மழைநேரக் கொண்டாட்டம்
மழலை செல்வங்களுக்கு
வெற்றுக் காகிதங்கள்
சாதா கப்பல் கத்திக்கப்பலென
சட்டென உருமாறி
மழை நீரில் மிதக்க
மகிழ்ச்சிக் கடலதில்
மிதப்பர் பிள்ளைகள்
கரை சேராது தத்தளிக்கும்
கப்பல் கண்டுவிட்டால்
கண்களில் குளம்கட்டும்
கவலையில் முகம் மாறும்
உனைப் பிரிந்த
என் வாழ்வும்
கலங்கரை தொலைத்த
கரை சேரா கப்பலே
மெய்யாய் பிறந்து
பொய்யாய் வாழ்ந்து
மோன சுகம் காணும்
நம் வாழ்வும் கூட
கரை சேரா கப்பலே
என்றோ மகிழ்ந்திருந்த
நினைவுகளின் தாலாட்டில்
ஏங்கிய என் மனம்
தத்தளித்து தவிக்கும்
காகிதக் கப்பலாய்
மறக்கவியலா நினைவுகளும்
மனக்குவியலில் ஒளிந்து
மனதை வெறுமையாக்க
மனம் போன போக்கில்
மருகி ஓடிய என் மனமும்
கரை சேராது தத்தளிக்கும்
காகிதக் கப்பலே
#ad
#ad
GIPHY App Key not set. Please check settings