in ,

கனவுத் தொழிற்சாலை (சிறுகதை) – ✍ ஜெயஸ்ரீ சடகோபன், அமெரிக்கா

கனவுத் தொழிற்சாலை
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 17)

ழக்கம் போல பால் பூத்தை எட்டிப் பிடிக்கும் சமயம், தொலைவிலிருந்து பார்க்கையில், சந்திராவுக்கு ஏதோ வித்தியாசமாக தென்பட்டது

ஞாயிறு அதிகாலை நான்கரைக்கு எங்கோ விடிவெள்ளி தெரிந்தாலும், கரிய போர்வையில் நகர் சுத்தமாய் உறங்கிக் கொண்டிருந்தது

சந்திரா நினைத்தது சரி தான். பால் பூத்துக்கு வெளியே இரண்டு மூன்று பால் வேன் பூத்துக்கு, ஊழியர்கள் பரபரப்பாக பால் பாக்கெட்டுகளை வேன்களின் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள்

“பிடி, பிடி” என சத்தமிட்டபடி, சந்திராவிற்கு பரிச்சயமான பூத் ஊழியன் பாண்டி, பாக்கெட்டுகளை உள்ளேயிருந்த குளிரூட்டும் பெட்டியினின்று வெளியேற்றிக் கொண்டிருந்தான்.

‘என்ன நடக்கறது இங்க? வேன்லிருந்து பாலை இறக்கி உள்ள கொண்டு வர்றது தான வழக்கம். இன்னைக்கி ஏன் வெளியே கொண்டு போறாங்க?’ என சந்திரா யோசனையுடன் பார்க்க

அவள் கேள்வியை புரிந்து கொண்ட அங்கிருந்த முதிய பெண்மணி அவ்வை, சந்திராவிடம் சற்று உரத்த குரலில் சொல்ல ஆரம்பித்தார். சுற்றிலும் இருந்த பால் விநியோகஸ்தர்கள் ஏழெட்டு பேர், அவ்வையையும் சந்திராவையும் சூழ்ந்தனர்

“சந்திரா, பாலில் ஏதோ கலப்படமாம். நேத்து ராவோட வந்த பேட்ச் முழுக்க ஏதோ ரசாயனம் கலந்து, பால் முழுக்க விஷமாயிட்டதாம். குடிச்சா எல்லோருக்கும் கட்டாயம் பெரிய ஆபத்துனு பேசிக்கறாங்க. இன்னைக்கு காலைல யாருக்கும் பாக்கெட் பால் கிடையாது, மூணரைக்கு வந்து இறங்கின எல்லா பாலையும் இப்ப திருப்ப எடுத்துட்டு போக வந்திருக்காங்க. நாமளும் நம்ம ஜோலிய பார்க்க போவம்” என்றார் அவர் 

“ஆங், எல்லோரும் போங்க, போங்க” பாண்டியும் தன் பங்குக்கு எல்லோரையும் கலைந்து செல்லுமாறு சைகை காட்டினான்

சிலர் செல்ல ஆயுத்தமாக, சந்திராவினுள்ளே ஒரு நெருப்புப் பொறி.

விடுவிடுவென கடைக்கு பின்புறமாக சென்று, பின்புற வாயில் அருகில் நின்றபடி, “பாண்டி, பாண்டி” என கிசுகிசுப்பான குரலில் அழைத்தாள் 

குளிர்சாதனப் பெட்டியில் மீதமிருந்த பாக்கெட் பாலை எடுக்க வந்த பாண்டி காதில் சந்திராவின் அழைப்பு விழ அவளை நோக்கி வந்தான்

“ஒரு ரெண்டு பாக்கெட் பாலை எனக்கு கொடு” என சந்திரா கேட்க 

“என்னாது?” என வாயை பிளந்தான் பாண்டி 

“அட, குடு லே! அந்த இழுத்துட்டிருக்கிற தெருநாய் ஞாபகம் வந்திட்டது, அதுக்கு குடுத்துடறேன்” என சந்திரா கேட்க

“ஓஹோ! அதை அனுப்பி விடுவதும் நல்லது தான்” என்ற பாண்டி, உடனே இரண்டு பாக்கெட் ‘விஷ பால்’ எடுத்து சந்திராவிடம் நீட்டினான். 

அதை ‘டபக்’ என்று தட்டிப்பறித்தார் போல வாங்கிய சந்திரா, “எலே… யார்ட்டயும் போட்டு குடுத்திராத, என்கிட்ட பால் கொடுத்த விஷயம் ஆருக்கும் தெரியவேணா” என அதிகாரமாய் சொல்லி விட்டு, இரண்டு பாக்கெட் பாலோடு இருட்டினுள் நடந்து மறைந்தாள் சந்திரா 

சற்றே தோள்களை குலுக்கியவாறு, தன் மீதி ஜோலிய பார்க்க திரும்பினான் பாண்டி 

இதோ, நாலு வீதியை தாண்டி விட்டாள் சந்திரா. இங்கேயிருந்து ஒரு 15 நிமிடம் போனால், ஆசிரியர் வீடு வந்து விடும்

தினமும் சுமார் முப்பது வீட்டுக்கு, நடந்தே சென்று பால் பாக்கெட் விநியோகம் செய்கிறாள்  சந்திரா. அதிகாலை நாலரைக்கு பாக்கெட் வாங்கிக் கொண்டு நடந்தால், கடைசி வீடு வாத்தியாருடையது முடிக்க ஐந்தரை ஆகும்

அதன் பின் வீடு திரும்பினால், மறுபடி எட்டுக்கு வீட்டு வேலை செய்ய கிளம்பி விடுவாள்

வீட்டில் சந்திரா, அவள் கணவன் மயில்சாமி, மகள் அருந்ததி மூவர் மட்டுமே. மயில்சாமி தோட்ட வேலை பார்ப்பவன். ஒரு பெரிய வணிகர் வீட்டில் காலை, மாலை இருவேளை சென்று வேலை பார்த்து விட்டு வருகிறான்

தோட்ட வேலை மற்றும் எடுபிடி வேலைக்கு, மாதம் ஐயாயிரம் வரும்படி அவனுக்கு. அருந்ததி ஒரே மகள், எட்டாவது படித்துக் கொண்டிருக்கும் சிறுமி அவள் 

எல்லாம் சரியாய் சென்றிருக்க, ஏழ்மையிலும் நிம்மதியாய் வாழ்ந்து வந்த சந்திராவுக்கு, சென்ற வாரம் வந்தது சோதனை

கோடை காலத்துக்கு வாய்க்கு ருசியாய் மாம்பழம் தெருக்கு தெரு விற்றுக் கொண்டிருக்க, அருந்ததி எதேச்சையாய் ஒருநாள் சந்திரா வீட்டு வேலை பார்க்கும் வாத்தியார் வீட்டிற்கு ஒரு பத்து மணியளவில் வந்தாள். அந்த சமயம் சந்திரா அடுப்படியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். வாத்தியார் மகளுக்கு வாய்க்கு வேண்டியிருக்கிறது என்று, சந்திராவிடம் மாம்பழ குழம்பு வைக்க அன்று ஆர்டர் ஆகியிருந்தது

வாத்தியார் பெண்டாட்டி மூன்று பெரிய பழுத்த மாம்பழங்களை சந்திராவிடம் கொடுத்து, தோல் நீக்கி குழம்பு வைக்க கொடுத்திருந்தாள். அந்த நேரம் தான் அருந்ததி அம்மாவைத் தேடி சமையல்காட்டுக்கு பின்புறமாக இருந்த சிறிய பால்கனி பக்கம் வந்தாள்

அருந்ததி கண்கொட்டாமல் மாம்பழத்தை பார்ப்பதை பார்த்த சந்திரா, ஒரு பெரிய துண்டு பழத்தை அருந்ததியிடம் நீட்டினாள். அத்தனை நேரம் எங்கேயோ இருந்த வாத்தியார் மனைவி, இவளின் போறாத நேரம் அந்த கணம் சமையல்கட்டுக்கு வந்து சேர்ந்தாள்

சந்திரா மகளுக்கு மாம்பழத்தை நீட்டுவதை பார்த்த வாத்தியார் மனைவி, மோவாய்க்காட்டை தோள்பட்டையில் நிஷ்டூரமாய் இடிக்க, “ஏ, யம்மாடி, உம் மவளுக்கு வேணும்னா சொல்லு, பிறகு வாங்கித் தரேன். வேலை செய்யற வீட்டுக்கு வஞ்சனை இல்லாம, மொதல்ல ஒழுங்கா இங்கே கேட்டதை பண்ணிக் கொடு!” என்றவள், அருந்ததியின் கையில் இருந்த பழத்துண்டை வெடுக்கென்று பறித்துக் கொண்டாள்.

ஒரு நொடி, ஒரே நொடி, அருந்ததியின் கண் கலங்கி விட்டது. அது ஒரு அல்ப மாம்பழ துண்டு தனக்கு கிடைக்காமல் போனதாலா, அல்லது தன் ஏழை அன்னை தன்னால் தலைகுனிந்ததாலா என்று அவள் அன்னை சந்திராவுக்கு புரியவில்லை. 

ஆனால், அதற்குள் அருந்ததி அவ்விடம் விட்டு சிட்டாய் பறந்திருந்தாள்

வாத்தியார் வீட்டில் சந்திரா அவமானப்படுவது அது முதல் முறையல்ல. தாமதமாய் வந்தால் ஒரு சொல், பாத்திரத்தை சரியாய் துலக்கவில்லையெனில், அதுவும் எப்போவோ ஒரு முறை, அதற்கு ஒரு பழிப்பு. தீபாவளி பொங்கலுக்கு புதுசு கேட்டால், அதற்கு ஒரு பொல்லாப்பு, இப்படித் தான் வாத்தியார் மனைவி சந்திராவை நடத்தினாள்

அப்படித் தான் அன்றைக்கு ஒரு நாள், தன் ஐந்து பவுன் சங்கிலி காணவில்லை என வீடு முழுக்க தேடி, அருந்ததிக்கு எதிரே சந்திராவை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினாள் 

சந்திரா எதுவுமே செய்யாவிட்டாலும் நாக்கை பிடிங்கிக் கொள்ளலாம் போல் இருந்தது அவளுக்கு. பிறகு நகை எதேச்சையாய் புழக்கடையிலுள்ள அம்மி அருகில் கிடைத்தது. அதை சந்திரா வாத்தியார் அம்மாவிடம் காட்டிய போது, சந்தேகத்துடன் முணுமுணுத்துக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு விருட்டென்று நடையை கட்டினாள் 

அன்று மாலை சந்திரா வீட்டில் ஒருவருமே உண்ணவில்லை, முக்கியமாய் அருந்ததி. அவள் நன்கு அழுதிருந்தது உப்பிய கண்களிலிருந்து தெரிந்து, இரண்டு நாட்கள் மௌனம் சாதித்தாள் சந்திரா 

அவளுக்கும், அவள் கணவனுக்கும் அருந்ததி தான் கனவுகளின் எஜமானி. ஏழ்மையிலும், அருந்ததி அவர்களுக்கு ஓர் மஹாராணியாகவே தென்பட்டாள். அவளின் முன்னே மீண்டும் மீண்டும் தலைகுனிவு ஏற்படுவதை இவர்களால் ஏற்க முடியவில்லை.

இதையெல்லாம் யோசித்துக் கொண்டே துரித நடை கட்டிய சந்திரா, ‘இன்னமும் ஆறு, ஏழு நிமிடங்களில் வாத்தியார் வீடு வந்துவிடும்’ என இன்னும் வேகமாய் நடந்தாள்

நீண்ட அந்த வீட்டின் சந்து திருப்பம் ஏறத்தாழ வந்து விட்டது. வெளிச்சம் இன்னமும் கொஞ்சம் அதிகம் ஆகியிருந்தது. ஒருசில சுறுசுறுப்பான சேவல்கள் கொக்கரக்கோ கூவின. சைக்கிள்காரர் ஒருவரின் கிணிகிணி சந்திராவை கெஞ்சுவது போல ஒலித்தது, ஆனால் சந்திரா வெகு தீர்க்கமாய் ஒரு நிலைகுத்திய பார்வையோடு பொம்மை போல வேகமாய் நடந்து கொண்டிருந்தாள்

ஒன்றை தீர்மானித்தால் அதை சந்திரா மாற்றிக் கொள்வது மிகவும் துர்லபம். அதற்கு அவள் இளம் வயதில் சந்தித்த சந்தர்ப்பங்களும், எடுத்த முடிவும் சான்று

சந்திராவினுடையது இளம் பிராயத்தில் ஓர் எளிய விவசாய குடும்பம். அவள் தந்தை தஞ்சைக்கு அருகே கிராமம் ஒன்றில் சிறு நிலத்தை உழுது ஜீவித்து வந்தார். தாயும் வயல் வேலை செய்பவளே. பகல் பொழுது முழுதும் கடினமாக வயல் வேலை செய்து, இரவில் கஞ்சியும், கூழும் சாப்பிட்டு உறங்கும் போராளி வர்க்கமே சந்திரா பிறந்த குடும்பம்

தந்தைக்கு சந்திராவின் மீது பாசம் இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். தாய்க்கோ சந்திரா மூத்த மகள், அடுத்த இரண்டு பிள்ளைகள் இருந்ததால், சந்திரா ஒரு எடுபிடி என்ற கணக்கிலேயே தான் வளர்க்கப்பட்டாள். 

அருகில் இருந்த ஆரம்ப பள்ளிக்கூடத்தில் சந்திரா நான்காம் வகுப்பு தேறியதும், அவள் அம்மா அவள் படிப்புக்கு முழுக்கு போட வைத்து, வயல் வேலைக்கு சந்திராவை சேர்த்துக் கொண்டு விட்டாள்.

அனுதினம் வயலில் மாடுகளுக்கு ஏர் பூட்டி உழுவது, வீட்டில் இருந்த மாடுகளுக்கு தீவனம் வைப்பது, வயலில் நாண் அறுப்பது, பயிர் இடுவது, நாத்து நடுவது, பூச்சிக்கொல்லி தெளிப்பது, இப்படி எட்டாவது வயதிலிருந்து இடுப்பொடிய வேலை

தன் எதிர்காலம் குறித்து எந்த வித கனவுகளும் இன்றி,  எளிமையே தன் விதி என்ற ஏழை ஏக்கத்துக்கு சந்திரா பழகியிருந்த சமயம்,ஓர் நாள் சந்திராவின் தந்தையின் செயல் அவளுள் மகிழ்ச்சி பூவை பூக்க வைத்தது.

பெரிதாய் ஒன்றும் இல்லை, அன்று அந்த சீசன் நல்ல விளைச்சல் இருந்ததால், சந்திராவின் தந்தை மகிழ்ச்சியில் இருந்தார். மாலை சந்திராவுக்கு பரிசு கிடைத்தது. ஒன்று கூட இல்லை, இரட்டிப்பு மகிழ்ச்சி, ஒரே நாளில். ஆமாம், சந்திராவுக்கு அவள் அப்பா அவள் அநேகம் காலமாய் கேட்டு துளைத்து வந்த ஒரு அழகிய பூனைக்குட்டியும், கூடவே ஒரு ரோஜா செடியும் வாங்கி வந்திருந்தார். 

சந்திராவுக்கு சந்தோசம் பிடிபடவில்லை. தனக்கென பிரத்யேக அன்பும், கவனிப்பும் சொந்த வீட்டிலேயே கிடைக்காத சந்திராவுக்கு, தன்னை சுற்றி சுற்றி வந்த பூனை ஒரு வித்தியாசமான பொழுதுபோக்காக அமைந்தது. 

பூனையுடன் சேர்ந்து சந்திராவும் பூனை போலவே குதூகலித்தாள். அது மரம் ஏறுவதைப் போலவே இவளும் மரம் ஏறினாள். அதனுடன் சீண்டி, உருண்டு, பிரண்டு குதியாட்டம் போட்டாள். அது செல்லும் இடமெல்லாம் சென்றாள்.

வந்த போது பூக்காமல் இருந்த ரோசா செடியோ, சந்திராவிடம் அழகாய் பூத்தது. இந்த இரண்டு வரவினால் சந்திரா அநேகம் மாறி இருந்தாள். 

ஆம், அவளுக்குள்ளும் கனவுகள் தோன்றின. இரவின் தூக்கத்தில் புன்னகை மலர்ந்தது. ஊர் ஜனங்கள் பூனையின் நிமித்தம் தன்னை அதிகம் கவனிப்பதை ரசித்த சந்திரா, ஓரளவு பிரசித்தமாகவும் ஆகியிருந்தாள். நண்பர்கள் கூட ஆரம்பித்தார்கள்.

இப்படி இருக்கையில் ஓர் நாள், பூனையின் பின்னே ஓடிக் கொண்டிருந்த சந்திரா தன் இரண்டாவது தம்பி தவழும் குழந்தையை கவனிக்க மறந்தாள். பெரிதாய் ஒன்றும் நடக்கவில்லை என்றாலும், அந்த குழந்தை குமுட்டி அடுப்பில் இருந்த பாத்திரத்தை உருட்டி விட்டு, அதில் தன் கையையும் சுட்டுக் கொண்டான். சந்திராவின் அம்மா சந்திராவை பலமாய் ஏச, அதை பொறுத்துக் கொண்டாள் சந்திரா.

ஆனால் அடுத்த நாள் காலை பூனையை நினைத்து எழுந்து கொண்ட சந்திரா விதிர்விதிர்த்தாள். அவள் செல்ல பூனையும் காணவில்லை, ரோஜா செடியும் காணவில்லை. இரவோடிரவாக அவற்றுக்கு அவள் அன்னை ஏறக்கட்டிவிட்டாள்.

“இனிமே நீ எப்பிடி கனா காணறேன்னு பாக்கறேன்” இதுதான் காலை அவள் அன்னை அவளிடம் கூறிய முதல் வார்த்தை.

சந்திராவின் கனா முற்றுப் பெற்றதோ இல்லையோ, அத்துடன் அவள் அன்னையின் கனா முற்றிலுமாய் விடை பெற்றுவிட்டது. அன்று மதிய ரயிலில், ஒன்பது வயது சந்திரா பட்டணம் நோக்கி தனியே சென்று கொண்டிருந்தாள்

அதன் பிறகு, அதிர்ஷ்டத்தின் பேரில் ஒரு குயவணக் குடிலில் தஞ்சம் கிடைத்து, அதிலேயே கஷ்டநஷ்டத்துடன் வளர்ந்து ஆளாகி, இப்போது மணந்து, தாயாகி பாக்கெட் பாலும் வீட்டு வேலையும் செய்து வருவதெல்லாம், ஒன்றும் பெரிய பிரலாபத்திற்கான சங்கதியல்ல

உலகின் தொழிலாளர் வர்க்கம் என்னுள் நீயும் அடக்கம் என சந்திராவை அனுதினம் கடந்தவைகளை எண்ணிப் பார்க்காமல் ஓட வைத்துக் கொண்டிருந்தது

அவள் தன் கனவுகளை அநேகம் இழந்தாலும், புதியதோர் கனவு அவளிடம் வெகுநாட்களாகவே குடி கொண்டிருந்தது. அது தான் அருந்ததி மேலே அவள் வைத்திருந்த எதிர்பார்ப்பு. 

அவளை நன்கு வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்து பட்டதாரியாக்கி, இப்படி தொழிலாள வர்கத்துக்குண்டான சராசரி கனவுகளிலிருந்து மாறுபட்டவை, சந்திராவுக்கு அருந்ததி மீதான கனவுகள்

எட்டாம் வகுப்பு படித்த அருந்ததியும், சந்திராவின் கனவுகளை ஒத்தே படித்தும், செய்கைகள் ஆற்றியும் வந்தாள். அதனாலும், சந்திராவின் பிறவி குணத்தாலும், அருந்ததிக்கு ஏதாவது ஒன்று என்றாலோ, சிறு அவமானம் என்றாலோ சந்திரா கருவுவாள்

அப்படித் தான், மாம்பழ நிகழ்வுக்கும், நகை திருட்டு பட்டத்துக்கும் சந்திரா மறுகாத நாளில்லை.

‘டிங், டிங்’, மறுபடி ஒலித்த சைக்கிள் சத்தம், சந்திராவை பழைய நிகழ்வுகளில் இருந்து மீட்டது. நியூஸ்பேப்பர் விற்கும் பையன், அவளைத் தாண்டி சென்றான். மணி ஐந்தே காலை நெருங்கிவிட்டிருந்தது. 

தெருவெங்கும் நிறைந்த கதிர் ஒளி. தூங்கிக் கொண்டிருக்கும் வீடுகளின் வாசல்களில், ஒருசில மட்டும் புதிதாய் போடப்பட்ட மாக்கோலத்தில் மிளிர்ந்தன. தெருவில் ஈ, காக்கை கூட இல்லை.

என்ன செய்கிறோம், எது செய்கிறோம் என்றெல்லாம் யோசித்துப் பார்க்காத சந்திரா, மெல்ல வாத்தியார் வீட்டு கேட்டை திறந்து உள்ளே சென்றாள். வாத்தியார் குடும்பம் அனுதினமும் ஆறரை மணி தொட்டே முழிப்பார்கள். அதிலும் ஞாயிறு ஏழு, ஏழேகாலுக்கு எழுந்தாலே சீக்கிரம்

எங்கும் விரவியிருந்த நிசப்தம், இது அதிகாலை என்பதை வெளிச்சத்தை மீறி முழங்கிக் கொண்டிருந்தது.

பால் பாக்கெட்டுகளை வாசல் கதவில் தொங்கிய பையில் போட எத்தனித்தாள் சந்திரா

‘ஒருவேளை டி.வி. பார்த்து செய்தியை தெரிந்து கொண்டால்?’ என்ற யோசனை அவளுக்குள் எழாமல் இல்லை. ஆனாலும் நிச்சயம் காலை எழுந்ததும் வாத்தியார் மனைவி பால் காய்ச்சி காபி குடித்து முடித்த பிறகு தான் எதையும் செய்வாள் என்று நிச்சயமாக தெரியும் என்பதால்,  “இன்று உனக்கு இருக்குது” என சந்தோஷமாக முனகினாள் சந்திரா 

கால் பக்கமாக புடவை அசையவே, திடுக்கென்று திரும்பிய சந்திரா, வாத்தியார் வீட்டு வளர்ப்பு நாய் சோமு முழித்திருப்பதையும், பழக்கத்தினால் தன்னருகே வந்து சொந்தம் கொண்டாடுவதையும் உணர்ந்தாள்

‘இவனை எப்படி மறந்தோம்?’ சோமு சந்திராவை நட்புணர்வுடன் நோக்கி, தன் வாலை ஆட்ட துவங்கினான்

அல்சேஷன் வகையை சேர்ந்த நல்ல கருப்பு நாய் அவன். இரண்டு வருடங்களாய் வாத்தியார் வீட்டில் வளர்ந்து வருகிறான். ஏறத்தாழ வாத்தியார் மனைவியின் மற்றுமோர் குழந்தை அவன்

வாத்தியார் வீட்டிலும் சோகங்கள் இல்லாமல் இல்லை. வாத்தியார் மனைவியின் ஒரே மகள் திருமணமாகி ஏழு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கிறாள். மகளின் கணவனுக்கு புத்திர பாக்கியத்திற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டார்கள். 

வார இறுதியில், வாத்தியார் மகள் அன்னை வீட்டுக்கு அநேகம் வந்து விடுவாள். அவளுக்கு நிம்மதி கொடுக்கவே சோமு வாங்கப்பட்டிருந்தான். வேலை நேரம் போக வாத்தியாருக்கும் அவர் மனைவிக்கும், அந்த வீட்டுக்கும் சோமு பிள்ளை இல்லா ஏக்கத்தை மீறி ஒருவித சுகத்தை அளித்து வந்தான்

சந்திராவின் சின்ன வயது பூனை போல, ஒருவேளை அவர்களின் கனவுகளுக்கு சோமு ஓர் தொழிற்சாலை போல 

சந்திராவுக்கு ஏதோ புலப்பட்டாற் போல இருந்தது. சட்டென ஏதோ தோன்றியவளாய் பால் பாக்கெட்டுகளை எடுத்தாள். தன் முந்தானையை ஜாக்கெட்டோடு சேர்த்து பிணைத்திருந்த பின்னை கொண்டு ஒரு பாக்கெட் பாலை ஆத்திரத்தோடு கிழித்தாள். அதை ஜாக்கிரதையாய் கீழே கொட்டாமல் எடுத்து சென்று, சோமுவின் பால் கிண்ணத்தை ரொப்பினாள்

மற்றோர் பால் பாக்கெட்டை எடுத்து, தன் முந்தானையில் தன் இடுப்பை சுற்றி சொருகியிருந்த மடிப்பில் சேகரித்தாள்.

ஓரிரு நிமிடங்கள் நகர்ந்தன. சந்திரா தனக்கு பால் இட்டு பழகியிராத சோமு, முதலில் கொஞ்சம் தயங்கினான். பிறகு வாலை ஆட்டியபடியே, பாலை நோக்கி வேக வேகமாக சென்றான்

ஒரு நிமிடம் தயங்கிய சந்திரா, பின் திடுமென சுய நினைவு திரும்ப, வேகவேகமாக சென்று வெடுக்கென்று சோமுவின் பால் கிண்ணத்தை அவன் வாயை வைக்க யத்தனிப்பதற்குள் பிடுங்கி, பாலை மண்ணில் வீசிக் கொட்டினாள்.

அத்துடன் திரும்பி பார்க்காமல், பொங்கிய கேவலை முந்தானையால் அழுந்த துடைத்துக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்து வெளியேறினாள், அருந்ததிக்கு கஞ்சி கொடுக்கும் நேரம் அவள் காத்திருப்பாள் என்ற எண்ணத்தோடு

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

தேசத் துரோகி (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து

ஒலியற்ற மொழி ❤ (சிறுகதை) – ✍ ஆ.ஆனந்தன், குற்றாலம் சாலை, இலஞ்சி