in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 23) – ஜெயலக்ஷ்மி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நித்யா மாவட்ட மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை தெரிவித்துவிட்டு, கோட்டாட்சியருக்கும் அழைப்பு விடுத்தாள்.  குழுவினருடன் அனைவரும் வர  விசாரணை துவங்கியது.

“சரி, பார்த்துக்கோங்க நித்யா! என்றபடியே மேலதிகாரிகள் கிளம்பினர்.

அந்நிறுவன உரிமையாளர் சார்பாக இரண்டு வழக்குரைஞர்கள் வந்தனர்.  “சார், கொஞ்சம் வெளியே இருங்க!“ என்றாள் நித்யா.

அவர்களோ குழந்தைகளின் பரிதாப நிலையைப் பார்த்து, “ஒண்ணும் பண்ணமாட்டோம் மேடம், எங்களுக்கே பாக்கவே பாவமா இருக்கு!“ என்று கூறிச் சென்றுவிட்டனர்.  

ஆமாம்! இம்முறை எட்டு வயது முதல்… பால்வடியும் பிஞ்சு முகங்கள்! கைகளிலோ காய்ப்புக் கரணைகள்! எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாதவாறு அவர்கள் பெயரும், பெற்றோர் பெயரும், ஊரின் பெயரும் சொல்லக் கூடத் தெரியவில்லை. மைக்கண்ணன் சொன்னது போன்று இயந்திரங்கள் போல் வேலை செய்து, பேசவும், சிந்திக்கவும் கூட மறந்து போயினர் போலும்!. 

விசாரணை முடியும் வரை கதவு உட்புறமாக பூட்டப்பட்டது. உரிமையாளர் பீஹாருக்கு சென்று விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  வயது வந்த நபர்களாகக் காணப்பட்டவர்கள் கூட உரிமையாளர் பெயரைக் கூட சொல்ல மறுத்தனர்.

காவல் உதவி ஆய்வாளர் “பொறுப்பாளி“ என்று சொல்லப்பட்ட நபரை தனியே அழைத்துப் போய் கையைப் பின்புறமாக திருப்பினார்.

விசையைத் திருப்பியவுடன் வெளியிடும் இயந்திரம் போல, உரிமையாளர் பெயர், தொடர்பு எண், அத்தனையும் கடகடவென வெளிவந்தது.

உரிமையாளர் என்னைத் தொடர்பு கொண்டால் பீஹாரில் இருப்பதாகத் தெரிவித்தார்.

பின்னால் ஐந்தாறு பவுன்சர்கள் புடை சூழ ஒரு வெள்ளை வேட்டிக்காரர் வந்தார். குழந்தைகளைப் பார்த்து, எதுவும் சொல்லக் கூடாது என கண் ஜாடை காட்டினார்.

“தயவுசெஞ்சு வெளிய போறீங்களா, ஸார்?” என்றாள் நித்யா.

“என்ன எப்படி வெளிய போகச் சொல்லலாம்? இது என் ஏரியா. இங்க எது நடந்தாலும் நான் தான் பொறுப்பு. மினிஸ்டருக்கு நான் தான் பதில் சொல்லணும்” என்றார் வெள்ளை வேட்டிக் காரர்.

“அதுக்கு நீங்க குழந்தைகளப் பார்த்து ஸிக்னல் காட்டி என்கொயரிக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது ஐயா! மேலும் மினிஸ்டருக்கு ரிப்போர்ட் பண்ணணுங்ற பயம் உங்களுக்கு வேண்டாம் ஐயா! நானும் இந்த என்கொயரி முடிந்ததும் மினிஸ்டர் ஸார பாக்கத்தான்  போறேன். நான் ரிப்போர்ட் பண்ணிக்கிறேன்” என்றாள் நித்யா.

வெள்ளை வேட்டிக்காரர் உரும, “அவங்க அஸிஸ்டென்ட் கமிஷனர். நீங்க வாங்க” என்று காவல்துறையினர் அவரைச் சமாதானப் படுத்தி கீழே அழைத்துச் சென்றனர்.

“கதவப் பூட்டத்தான சொன்னேன். அவருக்கு கதவத் தொறந்துவிட்டது யாரு?” என்று கடிந்து கொண்டாள் நித்யா.

“அந்த ஏட்டையா தான் மேடம் திறந்து விட்டார்” என்றார்கள் குழுவினர்.

குழந்தைகள் அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர், அவர்களின் வாக்குமூலத்தின் படி, வேலைக்காக குழந்தைகளை அங்கே கூட்டி வந்தவரையும், தலைமறைவாக இருந்த உரிமையாளரையும் கைது செய்தனர்.  

நீலகிரியில் காவல் ஆய்வாளர் முருகவேல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து, தந்த தகவலின் அடிப்படையில் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டு, மனித உறுப்புகளைத் திருடும் கும்பலைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப் படையினர் முதல் கட்டமாக வெள்ளை மாளிகையை சோதனை செய்யப் புறப்பட்டனர். வாட்ச்மேன் தாத்தா வழக்கம் போல் வாயிலைத் திறக்க மறுத்து, மேலாளரை அழைத்து விஷயத்தைக் கூறினார்.

மேலாளர், மாளிகை உரிமையாளருக்கு விஷயத்தை தெரிவிக்க, அவர் டெல்லியிலிருக்கும் ஒரு பெரிய தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.

அத்தலைவர் தன் உதவியாளரிடம், “ஊட்டி எஸ்.பி.க்கு ஃபோனப் போடுய்யா. என்ன வேலய்யா செஞ்சிக்கிட்டிருக்கானுங்க? நம்மாளு கெஸ்ட் ஹவுஸூல எதுக்குய்யா ரைடு பண்றாய்ங்க?  ஒடனே நிறுத்தச் சொல்லுய்யா” என்றார்.

தலைவரின் உதவியாளர் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, தலைவர் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

தலைவர், “என்னய்யா பண்ணிட்டிருக்காங்க உங்க ஆளுங்க? பெரிய மனுஷங்க கெஸ்ட் ஹவுஸ்ல எதுக்காக ரைடு போய்ட்டுருக்காங்க?” என்று சத்தம் போட்டார்.

“ஹ்யூமன் ஆர்கன்ஸ் கடத்தறதா இன்ஃபர்மேஷன் கெடச்சிருக்கு ஸர். சென்னைல கொத்தடிமையா மீட்கப்பட்ட ஒரு பையன் க்ளியரா விட்னஸ் கொடுத்திருக்கான். மீடியாவெல்லாம் வேற கவனிச்சிட்டு இருக்காங்க ஸர். தப்பா நெனச்சிக்கலன்னா ஒண்ணு சொல்றேன். நீங்க இதுல இன்வால்வ் ஆகாம இருக்கறது நல்லதுன்னு நெனைக்கிறேன் ஸர்” என்றார் எஸ்.பி..

வெள்ளை மாளிகை கேட் போலீஸாருக்கு திறந்து விடப்பட்டது. சுற்றிலும் மின் வேலிகளுடன் இருந்த வெளிப்புற வாயிலைத் திறந்ததும், இடது புறம் செயற்கை நீரூற்று, நடுவில் சதுரக் கற்களுக்கு நடுவே புற்கள் வளர்க்கப்பட்டு, சாம்பல் நிறத்தில் பச்சைக் கட்டம் போட்ட உரோமங்கள் நிறைந்த கம்பளியை விரித்தார் போன்ற நடைபாதை, மாளிகையைச் சுற்றி வளைக்கும் அலங்கார மலர்ச் செடிகள், வாயிலோரம் வாட்ச்மேன் தாத்தா உட்காருவதற்கான ஸ்டூல், அதன் வலது புறம் சற்றே உள்ளடங்கினாற்போல் கண்ணாடிச் சுவர்களுடன் வாட்ச்மேன் தாத்தாவின் அறை.

நடைபாதை முடிவில்   “ஹா…” வென அமானுஷ்யம் நிறைந்த வெள்ளை மாளிகை. வெள்ளைச் சுவர்களின் நடுவே, பர்மா தேக்கினாலும், பெல்ஜியம் கண்ணாடிகளாலும் இழைக்கப்பட்டிருந்தது. மேல்மாடி குட்டையாகவும், கரிய நிற கண்ணாடி ஜன்னல்களுடனும் இருந்தது. அதன்மேலே தலைகீழ் ‘ஆங்கில வி’ வடிவ ஓடுகள் வேய்ந்த கூரை. அதற்கும் மேலே நெடிய புகை போக்கிகள்.  கட்டிடத்தின் வலப்புறத்தில்  “ஸ்காட் அண்ட் ஐரிஸ் மாஸ்” என்று சொல்லப்படும், இளம் பச்சை வெல்வெட் மெத்தை விரித்தது போன்ற பச்சைப் பசும் புல்வெளி.  பார்த்தவுடன் படுத்து உருளத் தோன்றுமளவிற்கு அந்தக் கட்டிடத்திற்கே ஒரு மனங்கவரும் தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

விருந்தினர் மாளிகையின் மேலாளர் வந்து கட்டிடத்தைத் திறந்து விட்டார். கூடம் முழுவதும் கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய பழங்கால கலைப் பொருட்கள், அது ஒரு கலைக்கூடமோ என்றெண்ணும்படியான தோற்றத்தைக் கொடுத்தது.

ஆஸ்திரிய அரச குடும்பங்களுக்கு மரச்சாமான்கள் செய்து கொடுக்கும் ஜோசஃப் டேன்ஹாஸரின் பீடர்மயர் பாணி ஷோஃபாக்களும், வட்ட மேசைகளும், இருக்கைகளும், தரையில் விரிக்கப் பட்டிருந்த பாரசீகக் கம்பளங்களும், மேற்கூரையிலிருந்து தொங்கிய ஸ்பானிஷ் சரவிளக்குகளும் அம் மாளிகையின் செல்வச் செழிப்பை பறைசாற்றிற்று.

அறையை வெப்பமூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நெருப்பிடத்தில் படிகங்களும், கூழாங்கற்களும் பதிக்கப்பட்டிருந்ததாலும், அதற்கு மேலும் புறங்களிலுமிருந்த பெல்ஜிய அலங்காரக் கண்ணாடிகளின் பிரதிபலிப்பாலும் வர்ணஜாலம் காட்டிற்று.

எனினும், அறையின் இருண்ட தோற்றமும், பக்கச் சுவர்களில் மாட்டி வைக்கப்பட்டிருந்த  புலி, காண்டாமிருகம், மான் போன்றவற்றின் டாக்ஸிடெர்மிக் (தோற்பதப்படுத்தும் கலை) தலைகளும் ஏதோ ஒரு பயங்கரத் தோற்றத்தையும், அதன் வர்ண ஜாலங்கள் கூட ஏதோ ஒரு மிரட்சியையும் கொடுத்துக் கொண்டிருந்தன.

பர்மியத் தேக்கு மர சுழற் படிக்கட்டுகளும் கூட கலை நயத்துடன் வடிவமைக்கப் பட்டிருந்தன. அதன் வழியே மேலேறினால், கீழ்த் தளத்துக்கு சற்றும் சம்பந்தமேயில்லாத உயர் தொழில்நுட்ப செறிவுடன் கூடிய தற்கால கட்டுப்பாட்டறை போன்று சுவரெங்கும் பி.சி.ஏ.பி. தொடு திரைகள் (ப்ரஜெக்டிவ் கெபாசிடிவ் டச் ஸ்க்ரீன்ஸ்), கணினிகள் மற்றும் மின்சாதனங்கள்!

கீழ் தளத்தைப் பார்க்கும் போதே எதற்கு வந்தோம் என்பதை மறந்து வாயைப் பிளந்து பார்க்கும் அளவு தனிப் படையினருக்கு கிறக்கம் வந்தது. மாடிக்கு வந்தபோது அது பெரும் குழப்பமாக மாறியது.

”கெஸ்ட் ஹவுஸ்னு சொன்னிங்க. இது ஏதோ மிகப் பெரிய கன்ட்ரோல் ரூம் மாதிரி இருக்கே! என்ன நடக்குது இங்க?” என்று கேட்டார், டி.எஸ்.பி..

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 48) – ரேவதி பாலாஜி

    அவளும் நானும் (குறுநாவல் – பகுதி 4) – சுபாஷினி பாலகிருஷ்ணன்