “என்னைக்கு அவங்களுக்குக் கல்யாணம் நடக்குதுனு தெரியுமா?” என வினவினான்
அவன் “இல்லை” என்று தலையசைக்கவும், “அப்ப இன்னும் ரெண்டே நாளுல யாதவ் கதை முடிஞ்சுருக்கணும், யாராவது ஜானவிய கண் நிமிர்ந்து பார்த்தா கூட, அவங்க உயிர் உடம்புல இருக்கக் கூடாது” சண்டமாருதமென இடிக்குரலில் கூறிவிட்டு, எழுந்து சென்றான் அவன்
ஆனால் இவை யாவும் அறியாத யாதவும், ஜானவியும், தத்தமது உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்
வீட்டினர் தான், காலில் சக்கரம் கட்டாத குறையாகக் கல்யாண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஒரு கல்யாணத்திற்குப் பதிலாக, இரு கல்யாணங்கள் ஒரே முகூர்த்தத்தில் முடிவாகி இருந்தன
ஆம்… சாதனாவிற்கும், விபினுக்கும் அதே முகூர்த்தத்தில் திருமணம் செய்து விடலாம் என விபின் பெற்றோரும் கூறிவிட, இப்பொழுது ஒரு நாளுக்கு இருபத்து நாலு மணிநேரம் போதவில்லை மூன்று குடும்பத்திற்கும்
அவர்கள் மட்டுமல்லாது, யாதவின் நண்பர் குழாமும் கல்யாண வேலைகளில் பிஸியோ பிஸி
அனைவரும் ஒரு வாரம் வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, முதுகில் சிறகு முளைத்தார் போலப் பறந்து கொண்டிருந்தனர்
ஆனால் அங்குச் சோகச் சித்திரமாக இருந்தது மாதுரி தான் என்பதை, தனியாகச் சொல்லவும் வேண்டியதில்லை
அவளுக்கு மட்டுமல்லாது, அவளது குடும்பத்திற்குமே முழு ஆதரவாக இருந்தது மகிழவனும் அவன் தந்தையும் தான்
இருவரது காதல் விவகாரம் தெரிந்திருந்தாலும், இரு குடும்பமும் அதைத் தெரிந்தது போல வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், இத்தகைய கடுமையான சூழ்நிலையில் மாதுரி குடும்பத்தைத் தன் சொந்தமெனத் தாங்கிப் பிடித்தது மகிழவன் குடும்பம்
அதே சமயம், தந்தையை நல்லபடியாக மீட்டுத் தருவதாய் மாதுரிக்கு வாக்களித்திருந்தான் யாதவ். அந்த நம்பிக்கையிலேயே அவள் சிறிதளவு உயிர்ப்புடன் இருந்தாள் எனலாம்
இத்தகைய விஷயங்களெல்லாம் கண்முன் நடந்தும், இப்பெரும் நாடகத்தின் அதி முக்கியப் பாத்திரமாகத் தான் இருந்தும், நடப்பது எதையும் தடுக்கவியலாது ஒரு கையாலாகாத் தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானவி
அன்று சுற்றம் நட்பும் புடைசூழ, திருமணப் பட்டு எடுப்பதற்காகச் சென்றிருந்தனர்
மாந்தளிர் வண்ணத்தில், ராமர் பச்சை பார்டரில், உடலெல்லாம் அன்னப்பட்சிகள் இழையோட, முந்தியில் யாதவ் ஜானவியின் புகைப்படம் பொறித்த ஒரு புடவைக்கு ஆர்டர் அளித்தனர்
அது போலவே பச்சை நிறத்தில் இளஞ்சிவப்பு பார்டருடன், முந்தியில் சாதனா விபின் படத்தினைப் பொறிக்க ஆர்டர் அளித்தனர்
மேலும் சிற்சில சடங்குகளுக்கு, இரண்டு மணமக்களுக்கு ஐந்தாறு பட்டுப்புடைவைகள் வாங்கிய பின்பு, சாலைக்கு எதிர்புறத்திலிருந்த ஒரு ஓட்டலில் உணவருந்துவதற்காகச் சென்றனர்
அனைவரும் முன்னே சென்று விட, யாரும் அறியாமலேயே யாதவும் ஜானுவும் பின்தங்கி தனியாக நடந்து வந்து கொண்டிருந்தனர்
அப்பொழுது பெரும் சத்தத்துடன் பெரிய லாரி ஒன்று ஜானவியையும் யாதவையும் இடிப்பது போல வர, ஜானவியை வேறு புறம் தள்ளிவிட்டு விட்டு தானும் தப்பிக்க முயன்ற யாதவ், கால் வழுக்கி கீழே விழுந்தான்
அதிவேகத்தில் வந்ததால், லாரி அதன் கட்டுப்பாட்டை இழந்து, வேறுபுறம் சென்று பெரும் மரத்தில் மோதி, மரத்தையே முறித்து லாரியும் தலைகீழே கவிழ்ந்து விட்டிருந்தது.
அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு மரணகாயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த லாரி யாதவையும் ஜானவியையும் இடித்துத் தள்ள வந்தது தான் என்பதில், எந்தச் சந்தேகமும் அங்கிருந்த யாருக்கும் இருக்கவில்லை
குகன் உடனே தனது சகாக்களுக்கு விவரம் கூற, ஆம்புலன்ஸுடன் ஒரு போலீஸ் ஜீப்பும் வந்தது.
கண்முன்னே நடக்கவிருந்த பேராபத்துத் தடுக்கப்பட்டிருந்தாலும், அந்த விபத்து நடந்திருந்தால் என்னவாகியிருக்கும் என எண்ணியே, அனைவரும் கதிகலங்கி விட்டிருந்தனர்
மற்ற அனைவரும் யாதவ் ஜானவி இருவரைப் பற்றியும் கவலையுற்றிருக்க, ஜானவியோ யாதவுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்னாவது என மிகவும் பயந்துவிட்டிருந்தாள்
அது மற்றவர்களுக்குப் புரிந்ததோ என்னவோ, யாதாவிற்கு மிகத் தெளிவாக புரிந்தது
ஏனென்றால், வரப்போகும் ஆபத்து உணர்ந்து அவனது கையைப் பிடித்தவள், அவளைத் தள்ளிவிட்டு விட்டு யாதவ் கால் இடறி கீழே விழுகையில், ‘யது’ என்று அலறியவாறே அவளை நோக்கிச் சென்று அவனது கரத்தை இறுக்கப் பற்றினாள்
அதன் பிறகு அந்த லாரி நிலை தடுமாறி வேறுபுறம் சென்று கவிழ்ந்ததையே அறியாதவளாய், யாதவிற்கு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்று விழிகளிலேயே துழாவியவள், அவனுக்கு ஆபத்தை ஏதுமில்லை என அறிந்தாலும் பற்றிய கரத்தை விடவில்லை.
தன்னை இறுக்கப் பற்றியிருந்த அவளது கரத்தை மெதுவாக தட்டிக் கொடுத்தவன், “எனக்கு ஒண்ணுமில்ல ஜானு… ஜானவி, பயப்படாத. கொஞ்சம் வெயிட் பண்ணு, நான் உன் அண்ணன்கிட்ட பேசிட்டு வரேன்” என்றவன், அவளை அவள் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு, குகனை நோக்கி நடந்தான்
அவன் தன்னை நோக்கி வருவானென்று அறிந்த குகனும், அவனிடம் விரைந்தான்
பேசுவது மற்றவர் காதுக்கு கேட்காத தூரம் விலகிச் சென்ற பின், “நீ என்ன நினைக்கற குகா..?” எனக் கேட்டான் யாதவ்
அதற்கு அவனது கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தவன், “நீங்க என்ன நினைக்கறீங்களோ அதே தான் நானும் நினைக்கறேன்” என்றான் குகன்
“அப்ப இது விபத்தில்ல, யாரோ திட்டம் போட்டு செஞ்சது இல்லையா? அது மட்டுமில்லாம, இது எனக்கான டிராப்னு எல்லாரும் நினைக்கறாங்க. ஆனா ஏன் இது ஜானவிக்கு பண்ணின ஏற்பாடா இருக்கக் கூடாது?” என யாதவ் நிறுத்தவும்
“எஸ்… நானும் அதே தான் சார் யோசிச்சேன். அதோட, எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு..” என்று கூறியவனிடம்
“மேலே சொல்” என்பது போல கண்ணசைத்தான் யாதவ்
“ஆதித்யன் சார் மறைவுல நம்ம ஜானவியும் சம்மந்தப்பட்டிருக்கா. அப்போ ஆதி சார் மறைவுக்குக் காரணமானவனுக்கு நம்ம ஜானவி பத்தி தெரிஞ்சு, அவ தான் ஆதி சார கடைசியா பாத்தானு தெரிஞ்சுக்கிட்டு, அதனால அவள…” என நினைத்ததை வார்தையாய் முடிக்க இயலாது தடுமாறினான் குகன்
“கரெக்ட்… அதே தான் குகா. இது கண்டிப்பா நம்ம ஜானுவுக்கான பிளான் தான். ஏதோ விதி வசத்தால அவ தப்பிச்சுட்டா, இனி ஒவ்வொரு வினாடியும் அவளை நாம கவனிக்கணும். கல்யாணம் கூட எப்போ எப்படி எத்தனை பேரோட நடக்கணும்னு நாம முடிவு பண்ணிடலாம். உங்களுக்கு ஜானவி கல்யாணத்தைப் பத்தி நிறையக் கனவு இருக்கலாம், ஆனா கல்யாணத்த விட அவ உயிர் முக்கியம்” என்றான் யாதவ்
அதைக் கேட்டு உணர்ச்சிவயப்பட்ட குகன், “அவ எப்படி எப்படியோ வாழ வேண்டிய பொண்ணு சார், அற்புதமான தேவதை மாதிரி. அவளுக்கு என்ன நடந்தாலும் நல்லதா நடக்கணும்னு தான் நாங்க எல்லாருமே நினைப்போம். அதே மாதிரி இந்தக் கல்யாணம் எப்படி நடக்குதுன்றது பெரிய விஷயம் இல்ல, கல்யாண வாழ்க்கை எப்படி அமையுதுன்றது தா பெரிய விஷயம். கடவுள் அருளாலே அந்த நல்ல வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கும்னு நான் நம்பறேன் சார்” என்றான்
ஜானவியின் மீது தன் உயிரையே வைத்திருக்கும் அந்த அண்ணனும், ஜானவி தான் தனது உயிரே என அறியாத யாதவும், அவளை எண்ணியே, அவளது நலத்தை முன்னிறுத்தியே, தங்கள் சிந்தையைக் கொண்டு சென்றனர்
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த யாதவ், பின் திடீரெனக் குகனிடம் திரும்பி, “நீ இப்போ என்னை என்னனு சொல்லி கூப்பிட்ட?” என வினவினான்
எதற்கு கேட்கிறான் என புரியாத குழப்பத்துடன், “எப்பயும் போல சார்னு தான் கூப்பிட்டேன் சார்” என்றான் குகன்
“அப்படிங்களா சார், அப்ப நானும் உங்கள இனிமே சார்னே கூப்பிடட்டுமா சார்?” என்றான் யாதவ் கோபமாய்
பதறிய குகன், “என்ன சார் நீங்க போய் என்ன சார்னு கூப்பிடறதா?” என்று ஈரெட்டு துள்ளி குதித்தான்
“ஆமா… நான் உன் தங்கச்சியோட வருங்காலக் கணவன் தான? உனக்கும் எனக்கும் மாமன் மச்சான் உறவு தான? உனக்கு அப்படி மாமா மச்சான்னு கூப்பிட சங்கடமா இருந்துச்சுன்னா, என்ன பேர் சொல்லி கூப்பிடு. அதை விட்டுட்டு இன்னும் சார் மோர் தேங்கா நாறுனு உளறிக்கிட்டு இருக்க” என்று கடுப்புக் குறையாமல் மொழிந்தான் யாதவ்
ஆனால் சற்று தயங்கிய குகனோ, “இல்ல சார்… ஒர்க் பிளேஸ்ல எல்லாருக்கும் முன்னாடி, நான் இப்ப திடீர்னு உங்கள அப்படிப் பேர் சொல்லி கூப்பிட்டா தப்பா நினைப்பாங்க” என சன்னமான குரலில் தயக்கத்துடன் கூற
சுற்றும் முற்றும், குகனுக்குப் பின்னாடியும் தனக்குப் பின்னாடியும் எட்டி எட்டிப் பார்த்தான் யாதவ்
அதைக் கண்டு குழப்பமடைந்த குகன், “என்ன சார் பார்க்கறீங்க?” என வினவ
“இல்ல ஒர்க் பிளேஸ்னு சொன்னியே, அதான் நாம நம்ம ஸ்டேஷன்ல இருக்குமோ, எனக்குத் தான் சரியா தெரியலையோனு பார்த்தேன்” என யாதவ் நக்கலுடன் கூறவும், பேந்தப் பேந்த விழித்தான் குகன்
“ஏய்… என்ன இப்படிப் பார்க்கற? உன் தங்கச்சி கண்ணை விட, பெருசா இருக்கும் போல இருக்கே உன் கண்ணு. பேசறான் பாரு பேச்சு. உனக்கு சங்கடமா இருந்தா ஒர்க் பிளேஸ்ல பேர் சொல்லி கூப்பிடாத. இப்போ நான் உன் தங்கச்சியோட வருங்காலக் கணவன், என்னை நீ பேர் சொல்லி தான் கூப்பிடணும்” என வற்புறுத்தி குகனைத் தன்னைப் பேர் சொல்லி விளிக்கும்படி செய்தான் யாதவ்
