சந்தியா ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தாள். அதே அலுவலகத்தில், மாலினி என்ற பெண்ணும் வேலை செய்து வந்தாள்
மாலினியின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் காலமாக, கணவர் வேலை செய்த அந்த அலுவலகத்திலேயே, அவள் தகுதிக்கேற்ற ஒரு வேலை அளிக்கப்பட்டது
மாலினிக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தான். அந்த நிறுவனத்தின் முதலாளி, மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர், அவ்வப்போது மாலினிக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.
அவ்வாறு முதலாளி நல்ல உள்ளதுடன் செய்த உதவிகளைக் கூட, அலுவலகத்தில் உள்ளவர்கள் தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்தனர்.
முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் இளவயது பெண் என்பதால், சில நாட்கள் அலுவலகத்திற்கு ஜீன்ஸ் டாப்ஸ் போன்ற நவ நாகரீக உடை அணிந்து வருவாள் மாலினி. அதையும் அலுவலகத்தில் உள்ளவர்கள் விமர்சனம் செய்தனர்
“கணவனை இழந்தவள் எதற்கு இப்படியெல்லாம் அழகுப்படுத்திக் கொள்கிறாள்” என தரக்குறைவாய் பேசினர்
அதோடு நில்லாமல், “முதலாளியை மயக்குவதற்காகத் தான் மாலினி இப்படி நடந்து கொள்கிறாள்” எனவும் தவறாக பேசினர்
ஒரு நாள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஆண் ஒருவன், மாலினியிடம் எல்லை மீறி நடந்து கொள்ள முயன்றான். அதைக் கண்ட சந்தியா, கொதித்து எழுந்தாள்
கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய சந்தியா, அவனை அடித்து துவைத்து பாடம் புகட்டினாள்
மிகவும் பயந்து போய் இருந்த மாலினி, சந்தியாவைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கினாள்
“தப்பு செஞ்ச அவனே கல்லு மாதிரி நிக்கறப்ப, நீ எதுக்கு மாலினி அழணும்? பயங்கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்’னு பாரதி சொன்னதை படிச்சதில்லயா நீ” என சிறு அதட்டலுடன் தோழிக்கு தைரியமூட்டினாள் சந்தியா
அதற்குள் விஷயம் அலுவலகம் முழுவதும் பரவ, சக ஊழியர்கள் அங்கு குழுமினர்
“பொம்பளைனா ஒழுங்கா அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணனும், கண்டபடி இருந்தா ஆம்பளைக்கு தப்பா தான் தோணும்” என ஐம்பது வயது கடந்த ஆண் ஊழியர் ஒருவர் மாலினியை குற்றம் சாட்ட
“ஓ… அப்படியா சார். அப்ப நாளைல இருந்து எட்டு மொழ புடவை கட்டிட்டு வரோம், ஆம்பளைங்க எல்லாம் ராமனா மாறிடுவீங்களா?” என கோபமாய் எதிர் கேள்வி எழுப்பினாள் சந்தியா
“அதில்லமா, புருஷன இழந்தவ அதுக்கு தகுந்த மாதிரி இருக்கணுமில்லயா?” என பம்மினார் அவர்
“எந்த காலத்துல சார் இருக்கீங்க நீங்க? புருஷன் செத்துட்டா, மூலைல உக்கார்ற காலமா இது? அவ புள்ளைய வளக்க அவ சம்பாதிக்கணும்னு வெளிய வர்றது தப்பா? நீங்க சொல்ற டிரஸ் விஷயத்துக்கே வரேன். மாலினி அப்படி ஒண்ணும் ஆபாசமா டிரஸ் பண்ணலியே, அப்படி இருந்தா நானே கண்டிச்சு இருப்பேன். கண்ணியமா உடலை மறைக்கற மாதிரி ஜீன்ஸ் டாப்ஸ் எல்லாம் இன்னைக்கி ரெகுலர் வேர் தான?”
“அது…”
“ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்ச அவனை விட்டுட்டு, இவளை குறைச் சொல்றீங்களே, இதே உங்க வீட்டு பெண்ணாயிருந்தா இப்படி தான் செய்வீங்களா?”
“டிவில எல்லாம் கூட சொல்றாங்களே… பொண்ணுங்க மோசமா ட்ரெஸ் பண்றதால தான் நிறைய தப்பு நடக்குதுனு” என மற்றொரு சக ஊழியர் கூற
“சரி சார், நீங்க சொல்றது சரின்னே வெச்சுக்கலாம். ஒரு பெண் உடுத்தற உடை தான் ஆண்கள் அவளிடம் தப்பா நடக்கறதுக்கு காரணம்னா, எத்தனை சின்ன பிள்ளைகள் பலாத்காரத்துக்கு ஆளாகறாங்க, அதுக்கு காரணம் கூட அந்த குழந்தைங்க போடற டிரஸ் இல்ல அவங்களோட தவறான நடத்தைனு சொல்லுவீங்களா?” எனவும்
“இருந்தாலும்…” என இழுத்தார் அவர்
“ஆண்கள் தப்பே செஞ்சாலும், அதுக்கு பொண்ணுங்களோட நடத்தையும், உடையும் தான் காரணம்னு ஆண்கள் செய்யற தப்பை நாம் எப்ப நியாயப்படுத்தாம இருக்கமோ, அன்னைக்கு தான் பொண்ணுங்க நிம்மதியா வாழ முடியும்”
“அப்ப பொண்ணுங்க மேல தப்பே இல்லைனு சொல்றீங்களா?”
“அப்படி நான் சொல்லல, அப்படி இருக்கற ஒரு சிலரை வெச்சு எல்லாரையும் எடை போடாதீங்கனு தான் சொல்றேன்”
“ஆம்பள எப்படி இருந்தாலும் பொண்ணுங்க சரியா இருக்கணும்” என விடாமல் விவாதம் செய்தார் அந்த சக ஊழியர்
“இதான் சார் எனக்கு புரியல. இப்படி இரு அப்படி இருனு அஞ்சு வயசுல இருந்தே பெண் குழந்தைக்கு சொல்ற நீங்க, அதே உங்க ஆண் பிள்ளைகிட்ட பொண்ணுங்கள மதிக்கணும், தப்பான பார்வை பாக்ககூடாதுனு ஏன் சொல்லி வளக்கறதில்ல?”
“புருஷன் போனப்புறம் எதுக்கு இவ்ளோ அலங்காரங்கறேன்?” என வயதில் மூத்த பெண் ஒருவர் கேட்க
“ஒரு பொண்ணா இருந்துட்டு நீங்களே இப்படி பேசலாமா மேடம்? கணவனை இழந்த பெண்கள் ஏன் அழகுப்படுத்திக் கூடாது? மனைவியை இழந்த ஒரு ஆண், அடுத்த மாசமே புது மாப்பிள்ளை ஆகறப்ப யாரும் ஏன்னு கேக்கறதில்லயே? இது என்ன நியாயம்?” என சந்தியா ஆவேசமாய் கத்த, அலுவலகமே மவுனமானது
மாலினியை ஆசுவாசப்படுத்தி அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் சந்தியா
பள்ளிக்கு சென்று இருவரின் பிள்ளைகளையும் அழைத்து வந்த பின், அன்றைய தினம் மாலினியை தன்னுடனே தங்க வைத்து கொண்டாள் சந்தியா
இன்னொரு முறை இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தாள்
அடுத்த நாள் முதல், மாலினிக்கும் அவள் மகளுக்கும் தற்காப்புக் கலையை கற்றுத் தரத் துவங்கினாள் சந்தியா. அதோடு, தன் மகனுக்கும் பெண்களை எவ்வாறு மரியாதையாக நடத்த வேண்டும் என கற்றுத் தந்தாள்.
பெண்களுக்கு நூறு கட்டுப்பாடுகள் விதிக்கும் அதே நேரம், பெண்களை எவ்வாறு மதித்து நடக்க வேண்டும் என்று நாம் ஆண்களுக்கு கற்றுத் தர மறுக்கிறோம்.
எல்லா விதமான சவால்களை எதிர் கொள்ளவும், அதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கற்பித்தல் வேண்டும்
அது மட்டுமல்லாமல், அநீதி எங்கு நடந்தாலும் கண்டும் காணாமல் போவதை விடுத்து, அதைத் தட்டி கேட்கவும் சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம், அவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், தைரியமானவர்களாகவும் வளர்வார்கள்
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை சிறு வயது முதலே ஆண் குழந்தைகளுக்குக் கற்று தந்தால், வரும் தலைமுறையிலேனும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். அந்த கனவு விரைவில் நனவாகும் என நம்புவோம்
எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
(முற்றும்)
Typical template story ( sorry to say)
No need to be sorry, it’s your opinion. Comment section is to express the readers opinion, negative or positive, doesn’t matter. Thanks for your review Karthik
நல்ல கதை . இன்றைய பெண்கள் சுயசார்பு உடையவர்கள் . காலத்திற்கு ஏற்ப உடை . நன்று வாழ்த்துகள் . அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் .
நன்றி
நல்லதொரு சிறுகதை..
நன்றிங்க ஆதி
கொஞ்சம் நாடகத்தனமாய்த் தெரிந்தாலும் நல்ல கரு. இப்போதெல்லாம் விதவைகள்/திருமணம் ஆகாதவர்கள்/விவாகரத்துப் பெற்றவர்கள் யாரையும் யாரும் கேலியோ கிண்டலோ செய்வதில்லை. ஏனெனில் இப்போதைய காலம் அப்படி. என்றாலும் இந்தக் கதையின் படிப்பினை ஆண் குழந்தைகளுக்கும் சின்ன வயசில் இருந்தே பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே! அதை ஏற்போம்.
உண்மை தாங்க, charity starts from home போல தான் இதுவும் என நினைக்கிறேன்