இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்றிரவு அவரவர் வீட்டில் இருக்கும் மூத்த தலைமுறையினர் உறங்கி பின், இளையவர்கள் ஒவ்வொருவராகத் தத்தமது வீட்டிலிருந்து வெளியேறி, யாதவின் வீட்டு மொட்டை மாடியில் குழுமினர்
அனைவரும் அங்கு வந்த பிறகும் கூட, யாதவும், ஜானவியும் மடிக்கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர்.
வெகுநேரம் பொறுமையுடன் அமைதியாக காத்தும் இருந்தனர்
ஆனால் அவர்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசாது, சிறிது நேரம் மடிக்கணினியில் ஏதோ வேலை செய்வதும், பின்பு எதையோ சொல்ல முடியாமல் தயங்கியபடி அமர்ந்திருப்பதும் என நேரம் கழிந்தது
அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் போக, கேள்விக் கணைகளால் துளைக்க ஆரம்பித்தனர்
மாற்றி மாற்றி அனைவரும் தங்கள் சந்தேகங்களை கேட்க, சலிப்படைந்த யாதவ், “கைஸ் கைஸ்.. ப்ளீஸ் நிறுத்துங்க. என்கிட்ட நீங்க விளக்கம் கேட்கறது எல்லாம் சரி தான், ஆனா நான் சொல்ற பதிலை நீங்க யாரும் நம்ப மாட்டீங்க. உங்களுக்கு என்ன, யாரால எங்களுக்கு இத்தனை ஆபத்து வருது? அது ஏன் வருது? அதானே தெரியணும், சொல்றேன். யாரால எங்களுக்கு ஆபத்துனு இப்ப எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு. ஏன் அவன் இப்படிப் பண்ரான்னு கூட எனக்குத் தெரிஞ்சுடுச்சு. அதனால, அவன எப்படிச் சமாளிக்கணும் அப்படினும் எனக்குத் தெரியும். தயவு செஞ்சு நீங்க பயப்படாம இருங்க” என்றான்
அதைக் கேட்டு, அங்கிருந்த அனைவருக்கும் பயம் அதிகமானதே தவிரக் குறையவில்லை.
“இங்கப் பாரு ஜானு, யாதவ் சொல்றத நாங்க நம்பறோம். ஆனா உங்களுக்கு ஆபத்தா இருக்கறது யாருனு எங்களுக்குத் தெரியணும். அவன் எங்க இருக்கான், என்ன செய்யறான், உங்களுக்குள்ள என்ன பகை, இதெல்லாம் தெரிஞ்சா நாம இன்னும் பாதுகாப்பா இருக்கலாமே?” என மாதுரி கேட்க
“இங்க பாரு மாது, அவன் எங்க இருக்கான், என்ன செய்யறான்னு எனக்கும் தெரியாது. ஆனா.. அவனோட குறிக்கோள் என்னனு நல்லாத் தெரியும். இதுவரைக்கும் எங்க ரெண்டு பேரையும் மனசளவுல பலவீனப்படுத்தி அவன் ஜெய்க்கலாம்னு நினைச்சு தான் எங்களைச் சுத்தி இருந்தவங்கள வச்சுப் பயம் காட்டிட்டு இருந்தான். ஆனா எங்களுக்கு இதையெல்லாம் செய்யறது அவந்தான்னு தெரிஞ்சுடுச்சுனு உணர்ந்துட்டா, அவனே எங்க முன்னாடி வந்துடுவான். அவன் என்னைக்கு எங்க முன்னாடி வர்றானோ, அன்னைக்கு அவனோட கதை முடிஞ்சுடும். சோ, ப்ளீஸ் நீங்க யாரும் பயப்பட வேண்டாம்” என்றாள் ஜானவி
இதற்கு மேல் என்ன கேட்டாலும் இவர்கள் இருவரிடமும் இருந்து எந்த விஷயமும் வரப் போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
அதற்கு மேல் கட்டாயப்படுத்த மனமின்றி, இயல்பாய் மற்ற விஷயங்களைப் பேசி சிரித்து இறுக்கமான அந்த சூழ்நிலையைச் சகஜமாக்க முயன்றனர்
அனைவரும் பேச்சில் மூழ்கியிருக்க மற்றவர் கவனத்தை கவராத வண்ணம் மெல்ல யாதவ் பார்த்து கொண்டிருந்த மடிக்கணினிக்கு அருகில் சென்றாள் மாதுரி
தன் தந்தையின் நிலையைப் பற்றியும், யாதவ் ஜானுவின் ரகசியம் பற்றியும் அறியத் துடித்த மாதுரி, அந்த மடிக்கணினியில் பதியப்பட்டிருந்த தகவல்களை வாசிக்கலானாள்
