in

கம்பிகளுக்குப் பின்னால் (சிறுகதை) – ✍ கண்ணன்

கம்பிகளுக்குப் பின்னால் (சிறுகதை)

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

து ஒரு நீண்ட விடுமுறை வாரம்.  

அடுத்து வரும் திங்கள் கிழமை சுதந்திர தினமோ , ஞாபகம் இல்லை. பஷீரின் நண்பர்கள் வந்திருந்தனர். 

“என்ன செய்யலாம்?” என்ற பேச்சு முடிவின்றி நீண்டு கொண்டே போனது. 

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு செல்ல அதிக வோட்டு. 

“பாஸ்டனிலியே ஏதேனும் ஒரு தீவுக்குப் போலாமே” இது நான். 

இப்போது வரை 30 தீவுகளில் ஒரு பத்து தீவுகளையாவது பார்த்திருக்கிறேன். இந்த 10 வருட அமெரிக்க வாசத்தில் நான் கொஞ்சமேனும் சந்தோஷமாக இருந்தது என்றால் இங்கு தான். பாலாறு தேனாறாய் ஓடும் என நண்பன் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்து தொலைக்கிறது. 

தடம் மாறுகிறது, கதைக்கு வருவோம். 

“மலை ஏறலாம்” என்றான் பஷீர். 

“இங்க பக்கத்தில் மலை ஏதும் இருக்கிறதா?” முகமதின் சந்தேகம். 

“இங்க இடாகோவுல மலை ஏறலாம்” என்றான் அசீம். 

“பாஸ்டனிலிருந்து எத்தனை மணி டிரைவ்?” நான். 

“நான்கு ஐந்து மணி நேரம் ஆகும்” அசீம். 

எல்லோருக்கும் இந்த பிளான் பிடித்திருந்தது. பேசிக் கொண்டே தூங்கிப் போனோம். 

விடிகாலையில் இரண்டு கார்களில் பயணம் துவங்கியது. காலையில் ஆறுமணிக்கு இடாகோ. உருளைக்கிழங்கிற்கு பேர் போன இடம். மலையடிவாரத்தில் பல்துலக்கிய பின் ஏறத் துவங்கினோம். 

நான் தான் கடைசியாக. ஆபரேசன் செய்து சில ஆண்டுகளே ஆகின்றதால், மூச்சு விட முடியாமல் திணறினேன். நுரையீரல் வாய் வழியாக வெளியே வந்துவிடும் போல் இருந்தது. இறந்து விடுவேனா எனப்பயம்

பஷுர் கைகொடுக்க ஒரு வழியாக ஏறிவிட்டேன். ஆயிரம் மீட்டர் உயரத்தில் நாங்கள். அற்புதமான நிகழ்வு. அனைவருக்கும் ஏதோ சாதித்து விட்டோம் என்ற சந்தோஷம். 

தன்னந்தனியாக ஒரு கம்யூனிகேஷன் கோபுரம் நின்று கொண்டு இருந்தது. அனைவரும் அதன் கீழே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஏதோ ஒரு டிரக் வண்டி எங்களைக் கடந்து சென்றது. 

கீழிறங்கும் போது சற்றே ஆசுவாசமாக இருந்தது. காலை உணவுக்கு ஒரு சிறிய ஹோட்டலுக்குச் சென்றோம். உருளைக்கிழங்கு வறுவல், சாண்ட்விச், காபியுடன் அருமையான உணவு. 

பக்கத்து ஐஸ்கிரீம் கடையில் அருமையான ஐஸ்கிரீம். அப்படி ஒரு சுவையான ஐஸ்கிரீமைச் சாப்பிட்டதே இல்லை. இன்னமும் நாக்கில் ஊறுகிறது சுவை இத்தனை வருடங்கள் கழித்தும். 

“இங்க பக்கத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தான், அமெரிக்க கனடா எல்லை இருக்கிறதாம் பார்க்கலாம்” என்றான் பஷீர். 

ஆச்சரியமாக மற்றவர்களுக்கும் இதில் ஆர்வம், எனக்கோ மிகவும் பயம். இந்த இமிக்ரேஷன் விஷயங்களில் அடி வாங்கியதால் என்னிடம் எப்போதும் ஒரு ஜாக்கிரதை உணர்வு இருந்து கொண்டே இருக்கும். 

பக்கத்து தோட்டத்திற்குச் சென்றோம். நான் வண்டியிலேயே அமர்ந்து விட்டேன். இவர்கள் மூவரும் காலிங் பெல் அடித்ததும் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அமெரிக்கர் கதவைத் திறந்து வெளியே வந்தார். 

பார்டரைப் பார்க்க அனுமதி கிடைத்த பின், நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன்

வயலில் ஒரு இடத்தில் பிரிவினைக் கோடு போன்ற மரம் செடிகளுடன் சற்றே மேடான இடத்தில் சாலைக் கல் போல் நடப்பட்டு இருந்தது. பஷீரும் , அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 

திரும்பக் காருக்கு வந்து அவருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து கிளம்பினோம். அடுத்த இடம் குறித்து பேசிய படி வண்டி கிராமத்து சாலையில் சென்று கொண்டு இருந்தது. திடீரென போலீஸ் வேனின் சைரன் சத்தம் கேட்டது. அச்சத்தம் வர வர மிகவும் அருகில். அனைவருக்கும் மிகவும் படபடப்பு. கிராம சாலை என்பதால் வண்டிகள் மெதுவாகவே நகர்ந்தன. ஏன் இந்த போலீஸ் வேன் நம்மைப் பின் தொடர்ந்தது வருகிறது? 

அருகில் வந்தவுடன் சைரன் அதிகரிக்க இரண்டு வண்டிகளையும் ஓரம் கட்டி நிறுத்தினோம். அதிகாரி ஒருவர் முதல் காரில் உள்ளவர்களை விசாரித்த பின்னர் எங்களிடம் வந்தார். 

எங்கிருந்து வருகிறோம், எதற்காக இங்கு வந்தோம் என எல்லா விவரங்களையும் கேட்டார். நாங்கள் பயத்துடன் பதிலளித்தோம். எங்களின் டாக்குமெண்ட் அனைத்தையும் வாங்கிப் பார்த்த பிறகு யாருடனோ கைப்பேசியில் பேசினார்

பிறகு எங்களிடம் வந்து, “எனது மேலதிகாரி தங்கள் அனைவரையும் அழைத்து வரச் சொன்னார், வண்டியில் ஏறுங்கள்” என்றார். 

அவரே வண்டியை இயக்கி, அவருக்கு அருகில் நான். காலை நீட்ட இயலவில்லை. அவ்வளவு அசௌகரியம் மிகுந்த பயணத்தை எப்போதும் செய்ததில்லை. சொன்ன போது அவரிடம் எந்த எதிர்வினையும் இல்லை

அவர் “கொலம்பிய நாடு” என்றார். சுமுகமான உரையாடல். 

நாங்கள் “இந்தியா” என்றேன். 

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு போலீஸ் அலுவலகத்தில் இறக்கி விடப்பட்டோம். கால்கள் விரத்துப் போய், தள்ளாடியது எனக்கு. உள்ளறையில் அமர வைக்கப்பட்டோம். 

“நாங்கள் எப்போது வெளியே செல்லுவோம்?” என சற்றே குரல் உயர்த்திக் கேட்டேன். உடனே, கொலம்பியாவிலிருந்து வந்த போலீஸ், வேறு ஒருவரை அழைத்தார். 

அங்கு வந்த ஆப்பிரிக்க அமெரிக்க போலீஸ், “பாதுகாப்பு கருதி, உங்களை செல்லில் அமர வைக்க வேண்டும்” என்றார். 

இரண்டு செல்களில் அடைக்கப்பட்டோம். பஷீர் முதல் செல்லில் இருந்தான். எனக்கு அவன் மீது கொலை வெறியே வந்தது. வேண்டாம் எனப் பல முறை சொல்லியும், இப்படி நம்மை அசிங்கப் படவைத்து விட்டானே என்று அடங்காத ஆத்திரம். 

எனது செல்லில் பஷீர் இருந்திருந்தால், கன்னத்தில் அறைந்திருப்பேன். இனி அவனது அறையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது. வீட்டிற்குத் தெரிந்தால், எவ்வளவு அசிங்கம். இங்கிருந்து வெளியே செல்ல முடியுமா? ஏதோதோ யோசனைகள். 

அதிகாரி வந்து,  “எங்களின் டாக்குமெண்ட் அனைத்தையும் சரி பார்ப்பதாகவும், சர்வர் இணைப்பு சரியாக இல்லாததால், தாமதமாகிறது” என்றார்

நான்கு மணி நேரம் நரகமாகக் கழிந்தது. எந்த மாற்றமும் இல்லை. நான் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தேன். அசீம் கோபத்தின் உச்சியில் இருந்த வாறு, அதிகாரியிடம் பேச வேண்டும் என்றான். 

அதிகாரி வந்ததும், “நாங்களனைவரும் கணினி வேலை செய்பவர்கள், லீகலாக விசாவில் வேலை செய்கிறோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பார்டரைப் பார்க்க ஆர்வத்தில் சென்றோம். எங்களை சீக்கிரம் வெளியே அனுப்புங்கள்” என கணீரென்ற குரலில், சுத்தமான ஆங்கிலத்தில் விவரித்தான். கத்தினான் என்றே சொல்லலாம். 

அதிகாரி வெளியே சென்ற பின், மற்றவர்களுடன் விவாதித்தார். பிறகு, செல்லில் இருந்து எங்களை வெளியே திறந்து விட்டனர். 

டாக்குமெண்ட் அனைத்தையும் மூண்டும் அதிகாரி சரி பார்த்தார். 

என்னைப் பார்த்து, “நீங்கள் குடியுரிமை பெறப் போகிறீர்கள், இனி இப்படி செய்யாதீர்கள்” என்றார். எனக்கு சற்றே பெருமிதம். 

பொருட்களனைத்தையும் சரி பார்த்த பின் ஒப்படைத்தனர். நான் மண்டியிட்டு லேசைக் கட்டும் போதும் துப்பாக்கி என்னைப் பார்ப்பதை உணர்ந்து சில்லிட்டுப் போனேன் 

அதிகாரி எங்கள் அனைவரிடமும் கைகுலுக்கி, “இன்று எங்களை எண்டர்டெயின் செய்ததற்காக நன்றி” என்றார். 

அவருக்குத் தெரியாது, அந்த நாள் எங்கள் வாழ்நாளில் ஒரு கறுப்பு நாள் என்று.  நன்றாகப் பேசிய பின், போலீசிற்குப் போன் செய்த அமெரிக்கப் பெரியவரை, இன்றும் நினைத்திருக்கிறேன் தப்பான காரணத்திற்காக. 

வெளியே இருள் கவ்வ ஆரம்பிக்க, நாங்கள் எங்களுடைய வண்டிகளைக் கிளப்பினோம். 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வனஜா அக்காவின் காதல் (சிறுகதை) – ✍ செல்வா 

    சிட்டுவும் சின்ன தங்க மீனும் (சிறுவர் கதை) – ✍ ஆர்த்தி சுவேகா