in

வேறு யார் பேசுவார்? (சிறுகதை) – ✍கிருஷ்ணவேணி

வேறு யார் பேசுவார்?

செல்வராஜ் முககவசத்தை கழட்டி விட்டு, டீயைக் குடித்தான். சிறிது ஆசுவாசபடுத்திக் கொண்டான். வாழ்க்கை என்னமாய் ஒவ்வொருவரையும் புரட்டிப் போட்டு விடுகிறது

நான்கைந்து நாட்களாகச் சரியான தூக்கம் இல்லை. கண்களில் எரிச்சல். தொடர்ந்து வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதால், எல்லா நேரமும் அவசரம்

ஆம்புலன்ஸ் ட்ரைவர், அதுவும் கொரோனா காலத்தில் என்றால் சும்மாவா?

ஒரு நோயாளியை ஏற்றி மருத்துவமனையில் இறக்குவதற்குள் அடுத்த அழைப்பு, முக்கால்வாசி பேர் வீடு திரும்புவார்களா மாட்டார்களா என்ற கவலையின் ரேகையோடு

இன்று காலை நடந்ததை மீண்டும் மனம் அசை போட்டது. நான்காவது மாடியில் ஒரு வயதான தம்பதி. இரண்டு பேருக்கும் கொரோனா பாஸிடிவ். பி.பி.ஈ உடையுடன் அவர்கள் வீட்டை நெருங்கினான்

வயது முதிர்ந்த அவரை முதலில் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்த அம்மாவைப் பார்த்தவுடன் உறுதியாயிற்று. அவரே தான், நாராயண வாத்தியார்

அம்மா தள்ளாடி எல்லாவற்றையும் அவசர அவசரமாக ஒரு பையில் அடைத்துக் கொண்டிருந்தார். வாத்தியார் இருமலோடு ஃபோன் பேசிக் கொண்டிருந்தார்

“சரி…சரி.. ஆம்புலன்ஸ் வந்தாச்சு, நாங்க அட்மிட் ஆகறோம், அப்புறம் பேசறேன்”. பேசுவது அவர் மகன் கார்த்திக்கா, அமெரிக்காவிலிருந்தா? முதல் முறையாக பி.பி.ஈ உடைக்குள் மிகவும் ஆறுதலாக உணர்ந்தான் செல்வராஜ்

ஆசிரியரைப் பார்ப்பது என்பது மக்குப் பையன்களுக்கு சாகிற வரை வேதனை தான் போலும்

பள்ளி நாட்களில் கடைசி பெஞ்சில், மண்டுவாக, எல்லா ஆசிரியர்களாலும் ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ என்ற ரீதியில் பட்டம் கட்டப்பட்டு எப்படியோ கழிந்து விட்டது

நாராயண வாத்தியார் வசித்த தெருவில் தான் செல்வராஜின் குடும்பமும் குடியிருந்தது. வாத்யாரின் மகன் கார்த்திக், இவனுடைய வகுப்பு தான் காலையிலும் மாலையிலும் டியூஷன் பையன்களின் கூட்டம், அவர் வீட்டு வாசலில் அலை மோதும்.

சம்பளத்தைக் காட்டிலும் ஒரு மடங்கு அதிகமாக டியூஷனில் வருவதாகப் பேசிக் கொண்டார்கள்

எது எப்படியோ, படிப்பில் நாட்டமில்லாத செல்வராஜுக்கு டியூஷனுக்குப் போகவும் பிடிக்கவில்லை. கார்த்திக் எப்பொழுதும் முதல் ராங்க் தான். அவனை நினைத்து வாத்யாருக்கு மிகுந்த பெருமை

“என்ன செல்வராஜு, இப்படியே இருந்தன்னா என்னாவறது? கார்த்திக்கை பார்த்தாவது படிக்கக் கூடாதா?” என்று நடுத்தெருவில் நிறுத்திக் கேட்கும் போது, அருகில் நின்று கொண்டிருக்கும் நகராட்சியில் வேலை பார்க்கும் அப்பா கூனிக் குறுகி மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்

வருத்தமாக இருந்தாலும், படிப்பு ஏறவில்லை என்பதே உண்மை. கார்த்திக் எதிர்பார்த்தபடி நிறைய மதிப்பெண்கள் வாங்கித் தேறினான்

பெரிய கல்லூரியில் படித்தான், ஐ.டி. வேலையில் சேர்ந்தான், அமெரிக்காவுக்குப் பறந்தான். மனைவி, குழந்தைகள் என்று வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான்

செல்வராஜின் கையில் உருப்படியாக இருந்தது, டிரைவிங் லைசன்ஸ் ஒன்று தான். எத்தனையோ முதலாளிகள், சவாரிகள், பயணங்கள்… இப்பொழுது பொறுப்புள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்

பல பேருக்கு உதவியாகத் தான் வாழ்வதில் அவனுக்குப் பெருமை தான். சென்ற வருடம் கூட, பள்ளியில் பொன்விழா கொண்டாட்டத்தில் கார்த்திக் கொடுத்த பெருந்தொகைக்காக, அவனைக் கௌரவித்தார்கள் என்று வகுப்பு நண்பன் தினேஷ் சொன்னது நினைவுக்கு வந்தது

காலையில் வாத்தியாரையும் அவர் மனைவியையும் இறக்கிவிட்ட அதே மருத்துவமனைக்கு, இரவில் மீண்டும் இரண்டு நோயாளிகளை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. என்னமோ ஒரு தவிப்பு

ரிசப்ஷனில் கேட்கலாமா? கோவிட் வார்டில் பணிபுரியும் பரிச்சயமான நர்ஸ் ஒருவர் உண்டு. ஓயாமல் நீராவி பிடி, வெந்நீர் குடி என்று அட்வைஸ் செய்து கொண்டிருப்பார்

அவருக்கு போன் போட்டான். பெயரைச் சொல்லி விசாரித்தான். அந்தப் பெரியவர், நாராயண வாத்தியார் அபாய கட்டத்தில் இருப்பதாகச் சொன்னாள்.

அந்த அம்மா பாவம் தனியாக என்ன செய்வார்? வேறு யாரேனும் உறவினர்கள் கூட இருக்கிறார்களா?

காலை வரை உறக்கம் வராமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான். அதிகாலையில் மீண்டும் ஒருமுறை போன் அடித்தான்

பெரியவர் இறந்து விட்டார், பாடியைத் தர முடியாது, மயானத்திற்கு வந்து ஃபார்மாலிடீஸ் முடித்துக் கொள்ளுங்கள் என்று அவருடைய தம்பி குடும்பத்திடம் டாக்டர் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறினாள்

மனதிற்குள் கனம் தாங்கவில்லை. கார்த்திக்கின் முகம் மீண்டும் மீண்டும் மனக் கண்ணில் வந்து போனது. என்ன செய்ய முடியும்?

போன் அடித்தது, எடுக்கவில்லை. ஊரில் அவன் மனைவியிடமிருந்து… என்ன சொல்வாள் என்று தெரியும்

“அத்தை ஓயாம அழுதுகிட்டே இருக்காங்க… எப்ப வர்றீங்க?” கேவலுடன் முடிப்பாள்.

சென்ற வாரம் அப்பா இறந்து விட்டார், அண்ணன்கள் கொள்ளி வைத்தார்கள்

தாங்க முடியாத துக்கம் என்றாலும், இங்கு தவித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களையும் இரவு உறக்கத்தைத் தியாகம் செய்து வேலை பார்க்கும் மருத்துவப் பணியாளர்களையும் மயானத்தில் நிற்பவர்களையும் பார்க்கும் போது, தான் எத்தனை முக்கியமான பணியைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது

அப்பாவின் ஆன்மா சாந்தி அடையும், ஊருக்குச் சென்று அம்மாவை சமாதானப்படுத்திக் கொள்ளலாம்

ஆனால், இங்கு மருத்துவமனைக்கும் மயானத்துக்கும் வெளியே, “அழாதீங்கம்மா… டீ சாப்பிடுங்க… வேற யாருக்கு போன் போடணும்? பாப்பாவை கூட்டிட்டு வராதீங்க… பயப்படாதீங்க”

இவன் பேசுகின்ற வார்த்தைகளை வேறு யார் பேசுவார்?

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அருமையான கற்பனை. யாரும் சிந்திக்காத கோணம் இது. இயல்பான நடையில் கதையைக் கொண்டு போயிருக்கிறீர்கள். வாழ்த்துகள் மா.

மலரே மௌனமா ❤ (சிறுகதை) – ✍பானுமதி பார்த்தசாரதி

ஜூலை 2021 போட்டி முடிவுகள் – ‘சஹானா’ இணைய இதழ்