சிறிது நேரம் சென்ற பின்பே மாதுரி பேச்சில் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி, அவள் அங்கு இல்லை என்பதையும் உணர்ந்த ஜானவி சுற்றும் முற்றும் தேட, கண்களில் நீருடன் மடிக்கணினியில் முன்பு அமர்ந்திருந்தாள் மாதுரி
அதைக் கண்டு பதறிய ஜானவி, யாதவை அழைத்து ஜாடை காண்பித்தாள்
உடனே திடுக்கிட்டு எழுந்த யாதவ், வேகமாய் மாதுரியின் அருகில் சென்று, “மாது” என்றழைத்தான்
அவனைத் திரும்பிப் பார்த்த மாதுரி, அந்த மடிக்கணிணியைக் காட்டி, “இதெல்லாம் உண்மையா யாதவ்?” என்று வினவினாள்
பதில் கூற முடியாமல் மௌனமாக தலை குனிந்தான் யாதவ்
“என்ன என்ன” என மற்றவர்கள் பதட்டத்துடன் வினவ, “என் அப்பாக்கு யாதவ் பத்தியும், ஜானவி பத்தியும் இதுக்கு முன்னாடியே தெரிஞ்சுருக்கு. அதாவது, இவங்க முற்பிறப்பு உட்பட… ” என மாதுரி கூறவும்
“என்னது முற்பிறவியா?” என அதிர்ந்தனர்
மகிழவன் மாதுரியைத் தன்புறம் திருப்பி, “நீ என்ன சொல்ற மாது?”எனவும்
மாதுரியின் வார்த்தையின் வழி விரிந்தது, அருஞ்சுனையன் வரலாறு….
ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு, பாரத கண்டத்தின் தென்பகுதி முழுவதும், தமிழகமெனப் பெயர் கொண்டிருந்த பொற்காலமாய் இருந்தது
அந்தத் தமிழகத்தின் மத்திய பகுதியில், வான் முட்டும் மலைத் தொடர்களையும், அந்த மலைகளுக்கு இணையாக உயர்ந்தோங்கி கட்டப்பட்டிருந்த மாட மாளிகைகள் கூடக் கோபுரங்களென, பேரெழில் நகரமாய் திகழ்ந்தது மழவர் நாடு
அத்தகைய மழவர் நாட்டை, கயிலன் என்ற தாயுள்ளம் கொண்ட மன்னன் ஆண்டு வந்தான்
அவன் நாட்டில் மக்களனைவரும் ஐஸ்வர்யத்தில் மிதந்ததால், மனதில் போட்டி பொறாமை போன்ற தீயகுணங்கள் இன்றி மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர்
இதில் ஒரே ஒருவன் மட்டும் விதிவிலக்காய் இருந்தான். அந்த ஒருவன், மழவர் நாட்டின் அரசன் கயிலனின் தம்பி, ரத்ன சேனன்.
மரபுவழிப் பழக்கமாக மட்டுமின்றி, அரசனுக்கான தகுதித் தேர்விலும் முதல்வனாக இருந்த கயிலனுக்கே அரச பட்டம் அளிக்கப்பட, அதனால் நிம்மதியிழந்த ரத்ன சேனன், அவன் நெஞ்சத்துள் வஞ்சத்தை வளர்த்துக் கொண்டிருந்தான்.
அதை அறியாத கயிலனோ, தம்பியை தன் தனையன் எனப் பாதுகாத்தான்
பல அரச பொறுப்புகளை ரத்ன சேனன் முன்னின்று நடத்தும்படி செய்தான். அரசாங்கத்தில் அவனுக்கு, அரசனுக்கு அடுத்த இடத்தினை வழங்கியிருந்தான்
ஆனால் இவ்வளவு சலுகைகளை கொடுத்தும் கூட, அண்ணன் மேல் அசூசை கொண்ட ரத்ன சேனன், காட்டிற்கு வேட்டைக்குச் சென்ற ஒரு சமயத்தில், தனது ஆட்களை வைத்து அரசனை கொன்றுவிட்டு, புலி அடித்து அரசன் இறந்துவிட்டதாகக் கதை பரப்பினான்
அதை அறியாத கயிலனின் மனைவி நித்யவள்ளி, தனது மகன் அருஞ்சுனையன் சிறு பிள்ளையாக இருப்பதால், ரத்னசேனனே அடுத்த அரசனாகட்டுமென கூற, சிங்கத்தின் பீடத்தில் சிறு நரி அமர்ந்தது
அப்படியும் கூட, எங்கே வளர்ந்த பிறகு தன் அண்ணன் மகன் அரசுரிமைப் போட்டிக்கு வந்துவிடுவானோ என்றெண்ணி, அந்தப் பத்து அகவை பாலகனை கொல்ல திட்டமிட்டான் அந்த இரக்கமில்லா அரக்கன்.
ஆனால், அந்த முயற்சியில் அருஞ்சுனையனின் தாய் நித்யவள்ளி மரணித்தாள். சிறிய தந்தையிடமிருந்து எப்படியோ தப்பிய அருஞ்சுனையன், ஒரு காட்டில் அடைக்கலம் புகுந்தான்
அவனுக்கு இயற்கையிலேயே இருந்த மதிநுட்பத்தால், அந்தச் சிறு வயதிலேயே ரத்ன சேனனுக்கு எதிராக புரட்சிப்படை ஒன்றை ஆரம்பித்து, அதற்கு அவனே தலைவனானான் அருஞ்சுனையன்
அடுத்த நான்கு வருடத்தில், தன் தந்த இறந்த அதே தினத்தன்று.. அந்த ரத்னசேனன் மக்களை ஏய்ப்பதற்காக, அவர்களது பரிதாபத்தை சம்பாதிப்பதற்காக, “தன் அண்ணனின் நினைவு நாளில் தானே தன் கரங்களால் ஏழை எளியோருக்குத் தானம் செய்கிறேன்” என்ற பெயரில் நாடகமாடி கொண்டிருந்தான் .
அது தான் தக்க தருணமென எண்ணிய அருஞ்சுனையன், யாசகம் பெறுபவனைப் போல அரசவைக்கு சென்று, அவனது பாதுகாப்புப் படைகளை மீறி, ரத்ன சேனனின் சிரமறுத்தான்
அந்தப் பாவியின் ரத்தத்தால் தன் தந்தை கோலோச்சிய சிம்மாசனத்திற்கு அபிஷேகம் செய்தான்.
அன்றே.. அப்பொழுதே.. அரசனாகப் பட்டம் சூட்டிக் கொண்டான் அருஞ்சுனையன்
அரசவையில் இருந்த ரத்னசேனனின் ஆட்களை எல்லாம் விரட்டி அடித்து விட்டு, தன் நம்பிக்கைக்கு உரியவர்களை முக்கியப் பொறுப்பில் அமர்த்தினான்.
அப்பொழுது தந்தையின் உடலருகே ரத்னசேனனின் சின்னஞ்சிறிய மகன் அழுது கொண்டிருக்க கண்டான் அருஞ்சுனையன்
அதைக் கண்டதும், தானும் அது போலவே தந்தையின் மரணத்தின் பொழுது கதறியது அவன் நினைவுக்கு வந்தது
அதோடு, தானெனும் தந்தையின் மரணத்தை கண்ணால் காணவில்லை. ஆனால் இந்தச் சிறுபிஞ்சின் முன் அவன் தந்தை தலை துண்டிக்கப்பட்டு இறந்தானே, அதுவும் அந்தப் பாவத்தைச் செய்தது தானே அல்லவா என வருந்திய அருஞ்சுனையன், ரத்னசேனனின் மகன் உதயசேனனை தன்னுடனே வைத்துக் கொண்டான்
அருஞ்சுனையன் என்று அரியணை ஏறினானோ, அன்று முதற்கொண்டு அந்த மழவர் நாட்டுக்கு ஏறுமுகம் தான்.
எட்டுத் திசையிலும் ஜெயலக்ஷ்மியும் ராஜ்யலக்ஷ்மியும் அவன் கரங்களைப் பற்றுவதற்கு ஆவலாய் இருந்தனர்.
போர்க்கலையில், குறிப்பாக வாள் வீச்சில் மிகுந்த திறமைசாலியாய் இருந்தான் அருஞ்சுனையன்
அவனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதைப் பறைசாற்றும் விதமாக, அரசர்களுக்கு இடையே நடந்த போட்டி ஒன்றில், பாரதத்தின் முப்பத்தி இரண்டு தேச மன்னர்களையும் வெற்றிக் கொண்டான்.
அப்படிப்பட்ட வீராதி வீரன், மருத்துவத்திலும் முதன்மையானவனாக இருந்தான்.
தற்காப்புக் கலை கூட மருத்துவத்தின் ஒரு பகுதி தான் என்று கருதிய அவன், தன் நாட்டினை காக்கும் பொருட்டு, ஒரு சக்தி வாய்ந்த ஆயுதத்தை, மருத்துவம் கொண்டு கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டான்
அருஞ்சுனையன் கண்டறிந்த அந்த வேதி திரவம், யாராலும் தீர்க்க முடியாத வியாதிகளுக்கு அருமருந்தாக இருந்தது
ஆனால் குறிப்பிட்ட ஒரு வெடிபொருளுடன் அது இணைய நேர்ந்தால், சிறு அளவிலான ஒரு கிராமத்தையே அழிக்கும் சக்தி வாய்ந்த கொலை ஆயுதமாக இருந்தது
இப்படிப்பட்ட ஒரு அற்புத வேதிப் பொருளைப் பற்றி, அதுவரை எவருமே அறிந்ததில்லை. ஆனால் அருஞ்சுனையன் ஒரு கொலை ஆயுதத்தைக் கூட உயிர் காக்கும் மருந்தாக உபயோகிக்க இயலும் என்று கண்டறிந்தான்
இப்படி ஒன்றைத் தான் கண்டறிந்திருப்பதாய் தனக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரியப்படுத்தி விடலாம் என்றெண்ணிய அருஞ்சுனையன், தனது முதன்மை அமைச்சர் பரமன், படைத் தளபதி அநங்கன், மற்றும் தனது தம்பி உதயசேனனுடன் ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்றான்.
அங்குச் சென்று தான் கண்டறிந்த ஆயுதத்தைச் செயல்முறை விளக்கம் காண்பிக்கும் பொருட்டு அதன் சிறு துளியை எடுத்துத் தூரத்தில் எரிய, அது ஒரு சமவெளியில் பெருஞ்சத்ததுடன் விழுந்து, அந்தப் பகுதியே சற்று நேரத்தில் சாம்பலானது
அதைக் கண்ட மற்ற மூவரும் அதிசயித்துப் போயினர். அவர்கள் அருஞ்சுனையனை வெகுவாகப் பாராட்டினர்.
ஆனால் இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில், அந்த வேதிப் பொருள் இருந்த குடுவை காணாமல் போனது
அதனால் அருஞ்சுனையன் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானான்
அதன் பின் வந்த சிம்ம நாட்டுடனான போரில், அவனது படைவீரர்கள் ரணசிங்கனுடைய படைவீரர் பலரை வீர சொர்க்கம் அனுப்பும் வேலையை அற்புதமாகச் செய்தும் கூட, அப்போரில் கொல்லப்பட்டான் அருஞ்சுனையன்
அந்தப் போரில் அவனுடைய தம்பி உதயசேனனும், முதன்மை அமைச்சர் பரமனும் கூட மாண்டனர்
ஆனால் இதில் அதி முக்கியமான விஷயம், படைத் தளபதியின் தலைமறைவு தான்
அநங்கன் என்ற படைத் தளபதி, அந்தப் போரில் கலந்து கொள்ளவில்லை. போர் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பே அவன் தலைமறைவானான்
அவன் தலைமறைவானதற்கும், போரில் அருஞ்சுனையன் வஞ்சகமாய்த் தோற்றதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்க வேண்டும் என்று குறிப்பில் இருக்கிறது என, தான் வாசித்த அருஞ்சுனையன் வரலாற்றை தன் நண்பர்களிடம் கூறி முடித்தாள் மாதுரி
அனைவரும் அதிர்ச்சியாக யாதவைப் பார்க்க, “எல்லாமே உண்மை தான்” என்றான் யாதவ்
“அந்த அநங்கன் யாருனு உங்களுக்கு தெரியுமா? எங்க அப்பாவோட ஸ்டூடண்ட்னு சொல்லிட்டு யாதவ் பிறந்தநாள் அன்னைக்கு வந்தானே, ஆனந்தன். அதான் இப்ப குண்டடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்கானே அவன் தான்” என்றாள் மாதுரி
தான் மடிக்கணினியில் பார்த்த படங்களை கொண்டு, தான் புரிந்து கொண்டதை மற்றவளுக்கு தெரிவித்தாள் அவள்
“அப்ப இவ்வளவு நாள் உங்கள கொல்ல முயற்சி செஞ்சது அந்த அநங்கன் தானா? இவ்வளவு நாளும் மறைஞ்சிருந்து வேலை செஞ்சவன், இப்ப வெளில வந்து உங்கள கொல்ல முயற்சி செஞ்சு, தன்னை யாரோ சுட்டுட்டதா நாடகமாடி, பாதுகாப்புக்காக ஹாஸ்ப்பிட்டல்ல போய்ப் படுத்துகிட்டானா? அவனை.. என்ன செய்யறேன் பாருங்க..” என்று கோபமாய் குகன் எழுந்து செல்லக் கிளம்ப, அவனை தடுத்த யாதவ்
“இல்ல, நீங்க நினைக்கற மாதிரி, இதுக்கு காரணம் அநங்கன் இல்ல” என்றான்
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
(தொடரும்… வெள்ளி தோறும்)