சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 54)
சூரியனின் வெப்பம் பூமியை சுட்டெரிக்க, அந்த வெப்பத்திற்கு இணையாக தெருவோரத்திலிருந்த அந்த ஒரு வீட்டிலிருந்தவர்கள், கோபத்தின் உச்சத்தில் கொதித்துக் கொண்டிருந்தனர்.
“என்னடி அந்த அம்மா இப்படி பேசுது?” என்று பக்கத்து வீட்டு பெண்ணொருத்தி சொல்ல
“போயும் போயும் அந்த பொண்ண பாவம்னு சொல்ற, அவளுக்கு வாயடக்கம் இல்லை. பொண்ணு மாதிரியா இருப்பா அவ? பையன் மாதிரி நடந்துக்கிட்டா எந்த வீட்டுல தான் மருமகளா ஏத்துப்பாங்க? அதான் அந்த அம்மா கல்யாணத்தையே நிறுத்த சொல்லுது” என்றாள் இன்னொருத்தி.
சுற்றி இருந்தவர்களோ கலவரம் நடக்கும் அந்த வீட்டையே நாளைய வீண் பேச்சு தலைப்புக்காக காதுகளை தீட்டி நோட்டம் விட்டுக் கொண்டு இருக்க, சுற்றியிருந்தவர்களை கவனிக்கும் நிலையில்லை அந்த வீட்டாற்கள்.
“என்ன தான் பொண்ண வளர்த்து வச்சிருக்கீங்களோ! எப்போ பாரு ஆம்பிளைங்கள எதிர்த்து பேசிக்கிட்டு. நான் தெரியாம தான் கேக்குறேன். நீ படிச்சி கிழிச்சி அப்படி என்ன பண்ண போற? கல்யாணத்துக்கு அப்றம் அடுப்பு ஊத தானே போற? அதுக்கு எதுக்கு உனக்கு படிப்பு?” என்று இத்தனை நாள் அவளுக்கு வருங்கால மாமியார் என்றிருந்த சகுந்தலா கேட்க, மார்புக்கு குறுக்கே கைககளை கட்டிக் கொண்டு விறைப்பாக நின்றிருந்தாள் ருத்ரா.
எதுவுமே பேசவில்லை அவள். ஆனால், ருத்ராவின் தாய் தேவகி தான் தன் மகளை பற்றி வெளியாட்கள் பேசும் வார்த்தைகளில் நொந்துப் போய் விட்டார். பிள்ளைகளின் செயல்கள் அவர்களை பெற்றவர்களை அல்லவா பாதிக்கும்!
“ஏம்மா இப்படி பேசுறீங்க? அவளுக்கு மேல்படிப்பு படிக்கனும்னு ரொம்ப ஆசை. உங்க பையன் தான் படிக்க வைக்கிறேன்னு ஏற்கனவே வாக்கு கொடுத்துட்டு இப்போ முடியாதுன்னு சொல்லிட்டாரு.” என்று தேவகி முடிக்கவில்லை
“ஆமா, அப்போ சொன்னேன். ஆனா, இப்போ பிடிக்கல. பொண்ணுங்க அதிகமா படிச்சா திமிர் வரும், தலக்கணம் வரும். அதுவும் இவ வேலைக்கு போய் என்ன பண்ண போறா? ஏன் எனக்கு தெம்பில்லையா? நான் தான் சம்பாதிக்கல்லையா?” என்று அவளை மணக்கவிருந்த தருண் பேச, இப்போது வாயை திறந்தாள் ருத்ரா.
“நான் படிக்கனும் வேலைக்கு போகனும்னு நினைக்கிறது என்னோட அடையாளத்துக்காக. புருஷன் காசுல காலத்தை ஓட்டனும்னு நினைக்கிற பொண்ணில்ல நான். உன் பொண்டாட்டி, இதோ இருக்காங்க! இவங்க மருமகள் என்கிற அடையாளத்தை விட நான் எனக்குன்னு உருவாக்குற அடையாளம் தான் எனக்கு வேணும்” என்று அழுத்தம் திருத்தமாக ருத்ரா சொல்லி முடிக்க, தேவகி தன் மகளின் பேச்சில் தலையில் கை வைத்து விட்டார்.
பெண்ணை பெற்று, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தேவகி வசதி படைத்த குடும்பத்தில் திருமண சம்மதம் கிடைத்ததை பெரிய விடயமாக நினைத்திருக்க, ருத்ராவின் நடத்தையில் எங்கு திருமணம் நின்று விடுமோ? என்ற பயம் அவருக்கு!
“பார்த்தியா பேசுற பேச்சை! என்ன எல்லாம் பேசுறா? பொண்ணுக்கு அடக்கம் வேணும். இப்பவே இப்படி பேசுறவ, கல்யாணத்துக்கு அப்றம் என்னெல்லாம் பேசுவா. நாங்கெல்லாம் பெரியவங்கள எதிர்த்து கூட பேச மாட்டோம். அவங்களோட பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. ஆனா இவ… ச்சீ… ச்சீ…” என்று சகுந்தலா அருவருப்பாக முகத்தை வைத்துக் கொள்ள, அவரை இடைவெட்டினாள் ருத்ரா.
“கருத்தை சொல்றதுக்கு எதுக்கு பாலினம்? சொல்ற கருத்து சரியாவும், தப்பை சுட்டிக் காட்டுற தைரியமும் இருந்தா போதும். அப்பாவோ, புருஷனோ? நமக்கு சரின்னு தோணுறதை வெளிப்படையா சொல்லனும். அதுக்கு பேரு எதிர்த்து பேசுறதுன்னா, ஆமா நான் எதிர்த்து தான் பேசுறேன்” என்ற ருத்ராவின் வார்த்தைகளில், தருணுக்கும் சகுந்தலாவுக்கும் அத்தனை ஆத்திரம்
இதில் தேவகியின் நிலையை சொல்லவா வேண்டும்?
தன் மகளின் கையை எச்சரிக்கும் பார்வையுடன் அழுத்தியவர், “என்ன பேசுற ருத்ரா? அமைதியா இரு! பெரியவங்க முன்னாடி இப்படியா பேசுறது? அதுவும் அவர் உன்னை கட்டிக்க போற மாப்பிள்ளை. அவங்க சொல்ற மாதிரி இந்த படிப்பெல்லாம் வேணாம். கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு ஆனதும் இலட்சியம் எல்லாம் காணாம போயிரும்” என்று தன் மகளுக்கு புரிய வைக்க முயல, விரக்தி புன்னகை புரிந்தாள் அவள்.
“பொண்ணுங்க நாம தான்ம்மா நம்ம உரிமைய விட்டுக் கொடுக்குறோம். நம்ம உரிமைய பறிக்குறாங்கன்னு ஆண்கள் மேல பழி போடுறது சுத்த முட்டாள்தனம். நாமளே தான் நம்ம உரிமைய தாரை வார்க்குறோம். என்னால என் உரிமை, விருப்பத்தை விட்டுக் கொடுக்க முடியாது” என்று அழுத்தமாக ருத்ரா சொல்ல, தேவகிக்கு தான் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து பயம் நெஞ்சை கவ்வியது.
“இதுக்கு மேல நான் என்ன சொல்ல? இதோ இப்படி ஒரு பொண்ண என் பையனுக்கு கட்டிக் கொடுத்தா அவ்வளவு தான். வாழ்க்கை பூரா என் பையன் தான் இவளுக்கு அடிமையா கிடக்கனும். இந்த சம்மதத்தை இதோட முடிச்சிடலாம். உங்களுக்கு அடி பணிஞ்சி இருக்குற மாதிரி ஏதாச்சும் ஒரு இளிச்சவாயன் உங்க பொண்ணுக்கு கிடைப்பான்” என்று விட்டு சகுந்தலா செல்ல
“ஆமா… உங்க பொண்ணு பெண்ணியவாதியாமே! இதை சொல்லி சொல்லியே நிறைய பொண்ணுங்க கிடைக்குற அதிர்ஷ்டத்தை நழுவ விடுறாங்க” என்று ஏளனமாக சொல்லி விட்டு, தருணும் தன் அம்மாவின் பின்னால் செல்ல, அவனை ஏளனமாக பார்த்தாள் ருத்ரா.
“என் உரிமைகளை விட்டுக் கொடுத்து உனக்கு அடிமையா வாழுற வாழ்க்கை தான் எனக்கு அதிர்ஷ்டம்னா, அப்படி ஒரு அதிர்ஷ்டமே எனக்கு தேவையில்லை. குடிசை வீட்டுல இருந்தாலும் என் உரிமைய விட்டுக் கொடுக்காம எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கேன்” என்று ருத்ரா சொல்லி முடிக்கவில்லை, அவளை அறைந்திருந்தார் தேவகி.
“வாய மூடுடி! உன் வாழ்க்கை கைய விட்டு போயிக்கிட்டு இருக்கு. எவ்வளவு நாள் தான்டி உரிமை, விருப்பம்னு பேசிக்கிட்டு இருப்ப? ஒரு பொண்ணுக்கு கல்யாணம் தான் அடையாளமே! அவளோட புருஷன் தான் அவளுக்கு எல்லாமே! நீ இப்படி பேசியே உன் வாழ்க்கைய அழிக்கிறியே!” என்று கத்தியவர் சகுந்தலாவிடம், “மன்னிச்சிருங்கம்மா, இனி அவ இப்படி பேச மாட்டா, நான் சொல்லி புரிய வைக்கிறேன். என் தப்பு தான். இந்த கல்யாணத்தை மட்டும்…” என்று பேச, அதை கேட்ட கூட தயாராக இல்லை சகுந்தலாவும், தருணும்.
அவர்கள் அங்கிருந்து வெளியேறியிருக்க, தன் அம்மா அறைந்த கன்னத்தை தடவி விட்டுக் கொண்டவள், தலையில் அடித்து கதறியழும் தன் அம்மாவை பார்த்து, “நீ கூட என்னை புரிஞ்சிக்கல தானேம்மா?” என்று கண்ணீரை அடக்கிய நிலையில் கேட்டாள்.
“ஏன்டி இப்படி பேசுற? பொண்ணுங்களுக்கு ஏது தனிப்பட்ட விருப்பம் எல்லாம்? உனக்கு கிடைச்ச நல்ல வாழ்க்கையே போச்சே! ஆம்பிளைங்க கூட ஒப்பிடும் போது நாம அவங்கள விட எப்போவும் குறைஞ்சவங்க தான். மதிப்பு கொடுக்க வேண்டியது நம்ம கடமை. ஏன்டி இதை புரிஞ்சிக்காம இப்படி நடந்துக்குற? உன்னை நான் நல்லா தானே வளர்த்தேன்?” என்ற தேவகியின் வார்த்தைகள் இயலாமையில் வந்தன.
“என்ன பேசுறீங்க நீங்க? ஆண், பெண் இரண்டு பேருமே சமம் தான். யாரும் யாருக்கும் குறைஞ்சவங்க இல்லை. நீங்களே உங்களோட மதிப்பை இழக்குறீங்கம்மா. ஆம்பிளைங்கள மதிக்க கூடாதுன்னு நான் சொல்லல்ல. அதே மதிப்பு அவங்களுக்கு நம்ம மேல இருக்கனும். இது ஏன்ம்மா உங்களுக்கு புரியல?” என்று பேசிய ருத்ரா, அதற்கு மேல் அங்கு நிற்காமல் வீட்டிலிருந்து வெளியேற
“இந்த நேரத்துல எங்க டி கிளம்புற?” என்ற தன் அம்மாவை சலிப்பாக பார்த்தாள்.
“நல்லபடியா வீடு வந்து சேர்ந்துருவேன், போதுமா?” என்று மட்டும் அழுத்தமாக சொன்னவள், அங்கிருந்து சென்றது என்னவோ மனதிற்கு அமைதி கொடுக்கும் பூங்காவிற்கு தான்.
அங்கு இருக்கையில் தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்த ருத்ராவுக்கு, ஒரு உரையாடல் கேட்டது. ருத்ரா அத்திசையை நோக்க, அங்கு பத்து வயதுடைய ஒரு சிறுமி அழுக, அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் அவளின் தந்தை.
“அந்த பையன் தான்ப்பா என்னை அடிச்சான்” என்று அந்த சிறுமி அழ
பின்னால் கைகளை பிசைந்தபடி நின்றிருந்த தன் மனைவியை முறைத்தவர் தன் பிள்ளையின் தலையை தடவி, “பாப்பா, அந்த பையன் அடிச்சான்னு அப்பாக்கிட்ட வந்து அழுகுற. நம்ம மேல தப்பில்லன்னா தைரியமா எதிர்த்து நிக்கனும். இப்படி அழுதன்னா அவன் உன்னை பலவீனமா நினைச்சிப்பான், புரியுதா?” என்று அறிவுரை வழங்கினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ருத்ராவுக்கு தான் அத்தனை ஆச்சரியம்! ஆனால், அடுத்து நடந்த சம்பவத்தை பார்த்து ‘ச்சீ!’ என்றிருந்தது அவளுக்கு.
