in

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (அத்தியாயம் 1) – விபா விஷா

நீரினைத் தேடிடும் ❤ (பகுதி 1)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாய்க்கு பிரசவ வலியெடுக்க, ஒரே பிரசவத்தில் ஒன்பது மகவுகளை ஈன்றெடுத்தாள் அவள்

அதில் தனது மூன்றாவது மகளுக்கு மட்டும் எண்ணற்றச் சலுகைகளை வாரி இறைத்திருந்தாள் அந்த அன்னை

இந்தப் புவனமெனும் பேரரசி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும் படைகளால் அரணமைத்துத் தன்னைப் பேரெழில் கொண்டவளாக அமைத்துக் கொண்டாள்

அத்தகைய இயற்கை அரணில் முதன்மையானவள், முக்கியமானவள்.. குறிஞ்சி மலையரசி தனது மொத்த சௌந்தரியத்தையும் கொண்டு உருவாக்கிய தேசம் தான் பாரத நாட்டின் தமிழகத்தில் உள்ள மழவர் நாடு.

அந்த மழவர் நாட்டின் விண் முட்டும் மலையின் உச்சியில் அரசன் அருஞ்சுனையனின் கோட்டை இருக்க, அம்மலையின் அடிவாரத்தில் முல்லைத் திணையின் காடுகள் விரிந்து அழகுக்கு அழகு சேர்த்தது

அன்றொருநாள் நள்ளிரவு நேரத்தில் அம்மலையின் உச்சியின் மீது மூன்றாம் பிறை நிலவு ஈசனின் திருச் சடையில் வீற்றிருப்பது போல் திகழ்ந்து பொன்னொளியைப் பாய்ச்சிக்கொண்டிருக்க, அந்த மலையடிவாரத்தில் இருக்கும் வனதேவதையின் கால் தொடும் பாக்கியம் பெற்ற பால் வாவியின் (பால் போன்ற நீர்ச் சுவையுடைய குளம்) அருகிலே, நம் கதையின் நாயகி தமிழினி இருந்தாள்

அவளைப் பாதாதிகேச வர்ணனை செய்ய எனக்கும் ஆசை தான்.. ஆனால் என்ன செய்வது? எனக்கு அவளது பாதி உருவம் தான் தெரிகிறது.

முகம் வரை மட்டும் பார்க்கையில்.. அழகே பொறாமைப்படும் பேரழகி என்பார்களே, அதுபோன்ற அழகி அவள். முழு வர்ணனைக்காக அவளை உற்று நோக்குகையில் தான் தெரிந்தது.. அவள் மார்புவரை புதை மணலில் புதையுண்டு இருந்தது.

அப்பேர்பட்ட அழகுக்கு எதன் பொருட்டு இத்தகைய ஆபத்து வந்திருக்கக் கூடும்? எதற்காக அவ்வாறு புதையுண்டிருக்க வேண்டும்? இதோ தன் உயிரைக் கூட மதியாது அவள் கரங்கள் இறுக்கப் பற்றியிருக்கும் குடுவையில் இருப்பது யாது?

அதனைத் தெரிந்து கொள்ள, நாம் பின்னோக்கிச் செல்லுதல் அவசியமாகிறது.

இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு…

மழவர் நாட்டின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள காந்தார வனத்தின், வெண் செண்பக மரத்துக்கடியில்.. வெண்ணிலா வதனத்தோடு.. தந்தநிற உடலோடு படமெடுக்கும் கருநாகமெனத் தொடை தொட்ட பின்னலைக் கையில் பிடித்துச் சுழற்றியபடியே தன் நாயகனுக்காய் காத்துக் கொண்டிருந்தாள் தமிழினி.

அவளது பொறுமை கற்பூரமாய்க் கரையும் நேரம்.. தொலைவில் புரவியின் குளம்படி கேட்க.. தனது மனங்கவர்ந்தவன் வந்துவிட்டான் என்றெண்ணி உவகைக் கொண்டது பெண் மனம்.

இது அரசவையாய் இருந்திருந்தால்..

“தனது தந்தையை வஞ்சகமாய்க் கொன்று ஆட்சி பறித்த சிற்றப்பனைத் தன் பதினான்கு வயதில் தலை கொண்ட மாவீரன்…

திசை எட்டும் எதிரி அற்றுத் தரணிக்குப் பெருந்தலைவனாய் ஈரேழு உலகத்தையும் கட்டி ஆளும் அசகாயச் சூரன்..

தன் தேசத்து மக்களெல்லாம் சுகமுற்றிருக்க, அவர்களைத் தனது இமை நிழலில் தனது மகவெனத் தாங்கும் மூவுலகும் கொண்டாடும் மாயோன்..

வாள் வீச்சில் 32 தேசத்து வீரர்களையும் ஒருசேரத் தோற்கடித்த சேயோன்..

சிற்றரசாய் இருந்த மழவர் நாட்டைப் பேரரசாக உயர்த்திய அரசர்க்கரசர்..

அருஞ்சுனையர் வருகிறார்.. பராக்.. பராக்..” என்று கட்டியம் கூறி இருப்பார்கள்.

ஆனால், இந்த நடுக்காட்டில் அந்த மன்னவன் வருகையை உணர்த்திய குதிரையின் குளம்படி சத்தமும், அவனைக் காணத் துடிக்கும் கண்களிலிருந்து கசியும் காதல் ரசமுமே அவனுக்கான கட்டியமாய் இருந்தது.

அவன் தொலைவில் இருக்கும் வரையில் அவனையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த ஞமலி, அவளருகே அருஞ்சுனையன் வந்து விட்டதும் தன் முகத்தினை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டு, தான் கோபமாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாள்.

அவள் கோபமாய்த் தான் இருக்கிறாள் என்று உணர்ந்தும் கூட, தனக்குள்ளாக மென்னகை புரிந்து கொண்டு, குதிரையை விட்டுக் கீழிறங்கிய அருஞ்சுனையன், அவளருகே சென்று அவள் தோளினைப் பற்றி “ஞமலி” என்றழைத்து அவளைத் தன் புறம் திருப்ப முனைந்தான்.

ஆனால் கோபம் என்னும் அரிதாரம் பூசிய பூமகளோ, அவனது கையைத் தட்டிவிட்டு பாராமுகமாய் நின்றிருந்தாள்

மேலும் இரு முறை அவளை விளித்தவன், அவள் அமைதியாய் இருப்பதைக் கண்டு, அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாய்க் கேலியில் இறங்கினான்

“என்ன தமிழினி, பிரிந்தவர் கூடுகையில் பேச்சுக்கு இடமேது என்று சொல்லாமல் சொல்லுகிறாயா?” என்று கூறிக் கொண்டே அவளை நெருங்குவது போல அருகே சென்றிடுகையில், விருக்கெனத் திரும்பியவள்,

“ஓ.. அரசருக்குத் திருக்குறள் கூடத் தெரியுமோ?” என வினவினாள்.

“ம்ம்.. தெரியும் தான். ஆனால் முப்பாலின் மூன்றாம் பாலை மட்டும் யான் இன்னும் கற்கவில்லையே..” என்று சோகம் போலக் கூறினான்.

இவ்வாறு கூறியதும், மேலும் கோபம் போல முகத்தை வைத்துக் கொண்டவள், அவனை முறைத்தவாறே, “நீங்கள் மொழிவதைக் கண்டால் எமக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லையே, முப்பாலையும் கரைத்துக் குடித்தவர் போலவே எமக்குத் தெரிகிறது?” என்று கேள்வியாய் நோக்கினாள்.

அதற்குப் பதிலுரைக்கும் விதமாக, “ஆம் தமிழினி.. முப்பாலையும் கரைத்துக் குடித்திருக்கிறேன் தான், ஆனால் பனையோலை வரையில் தான், இன்னும் படுக்கையறை வரை கற்கவில்லையே..” என்றவன் கூறி முடிக்கவும், அவளது பொன் வதனம் செஞ்சாந்து நிறமாகிட, உடனே அவனது பேச்சினிடையே குறுக்கிட்டாள்.

“போதும் ஐயா.. நான் எதைப் பேச வந்தால், நீர் எங்குச் செல்கிறீர்? முதலில் யான் கேட்கும் கேள்விகளுக்கு விடை பகருங்கள்” என்று கட்டளை போல தமிழினி கூறவும்..

“உத்தரவு மகாராணி” என்று கூறிவிட்டு அந்த மரத்தினடியில் அமர்ந்தவன், தமிழினியையும் அவள் கரம் பற்றி இழுத்துத் தனதருகே அமர வைத்துக்கொண்டான்.

“நான் சென்ற வாரமே உங்களைச் சந்திக்கக் கேட்டு ஓலை அனுப்பியும் ஏன் எம்மைச் சந்திக்க வரவில்லை?” தமிழினி.

“உனக்குத் தெரியாதா கண்ணம்மா… அப்பொழுது தான், சிம்ம நாட்டு அரசன் ரணசிங்கன் நம் நாட்டின் மீது போர்தொடுத்து வரவிருப்பதாய் எனக்குச் சேதி கிட்டியது. அதன் பொருட்டுத் தான் எம்மால் உன்னைச் சந்திக்க இயலவில்லை” என்றான்அருஞ்சுனையன்

“சரி போர் வந்துவிட்டதால் தான் என்னைச் சந்திக்க இயலவில்லை என்றாவது எமக்குப் பதில் ஓலை அனுப்பி இருக்கலாம் அல்லவா?” என்றாள் தமிழினி.

“ஹா.. ஹா.. ராஜாங்கத்தில் என்ன நடக்கிறதென்பதை நான் கூறித் தான் நீ புரிந்து கொள்ள வேண்டுமா என்ன? நுந்தை, மழவர் நாட்டின் முதன்மை அமைச்சர், நின் தாய் மாமன் மழவர் நாட்டின் முதன்மைத் தளபதி, இவர்களெல்லாம் உரைக்காததையா என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறாய்?” என்று அருஞ்சுனையன் வினவ

“யான், நீங்கள் போர் பற்றி உரைக்காததை வினவவில்லை. என் ஓலைக்கு ஏன் மறுமொழி எழுதவில்லை என்று தான் யான் வினவுவது. மக்கள் மட்டுமல்ல, மனையாளும் முக்கியம் தான் மன்னவரே..” என்று தமிழினி கூறவும், மனையாள் என்ற ஒற்றை வார்த்தையில் முகத்தில் ஆயிரம் சூரியன் உதித்தது அருஞ்சுனையனுக்கு.

“மனையாளென்றால் நீயே அரண்மனைக்கு வந்திருக்கலாமல்லவா?” என்று அருஞ்சுனையன் வினவிட,

“எங்கே? சென்ற முறை வந்தது போல் அரசவைக்கே வந்து விடட்டுமா?” எனப் பதில் கேள்வி கேட்டாள் தமிழினி.

“அரசவைக்கு அறிவுரை அளிக்கும் ஆசானாக வந்தாலும் சரி, அந்தப்புரத்திற்கு என்ன அடிமைப்படுத்தும் அரசியாக வந்தாலும் சரி, இரண்டுமே என்னைப் பொறுத்த வரையில் இன்பகரமான ஒன்று தான்” என்று தனது வார்த்தைகளாலேயே மீண்டும் அவளைச் சிவக்கடித்தான் அவன்.

“ஏன் நான் ஏற்கனவே ஒருமுறை அரசவைக்கு வந்து நடந்தது போதாதா? என்னை என் மாமனுக்கு மணமுடிக்க எந்தை ஆசிர்வாதம் கேட்க எம்மையும் என்மாமனையும் அரசவைக்கு அழைத்து வந்தால், ‘உம் மகள் ஞமலிக்கு யான் வேறிடத்தில் மணமகனை முடிவு செய்துள்ளோம். அனங்கனா’ல் தமிழினியைச் சமாளிக்க முடியாது, அவள் குறும்புத் தனத்திற்குக் கடிவாளமிட்டிடும் ஆண்மகனை யாமே பார்த்து மணமுடித்து வைப்போம்’ என்று கூறி நம் நேசத்தை அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படுத்தி விட்டீர்கள்” இவ்வாறு அவள் கூறவும்

இடை மறித்த அருஞ்சுனையன், “நீ மட்டும் என்னவாம்.. இதைப் பற்றி உன் தந்தை சபையிலே அனைவரின் முன்னிலையிலும் கேட்டிட,’தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.. ஆனால், வேந்தனை மீறிய கோவும் இல்லை.. எனவே இருவரின் வாய் மொழியும் ஒன்று போலவே இருந்தால் இந்தப் பேதை மனம் நிம்மதியுறும்’ என்று உமது சம்மதத்தையும் இலைமறைக்காயாக உரைத்துவிட்டாயே. இதில் அனங்கன் தான் பாவம். அத்தனை பேர் முன்னிலையில் அவனுக்கு ஏமாற்றமாகத் தான் இருந்திருக்கும். ஆனாலும் எவ்வளவு பெருந்தன்மையுடன் நம் முடிவை அவன் சிரித்துக் கொண்டே ஏற்றான் பார்த்தாயா?” என்று அருஞ்சுனையன் கூறவும்,

“ஆமாம் அரசே… என் மாமாவிற்கு என் மேல் பாசம் அதிகம் தான். அதன் பொருட்டே உங்களிடம் நான் பேச விழைவதை அறிந்ததும் எம்மை இங்கு அழைத்து வந்தவர், உங்களிடமும் சேதி சொல்லி அனுப்பி இருக்கிறார்” என்று அவன் கூற்றை ஒப்பினாள் தமிழினி

