இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஜானவியின் கைப்பையிலிருந்து விழுந்த பொருளை யாதவ் அதிர்ச்சியுடன் பார்க்க, அவனது அதிர்ச்சிக்கும் மேலாக அதிர்ச்சியடைந்தாள் ஜானவி
பின்பு தனக்குள், “ச்சே.. இத எப்படி இத்தனை நாளா மறந்தேன்” என்று தனது தலையில் தட்டிக் கொண்டே அதைக் குனிந்து எடுக்கப் போனாள்
அதற்குள் அவளை முந்திக் கொண்ட யாதவ், “இது ஆதி சாரோட வாட்ச் இல்ல? அவரே ரீமாடல் பண்ணின ஸ்மார்ட் வாட்ச்னு சொன்ன ஞாபகம். இதெப்படி உன்கிட்ட வந்துச்சு? ஏன் கேக்கறேன்னா, இதை அவர் மாதுவை கூடத் தொட விடமாட்டார்” எனவும்
அவன் கூறிய வார்த்தைகளில் மேலும் கோபமடைந்த ஜானவி, “இதை நான் திருடினேன்னு நினைக்கறீங்களா?” எனவும்
“அம்மா தாயே.. இந்த வாட்ச் அவர் உனக்கு எப்போ கொடுத்தார்னு தான் கேட்டேன். அதுவும் என் இன்வெஸ்டிகேஷனுக்காகத் தான் கேட்டேன். இப்போவாவது என்கிட்ட சொல்லுவியா?” என்று அவனும் எரிச்சலுடன் கூறினான்
அவன் கூறியதைக் கேட்டு கொஞ்சம் சமாதானமானாலும், அதை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் அவனை முறைத்துக் கொண்டு நடந்ததைக் கூறினாள்.
“இத ஆதி சார் அவர் காணாம போன அன்னைக்குக் கொடுத்தார். அதாவது அவரு ரத்த வெள்ளத்துல உயிருக்குப் போராடிகிட்டு இருந்தப்ப இது உன்னோடது தான், உனக்குத் தான் இது சேரணும்னு சொல்லி என்கிட்டக் குடுத்தார்” என்று கூறவும்
“ஏய்.. ஏய்.. ஏன் ஜானவி இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லல? சரி விடு.. ஆனா அவரு இத மட்டும் குறிப்பா ஏன் உனக்குக் கொடுத்தார்?” என்று அவன் கேட்க
“இந்த வாட்ச எதுக்காக எனக்குக் கொடுத்தார்னு எல்லாம் எனக்குத் தெரியல. அதைப் பார்த்திட்டு விவரம் கேட்கறதுக்குள்ள அந்தக் கொலைகாரனுங்க என்னையும் தேடி வரமாதிரி இருந்ததால, என்னை உடனே அங்கிருந்து கிளம்பச் சொல்லிட்டாரு, நானும் பயத்துல கிளம்பி வந்துட்டேன்” என, அன்று கூற மறந்த மற்ற விவரங்களை யாதவிடம் தெரிவித்தாள் ஜானவி
“ம்…” என அவன் யோசனையில் மூழ்க
“நான் ஏன் இதைப் பத்தி உங்ககிட்ட அன்னைக்கு சொல்லலைன்னா, அப்ப எனக்கிருந்த பயத்துலையும், பதட்டத்துலயும் எனக்கு எதுவுமே ஞாபகமில்ல. அப்பறம் உடனே நம்ம கல்யாணம் அது இதுன்னு நிறைய ஆச்சர்யமான நிகழ்வுகள் எல்லாம் நடந்ததுனால இதைப் பத்தி எனக்கு யோசனையே வரல” என்றாள்
அவளது இந்த வாதத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டான் யாதவ். ஏனெனில், அவன் மனித மனங்களைப் படிப்பவன். அதோடு, அவன் போலீஸ் என்பதால், தனக்கு எதிரில் இருப்பவரின் கண்களை பார்த்தே அவர் கூறுவது உண்மையா பொய்யா என பெரும்பாலும் கணித்துவிடுவான்
அதனாலேயே அவளது ஆழ்மன உணர்வுகளைப் புரிந்து கொண்டான். ஆனால் அவனுக்கு ஒரு விஷயம் தான் மிகவும் உறுத்தியது
அது என்னவெனில், தன் கைக்கடிகாரத்தை யாரும் தொடக்கூட அனுமதிக்காதவர், மரணம் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து வேறு வழியின்றி தன் கடிகாரத்தை ஜானுவிடம் தந்தாரா? அல்லது அதில் ஜானவிக்கு அதில் ஏதேனும் செய்தி சொல்லி இருக்கிறாரா என யோசித்தான்
என்ன தான் யோசித்தும் அவர் ஏன் ஜானவிக்கு அதை வழங்கினார் என்ற காரணத்தை யூகிக்க முடியாமல் போக, தொடர்ந்து யோசனையுடன் ஜானவியைப் பார்த்தான்
ஆனால் அவள் இவனை கவனியாது, அதி மும்முரமாய் அந்த வாட்ச்சில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கவும், அவளை அருகில் வரும்படி அழைத்தான்
“என்ன பண்ற? வாட்ச்ல விளையாடறியா?” என கராறாகக் கேட்கவும்
“என்ன நீங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரி பேசறீங்க?” என முகம் சுளித்தவள், “நான் இந்த ஸ்மார்ட் வாட்ச அன்லாக் பண்ண முயற்சி செய்யறேன்” என்றாள்
“அன்லாக் பண்றதுன்னா.. உனக்கு பாஸ்வோர்ட் தெரியுமா?” எனவும்
“எனக்குப் பாஸ்வோர்ட் தெரியாது, ஆனா கொஞ்சம் முயற்சி செஞ்சா கண்டுபிடிச்சிடுவேன். அதுக்கு முதல்ல நான் என் போன எடுக்கணும்” என்று கூறிவிட்டு, அவளது போனை எடுத்து நோண்டியவள், சிறிது நேரத்தில்.. “எஸ்.. எஸ்.. எஸ்.. யுரேகா..” என்று கத்தினாள்
அதற்குள் உணர்ச்சிவயப்பட்ட அவனோ, “என்ன என்ன கண்டுபிடுச்சுட்டியா?” என்று ஆவலே உருவாகக் கேட்க
“யாதவ் கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றபடி அத ஸ்மார்ட் வாட்சை எடுத்தவள், அடுத்த நொடி அதை அன்லாக் செய்தாள்.
“எப்படி ஜானு? எப்படி இவ்ளோ சீக்கரமா அன்லாக் பண்ணின? சைபர் கிரைம் போலீஸ் கூட இவ்வளவு சீக்கிரமா இத கண்டுபிடிச்சுருக்க மாட்டாங்க. நீ ஹேக்கிங் ஏதாவது படிச்சுருக்கியா என்ன?” என யாதவ் ஆச்சர்யத்துடன் கேட்க
சிரித்த ஜானவி, “ஹேக்கிங்கும் படிக்கல பேக்கிங்கும் படிக்கல. ஒருமுறை ஆதி சார் அவரோட மெயில் ஐடி பாஸ்வோர்ட் தந்து அவர் மெயில்ல எதையோ பார்க்க சொன்னாரு. அப்ப பாஸ்வோர்டஸ்னு தனியா சேவ் பண்ணி வச்சுருந்தார். அந்த மெயில் ஐடிய ஓபன் பண்ணி இந்த வாட்ச்சோட பாஸ்வோர்ட் கண்டுபிடிச்சேன், சிம்பிள்” என்றவள், அந்த கடிகாரத்தின் உள்ளிருந்த சில கோப்புறைகளை திறந்து பார்த்தாள்
அதே நேரம், “யாதவ்… அந்த இளங்கோ மறுபடி வந்திருக்கார் ப்பா” என யாதவின் அன்னை அழைக்க, தன் அன்னையை நிராதரவாக்கி அவர் சாவுக்கு காரணமான அந்த மனிதரை, இனி இந்த வீட்டுப் பக்கமே வரவிடாது செய்ய வேண்டுமென நினைத்தாள் ஜானவி.
ஆனால் யாதவ் வரை அருகிலேயே வைத்துக் கொள்ள நினைத்தான். அதாவது, திருடன் கண்ணில் படாத தூரத்தில் மறைவாய் இருப்பதை விட, கண்முன் இருந்தால் அவனது ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கலாம் என்பது அவன் எண்ணம்
அந்த எண்ணத்துடன் வெளியே வந்த யாதவ், இளங்கோவைப் பார்த்து வரவேற்கும் முகபாவனையுடன் சிரிக்க, பதிலுக்கு இளங்கோவும் தன் அத்தனை பற்களையும் காட்டி சிரித்தார்
அதைக் கண்டு எரிச்சலடைந்த ஜானவி, “என்ன சிரிப்பு ?” என தன் கணவனிடம் எரிந்து விழுந்தவள், இளங்கோவிடம் திரும்பி.. “எதுக்கு வந்தீங்க?” என்றாள்
மீண்டும் தனது பற்களைக் காட்டிய இளங்கோ,”திடீர்னு எனக்கு உன் ஞாபகம் வந்துடுச்சு மா.. அதான் பாக்க வந்தேன்” என்று முகத்தில் சோகம் இழையோட கூறினார்
“அப்படியா சரி.. அதான் இப்போ பார்த்துடீங்கல்ல? கிளம்புங்க” என்றாள் ஜானவி கொஞ்சமும் இரக்கமின்றி
ஆனால் மகளின் நிராகரிப்பை கொஞ்சமும் கவனியாதவராய், “ஏம்மா வீட்டுக்கு வந்தவனுக்கு காபி, டீ எதுவும் குடுக்க மாட்டியா?” எனவும், முன்னொரு அவள் கொடுத்த உப்பு காபியின் நினைவில் அதிர்ந்து போனான் யாதவ், அதற்கு நேர்மாறாய் குஷியானாள் ஜானவி
“காபி தான இதோ ரெண்டே நிமிஷத்துல வரேன்” என மகிழ்ச்சியுடன் கூறியவள்
“யாதவ் உங்களுக்கும் காபி வேணுமா?” என கணவனிடம் கேலிப் பார்வையுடன் கேட்க
“இல்ல ஜானு நான் நேத்தே குடுச்சுட்டேன்” என்றான் அவசரமாய்
“ஜானுமா எனக்கும் ஒரு காபி.. கொஞ்சம் சக்கரை குறைவா கொடும்மா” என்றார் யாதவின் அப்பா
“அப்பா.. நீங்க இந்த நேரத்துக்குக் காபி குடிக்க வேணாம், வாங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என சட்டென கூறிய யாதவ், தந்தையை அழைத்துக் கொண்டு அவரது அறைக்குள் சென்றான்.
அறைக்குள் நுழைந்த சர்வேஸ்வரன், “டேய் ஏண்டா.. என் மருமக கல்யாணம் ஆகி வந்த இத்தனை மாசத்துல இப்போ தான் காபி போடறேன்னு போய் இருக்கா.. அதுவும் முகத்துல அவ்வளவு சந்தோஷத்தோட. அந்தக் காபிய என்னை குடிக்க விடாம பண்ணிட்டியே” என அங்கலாய்த்தார்.
“ஓஹோ உங்க மருமக அருமையா போடற காப்பிய உங்கள குடிக்க விடாம தடுத்துட்டனா? அப்பறம் என்ன சொன்னீங்க… காபில சக்கர கம்மியா போட சொன்னீங்களா? உங்க மருமக சக்கரப் போட்டா தான, அத நீங்க கம்மியா போட சொல்லுவீங்க?” எனவும்
“ஏய் என்னடா சொல்ற? காப்பில சக்கரை போடாம உப்பா போடுவாங்க?” என குழப்பமாய் கேட்டார்
“ஆமாப்பா.. ஆமாம். உங்க மருமக காபில சக்கரைக்குப் பதிலா உப்பு தான் ப்பா போடுவா” என்றான் பரிதபமாய்
“மகனே என்னடா சொல்ற?” என இன்னும் நம்பாமல் கேட்டார் அவன் தந்தை
“இன்னும் நம்பலையாப்பா நீங்க? அனுபவப்பட்டவன் சொல்றேன் கேட்டுக்கோங்க. இன்னும் நம்பிக்கை இல்லைனா, மக கையால காபி குடுச்சுட்டுத் தான் போவேன்னு உயிரை பணயம் வச்சுட்டு உக்காந்துட்டு இருக்காரே அந்த பெரிய மனுஷன், அவர் ரெண்டாவது சிப் அந்த காபிய குடிச்சாருன்னா, ஒரு பக்கத்து மீசையை எடுத்துக்கறேன் நான்” என சபதம் செய்தான் யாதவ்
“அடேய் என்னடா இவ்ளோ பெரிய சவால் எல்லாம் விடற?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, காபியுடன் முன்னறைக்கு வந்தால் ஜானவி
மகள் காபியை கொண்டு வரக் கண்டதும், ஆவலுடன் தானே எழுந்து காபி கோப்பையை வாங்கிய இளங்கோ, சூடாக இருப்பதைக் கூட பொருட்படுத்தாது வாயில் வைத்து சர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறிஞ்சினார்
காபி அவர் நாவில் பட்டது தான் தாமதம், அக்கணமே அவரது கண்விழிகள் இரண்டும் பிதுங்க, தொண்டையில் காபி சிக்கி புரையேற, வாயிலிருப்பதைத் துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், சைகையிலேயே ஜானவியிடம் விடைபெற்று விட்டுக் கிளம்பிவிட்டார். அதாவது அங்கிருந்து ஓடியே விட்டார்.
அதைப் பார்த்து இடி இடியென சிரித்துக் கொண்டே யாதவ் வெளியே வர, சற்று பயந்த முகபாவத்துடன் வந்த சர்வேஸ்வரன், “என்னம்மா குடுத்த அவருக்கு? காபில உப்பு போட்டுட்டியா?” எனவும்
“ச்சே ச்சே… இல்ல மாமா. வேண்டப்பட்டவங்களுக்குத் தான் உப்பு, இந்த மாதிரி வேண்டப்படாதவங்களுக்கு மிளகாய்ப் பொடியும் மூக்குப் பொடியும்” என சிரிக்காமல் கூற
“அம்மா தாயே… இனி எனக்கு என்ன வேணும்னாலும் என் பொண்டாட்டிகிட்டயே கேட்டுக்கறேன் மா, ஆள விடு” என எஸ்கேப் ஆனார் அவர்
அதைக் கேட்டு யாதவும் ஜானவியும் சிரிப்பை அடக்கிக் கொண்டு தங்கள் அறைக்கு வந்து, துப்பு துலக்கும் பணியை தொடர்ந்தனர்
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
(தொடரும்… வெள்ளி தோறும்)
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings