சென்ற வருடத்தின் இதே ஆகஸ்ட் மாதத்தில், நானும் நண்பரும் ஒரே ஒரு Backpack மற்றும் கேமராவுடன் பேருந்துகளில் பயணித்து ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலைப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிற்குச் செல்ல திட்டமிட்டோம்
கொஞ்சம் சிரமம் மிகுந்த பயணம் தான். தலைநகர் தில்லியிலிருந்து சுமார் 20 மணி நேரம் பயணம் செய்து, குறுகிய மற்றும் அபாயகரமான மலைப்பாதைகளில் பயணித்து, அந்த கடைசி கிராமத்தினை அடைந்தோம் – “கடைசி கிராமம்” என்று சொல்வதற்குக் காரணம் உண்டு – இந்திய திபெத் எல்லையிலிருக்கும் ஒரு கிராமம் தான் நாங்கள் செல்ல திட்டமிட்ட கிராமம் – அந்த கிராமத்தின் பெயர் – சித்குல் (CHITKUL)!
தில்லியிலிருந்து பேருந்தில் முன்பதிவு செய்து கொண்டு, ஹிமாச்சலப் பிரதேசத்தின் “ராம்பூர் புஷர்” என்ற இடம் வரை ஒரே பேருந்தில் பயணம் – மொத்தமாக சுமார் 480 கிலோமீட்டர்
மலைப்பாதை என்பதால் சுமார் 14 மணி நேரம் எடுக்கலாம். அங்கிருந்து சித்குல் கிராமம் சுமார் 120 கிலோ மீட்டர். மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதே கடினம்
கடினமான மலைப் பாதையில் பேருந்தினைச் செலுத்துவதும் பயணிப்பதும் ஒரு வித சாகசமே! தில்லியிலிருந்து மொத்தமாக 20 மணி நேரம் தொடர்ந்து பயணித்தால் இந்த இடத்தினை அடைந்து விடலாம். ஆனால் ஒரே மூச்சாக இங்கே பயணிக்காமல், இரவு பத்து மணிக்கு, தில்லியிலிருந்து பேருந்தில் புறப்பட்டு சுமார் 12 மணி நேரம் பயணித்து ராம்பூர் புஷர் வரை சென்று சேர்ந்தோம்
அங்கே ஒரு அறை எடுத்து குளியல் வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த பயணம் – கல்பா எனும் கிராமம் வரை பயணித்து அங்கே இரவுத் தங்கல்! கல்பா கிராமமும் எழில் கொஞ்சும் கிராமம் தான்.
ஊர் முழுக்க ஆப்பிள் தோட்டங்கள், எந்தப் பக்கம் சுற்றிப் பார்த்தாலும் மலைச் சிகரங்கள், ஆகஸ்ட் மாதத்தில் கூட பனிப் போர்த்திய மலைச்சிகரங்கள் என ஊரே அழகு
அமைதியான கிராமம் – அப்படியே ஒன்றிரண்டு நாட்களாவது தங்கி இயற்கை எழிலையும் அமைதியையும் ரசிக்கலாம்! காலை வேளையில் தங்குமிட அறையிலிருந்து காணக் கிடைக்கும் காட்சி – ஆஹா அற்புதம்
பஞ்ச கைலாசங்கள் என அழைக்கப்படும் கைலாஷ்களில் ஒன்றான கின்னர் கைலாஷ் எனும் கைலாசம் உங்கள் கண்களுக்குத் தெரிகிறது. பெரும்பாலும் மான்சரோவர் கைலாஷ் யாத்திரை தான் பலருக்கும் தெரிந்த கைலாஷ் யாத்திரை
இந்த கின்னர் கைலாஷ் யாத்திரை ஹிமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமல்லாது வடக்கின் பல மாநிலங்களிலும் சிவ பக்தர்கள் இடையே பிரசித்தி பெற்றது. கல்பா கிராமத்திலிருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மலைப்பாதையில் ஏறியும் இறங்கியும் சென்று [ட்ரெக்கிங்] தான் இந்த கின்னர் கைலாஷ்-ஐ அடைய முடியும்
எங்கள் தங்குமிடத்தின் மேல் மாடியிலிருந்து நாங்கள் தரிசிக்க முடிந்தது கின்னர் கைலாஷ்-ஐ! 79 அடி சிவலிங்கம் கல்பா கிராமத்திலிருந்து மிகச் சிறிய மலைமுகடாக எங்களுக்குக் காட்சி தந்தது
கடல் மட்டத்திலிருந்து 19850 அடி உயரத்தில் இருக்கும் ஒரு இடம் தான் இந்த கின்னர் கைலாஷ். அங்கே 79 அடி உயரத்தில் இயற்கையாக அமைந்த சிவலிங்கம் ஒன்று உண்டு. கல்பா நகரத்திலிருந்து மேக மூட்டம் இல்லாத நாட்களில் இந்த 79 அடி சிவலிங்கத்தினைக் காண முடியும். கிராமத்தினர் அனைவரும் இந்த கின்னர் கைலாஷ் சிவலிங்கத்தினை நோக்கியே பிரார்த்தனை செய்கிறார்கள்.
காலை நேரத்தில் கல்பா கிராமத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோகி எனும் கிராமம் வரை மலைப்பாதையில் நடந்து சென்று அங்கிருந்து பேருந்து மூலம் மீண்டும் கல்பா வழி சித்குல் சேர்வது எனத் திட்டமிட்டோம்
கல்பா கிராமத்திலிருந்து பொறுமையாக நடக்க ஆரம்பித்தோம். வழியெங்கும் ஆப்பிள், பாதாமி, தேவதாரு மரங்கள் அடர்ந்த தோட்டங்கள் தான். எட்டு கிலோமீட்டர் தொலைவினைக் கடக்க எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே ஆனது
வழியில் பார்த்த காட்சிகள் ஆஹா – எத்தனை அழகு – அதுவும் ஆபத்தான அழகு! ஒரு பக்கத்தில் கூர்மையான பாறைகளைக் கொண்ட மலைப் பகுதி என்றால் மறு பக்கம் அதலபாதாள பள்ளம்! வாகனங்கள் வரும்போது மலைப்பகுதியின் ஓரத்தில் நிற்பது தான் நல்லது என்று அந்தப்பக்கம் நின்றோம்
ஒரு முறை பள்ளம் இருக்கும் பகுதியில் நிற்க வேண்டியிருந்தது – அந்தச் சில நொடிகள் இதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரித்ததோ என்று ஒரு எண்ணம் எனக்கு – நண்பரைக் கேட்க, அவரும் சிரித்தபடியே – எனக்கும் அதே உணர்வு தான் என்று சொன்னார். அற்புதமான அனுபவம் அது.
ரோகி கிராமத்திலும் இயற்கையை ரசித்து அங்கே இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலத்தினையும் பார்த்த பிறகு, ஹிமாச்சலப் பிரதேசத்தின் அரசுப் பேருந்தில் சித்குல் வரை பயணம் – அந்தப் பாதையை என்னவென்று சொல்வது – கரணம் தப்பினால் மரணம் – ஒரு பக்கம் உயர்ந்த மலைகள் – மறு பக்கம் அதலபாதாளம் – அங்கே பிரவாகித்து ஓடும் நதி! ஆனால் அங்கே வாகனம் செலுத்தும் ஓட்டுனர்கள் திறமைசாலிகள். கவனமாகவும் பொறுப்பாகவும் வாகனத்தினைச் செலுத்தி நம்மை நல்ல விதமாக கொண்டு சேர்த்து விடுகிறார்கள்
நாங்கள் திபெத் எல்லையில் இருக்கும் கடைசி கிராமம் அடைந்த போது கிட்டத்தட்ட மதியத்தினைக் கடந்து மாலை நெருங்கும் நேரம். அங்கே இருக்கும் ஒரு உணவகம் மிகவும் பிரபலம் – ஹிந்துஸ்தான் கா ஆக்ரி தாபா – அதாவது இந்தியாவின் கடைசி உணவகம்! கிடைக்கும் உணவு வகை ஒன்றிரண்டு தான் என்றாலும், சுவை வீட்டு உணவு போலவே மிகவும் நன்றாகவே இருக்கும்.
இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், இனிமையான-எளிமையான மனிதர்கள், வித்தியாசமான பழக்க வழக்கங்கள், எங்கெங்கும் அமைதி என மிகவும் ரம்மியமான இடம். அப்படியே இருந்து விடலாம் என்று தோன்றினாலும் அங்கேயே இருந்து விட முடியுமா என்ன?
இரண்டு மூன்று தினங்கள் அந்தக் கிராமியச் சூழல்களில் இருப்பது மிகவும் விரும்பத்தக்க ஒன்று. அலுவலக வேலைகள், அனாவசிய சிந்தனைகள், பிரச்சனைகள் என அனைத்தையும் மறந்து இயற்கையோடு இயைந்திருக்க நினைத்தால் இது போன்ற ஒரு சிறு கிராமத்திற்கு வந்து விடலாம்
கல்பா, ரோஹி, சித்குல், ரக்சம், சாங்க்ளா, குப்பா என சின்னச் சின்ன கிராமங்களாக இங்கே நிறைய இடங்கள் உண்டு. அனைத்துமே சிறப்பான இடங்கள் தான்
வருடத்தின் நான்கு மாதங்களுக்கு மேல் பனிப்பொழிவு மிகவும் அதிகம் என்பதால் மொத்தமாக பாதைகள் மூடிக்கொண்டு வெளியுலகிற்கு செல்ல முடியாத நிலையில் அவர்கள் இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். குளிர்காலத்திற்குத் தேவையானதை தமக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் சேமித்து வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
கிராமத்தில் பெரிதாக பொழுதுபோக்குச் சமாச்சாரங்களை எதிர்பார்த்துச் செல்ல வேண்டாம். இயற்கை எழிலையும், சலசலத்து ஓடும் நதியையும், மலைப்பிரதேசங்களையும், அமைதியையும், தனிமையையும் விரும்பும் அனைவருமே இங்கே சென்று வரலாம்
நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் இங்கே மலையேற்றம் செய்ய வருகிறார்கள். அதைப் போலவே இருசக்கர வாகனங்களில் சாகசப் பயணங்கள் செய்ய விரும்புபவர்களும் இங்கே வருகிறார்கள்
சித்குல் கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்திய-திபெத் எல்லை இருக்கிறது என்றாலும், எல்லை வரைச் செல்ல தேவையான அனுமதி எங்களிடம் இல்லை
அனுமதி இல்லாமல் கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் [3 ½ கிலோமீட்டர்] தொலைவில் இருக்கும் செக் போஸ்ட் வரை நடந்து செல்ல முடியும். மெதுவாக மலைகளையும் ஆற்றையும் ஆங்காங்கே கட்டப்பட்டு வரும் தங்குமிடங்களையும் பார்த்தபடியே நடந்தோம்.
எங்கெங்கும் மலைப்பிரதேசம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. தூரத்தில் எங்கிருந்தோ குரல் எழுப்பும் பறவைகளின் ஒலி காதுக்குள் ரீங்கரித்தது. மலைப்பகுதியில் உலவும் கிராமத்தின் செல்லங்கள் எங்களுடன் தொடர்ந்து நடந்து வந்தன
எங்கே பார்த்தாலும் இயற்கையின் எழில். நெடிதுயர்ந்த தேவதாரு மரங்கள், மலையுச்சியிலிருந்து உருகி வழிந்து ஓடி வரும் பனி நீர், அது கலக்கும் பாஸ்பா ஆறு என ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க ஆனந்தம்
அமைதியாக நேரத்தினைக் கடத்த மிகச் சிறந்த இடம் இந்த சித்குல். சித்குல் கிராமம் தவிர, இந்தப் பகுதியில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு
தலைநகரிலிருந்து (Delhi) ஐந்து நாட்கள் விடுமுறையில் இந்த இடத்திற்குச் சென்று வந்து விட முடியும். தங்குமிடங்கள் நாளொன்றுக்கு 500 ரூபாய் முதல் ரூபாய் 2000 வரை கிடைக்கின்றன. ஐந்து நாட்கள் பயணத்திற்கான உங்களுக்கு ஆகும் செலவு குறைவே
நான் மிகவும் ரசித்துச் சென்று திரும்பிய பயணம் இந்தப் பயணம். கடைசி கிராமம் எனும் இந்தப் பயணத்தின் போது எங்களுக்குக் கிடைத்த அனைத்து அனுபவங்களையும் நீங்கள் வாசிக்க விரும்பினால், எனது “கடைசி கிராமம்” எனும் மின்னூலை அமேசான் தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்! அதற்கான சுட்டி👇
முடிந்த போது வேறு ஒரு பயணம் பற்றிய தகவல்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். சஹானா இணைய இதழில் எழுத வாய்ப்பளித்த ஆசிரியருக்கு நன்றி
நட்புடன்,
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
நான் வெங்கட் நாகராஜ். என் பெயரில் பாதியை முன்னேயும், தந்தையின் பெயரில் முக்காலை பின்னேயும் சேர்த்து வலைப்பூவுக்காக வைத்துக் கொண்ட பெயர். அதுவே இப்போது பழகி விட்டது! நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து, கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன்! கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தில்லிவாசி. பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம். கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து சந்தித்ததும் சிந்தித்ததும் எனும் வலைப்பூவில், கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். இந்த வலைப்பூவில் எழுதுபவை பயண அனுபவங்கள், பல்சுவைப் பதிவுகள், நான் எடுத்த நிழற்படங்களின் தொகுப்பு, கதை மாந்தர்கள் என பல விஷயங்களை தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வருகிறேன். படித்தது இளங்கலை கணிதம் –பணிபுரிவது அரசுத்துறையில். நிழற்படங்கள் எடுப்பதும், பயணம் செய்வதும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களாகச் சொல்லலாம்!
நன்றி நன்றி நன்றி
உங்கள் பயணக்கட்டுரையை, சஹானா இணைய இதழுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வெங்கட் அண்ணா🙏💐
GIPHY App Key not set. Please check settings