“சரி கண்மணி, இன்னும் ஒரு திங்களில் நம் எதிரிப்படை நமது நாட்டருகே வந்து விடுவார்கள்.. ஆதலால் இனி நாம் சந்திப்பது கடினம்..” என்று அவன் கூறுகையில் தமிழினியின் கண்கள் கரித்துவிட

“ஏன் கண்மணி போரினைக் கண்டு அச்சமுறுகிறாயா?” என் வினவினான் அருஞ்சுனையன்.

“இல்லை வேந்தே… யான் போருக்கு அஞ்சுவதும் இல்லை.. எம் மன்னரின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடுவதும் இல்லை. என் பிறை நுதலில் நின் செந்திலகம் வரிக்கும் நாள் தேடி யான் காத்திருப்பேன்.” என வீரத் தமிழ் மகளெனக் கூறினாள் தமிழினி.

அவள் பேச்சில் புளங்காகிதம் அடைந்த அருஞ்சுனையன், “ஆகா.. உன்னைப் போன்ற வீர மங்கையின் வாழ்த்து தான் இந்த அருஞ்சுனையனுக்கு அவசியம் அன்பே. போரில் நம் தேசம் பெரும் வெற்றி பெற வேண்டுமென எமக்கு வாழ்த்துக் கூறி அனுப்பு” என்று கூறிட

அவனது உடைவாளை எடுத்தவள், தன் கட்டை விரலை அதன் நுனியால் கீறி விட்டு, வாள் கொண்ட உதிரம் கொண்டே தன் மன்னவனுக்கு வீரத் திலகம் அணிவித்தாள்.

அவளது செயலால் மேலும் மகிழ்வுற்ற அருஞ்சுனையன், மெலிதாக அவளைத் தன தோளோடு அணைத்துவிட்டு, தனது உடைவாளை மீண்டும் பெற்றுக் கொண்டு தனது புரவியில் ஏறினான்

அவன் அப்புரவியின் மீது ஏறியது தான் தாமதம், அந்தப் பரி தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கிக் கொண்டு கனைத்தது

உடனே தமிழினி, “ஏய் அசுவினி.. என் மன்னவர் பத்திரம்.. தினவெடுத்த தோள் கொண்டவனை உன் தோளில் சுமப்பதால் கர்வம் கொள்ளாதே” என்று கூறவும்

அந்த அசுவினி அவளைத் தன் பின்புறத்தால் லேசாக இடித்து விட்டு சிறிது முன் சென்று மீண்டும் அதே போல் கனைத்தது

அதைக் கண்டு இருவரும் நகைத்தவாறே ஒருவரை விட்டு ஒருவர் விழி பிரிக்க இயலாது திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே பிரிந்தனர்.

அன்றிலிருந்து இருபத்தைந்து தினங்கள் கழித்துத் தான் தமிழினி புதை மணலில் சிக்குண்டு இருப்பது. அவள் முன் ஒருவன் நின்று கொண்டு அவள் மூழ்கிக் கொண்டிருப்பதை அரக்கத் தனமாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.

அதைக் கண்ட தமிழினி இரத்தமெனச் சிவக்கும் கண்களால் அவனைப் பார்க்க, முன்னவனோ,”யாம் கூறியதை நீ கேட்கவில்லை.. உமது உயிரை விட, அக்குடுவையே உமக்குப் பெரிதாய்ப் போய்விட்டது. இப்பொழுது கூட நீ எமது மனையாள் தான். அறிந்து கொள்..” என்று கூறவும்

அப்பொழுது தான் நினைவு வந்தவளாக, அதை வெடுக்கெனத் தனது கழுத்திலிருந்து அறுத்தவள், அவன் முகத்திலே அதனை விட்டெறிந்து விட்டு, “யான் யாரை மணாளனாக வரிக்கிறேனோ அவர் பூட்டுவது மட்டுமே எமக்கு மங்கள நாண், மற்றதெல்லாம் சாதாரணக் கயிற்றுக்குக் கூடச் சமமானதல்ல” என்று கூறினாள்.

அதைக் கேட்டுச் சீறிச் சினந்தவன், மேலும் வஞ்சகமாய்த் திட்டம் தீட்டினான்

தமிழினி இறந்து ஒரு வாரத்தில் போர் வந்திட, அவள் இறந்ததையே அறியாத அருஞ்சுனையன், அவளைக் காணவில்லை என்னும் வருத்தத்தையும், அவளுக்கு என்னவாகி இருக்குமோ என்ற அச்சத்தையும் மீறி போருக்குத் தயாராக வேண்டி இருந்தது.

