in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 20) – ஜெயலக்ஷ்மி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அதே பாய், பலகைப் பணிமனை… ஆனால் அதைவிட மிகச் சிறிய அறை! இரண்டு வரிசை பாய்களுக்கு மட்டுமே இடம். நடக்கக் கூட இடமில்லை.  முன்புற ஹாலில் திறந்த நிலையில் நாற்றக் குமட்டலுடன் கழிவறை. அவர்கள் பணிபுரிந்த இடத்திற்கும், கழிவறைக்கும் நடுவிலிருந்த பகுதியில் பெரிய பெரிய தொட்டிகளில் அமிலங்கள் கொதித்துக் கொண்டிருந்தன.  

அதன் நெடி தங்கத்திலுள்ள அழுக்கை கரைக்குமோ, இல்லையோ நுரையீரல் உறையை அரித்துவிடும் போல!  அப்படி ஒரு தாங்கவொண்ணா நெடி! அவர்கள் அமர்ந்திருந்த பாயின் நடுவில் ஒளிபுகும் பாலிதின் பைகளில் வெள்ளைச்சோறு. அதற்குள்ளேயே இன்னும் சிறிய பைகளில் ஒரு குழம்பு!

“இதென்ன கொடுமை!“ என விழிகள் விரித்த போது, “மேடம்! இங்க பாருங்க!“ என்ற அதிர்ச்சிக் கூவல் செவிப் பறையைத் தாக்கிற்று.  

முன்னறைக்கு ஓடினாள்.  பரண் மேலே அவர்களது சுருட்டப்பட்ட படுக்கைகள் என்று நினைத்த இடத்தில், அதனுள்ளே ஒன்றன்மேல் ஒன்றாக நான்கு குழந்தைகள்!

            “ஓ மை காட்! “ இருதயம் படபடக்க கண்கள் கசிய கூவினாள் நித்யா.

            அவர்களையும் கீழிறக்கி கொண்டுவர, “மேடம், இங்கே!”,  “மேடம், அங்கே!“ என இருபத்தைந்து குழந்தைகள்!

            அனைவரையும் அருகிலுள்ள சமூக நலக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். 

            குழந்தைகள் நலக் குழும தலைவரை தொடர்பு கொண்டாள் நித்யா.

            “சார், இருபத்தைந்து குழந்தைகள ரெஸ்க்யூ பண்ணிருக்கோம், எல்லார்கிட்டயும் என்கொயரி முடிச்சி, ரெகார்ட் பண்ணிட்டு அப்புறம் அங்க வந்து ப்ரட்யூஸ் பண்ணனும்னா, ரொம்ப லேட் ஆகும்.  நீங்க இங்க வரமுடியுமா? “ என்று கேட்டாள்.

            “அட்ரஸ் சொல்லுங்க, வர்றேன்“ என்றார்.

            “தேங்க் யூசார்! லோகேஷன் ஷேர் பண்றேன், சார்“ என்றாள்.

            சமூக சேவகர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் உதவியுடன் கோட்டாட்சியர், குழந்தைகள் நலக்குழும தலைவர் முன்னிலையில் குழந்தைகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

            ஒரு சிலருக்கு இந்தியும் புரியவில்லை.  அனைவரும் மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர்களாதலால், வங்காள மொழி மட்டுமே அறிந்திருந்தனர்.

            “சேட்டு, பத்தாயிரம் பணம் கொடுத்து கூட்டிட்டு வந்தார், டிரஸ்ஸூம், செப்பலும் வாங்கி கொடுத்தாங்க, காலையில பத்து பணியில இருந்து இரவு ஒரு மணி வரை வேலை செய்வோம்.  சீசன் டைம்னா விடியற்காலை மூன்று மணி வரை வேலை செய்வோம்“ என்றான் பதிமூன்று வயது பிரேந்தர்.

            பட்டறை உரிமையாளர், வழக்கறிஞர்கள் என நிறைய பேர் வர ஆரம்பித்தனர்.  ஒவ்வொருவரும், “அந்த பையன மட்டும் விடுங்க மேடம்”, “இந்த பையன மட்டும் விடுங்க மேடம்” என நித்தியாவை நச்சரித்தனர். 

            ஒரு பர்தா பெண்மணி, “எனக்கு புருஷனும் இல்ல, என் பையன விட்டுடுங்க. அவனுக்கு வீசிங் வந்துடும்” என்றாள்.

            அந்த பையன்… ‘அமீர்’. அருகிலுள்ள பகுதிலேயே வாழும் தமிழ் பையன்.  ஒன்பதாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெள்ளி பட்டறைக்கு வேலைக்கு வந்திருக்கிறான். 

            ஆனால் அவன் தினமும் வேலைக்கு வருவதாகவும், வேலைக்கு வரும்போது மட்டும் நூறோ, இருநூறோ கூலி வாங்கிக் கொள்வதாகவும் கூறினான். 

            “ஏன் நைன்த் பாதியிலேயே நிறுத்தின? படிச்சது போதுமா?” என்று கேட்டாள் நித்யா.

            “இல்ல, எனக்கு உடம்பு சரியில்ல, லீவு போட்டேன். அதனால திரும்ப ஸ்கூலுக்கு போகல. சில நேரம் அம்மாவுடன் பிஸ்கட் போடுவேன். சில நேரம் மாமாவுடன் இங்கு வேலைக்கு வருவேன்“ என்றான் அன்வர்.

            “வேலைக்கு போனா உடம்பு சரியில்லாம போகாதா? ஸ்கூலுக்கு போனாதான் உடம்பு சரியில்லாம போகுமா? சரி, அம்மா என்ன பண்றாங்க? “ என்று கேட்டாள் நித்யா.

            “அம்மா, பேக்கரியில பிஸ்கட் போடறாங்க” என்றான்.

            “அப்பா என்ன பண்றார்?” என்று கேட்டாள் நித்யா.

            “அப்பா இல்ல“ என்றான்

            அவன் கன்னத்தில் தட்டிக் கொடுத்தவாறு, ”இங்க பாரு அன்வர், திரும்ப ஸ்கூல்ல சேர்த்துவிட சொல்றேன்.  ஒரு வாரம் லீவு போட்டாலே, பாடம் நிறைய சேர்ந்து போயிருக்குமேன்னு, திரும்ப ஸ்கூலுக்கு போக மலைப்பாதான் இருக்கும். நீ இப்ப மாசக்கணக்குல லீவு போட்டுட்ட. பயமாத்தான் இருக்கும். எஸ்.எஸ்.ஏ. கோஆர்டினேட்டர்கிட்ட சொல்லி பிரிட்ஜ் கோர்ஸ்ல சேர்த்து விட சொல்றேன்.  விட்டுப் போன பாடத்த ஸ்பெஷலா சொல்லித் தருவாங்க. அப்புறம் ரெகுலரா ஸ்கூலுக்கு போகலாம்.  நல்லா படிச்சி பெரிய ஆளா ஆகணும்.  இந்த நூறு, இருநூறு இப்ப உனக்கு பெருசா தெரியும். ஆனா, நீ பெருசாக ஆக ஒன்றுக்கும் உதவாது.  உடம்பு வேற சரியில்லனு சொல்ற, உன் ட்ரீட்மெண்டுக்கு கூட பத்தாது.  நீ படிச்சு பெரியாளா ஆனா, நீயும் நல்லா இருக்கலாம். உன் அம்மாவையும் நல்லா பார்த்துக்கலாம். உன் ஜெனரேஷனே நல்லாயிருக்கும் புரிஞ்சுதா? “ என்று கேட்டாள் நித்யா.

            “சரி! “ என்று தலையாட்டினான் அன்வர்.

            “விட்டா அவன தத்து எடுத்துப்பீங்க போல! “ என்றார் கோட்டாட்சியர் சிரித்துக்கொண்டே.

            “ஆமா சார்! “ என்றாள் நித்யா புன்னகையுடன்.

            “இவன மட்டும் பாண்டட் லேபர்ல போட வேண்டாம், சார்! “இவன் ஃப்ரீயா டெய்லி வேஜஸ் மாதிரி வந்துட்டு போறான்.  அட்வான்ஸோ, ஃபோர்ஸ்டு லேபரோ, கன்ஃபைன்மென்டோ கிடையாது“ என்றாள்.

            “ஓகே, மேடம்.  நீங்க சொல்றது தான்! “ என்றார் அவர்.        

மறுபடியும் அவனுடைய தாயார் யாரோ ஒருவரை துணைக்கு அழைத்து வந்து, “என் பையன விடுங்க! இல்லன்னா அவனுக்கு உடம்பு சரியில்லாம போயிடும் டென்ஷனானா வீஸிங் வரும்.  முகமெல்லாம் ரெட் ஆயிடும்“ என்றார்.

            “அவன் நல்லாதான் ஹேப்பியா இருக்கான். உடம்பு சரியில்லன்னு பையன வேலைக்கு அனுப்பி வச்சிருக்கீங்களே! ஸ்கூலுக்குப் போனா உடம்பு சரியில்லாம போயிடும்.  இந்த மாதிரி ஹஸார்டஸ் என்வைரன்மெண்ட்ல வேலைக்கு அனுப்பினா, உடம்பு நல்லாருக்குமா? பையன வேலைக்கு அனுப்பி காசு வாங்கறியே, நீயெல்லாம் பேசாத!  நான் அவனுக்கு நல்லதுதான் பண்ணியிருக்கேன்“ என்றாள் நித்யா.

            அந்தம்மா திரும்பத் திரும்ப “சந்தைக்கு போணும், ஆத்தா வையும், காசு கொடு“ என்ற ரீதியில் “வீஸிங் வந்துடும், மூஞ்சி சிவந்திடும் பையன விடுங்க“ என்று கூறிக் கொண்டிருந்தது!

            “அம்மா, உங்கள விட மேடம் அந்தப் பையன நல்லா பாத்துக்கிறாங்க. ஜுஸ், பிஸ்கட், சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுத்தாச்சு. அப்பருந்து அவனதான் கொஞ்சிட்டிருக்காங்க! விட்டா அவன அவங்களே தத்து எடுத்துப்பாங்க போல! “ என்றார் கோட்டாட்சியர்.

            ஒரு பட்டறையின் உரிமையாளர் வந்து நான்கு குழந்தைகளை விட்டுவிடுமாறு கோரினார்.

            “நீங்க பண்றது நியாயமா?  குழந்தைகளை ஒரு ரூம்ல போட்டு பதினைஞ்சு மணி நேரம், பதினெட்டு மணி நேரம் வேல வாங்கறீங்களே! “ என்றாள் நித்யா.

            “ஊர்ல சோத்துக்கில்லாம கிடக்றவங்கள கூட்டிட்டு வந்து, இங்க சோறு போட்டு வச்சிருக்றது தப்பா? என்றார் அவர்.

            “யாரு இவங்கள கூட்டிட்டு வர்றது? என்று கேட்டாள் நித்யா.

            “நான்தான் கூட்டிட்டு வந்தேன்.  என் ஊரும் அங்கதான் பக்கத்துல. அப்பா இல்லாதவங்க சும்மா சுத்திட்டு திரியறவங்கள தான் கூட்டிட்டு வர்றேன்“ என்றார் அவர்.

            “அப்படி கஷ்டப்படறவங்கள எதாவது ஸ்கூல்ல சேர்த்தீங்கன்னா பரவாயில்ல படிப்பையே கெடுத்து வேலை வாங்கறீங்க, சம்பளமும் கொடுக்கறதில்ல.  எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக்றீங்களே! “ என்றாள் அவள்.

            “அதான் நகை வேல கத்துக் கொடுக்றோமே, மேடம் ரெண்டு வருஷம் வேல கத்துக்கிட்டான்னா… அவனே தனியா வேலை செஞ்சி ஒரு லட்சம், ரெண்டு லட்சம் சம்பாதிப்பான்“ என்றார்.

             அதற்குள் செய்தி கேள்விப்பட்டு பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர். 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 19) – ஜெயலக்ஷ்மி

    பிரச்சினை(கற்)கள் (சிறுகதை) – செந்தில் செழியன்