கதவுகள் திறந்து விட
ஜன்னல் கம்பி வழி
பர்தா விலக்கியது தென்றல்!!
உள் வந்த ஈரக்காற்று
முகம்தொட்டு யோசிக்க வைத்தது
தவறா இது?
பெண் முகம் காட்ட
அனுமதித்துள்ளது வேதம்
தென்றல் கூட்டி வந்தது
சிறுதுளி மழையை சாரலாய்
கரம்நீட்டி முகம் தொட்டு
சிலிர்த்து உணர்வைத் தொட
மனம் திறந்தது சுதந்திரம்
என் சுவாசப் பையில்!
கதவுகள்-
நிலைக் கதவைத்
திறந்து வெளிநோக்க
காற்றும் மழையும்
மந்தார வெளிச்சமும் ஓசையும்
விருந்துக்கு அழைத்தன வெளியே
தவறாயிது?
கரங்கள் தெரிய தடை
விதிக்கவில்லை
என் வேதம்!
கூரைச் சாரங்கள்
வழியவிட்ட மழைநீரில்
மேலும் கீழும் நீச்சலடித்தன
என் கரங்கள்
விரலின் நுனிகளில்
கவிதையின் விதைகள்!
கதவுகள்-
மூங்கில் கதவு திறந்தேன்!
சுழன்றடிக்கும் காற்று
வெள்ளிக்கம்பிகள் வானினின்று
சளபுள தண்ணீரில்
கவிழ்த்திய மழையின் சட்டிகள்
பாதங்கள் தெரிய
தடை விதிக்கவில்லை
என் வேதம்!
நடந்தேன் தெருவில்
திரை விலக்கிய முகம்
வான்மழை நோக்கிற்று
உறை விலக்கிய கரங்கள்
தென்றலில் குளிர்ந்து சிலிர்த்தது
பாதுகை விலக்கிய பாதங்கள்
கொலுசனைத்து ஓடும்
மழைநீர் அலைந்தது
சுதந்திரம் என்
சுவாசப் பையில்!
பர்தா நனைந்தது
உள்வெளியில் திரைவிலகி
அகமுகம் சிலிர்த்தது
வெளிச்சம் புரிந்தது!
பெண்முகம் காட்ட
மறுக்கவில்லை வேதம்
சகமானுடமே மறுத்தது
சிந்தனையில் சிறகுகள்
விரல் நுனியில்
கவிதையின் விதைகள்
அச்சம் நீரினடி
சேறாய் மறைந்தது
தூரத்தின் தொடுவானைத்
தொட்டுவிடும் வேகம்
கால்களில் எனினும்
பழகிய கூடு?
கதவடைத்தது!
திரை விழுந்தது!!
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
in கவிதைகள்
GIPHY App Key not set. Please check settings