சகஜமாகிய குகனும், “சரி யாதவ்… நான் உங்கள பேர் சொல்லி கூப்பிடறேன். ஆனா என்னால உங்கள நீங்க வாங்க போங்கனு தான் கூப்பிட முடியும், இதுக்கு மேல என்னை வற்புறுத்தாதீங்க” என்றவன்
ஜானவியைக் கண்களால் காட்டி, “ஜானு இன்னும் நார்மல் ஆகலைனு தோணுது, நான் போய்ப் பேசவா? இல்ல நீங்களே பேசறீங்களா?” என வினவினான் குகன்
“நாம ரெண்டு பேருமே போகலாம்” என்ற யாதவ், அவனையும் உடனழைத்துச் சென்றான்
ஜானவியிடம் சென்ற இருவருமே எதுவும் பேசவில்லை. குகன் அமைதியாய் அவள் அருகில் நடந்து வர, யாதவ் மென்மையாய் அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான்
அதை உணர்ந்த ஜானவியோ, தன் தமையனும், தான் மணம் செய்து கொள்ளவிருப்பவனும், இவ்வாறு தன் மேல் பாசத்துடனும் அக்கறையுடனும் இருப்பதை உணர்ந்து அகம் மகிழ்ந்தாள்
பின்பு உணவகத்திற்குச் சென்று உணவருந்திய நேரம், மீண்டும் அந்த லாரி விபத்தினைப் பற்றிய பேச்சு எழ, யாதவும் குகனும், இனி அதைப் பற்றிப் பேச வேண்டாமென்றும், தங்களிருவரும் அதைக் கவனித்துக் கொள்வதாகக் கூறி, மற்றவர்களின் வாயை அடைத்தனர்
அவர்கள் கிளம்ப எத்தனித்த பொழுது, குகனுக்குப் போன் வரவே, அதை எடுத்துப் பேசியவன், யாதவிடம் திரும்பி, “ஒரு குட் நியூஸ் யாதவ். அந்த லாரி டிரைவர் பிழைச்சுட்டானாம். பிளட் லாஸ் தா ஹெவியா இருக்காம். ப்ளட்டும் கிடைச்சுடுச்சாம், அதனால நாளைக்குச் சாயந்தரத்துக்குள்ள அவனுக்கு நினைவு திரும்பிடுமாம்” என முகத்தில் சிறு மலர்ச்சியுடன் கூறிக் கொண்டே வந்தவன்
இறுதியாக எக்கிரும்பாய் இறுகிய முகத்துடன், “அவன் மட்டும் இந்த விபத்துக்குக் காரணகர்த்தா யாருனு சொல்லட்டும், அப்பறம் இருக்கு” என முடித்தான்
“உன்னோட கோபத்தை எல்லாம் வார்த்தைகளா வீணடிக்காத குகா, உன் கோபம் உன்னோட செயல்ல வெடிச்சு சிதறணும்” எனக் கூறிய யாதவின் குரலைக் கேட்டே, குகனின் தேகமெல்லாம் நடுங்கியது
பின்பு மூன்று குடும்பங்களும் வந்த வேலையெல்லாம் முடித்து விட்டு வீடு திரும்பினர்.
அன்றிரவு, நடந்த விஷயங்களை எல்லாம் மனதில் அசைபோட்டுக் கொண்டே உறங்க முற்பட்டவனின் செல்போன் நடுங்கவே, எடுத்துப் பார்த்தான் யாதவ்
அழைப்பது குகனென்று தெரிந்ததும், “சொல்லு குகா, என்ன விஷயம்?” என வினவ
“சார்… உங்கள ஆக்சிடன்ட் பண்ண வந்த அந்த லாரி டிரைவர் செத்துட்டான். ஆனா அந்த விபத்தால் அவன் சாகல, இது கொலை” என்றான் குகன்
அவனது “சார்” என்ற அழைப்பிலேயே சிறிது விழிப்படைந்து இருந்த யாதவ், முழுச்செய்தியைக் கேட்டதும், “வரேன்” என ஒற்றை வார்த்தையில் பதிலளித்து விட்டு, ஸ்டேஷன் நோக்கி விரைந்தான்
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
(தொடரும்…வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings