in ,

முத்தமும் சத்தமும் (சிறுகதை) – ✍ செராமு, தஞ்சாவூர்

முத்தமும் சத்தமும் (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 102)

ழக்கத்துக்கு மாறாக அன்று அலுவலகம் விட்டுப் பேருந்தைப் பிடிக்கவே  மணி ஆறாகி விட்டது மாலதிக்கு. நாகையிலிருந்து ஒரு மணிநேர பயண தூரத்தில் இருந்த பள்ளி ஒன்றில் அலுவலகப் பணியில் இருந்தாள்

நாகை பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அவள் வீடு.

கையில் ஒரு டூவீலர் இருந்ததாலும், பள்ளிக்குப் பக்கத்திலேயே சிறியதாக ஒரு பேருந்து நிறுத்தம் இருந்ததாலும், எப்படியோ சமாளித்து வந்தாள்.

கொரோனா பெருந்தொற்றுக் காலம் என்பதையும் பொருட்படுத்தாமல், பள்ளியில்

வேலை நெருக்கடி அதிகமாகவே இருப்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது.

அன்றும் அப்படித் தான், திடீர் மீட்டிங். ஜூமில் தான் என்றாலும் வழக்கம் போல் நேரத்தை விழுங்க  மீட்டிங் முடித்து  ஓடோடி வந்து பேருந்தைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

மூச்சிரைக்க அவள் ஓடி வரவும், பிள்ளைதாச்சி போல் ஒரு பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது. பேருந்தின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு மனித வெள்ளத்தில்  அவள் ஐக்கியமானாள்.

கம்பியைக் கூடப் பிடித்துக் கொண்டு நிற்க முடியாமல் அவள் திணறிய போது “எல்லோரும் மாஸ்க் போட்டுக்கோங்க.” என்ற கண்டக்டரின் உத்தரவிற்கிணங்க சிலர் மூக்குக்கும், சிலர் வாயிக்கும், சிலர் தாடிக்கும் போட்டிருக்க, மாலதிக்கு மூச்சு முட்டுவதைப் போலிருந்தது.

‘ச்சே… எல்லோரும் இப்படி நெருக்கிப் பிடித்துக் கொண்டு எங்க தான் போறாங்களோ?’  என மனத்தில் நினைத்த போது

“நாளை ஆடி அமாவாசை” என பக்கத்தில் சீட் கிடைத்து உட்கார்ந்துகொண்டு வந்த பெண்மணி அலைபேசிக் கொண்டிருக்க, கணவன் மாறனின் நினைவு அவளைக் கப்பிக் கொண்டது

மிகவும் ஆச்சாரமானவன், சாதாரண அமாவாசைக்கே அகத்திக்கீரை பச்சரிசி எள் சகிதம் ஆறு குளம் தேடிச் செல்பவன்.

‘நாளை ஆடி அமாவாசை வேறா?’ என மலைத்தவளுக்கு, கூடவே கவலையும் ஒட்டிக் கொண்டது.

அவனுக்கு, “இப்ப தான் பஸ் ஏறிருக்கேன்” என ஒரு மெசேஜ் அனுப்பலாம் என நினைத்தவளுக்கு, கால்வலியும் களைப்பும் கூடவே நெருக்கிய கூட்டமும் ஒத்துழைக்கவில்லை.

அது மட்டுமில்லாமல் இந்நேரம் அவர் வீட்டுக்கு வந்திருந்தால், கால் பண்ணி “கிளம்பிட்டியா? எங்க வந்துகிட்டிருக்க? இருட்டிட்டே…நா வேணுணா பஸ்ஸ்டாண்ட் வந்து உன்னக் கூட்டிக்கவா?”

இப்படி ஏதாச்சும் ஒன்றாவது கேட்கக் கூடாதா அவர்? என்ற எண்ணமும் மேலிட, எரிச்சலுடன் நின்றபடியே அவள் கண்ணை மூட எத்தனிக்கவும், அந்த அலைபேசிப் பெண்மணி இறங்கும் இடம் வரவும் சரியாக இருந்தது.

சாக்லேட்டைக் கண்ட  காலேஜ் பெண்ணாட்டாம் மகிழ்ச்சியில் துள்ளி  சடக்கென்று  உட்கார்ந்தாள் மாலதி.

இடம் கிடைத்தத் தெம்பில்  கணவன் மீது சற்று முன் வந்த கோபத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, “இன்னும் அரை மணி நேரத்தில் வந்திடுவேன். நீங்க வந்திட்டீங்களா?” என ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு, வீட்டுக்குப் போனதும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டாள்

கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கம் சொக்கியது. சரியாக அவள் கண்ணை சொருகும் போது நாகை பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்து விட்டது. இறங்கி ஓட்டமும் நடையுமாக அவள் சைக்கிள் ஸ்டாண்டை அடைந்த போது, மணி ஏழு பத்து என்றது மணிக்கூட்டின் கடிகாரம்

காலையில் வண்டியை விட்ட போதே, “மேடம் போர்க் லாக் பண்ணாதீங்க” என்று வழக்கம் போல் அலறிய சைக்கிள் ஸ்டாண்ட் பையனின் உபயத்தால், அவள் ஸ்கூட்டி வாகன காப்பகத்தின் கடைக்கோடியில் சிக்கிக்கிடக்க, அவ்வளவு தூரம் கடக்க வேண்டியதை எண்ணி அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது

ஒருவழியாக ஏழேமுக்கால் மணிக்கு அவள் வீட்டுக்குள் நுழைந்த போது, கையில் செல்லும் காதில் ஹெட்போனும் கவரோடு மிக்சருமாக பழைய மனிதாகி உட்கார்ந்திருந்தான் மாலதியின் கணவன் மாறன் 

அப்படி உட்கார்ந்திருந்த மாறனைக் கண்டதும் பற்றிக் கொண்டு வந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல், “காபி குடிக்கிறீங்களா?” என்று கேட்டு வைத்தாள். மாலதி

செல்லிலிருந்து தலையை நிமிர்த்தாமலேயே “ம்ம்” என்று தலையை அசைத்தான்.

உடனே முகத்தைக் கூட கழுவாமல், கை காலை மட்டும் அவசர அவசரமாக கழுவி, காபி தயாரித்து  மாறனுக்கு கொடுத்து விட்டு, தனக்கான காபியை டபராவில் ஊற்றி ஆற வைத்து விட்டு, மறுநாள் அமாவாசைக்கான வேலைகளை பரபரவென செய்யத் தொடங்கினாள்.

அமாவாசைக்கு புது மாவு வேண்டும் என்பதால்  முதல் வேலையாக இட்லிக்கு அரிசி உளுந்தை ஊறப் போட்டு விட்டு, அதன் பிறகு முகம் கழுவி உடை மாற்றி வருவதற்குள், காபி கோல்டு காப்பியாகவே மாறி விட்டது

இரண்டே வாயில் அதை விழுங்கி விட்டு, வாசலில் பூத்திருந்த சந்தன முல்லையையை மாடிப்படியில் நின்று கொண்டு எட்டியவரைக்கும்  பறித்து கட்டி வைத்து, தரை துடைத்து, பீதாம்பரி போட்டு பித்தளை பாத்திரங்களை துலக்கி, சிங்க்கில் கிடந்த மற்ற பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த போது, மணி ஒன்பதைத்  தொட்டுவிட்டது.

இன்னும் துணி துவைக்கும் வேலையும் மாவரைக்கும் வேலையும் மிஞ்சியிருக்க, “அவருக்கு பசிக்குமே” என்ற நினைப்பு வந்ததும், “என்ன சட்னி செய்வது?” எனக் குழம்பி, மனசு ஒரு நொடியில் தெளிந்தது

“இனிமே தேங்காய் சட்னி அரைத்து, தோசை ஊற்றும் வரை அவரால் பொறுக்க முடியாது. அதனால பொடியே வச்சிக் கொடுத்திடலாம்”னு மனசில் தீர்மானம் எடுத்த அதே சமயத்தில்

”சாப்பிடலாமா?” எனக் கேட்டபடி அடுப்படியை எட்டிப் பார்த்த  மாறனின் குரல் கேட்டதும்

“இதோ..” என்று தோசை கல்லை தூக்கி அடுப்பில் வைத்தாள்.

மிக்சி சத்தம் வெளியே வராததைக் கவனித்த மாறன்,“சட்னி அரைக்கலயா இன்னும்?”என்றபடி அறையிலிருந்து வெளியே வர

“இல்லங்க பொடி தான்” என பதில் கொடுத்தாள்

அவள் வேலைகள் இன்னும் முடியாததை கவனித்தபடி, “சரி விடு, நீ எதுவும் செய்ய வேண்டாம். நான் போய் ஆரியாஸ்ல தோசை சாப்பிட்டுட்டு வந்திடுறேன், உன் வேலைகளை பார்” என்றபடி சட்டையை மாட்டிக் கொண்டு, வாசலில் நின்ற பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் மாறன்.

”அப்பாடா” என்றிருந்தது மாலதிக்கு. அலுவலகம் விட்டு வந்தபிறகு ஊறப் போட்ட அரிசி உளுந்து, அரைப்பதற்கு தயாராக நன்கு ஊறிவிட்டிருந்தது.

மதியம் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு சிறிது தாமதமாக சென்றதால் சீட் கிடைக்காமல் வெகுநேரம் நிற்கும் படியானது. கூடவே வீட்டுக்கு வந்தும் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் தொடர்ந்து வேலை செய்யும்படியானதால், நிற்க முடியாமல் கால்களைக் கடுத்தது.

தூக்கம், பசி எல்லாம் வேறு ஒன்றாகச் சேர்ந்து அவளைப் படுத்தியது. மற்ற வேலைகளைப் போட்டுவிட்டு மாவை மட்டும் அரைத்து வைத்து விட்டு தூங்கிவிடத் தீர்மானித்தாள்.

அரிசியைக் கழுவி கிரைண்டரில் போட்டாள். வயிறு ஏதேனும் உள்ளே போட்டேயாகனும் என வலியுறுத்த, பிரிட்ஜில் இருந்த ரெண்டு பிரெட் துண்டுகளைக் காய்ச்சிய பாலில் முக்கி தின்றுவிட்டு, உளுந்தை கழுவத் தொடங்கினாள், மகன் அசோக்கின் நினைவுகளோடு.

“நீட் உண்டா இல்லையா?”என்ற குழப்பம் தீராத நிலையில், துணிச்சலாக மகன் அசோக்கை கேரளாவில் இருக்கும் தன் அக்கா வீட்டில் தங்கவைத்து ஒரு கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டு விட்டான் மாறன்.

மேலும் அவனை வாரம் ஒருமுறை மட்டுமே செல்பேச அனுமதிக்க வேண்டும் என்றும் தன் அக்காவுக்கு உத்தரவும்  போட்டிருந்தான் மாறன்.

‘அவ்வளவாக பரிச்சயமற்ற அத்தை வீட்டில் மகன் சரியாக சாப்பிட்டானோ? இல்லையோ?’ என ஓடிய அவள் நினைவுகளைத் தடுக்கும்படியாக, கடாமுடாவென கேட்டைத் தள்ளி திறந்தபடி உள்ளே வந்தான் மாறன்.

“ஐயையோ ஏன் இப்படி கேட்டைப் போட்டு உடைச்சிகிட்டு வர்றாருன்னு தெரியலயே… சரியான ஏழரை எதையோ கூட்டிகிட்டு வந்திட்டார் போல” எனப் பதறினாள் மாலதி

அவள் பயந்ததிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. வீட்டுக்கு வெளியே ஏதேனும் பிரச்சனை என்றால் கேட்டை உடைப்பதும், வீட்டுக்கு உள்ளே  பிரச்சனை என்றால் பைக்கைப் போட்டு உதைப்பதும், மனம் நினைத்த வார்த்தைகளைப் பேசுவதுமாக இருப்பது மாறனின் வழக்கம்.

“சே இந்த கருமத்துக்கு தான் நா ஹோட்டலுக்கு போய் தொலையிறதில்லை” என்று அலுத்துக் கொண்டபடி உள்ளே நுழைந்தான் மாறன்.

இந்த சமுதாயத்தின் ஓட்டு மொத்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்துக்கு இவன் தான் உண்மைப் பிரதிநிதி போலவும், மற்றவர்களெல்லாம் பண்பாட்டினை குழிதோண்டி புதைப்பவர்கள் போலவும் பேசிக் கொண்டிருந்தான்.

மாலதிக்கு அவன் பேச்சு மகா எரிச்சலைத் தந்தது. இருந்தாலும்   மாவை கரைத்தபடியே, “உங்களை யார் போகச் சொன்னது? என்னாச்சி?”என்றாள் சலிப்புடன்.

“அதை ஏன் கேக்குற, என் முன்னாடி ரெண்டு கழுதைங்க, அதுவும் நம்ம நகர்ல குடியிருக்கக் கழுதைங்க கொஞ்சங்கூட கூச்ச நாச்சம் இல்லாம, ஒரு  பிளேட்ல ஆர்டர் பண்ணிகிட்டு ஒரே ஸ்பூன்ல நக்கி நக்கிச் சாப்டுகிட்டு.

ச்சேய்… என்ன தான் புருசன் பொண்டாட்டினாலும் பொது எடம்னு ஒரு இது வேணாம். அதுங்களுக்கு எதுக்க உக்காந்து எனக்கு சாப்பிடவே பிடிக்கல, வாங்கின பாவத்துக்கு போட்டு முழுங்கிட்டு வந்திட்டேன்” என்று புசுபுசுத்தான்

இதுபோல ஏதாவது  வீணாகத் தான் புலம்புவான் என முன்பே எதிர்பார்த்தபடியால், ”சரி விடுங்க… யாரு  எப்படி சாப்பிட்டா நமக்கென்ன” என பேச்சை முடிக்க வைத்தாள்

ஆனால் அவன் முடித்த பாடில்லை.கொதித்தான் கொஞ்சம் துடித்தான். இரவு படுத்த பிறகும் பண்பாட்டைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தவன்,  மாலதியை நுகர்ந்த பின்பே அடங்கித் தூங்கிப் போனான்.

அந்த அவசர நுகர்தலில் விழித்துக் கொண்ட மாலதி, உறங்க வெகு நேரமானது. விடிந்த பிறகும் நாட்கள் விடுகதையாய் நகர, வார விடுமுறை நாளும் வந்தே விட்டது.

அந்த நெருக்கடியான ஞாயிறில், அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகளைப் பட்டியலிட்டு வைத்திருந்தாள் மாலதி. வீட்டைச் சுற்றிக் கூட்டனும், ஸ்கூட்டியைக் கழுவனும், புடவைகளை அயனுக்குக் கொடுக்கனும்

மகனுக்கு ஆலுவேரா போட்டு எண்ணெய் காய்ச்சனும், சாம்பார் பொடி நுணுக்கனும், இப்படி எண்ணற்ற வேலைகளில் ஒன்றை மட்டும் மாறனுக்கு என விட்டு வைத்தாள்.

வாசல் பக்கப் பைப்பைச் சரி செய்ய, பிளம்பரை அழைத்து வந்து சரி பார்க்க வேண்டும். ஆனால், அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இவளே கால் பண்ணி பிளம்பரை வரச் சொன்னாள். அவசரமாக வந்து சேர்ந்த பிளம்பர், இன்சுலேசன் டேப்பை வைத்துவிட்டு வந்து விட்டார்.

”அம்மா இன்சுலேசன் டேப்பு இல்லம்மா, வீட்டுல இருந்தா கொடுங்கம்மா” என பிளம்பர் கேட்க

“இதோ தரேங்க” என்றபடி உள்ளே போனாள் மாலதி

அதற்குள் மகனிடமிருந்து போன் வர, ஒரு வாரமாகக் மகனின் குரலை கேட்பதற்காக ஆவலுடன் காத்திருந்த அவள், ஆசையாக செல்லை காதில் வைத்து பேசிக்கொண்டே, “டேப்பை எங்கே வைத்தோம்..?” என துழாவினாள்

அதற்குள் பொறுமை இழந்த மாறன், பிளம்பர் மற்றும் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரெண்டு ஆட்கள் முன்னிலையில் மனைவியை பார்த்து கத்த துவங்கினான்.

“ஞாயிற்றுகெழம கூட ஆபீஸ்ல விட மாட்டானுங்களா? வீட்டுல வேல நடக்கும் போது, அந்த போனை என்னாத்துக்கு அட்டன் பண்ணனும். எல்லாம் சம்பாதிக்கிற திமிர்…” வாய்க்கு வந்தபடியெல்லாம் கத்தினான் மாறன்.

“சரி விடுங்க சார், அவசரம் ஒண்ணுமில்ல, முக்கியமான போனா இருக்கும்” என்று பிளம்பர் சொன்னதையும் காதில் வாங்காமல்

“பிளம்பரும் மனுசந்தாங்கிற அறிவு வேணாம், இவளெல்லாம் படிச்சு என்ன ப்ரயோசனம்”

அவன் பேசும் வார்த்தைகள் சரியாகக் காதில் விழாமல் போனாலும், அவன் முகத்தில் தாண்டவமாடிய கோபக்கனலையும், பிளம்பர் அவனை மத்துசம் பண்ணுவதையும் பார்த்து பயந்து போன மாலதி, அவசரமாக பேசி விட்டு செல்லை அணைத்து வெளியே வந்தாள்.

அவன் கத்தியதை வாசலில் போவோர் வருவோரும் திரும்பித் திரும்பி பார்த்தபடி போய்க் கொண்டிருந்தார்கள்

அமாவாசைக்கு முதல் நாள் மாறன் ஹோட்டலில் பார்த்த அந்த ஜோடியும் கையைக் கோத்தபடி அவர்களது வீட்டு வாசல் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சத்தம் போட்டு சிரித்துப் பேசிக் கொண்டும் போனார்கள். அந்தக் காட்சியும் சேர்ந்து மாறனை இன்னும் கோபமூட்டியது.

“ம்ஹூம் இவங்க இந்த ஏரியா தானா?” என்று முனகியபடி, அந்த ஜோடியின் கவனத்தைக் இவன் வீட்டுப் பக்கம் திருப்பினான் மாறன்.

முன்பை விட சத்தமாக மனைவியை ஏசினான். அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அவன் பேசிய வார்த்தைகள். அங்கிருந்த சுற்றுச் சுவற்றைத் தாண்டி வெளிப்புறம் சென்று கொண்டிருந்த ஜோடிகளின்  காதில் விழுந்தது.

உடனே அவர்கள் பேசி கொண்டு போனார்கள், “சே என்ன ஜென்மம் இதெல்லாம், என்ன தான் புருசன் பொண்டாட்டினாலும்பொ ஒரு வரைமுறை வேணாம். நாலு பேரு வெளியாளுங்க நிக்கும் போது இப்படியா கத்துறது”

நல்லவேளை  அந்த ஜோடியின் பேச்சு, மாறன் காதில் விழவில்லை. விழுந்திருந்தால் அவன் கோபம் இன்னும் தலைக்கேறியிருக்கும்

இதெல்லாம் கேட்டும், செல்லில் பேசியது தங்கள் பிள்ளை தான் என மாலதி விளக்கம் கொடுக்கக் கூட அவகாசம் அளிக்காமல், அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்

எதுவுமே காதில் கேட்காதது போல டேப்பை பிளம்பர் கையில் கொடுத்து விட்டு, கேவல உணர்வு மேலிட, விடுவிடுவென உள்ளே  சென்ற மாலதி முகம் புதைத்து அழுதாள்.

இன்று நேற்றல்ல, பதினெட்டு  வருசமாக மாறன் இப்படித் தான் நடந்து கொள்கிறான் என்றாலும், ஓவ்வொரு முறையும் புதிதாக புண்படுவதைப் போல அழுது துடித்தாள்.

ஆத்திரமாக வந்தது. கல்யாணமான புதிதில் இப்படித் தான் அவள் அப்பாவின் முன்னிலையில் அசிங்கப்படுத்தினான், சாப்பிடும் போது ஒரு பருக்கையை சிந்திவிட்டாளென்று

“உனக்கு உங்க வீட்ல சிந்தாம  சாப்பிடவும் சொல்லித் தரல, டவல் போட்டுச்  சாப்பிடவும் சொல்லித் தரல” சந்தோஷ்சுப்ரமணியம் படத்தில்  வரும் ஹீரோ போல சிலிர்த்துப் பார்த்தான்.

ஆடிக்கு அழைக்க வருவார்கள் எனத் தெரிந்தும், நண்பனின் தங்கையை அழைப்பதற்காக வெளியூருக்கு இவளையும் அழைத்துக் கொண்டு போய் விட்டான் யாருமற்ற வீட்டில் வந்து நுழைத்த பெற்றோர்களைப், புழு போல துடிக்க விட்டான்

பெண்டாட்டியுடன் சினிமா செல்வதை பெரிய கேவலமாக நினைத்தான். இரவில் மட்டுந்தான் பேச வேண்டும் மனைவியோடு, அவளை பகலில்  பார்ப்பதும் பேசுவதும் தவறென்று எப்போதுமே நினைத்தான்

அதனால் தான் இரவில் மட்டும் பேசுவான், அதுவும் பெரும்பாலும் உடலோடு தான். சிங்கம் போல கர்ஜிப்பதே பேராண்மை, அடிமை மனைவியை அர்சிப்பது அவமானம்.

பெற்றோரைப் போற்றுவது பெருங்கருணை, மனைவியின் பெற்றோரை வணங்குவது மாபெருந்தவறு என்றெல்லாம் இளமையில் பதிந்த எண்ணத்தின் விளைவாக ஏளனமாய்ப் பார்ப்பான்

மனைவிக்கு பூ வாங்கித் தருவதும் பொட்டு வைத்து விடுவதும்  கூட வேதத்துக்கு புறம்பான விஷயங்கள் என நம்பினான். சினிமாவில் மட்டுந்தான் இணையர்கள் சிரித்துப் பேச வேண்டும். நிஜத்தில் அதுபோல் சிரித்தால் அது சினிமாவாக மாறி சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பது அவனது சித்தாந்தம்.

எந்த வேலையையும் நம்பித் தர மாட்டான். கல்யாண வீடென்றால் தானே மாப்பிள்ளையாகவும், இறந்த வீடென்றால் தானே பிணமாகவும் இருக்கவே விரும்புவான்

பெண்களுக்கு உணவு உடை உறைவிடம் மூன்றும் கிடைத்ததே அவர்களின் அதிகபட்ச சுதந்திரம் என்பது அவனின் கொள்கை.

பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அவர்கள் உடையும், நடையும், பெண்களின் பேராசையுமே காரணம் என்பான்.

“ஆண் அப்படித் தான் இருப்பான், பெண் அதற்கு இடமளிப்பது தவறில்லையா?” என்பான்.

சாலையைக் கடக்கும் போது என்றாவது ஒரு பெண்ணின் இருசக்கர வாகனம் இடையில் வந்து விட்டால், இடைவிடாமல் திட்டித் தீர்ப்பான்

“இவளுங்களுக்கெல்லாம் எதற்கு வண்டி? ஓட்டவும் தெரியல, ஒதுங்கவும் தெரியல. இந்த இலட்சணத்துல  அரசாங்கம் வேற மானிய விலையில ஸ்கூட்டியக் கொடுக்குது. அதுக்கு பதிலா ஒரு மாட்டைக் கொடுத்தாலும் பிரயோசனம். பாலக் கறந்து, வயித்தைக்    கழுவிக்கலாம்” என்பான்

கல்லூரிச் சாலையில் ஆணும் பெண்ணுமாய் அடியெடுத்து வைத்தால் ஆடிப் போவான். கேடுகெட்டு போவதற்கு கல்வி ஒரு கேடா. படிச்சு முடிக்கிற திமிரோடு தான் பாதி பெண்கள்  அலைவதாக சொல்லி, மாலதியையே சாடை பேசுவான்

ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த பொழுது மாலதியை அழைக்க வந்தவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி, வளையல் காப்பிற்கு வராமல் இருந்து தன் வக்கிரத்தைக் காட்டினான்

குழந்தை பிறந்ததைச் சொல்லி அனுப்பியும் உடனே பார்க்க வராமல், “ஏன் அந்த அந்த மருத்துவமனையில் சேர்த்தீர்கள்? அங்கே தான் என் அம்மா இறந்தாள்” என அனத்திக் கொண்டிருந்தான்.

அக்காள் கணவரின் குணமறியாமல், “ஏன் மாமா அக்காவை எப்பவும் கரிச்சி கொட்றீங்க? எங்க அக்காவுக்கு மாமியார் இல்லாத கொறைய நீங்களே தீர்த்து வச்சிடுவீங்க போலயே” என சிரித்துக் கொண்டே விளையாட்டாய்க் மாலதியின் தங்கை ஒருத்தி கேட்டு வைக்க,  அவள் கேள்விக்கான பதிலை மாலதியிடம் காட்டினான்.

“இத்தனை வாயடியா உன் தங்கை? கொஞ்சம் கூட அடக்கமில்லாத அவளுடன் இனியும் நீ பேசினால் கெட்டுக் குட்டிச்சுவராப் போய்டுவ, இனி அவள் முகத்தில் நீ விழிக்கக் கூடாது கிளம்பு” என்று அவன் கிளப்பிக் கொண்டு வந்த போது இவள் நினைத்துப் பார்க்கக் கூட இல்லை, அடுத்த பதினெட்டு ஆண்டுகள் அந்தத் தங்கையுடன் பேசாமல் இருக்கப் போவதை

அது மட்டுமா? பேப்பர்காரர், பால்காரர், குப்பை வண்டிக்காரர், பழைய இரும்புக்காரர் இப்படி எத்தனையோ பேர் முன்னிலையில், எவ்வளவோ அவமானங்கள் தொடர்கதையாக வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்தும், ஒரேயொரு நன்மையைத் தயங்காமல் செய்தான்

அது பனிரெண்டோடு படிப்பை முடித்துக் கொண்ட அவளை பட்டப்படிப்பில் சேர்த்துவிட்டான். அந்த பட்டத்தைக் கொண்டே பணியில் அமர்ந்தாள் மாலதி

அந்த நன்றிக் கடனுக்காகத் தான், யார் முன்னிலையில் அவன் திட்டினாலும் அழுது மடிவதோடு அடங்கிப் போனாள் மாலதி.

இப்படி பதினெட்டு வருடங்களாய் பலநூறு அவமானங்களை வற்றாத நதியாக வழங்கி வருகிறான்.

“இனிமேலும் இவரை இப்படியே வளர விடக் கூடாது. உள்ளே வரட்டும் நாக்கை பிடுங்கிக் கொள்ளும்படி நாலு வார்த்தை கேட்டே ஆகனும். பொது இடத்தில் பிறர் பார்க்க மனைவிக்கு முத்தம் தருவதும் ஊட்டி விடுவதும் அபத்தம் அசிங்கம் அவமானம் என்றால், பொதுவிடத்தில் மனைவியைப் பிறர் பார்க்க திட்டி சத்தமிடுவதும் அபத்தமில்லையா? அசிங்கமில்லையா? அவமானமில்லையா?” என்றெல்லாம் எண்ணமிட்டு, மாலதியின் தொண்டை கட்டிக் கொள்ள,  கண்கள் சிவக்க மூக்கு ஒழுகத் தொடங்கியது.

“யாரும் இல்லாத போது என்னிடம் அன்பாக நடந்துகொள்ளும் இவர், யாரையும் கண்டால்  பிறர் தன்னைப் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடந்து என்னைக் கொல்லும் இவர் குணம் எப்போது மாறுமோ?” என எண்ணித் துடித்தாள்

எங்கோ புறப்பட்டு போன மாறன், அன்று இரவு தாமதமாய் வந்து சேர, அப்போது அந்த ஹோட்டல் ஜோடியும் கண்ணுக்குள் வர, “அடுத்தவர் முன்னிலையில் மனைவிக்கு முத்தம் கொடுத்து கொஞ்சுவதும் சத்தமிட்டு அவளை கேவலப்படுத்துவதும் ஒன்று தான்னு என்றைக்கு  ஆண்கள் உணருராங்களோ, அதுவரை பெண்கள் இங்கே மட்டம் .ஆண்கள் வைப்பதே சட்டம்” என்றாள் சத்தமாக

சங்கோஜம் சிறிதுமின்றி புரட்சி பேச புதிதாக முயன்ற மாலதியின் வாய்க்கு, வழக்கம் போல் பூட்டு போட்டான் காதல் சிறிதுமற்ற காம முத்தமெனும் கடுமையான திண்டுக்கல் பூட்டைக் கொண்டு

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

அவனும் நானும் அமுதும் தமிழும் (சிறுகதை) – ✍ பவித்ரா புருஷோத்தமன், புதுச்சேரி

முறுக்கு மேலே கிறுக்கு😊(சிறுகதை) – ✍ லக்ஷ்மீஸ் பவன்