எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சமையல் அறையில் பாத்திரங்களைக் கழுவி வைத்து, மேடையை சுத்தம் செய்து முடிக்கும் போது இரவு மணி பத்து. ஈரக்கைகளைத் துடைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டார் கல்யாணி.
இந்த ஐம்பத்தைந்து வயதிலும் சலிக்காமல் அனைத்து வேலைகளையும் அவரேதான் செய்கிறார். இருபத்தைந்து வயதில் இருந்த அதே சுறுசுறுப்பு அவர் உடலில் இப்போதும் அப்படியே இருக்கிறது. ஆனால் மனதில்?
இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் ஹாலில் அரட்டையை ஆரம்பித்து விட்டனர். பேச்சும் சிரிப்பும் கும்மாளமும் சமையல் அறை வரை எட்டிப் பார்த்து கல்யாணியின் காதிலும் விழுந்தது. அனைத்தையும் கேட்டபடியேதான் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் கல்யாணி. இது ஒன்றும் அவருக்குப் புதிதில்லையே. பழகிவிட்ட ஒன்று.
கல்யாணியின் கணவர் சதாசிவம், மகன் ரகு, மருமகள் அர்ச்சனா, கல்யாணியின் மகள் ராகவி, மருமகன் விக்ரம் என ஒரு பட்டாளமே அரட்டையில் மூழ்கியிருந்தார்கள். எல்லாம் அவரவர் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு, கேலி செய்வதும், சிரிப்பதுமாக கலகலப்பாக நகர்ந்தது நேரம்.
அறுபது வயது சதாசிவம் கூட தன் பள்ளிப்பருவக் குறும்புகளையும், தன் நண்பர்களின் பட்டப்பெயர்களையும் நினைவுபடுத்திக் கொண்டு, தன் வயதைக் குறைக்க முயன்றார்.
“டேய் ரகு, உன் ப்ரெண்ட் மகேஷோட அப்பா சுந்தரமும் நானும் ஒண்ணாத்தான் படிச்சோம். சுந்தரம் ஒருநாள் எங்க கணக்கு வாத்தியார்கிட்ட மாட்டினான் பாரு, சும்மா பெரம்பெடுத்து அடி நொறுக்கிட்டார். ஏன் தெரியுமா? கணக்கு வாத்தியார் கையெழுத்தை சுந்தரமே போட்டுட்டான். அது அவருக்குத் தெரிஞ்சு சும்மா புரட்டி எடுத்தார். ஒரு வாரம் உம்முன்னே இருந்தான்.”
இந்தக் கதை கல்யாணியின் காதிலும் விழுந்தது. இதைச் சொல்லிவிட்டு பலமாகச் சிரிப்பார் தன் கணவர் என்று அவருக்குத் தெரியும். அதேபோல் கையைத் தட்டி சிரித்துக் கொண்டு பள்ளிப்பருவத்திற்கே போய் வந்தார் சதாசிவம்.
இதையடுத்து ரகு தன் கதையை ஆரம்பிப்பான் என்றும் தெரியும் கல்யாணிக்கு. அதே தான் நடந்தது.
“ஐயோ அப்பா, மகேஷும் அவங்க அப்பா மாதிரியேதான் பா. அவனுக்கு இங்கிலீஷ் சுட்டுப் போட்டாலும் வராது. இங்கிலீஷ்ல மார்க் கம்மியா வாங்கிட்டு, வீட்டுல திட்டு வாங்க பயந்து அவங்க அப்பாவோட கையெழுத்தை அவனே போட்டுட்டு இங்கிலீஷ் சார்கிட்ட செமத்தியா வாங்கிக் கட்டிட்டான். இதுல இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? நான்தான் அவனை இங்கிலீஷ் சார்கிட்ட மாட்டிவிட்டதா வேற கோவப்பட்டான்.”
இப்படி அவர்களின் மலரும் நினைவுகள் நீளும். ரகுவைத் தொடர்ந்து ராகவி, மருமகள் அர்ச்சனா, மருமகன் விக்ரம் என அனைவரும் அவர்களின் பால்ய பருவத்திற்குப் போய் மகிழ்வார்கள்.
வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை அனைவரும் ஒன்று கூடும்போது இது வழக்கமாக நடக்கும். இந்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் அரட்டையில் கல்யாணிக்கு மட்டும் இடமில்லை.
இது இன்று நேற்றல்ல, திருமணம் முடிந்து வந்ததிலிருந்து நினைவுகளை அசைபோட்டு, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கல்யாணிக்கு மட்டும் இல்லாமல் போனது.
கல்யாணி திருமணம் முடிந்து வந்தபோது அவருக்கு இருபத்து நான்கு வயது. மாமியார் மாமனார் நாத்தனார் கொழுந்தனார் எனக் கூட்டுக்குடும்பம். படிப்பு வேலை என அவரவர் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும், ஓய்வு நேரங்களில் அரட்டைக் கச்சேரி களைகட்டும்.
வேலை செய்யும் அலுவலகத்தில், கல்லூரியில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளைத் தங்கள் பெற்றோரிடம் சொல்ல ஆரம்பித்து, அது அப்படியே பின்னோக்கிப் பயணித்து, மாமியார் மாமனாரின் மலரும் நினைவுகளைக் கிளறிவிடும்.
கல்யாணியும் ஆர்வத்துடன் இந்த அரட்டைக் கச்சேரியில் கலந்து கொள்வாள். அவர்கள் சொல்லும் சம்பவங்களில் சில கல்யாணிக்குத் தன் பள்ளி, கல்லூரி நினைவுகளைக் கிளறிவிடும். ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பிப்பாள்.
“என்னங்க, இதேமாதிரிதான் நான் ஆறாவது படிக்கும்போது என்கூடப் படிச்ச ஜலஜாவுக்கும் நடந்தது. அவ ஸ்கூல் பைல எப்படியோ ஒரு கரப்பான்பூச்சி வந்துருச்சு. அவ அது தெரியாம ஸ்கூலுக்குத் தூக்கிட்டு வந்துட்டா. தமிழ் புக் எடுக்கலாம்னு உள்ள கையை விட்டா பாருங்க, அவ்ளோதான். அவ…”
கல்யாணி முடிக்கும் முன்பே அவள் பேச்சை இடைமறித்த சதாசிவம், “ஐயோ கல்யாணி, நீ சொல்ற ஜலஜா யாருன்னே எங்களுக்குத் தெரியாது. அவ பைல கரப்பான்பூச்சி இருந்தா என்ன, பல்லி இருந்தா என்ன. எங்களுக்கு போர் அடிக்குது. நீ ஏதாவது வேலை இருந்தாப் பாரேன்” என்று முற்றுப்புள்ளி வைத்தான்.
“நீங்க சொல்ற கதையெல்லாம் நான் கேட்கறேன் இல்ல. அதெல்லாமும் எனக்குப் புதுசு தானே. ஆனாலும் நான் ரசிக்கறேன், சிரிக்கறேன் இல்லையா. அதேமாதிரி என் நினைவுகளையும் சொல்ல எனக்கு வாய்ப்பு கொடுத்தாத்தானே உங்களுக்கு அதெல்லாம் தெரியும். நான் யார்கிட்ட இதெல்லாம் ஷேர் பண்ணமுடியும்?”
“உங்க வீட்டுக்குப் போகும்போது எல்லாக் கதையும் பேசிக்கோ கல்யாணி. சிவம் சொல்ற மாதிரி எங்களுக்குத் தெரியாத ஒண்ணை நாங்க ரசிக்க முடியாதில்லையா. உனக்கு சமையல் வேலை ஏதாவது இருந்தாப் பாரேன். நாங்க கொஞ்ச நேரம் சந்தோஷமாப் பேசிட்டு சாப்பிட வரோம்.”
தன் மாமியார் இப்படிச் சொன்னதும், கலங்கிய கண்களோடு எழுந்து சமையலறைக்கு வந்து வெடித்து அழுதாள் கல்யாணி. அன்றிலிருந்து இன்றுவரை கல்யாணியின் குழந்தைக் குறும்புகளையும், பள்ளி, கல்லூரிப் பருவ நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பே வழங்கப்படவில்லை.
அதன்பிறகு கல்யாணிக்கும் அவர்களிடம் அப்படிப் பேச இஷ்டமும் இல்லை. ஓய்வு நேரங்களிலோ சமையல் செய்யும்போதோ தனிமையில் அசைபோட்டுக் கொள்வாள்.
கால ஓட்டத்தில் கல்யாணியின் பொக்கிஷமான நினைவுகள் மலராமலேயே மடிந்து மறந்து போயின. மூத்த தலைமுறை உறவுகள் காலமாகி, அடுத்த தலைமுறை உறவுகள் வந்த பின்னும் கல்யாணியின் நிலைமை மட்டும் மாறவேயில்லை.
கல்யாணியின் கணவரும், மாமியாரும் அடக்கியதால் மொட்டாகவே அமுங்கிப் போயின கல்யாணியின் பதின்பருவ நினைவுகள். எப்போதும் இதுபோன்ற உரையாடல்களைத் தவிர்த்து விடுவார் கல்யாணி.
ரகுவும் ராகவியும் குழந்தைப் பருவத்தில் செய்யும் குறும்புகள் கல்யாணிக்குத் தன் குழந்தைப் பருவ நினைவுகளைக் கொண்டு வரும். ஆனால் குழந்தைகளின் குறும்புகளைத் தன் வாரிசுகளின் குறும்புகளோடு மட்டுமே ஒப்பிட்டு பெருமை பேசிக் கொள்வார் மாமியார்.
சதாசிவமும் பூரித்துப் போவான். அப்போதும் கல்யாணி தனக்குள் நினைவுகளைச் சுழல விடுவாள். காலப்போக்கில் குழந்தைகள் வளர்ந்ததும் அவையும் மறந்து போயின.
ரகுவும் ராகவியும் கூட தங்கள் அம்மாவின் மலரும் நினைவுகளைக் கேட்டதில்லை. ஏனோ அவர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, அம்மா வீட்டில் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்வார், அன்பாக இருப்பார் போன்றவைதான் அம்மாவுக்குத் தெரியும்.
அம்மாவுக்கென்று தனி ஆசைகள் இருக்கும், நினைவுகளை அசைபோட்டுப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வேண்டும் என்று தெரியாமல் போனது.
“அம்மா, நாங்க எல்லாரும் பழங்கதை பேசி மனசை லேசாக்கிக்கறோம். நீயும் எங்ககூட வந்து உன்னோட குழந்தைக் குறும்புகளைச் சொல்லேன்” என்று ஒருநாளும் அழைத்ததில்லை. கல்யாணிக்கும் அந்த எதிர்பார்ப்பு ஏக்கங்களாகி, மனம் மரத்துப் போனது. குழந்தைப் பருவமும், பதின்பருவமும் மறந்தே போனது.
மலராத நினைவுகளை மறந்தே போனார் கல்யாணி. இல்லறச் சுமைகள் மட்டுமே மனதில் சுழன்று கொண்டிருக்கின்றன. கூடவே தன் கணவர், குழந்தைகளின் மலரும் நினைவுகளைக் கேட்டுக் கேட்டு அவை மட்டுமே மனதில் பதிந்துபோனது. இப்போது யாராவது கேட்டால்கூட பகிர்ந்து கொள்ள அவரிடம் பால்ய நினைவுகள் இல்லை.
மொட்டாகவே கருகிப் போயின கல்யாணியின் குறும்பு நினைவுகள். மலராத நினைவுகள் மறந்து போன ஏக்கத்துடன் கல்யாணியின் காலமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings