சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 23)
“டீ வசந்தி வெள்ளிக் கிழமையும் அதுவுமா என்கிட்ட வாங்கிக் கட்டிக்காமே படுக்கைல இருந்து எந்திரி”
“போம்மா” வசந்தி இன்னும் கொஞ்சம் போர்வைக்குள் குறுக்கி படுத்துண்டா
19 வயசுக்கே உரிய உரிமையான பிடிவாதம், அப்பா வந்து கொஞ்சி எழுப்பணும். அங்கே கோகிலா, வசந்தியோட அம்மா புலம்பிண்டே சமையலறையில் போராட்டம்
“நாலு கழுதை வயசாச்சு, கூடமாட உதவி பண்ணலேனாலும் உபத்ரவம் பண்ணாம இருக்கலாம், தினம் இந்த மணுஷன் போய் அம்மா தாயேனு கொஞ்சணும் அப்ப தான் மகாராணி எந்திருப்பா”
“ஏண்டி கோகி, என்னடி இது என் கன்னத்துல புதுசா சிவப்பு மச்சம்?” கேட்டுண்டே மோகனசுந்தரம் சமையலறையில் நுழைந்தார்
திரும்பி பாத்த கோகிலா அவர் கன்னத்தில ஒட்டி இருந்த சிவப்பு ஸ்டிக்கர் பொட்டை அவசரமா பிச்சி எடுத்தா
“போறுமே சமத்து, கல்யாண வயசுல பொண்ணை வச்சிண்டு எப்ப பார்த்தாலும் பொண்டாட்டி பைத்தியம்” பெருமையும், வெட்கமும் கலந்து வந்தது கோகியின் குரல்.
“இல்லடி நேத்து நீ…”
அவசரமா அவர் வாயை பொத்தின கோகி, “போறும் எல்லாம் விலாவரியா சொல்லணும்னு இல்லை. தூ…கொஞ்சம் கூட வெக்கம் கிடையாது மனுசனுக்கு” குங்குமமா சிவந்தது கோகியோட முகம்
“என்ன காலங்காத்தாலே ரொமான்ஸா?” சோம்பல் முறிச்ச வண்ணம் வசந்தி சமையலறைக்குள் புகுந்தாள்
அப்பா கழுத்தை கைகளால் சுத்திண்டு, “பாருப்பா கோகியை… எப்ப பார்த்தாலும் நாலு கழுதை வயசாச்சுன்றா.அப்ப ஒரு கழுதைக்கு நாலே முக்கால் வயசா? என் வயசுல என்னை பெத்துட்டாளாம், அதுக்கு நான் என்ன பண்ண, என் அப்பா மாதிரி அழகான புருஷன் கிடைச்சா அவசரமா கல்யாணம் பண்ணிண்ட. இன்னும் ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கே”
“ஏய் கழுதை என்னடி வயசுக்கு மீறின பேச்சு, அப்பா கொடுக்கற செல்லம்”. கரண்டிய ஓங்கிண்டு வந்த கோகியின் கைக்கு சிக்காம பாத்ரூமுக்கு ஓடினா வசந்தி
மகளின் பேச்சை புன்முறுவலோட கேட்டுட்டு நின்ன மோகனசுந்தரத்தின் மேல் கையில் நறுக்னு ஒரு கிள்ளு
“ஆவ்”னு கத்தினவரிடம்
“எப்ப பாத்தாலும் கோகி, கோகினு காணாத்தை கண்ட மாதிரி சுத்தி சுத்தி வந்தா குழந்தைக்கு கூட எல்லாம் தெரியறது. போங்க போங்க காலங்காத்தாலே”
“டீ கோகி நீ போங்கனு சொன்னாலே மயங்கிடறேண்டி”
கோகி பொங்கி வந்த புன்னகையை அடக்க முடியாம, “ரொம்ப வழியாதிங்கோ, எனக்கு எப்படியோ இருக்கு. போய் பேப்பர் படிங்கோ, காஃபி கலந்துண்டு வரேன்” சந்தோஷ புன்முறுவலுடன் காஃபி கலக்க திரும்பினாள் கோகிலா
தினசரி பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்த மோகனசுந்தரத்தின் மனம், 27 வருடத்தை பின் தள்ளி முன்னோக்கி சென்றது.
இன்ஜினியரிங் டிகிரி முடிச்சிட்டு ஒரு கம்பெனியில் சேந்து 5 வருடத்தில் ஒரு பொறுப்பான தலைமை என்ஜினியர் பதவி, கை நிறைய சம்பளம்
படிக்க காலேஜில் சேந்தவுடனேயே அப்பா போய் சேந்துட்டார். அவரோட போஸ்ட் ஆபிஸ் உத்யோகத்தினால் வந்த சொல்ப பென்ஷன் ஒரு வீட்ல சமையல் வேலை வருமானத்தில அம்மா சுந்தரி பையனை படிக்க வச்சா
சைதாபேட்டலை ஆறு குடித்தனம் உள்ள பெரிய ஸ்டோர்ல குடித்தனம். கசகசனு நெரிசலான வீடு. ஒரே ரூம் சின்ன சமையலறை, இவ்வளவு தான் இவா போர்ஷன்
பாத்ரூம், கழிப்பறை ஆறு வீட்டுக்கும் பொது. காலை நேரத்தில சாமார்த்தியமா எல்லாம் முடிச்சு, குளிச்சு வெளில கிளம்பறது ஒரு கலை. ஆனா எல்லாருக்கும் அது பழகி போச்சு
பிஸியான ரயில்வே ஸ்டேஷன்ல அத்தனை பெட்டிகளை இடுக்கிண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வரும் கைதேர்ந்த போர்ட்டர் வாழ்க்கைக்கும், இந்த சைதை ஸ்டோர்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தினரின் தினசரி வாழ்க்கைக்கும் ஜாஸ்தி வித்யாசம் இல்லை
ஒரு திங்கள்கிழமை, வழக்கம் போல மோகனன் அவசரமாய் வேலைக்கு புறப்பட்டான்
அம்மா காலை 6 மணிக்கே சமையல் வேலைக்கு புறப்பட்டுடுவா, வெஸ்ட் மாம்பலத்தில ஒரு செட்டியார் வீட்ல சமையல், 12 மணிக்கு மேல தான் திரும்பி வருவா
“நான் தான் இப்ப நல்லா சம்பாதிக்கறேனே, சமையல் வேலைய விடுன்னா கேக்க மாட்ட”
“முடியற வரைக்கும் பண்றேண்டாம்”பா
மோகனன் தன் போர்ஷனுக்கான தகரக் கதவை மூடின்டு புறப்பட்டான். இந்த ஸ்டோர்களில் கதவு பூட்டு இத்யாதிகளுக்கு வேலையே இல்லை.பக்கத்தாத்து பத்து மாமா கிட்ட சொல்லிண்டு புறப்பட்டான்.
பத்து மாமா எப்பவும் ஒரு கட்டை ஈசி சேரில் முன்னால உக்காந்திண்டிருப்பார். வெளில போறவா எல்லாரும் இவர்கிட்ட சொல்லிண்டு தான் போவா
இவருக்கு என்ன புரியுமோ தெரியாது. எல்லோருக்கும் ஒரே ரியாக்ஷன் தான், மோகனப் புன்முறுவல்
திருச்சி மாநகரம் வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கெல்லாம் முழித்து கொண்டது. மெயின் கார்டு கேட் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது
நகர பேருந்துகள் வரிசை கட்டி நின்றன, பஸ் கண்டக்டர்கள் பஸ்ஸின் முன் பக்க படிக்கட்டில் தொங்கின படி, “ஜங்ஷன் ஜங்ஷன்” என கத்தி பயணிகளை கூப்பிட்டார்கள்
கோதண்டபாணி ஐயர் அரக்க பரக்க ஓடி வந்தார், பின்னாலேயே பிச்சுமணி பெரிய சாக்குப்பைகளை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு.
ஐயர் “காந்தி மார்கெட் காந்தி மார்கெட்” னு ஒவ்வொரு பஸ்ஸா சுத்தி வந்தார்.
“ஐயரே பின்னால நீல பட்டை பஸ்ல ஏறு, இது ஸ்ரீரங்கம் பஸ்” ஒரு கண்டக்டர் வழி காட்டினார்
மூச்சு இறைக்க அந்த பஸ்ஸை பிடித்த தண்டபாணி, முன் புற சீட் பிடித்தார். பிச்சுமணி பின்னாலயே ஏறி அவர் பக்கம் உக்காந்தான்
சிரித்த படி இவர்களை பாத்த ஓட்டுனர், “ஐயரே ஏன் பதட்டப்படற? இன்னும் எட்டு நிமிஷம் பொறுத்து தான் புறப்படுவேன். என்ன மார்கெட்டா? காய்கறி தான் இங்கே கோட்டைலயே கிடைக்குமே, ஏன் சாமி மார்கெட் ஓடறே காலங்காத்தாலே?”
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தண்டபாணி, “இல்லை டிரைவர் சார், ஒரு பங்ஷன் சமையல், மார்கெட்ல பிரெஷ்சா சீப்பா கிடைக்கும் அதான்”
டிரைவர், “ஓ சமையக்கார ஐயரா? நல்லது சாமி என்ன இருந்தாலும் நீங்க ஐயமாரு சமையலை அடிச்சிக்க ஆளில்லை, ஒரு ஐயர் கல்யாணத்தில அந்த ரஸம் சாப்பிட்டேன் பாரு, இன்னும் நாக்குல நிக்குதுப்பா. எப்படி சாமி இந்த சேமியா பால் பாயசம் இவ்வளவு ருசி உங்காளுக கையில மட்டும்?
நமக்கு ஒண்ணு ஊட்ல இருக்குதே பிறந்த நாளன்னைக்கு பாயாசம்னு சொல்லி ஒண்ணு காச்சி கொடுத்துச்சு பாரு, நம்ம கருப்பு இன்னும் கோவமா முறைக்குது சாமி. கருப்பு யாருன்றயா? நம்ம செல்லம் சாமி, நல்ல கருகருனு கொச கொச முடியோட என்ன பாத்தா ஓடி வருமே பொம்மராணினு சொல்வாங்களே அந்த ஜாதி” தன் செல்ல நாய் குட்டியின் நினைவில் ஆனந்தமாக மூழ்கிய டிரைவரின் காதில், ‘வீஈஈஈர்’னு கண்டக்டர் விசில் சத்தம் கிழிக்க, ஒரு உலுக்கலுடன் பஸ் புறப்பட்டது
கோதண்டபாணி தன் நினைவில் மூழ்கினார். தில்லைநகர்ல நாளைக்கு சஷ்டியபத பூர்த்தி பங்ஷன், சமையல் சங்கரய்யர் மனைவி தவறிப் போனதால கோதண்டபாணிக்கு இந்த வாய்ப்பு. சங்கரய்யரே இவரை சிபாரிசு பண்ணதுலே கோதண்டபாணிக்கு படு சந்தோஷம்
பெரிய அளவுல பங்ஷன். 1500 இலை விழலாம். ஒரே நேரத்தில 500 பேர் பந்தி AC ஹால். எல்லாம் போக இவருக்கு 15 ஆயிரம் நிக்கும்.சில சமயம் 18 ஆயிரம் கூட கிடைக்கும்
‘இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ளே பாத்திரங்கள எல்லாம் போய் சரி பாக்கணும், கரண்டிகள், கேஸ் இத்யாதி கூட மண்டபகாராகிட்ட கிடைச்சுடும். தனியா வாடகைக்கு வாங்கி தூக்கிண்டு போற அலைச்சல் இல்லை’
‘சமையல் உதவிக்கு 4 பேர், பரிமாற சுத்து வேலைக்கு 6 பேர், பாத்திரம் தேய்க்க ரெண்டு பொம்மனாட்டிகள் போறும். எல்லாருக்கும் சொல்லியாச்சு, காத்தால 7 மணில இருந்து டிபன் செஷன். 12.30ல இருந்து லன்ச்சு, இவ்வளவு தான் நம்ம பொறுப்பு’
‘சமையல் சங்கரய்யர் மாதிரி முழு கான்டிராக்ட் எடுத்தா ஒரு நாள் பங்ஷனுக்கே 35, 40 ஆயிரம் பாத்துடலாம், ஆண்டவன் சித்தம், மாசம் 2 பங்ஷன் கிடைச்சா அடுத்த தைலயே குழந்தைக்கு வரன் பாக்கலாம்’
‘இப்ப தான் மூணு வயசுல மூக்கை ஒழுகிண்டு சாக்லெட்டுக்கு அழுத கோகிலா குட்டியை பாத்த மாதிரி இருக்கு, மளமளனு வளந்து தந்த சிலையாட்டம் நிக்கறா, எந்த பையன் கொத்திண்டு போப் போறோனோ’
கோதண்டத்துக்கு தன் பெண்ணின் பேரில் அசாத்ய பெருமை, கர்வம். ‘படு சூட்டிகை, படிப்பு, கை வேலைகள் எல்லாத்திலயும் நம்பர் 1. சமையலோ ஓகோ, என் பொண்ணாச்சே’
‘இந்த தைக்கு 17 முடிஞ்சு 18. அழகுப் பதுமையான கோகிலாவுக்கு வரன் கிடைப்பது கஷ்டமில்லை, ஆனா என்னை மாதிரி ஒரு சமையல்காரன் கூட எதிர் ஜாமின் கேப்பானே’
‘சே என்ன நினைப்பு, சமையக்கார புத்தி போகாது. என் இளவரசிக்கு நல்லா படிச்ச அழகான பையன் எங்கோ பிறந்திருக்கான், இவ அங்கே போய் ஆட்சி பண்ணுவா’
திடீர்னு காதருகில், “சாமி மார்கெட் வந்தாச்சு தூங்கிட்டயா?”
சத்தத்தில் உலுக்கி போட்டு எழுந்த கோதண்டம், அவசரமாய் பஸ் விட்டு இறங்கினார்
பிச்சுமணி பின்னாலயே ஒட்டிண்டான். நேரா போனா இடது பக்கம் 7வது கடை ‘நேரு மொத்த விலை காய்கறி அங்காடி’
பழனியப்ப நாடார் நல்ல ஆகிருதியான உடல் கட்டோட, ஒரு அடி உயர தேக்கு பலகைல உக்காந்திருப்பார். முன்னால சின்ன மேஜை மாதிரி பள பளக்கும் தேக்குல ஒரு குட்டி மேஜை, பணம் கணக்கு புத்தகம் எல்லாம் அதுக்குள்ளே தான்
நாடார் நல்ல கருப்பு, ஆனால் பளிச்னு இருப்பார். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, நெத்தி நிறைஞ்ச விபூதி, நியாயமான நாணய வியாரிகளில் அவர் ஒருவர்
கோதண்டத்தை பாத்து தன் பளிச்சென்ற பல் வரிசை தெரிய சிரித்த நாடார், “என்ன சாமி எத்தனை இலை? எப்ப?” இது போதும் அவருக்கு. சமையல் மெனு கோடி காட்டினா போதும்
“இன்னிக்கு நைட்டே போயிடணும் 1500 இலை, ‘எஸ் மஹால்’ தில்லை நகர். உருளை காரக்கறி, கோஸ் கூட்டு, வெள்ளரிக்காய் பச்சடி, முருங்கை கேரட் சாம்பார், தக்காளி ரசம். போன தடவை பச்ச மிளகா, கருவேப்பில கொத்தமல்லி கம்மி ஆயிடுத்து, பாத்து போடும்.
தேங்காய் ரொம்ப முத்தலா போட்டுடாதீரும். பிச்சுமணியாண்டே இப்ப ஒரு 20 தேங்காய், இது கொஞ்சம் முத்தலா பர்பிக்கு. கல்லாமை மாங்கா ஒரு 20 இப்பவே போட்டுரும். மத்ததை பலசரக்கோட சேத்து இன்னிக்கு 5 மணிக்குள்ளே அனுப்பிரும்.
நாடார், “சாமி வாழைப்பழம், ஜூசுக்கு அன்னாசி கூட போட்டுடறேன், பலசரக்கு காசிகிட்ட சொல்லிடுங்க 4 மணி டெம்போ தயாரா நிக்கும்னு. நல்லது சாமி பில்லு அப்பறம் வந்து செட்டில் பண்ணுங்க சாமி”
கோதண்டம், இப்ப பழக்கமான காசி நாடார் கடையில் மளிகை லிஸ்ட் கொடுத்துட்டு, மண்டபத்துக்கு ஒரு நடை போய் கடைசியா சரி பாக்கணும். பிச்சுமணி தேங்கா, மாங்கா மூட்டையோட மண்டபத்துக்கு ஆட்டோல வந்துறுவான்
திருச்சி கோட்டைக்குள்ளே தெப்பக்குளம் சுற்றி ஒரு காலத்தில் ஓட்டு வீடுகள் தான் இருந்தன, பெரும்பாலும் கோவில் அர்ச்சகர்கள், கோவிலில் வேலை பார்த்தவர்கள் குடியிருந்தனர்.
இப்போது அந்த ஓட்டு வீடுகள் மெதுவாய் மறைந்து கடைகளாயின, ரெஸ்டாரண்ட் ஆயின. எஞ்சிய ஏழெட்டு வீடுகளில் நந்தி கோவில் தெருவில் ஒன்று கோதண்டத்தோடது, சின்ன தனி வீடு
முன்னால திண்ணை, தாழ்வாரம், இரு சின்ன அறைகள் சமையலறை பின்னால கிணறு பாத்ரூம் , கழிவறை. போறும் 3 பேருக்கு எதேஷ்டம். கோதண்டம், அவர் மனைவி பங்கஜம் அப்பறம் அவா செல்லக் கொழுந்து கோகிலா
17 வயசு முடிஞ்சு தளும்பி நிக்கற கோகிலாவின் ஒரு கடைக்கண் பார்வைக்காக தவமிருந்த இளசுகள், தெப்பக்குளத்தை அடிக்கடி சைக்கிளில் சுற்றி வரும். கோகிலா ஸ்கூல் படிப்போட சரி, ஸ்கூல் பைனலில் பள்ளிக்கே முதல் மாணவியா தேறியும் கல்லூரி படிப்புக்கு அவளை அனுப்பவில்லை, கோகிலாவுக்கும் அது பெரிசா தெரியலே.
கல்யாணம் பண்ணி அனுப்பி விடுவார்கள், தெரிஞ்சது தான். உச்சிப்பிள்ளையார்கிட்ட வேண்டிப்பா, நல்ல புருஷனா கொடுப்பானு
மோகனன் சைதை லோக்கல் ரெயில்வே ஸ்டேஷனுக்கு போய் சேர்றப்பவே மணி 8.30. பார்க்ல இறங்கி சென்ட்ரல் லோக்கல் ஸ்டேஷன் போய், டிரெயின் பிடிச்சு பாடி போறதுக்குள்ளே 9.30க்கு மேல ஆயிடும்
இன்னிக்கு அம்மாவுக்கு கொஞ்சம் முடியலேனு ஒரு சாதம், ரசம் வச்சிட்டு புறப்பட்டதுலே கொஞ்சம் டயம் ஆயிடுத்து. லீவு போட்டுட்டு அம்மா கூட இருக்கலாம், ஆனா அம்மா “வேண்டாம் நீ போ”னு சொல்லிட்டா
ஏதோ யோசிச்சிண்டே ஸ்டேஷன் வந்தாச்சு “சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில், இன்னும் சில நிமிடங்களில் முதல் நடை மேடையை வந்தடையும்” சொல்லி முடிக்கறதுக்குள்ளே மின்சார ரயில் உள்ளே
பிளாட்பாரத்துல நுழஞ்சு நிக்கறதுக்கு முன்னால, மோகனன் நின்ன இடத்துக்கு எதிர்பெட்டில இருந்து இறங்கின ஒரு பெரியவர் தடுமாறி விழப் போக, மோகனன் தாவி நிப்பாட்டினான்
அவர் கைல இருந்த பை, அதிலிருந்து சிதறி விழுந்த கரண்டி இத்யாதிகள் அவர் ஒரு சமையல்காரர் என்பதை காட்டியது. அவர் கையை பிடித்து ஆசுவாசப்படுத்தி ஒரு பெஞ்சில் உக்கார வச்சான்
சிதறின சாமான்களை பொறுக்கி அவர் பக்கம் வைத்து விட்டு திரும்பு முன் டிரெயின் கிளம்பி போய் விட்டது. ‘இனி அடுத்து 10, 12 நிமிஷம் ஆகும், இன்னிக்கு ஃபேக்டரி போனாப்பல தான்’
பெரியவர் பக்கத்தில உக்காந்தவன், “ஓடற ரயில் பூரா நின்ன உடனே தான் இறங்கணும், இல்லைன்னா தடுமாறிடுவோம். ரயில் போற திசைய பாத்து அதே திசைல இறங்கணும்”
இவன் சொன்னதை பூரா கேட்டவர், “நான் திருச்சி தம்பி, சென்னைக்கு புதுசு. இங்க ஒரு கல்யாண கான்ட்ராக்ட் எடுத்திருக்கேன், பாக்க வந்தேன்”
“எந்த கல்யாண மண்டபம் சொல்லுங்க நானே கூட்டிட்டு போறேன்” இது மோகனன்
பெரியவரை லேசா கைத்தாங்கலா பிடித்துக் கொண்டு வெளியே வந்த மோகனன், அருகிலேயே இருந்த மண்டபத்தை அடைய அஞ்சு நிமிஷம். நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாததால், மண்டபம் கதவு மூடப்பட்டு வாசலில் வாட்ச்மேன். விசாரித்ததில் ஆபீஸ் 11 மணிக்கு திறப்பார்கள் என தெரிந்தது
“நீங்க போங்க தம்பி, உங்க வேலையெல்லாம் விட்டு எனக்கு உதவின உங்களுக்கு பெரிய மனசு, நான் காத்திருந்து பாத்துக்கறேன்”ன்னு பெரியவர் சொன்னாலும், மோகனன் மனசு கேக்கலை. எப்படியும் ஃபேக்டரி போக முடியாது
“இல்லை ஐயா, எங்க வீடு இதோ எதிர் வரிசைல தான் இருக்கு, ஒரு 2 மணி நேரம் களைப்பாறி விட்டு வரலாம் வாங்க” அவர் பதிலை எதிர்பார்க்காம நடத்தி வீட்டை அடைந்தான்
உள்ளே நுழைந்த மோகனனை அம்மா சுந்தரி படபடப்புடன் பாத்தா
“என்னடா ஆச்சு ஆபிஸ் போகலையா, உடம்புக்கு என்ன?”
“அம்மா ஒண்ணும் இல்லைம்மா, பாரு கூட ஒரு கெஸ்ட் வந்திருக்கார்”
வெயிலில் இருந்து சட்டென வீட்டுக்குள் வந்ததால் பெரியவருக்கு ஒண்ணும் புலப்படலை, அவரை உற்றுப் பார்த்த சுந்தரி அம்மாளுக்கு எங்கோ பாத்த முகமா தெரிஞ்சது
“யாருடா கண்ணா பெரியவர்? தாக சாந்திக்கு ஜலம் கொடு நிமிஷத்தில இலை போடறேன்”
பெரியவருக்கு மோகனன் பாயை மடித்து போட்டு உக்கார வைத்தான்.
நிதானமாய் அறையின் சூழ்நிலைக்கு கண்கள் பழகியதும் பெரியவர்,”ஏன்பா உங்களுக்கு சொந்த ஊரே சென்னைதானா?”னு கேட்டார்
“இல்லை ஐயா அப்பா கன்யாகுமரி பக்கம், அம்மா திருச்சி பக்கம்”
பெரியவருக்கு உற்சாகம் பற்றிக் கொண்டது. “நம்ம ஊரா அம்மா?”னு சொல்லும் போதே சுந்தரி அம்மாள் இலை எடுத்துக் கொண்டு வந்தார்
அவரை பாத்து “அய்யா நீங்களும் திருச்சியா, பாத்த முகமா தெரியுது” என்றார்.
“ஆமாம்மா சமையல் தொழில் எங்களது, பரம்பரை தொழில். திருச்சில எங்க தாத்தா காலத்தில இருந்து இருக்கோம், மலைக்கோட்டை பக்கத்தில…”
சுந்தரி அம்மாளுக்கு பொறி தட்டியது, “நீங்க பழுவூர் சிதம்பரம் ஐயாவுக்கு சொந்தமா”
“அட அது எங்கப்பாம்மா” பெரியவர் துள்ளிக் குதிக்காத குறை
“நீங்க அப்ப கோதண்டம் அண்ணாவா?” சுந்தரி அம்மா முகத்தில் மத்தாப்பு
“ஆமாம்மா, ஆனா எனக்கு நீ யாருன்னு இன்னும் புலப்படலையே”
“உங்கப்பாவும் என் அப்பாவும் ஒண்ணுவிட்ட அண்ணா தம்பி, நீங்க எனக்கு அண்ணா முறை வேணும். நான் உங்கப்பா இருந்தப்ப ஸ்கூல் லீவுல உங்க வீட்டுக்கு வந்திருக்கேன், நீங்க என்னை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிட்டு போயிருக்கீங்க”
கோதண்டத்துக்கும் பழைய நினைவுகள் நிழலாய் வந்தது
“ஓ அந்த குட்டித் தங்கையா இது? எத்தனை வருஷம் ஆச்சு? தொடர்பே விட்டுப் போச்சே அம்மா” என்றார்
சுந்தரி அம்மாவுக்கு அண்ணனை பாத்ததில் கொள்ளை மகிழ்ச்சி
“இத்துனூண்டா இருந்தே, அஞ்சாறு வயசு இருக்குமா அப்ப உனக்கு? எப்ப பாத்தாலும் பாவாடை நாடா நுனியை எடுத்து வாய்ல வச்சு சப்பிட்டே இருப்பே. கேலி பண்ணினாலும் கொஞ்ச நேரத்தில தன்னிச்சையா திரும்ப பாவாடை நாடா வாய்ல”
கோதண்டம் சொன்னதை கேட்டு வெட்கத்தில் சிவந்த சுந்தரி அம்மா “போங்கண்ணா குழந்தை முன்னால கேலி பண்ணிட்டு”
“இல்லைம்மா பழசெல்லாம் இப்பதான் ஞாபகம் வருது, பொன்மலைல சுவர்ணா டூரிங்க் டாக்கிஸ்ல சினிமா பாத்திருக்கோம் ஞாபகம் இருக்கா? மணலை குவிச்சு அது மேல உன்னை உக்கார வைப்பேன், தங்கவேலு சீன் வந்தா புரியாமயே மத்தவங்க சிரிக்கறப்பல்லாம் நீயும் பக பகன்னு சிரிப்பே, அது கல்யாணப் பரிசு படம்னு நினைக்கிறேன்”
பழைய நினைவுகளில் குழந்தையாய் மலர்ந்தார் கோதண்டம். சுந்தரியும் மீண்டும் அந்த வயசுக்கு போய்விட்டார்
“ஆமாம், நீங்க அப்ப ரொம்ப குறும்பு. நான் லீவு முடிஞ்சு ஊருக்கு புறப்படறப்ப ஊருக்கு போய் தான் திறக்கணும்னு டப்பாக்கு உள்ளே அஞ்சாறு டப்பால பேக் பண்ணி பரிசு கொடுத்தீங்க. ஊர் போய் சேர்ற வரை எனக்கு ஆர்வம். வீட்டுக்குள்ளே நுழைஞ்ச உடனே அவசரமா அதை பிரிச்சா, பெட்டிக்குள்ளே பெட்டி. கடைசியா கிடைச்சது வெள்ளையா 2 அடி நீள பாவாடை நாடா”
நீண்ட நெடும் பிரிவுக்கு பின் சந்தித்து சந்தோஷிக்கும் உறவை பார்த்து, மோகனனுக்கும் குஷி தொற்றிக் கொண்டது
அண்ணனும் தங்கையும் விட்டுப் போன வருடங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
அப்பா போனவுடன், படிப்பை பாதியில் நிறுத்தி, கரண்டியை கையில் தூக்கியது, பங்கஜத்தோட கல்யாணம், ஒரே கண்ணான பெண் கோகிலா அவளுக்கு கல்யாணத்துக்கு வரன் தேடற வரை சொல்லி நிப்பாட்டினார்
சுந்தரியும், தான் தனியாளா சமையல் வேலை செய்து பட்ட கஷ்டங்கள், மோகனனை படிக்க வைத்தது, அவன் தன் கஷ்டத்தை உணர்ந்து படித்து நல்ல வேலையில் இருப்பது வரை சொல்லி முடித்தார்
”ஏண்ணா உங்களுக்கு எங்க ஞாபகம் ஏன் வரலை? உன் பொண்ணுக்குனு என் பையன் பிறந்திருக்கப்ப, வெளில பையன் எப்படி கிடைப்பான். என் பையன் இந்த காலத்து பசங்க மாதிரி இல்லை, நான் சொன்னா கேப்பான். ஆமாம் உன் பொண்ணு லட்சணமா இருப்பாளோன்னோ”
மோகனனுக்கு, ‘பெண்ணை பாக்காமலே இப்படி அம்மா பேசறாளே’னு இருந்தது
“இன்னிக்கு நைட் திருச்சி போயிடுவேன், முடிஞ்சா ஞாயித்துக்கிழமை ஒரு நடை வாங்கோளேன் பங்கஜமும் சந்தோஷப்படுவா. உன் மருமா எப்படி இருப்பானு நீயே பார்த்துக்கோ, பகவத் கிருபை இருந்தா மேல் கொண்டு நடக்கட்டும்” என்றார் கோதண்டம்
மோகனன் இது வரை தன் திருமணத்தை பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. வேலையில் முழு கவனமாய் இருந்து விட்டான், இப்போது தான் ஒரு கிளர்ச்சி வந்தது
தனக்கு மனைவியாய் இந்த கோதண்டம் மாமா பெண் அமைவாளா? அவள் பெரிய கட்டுப் பெட்டியா இருப்பாளோ? அடுக்கடுக்காய் கற்பனைகளுடன் அடுத்த மூன்று நாள் கழிந்தது
மெதுவாய் அம்மாவை கேட்டான் மோகனன், “ஏம்மா திருச்சி போயே ஆகணுமா?”
“நான் எப்படா சொன்னேன்” இது அம்மா, மகனின் ஆர்வம் புரியாத மாதிரி
“இல்லை உன் அண்ணா அவ்வளவு வற்புறுத்தி கூப்டாரேனு கேட்டேன். எனக்கும் ரெண்டு நாள் சேந்தாப்பல லீவு வர்ரதா அதான்”
“ஏய் திருடா கோகிலாவை பாக்க அவ்வளவு அவசரமா? சரி போயிட்டு வரலாம், உனக்கு ஒத்து வருமா பாரு எனக்காக வேண்டாம்”
“சரிம்மா என் பிரண்டு காரை கேட்டிருக்கேன், இன்னும் ஒரு மணி நேரத்தில கொண்டு வந்துடுவான், தயாராகு”
“அடப்பாவி எல்லாம் தயார் பண்ணிட்டு தான் இவ்வளவு டிராமா பண்ணினயா?” விளையாட்டாய் கையை ஓங்கினாள் சுந்தரி
மோகனன் சிரித்துக் கொண்டே திருச்சி போக தயாராகி பழங்கள், இனிப்பு வகைகளை வாங்கி வந்தான்
சரியாக அன்று சாயந்திரம் 5 மணி அளவில் திருச்சி நகரை அடைந்தார்கள். அதிகம் தேடித் திரியாமல் வீட்டு வாசலில் அந்த பெரிய கார் நின்றது
எதிர்பார்த்து காத்திருந்தது போல வாயெல்லாம் பல்லாக, “வாங்கோ, வாங்கோ”னு கோதண்டம் வாசலுக்கே வந்தார்
“பயணம் செளகரியமா இருந்ததா? முதல்ல பாத் ரூம் போய் ஃபிரஷ் ஆயிட்டு வாங்கோ. இன்னும் ரெண்டு மூணு பேர் வரணும், அப்பறம் மத்த சம்பிரதாயங்களை வச்சிப்போம்”
மோகனன் அம்மாவை ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தான், மர்ம சிரிப்போட அம்மா சொன்னா, “பொண்ணு பாக்கறதுன்னா சும்மாவா? என்ன தான் அண்ணாவா இருந்தாலும்”
“டீ பங்கஜா அவாள்லாம் வந்துட்டா பாரு” கோதண்டத்தின் குரலில் என்றுமில்லாத உற்சாகம்
அது பழைய காலத்து அக்கிரஹாரம் வீடு. முதல்ல வாசலுக்கு ரெண்டு பக்கமும் சின்னதா திண்ணை காவி, வெள்ளை பட்டையுடன். நல்ல 6” கனத்தில் ஒத்தைக் கதவு தேக்கு மரத்தில், அவ்வளவு கனமான கதவு வெண்ணையாய் மூடும், திறக்கும் (அலிகார் கீல்கள்)
நுழைந்தவுடன் பெரிய ஹால், வலதுபுறத்தில் திறந்த வெளிமுற்றம். இந்த முற்றம் தவிர மற்ற இடங்களின் தலையை மறைக்கும் மங்களூர் ஓடுகள். கான்கிரீட் பில்லர் எங்கும் இல்லை, மரத்தூண்கள் தான்
ஹாலை தாண்டினால் இடது பக்கம் விசாலமான தளிகை அறை. நாலு அடி அகல நடை பின்னால் செல்ல, வலது பக்கம் ரெண்டு அறைகள். நடையை கடந்து போனால் பசுமை, கிணறு, குளியல் அறை, கழிவு அறை
இந்த வீட்டை வாங்க கோட்டை ஜவுளிக்கடை சேட்டுகளுக்குள் போட்டி. ஆனால் கோதண்டம் இது வரை மசியவில்லை
தளிகை அறையில் இருந்து பசுநெய் வாசம் அந்த மலைக்கோட்டை பிள்ளையாரைக் கூட எட்டி இருக்கும். பங்கஜத்தோட கைப் பக்குவம் அவ்வளவு பிரசித்தி
சுந்தரி இயல்பா சமையலறையில் நுழைந்து பங்கஜத்துக்கு சங்கோஜத்தை வரவழைத்தார்
“என் அண்ணா ஆத்துக்கு தானே வந்திருக்கேன், ஏன் இவ்வளவு தடபுடல்”னு கேட்ட சுந்தரிக்கு
“ஆனாலும் பெண் பாக்கற சம்பிரதாயம் சேந்திருக்கே”னு வெட்கப் புன்முறுவலுடன் பதில் கொடுத்த பங்கஜமே அவ்வளவு அழகு
சுந்தரிக்கு கோகிலாவை பாக்க ஆவல், ஆனா “அவ தன் அறையில் அலங்காரம் பண்ணின்டிருக்கா வந்துடுவா”னு சஸ்பென்ஸ் வைத்தார்கள்
சுந்தரி நினைத்துக் கொண்டார், பங்கஜத்தோட 60, 70% இருந்தா கூட போதும்னு. ஹாலில் கை கால் கழுவி ஃபிரெஷ் ஆகி மர சோபாவில் உக்காந்திருந்த மோகனனுக்கோ, பெண் பார்க்க வந்ததே ஒரு வினோத அனுபவம்
சொல்லத் தெரியாத உணர்வு வயிற்றில் புரண்டது, மெதுவாக ரெண்டு மூணு ஜோடிகள் வீட்டில் நுழைந்தனர். உறவோ நட்போ தெரியாது. ஆண்கள் ஹாலில் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். பெண்கள் இயல்பாய் ஒரு பாய் எடுத்து விரித்து கீழே அமர்ந்தனர்
பங்கஜம் வெளியே வந்து ஓரிரு வார்த்தைகள் புன்னகையுடன் பேசி விட்டு உள்ளே போனா. கோதண்டம் ஆண்களுடன் அரசியல் பேசினார். மோகனன் தனிமையாக உணர்ந்தான்
“மாப்பிள்ளை என்ன பண்றார் சென்னைல? வீடு இருக்கா, நிலம் இருக்கா எப்படி சொந்தம்?” எல்லாம் ஒருத்தொருக்கு ஒருத்தர் டிஸ்கஷண்
அந்த நேரமும் வந்தது. பங்கஜம் பின் தொடர, ஒரு வெள்ளித்தட்டில் தங்க நிற கேசரி தட்டுகளுடன் தங்க மங்கையாய் கோகிலா அன்னமாய் வந்தாள்
தொடர்ந்து வந்த சுந்தரியின் முகத்தில் பொங்கி வழியும் பெருமிதத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.
மோகனன் கூட இப்படி ஒரு அழகான கோகிலாவை நிஜமா எதிர்பார்க்கலை, அதை அவன் முகம் காட்டியது. கடைக் கண்ணால் அவன் முகத்தை பாத்த கோகி உடனே மனதுக்குள் ஒப்புக்கொண்டாள்
‘நடிகர் ஜெய்சங்கர் மாதிரி இருக்காரோ?” கோகி ஒப்பிட்டாள்
மீண்டும் கடைக்கண்ணால் பாத்த கோகிலா, ‘ஜெய்சங்கரை விடக் கூட நல்லா தான் இருக்கான் (ஐய்யோ தப்பு இருக்கார்)’
“பெண்ணுக்கு பாடத் தெரியுமோ?” வந்திருந்தவர்களில் ஒரு பெண்
பங்கஜம் சங்கடமாய் நெளிந்தாள். “இல்லை சிட்சை ஒண்ணும் இல்லை, ஸ்வாமி ஸ்லோகம் சொல்லுவா”
கோகி துடுக்காய், “சினிமா பாட்டு கூட வரும்” மிருதுவாய் சொன்னாள்
சுந்தரி உடனே சப்போர்ட்டுக்கு வந்தாள். “இப்ப என்ன கச்சேரியா பண்ணப் போறா? இனிமையா ஸ்லோகம் சொல்லுமாமே அது போறும்”
பங்கஜத்துக்கு இப்ப மூச்சு நிதானமா வந்தது
“பையன் சாருக்கு பொண்ணு பிடிச்சிருக்கோன்னோ?” இது ஒரு மாமி
மோகனன் அந்த மாமியை பாத்து புன்னகைத்தான், ‘இந்த பொண்ணை பிடிக்கலைனு சொல்ல பைத்தியமா என்ன’ன்கிற மாதிரி
இப்ப சுந்தரியோட முறை, “பொண்ணுக்கு என் பையனை பிடிச்சிருக்கோ?”
கோகி முகம் ரத்தமாய் சிவந்தது, தலையை மெதுவா தூக்கி மோகனனை பாத்து கள்ளத் தனமா ஒரு புன்முறுவல். உடனே சட்னு எழுந்து உள்ளே ஓடி விட்டாள்.
கோதண்டம், “ஆச்சு… லெளகீக விஷயம் பேசலாம். என் உறவு முறை தங்கை பையன் தான் ஆனாலும், என் சக்தியை சொல்லிடணும். பையனுக்கோ அவன் அம்மாவுக்கோ ஏதாவது எதிர்பார்ப்புகள் இருந்தா சொல்லலாம், சக்திக்கு தகுந்தாப்பல பண்ணறேன்”
சுந்தரி சட்னு இடைமறித்தாள், “எங்களுக்கு பொண்ணு மகாலட்சுமியா எங்காத்துக்கு வந்தா போறும். கல்யாணம்னா பையனோட ஆபீஸ்காரா மரியாதை பட்டவா வருவா, அவா தங்க இடம் வாய்க்கு ருசியா சாப்பாடு இது போறும். வேற ஒண்ணும் வேண்டாம்”
நெகிழ்ந்து போன கோதண்டம், “அப்படி இல்லை, பொண்ணுக்கு ஆறு பவுன் போட சக்தி இருக்கு. பையனுக்கு மோதிரம், சங்கிலி சிறுசா போட ஆசை இருக்கு. சூட் வாட்ச், போக கல்யாணம் நன்னா பண்ணுவேன். ஆண்டவன் கிருபை இருந்தா, இப்பவே தட்டு மாத்திக்கலாம். சீக்கிரமா ரெண்டு மாசத்துக்குள்ளே முகூர்த்தம் வச்சிடலாம்”
எல்லாருக்கும் மன நிறைவு. கேசரி, பஜ்ஜி இப்ப படுருசியா உள்ளே போனது. மோகனனுக்கு மட்டும் கோகிலாவோட ஒரு ஐந்து நிமிஷம் பேச ஆசை. அம்மாகிட்ட மெதுவா சொன்னான்
கோதண்டம் தன் வருங்கால மாப்பிள்ளையை அப்பப்ப பெருமையாக பாத்துண்டு இருந்தார். அம்மாவிடம் அவன் சொன்னதை புரிந்து கொண்டார்
“இரும்மா சுந்தரி, கோகிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்”னு குடு குடுன்னு உள்ளே ஓடினார்
ஐந்தே நிமிஷத்தில் திரும்பி வந்த கோதண்டம், “மாப்பிள்ளே… நீங்க நம்ம சின்ன தோட்டம், கிணத்தடி பாத்ததில்லையே, நடைல நேரா போங்கோ கோகி காட்டுவா தன் தோட்டக் கலை திறமையை”
சங்கோஜத்தோட புறக்கடை நோக்கி நடந்தான் மோகனன். ரெண்டு குட்டை தென்னை, ஒரு மாமரம், மற்றபடி மல்லிகை, சின்ன காய்கறி பாத்திகளுடன் பசுமை படர்ந்திருந்தது
கிணறு, துணி துவைக்கற கல் அதன் மேல் ராணியாக கோகிலா. இவன் பக்கத்தில் போனதும் குனிந்த தலை நிமிராமலே எழுந்தாள். அவள் தோள்களில் இரு கை மிருதுவாக வைத்து மீண்டும் அமர்த்தினான் மோகனன்
“உன்னை கோகினு கூப்பிடலாமா? உனக்கு என்னை பிடிச்சிருக்கா? என்னை கல்யாணம் பண்ணிப்பயா?”
சட்டென தலை நிமிர்த்தி, “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? முதல்ல சொல்லுங்கோ” பளிச்சென கிளி கொஞ்சியது
“பிடிச்சதால தானே வந்து பேசறேன், இப்ப நீ சொல்லு” இது மோகனன்
“எனக்கு பிடிக்கலைனா என்ன செய்வேள்?” இது கோகி
“என்ன செய்ய முடியும், நமக்கு கொடுத்து வைக்கலைனு புறப்படுவேன்”
“ஐய்யோ அந்த பாவம் எனக்கு வேண்டாம். அத்தையை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அதனால கல்யாணம் பண்ணிக்கறேன்”
மோகனனுக்கு அவள் கள்ளச் சிரிப்பு புரிந்தது, “அப்ப என்னை பிடிக்கலை தானே, உள்ளே சொல்லிடறேன் உங்கப்பா கிட்ட. உங்க பொண்ணு மனசுல வேற யாரோ இருக்கா அதனாலே”னு இழுத்தான்
மளுக்னு கண்ணில் முத்தாய் கண்ணீருடன், அவன் மணிக்கட்டை பற்றிக் கொண்டாள்
“ஏன் இப்படி தப்பு தப்பா பேசறேள்? என் மனசுல யாரும் இல்லை, உங்களை மாதிரி நான் பேச முடியுமா? நீங்க வேண்டாம்னா இந்த மலைக்கோட்டை பிள்ளையாரை சேவிச்சிண்டு இங்கேயே இருந்துடுவேன்”
மோகனன் உரிமையாய் அவள் கண்களை துடைத்தான், “அசடு நீ தானே என் அம்மாவை பிடிச்சிருக்குன்னே, அப்ப அவங்க தானே உன் மனசுல”
கோகி சொன்ன, “போங்க” நாதமாய் ஒலித்தது
“சரி அப்ப சீக்கிரமா நம்ம முதல் இரவில் பாத்து மீதியை வச்சிப்போம், இப்ப வரட்டா?” சட்னு குனிந்து கோகியின் சிவந்த கன்னத்தில் முத்தமிட்டு உள்ளே திரும்பினான்
அன்று இரவே சென்னை திரும்பியாச்சு. அடுத்த 15 நாளில் நல்ல நாள் குறித்து முகூர்த்த பத்திரிகை எழுதி கொண்டு வந்தார் கோதண்டம்
“இன்னும் 20 நாள்ல நல்ல முகூர்த்தம், உங்க சவுகரியம் சொன்னா மண்டபம் பேசிடுவேன். மத்த வேலை கழுத்தை நெறிக்கும். பத்திரிக்கை அடிக்கணும், மாப்பிள்ளைக்கு சூட் தைக்க கொடுக்கணும்” மூச்சு விடாமல் பேசினார்
“அண்ணா உங்களுக்கு செளரியமான நாள்ல முகூர்த்தம் வைய்யிங்கோ, எங்களுக்கு பிராப்ளம் இல்லை. உங்க மாப்பிள்ளையை கூட்டிண்டு போய் டிரஸ் தைக்க கொடுங்கோ” சுந்தரி சிரித்துக் கொண்டே சொன்னாள்
அந்த நாளும் வந்தது. ஒரு மினி பஸ், நண்பர்கள், கூட வேலை செய்யும் சிலர், அம்மா, ஆக 26 பேருடன் திருச்சி போய் இறங்கியாச்சு. செளரியமான பெரிய சத்திரம் பொன்மலைல, எல்லாரும் தங்க பெரிய பெரிய அறைகள்
கோதண்டம் இவர்களை வேளாவேளை கவனிக்க மூன்று ஆட்களை வைத்திருந்தார். மாப்பிள்ளை அழைப்பு, கல்யாணம், வெகு விமரிசை.
கோதண்டம் கைமணத்தில் சாப்பாடு கேக்கவா வேணும், அமக்களப்படுத்திட்டார், சிஷ்யகோடிகளை வச்சிண்டு. கல்யாண மேடைக்கும் சமையல் கட்டுக்குமா அவர் ஓடினது பாவமா தான் இருந்தது
சும்மாவே ஜொலிக்கிற கோகிலா, கல்யாண கோலத்தில் ரம்பை, ஊர்வசி, மேனகைக்கு சவால். ஒரு வழியா கல்யாண அமக்களம் முடிஞ்சது
முதல் இரவு அந்த சத்திரத்திலேயே மாடி அறையில். அலங்கரிக்கப்பட்ட கட்டில் மேல் அமர்ந்து காத்திருந்த மோகனன், உள்ளே அனுப்பப்பட்ட கோகிலாவை பாத்து திகைத்துப் போனான்
சாதாரண பருத்தி சேலையில் கூட கோவில் சிலையாய் பால் சொம்புடன் நின்றாள். சொம்பை மேஜையில் வைத்து விட்டு, சம்பிரதாயப் படி மோகனனின் காலில் விழுந்த கோகிலாவை தோளை பிடித்து கட்டிலில் உட்கார வைத்தான்
“இப்ப சொல்லுடி என் பொண்டாட்டி, என்னை பிடிச்சிருக்கா?”
தலைகுனிந்தபடியே, “பிடிக்கலைனா என்ன செய்வேள்?”
“உனக்கு பிடிக்கற மாதிரி என்னை மாத்திப்பேன்”
“எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அது வந்து உன்னை கேட்டு தெரிஞ்சிப்பேன், சரி இப்ப சொல்லு உனக்கு என்ன பிடிக்கும், யாரை பிடிக்கும்?”
சட்டென சுட்டு விரலால் அவன் நெஞ்சை தொட்டுவிட்டு ரெண்டு கைகளாலும் கண்களை மூடிக் கொண்டாள் கோகிலா
“திருட்டு கொட்டு, மனசுல ஆசை இருக்கு, ஆனா வாய் திறந்து சொல்ல மாட்டே, அப்படித் தானே?” என்று அவள் கைகளை பிடித்தான் மோகனன்
அவளுடைய இன்ஸ்டண்ட் “போங்க” ரியாக்ஷன், அவன் உள்ளத்தை கொள்ளை கொண்டது
“சரி அப்பறம்”னான் மோகனன்
அவன் முகத்தை பார்த்த கோகிலா, “அப்பறம் என்ன?” என்றாள்
“நீ கல்யாணப் பரிசு படம் பாத்திருக்கயா? அதுல வர சரோஜாதேவியை எனக்கு பிடிக்கும், அவ பேரு அதுல வசந்தி. எனக்கு பெண் குழந்தை பிறந்தா வசந்தி தான் பேரு”
“அய்யே அதுக்கென்ன இப்ப?”
“இல்லை வா படுத்துக்கோ, வசந்திக்கு முயற்சி பண்ணுவோம்”னு அவள் சிவந்த முகத்தை கையில் தாங்கினான் மோகனன்
சோபாவில் சாய்ந்து 27 வருடம் பின்னால் சென்ற மோகனன், சட்னு நிகழ் காலத்துக்கு வந்தார். இப்ப கோதண்டம் மாமா, பங்கஜம் மாமி, அம்மா யாரும் இல்லை.
திருச்சி வீட்டை சேட் குழையடித்து வாங்கி விட்டார். அந்த பணம் மாம்பலத்தில் பெரிய பங்களாவாக இதோ இப்ப இருக்கற வீடு
சுஸ்ரீ (இந்த கதையின் ஆசிரியர்): அடடா பாத்தீங்களா வசந்தி கதை சொல்ல நினைச்சு மோகனன் கோகிலா கதைக்கு போயிட்டோம், சரி இன்னொரு சமயம் அதை சொல்றேன். வர்ட்டா…
(முற்றும்)
#ads – Best Deals in Amazon Deals 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
Super story காலங்களில் அவள் வசந்தம். மனைவியை ஆராதிக்கும் கணவன். எந்த விஷயம் சொல்ல வந்தாலும் மனைவியின் புகழ் பாடியே முடியும். 😀
Fantastic story
சுந்தரி பங்கஜம் கோதண்டம் மோகனன் கோகிலா வசந்தி என்று 6 கதாபாத்திரத்தை வைத்து அருமையான கதை
சுஶ்ரீன் காலங்களில் அவள் ஒரு வசந்தம்
வெகு நாட்களுக்குப் பின் ஒரு குடும்பக் கதை காதல் தழும்ப படிக்க கிடைத்தது. சிறப்பு
நல்ல கதாபாத்திரங்கள். அருமை. சுவையான கதை. வாழ்த்துகள்
மிக்க நன்றி உங்கள் பதிவு என்ஊனை க்குவிக்கிறது
Revisited good old days with koki-mohanan fmly. Enjoyed every bit of the story- kalangalil aval vasantham. 💐💐 story was a walk in the breeze. Best wishes author 👍❤
மிக்க நன்றி உங்கள் ஆதரவு மேலும் சிறப்பாக எழுத தூண்டுகோல்