இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 113)
1992 செப்டம்பர் 7
பேக்கரியில் இருந்த ரேடியோவிலிருந்து இருந்து பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது கணேஷ் வேகமாக நடந்து வந்து பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான்.
‘ஐயோ, மணி இப்பவே எட்டேகால் ஆயிடுச்சு, பஸ் எப்போ வரும்ன்னு தெரியலையே, இன்னைக்கு பத்தாம் வகுப்பு படிப்பவர்கள் அனைவருக்கும் சிறப்பு தேர்வு இருக்கு என்று பள்ளியிலே சொன்னார்களே 2 நாள் லீவு கொடுத்தும் ஏன் படிக்கலைன்னு கேட்டா என்ன சொல்றது’ என்று தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தான் கணேஷ்
அப்போது ரேடியோவில் இருந்து. “அடுத்ததாக ரோஜா படத்திலிருந்து ‘புது வெள்ளை மழை’ என்று ஒரு அற்புதமான பாடல் உங்களுக்காக” என்று கேட்டவுடன், இவன் முகத்தில் ஒரு சிறு மகிழ்ச்சி
‘அடடே நம்ம பாட்டு, இந்த ஏ.ஆர்.ரகுமான் புது இசையமைப்பாளராக இருந்தாலும், மியூசிக் செமையா இருக்கு. இந்த பாட்டை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே இல்லை’ என சொல்லி, இந்த பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்
திடீரென பாட்டுக்கு ஏற்றது போல் மழை பெய்ய ஆரம்பித்தது.
‘அட நேரம் ஆகிட்டே இருக்கு, இந்த மழை வேற வந்துருச்சு’ என நினைத்த நேரம் பஸ் வந்தது
“நேரு நகர், சுந்தரம் மில், ஹை ஸ்கூல், ஆர்ட்ஸ் காலேஜ் வந்து ஏறிக்கோங்க” என்று கண்டக்டர் சொல்ல, பேக்கரியில் இருந்து ஒரு சிலர் டக்கென்று வந்து ஏறிக் கொண்டனர். பஸ்ஸில் பயங்கர கூட்டம்.
“படியில நிக்காத மேல வா மேல வா, ஹை ஸ்கூலுக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” என்று டிக்கெட் வாங்கிக் கொண்டான்
“தம்பி சில்லறை இல்லயப்பா”
“இல்லையே ணா”
“சரி இந்தா பா, பாக்கி 50 பைசா மட்டும் இறங்கும் போது வாங்கிக்கோ”
“ஓகே ணா”
“சொல்றது காது கேட்கல, காலேஜ் பசங்க உள்ள வாங்க, மழை வேற பெய்துகிட்டு இருக்கு, வழுக்கி எங்கேயாவது விழுந்து விடாதீங்க உள்ள போங்க” என்றார் கண்டக்டர்
“பச்ச சட்ட, படியில நிக்காத. சொல்றது புரியல, மேல வா மேல வா” என்றார் கண்டக்டர்
“படியில நிக்காத” என்று சொல்லியே இந்த கண்டக்டருக்கு பாதி வாழ்க்கை போய்விடும் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டான் கணேஷ்
‘எங்க நம்ம ஃபிரண்டு கபிலனை காணோம்? இன்னைக்கு டெஸ்ட் இருக்கே, ஒருவேளை நல்லா படிச்சு இருப்பானோ, இதுக்கு முந்தின பஸ்ஸிலேயே நேரத்திலேயே ஸ்கூலுக்கு போய் இருப்பானோ?” என யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது பக்கத்து சீட்டில் இருந்து இரண்டு நபர்கள் எழ, இவன் அங்கே போய் உட்கார்ந்தான். இவன் பக்கத்தில் ஒரு நபரும் உட்கார்ந்தார்.
ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து, கம்பிகளில் ஒட்டியிருந்த தண்ணீர் துளிகளை தன் கையால் சுண்டி விட்டுக் கொண்டே, தன்னுடைய புத்தகத்தை புரட்டினான் கணேஷ்
‘எதை படிக்க, எதுவுமே தெரியலையே. இந்த புத்தகத்தை எப்ப படிக்க ஆரம்பித்தாலும் தூக்கம் தான் வரும். இது வேண்டாம், வேற புக்கை எடுப்போம். இங்கிலீஷ் எனக்கு பிடிக்காது, கணக்கு எனக்கு வராது, சரி பேசாம தமிழைப் படித்து விடுவோம்”
இவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவர், “சுந்தரம் மில்லுக்கு ஒரு டிக்கெட் கொடு” என்றார்.
“என்ன அண்ணா நேத்து வரல?” என்று கண்டக்டர் அந்த நபரிடம் கேட்டார்.
“நேத்து எனக்கு உடம்பு சரியில்லை” என்றார் அந்த நபர்
“சரி” என்று போய் விட்டார் கண்டக்டர்.
குழந்தை அழுகும் சத்தம், டிக்கெட் டிக்கெட் என்கிற கண்டக்டரின் சத்தமும், படிக்கட்டில் நின்று பாடிக் கொண்டிருக்கும் ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்களின் பாட்டும், இவனுக்கு கொஞ்சம் தள்ளி இருக்கும் இருக்கையில் இருந்து வரும் கொய்யாப்பழத்தின் வாசமும், இவனைப் படிக்க விடாமல் செய்தது
புத்தகத்தை மூடி வைத்தான். ‘சனி ஞாயிறு விடுமுறை,போன இரண்டு நாட்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம். நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டு, நெல்லிக்காய்களை சாப்பிட்டுக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை பாட்டி செய்த பதார்த்தங்களை ருசித்துக் கொண்டு, அட அட அட எவ்வளவு சந்தோஷம் இந்த பள்ளிக்கு செல்வதை நினைத்தாலே மண்டை காய்கிறது’ என பஸ்ஸில் அமர்ந்து வருந்திக் கொண்டிருந்தான் கணேஷ்
திடீரென்று டிரைவர் பிரேக் அடிக்க, ”என்னப்பா பஸ் ஓட்றானுங்க?” என்றார் இவன் அருகில் இருந்த நபர்
கணேஷின் புத்தகங்கள் கீழே விழ, அவன் அருகில் உட்கார்ந்திருந்த நபரின் பை நழுவி அதிலிருந்து ஒரு லெட்டரும் கீழே விழுந்தது
கீழே ஒரே சகதியாகவும் ஈரமாகவும் இருக்க, இருவரும் அவர்களுக்குத் தெரியாமலேயே அந்த லெட்டரை மிதித்து விட்டார்கள. அந்த லெட்டர் நனைந்திருந்தது.
கீழே விழுந்த தன் புத்தகங்களை எடுத்த கணேஷ், அதோடு தன் பக்கத்தில் அமர்ந்திருந்த நபரின் அந்த லெட்டரையும் தெரியாமல் எடுத்து விட்டான்
“சுந்தரம் மில் ஸ்டாப் இறங்குங்க” என்றவுடன், இவன் பக்கத்தில் அமர்ந்து இருந்த நபர் இறங்கிப் போய் விட்டார்.
‘ஐயையோ புக்கெல்லாம் இப்படி அழுக்காகி விட்டதே, இதற்கு தான் நல்ல ஒரு ஸ்கூல் பேக் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டேன், முடியாதுன்னு சொல்லிட்டாங்க என் தலையெழுத்து” என்று புலம்பினான்.
“ஹை ஸ்கூல் இறங்குங்க” என்று கண்டக்டர் சொன்னவுடன், மாணவர்கள் கூட்டம் பஸ்சை விட்டு இறங்கியது.
“அண்ணா என்னுடைய மீதி 50 பைசா குடுங்க அண்ணா” என கணேஷ் கேட்க
“இந்தப்பா உன் 50 பைசா சீக்கிரம் இறங்கு”என வழி விட்டு நின்றார் கண்டக்டர்
பள்ளிக்கு சென்றதும், “எல்லோரும் தேர்வுக்கு தயாரா?” என்று ஆசிரியர் மாணவர்களை கேட்டார்
“தயார்” என்று கொஞ்ச பேர் சொன்னார்கள்
எடுத்தவுடனே கணக்கு தேர்வை வைத்தார்கள். கணேஷ் முகத்தைப் பார்த்த உடனே தெரிந்து விடும் அவன் ஒன்றும் படிக்கவில்லை என்று
‘ஐயோ எப்படியோ கபிலன் இன்றைக்கு லீவு போட்டு விட்டான் அதிர்ஷ்டசாலி” என்று நினைத்து புலம்பினான்
“ஏன் இப்படி குறைந்த மதிப்பெண் எடுத்து உள்ளாய்? இரண்டு நாட்களாக என்ன செய்தாய்? நன்றாக படிக்கவில்லை என்றால் பெற்றோரை கூப்பிட்டு பேச வேண்டியதாக இருக்கும். ஒழுங்காக நாளை வைக்கும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் வழியை பார்” என, அன்று மாலை கணேஷை கூப்பிட்டு கண்டித்தார் ஆசிரியர்
ஆசிரியர் சொன்னதை யோசித்துக் கொண்டே கணேஷ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்க, அவன் நண்பர்கள் அனைவரும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு விளையாட சென்று கொண்டிருந்தார்கள்
“வாடா விளையாடப் போகலாம்” என்று இவனை கூப்பிட
“இல்லடா, இன்னைக்கு நான் விளையாட வரல, நீங்க போயி விளையாடுங்க” என்று சொல்லி விட்டு, பொறுமையாக நடந்தே பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான்
“என்னடா சட்டை எல்லாம் ஒரே கறை” என அவன் அம்மா கேட்க
அதற்கு அவன், “ஏம்மா காலையிலிருந்து மழை எப்படி அடித்து ஊற்றுகிறது, சின்ன சின்ன கறை ஆகத்தான் செய்யும்” என்றான்
புத்தகத்தைப் புரட்ட, அந்த லெட்டர் கீழே விழுந்தது
‘இது என்னடா லெட்டர், நம்ம புத்தகத்தில’ என்று பார்த்தான்
அதில் பெறுநர் யாரென்று தெரியவில்லை. செருப்பு தடங்கள் வேறு, அனுப்புநர் இடத்தில் பெயர் சரேஷ என்று இருந்தது
‘சுரேஷ்’ ஆக இருக்கும் என புரிந்து கொண்டான் கணேஷ்
ஊர் இல்லை, பாதி அழிந்த தெளிவாக இல்லாத பின்கோடு இருந்தது
அந்த லெட்டரை பிரித்தான். அதில் ஒரு முழுப்பக்க தாளில் ஏதோ எழுதப்பட்டிருந்தது, ஆனால் அது தண்ணீரில் நனைந்ததால் முக்கால் பகுதி என்ன வரிகள் என்றே தெரியவில்லை
‘என்ன எழுதி இருக்கு பார்ப்போம்’ என்று படிக்கத் தொடங்கினான்
அதில் ‘நாளை மறுநாள் ராகவன்-கொலை-துப்பாக்கி-பணம்’ இது மட்டும் தான் புரிந்தது, மற்ற இடங்கள் எல்லாம் மேகத்தைப் போல் காட்சியளித்தது
இதைப் பார்த்தவனுக்கு, ‘என்ன இந்த லெட்டரில் கொலை என்றெல்லாம் எழுதி இருக்கு’ என யோசித்து விட்டு, அதை எடுத்துக் கொண்டு நண்பன் கபிலனது வீட்டுக்கு சென்றான்
“அட வாடா கணேஷ்” என்றான் கபிலன்
“ஏன்டா கபிலா இன்னைக்கு ஸ்கூலுக்கு வரல” என்றான் கணேஷ்
“மழை ரொம்ப வந்தது, அதுமட்டுமில்லாம இன்னைக்கு ஸ்கூல்ல வேற டெஸ்ட் சொன்னாங்களா, நான் வேற ஒண்ணுமே படிக்கல, நாமெல்லாம் சேர்ந்து தானடா விளையாட போனோம். அதனால தான் இன்னைக்கு லீவு போட்டுட்டேன்”
“அம்மா ஒன்னும் சொல்லலையா?”
“மழை கொட்டுது, ஸ்கூல் கண்டிப்பான போகணுமா ம்மானு கேட்டேன். சரி மழையில் நனைய வேண்டாம் போகாதனு அம்மா சொன்னாங்க. நான் அம்மா பேச்சை மதிக்கிறவன், அதான் இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டேன்”
“டேய் ஓவரா ரீல் விடாதே, எங்க வீட்ல கேட்டா வெள்ளமே வந்தாலும் நீ ஸ்கூலுக்கு போயித் தான் ஆகணும்னு சொல்லுவாங்க. சரிடா கபிலா உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் வா மாடிக்கு போகலாம்” என்று கபிலனை கூட்டிக் கொண்டு மாடிக்கு சென்றான் கணேஷ்.
“சொல்லுடா என்ன” என்றான் கபிலன்
“டேய் கபிலா இன்னைக்கு பஸ்ல போயிட்டு வந்தனா, எப்படின்னு தெரியல என் புக்ல ஒரு லெட்டர் இருந்தது டா” என்றான் கணேஷ்.
“என்னடா லவ் லெட்டரா?”
“டே ஏன்டா நீ வேற, டேய் வேற ஒரு லெட்டர் டா. அதுல ராகவன் கொலைனு எல்லாம் போட்டிருக்கு” என்றான் கணேஷ்
“எங்க அந்த லெட்டர் எடு பார்க்கலாம்”
“இந்தா பாரு” என்று கொடுத்தான் கணேஷ்
அதைப் பார்த்து விட்டு பயங்கரமாக சிரித்தான் கபிலன்
“டேய் இதுல பேரும் இல்ல ஊரும் இல்ல, அங்கங்க ரெண்டு மூணு வார்த்தை எழுதி இருக்கு மத்ததெல்லாம் அழிஞ்சு இருக்கு. எவனோ நம்ம கிளாஸ் பையன் தான் உன்னை பயமுறுத்தி இருக்கிறான். இந்த லெட்டர் ஐ தூக்கிப் போட்டு வாடா, நம்ம கிரிக்கெட் விளையாட போலாம்” என்றான்.
“இல்லடா நான் விளையாட வரல, கணக்கு பரிச்சைக்கு படிக்கணும்” என்றான் கணேஷ்.
“என்னது நாளைக்கும் பரிட்சையா?”
“ஆமாண்டா நான் போயி படிக்கிறேன், நீ நாளைக்கும் லீவா” என்றான் கணேஷ்.
“ஏன்டா டேய் வருவேன், நானும் போய் படிக்கிறேன்” என்றான் கபிலன்
அடுத்த நாள் தேர்வு நடந்தது, கொஞ்சம் நல்ல மதிப்பெண் எடுத்தான் கணேஷ்
“இதே போல தினமும் படித்து கொண்டே இரு, நல்ல மதிப்பெண் பெறுவாய்” என்றார் ஆசிரியர்.
இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன
கணேஷ் கையில் ஒரு நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வந்தான்
“டேய் ஏன்டா இவ்வளவு வேகமாக ஓடி வர, என்னடா ஆச்சு?” என்றான் கபிலன்
“அட போடா, உன் பேச்ச கேட்டு எல்லாமே வீணா போச்சு”
“ஏன்டா, என்னடா சொல்ற?” என்றான் கபிலன்
“இந்த நியூஸ் பேப்பர் படிச்சு பாரு” என்றான் கணேஷ். பிரித்து படித்தான் கபிலன்
நேற்று இரவு குமார் நகரை சேர்ந்த கே.ராகவன் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை இதைப் பற்றி போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என கூறியிருக்கிறார்கள்
இதைப் படித்தவுடன் கபிலன் நெற்றியிலிருந்து வியர்க்க ஆரம்பித்தது, இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து விட்டனர்
“டேய் அப்பவே ஏதாவது பண்ணலாம்ன்னு சொன்னேன், கேட்டியா. இப்ப பாருடா எனக்கு என்னமோ நாம தப்பு பண்ணிட்டோம்னு தோணுது” என்றான் கணேஷ்
“டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா, சரி இப்ப என்ன தான் பண்றது” என்றான் கணேஷ்
“டேய் எந்த பிரச்சினையா இருந்தாலும் என்கிட்ட வந்து சொல்லுங்கன்னு நம்ம தமிழ் ஐயா சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா, அவர்கிட்டே போய்விடுவோம்”
“சரி வா” என இருவரும் சென்று தனது ஆசிரியரிடம் நடந்தவற்றை கூறினார்கள்
“பயப்படாதீங்க பசங்களா, இதில் உங்க தப்பு எதுவும் இல்லை” என்ற ஆசிரியர், இவர்களை கூட்டிக் கொண்டு அந்த லெட்டரை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்
நடந்தவற்றையெல்லாம் இன்ஸ்பெக்டரிடம் கூற, “என்னயா இத சாதாரணமா சொல்லுறீங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.
“சார் சின்ன பசங்க, என்னனு தெரியாம அலட்சியமா விட்டுட்டாங்க. இப்ப என்ன சார் பண்றது”
“சரி இந்த லெட்டர் எப்படி கிடைத்தது?” என இன்ஸ்பெக்டர் கேட்க
அதற்கு கணேஷ், “பஸ்ஸில் பயணம் செய்யும் போது” என்றான்.
“அது எப்படி உனக்கு சரியாக தெரியும்”
“சார் பஸ்சில் ஏறியவுடன் புத்தகத்தை புரட்டிப் பார்த்து கொண்டிருந்தேன், எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது” என்றான் கணேஷ்.
“சரி நீ பஸ்ஸில் பயணம் செய்யும் போது உன் அருகில் இருந்தவர்கள் யார் யார்?”
“என் பக்கத்தில் அமர்ந்திருந்தது ஒரே ஒரு நபர் தான்”
“அந்தப் நபரை யார் என்று உனக்கு தெரியுமா ?
“இல்லை சார்”
“அந்த நபர் நீ இறங்கிய பின்பும் பஸ்ஸில் இருந்தாரா?”
“இல்லை சார்”
“அவர் எந்த ஸ்டாப்புக்கு டிக்கெட் வாங்கினார் என்று தெரியுமா?”
“ஹ்ம்ம் தெரியும் சார், சுந்தரம் மில் ஸ்டாப்”
“அவரை பார்த்தால் நீ அடையாளம் காட்டுவாயா?”
“காட்டுவேன் சார்”
“உனக்கு வேற ஏதாவது அந்த நபரை பற்றி தெரியுமா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்
“சார் கண்டக்டரும் அவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள், கண்டக்டருக்கு அவரை நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்”
உடனே எந்த பஸ் எந்த நேரம் என விசாரித்து இன்ஸ்பெக்டர் ஆளனுப்பி அந்த கண்டக்டரை பிடித்து விசாரிக்க, அந்த நபர் சுந்தரம் மில்லில் தான் வேலை செய்கிறார் என்று தெரிய வந்தது
அந்த நபரை மில்லில் இருந்து அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை செய்தார் இன்ஸ்பெக்டர்
“உங்க பெயர்?”
“சுரேஷ்”
“உங்க வயது?”
“37”
“உங்க ஊர்?”
“இதே ஊர் தான் சார்”
“எந்த ஏரியா?”
“கே.ஆர் நகர்”
“எங்க வேலை செய்றீங்க?”
“சார்… இப்ப தானே என்னை மில்லிருந்து கூப்பிட்டு வந்தீங்க”
“கேட்ட கேள்விக்கு பதில்”
“சுந்தரம் மில்லில் தான் சார்”
“என்ன வேலை செய்றீங்க?”
“அக்கவுன்டன்ட் சார்”
“இந்த பஸ்ல தான் எப்பவுமே போவீங்களா?”
“இல்ல சார், ஸ்கூட்டர்ல தான் எப்பவுமே போவேன். என்னோட வண்டி இந்த ஒரு வாரமா வேலை செய்வதில்லை, மெக்கானிக் இன்னும் சரி பண்ணல சார்”
“இந்த லெட்டர் உங்களுடையதா?”
“ஆமாம் சார், என்னுடையது தான்”
“பரவாயில்லையே, உடனே ஒத்துக்கிட்டீங்க?”
“இதில் என்ன சார் இருக்கு, என்னுடையது தான்”
“அப்போ சரி, சொல்லுங்க ராகவனே ஏன் கொலை செஞ்சிங்க?”
“என்னது ராகவன் கொலையா? என்ன சார் சொல்றீங்க, எனக்கு ஒன்னும் புரியல”””அதான் இந்த லெட்டர்ல எல்லாம் தெளிவா எழுதி இருக்கிறாயே சொல்லு” என்றார் இன்ஸ்பெக்டர்
அதற்கு அவர், “ஹா ஹா ஹா ஹா ஹா” என்று சத்தமாக சிரித்தார்
ஸ்டேஷனில் உள்ள அனைவரும் அவரைப் பார்த்தனர்
“என்னய்யா நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன், நீ சிரிக்கிற. அடிச்சேன்னா பாரு”
“சார் சார் தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்க, கோபப்படாதீங்க”
“சரி சொல்லு”
“சார் அது ஒரு சிறுகதைப் போட்டிக்காக நான் எழுதிய ஒரு பக்க கதை, அதை போஸ்ட் செய்வதற்குள் தொலைந்து விட்டது. திருப்பி இதே கதையை எழுதி நான் போஸ்ட் செய்து விட்டேன். நீங்கள் வேண்டுமென்றால் அந்த சிறுகதைப் போட்டி நடத்துபவரை கேட்டு பார்க்கவும்” என்றார்
இன்ஸ்பெக்டர் அந்தப் போட்டி நடத்துபவரின் விவரம் கேட்டு அழைத்து விசாரிக்க, “ஆமாம் சார் இந்த கதை வந்துருக்கு” என்றார்
இதைக் கேட்ட பின்பு எல்லோரும் சிரித்தனர். கணேஷும் கபிலனும் பெருமூச்சு விட்டார்கள், பிறகு எல்லோருடன் சேர்ந்து அவர்களும் சிரித்தார்கள்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings