www.sahanamag.com
சிறுகதைகள்

அன்னபூரணி (சிறுகதை) – ✍ லக்ஷ்மீஸ் பவன் – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு 

நித்யானந்தகரீ வராபயஹரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ …

நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்’வரீ…

“ருக்கு, எங்க இருக்க? கரண்ட் போய்டுத்தா?”

“ஆமாண்ணா… சித்த கண்ணசந்தேன், என்னமோ கால் இழுத்துண்டு போறதேனு எழுந்து உக்காந்துண்டு இருக்கேன்”

“ஹ ஹ ஹா” என நகைத்தார் சீனிவாசன்

“என்னன்னா குளிர் பிச்சிண்டு போறது, இப்போ என்ன கெக்கே பெக்கேனு சிரிப்பு உங்களுக்கு?” எனக்  கேட்டாள்

“இல்லேடி, வல்லரசு அமெரிக்காவில் கரண்ட் கட். அதை நினைச்சேன், சிரிப்பு வந்துடுத்து. ஆஸ்டினும் இந்தியா மாதிரினு சொல்றாளே, அதுனாலயோ என்னமோ”

“அம்மா… அப்பா…” வெளியே மகன் சுரேஷின் குரல் பதட்டமாய் ஒலித்தது

“என்னடா கோண்டு? (சுரேஷின் செல்லப் பெயர்)”

“அப்பா, நம்ம கவுண்டில பனி ஜாஸ்தி ஆயிடுத்தாம். பனி வெயிட்டு தாங்காம பவர் லயின்ஸ் மேல விழுந்து கட் ஆயிடுத்தாம். மரங்கள் வேற பல எடத்துல விழுந்து பவர் லயின்ஸ கட் பண்ணிடுத்தாம். இப்போதைக்கு பவர் வர்றது கஷ்டம் ப்பா” என்ற சுரேஷின் முகத்தில், இதுவரை பார்த்திராத பதட்டம்

“என்னடா சொல்ற? இந்த ஊருல, எல்லாமே கரண்ட் தானேடா, அடுப்பு கூட கரண்ட்ல தானடா ஓடறது” பேசிக் கோண்டே இருந்தவர்கள், ருக்குவின் அலறல் கேட்டு திரும்பினர்

“அம்மா அம்மா என்னாச்சு ‘ம்மா?”

“கோண்டு குளிர் தாங்கலைடா எனக்கு. கால் இழுக்கறது, கையெல்லாம் மறத்து போறதுடா. அம்மா அன்னபூரணி, உன்ன பாக்காமலே போய் சேர்ந்துடுவேனா. பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ…” மந்திர ஜபத்தைத் தொடர்ந்தாள் ருக்கு மாமி

மருமகள் கோகிலாவும், குழந்தை துஷ்யந்தும் செய்வதறியாமல்  அறையின் ஒரு ஓரத்தில் குளிரில் நடுங்கியபடி இருந்தனர்

“அம்மா, பயப்படாத. இந்த சாக்ஸ் போட்டுக்கோ. நான் இப்ப வந்துடறேன்”

போனில் யாருடனோ பேசி விட்டு வந்த சுரேஷ், “கோகி நீ அம்மா, அப்பாவைக் கூட்டுன்டு நம்ம மேத்யூஸ் வீட்டுக்கு போயிடு. நான் அவாகிட்ட பேசிட்டேன். அங்க ஏற்கனவே பதினாறு பேரு இருக்காளாம், உங்க நாலு பேரையும் வரச் சொல்லிட்டா. என்னை பாலு வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்னான். நான் பாலு ஆத்துக்குப் போறேன், உடனே கிளம்புங்கோ. கோகி ஹரியப்!” என்றான் 

அம்மாவின் மிரட்சியைப் பார்த்து, “அம்மா, மேத்யூஸும் அவா ஆம்படையாளும் நல்ல மாதிரி  மா. இப்போ உன்னோட ஆச்சாரம் அனுஷ்டானம் பத்தி நினைக்காதே. அவா ஆத்துல கேஸ் அடுப்பு இருக்கு. நம்ம சுத்த சைவம்னு அவாளுக்கு தெரியம், கோகிலா பாத்துப்பா. இன்னும் ரெண்டு நாள் தான், அப்பறம் எல்லாம் சரியாகிடும். பயப்படாம கிளம்பு. மறக்காம அப்பா மாத்திரை எல்லாம் எடுத்துக்கோ” என பெற்றவளை சமாதானம் செய்தான் சுரேஷ் 

அனைவரும் திட்டமிட்டபடி பிரிந்து சென்றனர்

மேத்யூஸ் வீடு, மில்லியன் டாலர் ஹோம் என்றழைக்கப்படும் பங்களா. சுரேஷின் குடும்பத்தினருக்கு ஒரு அறை ஒதுக்கி இருந்தனர்

ருக்கு மாமி கூச்ச சுபாவம் ஆதலால், அறைக்குள்ளேயே முடங்கி இருந்தாள்

மருமகள் கோகிலாவிடம் சூடான தண்ணீர் மட்டும் வாங்கிக் குடித்தாள்

சதா சர்வ காலமும், வாய் அன்னபூரணி அஷ்டகத்தை ஜெபித்துக் கொண்டிருந்தது. பேரன் துஷ்யந்த், பாட்டியோடு அமர்ந்து அவள் கூறும் மந்திரத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தான்

பசியினாலும் பயத்தினாலும், ருக்கு மாமியின் கண்கள் சொருகின

அப்போது, பளீர் வெளிர் நிறத்தில் ஒரு பெண், முகத்தில் புன்சிரிப்போடு ஒரு கிண்ணத்தை நீட்டினாள் 

அவள் கொடுத்த சூப் சூடாகவும் சுவையாகவும் இருக்க, உடனே காலி செய்தார் ருக்கு மாமி

பசி தீர்ந்து நிமிர்ந்த அதே நேரம், துஷ்யந்த் தன் மழலை குரலில், “பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ…” சொல்லிக் கொண்டே, “பாட்டி இந்த உம்மாச்சி எப்படி இருக்கும்” எனக் கேட்க

ருக்கு மாமி கலங்கிய கண்களோடு, மிஸஸ்.மேத்யூசை கை காட்டினாள்

அங்கு இருந்த அனைவரின் கண்களும் கலங்கித் தான் போயின !!!

 

(முற்றும்)

Similar Posts

2 thoughts on “அன்னபூரணி (சிறுகதை) – ✍ லக்ஷ்மீஸ் பவன் – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு 
  1. உயிர் காக்க உணவு தேவை என்னும்போது யார் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடவேண்டும்/சாப்பிடலாம் என்பது பொது விதி! அதன் பின்னர் நம் ஆசாரங்களை வழக்கம்போல் கடைப்பிடிக்கலாம். புராண/இதிஹாசக் கதை ஒன்று கூட இதை ஒட்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: