in

மலரே மௌனமா ❤ (சிறுகதை) – ✍பானுமதி பார்த்தசாரதி

மலரே மௌனமா ❤

நீலா தொணதொணவென்று பேசிக் கொண்டிருந்தாள். பக்கத்து கேபினில் வேலை செய்து கொண்டிருந்த ரிஷிக்கு எரிச்சலாக இருந்தது. மெதுவாக எட்டிப் பார்த்தான்

நீலாவின் எதிரில்  உட்கார்ந்திருந்த பவித்ரா, இரண்டு காதுகளிலும் ஹெட்போன் பொருத்திக் கொண்டு, கம்ப்யூட்டரில் ஏதோ தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாள். அந்த அறையில் வேறு யாரும் இல்லை. ரிஷிக்கு சிரிப்பு வந்தது. 

“நீலா, என்ன நீயே பேசிக்கற?” எனக் கேட்டான் சிரித்தபடி

“ஆமா, எனக்கு பைத்தியம். இந்த பவித்ரா கூட யார் இருந்தாலும் கட்டாயம் பைத்தியம் பிடிக்கும்” என்றாள் சிடுசிடுத்த குரலில் 

“உன் பிரென்ட் தான? ஏன் இப்படி சொல்ற?” எனவும் 

“எந்த கேள்வி கேட்டாலும் ரெண்டே பதில். ‘எஸ்’ னா ‘உம் ‘,’ நோ’ னா ‘ஊஹூம் ‘, ஜடம்…” என்றாள்

ரிஷியும் மனதிற்குள் ‘ஆமாம்’ என நினைத்துக் கொண்டு சிரித்தபடி தன் வேலையைத் தொடர்ந்தான்

கணினியின் எதிரில் அமர்ந்திருந்தாலும், மனம் பவித்ராவைப் பற்றியே நினைத்தது. 

அவனுக்கு பவித்ராவை மிகவும் பிடிக்கும் . எதனால்? யாரோடும் பேசாத அவள் மௌனமா?  ஒருமுறை பார்த்தால், மறுமுறை பார்க்க வைக்கும் அவள் அழகா? அவனுக்கு பதில் தெரியவில்லை

ஒருநாள் அப்படித் தான் தன் அறையில் வேலை செய்யும் போது குளிரால் மிகவும் நடுங்கினாள்

“பவித்ரா, ஏன் இப்படி நடுங்ககிறீங்க?” என ரிஷி கேட்க 

“தப்பு என்னுது தான், சரியான வின்டர் டிரஸ் எடுத்துட்டு  வரல அமெரிக்காவின் பசிபிக் கடற்கரை ஓரம், டப்ளின் நகரில் ஜனவரி மாத குளிர், நடுங்காமல் என்ன செய்யும்?” என்றவள்,  மேற்கொண்டு ஏதும் பேசாமல் தன் வேலையில் மூழ்கி விட்டாள் 

“என் ஜாக்கெட் தரட்டுமா?” என ரிஷி கேட்க, ‘வேண்டாம்’ என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு, மீண்டும் தன் வேலையில் மூழ்கினாள் 

மிக மெல்லிய, உயரமான உடல். மஞ்சள் நிறம், அழகான பெரிய கண்கள். செதுக்கி வைத்தாற் போல் அளவான மூக்கும், வாயும். கருத்து, சுருண்ட நீண்ட கூந்தல் 

இவ்வளவு அழகை வைத்த ஆண்டவன், ஏன் இப்படி ஒரு அமைதியை வைத்தான். யார் பேசினாலும், எங்கிருந்து எந்த சப்தம் வந்தாலும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்

முதலில் செவிட்டு ஊமையோ என்று கூட நினைத்தான் ரிஷி.  பிறகு தான் புரிந்தது, அவள் மௌனத்தின் பின்னே ஏதோ ஒரு காரணம் இருக்கிறதென்று. ஆனால் அது என்னவென்று புரியவில்லை. 

ஒரு நாள் அலுவலகத்தில் வேலை சம்பந்தமாக ஒரு பிரச்சினை. பவித்ராவின் வேலை தான். ஆனால் அவள் ரிஷியின் டீமில் இருப்பதால் டீம் மெம்பர்ஸ் எல்லோரும் லேட்டாக வேலை செய்ய வேண்டியதாயிற்று

ஆனால் நீலா வேறு டீமில் இருப்பதால் நேரத்தோடு தன் அபார்ட்மென்ட்டிற்கு போய் விட்டாள். வேலை முடிந்து எல்லோரும் வீட்டிற்கு கிளம்ப இரவு மணி ஒன்பது ஆகி விட்டது.               

“வெரி ஸாரி. என்னால தான் எல்லோருக்கும் லேட் ஆய்டுச்சு” என்றாள் வருத்தத்துடன் .                        

“உன் ஸாரி யாருக்கு வேண்டும்?  நாளை எங்களுக்கு இந்தியன் ரெஸ்டாரன்ட்ல ட்ரீட் குடு” என்றாள் உடன் பணிபுரியும் பவானி 

“ஓ.கே. டன்” என்றாள் பவித்ரா

எல்லோரும் சிரித்துக் கொண்டே அவரவர் காரில் கிளம்பினர். பவித்ராவின் கார் ஏனோ ஸ்டார்ட் ஆகவில்லை.

காரை எடுக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.  கார் பார்க்கிங்கில் இருந்து ரிஷி தன் காரை எடுக்கச் செல்லும் போது பவித்ரா காருடன் போராடுவதை கவனித்தான் .வண்டியைவிட்டு வெளியே வந்தான்.  அடிக்கும் குளிர் காற்றில் இரத்தமே உறைந்து விடும் போல் இருந்தது.         

“ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா பவி?” என ரிஷி கேட்க

அவள் அம்மாவைத் தவிர இதுவரை யாரும் அவள் பேரைச் சுருக்கி அப்படிக் கூப்பிட்டதில்லை. ஸ்டியரிங்கிலிருந்து கைகளை எடுத்து விட்டு கார் கண்ணாடி வழியே உற்று நோக்கினாள்

உதடுகள் லேசாகப் பிரிய அவள் ஆச்சர்யத்துடன் பார்ப்பதைப் பார்த்து அவனுக்கு லேசான சிரிப்பு வந்தது

”எனி ஹெல்ப்?” என்றான் மீண்டும்

கார் கதவைத் திறந்து, “ஸ்டார்ட் ஆகவில்லை” என்றாள்

“என் கார்ல ஹீட்டர் ஓடிட்டு தான் இருக்கு. நீங்க போய்  ஏறிக்கோங்க. நான் உங்க வண்டிய லாக் செய்துட்டு வரேன். இந்த குளிர்ல் வண்டில  என்ன ரிப்பேர்னு பாக்க முடியாது. நான் என் கார்ல் உங்கள டிராப் பண்றேன்” என்றவன், பவித்ராவை அவள் தங்கும் அபார்ட்மெண்ட்டில் விட்டான்

அழைப்பு மணியை  அழுத்த,  நீலா தூங்கி வழிந்து கொண்டு வந்து கதவைத் திறந்தாள். பவித்ரா அவனை உட்காரச் சொல்லி விட்டு சமையல் அறைக்குள் சென்றாள்

சில நொடிகளில் ஏதோ மிக்ஸியில் அரைக்கும் சப்தம் கேட்டது. ஒரு கண்ணாடி டம்ளரில் பால் போல் ஏதோ கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்தாள்               

“நான் நைட்ல  பால் குடிக்கறதில்ல” என ரிஷி மறுக்க

“இது பால்  இல்ல. லேட் ஆயிடுச்சே, பசிக்கும்ல. அதான் பிரூட்ஸ் நட்ஸ் எல்லாம் போட்டு மில்க் ஷேக் செஞ்சேன்” என்றாள் தலையை சாய்த்துக் கொண்டு.               

அவளை உறுத்துப் பார்த்தபடி டம்ளரை வாங்கிக் கொண்டான்.    

ஸ்மூத்தியை குடித்து கிளம்பியவனுக்கு வீட்டிற்குப் போன பிறகும் பசியில்லை. உடல், மூளை இரண்டும் மிகவும் களைப்படைந்ததால் படுக்கையில் விழுந்தான்

தூங்குவதற்காக படுத்தானே தவிர, கண்களை மூடினாலும் பவித்ரா, கண்கள் திறந்தாலும் பவித்ரா என்று அவனை அலைகழித்தாள்

அதிலும் அவள் தலையைச் சாய்த்து  ஸ்மூத்தியை குடிக்கச் சொன்ன விதம், அவனுடைய அம்மாவே நேரில் நின்று  கெஞ்சிக் கேட்டது போல் இருந்தது . அவள் அழகும் அமைதியும் அவனை அலைகழித்தது

இவள் மட்டுமே தன் மனைவியாக  முடியும் என்று திடமாக நம்பினான். ஆனால் அவளிடம் எப்படி சொல்வதென்று தான் தெரியவில்லை. அதன் பிறகு ரிஷி அவளிடம் பழகும் முறையே வேறு மாதிரி இருந்தது       

அது பவித்ராவிற்கும் நன்கு புரிந்தது. அவன் கண்களில் தெரிந்த அன்பும், பரிவும் அவளுக்கு அவனைப் புரிய வைத்தது. 

ஆனாலும் அவன் உள்ளம் தெளிவாகத் தெரியாமல் நாம் எதையும் கற்பனை செய்யக் கூடாது என்று எண்ணினாள்

ஒரு சனிக்கிழமை காலை ஒன்பது மணி வரை தூங்கிக் கொண்டிருந்தான். முதல் நாள் இரவு விடிய விடிய ஆப் ஷோர் மீட்டிங். அதில் சோர்ந்தவன், இன்னும் தூங்கி கொண்டிருந்தான்

அவன் செல்போன் விடாமல் அடித்தது. எடுத்து பார்க்க, திரையில் பவித்ராவின் எண் மிளிர, சிரிப்புடன் உயிர்பித்தான்

“ரிஷி, காலைல தூங்கிட்டு இருந்த உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா?” எனக் கேட்க

“என்ன பவித்ரா? எங்கிருந்து பேசற?” எனக் கேட்டான் சற்றே பதற்றமாய்

“நான் ப்ளசண்டன் சாய்பாபா கோவிலுக்கு வந்தேன் திரும்பி வரும் போது மான் கூட்டமா குறுக்க வந்துச்சுனு பிரேக் அடிச்சேன். பக்கத்துல ஒரு பள்ளத்துல கார் எறங்கிடுச்சு. இப்ப என்ன செய்யறதுனு தெரியல” எனவும் 

“நீ ஒண்ணும் செய்யாத… காருக்குள்ள ஜாக்கிரதையாக இரு. ஒரு பத்து நிமிசத்துல நான் அங்க இருப்பேன்” என்றவன் விரைந்து அவள் இருக்கும் இடத்திற்கு போய் சேர்ந்தான். ஒரு மெக்கானிக்கின் உதவியோடு வண்டியையும் பவித்ராவையும் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தான்

நாளாக ஆக அவர்களுக்குள் இருந்த அன்பு ஆழமானது

ஒரு நாள் ரிஷி, “பவித்ரா, நீ ஸ்டோன்ரிட்ஜ் மாலுக்கு வர்றியா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” எனவும், அவளும் மறுக்காமல் சென்றாள் 

மாலில் ஒரு ஓரத்தில் கொஞ்சம் ஸ்நாக்ஸும், காபியையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார்கள். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசி சகஜ நிலைக்கு வர முயற்சித்தார்கள் .

அப்போது பவித்ரா, “ரிஷி, நீங்க ஏதோ கேக்க தயங்கற மாதிரி இருக்கு, என்ன விஷயம்  சொல்லுங்க?” என்றாள்

சற்றும் தாமதியாமல் காதலை சொன்னான் ரிஷி 

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? இது இன்னைக்கி நேத்து யோசிச்ச விஷயமில்ல. என் நீண்ட நாள் கனவு. ஐ லவ் யு பவி” என்றான் காதலுடன்

ஒரு கணம் மௌனமாய் பார்த்தவள், “நீங்க சொல்லமையே என்னால அதை உணர முடிஞ்சுது ரிஷி, ஆனா நான் உங்களுக்கு தகுதியானவ இல்ல” என்றாள். அதை சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது 

“பவித்ரா, ஏன் அப்படி சொல்ற? எனக்கு உண்மையான பதில் வேணும்?” என்றான் பிடிவாதமாய் 

“உண்மையச் சொல்றேன். ஆனா அதுக்கப்புறம் நீங்க என்னை வெறுத்துடுவீங்க” என்றாள் அழுகையுடன் 

“ஏன் இப்படியெல்லாம் பேசற? என்ன விஷயம் சொல்லு?” என பதறினான் 

“அப்ப எனக்கு 12 வயசு. அம்மா, அப்பா ரெண்டு பெரும் வேலைக்கு போயிட்டு இருந்தாங்க. ஒரு நாள் எனக்கு உடம்புக்கு முடியாம இருந்ததால ஸ்கூலுக்கு போகல. பக்கத்து வீட்டு ஆன்ட்டிகிட்ட விட்டுட்டுப் அம்மாவும் அப்பாவும் ஆபிஸ் போய்ட்டாங்க. அந்த ஆன்ட்டி ஏதோ வேலையா வெளிய போனாங்க. அந்த சமயம் உள்ள வந்த செக்யூரிட்டி….” என அவள் தேம்ப

“பவி…” என தேற்ற அருகில் வந்தவனை விட்டு விலகி நின்றாள்

சில நொடிகளில் தன்னை மீட்டவள், “கற்பு அது இதுனு நான் பேசல. ஆனா இந்த சம்பவம் கல்யாண வாழ்க்கை பத்தின பயத்தை என் மனசுல உண்டு பண்ணிடுச்சு. அதான் நான் உங்களுக்கு தகுதியானவ இல்லனு சொன்னேன்” என்றாள் அழுகையுடன் 

“உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு மனைவியா வர முடியாது” என்றான் ரிஷி தீர்மானமாய் 

“என்ன உளறீங்க? நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இல்லையா?” என்றாள் பவித்ரா, இயலாமையால் விளைந்த கோபத்துடன் 

“நான் ஒன்னும் உளறலை. அதைப் பத்தி நீ கவலைப் பட வேண்டாம், நாம நல்ல டாக்டரை பாக்கலாம். நீ மனசளவில் தயாராகும் வரை நான் காத்துட்டு இருக்க தயார்” என்றான் தன் முடிவில் இருந்து சற்றும் வழுவாமல்

நம்பாமல் அவனை பார்த்தவள், “உங்க அம்மா அப்பா இதுக்கு சம்மதிப்பார்களா?” என்றாள் நிராசையுடன்

“ஏற்கனவே என் விருப்பத்த அவங்ககிட்ட சொல்லிட்டேன். என் மேல அவங்களுக்கு நம்பிக்கை உண்டு, நான் எந்த முடிவு எடுத்தாலும் அவங்க ஏத்துப்பாங்க” என்றான் 

அவள் மௌனமாய் நிற்க, வா என்பது போல் கைகளை நீட்டினான் அவன். அதில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள் பவித்ரா 

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. பெருந்தன்மை….முற்போக்கு மனப்பான்மை…கதாநாயகியை ஏற்கும்
    காதாநாயகன்..இன்றைய காலத்திற்கேற்ற கதை..அருமை..எடுத்துக் கொண்ட கரு சிறப்பு..எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்..

  2. சின்ன வயசில் பல பெண்களுக்கு நேரிடும் அவமானம். பவித்ராவால் மறக்க முடியவில்லை. ரிஷியின் முடிவுக்கு வாழ்த்துகள்.

  3. ஒரு மென்மையான காதல் கதை. அதை வாசகனுக்குக் கடத்தும் பொருத்தமான வார்த்தைகள். ஓரளவிற்கு முடிவை ஊகிக்க முடிகிறது. இருந்தாலும் மனதை கனக்கச் செய்யும் கதை. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள் மா.

‘மகள் வரைந்த நிலா…!’ (கவிதை) – ✍ வளர்கவி, கோவை

வேறு யார் பேசுவார்? (சிறுகதை) – ✍கிருஷ்ணவேணி