ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
தாவ் கிரகத் தலைவர்களின் சில பல கட்டுப்பாடுகளுக்கு அதிரூபன் சம்மதம் தெரிவிக்க, அவன் யுவாவிற்குச் செல்லப் போவது உறுதியானது.
அவன் தனது வலது உள்ளங்கையை இடக்கை விரல்களால் வருடவும், அவன் கையிலிருந்து ஒரு தொடுதிரை மேலே தோன்றியது. அதை இடக்கை ஆட்காட்டி விரலால் எடுத்து தனியே அந்தரத்தில் மிதக்க விட்டவன், அங்கிருந்தோர் அனைவரையும் விளித்து, அந்தத் திரையைக் காண்பித்து, “சிருஷ்டி யுவாக்கு போனதுக்கு அப்பறம் அவ இந்த இடத்திலிருந்து தான் நமக்குத் தகவல் அனுப்பினா. அதனால் என்னோட தேடலை நான் அங்க இருந்து தான் ஆரம்பிக்கப் போறேன். அப்பா, நானும் இங்க தான்… இந்த இடத்துக்குத் தான் போகணும்” என்று கூறியதும்
சில்வானசோ தன் வலக்கையில் அணிந்திருந்த கையுறையைக் கழற்றிவிட்டு, தனது ஆட்காட்டி விரலால் காற்றில் வட்டம் வரைந்தார். அவ்வட்டத்தின் உட்புறம் மட்டும் கருமையாக, அதனைச் சுற்றி வளையமாக நெருப்பு பற்றியது.
அனைவரையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன் சிறிதும் யோசிக்காது அந்த நெருப்பு வளையத்திற்குள் புகுந்தான் அதிரூபன்.
*****
மணிக்கு பல்லாயிரக்கணக்கான வேகத்தில் வானத்தில் இருந்து மேகத்தைக் கிழித்துக் கொண்டு தரை நோக்கி வந்து கொண்டிருந்தது அந்த விமானம். அந்த விமானத்தில் பல்வேறு சிந்தனைகளின் வயப்பட்டிருந்த அவனோ, மீண்டும் அவ்வளவு சீக்கிரமாக வளநாட்டிற்கு வருவோம் என்று எண்ணவில்லை.
அதிலும் வளநாட்டின் தலைநகரான ஸ்வரதீபத்திற்கு அதிமுக்கியமான காரணமின்றித் தான் வருவதாய் இல்லை என்று கூறி இருந்தும், இப்பொழுது சிருஷ்டியை அங்குத் தனியே விட்டுவிட்டு வர நேர்ந்து விட்டது. தன் கையை மீறி எதுவும் நடந்துவிடாது என்று உறுதிபடத் தெரிந்திருந்தாலும், மனதுள் சிறு கலக்கம் ஏற்படத்தான் செய்தது.
மகிந்தன் வந்த விமானம் ஸ்வரதீபத்தின் தரை தொட்ட அந்த வினாடி, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த மின்னலால் அந்த விமான நிலையத்தின் அருகிலிருந்த வனம் ஒன்று திகுதிகுவெனப் பற்றி எரிய ஆரம்பித்தது.
அதை அறியாத அவர்கள் மகிந்தனை வரவேற்பதிலேயே குறியாக இருக்க, அந்தத் தீப்பிழம்பில் இருந்து சுட்டெரிக்கும் சூரியனாய் வெளியே வந்து குதித்தான் அதிரூபன்.
விமானநிலையத்திற்குள்ளேயோ, மகிந்தனை வரவேற்றுச் செல்ல வளநாட்டின் அதிபர், ஸ்வரதீபத்தின் முதல்வர் என அனைவரும் அங்குக் குழுமியிருந்தனர்.
மகிந்தன் யுவாவின் முன்னணி தொழிலதிபர், அவ்வளவே. ஆனால் அவருக்கு வளநாட்டிலோ ஏதோ ஒரு பெரிய தேசத்தின் அதிபரை வரவேற்பது போல மிகப்பெரும் வரவேற்பு தடபுடலாக நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து மிகப்பெரிய சொகுசுக் காரில் ஏறும் சமயம் அதிரூபனும் வனத்திலிருந்து வெளியே வந்துவிட, அந்தக் காரில் ஏறும் மகிந்தனைப் பார்த்தவன் நெற்றி நரம்புகள் புடைக்க.. அவனது கை முஷ்டிகளெல்லாம் இறுக, வெறிக் கொண்ட வேங்கையெனப் பார்த்தவன் உதடுகள், “வ்ரித்ரா” என்று ஆவேசத்துடன், உலகிலுள்ள வெறுப்பெல்லாம் ஒருங்கே சேர முணுமுணுத்தன.
அதிரூபன், மகிந்தன் அருகில் செல்வதற்குள்ளேயே அவர் அந்தக் காரில் ஏறி விரைவாகச் சென்று விட, அவரை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென எண்ணியவன், தனது பெருவிரலை தரையில் ஊன்றப் போகும் சமயம் பெரும் சத்தத்துடன் ஒரு லாரி அவனைக் கடந்து செல்ல, தான் இருக்கும் இடமறிந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.
அங்கு யகுசாவிலோ சிருஷ்டி தலையைப் பிடித்துக் கொண்டு தனது படுக்கையில் படுத்துக் கொண்டிருக்க, அவளைச் சுற்றி பல்வேறு வயர்கள் பின்னபட்டிருக்க, அவளது கை நரம்பின் வழியே ஏதேதோ வாயில் பெயர் கூட நுழையாத மருந்துகளெல்லாம் ஊசியின் வழியே அவள் உடலில் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.
அப்பொழுதும் கூடச் சிருஷ்டி தாங்கமுடியாத தலைவலியில் கத்திக் கொண்டுதானிருந்தாள். அவளுக்கான மருத்துவம் மகிந்தனின் அறிவுறுத்தலின் பெயரில் நடந்து கொண்டிருந்தது.
அந்த மருத்துவக்குழுவோ முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது அவர்களது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதே சமயத்தில், அதிரூபனோ, வளநாட்டில் தான் சிருஷ்டி வந்திறங்கினாள் என்பதை அறிந்த அவனும் புழுத்துளை மூலம் தானும் வளநாட்டிற்கே வந்தவன், அங்குச் சிருஷ்டியைத் தான் காணுவோம் என்று எண்ணினான். ஆனால் கண்முன்னே வ்ரித்ரா வந்து நிக்கவும், அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
தான் இருக்கும் இடம் மறந்து, கொண்டிருக்கும் காரியம் மறந்து, அவனைப் பின்தொடர முனைந்தவன், சட்டெனச் சுயநினைவு அடைந்ததால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
பிறகே அவன் எப்படி வளநாட்டில், அதுவும் அங்கிருக்கும் அனைவரும் மதிக்கும் நிலையில் இருக்கிறான் என்று யோசித்துக் கொண்டே நடந்தவனை, அதிவேகமாக வந்து கொண்டிருந்த பைக் ஒன்று இடித்துவிட, சட்டென்று கீழே விழுந்து விட்டான்.
விழுந்ததில் அவன் நெற்றியில் அடிபட்டுவிட, அந்தப் பைக்கை ஓட்டி வந்தவன் தப்பிக்கப் பார்த்து வேகவேகமாக அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, ஒற்றைக் கையால் அந்தப் பைக்கை பிடித்து நிறுத்தியவன், “ஏய் நில்லு.. என்ன நீ பாட்டுக்கு இடிச்சுட்டு எங்கயோ போற? இப்படி யாருக்காவது அடிபட்டுட்டா, அவன கூட்டிட்டு போய் வைத்தியம் பார்க்க வேணாம்? அட அது கூட இல்லாட்டி பரவாயில்ல.. அவன்கிட்ட ஒரு மன்னிப்பாவது கேக்க வேணாம்” என்று கேட்கவும்
பயந்து போன அவனோ.. “சார்.. சார் விட்ருங்க சார் ஏதோ தெரியாம நடந்துடுச்சு” என்று பம்மினான்.
அவன் பம்மவும் லேசாகச் சந்தேகம் எட்டிப் பார்க்க, “ஏய் எனக்கு உன்னைப் பார்த்தா சந்தேகமா இருக்கு.. ஏன் இப்படி முழிக்கற?” என்று அதிரூபன் கேட்கவும், அவனை மீண்டுமே தள்ளிவிட்டு விட்டு சென்று விட முனைந்தான் அந்த இன்னொருவன்.
அவனது சட்டையைப் பிடித்தவாறே,” இப்போ நீ உண்மைய சொல்றியா? இல்ல நான் யாருன்னு காட்டட்டுமா?” என்று அதிரூபன் கேட்கவும், அந்த மற்றோருவனோ அதிரூபனின் மிரட்டும் பார்வையிலேயே கொஞ்சம் பயந்தவாறு தன்னைப் பற்றிக் கூறலானான்.
“சார் நான் வாசு.. நான் இங்க முதலமைச்சர் அலுவலகத்துல கிளர்க்கா வேலை செய்யறேன். அங்க ஒரு பிரச்சனை எனக்கு. அதான் நான் அவசரமா போயிட்டு இருக்கேன். என்ன விட்டுடுங்க சார்.” என்று கூறினான்.
அவனது கண்களைப் பார்த்தே அவன் ஏதோ பயங்கரச் சதியில் சிக்கியிருப்பதை அறிந்த அதிரூபன், “இங்க பாரு வாசு.. உன்னைப் பார்த்தா ரொம்பப் பயந்த மாதிரி தெரியுது. உன் பிரச்சனை என்னன்னு என்கிட்ட பகிர்ந்துக்க முடுஞ்சா சொல்லு. நான் உதவி செய்யறேன். என்ன உன்னோட நண்பனா நினைச்சுக்கோ” என்று பரிவாகக் கூறவும்
அந்த வாசுவோ, அதிரூபனின் பேச்சில், எவரையும் ஈர்த்து மனதிலிருப்பத்தை வாங்கி விடும் திறமையிலும், விழி கொண்டே ஒருவர் மனதை படிக்கும் சக்தியிலுமாகக் கரைந்து விட, “சார் எனக்குன்னு யாரும் இல்ல.. அவ்வளவு ஏன் உண்மையான நண்பன் கூட இல்ல. நண்பன்னு நினைச்ச ஒருத்தன் நாட்டுக்கே துரோகியா ஆகிட்டான். என்னையும் அந்தத் துரோகத்துல கூட்டு சேர்க்க பார்க்கறான். அதான் நான் இந்த ஊருலயே இருக்க வேணாம்னு யார்கிட்டயும் சொல்லிக்காம வேலையையும் விட்டுட்டு கிளம்பிட்டு இருக்கேன். ஆனா உங்களப் பார்த்தா என்னால சந்தேகிக்க முடில. உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லலாம்ன்னு தோனுது” என்று கூறினான்.
அதற்குச் அதிரூபனோ, “நானும் உன் இனமா இருக்கறதால உனக்கு அப்படித் தோன்றி இருக்கும் வாசு. என்ன அப்படிப் பார்க்கற? உன் இனம்ன்னா எனக்கும் இங்க யாரும் இல்ல. தனியாளாத்தான் இருக்கேன். அப்பறம் இந்தச் சார் எல்லாம் வேண்டாம். என் பேர் அதிரூபன், அப்படியே கூப்பிடு” என்று கூறவும், ஏனோ வாசுவின் மனம் அவனை நெருக்கமானவனாக எண்ணியது.
பின் வாசுவோ அதிரூபனிடம், “அதென்ன அதிரூபன் ? எங்கயும் கேள்விப்படாத பேரா இருக்கு?” என்று வினவவும்
அதற்குச் சிரித்துக் கொண்ட அவனோ, “அதிரூபன் அப்படின்னா.. அமைதி விரும்பி, நடுவர், ராஜ தந்திரி அப்படின்னு அர்த்தம். பேர் பிடிச்சுருக்கா? இனி என் பேர் சொல்லி கூப்பிடுவியா?” என்று கேட்கவும்
வாசுவும் சிரித்துக்கொண்டே, “சரி சரி உன் பேரும் அதோட அர்த்தமும் ரொம்பவே நல்லா இருக்கு. உன்ன இனி அப்படியே கூப்பிடறேன். ஆமா உன் வீடு எங்க இருக்கு? சொல்லு நானே உன்ன என் வண்டில விட்டுடறேன்.” எனக் கேட்கவும்
சுதாரித்த அவனோ, “வானமே கூரை இப்போ யுவால எல்லா இடமும் எனக்குத் தான். எங்கவேனாலும் இருப்பேன்” என்று கூறினான். அதைக் கேட்டதும் வாசுவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
ஆனால் உடனே முகத்தைச் சரிபடுத்திக் கொண்டவன், “அப்போ நீ என் வீட்டுக்கே வந்துடுறியா? அங்க நான் மட்டும் தான் இருக்கேன்” என்று கூப்பிட்டான்.
வாசுவின் வெள்ளந்தியான மனமும், வெகுளியான பேச்சும், கண்களின் உண்மைத் தன்மையும் ரூபனைக் கவரவே சரியென்று அவனுடன் கிளம்பி விட்டான் அவன்.
அங்கே வாசுவின் வீடோ ஊருக்கு மிகவும் ஒதுக்குப்புறமாக அப்பொழுது தான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட காலனியில் இருந்தது.
அதை ஆச்சர்யமாகப் பார்த்த ரூபனிடம் அவன், “என்னப்பா அப்படிப் பார்க்கற? கேள்விப்பட்டது இல்ல? தரையைத் தோண்டினா தங்கம், வானத்தைப் பார்த்தா மழை… ஸ்வர தீபத்துக்கு மிக அருகில்.. வெறும் ரெண்டு மணி நேரம் தான்.. இப்படி எல்லாம் விளம்பரப்படுத்தி வத்திப்போன ஏரிக்குள்ள வீட்டை கட்டி வித்துட்டு போய்ட்டானுங்க. ஏமாந்து போன நாங்களும் வேற வழி இல்லாம இங்கயே செட்டில் ஆகிட்டோம்.
ஆனா எங்களுக்குப் பயமே இல்லையே. ஏன்னா இப்போ எல்லாம் தான் வானத்துல இருந்து ஒரு சொட்டு தண்ணி கூட மழையா வரது இல்லையே. மழை கூடப் பணக்காரங்க வீட்டுக்கு மட்டும் தான் பெய்யற மாதிரி செயற்கையா உருவாக்கிட்டாங்க. தண்ணிக்கு கூட நாம முன்னாடியே புக் பண்ணி வாங்கற டோக்கன் சிஸ்டம் தான…” என்று கூறிக் கொண்டே போகவும் அதிரூபனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘மண்ணை மலடாக்கியவர்கள் இப்பொழுது உச்சகட்டமாக வானையம் மலடாக்கி மழை கூடப் பெய்யாமல் போகச் செய்து விட்டார்களா?’ என்றிருந்தது.
ஆனால் இந்த அதிர்ச்சிக்கெல்லாம் மீறியதாக, இந்த அரசாங்கத்தில் மறைமுகத் திட்டம் ஒன்று, தேச துரோகமாய் மட்டுமல்லாது, வாழும் உலகுக்கே துரோகம் இழைப்பது போன்ற ஒரு விஷயம் நடக்கவிருக்கிறது என்று கூறி அதைப் பற்றி வாசு விவரிக்கவும், இந்த ஆபத்திலிருந்து இவ்வுலக மக்களைக் கரை சேர்ப்பது இயலாத காரியமாகி விடுமோ என அதிரூபனுக்கே தோன்றி விட்டது.
(தொடரும் – புதன்தோறும்)
GIPHY App Key not set. Please check settings