அப்போரில் வழமை போல மழவர் நாட்டு வீரர்கள் தங்கள் வீரத்தின் மூலம் எதிரி நாட்டின் வீரர்களைச் சொர்கத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்க, அதே போர்க்களத்தின் ஓர் இடத்தில், கீழே வீழ்ந்து கிடந்தான் அருஞ்சுனையன்.

“வாள் கொண்டு என்னை வென்றிருக்கலாமே.. வஞ்சம் கொண்டு என்னை வீழ்த்தினாயே?” என்று அந்நிலையிலும் சிம்மமாய் அவன் கர்ஜிக்க,

“ரண சிங்கனுடன் இருந்த மற்றொருவன்.. ஹ்ம்ம் இதை விடப் பெரும் துரோகம் உமக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்பதை அறியாது நீ அறிதுயில் கொண்டிட யான் விழைவேனோ?” என்று கூறியவன், அருஞ்சுனையனின் காதருகே சென்று ஏதோ ரகசியமாய்க் கூறினான்.

பின்பு “இப்பொழுது நீ இம்மண்ணுள் புதைந்து உறைந்து போவாயாக.. இனி எப்பொழுதும் மீண்டெழ இயலாது..” என்று கூறியவாறு மீண்டும் அவன் இதயத்தில் வாளை இறக்கினான்.

அதைக்கேட்டு அந்த உயிர் பிரியும் வினாடியிலும் கை முஷ்டி இறுக்கிய அருஞ்சுனையன், “வஞ்சம் தீர்க்க, உன் உயிர் குடித்து, யான் எம் பழி முடிக்க, இனி ஒரு பிறப்பெடுத்தாவது உண்மை யாதென்று உணராமல் விடேன்” என்று உறுமியவாறே கண்மூடினான்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இனி கதை… நிகழ்காலத்தில் தொடரும்

வாசிக்க வாசிக்க நிறுத்த இயலவில்லை என்னால், எழுத்தாளர் “விபா விஷா” கதை சொல்லும் விதம் அப்படி

Twists and Turns என ஆங்கிலத்தில் சொல்வது போல், தொய்வின்றி கதையை கொண்டு சென்ற விதத்திற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு விபாவுக்கு 

காதல் / வரலாறு / நட்பு / மர்மம் / குடும்ப உறவுகள் என சுவாரஷ்யமாய் கதையை கொண்டு செல்வது,  வாசிப்பு அனுபவத்தை இனிமையாக்குகிறது 

இந்த தொடர்கதை, இனி வெள்ளி தோறும் வெளியிடப்படும்.

வெளியிடப்படும் போது, Notification பெற விரும்பினால், கீழே கொடுத்துள்ள Linkஐ கிளிக் செய்து Subscribe செய்யலாம் https://sahanamag.com/subscribe/

நன்றி,

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

contest@sahanamag.com

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(Next Episode will be Published on 29/01/2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

14 Comments

  1. விபா விஷாலின் கதை அருமை..‌ எனது படைப்பை அனுப்ப முடியவில்லை.. உங்களது email address கிடைக்கவில்லை… என்று வருகிறது..எவ்வாறு தொடர்வது..

  2. கதை படிக்க படிக்க விருவிருப்பாக சென்று முடிவடைகிறது. அதுவும் செந்தமிழில் எழுதிய எழுத்து நடை மிகவும் அழகாக உள்ளது. தன் காதலி இறந்ததுக்கூட தெரியாமல் போர் புரியும் வீரனை வஞ்சகத்தால் பழித்தீர்க்கும் எதிர்நாட்டு அரசர்.

  3. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன். விறுவிறுப்பாகச் செல்லும் என்னும் எதிர்பார்ப்பு வீணாகாது என்றே நம்புகிறேன்.

  4. நல்ல தொடக்கம், முன்ஜென்மம் கதை என்றாலே ஆர்வம் அதிகரிக்கும் எனக்கு.. உங்களின்‌ அடுத்த பகுதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்… வாழ்த்துக்கள் விபா…

வாழ்க்கையை மாற்றிய கேள்வி (சிறுவர் கதை) – எழுதியவர் : N.சாருநிதி (எட்டாம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

புன்னகையை தொலைத்து விடாதீர்கள் தோழிகளே!!! (வதனி பிரபு) – பல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரை