in

காதல் என்பது… (சிறுகதை) – எழுதியவர் : நௌஷத் கான் (பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு)

காதல் என்பது… (சிறுகதை)

“டாக்டர் என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க, நான் செஞ்ச காரியத்தை நினைச்சா எனக்கு அசிங்கமாவும், அருவெறுப்பாவும் இருக்கு. ஒவ்வொரு நாளும் நரக வேதனையா இருக்கு. தூக்கம் கூட வரமாட்டேங்குது”

“ரிலாக்ஸ் மணி… வாழணும்னு நினைச்சா கூட பலருக்கு இந்த கிடைக்காத இந்த வாழ்க்கையை, கடவுள் உங்களுக்கு குடுத்துருக்கார். நீங்க என்ன தான் தப்பு செஞ்சுருந்தாலும், அதை சரி செஞ்சுக்கிட்டு நல்லவனா வாழப் பாருங்க. மனசை ஒருநிலைபடுத்துங்க, தப்பான விஷயத்தை பத்தி நினைச்சு கூட பாக்காதீங்க. கடவுளை மனதார நினைங்க, நல்ல நட்போடு பழகுங்க, உண்மையாய் காதல் செய்ங்க, நிச்சயம் உங்க வாழ்க்கை நல்லபடியாய் அமையும்” என்றார் மனநல மருத்துவர் மைதீன்

“இல்ல டாக்டர்… வாழ்க்கை ரொம்ப கொடூரமா, ரணமா தெரியுது. நான் ரொம்ப கெட்டவனா மாறிட்டேன், மனசு முழுதும் கசடு நிறைஞ்சு போச்சு டாக்டர். ப்ளீஸ் என்னை கொன்னுடுங்க, ப்ளீஸ் என்னை கொன்னுடுங்க”

“உங்களுக்கு என்ன பிரச்சனை, தெளிவா சொல்லுங்க”

“நான் பதினாறு வயசா இருக்கும் போதே அப்பா, அம்மா ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அண்ணன் இருந்தும், அவர் என்னை கவனிக்கலை. நானே ஒரு கடைல பார்ட் டைம் வேலை பார்த்து, எப்படியோ பன்னிரண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சேன். அதுக்கப்புறம் கிடைச்ச வேலையெல்லாம் செஞ்சேன். எனக்கு அன்பு காட்டவோ, அக்கறை செய்யவோ யாருமில்லை.

எனக்கு இருபது வயசு இருக்கும் போது, அந்த மல்டி நேஷனல் சூப்பர் மார்க்கெட்ல சேல்ஸ்மேனா வேலை கிடைச்சது. அதுவும், கார்மெண்ட்ஸ் டிபார்ட்மெண்டில், லேடிஸ் அண்டர்கார்மெண்ட்ஸ் டிவிஷனில் வேலை

பெண்களின் பிரா பேண்டீஸ்’க்கு பிரைஸ் லேபிள் ஒட்டி டிஸ்பிலே செய்யணும். ஒரு சில பெண் வாடிக்கையாளர் அவங்க அளவை சொல்லி என்கிட்டே வாங்கிட்டு போவாங்க

ஒரு காலத்துல என் மனசு நல்லா தான் இருந்தது. ஆனா வயசாக ஆக, என் எண்ணங்கள் ரொம்ப மோசமா போய்க்கிட்டு இருக்கிறதை உணர முடிஞ்சுது டாக்டர். தூக்கத்துல கூட பெண்களின் உள்ளாடைகள் தான் கனவா வருது. நான் சாப்பிடுற இட்லியில் இருந்து வானத்துல பார்க்கிற நிலா வரைக்கும் எல்லாமே தப்பா தெரியுது டாக்டர்

ஒரு நல்ல தாய்க்கு மகனா பொறந்தவன், இப்படி காஜி பிடிச்சு தப்பா இருக்கிறதை நினைக்குறப்ப எனக்கே என்னை பிடிக்கலை டாக்டர். இந்த வேலையை விட்டுடலாம்னு மனசுக்கு தோணுது. ஆனா இந்த வேலையை விட்டுட்டா, நான் ரொம்ப கஷ்டப்படுவேன். ஏன்னா, ஓரளவுக்கு நல்ல சம்பளம், ஏசியில வேலை, வர்றது எல்லாம் பிரச்சனை தராத ஓரளவுக்கு வசதியான வாடிக்கையாளர்கள்

இந்த வேலையை விட்டுட்டா சோத்துக்கே கஷ்டப்படுவேன்னு புத்தி சொல்லுது டாக்டர். கூட வேலை பார்க்குற மற்ற சக ஆண் தோழர்கள் எல்லாரும், என்னை ‘பிரா’ மணினு அடைமொழி வச்சு கூப்பிடறப்ப, உள்ளுக்குள்ள சந்தோசப்படுறேன். எனக்கு கிடைச்ச மாதிரி அவன்களுக்கு இந்த லேடீஸ் பிரிவு கிடைக்கலை, அதான் பொறாமைல சொல்றாங்கனு தோணுது.

எல்லாத்துக்கும் மேல, மன்னிக்கவே முடியாத ஒரு தப்பை என்னையும் அறியாம செஞ்சுட்டேன் டாக்டர். அந்த விசயத்துக்கு அப்புறம் தான் எனக்கு வாழவே பிடிக்கல”

“என்னப்பா சொல்ற?”

“ஆமாம் டாக்டர், மன்னிக்கவே முடியாத தப்பை செஞ்சுட்டேன். என்னை உயிரா நினைச்ச பொண்ணுகிட்ட மனசை பார்க்காம அவ மாரை பார்க்க நினைச்ச பாவி டாக்டர் நான். பொண்ணுங்க மாராப்புக்கு பின்னாடி ஒரு மனசு இருக்குனு புரியாம அந்த தப்பை பண்ணிட்டேன்

என்னை உயிர்க்குயிரா காதலிச்சா என் சைந்தவி, நானும் உண்மையா தான் காதலிச்சேன். என் பொறந்தநாளுக்கு என் ரூமுக்கு வந்தவகிட்ட, எப்படி தப்பா நடந்துக்க மனசு வந்தது?

அவ எதிர்பார்க்காத சமயத்துல, அவ துப்பட்டாவ விலக்கி பார்த்தேன். அன்னிக்கு என் கன்னத்துல அடிச்சிட்டு போனவ தான், அதுக்கப்புறம் என்னை பார்க்க வரவே இல்லை. எத்தனையோ முறை போன் செஞ்சும் எடுக்கவே இல்ல, மூணு மாசமாச்சு அவளப் பாத்து.

தப்பான வயசும், பாழாப் போன கெட்ட புத்தியும் என்னையும் அறியாம அந்த தப்பை செய்ய வச்சது. நான் பாவி டாக்டர், மகா பாவி. எந்த கடவுளும் என்னை மன்னிக்க மாட்டார். அதனால என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க”

“இங்க பாருங்க மணி, எவன் ஒருத்தன் தப்பை உணர்ந்து ஒழுங்கா இருக்க நினைக்கிறானோ, அப்பவே அவன் மனுஷனாகிடுறான். தினமும் மனதார கடவுள்கிட்ட வேண்டுங்க, வேலை நேரம் போக நல்ல விசயத்துல கவனம் செலுத்துங்க, உங்க காதலிக்கிட்ட உண்மையை சொல்லி மன்னிப்பு கேளுங்க. உங்க திருப்திக்காக வேணா தூக்க மாத்திரை எழுதித் தரேன்

நல்ல தூக்கம் கிடைச்சாலே, மனசு தெளிவாகும். எப்பவும் மனச தைரியமா வெச்சுக்கோங்க, நம்பிக்கையோடு நல்லெண்ணத்தோடு வாழுங்க, எல்லாமும் சரியாகும்” என நம்பிக்கையளித்து  அனுப்பி வைத்தார் டாக்டர் மைதீன்

சில தினங்களுக்கு பிறகு…

“ப்ளீஸ் சைந்தவி ஒரு நிமிஷம் நில்லு, எத்தனையோ முறை போன் செஞ்சும் நீ எடுக்கலை. நான் செஞ்சது தப்பு தான், ஆனா பேசாம மட்டும் இருந்திடாத.

என் அம்மா அப்பாவுக்கு அப்புறம், என் மேல அன்பு காட்ட யாருமே இல்லை. உன்னை மட்டும் தான் என் உயிரா, உறவா நினைக்கிறேன். என்னையும் அறியாம அன்னைக்கு உன்கிட்ட அப்படி தப்பா நடந்துக்கிட்டேன், அதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு”

“உன் மேல எனக்கு கோபம் தான் மணி, ஆனா இத்தனை நாளா நான் உன்கிட்ட பேசாததுக்கு அது மட்டும் காரணமில்லை. எனக்கு ஒரு பெரிய பிரச்சனை, அதைப்பத்தி உன்கிட்ட சொல்லணும்னு தான் அன்னைக்கு வந்தேன். நீ அப்படி தப்பா நடந்துக்கவும், சொல்ல வந்த விஷயத்தை கூட சொல்லாம, மனவலியோட திரும்பி போய்ட்டேன்”

“என்ன பிரச்சன? சொல்லு சைந்தவி, காலம் பூரா உனக்கு ஆதரவா, ஆறுதலா நானிருக்கேன். அதோட, என்ன பிரச்சனையா இருந்தாலும் பரவால்ல, இன்னைக்கே முறைப்படி வீட்ல வந்து பேசி உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன் சைந்தவி”

“இல்ல மணி, நான் உனக்கு செட்டாக மாட்டேன்”

“ஏன்மா இப்படி சொல்றே?”

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, மார்பக புற்றுநோயால என்னோட மார்பகத்தை ஆப்ரேஷன் பண்ணி எடுத்துட்டாங்க. நோய் பத்தி தெரிஞ்சவுடனே, உனக்கு சொல்லணும்னு வந்த அன்னைக்கு தான், நீ தப்பா நடந்து மனசை நோகடிச்சுட்ட. இனி என் வாழ்க்கைல கல்யாணம்னு ஒண்ணு கிடையாது. நீ வேறு யாரையாவது கட்டிக்கிட்டு நல்லா இரு” என்றாள் சைந்தவி விசும்பலுடன்

ஒரு கணம் கூட தாமதியாமல், அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் மணி 

சில வருடங்களுக்கு பின்…

சைந்தவிக்கு நல்ல கணவனாய், இரு பெண் குழந்தைகளுக்கு உற்ற தகப்பனாய், தூய உள்ளத்தோடு மகிழ்வான வாழ்வு வாழ்ந்து வருகிறான் மணி

‘காதல் என்பது’ காமம் மட்டுமல்ல. காமத்தை மிஞ்சும் சக்தி, தூய காதலுக்கு உண்டு ❤

(முற்றும்)

#ad

           

        

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

நீ வருவாயென❤ (கவிதை) மா.பிரேமா

காதல் ❤ (சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த்