in ,

மெய்யுணர்தல் (சிறுகதை) – ✍ ஆதிரை, சென்னை

மெய்யுணர்தல் (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 79) 

“நாளை என்றும் நம் கையில் இல்லை

நாம் யாரும் தெய்வத்தின் பொம்மைகளே…

என்றால் கூட போராடு நண்பா

என்றைக்கும் தோற்காது உண்மைகளே…”

காதுகளில் மாட்டியிருந்த ஹெட்செட்டில் சூரியன் எஃப்.எம்மில் ஓடிக் கொண்டிருந்த எதிர்நீச்சல் படத்தின் பாட்டைக் கேட்டபடியே, ஷூவைக் கழட்டி வெளியே வைத்து விட்டு, தாளிடாமல் இருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் கௌதம்

வரும் போதே, சஞ்சனா எப்பொழுதும் போல செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதைத் தெரிந்து கொண்டான்.

“ம்ம்… பரவால்ல ஷில்பா. உனக்கு எல்லாமே செய்யற மாதிரி ஒருத்தர் கிடைச்சிட்டார். நீ ரொம்ப லக்கி” என்றபடி ஷோஃபாவில் ஹாயாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள், அவன் வந்ததை கவனித்தாலும், கண்டு கொள்ளாதது போலவே இருந்தாள்.

இதை எதிர்பார்த்தவன், நேரே தங்களது அறைக்குச் சென்று குளித்து முடித்து, உடை மாற்றி விட்டு வெளியே வந்தான். அப்போதும் அவளது அரட்டையை விட்ட பாடில்லை.

“ம்ம்… ம்ம்… வந்தாச்சு வந்தாச்சு.. பரவால்ல நீ பேசு. ஒண்ணும் பிரச்சினை இல்ல” என்றபடி பேச்சைத் தொடந்தாள்.

அவள் பேசுவதைக் கேட்டவன், மறைமுகமாகத் தன்னைப் பற்றித் தான் பேசுகிறாள் என்று தெரிந்து கொண்டான். இவளை என்ன சொல்லி மாற்றுவது என்ற வழி தெரியாமல் ஃப்ரிட்ஜைத் திறந்தவன், மேல் ட்ரேயில் அடுக்கி வைத்திருந்த முட்டைகளை எடுத்தான்.

அடுத்து கப்போர்டில் உள்ள ப்ரெட் ஸ்டோரேஜ் பாக்ஸில் இருந்த ப்ரெட் துண்டுகளை எடுத்தவன், ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்றாக அடித்துக் கலக்கி தோசை சட்டியில் ஊற்றினான்.

அதன் மேலே ப்ரெட் துண்டுகளை வைத்து, நன்றாக வெந்த பிறகு திருப்பிப் போட்டான். ப்ரெட் ஆம்லெட் தயாரானது. அதே போல் இரண்டு, மூன்று செய்து ஒரு தட்டில் தனக்கும், மற்றொரு தட்டில் சஞ்சனாவுக்கும் எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.

மும்முரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தவள், அவன் தட்டை நீட்டியதும் ஒரு ஏளனப் பார்வை பார்த்து விட்டு, அதை வாங்கிக் கொண்டு ஒன்றை எடுத்து வாயில் கடித்தபடியே பேசினாள்.

அவன் அதைக் கண்டு கோபம் கொள்ளவில்லை. ஏனென்றால் இது தினமும் நடக்கும் ஒன்று தான். ஒரு வழியாய் பேசி முடித்தவள், அவனிடம் வந்தாள். அப்போது கௌதம் டிவியில் பாட்டு பார்ப்பதில் மும்முரமாய் இருந்தான்.

அவனைப் பார்த்து முறைத்தவள், “கௌதம்.. கௌதம்..” என்று இருமுறை அழைத்த பிறகு தான், அவள் அருகே நின்று தன்னை அழைத்துக் கொண்டிருப்பதை அறிந்து திரும்பினான்.

“என்னைக் கூப்பிட்டியா?” என்றான் சந்தேகமாக.

“ஆமா, நான் கூப்பிடவே இல்ல. எவ்ளோ நேரமா இங்க உன்னைக் கூப்டுட்டு இருக்கேன் தெரியுமா? நீதான் டிவில அப்படியே மூழ்கிட்ட.” என்றாள்.

இந்தக் கேள்விகளைத் தான் கேட்க வேண்டியது. ஆனால், அப்படிக் கேட்டால் தேவையில்லாமல் சண்டை  வரும். முடிந்த அளவு அதைத் தவிர்க்க வேண்டும் என்றே அமைதியாய்ச் சிரித்தான்.

“நிஜமாலுமே கேட்கல சஞ்சு. சொல்லு என்ன விஷயம்.? ஷில்பாகிட்ட பேசிட்டிருந்த, சரின்னு தான் உன்ன டிஸ்டர்ப் பண்ணாம வந்து டிவி பார்த்துட்டிருக்கேன்.” என்றான்.

“நல்லா சமாளிக்கற. சரி விடு. ஒரு முக்கியமான விஷயம். ஷில்பாக்கு விசா ரெடியாயிடுச்சாம். நெக்ஸ்ட் மன்த் அவ யு.கே போறாளாம்.” என்றாள்.

“ஓ.. அப்படியா.?” என்றான் வார்த்தைகளில் எந்தவித உயிரும் இல்லாமல்.

“ஏய்… என்ன நீ.? சும்மா அப்படியான்னு கேட்கற.? எவ்ளோ பெரிய விஷயம்.? எனக்குத்தான் குடுப்பனை இல்ல. அவ பாரு அங்க போய் ஹஸ்பெண்ட்டோட ஹேப்பியா ஃபோட்டோ, செல்ஃபின்னு எடுத்து ஃபேஸ்புக்ல, வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ல வைச்சு வெறுப்பேத்துவா. ஹையோ.. அதை நினைச்சா எப்படி இருக்கு தெரியுமா.?” என்று கவலை கொண்டபடி பேசினாள் சஞ்சனா.

“ஹூம்ம்… நீ சொல்றதப் பார்த்தா ஹேப்பியா சொல்ற மாதிரி தெரியல. பொறாமைல சொல்ற மாதிரி தான் தெரியுது.” என்றான்.

அவனை முறைத்தவள், “ம்ம்.. ஏன் சொல்லமாட்ட.? உனக்கு அப்படித் தான் தெரியும். வந்த சான்ஸ எல்லாம் விட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்க பாரு. இதுல நான் வேற பொறாமைப்படறேன்னு பேசற. எனக்கும் அப்படியொரு விஷயம் நடந்திருக்க வேண்டியது. நீ அதை வேண்டாம்னு சொன்னதால எனக்கு எதுவுமே நடக்காமப் போயிடுச்சு. எல்லாத்துக்கும் காரணம் நீதான்.” என்று கோபத்துடனும், கவலையுடனும் பேசினாள்.

திரும்பவும் ஆரம்பித்து விட்டாள் என்று நினைத்தவன், “ப்ளீஸ் சஞ்சு. இந்த விஷயத்தைப் பத்தி பேசாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது.? எப்பவும் இதைப் பத்தி பேசினா நமக்குள்ள ஆர்கியூமெண்ட் வரும். ஆர்கியூமெண்ட் பெரிய சண்டையா மாறும். அப்பறம், ஒரே வீட்டுக்குள்ள ரெண்டு பேரும் பேசிக்காம சுத்திட்டு இருப்போம். இது தேவையா.?” என்று அவளை அடக்க முயன்றான்.

“நீ எப்பவும் இப்படியே சொல்லி என்னை அடக்கிடு. நீயும் அனுபவிக்க மாட்ட, என்னையும் அனுபவிக்க விடமாட்ட. ச்சே.. என்ன லைஃப் இது.? எனக்கு நல்லா வேணும். உன்னை உருகி உருகி லவ் பண்ணதுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.” என்று புலம்பியபடியே தலையில் அடித்துக் கொண்டு சென்றவள், தங்களது அறைக்குள் நுழைந்து கதவைத் தடாலென சாத்திக் கொண்டாள்.

கௌதமிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது தினமும் நடக்கும் ஒன்றாய் இருந்தாலும், இதன் தாக்கம் தினமும் அதிகமாகிக் கொண்டே போவதையும் உணர்ந்தான். இதற்கு என்ன தான் வழி என்று யோசித்து யோசித்து நொந்து போனது தான் மீதம்.

கௌதமும், சஞ்சனாவும் கல்லூரியில் ஒன்றாய் படித்தவர்கள். கௌதம் ஈரோட்டிலிருந்து வந்து சென்னையில் உள்ள அந்த பிரபலமான கல்லூரியில் சேர்ந்தான். அப்போது அவனுக்கு வீட்டின் ஞாபகம் அதிகமாய் வரும். வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து படித்துக் கொண்டிருந்த பலர் இருந்தனர்.

சஞ்சனா சேலத்திலிருந்து வந்து சேர்ந்திருந்தாள். அவனுக்கு அப்போது ஏனோ அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது. இருவரும் பக்கத்து, பக்கத்து ஊர் என்பதால் அவள் பேசும் போது, ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போல ஒரு உணர்வை உணர்ந்தான். 

இருவரும் ஊருக்குப் போகும் போது ட்ரெயினில் ஒன்றாகவே பயணிப்பார்கள். சஞ்சனா சேலத்தில் இறங்கிக் கொண்டால், கௌதம் அடுத்து ஈரோட்டில் இறங்கி விடுவான். இருவருடைய குடும்பத்திற்கும் இது தெரியும்.

ஆரம்பத்தில் நல்லதொரு நட்பாய் இருவரும் பழகினர். ஆனால், இருவருக்குள்ளும் ஒரு வித இனம் புரியா உணர்வு வருவதையும், அது ஆழமாகிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தனர்.

கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவில் இருவரும் ஒரே கம்பெனியில் தேர்வாகி தங்களது வேலையை ஒரே நேரத்தில் ஆரம்பித்தனர். அதன் பிறகு, அவர்களுக்குள்ளான நெருக்கம் இன்னும் அதிகமானது.

 இருவரும் அவர்களுக்குள் உண்டான காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். பிறகு, இருவரும் தங்கள் வீட்டில் இந்த விஷயத்தைச் சொல்ல, மற்ற வீட்டில் நடப்பதைப் போல் எதிர்ப்போ, கோபமோ கொள்ளவில்லை.

முதலில் இரு வீட்டாரும் சந்தித்துக் கொண்டனர். பரஸ்பர குடும்பங்களுக்குள் உண்டாகும் மன சங்கடங்களைத் தவிர்க்க அனைத்து விஷயங்களையும் முதலிலேயே பேசித் தீர்த்துக் கொண்டனர். அதுவே, பின்னால் வரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளியாய் அமையும் என்று நினைத்தனர்.

அதன் பிறகு, அவர்கள் திருமணம் நல்லபடியாய் எந்தவித குறையும் இல்லாமல் நடந்து முடிந்தது. திருமணத்திற்க்குப் பிறகு சஞ்சனா வேலைக்குச் செல்ல வேண்டாம் என்ற முடிவையும் இருவரும் சேர்ந்தே எடுத்திருந்தனர். அவனுடைய வருமானமே போதுமானதாக இருக்க, வேலையை விட்டு விட்டாள் சஞ்சனா.

திருமண நாள் வரவேற்பில் தான் முதன் முதலில் ஷில்பாவை கௌதமிற்கு அறிமுகம் செய்தாள் சஞ்சனா. ஷில்பா, சஞ்சனாவின் சிறு வயது தோழி. பள்ளியில் படிக்கும் போது, இருவரும் உயிர்த் தோழிகள்.

ஷில்பா மிகவும் வசதியான வீட்டுப் பெண். அவளது அப்பாவும் மத்திய அரசு அதிகாரி. அதனால், அவளுக்கு எது வேண்டுமென்றாலும் உடனே கிடைத்து விடும் என்று அடிக்கடி சஞ்சனாவிடம் சொல்வாள். அதைக் கேட்டு சஞ்சனாவும், தன் பெற்றோரிடம் அது வேண்டும், இது வேண்டுமென்று கேட்டு தொந்தரவு செய்வாள்.

அவர்கள் மிடில் கிளாசுக்கு கொஞ்சம் மேலான குடும்பமே தவிர, மிகவும் வசதியானவர்கள் அல்ல. வீட்டில் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். அதனால், எந்தக் குறைவும் இல்லாமல் சஞ்சனாவுக்கும், அவளது தம்பிக்கும் அனைத்தையும் செய்வார்கள்.

ஆனால், தேவைக்கு அதிகமான பொருட்களையோ, தேவையில்லாத பொருட்களையோ வாங்கக் கூடாது என்று சஞ்சனாவின் அப்பா சொல்வார். அவள் அடம்பிடித்தால் பல நேரங்களில் திட்டும், சில நேரங்களில் அடி கூட விழும்.

அதன் பிறகு, ஷில்பாவின் அப்பாவுக்கு வேலை டெல்லிக்கு மாற்றலானதால் அவளுடைய குடும்பம் 10ஆம் வகுப்பிற்க்குப் பிறகு டெல்லிக்குச் சென்றது. ஷில்பா இல்லாததால், சஞ்சனாவின் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.

அதுவும், பிடிவாத குணத்தை சுத்தமாக விட்டது அவள் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான். கௌதமைப் பற்றி அவள் வீட்டில் எப்பொழுது பேசினாலும் சொல்வாள். அவளின் மாற்றத்திற்க்குக் காரணம் அவன் தான் என்று அவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது.

அதனாலேயே, அவள் அவனை விரும்புவதாய்ச் சொன்ன போது, அவர்களுக்கு மறுப்பேதும் சொல்லத் தோன்றவில்லை. இப்போதோ, அவர்கள் பெற்றோரே இந்தத் திருமணத்திற்க்கு ஷில்பா வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

‘எப்படி சஞ்சனா இவளை அழைத்தாள்?’ என்று தெரியாமல் விழித்தனர். கௌதமோ, சஞ்சனா அறிமுகப்படுத்தியதால் ஷில்பாவிடம் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தான், பின்விளைவுகளை அறியாமல்.

திரும்பவும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, ஷில்பாவின் அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்தது. வந்த இடத்தில் இருவரும் எப்படியோ சந்தித்துக் கொண்டுள்ளனர். அதன் பிறகு தான் இவர்களது திருமணம் வர, அவளையும் அழைத்திருந்தாள் சஞ்சனா.

சஞ்சனாவின் பெற்றோர் இதை அறிந்து சங்கடப்பட்டனர். அவளிடம் எப்படி இதைச் சொல்வது என்று சஞ்சனாவின் அப்பா அங்கிருந்து கிளம்பும் முன்பு கௌதமை அழைத்துப் பேசினார்.

“கௌதம், உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும். இதை சஞ்சனா முன்னாடி பேச வேண்டாம்னு தான் உங்களைத் தனியா கூட்டிட்டு வந்தேன்.” என்றார்.

“ஒண்ணும் பிரச்சினை இல்ல, என்ன விஷயம்னு சொல்லுங்க மாமா?” என்றான் கௌதம்.

“நீங்க காலேஜ்லயும், ஆபீஸ்லயும் இத்தனை வருஷமா பார்த்த சஞ்சனா வேற. இந்த கொஞ்ச வருஷமா நீங்க அவ வாழ்க்கைல வந்ததுக்கப்பறம் நிறைய அவ மாறிட்டா. ஆனா, இனிமேல் அவ கொஞ்சம் வேற மாதிரி நடந்துக்க சான்சஸ் இருக்கு.” என்றார் தன் தலையைத் தாழ்த்தியவாறே.

“அவ எதுக்கு மாறனும்.? இப்போ வரைக்கும் அவ என்கிட்ட நல்ல விதமா தானே இருக்கா மாமா.” என்றான்.

“இல்ல, இனிமேல் நீங்க நினைக்கற மாதிரி அவ இருப்பான்னு எனக்குக் கொஞ்சம் சந்தேகமா இருக்கு. ஏன்னா, அவ ஃப்ரெண்ட் ஷில்பா திரும்பவும் வந்துட்டா. அதனால, அவளுக்குள்ள நிறைய மாற்றங்கள் வரும். நீங்க எதுவா இருந்தாலும், கொஞ்சம் கோபப்படாம நிதானமா அவளுக்குப் புரிய வைங்க. என்னடா இவர் இப்படி சொல்றாருன்னு தப்பா நினைக்காதீங்க.” என்று அவனது கையை பிடித்தார்.

“ஐயோ… மாமா என்ன இது.? நான் பார்த்துக்கறேன் அவள. நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க.” என்று உணர்ச்சிவசத்தில் பேசினான் கௌதம்.

அவர் சொன்னதைப் போலவே சில நாட்களில் அவளது நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருப்பதைப் பார்த்தான் கௌதம். அதன் பிறகு, ஷில்பா அடிக்கடி சஞ்சனாவிடம் பேசுவது வாடிக்கையானது.

இடையில் ஷில்பாவுக்குத் திருமணம் என்று இருவரும் ஜோடியாய்ப் போய் சண்டை போட்டுக் கொண்டு திரும்பி வந்தது தான் கொடுமை.

ஷில்பாவின் திருமணத்திற்கு அதிக விலையில் புடவை எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தாள் சஞ்சனா. ஆனால், ஏற்கனவே திருமணத்திற்க்கென்று எடுத்த பட்டுப் புடவைகளே கட்டாமல் அப்படியே வைத்திருக்க, அதைக் கட்டலாமே என்று அவன் சொன்னது தான் தாமதம், தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்து விட்டாள்.

சரியென்று வேறு வழியில்லாமல் கடைக்கு அழைத்துப் போய் ஒரு புடவையை வாங்கிக் கொடுத்தான் கௌதம். அதன் பிறகு, அதைக் கட்டிக் கொண்டு சென்றால், “இதெல்லாம் ஒரு புடவையா.? ரொம்பக் கம்மி விலையா இருக்க மாதிரி தெரியுது.? ஃபங்க்‌ஷன்க்கு வந்திருக்கறவங்களப் பாத்தியா, எவ்ளோ ரிச் லுக்கா வந்திருக்காங்க. பேசாம கேட்டிருந்தா நானே ஒரு நல்ல புடவையா விலை அதிகமா இருந்தாலும் பரவால்லன்னு எடுத்துக் கொடுத்திருப்பேனே? ஏன் மேக்-அப் இவ்ளோ டல்லா, லோக்கலா இருக்கு.? ஒரு பியூட்டி பார்லர் கூட உன்னால போக முடியாதா.?” இதைப் போன்று பல விதங்களில் அவளைக் கேவலப்படுத்திப் பேசி விட்டாள் ஷில்பா.

அன்றைக்குத் தான் கௌதமிற்கு அவள் மேல் அத்தனை கோபமும், எரிச்சலும் வந்தது. என்ன தோழி  இவள்? இத்தனை கேவலப்படுத்துகிறாள்? இவளைப் போய் உயிர்த்தோழி என்று, எப்படி இவள் நினைக்கிறாள்.? என்று தோன்றியது.

அவள் அப்படிச் சொன்னதும், அந்த எரிச்சல் முழுதும் கௌதம் மேல் தான் திரும்பியது.

“உன்னால தான் எல்லாம். ஒரு புடவை ரிச்சா வாங்கித் தர முடியல உன்னால. பாரு அவ எவ்ளோ என்னைக் கேவலப்படுத்திட்டா. நேத்தே பியூட்டி பார்லர் போறேன்னு சொன்னேன். நீதான் நல்லாத் தான இருக்கன்னு சொல்லி அப்படியே அடக்கிட்ட. எனக்கு அவ கேட்டப்போ, எவ்ளோ அவமானமா இருந்துச்சு தெரியுமா.?” என்று இரவு முழுவதும் அவனிடம் சண்டை போட்டே சலித்தாள்.

அதன் பிறகு, கௌதம் தான் அவளை அங்கே, இங்கே என்று அழைத்துச் சென்று சமாதானம் செய்தான். ஒரு வாரம் கழித்து, திரும்பவும் ஷில்பாவிடம் இருந்து அழைப்பு வர, அதை எடுக்கலாமா, வேண்டாமா? என்று யோசித்தாள் சஞ்சனா. எடுக்காமலேயே விட்டிருந்தால் அவள் நன்றாகவே இருந்திருப்பாள்.

எடுத்தே விட்டாள். அவள் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று வந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அங்கே, அப்படி இருந்தது, இப்படி இருந்தது. நீயெல்லாம் அங்கே போகவே முடியாது என்பதைப் போல் சொல்லி வெறுப்பேற்றினாள்.

அவ்வளவு தான். அங்கே சிறு பொறியைப் பற்ற வைத்தாலே எரிமலையாய் வெடிக்கும். அப்படித் தான் கௌதம் ஆஃபீஸில் இருந்து வந்ததற்குப் பிறகு வெடித்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா.

“அவ பாரு மாலத்தீவுக்குப் போயிட்டு வந்துட்டு, நீயெல்லாம் போகவே முடியாதுன்னு சவால் விடுறா. எனக்குத் தெரியாது, நாமளும் போகணும்.” என்றாள்.

“சஞ்சு, விளையாடாத. நாம கேரளா ஹனிமூன் போனதோட செலவே ஐம்பதாயிரம் ஆச்சு. இதுல மாலத்தீவுக்கு உடனே போகணும்னா, எப்படி.? அதுக்கு லட்சக்கணக்கா செலவாகும். அவ்ளோ பணத்த தேவையில்லாம செலவு பண்ண முடியாது.” என்று அந்த ஒருமுறை மட்டும் சற்று திடமாக இருந்தான் கௌதம்.

அழுது, அழுது ஒருவழியாக அவளே தன்னைத் தேற்றிக் கொண்டாள். இன்னொரு நாள் போன் செய்து, “என்னோட ஹஸ்பெண்ட் யு.கே கிளம்பிட்டார். இன்னும் டூ மன்த்ஸ்ல விசா ரெடியானதும் என்னையும் கூட்டிட்டுப் போயிடுவார். அதுக்கு முன்னாடி எனக்கு கிஃப்ட்டா என்ன கொடுத்திருக்கார் தெரியுமா?” என்றாள் ஷில்பா.

“என்ன?” என்று ஆவலாய்க் கேட்ட சஞ்சனாவிடம்

“ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட் புக் பண்ணிட்டார். நெக்ஸ்ட் வீக் அந்தப் புது வீட்டுக்குப் போறேன். நீ வாடகை ஃப்ளாட்ல தான இருக்க.? நான் யுகே கிளம்பினதுக்கு அப்பறம் நீ வேணும்னா இங்க வந்து தங்கிக்கோ.” என்று சொல்ல, அவளுக்கு சுள்ளென்று ஏறியது கோபம்.

கௌதம் வந்ததும், “கௌதம் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. நாம உடனே சொந்தமா ஒரு ஃப்ளாட் வாங்கணும். உடனே பாரு.” என்றாள்.

அதற்க்குள் அடுத்த இடி வந்துவிட்டதை உணர்ந்தவன், இதற்காக அவளிடம் கோபப்படவில்லை. மாறாக “யோசிக்கிறேன்.” என்று மட்டும் சொல்லி அந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

வீட்டில் பெற்றோரிடம் பேசியதும், “ம்ம்.. பரவால்ல டா. நல்ல விஷயம் தான். வாடகை கொடுக்கறதுக்கு பதிலா ஈ.எம்.ஐ கட்டப் போற, அவ்வளவு தான். நல்ல ஃப்ளாட்டா பாரு.” என்று சொல்ல, இருவரும் சேர்ந்து தேடி ஒரு நல்ல ஃப்ளாட்டை இருபத்தைந்து லட்சத்திற்குப் பார்த்தனர்.

ஆனால், இதில் சஞ்சனாவின் வருத்தம் என்னவென்றால், அது சிங்கிள் பெட்ரூமாக இருந்தது தான். ஆனாலும், நல்ல பெரிய லிவ்விங் ரூம், பெரிய கிட்சன் வித் டைனிங் ஹால், அதே போல் பெரிய பெட்ரூம் வித் அட்டாச் பாத்ரூம், ஹாலில் ஒரு பாத்ரூம், பால்கனி என்று நல்ல காற்றோட்ட வசதியுடன் பெரியதாகவே இருந்ததால் கௌதமிற்குப் பிடித்து விட்டது.

பல விவாதங்களுக்குப் பிறகு அதையே வாங்க முடிவு செய்தனர். சிறு வயதிலிருந்தே சேமிக்கும் பழக்கம் கௌதமிடம் இருந்ததால், கொஞ்சம் பணம் கையில் வைத்திருந்தான். பிறகு, பேங்க் லோன், சஞ்சனாவின் நகை, அவள் சேமித்து வைத்திருந்த பணம் இவற்றை வைத்து அந்த ஃப்ளாட்டை வாங்கினர்.

இப்போது அதில் தான் குடியிருக்கிறார்கள். அங்கே சென்ற பிறகு சிறிது நாட்கள் தான் நிம்மதியாய் இருக்க முடிந்தது. ஒரு நாள் அங்கே வந்த ஷில்பா, “என் ஹஸ்பெண்ட் இப்போ தான் புதுசா யு.கேல கார் வாங்கிருக்கார். புதுசா வீடு, கார்னு வாங்கி ஒரே அமர்க்களப்படுத்தறார். ஹூம்ம்.. ஆமா, நீங்க எப்போ கார் வாங்கலாம்னு இருக்கீங்க.?” என்று நேரடியாக இருவரிடமும் கேட்டு விட

அப்போதே கௌதம், அடுத்ததாக புதிதாய் ஒரு பிரச்சினையை அவள் உருவாக்கி விட்டதை நினைத்து கவலைப்பட்டான். அதே போல், அவள் சென்றதும், சஞ்சனா இதைப் பற்றி அவனிடம் பேச, இந்த முறையும் கௌதமிற்கு எரிச்சலானது.

“சும்மா இரு சஞ்சு. நீ என்ன சின்னக் குழந்தையா.? இப்படி அடம் பிடிக்கற. உன் ஃப்ரெண்ட் எது வாங்கினாலும் நீயும் வாங்கணும்னு நினைக்கிறது முட்டாள் தனம். வீடு வாங்கணும்னு நீ சொன்னப்பவே நான் வேண்டாம்னு சொல்லியிருக்கணும். இப்போ பாரு கார் வேணும்னு சொல்ற. அடுத்து உன் ஃப்ரெண்ட் ஃப்ளைட் வாங்கறேன்னு சொன்னா, நீயும் வாங்குவியா?

நமக்கு என்ன வேணுமோ அதை மட்டும் தான் வாங்கணும். இப்போ, காருக்கு தேவை என்ன? டூ வீலர்ல தானே இதுவரைக்கும் எல்லாப் பக்கமும் போறோம், வரோம். ஊருக்கு ட்ரெயின்ல போறோம். அப்பறம் என்ன?” என்று தன் நியாயமான கேள்விகளைக் கேட்டான்.

அதற்கு சஞ்சனாவிடம் பதிலில்லை. ஆனால், இரண்டு நாட்களாய் சாப்பிடாமல், பேசாமல் கடுமையாக நடந்து கொண்டாள். வேறு வழி தெரியாமல் பிரச்சினையை அவள் பெற்றோரிடம் சொல்லி விட்டான்.

அவளது அப்பா போன் செய்து, “கௌதம் நான் உங்களுக்கு சென்னைல கார் புக் பண்ணிட்டேன். மேரேஜ் அப்போவே வாங்கித் தரணும்னு நினைச்சேன். அப்போ முடியல. இப்போ பணம் கொஞ்சம் இருந்தது. அதான் நீங்களும், சஞ்சனாவும் போய் நாளைக்கு கார் எடுத்துட்டு வந்துடுங்க.” என்று சொல்ல, ஆடிப் போனான் கௌதம்.

“மாமா, நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க? எனக்கு கார் வாங்க முடியாததில்ல. இப்போதைக்கு தேவையில்லன்னு நினைச்சேன். அதே போல, அவளோட பிடிவாதத்துக்காகவும் தான் வேண்டாம்னு சொன்னேன். இதுக்காக நீங்க ஏன் போய் செலவு பண்ணி கார் புக் பண்ணீங்க?” என்று மிகவும் சங்கடப்பட்டான்.

“ஐயோ… இல்ல கௌதம். நீங்க எதுவும் சங்கடப்பட வேண்டாம். எப்படி இருந்தாலும் ஃபியூச்சர்ல தேவைப்படும் தானே.? அதே மாதிரி சஞ்சனா எதுவும் வேணும்னு பண்ணல. அவளோட டைம் அப்படி. சீக்கிரமே அவ திரும்பவும் பழைய சஞ்சனாவா மாறிடுவா. அதுக்காக அவளை விட்டுடாதீங்க.” என்று கெஞ்சலாய்க் கேட்க, கௌதம் பதறி விட்டான்.

“மாமா, எனக்குத் தெரியும் சஞ்சனா எப்படிப்பட்ட பொண்ணுன்னு. இப்போ அந்த ஷில்பாவால தான், அவ அவளாவே இல்ல. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. அதை அவ க்ராஸ் பண்ணிடக் கூடாதுன்னு தான் நான் பயப்படறேன். மத்தபடி அவள நான் எப்படி விடுவேன்.?” என்றான்.

“ரொம்ப சந்தோஷம் கௌதம். சீக்கிரமே எல்லாம் சரியாகிடும். நீங்க கவலைப்படாதீங்க.” என்று சொல்லி போனை வைத்தார் சஞ்சனாவின் அப்பா.

அடுத்த நாளே, புது காரை எடுத்து வந்தனர் இருவரும். சஞ்சனாவிற்கு ஒருபுறம் தனது தந்தை வாங்கித் தந்தார் என்ற பெருமிதம். கௌதமால் அது முடியவில்லை என்ற எண்ணமும் இருந்தது. அதிலிருந்து அவனிடம் ஒரு மிடுக்காய் தான் நடந்து கொள்கிறாள்.

அவன் ஏதாவது கேட்டால், திமிராய் தான் பதில் சொல்வாள். அவன் ஆஃபீஸிலிருந்து வந்தால், அவனைக் கண்டு கொள்ள மாட்டாள். சில சமயம் அவனுக்கு சமைத்துக் கூட தர மாட்டாள்.

அவள் அவளாகவே இல்லை என்று தெரிந்த கௌதம், அவளின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொண்டு வாழப் பழகிவிட்டான். அதே போல், அவளது தந்தை சொன்ன வார்த்தையும் அவனுக்கு அவ்வப்போது நினைவுக்கு வந்து சென்றது.

அவள் அவனுக்காக எதுவும் செய்யவில்லை என்றால், தானே ஏதாவது செய்து, அவளுக்கும் சேர்த்து வைத்து விட்டுப் போவான். அதே போல், ஆஃபீஸிலிருந்து வந்த பிறகும் ஏதாவது செய்வான்.

இப்படித் தான் இத்தனை நாட்களும் கடந்தன. இன்றும் ஒரு புதுப் பிரச்சினையை சஞ்சனா தன்னிடம் கொண்டு வந்தது அவனுக்குத் தலைவலியாய் இருந்தது. இதற்கு எப்போது தான் முடிவு என்று தெரியாமல் தலையை மேலே சாய்த்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

நாட்கள் அப்படியே உருண்டோடின. அன்று ஏனோ கௌதமிற்க்கு வீட்டிற்கு செல்லவே வெறுப்பாய் இருந்தது. சஞ்சனாவின் அந்த வெறுப்பான முகத்தைப் பார்க்கவே அவனுக்கு விருப்பமில்லை.

கல்லூரியில் அன்று புதிதாய்ப் பூத்த மலராய் சஞ்சனா எப்படி இருப்பாள்.? அவள் எங்கே போனாள்.? என்று நினைத்தபடி வண்டி போன பாதையில் சென்றவன், நேராக பீச்சிற்க்குச் சென்று விட்டு இரவு 9 மணிக்கு மேல் தான் வீடு வந்து சேர்ந்தான்.

உள்ளே கதவைத் திறந்து கொண்டு வந்ததும், அவனுக்கு எப்பொழுதும் போல பேச்சு சத்தம் கேட்கவில்லை. விசும்பல் சத்தம் தான் கேட்டது. அதைக் கேட்டு பதறியவாறே உள்ளே வந்தவன், அங்கே சஞ்சனா ஷோஃபாவில் அழுதபடி படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவன் வந்து விட்டான் என்பதை அறிந்தவள், அவசரமாய் எழுந்து, ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள். என்னவாயிற்றோ? என்று பதறியவன், “என்னாச்சு சஞ்சு.? எதுக்கு இப்படி அழுதுட்டிருக்க.?” என்று அவளைப் பிடித்துக் கேட்டான்.

“ஏன் இவ்ளோ லேட்டா வந்த.? நான் உனக்காக எவ்ளோ நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கேன் தெரியுமா.? உனக்கு போன் பண்ணா லைனே கிடைக்கல. ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது.” என்றாள் அழுதபடியே.

“போன்ல சார்ஜ் இல்ல. அதான், ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்திருக்கும். சரி, விடு என்னாச்சுன்னு மொதல்ல சொல்லு.” என்று கேட்டபடி அவளை ஷோஃபாவில் அமர வைத்தான்.

சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், “ஷில்பாவோட ஹஸ்பெண்ட் ஒரு ஃப்ராடாம். இன்னைக்கு அவன அரெஸ்ட் பண்ணிருக்காங்க. அவன் இவள மட்டுமில்ல, இதே மாதிரி ரொம்ப வசதியான வீட்டுப் பொண்ணுங்களை மேரேஜ் பண்ணி பணத்தையெல்லாம் வாங்கி ஏமாத்திருக்கானாம். இது யாருக்குமே தெரியாம இருந்தது தான் அவனோட அதிர்ஷ்டம். ஆனா, இன்னைக்கு எப்படியோ அவனைப் பத்தி தெரிஞ்சு அவன் ஏமாத்துன ஒரு பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்ததுல தான் மாட்டிக்கிட்டான்.” என்றாள்.

“ஓ காட், அவனைப் பத்தி விசாரிக்காம எப்படி உன்னோட ஃப்ரெண்ட்டுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க.? அப்பறம் புது ஃப்ளாட், கார் இதெல்லாம் எப்படி.?” என்றான்.

“அவன் ஜஸ்ட் ஃப்ளாட் புக் பண்ணது மட்டும் தானாம். அதுக்கான அமௌண்ட்ட ஷில்பாகிட்ட சொல்லி அவங்க அப்பாவைத் தான் அரேஞ்ச் பண்ண சொல்லிருக்கான். இவ அதெல்லாம் என்கிட்ட சொல்லல. அதே மாதிரி, யு.கேல இருக்கேன்னு சொன்னதெல்லாம் சும்மா. இவங்கள நம்ப வைக்க நிறைய பொய் சொல்லிருக்கான். இப்போ, ஷில்பாவோட வாழ்க்கையே போச்சு” என்று திரும்பவும் அழுதாள்.

“ஹூம்ம்… நம்மால வெறும் அனுதாபப்பட தான் முடியும். வேறு என்ன செய்ய முடியும் சஞ்சு.? உன்னோட ஃப்ரெண்ட்டும் கொஞ்சம் சரியில்ல. அவளோட பணத்திமிரக் காட்டித் தான், நல்லா இருந்த உன் மனசக் கெடுத்துட்டா. இதனால நமக்குள்ள எவ்ளோ சண்டை, சங்கடம் சொல்லு.?” என்றான்.

“ஆமா கௌதம். விஷயம் கேள்விப்பட்டு அம்மாவும், அப்பாவும் என்னைத் திட்டினாங்க. அப்பான்னா, ‘அவர் எவ்ளோ நல்ல பையன். அந்த மாதிரி பையனுக்கே நீ இவ்ளோ மோசமா நடந்துட்டிருந்திருக்க. உன் ஃப்ரெண்ட்டுக்கு அமைஞ்ச மாதிரி ஆளா இருந்தா என்ன பண்ணிருப்ப.? பணம், பொருள் எல்லாம் வரும், போகும். ஆனா, மனுஷனோட குணம் யாருக்குக் கிடைக்கும்.? நான் அவளை விட்ராதீங்கன்னு சொன்னதுக்காக அவர் உன்கிட்ட ரொம்ப ஜென்யூனா நடந்திருக்கார். நீதான் திமிரா இருந்திருக்க. இனிமேல் இவ சொல்றா, அவ சொல்றான்னு நீ டார்ச்சர் பண்ண, நானே அவர விட்ருங்கன்னு சொல்லிடுவேன்’னு சொல்லி நல்லாத் திட்டிட்டார் கௌதம்.” என்று மீண்டும் அவன் மேல் சாய்ந்து அழுதாள்.

 “ரியலி ஸாரி கௌதம். நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன். உன்னோட இடத்துல யார் இருந்தாலும் இந்த அளவுக்கு என்னோட டார்ச்சரத் தாங்கியிருக்க மாட்டாங்க. நான் காலேஜ் படிக்கும் போதும், ஆஃபீஸ்ல நாம ஒண்ணா வொர்க் பண்ணும் போதும் இப்படி இருந்ததே இல்ல. நான் ஏதோ ஒரு மாயைல இருந்துட்டேன்.” என்றாள்.

“ஆமா டியர், நீ ஷில்பாங்கற மந்திரக்காரி கையில மாட்டிக்கிட்ட. அதனால தான் நீ அந்த மாதிரி நடந்துக்கிட்ட. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ, நம்ம லைஃப் தான் பெஸ்ட். நம்மகிட்ட இருக்கறது தான் பெஸ்ட்டுன்னு நீ நினைக்க ஆரம்பிச்சிட்டா. உனக்குள்ள தேவையில்லாம இந்த மாதிரியான எண்ணங்கள் வராது. இப்போ நீயே உண்மையத் தெரிஞ்சுக்கிட்டு அதுல இருந்து வெளிய வந்துட்ட இல்ல, அதுவே பெரிய சந்தோஷம்.” என்றான் கௌதம் அவளின் தலையைக் கோதிக் கொண்டே.

“இனிமேல் நான் அப்படி நடந்துக்க மாட்டேன் டா, அடம்பிடிக்கவும் மாட்டேன்.” என்றாள்.

“இனிமேல் அடம்பிடிக்கறதுக்கு என்ன இருக்கு.? அவ புண்ணியத்துல நம்ம வீட்டுல இல்லாத பொருளே இல்ல.? வீடு, கார்ன்னு எல்லாமே வந்துடுச்சு. ஆனா, இப்போ நான் தான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும். அதை நீ எனக்காகக் கொடுத்தே ஆகணும்.” என்றான்.

எழுந்து அவன் சொல்வது என்னவென்று புரியாமல் பார்க்க, “எனக்கு ஒரு குழந்தை வேணும். எல்லாம் வாங்கியாச்சு, இதை அனுபவிக்க நம்மகூட நம்ம குழந்தையும் இருந்தா தானே சந்தோஷம். அத செய்வியா.?” என்றான் கௌதம் கண்சிமிட்டி சிரித்தவாறே

அவன் சொன்னதும், கன்னங்கள் சிவக்க வெட்கப்பட்டவள், “ம்ம்ம்…” என்று அதை ஆமோதித்தவாறே, வெட்கத்தில் திரும்பவும் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

தன்னவள் திரும்பி தன் நிலைக்கே திரும்பியதை நினைத்து சந்தோஷப்பட்டவன், அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் கௌதம்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. சிறு கதை..மெய்யணர்தல். எழுத்தாளர் ஆதிரை..சென்னை.கதை எண்.79.
    என்னங்க செம்மயா கதை எழுதிட்டிங்க.
    நிதர்சனம்.இன்றைய கால கட்டங்களில் அடுத்தவர்களை பார்த்தே பெண் பிள்ளைகளும் சரி ஆண் பிள்ளைகளும் சரி தங்களை அலங்கரித்துக் கொள்வதும் வாழ நினைப்பதும் மிகச் சரியாக எடுத்து கதை மூலம் சொன்ன எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .எழுத்தாளர் ஆர்த்திசுவேகா…

    • ரொம்ப ரொம்ப நன்றி. இது எனது இரண்டாவது சிறுகதை. ஒரு எழுத்தாளரா நீங்க இத்தனை தூரம் என்னுடைய கதையை விமர்சனம் பண்ணதுக்கு ரொம்ப நன்றி சகோதரி. இன்றைய நடைமுறை வாழ்க்கையில் உள்ள விஷயத்தைக் கருவாய் வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

மௌனமாய் ஒரு நீதி (சிறுகதை) – ✍ ஜெயா சிங்காரவேலு, கரூர்

கணவர்களே உஷார் 😂 (சிறுகதை) – ✍  ஆர்.பூமாதேவி