தன் பிள்ளையை சமாதானப்படுத்தி விளையாட அனுப்பியவர், சுற்றியிருப்பவர்களை கண்டுக்காது தன் மனைவியை அறைந்திருக்க, அதிர்ந்து விட்டாள் ருத்ரா.
“உன்னால தான்டி என் பிள்ளைய கவனிக்காம போயிட்டேன். எப்போ பாரு அம்மா வீட்டுக்கு போகனும்னு காதுக்கிட்ட நொய்யு நொய்யுன்னு… இதுல எனக்கே தெரியாம உன் அம்மாவுக்கு அன்னைக்கு பணம் கொடுத்திருக்க. வீட்டுக்கு வருவ தானே! அப்போ உன்னை வச்சிக்குறேன்” என்று மிரட்டலாக சொல்லி விட்டு, தன் பிள்ளையை தேடி அவர் சென்றுவிட, அந்த பெண்ணுக்கோ அவமானத்தில் முகமே கறுத்து விட்டது.
ஒரு மரத்தின் நிழலில் வந்து நின்ற அந்த பெண், விடாது வழிந்துக் கொண்டிருந்த கண்ணீரை அழுந்த துடைத்து அழுகையை கட்டுப்படுத்த, சட்டென தோளில் உணர்ந்த தொடுகையில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார். அங்கு வேறு யாருமல்ல, ருத்ராவே தான்.
அவரோ அவளை புரியாது பார்க்க, “நான் ஒன்னு கேக்கவா? என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என்று ருத்ரா ஆரம்பிக்க, யோசனையுடன் தலையசைத்த அந்த பெண் அவளை கேள்வியாக நோக்கினார்.
“உங்க ஹஸ்பன்ட் பேசுறதை கேட்டுட்டு தான் இருந்தேன். அதை கேக்கும் போது நிஜமா எனக்கே அவ்வளவு கோபம் வந்திச்சி. நீங்க உங்க அம்மாவுக்காக பண்றதை அவருக்கு தடுக்க என்ன உரிமை இருக்க? இல்லை, நம்மளோட அம்மாவுக்காக பண்றதுக்கு எதுக்கு அனுமதி கேக்கனும்? ஆனா, நீங்க அவர் அறைஞ்சதையும் வாங்கி எப்படி அமைதியா இருக்கீங்க?” என்று திக்கித் திணறி தயக்கமாக ருத்ரா கேட்டு முடிக்க, அந்த பெண்ணோ விரக்தி புன்னகையுடன் தன் கணவனை நோக்கினார்.
“எனக்கு சொல்லிக் கொடுத்தது அது தான்ம்மா. என்ன நடந்தாலும் புருஷன எதிர்த்து பேசக் கூடாது. அவர் அடிக்கவே செஞ்சாலும் ஒரு பொண்ணா பொறுத்துட்டு இருக்கனும். இப்போ நான் அவர எதிர்த்து பேசினா மட்டும் என்ன ஆக போகுது? என் அம்மா வீட்டுக்கு என்னை அனுப்பி விட்டுருவாரு. அப்படி போனா என் அம்மாவே என்னை துரத்தி விட்டுருவாங்க. நமக்கெல்லாம் எந்த தனிப்பட்ட விருப்பமும் கிடையாது. கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு பொறுமையா இருக்கனும்” என்று அந்த பெண் பேசிக் கொண்டே போக, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ருத்ராவுக்கோ அத்தனை ஆத்திரம்!
“நாம நமக்காக போராடாம கடவுள்கிட்ட முறையிட்டா எல்லாம் சரியாகிடுமா? கணவன் மனைவிக்கிடையில புரிதல் இருக்கனும். ஒருத்தருக்காக ஒருத்தர் விரும்பி விட்டுக் கொடுக்கனும். ஆனா, விட்டுக் கொடுக்குறதை பொண்ணுங்க மட்டும் தான் பண்ணனும்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்? புருஷனுக்கு பொண்டாட்டிய அடிக்க உரிமையிருக்குன்னு யாருங்க சொன்னது? இப்படி பொறுத்துப் போய் கஷ்டப்பட்டு ஒரு உறவுக்குள்ள இருக்கனுமா என்ன?” என்று ருத்ரா தனக்குள்ளேயிருந்த ஆதங்கத்தை கொட்ட, சிறு புன்னகையுடன் அவளை ஏறிட்டார் அந்தப் பெண்.
“இதே ஆதங்கம், வெறி எனக்குள்ளேயும் இருக்கு. சிலநேரம் என் உரிமைக்காக கேள்வி கேக்கனும்னு தோணும். ஆனா, அதுக்கான தைரியம் தான் இல்லை. அதுவும், பெண்ணியம் பேசி வாழாவெட்டியாகுறதை விட, என்ன நடந்தாலும் பொறுத்துக்கிட்டு இருக்குறது சாமர்த்தியமா தோணுது.
உனக்கொன்னு தெரியுமா? ஆண், பெண் சமத்துவத்தை பத்தி ஆண்களே பேசுவாங்க. ஆனா, அதுவே அவங்க மனைவின்னு வரும் போது காணாம போயிரும். நம்ம பேச்சை எல்லாம் சபையில கண்டுக்க கூட மாட்டாங்க. நமக்கு வேற வழியில்லை ம்மா. இது தான் பொண்ணுங்களோட விதி!” என்று அந்த பெண் பேசிவிட்டு அங்கிருந்து நகர, ருத்ராவுக்கோ மனம் உலைகளமாக கொதித்தது.
அவர் சொல்வதும் சரி தானே! வெளியில் பெண்ணுரிமை பேசி தம் வீட்டு பெண்களையும் மதிக்கும் ஆண்கள் இங்கு எத்தனை பேர்? இப்போது கூட பெற்ற பெண் குழந்தைக்கு தைரியம் ஊட்டிய அந்த பெண்ணின் கணவர், தன் மனைவி என்று வரும் போது அடங்கி இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறார்!
அந்த பெண் பேசியதை நினைத்தவாறு அவள் பூங்காவிலிருந்து வெளியேறி பஸ் தரிப்பிடத்திற்கு வர, ‘வித்யா கோலிங்’ என்ற சத்தத்துடன் அலறியது அவளின் அலைப்பேசி.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “உன் வீட்டுக்கு தான் வந்துக்கிட்டு இருக்கேன், பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்று விட்டு அழைப்பை துண்டிக்கவும், பஸ் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
ருத்ரா பஸ்ஸில் ஏற, உள்ளே சரியான கூட்டம்! ஆண்களும் பெண்களும் இடித்துக் கொண்டு நிற்க, இவள் நிற்பதை கவனித்த ஒரு இளைஞன் எழுந்து ருத்ராவை அமர சொல்ல, “பரவாயில்லைங்க, என்னால நிற்க முடியும்” என்று மறுத்து விட்டு, அவள் இறங்குவதற்கு ஏதுவாக முன்னோக்கி எல்லாரையும் தாண்டிச் செல்ல, முன்னே ஒரு பெண் கத்தும் சத்தம்!
“எல்லா ஆம்பிளைங்களும் இப்படி தானோ? பெண்களுக்கும் மனசு இருக்கு. அவங்களுக்கும் உணர்வுகள் இருக்குன்னு யாரும் உணர மாட்டீங்க. ஏதாச்சும் எங்க உரிமைக்காக பேசினா போதும். ஃபெமினிஸ்ட் பெண்ணியம் பேச வந்துட்டான்னு மட்டும் சொல்ல வேண்டியது” என்று அந்த பெண் பேச, ருத்ராவுக்கோ ஆச்சரியம்!
இதுவரை தன்னுரிமைக்காக கூட போராட யோசிக்கும் பெண்களையே பார்த்தவளுக்கு, இத்தனை பேர் மத்தியில் தைரியமாக பெண்ணுரிமை பேசும் இந்த பெண்ணை பார்க்க ஆச்சரியமாகத் தான் இருந்தது. மனதில் ஏதோ ஒரு சந்தோஷம்!
ருத்ரா அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டு இருக்க, அடுத்து அந்த பெண் நடந்துக் கொண்ட விதத்தில், இருந்த சந்தோஷ உணர்வுகள் வடிந்துப் போய், கோபம் உச்சத்தை தொட்டது அவளுக்கு.
“இவ்வளவு நேரம் என்னை ஒருத்தன் உரசிக்கிட்டு இருந்தானே அவனை ஏதாச்சும் பண்ணனும்னு யாருக்காச்சும் தோணிச்சா? இங்க எவனும் சுத்தம் கிடையாது. ஆம்பிளைங்களே புத்தி இல்லாதவங்க! சுயநலவாதிங்க! இங்க எல்லாமே ஆணாதிக்கம் தான். இதோ இருக்காரே! இவ்வளவு நேரம் ஒரு பொண்ணு நான் நின்னுகிட்டு இருக்கேன். எழுந்து எனக்கு இடம் தரனும்னு தோணுதா?” என்று அந்த பெண் பேசியதை, ருத்ராவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
பெண்ணியவாதி போர்வை போர்த்தி ஆண்களை தரக்குறைவாக பேசுவது! பெண் எனும் பாலினத்தை ஒரு சாக்காக வைத்து ஆண்களிடமிருந்து சலுகை எதிர்ப்பார்ப்பது! இது தான் பெண்ணியமா?
இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிய ருத்ரா, வித்யாவின் வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்த, கதவை திறந்த வித்யாவின் அம்மா, “வாம்மா… வாம்மா…” என்று உற்சாகமாக வரவேற்றார்.
ருத்ராவும் அவரை நலம் விசாரித்தவாறு உள்ளே நுழைந்தவள், “ஆன்ட்டி, வித்யா எங்க?” என்று கேட்க
மகளின் அறையை காட்டியவர், “ஒரு சந்தோஷமான செய்தி ருத்ரா. வித்யாவுக்கு கல்யாணம் முடிவாகிருச்சி, கூடிய சீக்கிரம்.” என்று சொல்ல,
ஒரு பக்கம் சந்தோஷம்! மறு பக்கம் அதிர்ச்சி ருத்ராவுக்கு! காரணம், ருத்ராவுடன் மேல் படிப்பு படிக்க திட்டம் போட்டதே வித்யா தானே!
தன் நண்பியை தேடிச் சென்றவள், வித்யா பேசும் முன்னே குறுக்கிட்டு, “நீ என் கூட படிக்கிறேன்னு சொன்னியே! கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு அம்மா சொல்றாங்க.” என்று அதிர்ந்துக் கேட்க
அவள் கேட்டதில் கன்னங்கள் சிவக்க வெட்கப்பட்ட வித்யா, “ஆமா ரூத், மாப்பிள்ளை பாரின்ல வேலை பாக்குறாரு. கல்யாணம் முடிஞ்சதுமே லண்டன் கிளம்பிருவோம்” என்று சொல்ல, ருத்ராவோ அவளை புரியாது பார்த்தாள்.
‘கல்லூரியில் படிப்பில் முதல் இடத்தை பிடிக்கும் மாணவியா இது?’ என்றிருந்தது ருத்ராவுக்கு!
“என்ன பேசுற நீ? பெரிய படிப்பெல்லாம் படிக்கனும் அப்படி இப்படின்னு என்கிட்ட பேசிட்டு, இப்ப கல்யாணம் புருஷன்னு பேசிக்கிட்டு இருக்க. சரி, கல்யாணம் பண்றதுல தப்பு கிடையாது. கல்யாணத்துக்கு அப்றம் படிக்கலாம் தானே! அது ஒன்னும் தப்பில்லையே… நீ வேணா உன்னை கட்டிக்க போறவர்கிட்ட…” என்று ருத்ரா பேசி முடிக்கவில்லை, அவளை குறுக்கிட்டாள் வித்யா.
“நீ என்ன பேசுற ருத்ரா? அப்ப படிப்பை தவிர வேறெதுவும் முக்கியமா தோணல, அதனால படிப்புல ஆர்வமா இருந்தேன். புருஷன் நல்லா சம்பாதிக்கும் போது எதுக்கு நாம வேலைக்கு போயிக்கிட்டு! எனக்கு அதெல்லாம் பிடிக்கல. இலட்சியம், கனவுன்னு நேரத்தை வீணாக்க எனக்கு இஷ்டமும் இல்லை. புருஷனோட வீட்டுல இருந்தோமா, நல்லா சாப்பிட்டு தூங்கினோமானு இருக்கனும்” என்று பேசிய தன் நண்பியை ‘என்ன செய்தால் தகும்?’ என்றிருந்தது ருத்ராவுக்கு!
“நமக்கான அடையாளம் தான் நமக்கான மதிப்பை கொடுக்கும். புருஷனா இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல நமக்கு தேவையானதை எதிர்ப்பார்க்க முடியாது. பத்து ரூபா காசா இருந்தாலும் முதல் இரண்டு தடவை தருவாங்க. மூனாவது தடவை கேக்கும் போது ‘இப்போ தானே தந்தேன்’னு ஒரு கேள்வி வரும். ஆனா, நமக்குன்னு ஒரு சம்பாதித்தியம் இருந்தா யாருக்கிட்டேயும் நம்ம மதிப்பை இழக்க தேவையில்லை” என்று ருத்ரா புரிய வைக்க முயல, ஏனோ அவளின் வார்த்தைகள் காற்றில் கரைந்த கற்பூரம் தான்.
“ஹெலோ! உன் பெண்ணியவாதி பேச்செல்லாம் இங்க வேணாம். எனக்கு அடையாளம் எல்லாம் தேவையில்லை. ராணி மாதிரி என் புருஷனே என்னை பார்த்துப்பான். அதுவே போதும்” என்று வித்யா சொல்ல
‘இதற்கு மேல் பேசி புரிய வைக்க முடியாது’ என்று புரிந்துக் கொண்டு, அத்தோடு அந்த பேச்சை நிறுத்திக் கொண்டாள் ருத்ரா.
சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து வெளியேறி பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்தவளுக்கு, மனதிலோ பல கேள்விகளும் சிந்தனைகளும்…
ஆண்களை விட பெண்கள் தரம் தாழ்ந்தவர்கள் தான் என்று சொல்லிக் கொடுத்ததை வேதவாக்காக கொண்டு வளர்ந்த ஒரு பெண்கள் கூட்டம், தம்முடைய மதிப்பையே புரியாதவர்கள்!
மனதில் உரிமைகளுக்காக போராட ஆதங்கம், வெறி இருந்தும் தைரியமின்றி அத்தனை கேள்விகளையும் தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கும் ஒரு பெண்கள் கூட்டம்.
பெண்ணியவாதிகள் என்பவர்கள் யார் என்பதே புரியாது தானும் பெண்ணியவாதி என்ற பொய்யான போர்வை போர்த்தி ஆண்களை திட்டுவதையும், ஆண்களிடம் சலுகையை எதிர்ப்பார்க்கும் ஒரு பெண்கள் கூட்டம்.
தனக்கென்று அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்ற எந்த இலட்சியமும், கனவும் இல்லாது வாழும் ஒரு பெண்கள் கூட்டம்.
‘ஒரு பெண்ணுக்கு கல்யாணம் தான் அடையாளமா? பெண்ணியவாதிகள் என்றாலே தற்போது தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். திமிர் பிடித்த பெண்கள் என்று… தம்முடைய உரிமைக்காக போராடும் ஒவ்வொரு பெண்களும் பெண்ணியவாதிகள் தான்.
ஆனால், தமக்கு சொந்தமானதை தாமே விட்டுக்கொடுத்து அதை அடைய போராடும் வினோத மனிதர்கள் தானோ பெண்கள்?’ என்று யோசித்தவாறு நின்றிருந்த ருத்ராவின் அலைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர, அதைப் பார்த்தவளுக்கோ இதழ்கள் தானாக விரிந்தன.
‘தீவிரவாத தாக்குதலின் போது தீவிரவாதிகளை எதிர்த்து முன் நின்று போராடிய இளம்பெண்!’
‘ஆண்களுக்கில்லாத தைரியம் ஒரு பெண்ணிற்கா?’ பல பேர் மனதில் எழும் ஆச்சரியமான கேள்வி! ஆனால், ஒரு ஆணிற்கு ஈடானவள் தான் ஒரு பெண்ணும். இதை உணராதது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான்.
மனதில் எழுந்த மொத்த கேள்விகளையும் உதறி விட்ட ருத்ராவின் இதழ்கள் கர்வத்துடன் விரிந்தன, ‘என் உரிமைக்காக போராடும் நான் ஒரு பெண்ணியவாதி தான். என் உரிமைகளை பறிக்க நினைக்கும் ஆண்களுக்கு நான் ஒரு கொல்லிப்பாவையே!’ என்ற கர்வத்தில்…
(கொல்லியம்பாவை விளக்கம் – கரிகால மன்னன் பாண்டியர்களுடனான போரின் போது கொல்லிமலையில் சித்தர்களிடம் தஞ்சம் புக, அவரை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க சித்தர்களால் உருவாக்கப்பட்ட பெண்பதுமையே கொல்லியம்பாவை)
(முற்றும்)
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings