in

மஞ்சள் கூடை (சிறுகதை) – ✍ கனகா பாலன்

மஞ்சள் கூடை (சிறுகதை)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் உட்காரக் கிடக்கும் நாற்காலிங்க மாதிரி ஊருக்குள்ள காலடி வச்சதும் லேசான மஞ்சளும் அங்கங்க வெள்ளைக் கலருமா சுண்ணாம்பு அடிச்ச சுவத்தில  நீலக் கலருல அரசு நடுநிலைப் பள்ளினு எழுதியிருக்கிற பள்ளிக்கூடம் தான் எடுப்பாத் தெரியும்

அங்க படிச்சி வெளியேறின பெரிய பெரியப் படிப்பாளிங்கெல்லாம் கவர்ன்மென்ட் வேலைக்காக வெளியூருல தங்கப் போயிட்டாக. ஊருக்குல்ல இருக்குற ஒன்னுரெண்டு அன்றாடங் காய்ச்சிகளும் அந்தக் காலப் பெருசுகளும் தான் குடியிருக்காக அந்த ஊர்ல இப்போ

சேவுக்கடையில வேலை செய்ற முத்துச்சாமிக்கு மூத்தது பொண்ணு, அவ பேரு விஜி. அடுத்து இருக்குற ஒன்றரை வயசு பையனுக்கு அஜித்னு வச்சி ஆசையாசையா கூப்பிடுவாக

மொத்தமே இருவது பிள்ளைங்க படிக்கிற அந்தப் பள்ளிக்கூடத்துல, ஆள் கணக்குக்காக நாலு வயசுலயே விஜியை ஒன்னாவது வகுப்புல உட்கார வச்சிட்டாக

பாதி நாள் பள்ளிக்கூடம் மீதி நாள் திண்ணையிலையும் மந்தையிலும் இஷ்டம் போல துள்ளிக் குதிச்சி விளையாடுற குட்டிப் பாப்பா, ரொம்ப துறுதுறுனு இருக்கிற செல்லக்குட்டி அவ

சனி ஞாயிறு இரண்டு நாள் லீவ் விட்டு திங்கள்கிழமை காலையில என்னைக்கும்  இல்லாம இன்னைக்கு விஜி பாப்பா பள்ளிக்கூடம் போக ஆவலா இருந்தா

வீட்டுக்கு வெளிய ஒரு மண் அடுப்பு இருக்கும், அங்க தினம் எழுந்ததும் எல்லோரும் குளிக்க வெந்நீ பத்த வைக்க வேண்டியது முத்துச்சாமி வேலை

நாலைஞ்சு குடும்பங்களுக்கு ஒரு தண்ணீர்க் குழாயினு தெருவுக்குத் தெரு இருக்கும். வரிசையா கலர் கலரா கழுத்து வச்ச குடங்களை நடு சாமத்துலயே வரிசையில போட்டுட்டு ஆறு மணிக்குத் திறந்து விடற தண்ணிய பிடிச்சி வைக்க ஆளாளுக்குப் போட்டி பொங்கும்

வீட்ல நல்லா குடத்தைக் கழுவிட்டு வந்தாலும், அந்த நல்ல தண்ணியில சலுப்புப் சலுப்புனு கையை விட்டு கழுவி கீழ ஊத்தையில பக்கத்துல இருக்குற வேறவுக கொடத்துல விழுத்திச்சனா சண்டை முத்திப் போயிரும்

தெனமும் ஒரு சண்டைக் காட்சிய வேடிக்கைப் பார்க்க சின்னப்புள்ளைகளுக்கு ஒரே குஷியும் கும்மாளந்தான்

அடுப்புல வச்ச தண்ணிய அண்டாவுல சோமாறி ஊத்திட்டு பச்சைத் தண்ணியவும் கலந்து, “சுடுதா… சுடுதா”னு கொஞ்சம் கொஞ்சமா விஜி பாப்பா தொடையில ஊத்த ஊத்த, அவ என்னடானா…”சுடுது சுடுது”னு சொல்லியே தண்ணீருல விளையாண்டு நேரங் கடத்த ஆரம்பிச்சா

கத்தி கித்தி பேசுனா கோவிச்சுக்கிட்டு பள்ளிக்கூடம் போகாம இருந்துருவாளோனு ஒருவழியா பொறுமையா குளிக்க வச்சி   யூனிபார்மை மாட்டிவிட்டு தலையில எண்ணெய் தேச்சிட்டு சீப்பு எடுத்துட்டு வர வீட்டுக்குள்ள போனா அம்மா சங்கரி

அதுக்குள்ள பயபுள்ள அவளை ஏமாத்திட்டு திண்ணையில உட்கார்ந்திருந்த தாத்தாகிட்ட ஒத்த ரூபாய் நாணயத்தை  பிடுங்கிட்டு ஓடியே போயிட்டா

“இந்தக் கழுதைக்கு இதே வேலையாப் போச்சு”னு திட்டுற மாதிரி பேத்திய ரசிச்சாரு தாத்தா

நாலு வீடு தள்ளி இருக்கிற பேச்சிமுத்து மாமா பொட்டிக் கடையில தான் ஆளே வராம செலாத்தலாத் தான் இருக்கும் எப்போதும், நேரம் போகலைனு பேருக்கு கடை வச்சிருந்தாரு அவரு

அத்தை போடுற காட்டுச் சத்தமெடுத்த வசவுக்குத் தாங்காம அவர் கடையில வந்து உட்கார்ந்திருக்காருனு ஊருல பேசிக்குவாக

ஒரு சின்ன மரப்பலகையை மேலே சம்மணங்கால் போட்டு வியாபாரம் பார்த்திட்டு இருக்குற நேரத்துல, மளமனு உள்ள எலிக்குட்டி மாதிரி நுழைஞ்சி அவர் தொடை மேலே ஏறி நின்னு வளைஞ்ச கம்பியில தொங்கவிட்டிருந்த பாக்கெட்டிலிருந்து அப்பளப்பூவை ஒவ்வொன்னா எடுத்து அஞ்சு விரல்லையும் மாட்டிக் கிட்ட வெளில வந்தா விஜி

“எப்படி வந்து எடுத்துட்டு போகுது பாரு… அடியேய் துட்டு உங்கப்பனா வந்து கொடுப்பான் குடுடி”னு கேட்க

“இந்தாரும் இந்தாரும் ஒம்மத் துட்டு”னு நேரா கல்லாவுல தூக்கிப் போட்டு  ஓடியே போயிட்டா

அவளைப் பாதியிலயே வழிமறிச்ச காளீஸ்வரீ, அப்படியே செண்டூக்க  தூக்கிக் கொஞ்சி, “ஏய் ..அத்தைக்கு ஒன்னு கொடுடி” என்று கேட்டுக் கொண்டே கன்னத்தில் முத்தமிட்டு நடுவிரலில் மாட்டியிருந்த ரோஸ்கலர் குழல் அப்பளத்தை கடிப்பது போல் பாவனை செய்ய, ஐந்து வயது விஜி பாப்பா  உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாள்

“எனக்குத் தரமாட்டியா? ஒன்னே ஒன்னு கடிச்சிக்கிட்டா?” கொஞ்சினாள் காளீஸ்வரி

ஏடாகூடாம முகத்தைக் கோணலாக்கி கண்ணீரு ததும்பி எப்படா கன்னத்தை தொடுவோம்னு காத்திருக்க, “அடியேய் அழுகாதடி, எனக்கு வேண்டாம்த்தா நீயே வச்சுக்கோ, நான் கேட்க மாட்டேன் இன்ன” என்று சமாதானமா உதடு குவித்து சின்னப்பிள்ளை மாதிரி கொஞ்சிப் பேசினாள்

அதைப் பார்த்து பாப்பாவுக்கு சிரிப்பு வர, அப்படியே நைசாக அவகிட்ட இருந்து நழுவி குடுகுடுவென வீட்டைப் பார்த்து ஓடிப் போகப் பார்த்தா

“அத்தைக்கு அப்பளம் வேண்டாம் ஆனா ஒரு முத்தங்கொடு, அப்பத்தான் விடுவேன்” பாப்பாவோடு மல்லுக்கு நின்றாள் காளீஸ்வரி

“எத்தே, நான் பள்ளிக்கூடம் போகனுமில்ல. போ அங்கிட்டு, எங்க அம்மாட்ட சொல்லி உங்கூட சண்டை போடச் சொல்லுவேன்” எதிர்த்துப் பேசியவளிடம் வலுக்கட்டாயமாக கன்னத்தை திணித்து அப்பளத்திலுள்ள எண்ணெயோடு அவள் எச்சிலும் கலந்து பிசுபிசுப்பான வாயை ஒட்டவைத்து “ஓடிப் போடி”னு சொல்லி முதுகில் அடிப்பது போல் பாவனை செய்ய, அத்தையின் கை முதுகில் படுவதற்கு முன்னே வீடு போய்ச் சேர்ந்தாள் விஜி பாப்பா

வாசலில் காத்திருந்த சங்கரி லபலபனு கத்த ஆரம்பிச்சா

“காலையில பள்ளிக்கூடம் போற நேரத்துல சோறு கீறு சாப்ட வேணாமா? அப்பளத்தை மாட்டிக்கிட்டு ஆடி அசைஞ்சி வர, இதெல்லாம் திங்கக் கூடாதுனு சொன்னா கேட்க மாட்டியா? உனக்கு வேணுங்குற போதெல்லாம் துட்டக் கொடுத்து கெடுத்து வச்சிருக்கு பெருசு”னு, சந்தடி சாக்குல மாமானாருக்கு அர்ச்சனை செய்தாள் சங்கரி

அவ கையைப் பிடிச்சி மடியில உட்கார வச்சி தனது கொண்டைத் தலையில் மாட்டியிருந்த ஒன்னுரெண்டு பல்லுப்போன நீலக் கலரு சீப்பை எடுத்து பர்பர்னு சீவி வேகவேகமாக இரட்டைச் சடை போட்டு விட்டா

அவ்வளவு அவசரத்திலயும் அந்தப் சிகப்புக் கலரு ரிப்பன்ல ரோசாப்பூ மாதிரி முடிச்சிப் போட்டு ஒவ்வொன்னா அழகா விரிச்சி விட்டிருந்தா. கொஞ்சம் அழுக்காவும் எண்ணெய் ஒட்டிக் கிடந்தாலுங் கூட தலைமேலே இரண்டு சிகப்புக் கலரு பட்டாம்பூச்சி மாதிரி குத்த வச்சிருந்ததைப் பார்க்குறத்து அவ்வளவு அழகா இருந்துச்சி

பாப்பாவுக்கு இன்னமும் பிறந்த மொட்டை போடலை அதனால இப்பவே  நல்ல வளர்த்தியா இருக்கும் தலைமுடி

சரியாப் பதினோறு மாசத்துல மொட்டை போடலாம்னு குலசாமிக்கு கெடாய் நேந்து கோவிலுக்குப் போற மூனு நாளைக்கு முன்னாடி அவ அப்பத்தா இறந்துட்டா.

அடுத்து மூனாவது வருசம்னு பார்த்தா இரண்டாவது பிள்ளை நாலு தள்ளிப் போச்சு, சரி இரண்டு பேருக்கும் சேர்ந்தே ஒரே தடவையில போடக் காத்திருக்காக

இந்த வைகாசியிலயாவது நிறை செலுத்தனும்னு தொழுவுல இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இதுகளோட சேர்ந்து வளருதுக

கவுனு மாதிரி பச்சைக் கலருல மேல்துணியும் அதுக்குள்ள வெள்ளைக் கலரு ஆம்பளைப்புள்ள சட்டையோடையும் இருந்த விஜிக்கு, உள்ளூரு பிள்ளை வீட்ல இரண்டு இட்லி வாங்கி ஊட்டிவிட்டு, முழுங்க முன்னாடி டம்ளர்ல இருக்கிற தண்ணியை குடிக்க வச்சா சங்கரி

தான்  கட்டியிருந்த சேலை முந்தானையில தொடச்சி விட்டு, மகளோட கன்னத்துல முத்தத்தைக் கொடுத்துட்டு ரெடியா சைக்கிள் பெடலு மேல ஒரு காலும் கீழ்  வாசப்படில  ஒரு காலும் வச்சி காத்திருந்த அப்பன் சைக்கிள்ல ஜம்னு தூக்கி உட்கார வச்சிட்டா

“பாப்பா… பத்திரமா அப்பா இடுப்பை பிடிச்சிக்கோ. அம்மா பைக்குள்ள பிளேட்டு வச்சிருக்கேன், மதியானம் பள்ளிக்கூடத்துல சாப்ட்டுக்கோ இன்ன” என்று இவ சொல்ல

“சரிம்மா…சாப்ட்டுட்டு வீட்டுக்கு வந்துரட்டா…” என்று முகத்தைப் பாவம் போல வைத்துக் கேட்டாள் விஜி

“இல்லை பாப்பா… சாயந்திரம் மணி அடிச்சாப் பிறகு தான் வீட்டுக்கு வரணும். அம்மா உனக்கு நிலக்கடலை அவிச்சி வச்சிருக்கேன், நீ வந்ததும் தாரேன் சரியா” என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தாள்

முகமெல்லாம் எண்ணெய் வடிஞ்சிக்கிட்டு மூக்கு ஒழுகிட்டு இருந்தாலும், விஜி பாப்பா நல்லா லட்சணமா இருப்பா. நல்ல குண்டு குண்டுனு கன்னமெல்லாம் உப்பியிருக்க, அதுல ஒரு சின்னக் குழி அந்தக் குழிக்குள்ள தான் உட்கார்ந்திருக்கும் அவுக அம்மா வச்சி விடுற கண்மை

அம்மாவைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றவள், இரண்டு வீடு தள்ளிச் சென்றதும் சட்டையணியாத அவளின் அப்பாவின் இடுப்பைப் பிடித்துக் கதை பேசிக் கொண்டே போனாள்

பள்ளிக்கூடம் பக்கத்துல இருக்குற தெக்கடை குண்டுத் தாத்தா கடையில அணில் கடிச்ச சிவப்புக் கொய்யா ஒன்ன வாங்கி அதை நாலா கீத்துப் போடச் சொல்லி  பாப்பா கையில் கொடுத்து விட்டு, “சேட்டை செய்யாம வாத்யாரு சொல்றதைக் கேட்டு நல்லா படிச்சிட்டு வரணும் சரியா…”னு சொல்லிட்டு, அவளின் அப்பா சைக்கிளை எடுத்துட்டு கிளம்ப ஆரம்பிக்கையில

“அப்பா… சாந்திரம் வரும்போது வயர்கூடை வாங்கிட்டு வருவீகளா? பத்மா புள்ள வச்சிருக்கிற மாதிரியே கலர்ல…” என்று மழலைக் குரலில் அவர் கட்டியிருந்த வேட்டியை இழுத்துப் பிடித்தபடி கேட்டாள்

“அதெல்லாம் எதுக்குடா… இந்தப் பை நல்லாதானே இருக்கு. இது கிழிஞ்சி போச்சுனா அப்பா வாங்கித் தரேன் இன்ன. இப்ப நீ உள்ள போ, அந்தோ வாத்யாரு வராரு பாரு… ஓடுரா நல்ல புள்ளள நீ…” என்று கெஞ்சியபடி அனுப்பி வைத்தார்

“எப்பா..எனக்கு கூடை வேணும்ப்பா…”

“சரி சரி போ வாங்கிட்டு வரேன்” என்றவர் மகளைத் திரும்பித் திரும்பி பார்த்தபடி சைக்கிளை மிதித்தார்

நல்லா நெடுநெடுனு வளர்ந்து வாசலுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருக்குற பாக்குமரத்தைச் நாலு சுத்து சுத்திட்டு மெதுவா ஆடி அசைஞ்சி பிள்ளைகளோட சேர்ந்து உட்கார்ந்துட்டா விஜி

பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பத்மா இவளைக் கண்டதும் வயர்கூடையை அவ மூஞ்சிக்கு முன்னாடிக் கொண்டு போறதும் பின்ன எடுக்குறதுமா வெறுப்பேத்திக்கிட்டு  இருந்தா

“இரு இரு நாளைக்கு நானும் கூடை எடுத்துட்டு வருவேன் பாரு. எங்கப்பா இன்னைக்கு வாங்கிட்டு வந்துருவாரே” உற்சாகமாச் சொன்னாலும் மனசுக்குள்ள விஜி பாப்பாவுக்கு கவலை தான் வளர்ந்துச்சி

அன்னைக்கு முழுசுக்கும் மத்த பிள்ளைகளோட விளையாடமா சோகமா இருந்தா.

சாயந்திரம் மணியடிச்சதும் பிள்ளைகள எல்லாம் அத்துவிட்ட ஆட்டுக்குட்டிக மாதிரி வேகவேகமா வீட்டுக்கு ஓடுதுக. ஆனால் விஜி மட்டும் கடைசிப் பிள்ளையா தனியா வெளில வந்து தெக்காம பார்த்துட்டு இருந்தா

அவ அப்பா நைட்டு தான் வீட்டுக்கு வருவாருனு தெரிஞ்சும், ஏக்கமா திரும்பிப் பார்த்துட்டு வந்தவளை ரோட்டுல சைக்கிள் ஓட்டிப் பழகிட்டு இருந்த ஒரு பய நேரா அவ மேலேயே கொண்டு போய் விட்டுட்டான்

விஜி பாப்பா அழுத சத்தத்தில அங்க இருக்கிற ஆளெல்லாம் கூடிட்டாக

“ஏலே… ரோட்டுல ஆளு இருக்குறது கூட தெரியாம எப்படிலே ஓட்டிட்டு வந்த, அறிவு இருக்கா இல்லையா?”னு ஆளாளுக்கு மோதுன பலலத்தான் வசவு உறிச்சித் தள்ளிட்டாக. அதுல ஒருத்தன் கோபத்துல அந்தப் பயலை அடிக்கவே போயிட்டான்.

விஜிக்கு அடியெல்லாம் படல, கை முட்டியில லேசாத் தேச்சிருந்தது, அவ்வளவு தான். இதுக்குள்ள விசயம் தெரிஞ்சி ஓடிவந்துட்டா சங்கரி

பயமும் பதட்டமும் நிறைஞ்சி கிடந்த முகத்துல, கண்ணீர் வந்து கன்னத்துல மறுகாலாப் போச்சு.

“எம்மா… எனக்கு அப்பா கூடை வாங்கிட்டு வருமா…” இதைத் தான் கேட்டாளேத் தவிர விழுந்ததைப் பத்தி எதையுமே நினைக்கலை

“பாப்பா… உனக்கு எங்கையும் வலிக்கலையா டா…. அம்மாகிட்டச் சொல்லுப்பா…” என்று பாவமாகக் கேட்டாள்

“நான் கீழ விழுந்திட்டேன்ல, எனக்கு வலிக்கும்ல, அப்போ கூடை வாங்கித் தா…” பரிதாபமாகக் கேட்டாள்

அழுவதா? சிரிப்பதா? அம்மாவுக்குத் தெரியலை, முத்துச்சாமிக்கு ஆள் விட்டு தகவலைச் சொல்லிவிட்டா. ஆனால் பாப்பாத் தெளிவா இருக்கா தனக்கு என்ன தேவை, அதை எப்படி வாங்கனும்னு

நைட்டு அப்பா கூடை வாங்கிட்டு வருவாருனு காத்துக் கிடந்தவ, அப்பா வீட்டுக்குள்ள நுழையிற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித் தூங்கிட்டா

மறுநாள், அவளின் நெளிந்த எவர்சில்வர் தட்டும் கிழிந்த புத்தகத்தோடு சிலேட்டுக் குச்சியும் புதிதாகக் குடி போயிருந்தது, அப்பா வாங்கி வந்திருந்த மஞ்சள் கூடைக்கு

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. Namma thamizhaga graamappura mozhiyaip padikkiRathil oru alaathi inbam irukku. UnGaL ‘Manjal Koodai’ siRu kathaiyaip padiththapin athu sari thaan enRu enakkuth thORuvathil viyappillai !

    “Mandakolathur Subramanian.”

  2. மிக அருமை. குழந்தையையும் அவள் ஆசையையும் இயல்பான மொழி நடையில் சொல்லியிருப்பது மகிழ்ச்சி.

கன்னத்தைக் கிள்ளாதே!! (சிறுகதை) – ✍ Dr.K.Balasubramanian, Chennai

பணம் என்ற பங்காளி (கவிதை) – ✍ பூந்தையல் கவிமகள், சென்னை