in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 12) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9    பகுதி 10   பகுதி 11

இதுவரை:

சஞ்சீவ் ஆராதனா காதல் வளர்ந்து கண்ணீர் சிந்தி செழித்து, திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கிறது. ஆராதனாவின் தந்தை மதன கோபாலுக்கு, தன் மகளைத் தனக்கெதிராகப் பேசும் அளவுக்கு மனதை மாற்றிய சஞ்சீவ் மேல் கோபம் பொங்குகிறது. தன் மகனைத் தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்ற பயத்தால் சஞ்சீவின் தாய் பானுமதிக்கு ஆராதனாவின் மேல் எரிச்சல் வருகிறது. காதல் இதையெல்லாம் காணாமல் செய்து விடுமல்லவா. ஆனால் எவ்வளவு காலங்களுக்கு? ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது ஆராதனா சஞ்சீவ் விஷயத்தில் உண்மையா, பொய்யா? ஏன் அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள்? பார்க்கலாம் வாருங்கள்.

இனி;

திருமண வாழ்க்கையில், என்னதான் குடும்பத்திற்குள் அன்பு, அரவணைப்பு எல்லாம் இருந்தாலும், மூன்றாம் நபரின் தலையீட்டிற்கு அனுமதி கொடுத்தாலோ அல்லது அவர்களது பேச்சைக் கேட்டு நடக்க ஆரம்பிக்கும் போதோ, உண்மையான புரிதல் கொண்ட உறவுகளுக்கு நடுவில்கூட கொஞ்சம் சலனம் ஏற்படத்தான் செய்யும்.

இப்படித்தான் ஆராதனா, சஞ்சீவ் இடையே விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.

இருவரும் திருமணம் முடிந்ததிலிருந்து சஞ்சீவின் வீட்டில்தான் இருந்தார்கள். ஆராதனாவிற்கு சஞ்சீவுடன் தனியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதை சஞ்சீவிடம் நாசூக்காக  ஒன்றிரண்டு முறை சொல்லிப் பார்த்தாள். ஆனால் சஞ்சீவைப் பொறுத்தவரை அப்பா அம்மாவைத் தனியாக விட்டுவிட்டுப் போவதற்கு விருப்பமில்லை.

ஏற்கனவே ஆராதனா விஷயத்தில் அம்மாவுக்குக் கொஞ்சம் மன வருத்தம்தான். அதிலும் திருமணம் முடித்த கையோடு தனிக்குடித்தனம் போய் விட்டால் அம்மா மிகவும் நொறுங்கிப் போய்விடுவார் என்பது தெரியும் சஞ்சீவிற்கு.  அதனால் தனியே போகும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.

திருமணமான புதிதில் மனம் கொள்ளாக் காதலில் இருந்த ஆராதனா அதைப் பற்றி  பெரிதாக நினைக்கவுமில்லை. மேலும் தினமும் இருவரும் ஒன்றாகக் கிளம்பி வேலைக்குப் போய்விடுவதால், அந்த வீட்டில் இருக்கும் நேரம் மிகக் குறைவுதான்.

ஆனால் பானுமதி அவ்வப்போது தன் மனவருத்தத்தை ஆராதனாவிடம் வெளிக்காட்டாமல் இல்லை. சுருக் என்று ஏதாவது வார்த்தைகளைச் சொல்லி விடுவார். ஆராதனாவிற்கு அது மிகுந்த வருத்தத்தைத் தரும். இருந்தாலும் சஞ்சீவுக்காகப் பொறுத்துக் கொண்டாள்.

அதேபோல், மதனகோபால் சஞ்சீவிடம் இரண்டு மூன்று முறை, அவன் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையைக்  குத்திக்காட்டி பேசினார். இத்தனைக்கும்  சஞ்சீவ் குடும்பம்  ஒன்றும் வறுமையில்  இல்லை.  ஓரளவிற்கு  வசதி தான்.  ஆனால் மதனகோபாலைப்  பொறுத்தவரை  அவர் அந்தஸ்திற்கு ஈடாக இல்லை என்பது குறைதான்.

“எனக்கு இருக்கற வசதிக்கு என் பொண்ணு இருக்க வேண்டிய இடமே வேற. தராதரம் தெரியாம அவ ஆசைப்பட்டாங்கற ஒரே காரணத்துக்காக நானும் கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டியதாப் போச்சு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல.  வீட்டோட மாப்பிளையா வந்துடு  சஞ்சீவ். எல்லா வசதிகளோட  உன்னையும், என் பொண்ணையும் நான் நல்லபடியாக வாழ வைக்கறேன்,” என்று அவ்வப்போது தூண்டில் போட்டார் மதனகோபால்.

ஆனால் சஞ்சீவ் அதற்கெல்லாம் அசரவே இல்லை. அவர் இப்படிப் பேசுவது எல்லாம் சஞ்சீவிற்கு  மிகவும் கோபத்தைத் தரும். இருந்தாலும் ஆராதனாவிற்காக எதுவும் பேசாமல் பொறுத்துக் கொண்டான்.

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல, மதனகோபால் இந்த விஷயத்தில் சஞ்சீவிடம் திரும்பத் திரும்ப  சொல்வதை விடுத்து, ஆராதனாவிடம் தன் வேலையை ஆரம்பித்தார்.

“ஆராதனா, அப்பா எப்பவுமே உன் நல்லதுக்குத்தான் சொல்வேன். இவ்வளவு வருஷம்  உன்னை இளவரசி மாதிரி பார்த்துகிட்டேன். அவசரப்பட்டு நீயா உன் வாழ்க்கையைத் தேடிகிட்டே. உன் மனசு நோகக் கூடாதுன்னு நீ ஆசைப்பட்ட இடத்திலேயே உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன்.

நீ இப்ப இருக்கற நிலையைப்   பார்த்தா, எனக்கு நெஞ்சு வலியே வந்துரும் போல இருக்கு. உன் வசதிக்கு நீ இருக்க வேண்டிய இடமா இது? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல.

சஞ்சீவைத்தானே உனக்குப் புடிச்சிருக்கு. கல்யாணமும் பண்ணியாச்சு. ஆனா  அந்த வீட்ல எதுக்கு நீ இருக்கணும்? கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு நான் வாங்கிக் கொடுத்த வீடு இருக்கே.  அங்கே தங்கித் தானே  நீ வேலைக்குப்  போயிட்டிருந்தே. அந்த வீட்டுக்கே நீயும் சஞ்சீவும் போயிருங்க.  அங்கே இன்னும் என்னென்ன வசதிகள் பண்ணித் தரணுமோ  நான் பண்ணித் தரேன்.

இல்ல…. அதைவிட பெரிய வீடு  வேணும்னாலும் வாங்கித் தரேன். இங்கே எதுக்கு  இப்படி சிரமப்படறே?”

இப்படி ஃபோனிலும், நேரில் பார்க்கும் போதும்  ஆராதனாவின் மனதைக் கரைத்துக் கொண்டே இருந்தார் மதனகோபால். பானுமதி ஏதாவது கோபத்தில் பேசும் போதெல்லாம், ஆராதனாவிற்கு தன் அப்பா தன் மேல் இவ்வளவு அக்கறையுடன் சொல்லும் இந்த வார்த்தைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வரும்.

அப்பா சொல்வதுதான் சரி என்று கொஞ்சம் கொஞ்சமாக நினைக்க ஆரம்பித்தாள் ஆராதனா. மதனகோபால் இதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பானுமதிக்குத் தனிப்பட்ட முறையில் ஃபோன் செய்து பேசினார்.

“என் பொண்ணு இருக்க வேண்டிய இடம் இது கிடையாது. ஆனாலும் உங்க பையனுக்காகத்தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். ஆனா நீங்க என்  அந்தஸ்தைப்  பத்தி யோசிக்காம என் பொண்ணு மனசை வருத்தப்பட வைக்கறீங்க.  போனாப் போவுதுன்னு பேசாம இருக்கேன். கூடிய சீக்கிரம் என் பொண்ணைத் தனிக்குடித்தனம் வைக்கப் போறேன். அவ எதுக்கு உங்ககூட இருந்து சிரமப்படணும்? சஞ்சீவ்கிட்டயும் நான் பேசியிருக்கேன். வீட்டோட மாப்பிள்ளையா வரச் சொல்லியிருக்கேன். கூடிய சீக்கிரம் யோசிச்சு முடிவு சொல்வான்.”

இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு வைத்தார். இது கண்டிப்பாக பானுமதியின் மனதில் இன்னும் அதிக சலனத்தை ஏற்படுத்தி, அதை ஆராதனாவிடம்  கோபமாக வெளிப்படுத்துவார் என்று மதனகோபால் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார். வியாபாரத்தில் இப்படிக் கணக்குப் போட்டு காய் நகர்த்தித்தானே நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார். அவருக்குத் தெரியாதா எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று.

அவர் நினைத்தபடியே பானுமதி செயலாற்றத் தொடங்கினார். ஏற்கனவே ஆராதனா தன் மகனைத் தன்னிடமிருந்து பிரித்த கோபத்தில் இருந்த பானுமதிக்கு, சஞ்சீவ் வீட்டோடு மாப்பிள்ளையாகப் போய் விடுவானோ என்ற பயம் தொற்றிக் கொண்டது. அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஆராதனா மேல் கோபமும் அதிகமானது.

அந்த கோபம், வெறுப்பு, கவலை, பயம் எல்லாவற்றையும் ஆராதனைவிடம் அவ்வப்போது வெளிக்காட்டவும் மறக்கவில்லை.

“தவமா தவமிருந்து ஆசைஆசையாய்ப் பெத்தெடுத்து, என் உயிருக்கு மேலா நினைச்சு வளர்த்தேன் என் பையனை. உன் பணத்தைக் காட்டி என் பையனை மயக்கிட்டே. என் பேச்சை மீறி அவன் எதுவுமே செஞ்சதில்லை. ஆனா கல்யாண விஷயத்துல என்கிட்ட கேட்காமலே முடிவெடுத்தான். அவனுக்கு எந்த மாதிரி பொண்ணு பார்க்கணும்னு நான் எவ்வளவு கனவு கண்டு வச்சிருந்தேன் தெரியுமா?  நான் பார்த்த பொண்ணா இருந்தா, இப்படி எனக்கு எதிரா திரும்ப மாட்டா இல்ல. என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்சு, நீ தனிக்குடித்தனம் போறதுக்கு வேற ஏற்பாடு பண்ணிட்டிருக்கியா? பெத்த மனசை வேதனைப்பட வச்சுட்டு, என் பையனைக் கூட்டிட்டுப் போறே….   வாழ்க்கை  எப்படி நல்லா இருக்கும்?”

உடைந்து போனாள் ஆராதனா.

வாயார வாழ்த்த வேண்டிய இந்த வயதில் வாழ்க்கை நல்லா இருக்காது என்று சொன்னதும் ஆராதனாவிற்கு அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இப்படி, சாபங்களை வாங்கிக் கொண்டு அந்த வீட்டில் இருப்பதைவிட, அப்பா சொல்வது போல் தனியாகப் போய் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம் வலுவடைந்தது.

தனியாகப் போவது பற்றிய தன் எண்ணத்தை சஞ்சீவிடம் சொன்னாள்.

“ஆராதனா, தனியா போகலாம். ஆனா நாம ஒரு வீடு பார்த்து, அந்த வீட்டுக்கு வேணா போகலாம். உங்க அப்பா உனக்கு வாங்கிக் கொடுத்த அந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன்.”

“ஏன், அந்த வீட்டுக்கு என்ன? அது என்னோட வீட்டு தானே?”

“உங்க அப்பாவோட வீடு. உங்கப்பா அவரோட பணத்தால என்னை விலைக்கு வாங்கப் பார்க்கறார். அந்த வீட்டுக்கு நான் வந்துட்டேன்னா, முழுக்க முழுக்க அவர் சொல்றதை நான் கேட்கற மாதிரி ஆயிடும். அது வேண்டாம். தனியாப் போகணும், அவ்வளவு தானே? தனியா வீடு பார்த்துப் போகலாம். ஆனா நம்ம ரெண்டு பேர் சம்பாதியத்துலதான் எல்லா செலவும் சமாளிக்கணும். அதுபோக, நான் எங்க வீட்டுக்கும் பணம் கொடுக்கணும். அதனால நீ எதிர்பார்க்கற வசதி எல்லாம் அந்த வீட்டுல கொடுக்க முடியாது. கொஞ்சம் சிரமப்பட்டுதான் முன்னுக்கு வரணும்.”

“அதனாலத்தான் எல்லா வசதியோட இருக்கற என்னோட வீட்டுக்குப் போகலாம்னு சொல்றேன். வீட்டு வாடகை எல்லாம் மிச்சமாகும் இல்ல. அதை ஏன் ஒத்துக்க மாட்டேங்கறீங்க? எங்க அப்பா நல்லதுக்குத்தானே சொல்றாரு. அதை ஏன் கேட்க முடியல? என் மேல இருக்கற பாசத்துல, நான் நல்லா இருக்கணும்னு ஆசைல தானே சொல்றார்.”

“எங்கம்மாகூட என் மேல இருக்கற பாசத்துலதான் பேசறாங்க. உன்னால அதை ஏத்துக்க முடியல இல்ல. அதே மாதிரிதான் இதுவும்.”

“உங்கம்மா  பேசறதும், எங்கப்பா பேசறதும் ஒண்ணா? எப்படி உங்களால இந்த மாதிரி பேச முடியுது?”

“கண்டிப்பா ஒண்ணில்லதான். எங்க அம்மா தாய்ப் பாசத்துல, பையன் தன்னை விட்டுப் பிரிஞ்சு போயிடக் கூடாதுனு பேசறாங்க. உங்க அப்பா பணப்பாசத்துல தான் நினைக்கறது நடக்கணும்னு பேசறார். ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.”

“எப்படி சஞ்சீவ், உங்க அம்மா என்னை அவ்ளோ மோசமாப் பேசினாங்க. அதை நீங்க நியாயப்படுத்தறீங்க. எங்கப்பா என் மேல இருக்கற பாசத்துல பேசறதை, பணத்திமிர்னு சொல்றீங்க. ஒரு சராசரி ஆண் மாதிரிதான் நீங்களும் நினைக்கறீங்க. மேல் டாமினேஷன். இப்பதான் உங்களோட ஒவ்வொரு குணமும் கொஞ்சம் கொஞ்சமா வெளில வருது.”

“ஆராதனா, நான் அந்த மாதிரி சொல்லல. நான் உன்கிட்ட கோவமாக்கூட பேசல. பொறுமையா பேசிட்டிருக்கேன். உண்மை இதுதான், உனக்கும் எனக்கும் இருக்கற காதலுக்கு நடுல மத்தவங்களோட வற்புறுத்தல் வரவேண்டாம். உன் மனசு வேதனைப்படறதாலத் தான் நான் எங்க அப்பா அம்மாவை விட்டுக்கு, தனிக்குடித்தனம் போறதுக்கு சம்மதிச்சேன். நீ அதைப் பெருசா நினைக்க மாட்டேங்கறே. உங்கப்பா வாங்கிக் கொடுத்த வீட்டுக்குத்தான் போகணும்னு ஏன்  அடம் புடிக்கறே? நானும், நீயும் சம்பாதிக்கறோம். நம்ம வாழ்க்கையை நமக்கு அமைச்சுக்கத் தெரியாதா? எதுக்கு உங்க அப்பாவோட கால்ல நாம நிக்கணும். அது எனக்கு மரியாதை இல்லையே. சொந்தக் கால்ல நிக்கறது தானே நமக்கும் சந்தோஷம். இது கூடவா உனக்குப் புரியல.”

“எங்கப்பா எனக்குப் பண்றதுல உங்க மரியாதை எங்கே குறையப் போகுது? இதுல, உங்க அம்மாவோட குணத்தையும் என் அப்பாவோட குணத்தையும் கம்பேர் பண்ணி வேற பேசறீங்க. எங்கப்பா நாம சந்தோஷமா, நிறைவா இருக்கணும்னு ஆசைப்படறார். உங்க அம்மா சாபம் கொடுக்கறாங்க. வாழ்க்கை நல்லா இருக்காதுனு சொல்றாங்க. நான் பணத்தைக் காட்டி உங்களை மயக்கிட்டதா சொல்றாங்க.”

“உன்னோட பணத்துக்காகத்தான் நான் உன்னை விரும்பினேன்னு உங்கப்பாகூட சொல்றார். அது பரவாயில்லையா? மறுபடியும் சொல்றேன் ஆராதனா, மத்தவங்களோட விமர்சனங்கள் நமக்கு நடுல வரவேண்டாம்.”

“இல்ல சஞ்சீவ், எங்கப்பா அந்த மாதிரி எல்லாம் பேச மாட்டார். உங்க அம்மாவைச் சொன்னதும் போட்டிக்கு நீங்களும் எங்க அப்பா மேல குறை சொல்றீங்க. மத்தவங்க விமர்சனம், மத்தவங்க விமர்சனம்னே சொல்லிட்டு இருக்கீங்களே, யாரு மத்தவங்க? எங்க அப்பா உங்களுக்கு மத்தவங்ளா?

இவ்வளவு வருஷம் என்னைக் கலங்காம பார்த்துட்டார். நான் ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக, அவர் அந்தஸ்துக்குப் பொருத்தமே இல்லாத உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிச்சார். இப்பவும் அவர் உங்களை விட்டுட்டு வரச் சொல்லல. நாம ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழறதுக்குத்தான் வரச் சொல்றார்.

ஆனா உங்க அம்மா, என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்சுடாதேன்னுதான் சொல்றாங்க. என்னை இன்னும் இந்த வீட்டு உறவா ஏத்துக்கவே இல்ல. அந்த மாதிரி இருக்கற உங்க அம்மாவை நீங்க விட்டுக் கொடுக்காதபோது, எனக்காக எல்லாம் பண்ற எங்க அப்பாவை நான் எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?”

இப்படியாக அவர்களுக்குள் வாக்குவாதம் வளர்ந்து, நாளுக்கு நாள் மனத்தாங்கல் அதிகரித்து, ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போய் வாழ முடியாது என்று தீர்மானிக்கும் அளவுக்கு வந்துவிட்டாள் ஆராதனா. மிகுந்த மன உளைச்சலில் அந்த முடிவை எடுத்தாள்.

ஒருநாள், தன்னுடைய பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிலிருந்து கிளம்பினாள்.

“குட்பை சஞ்சீவ், இனிமேல் உங்ககூட ஒத்துப்போய் வாழ முடியும்னு எனக்குத் தோணல. நான் என் வீட்டுக்குப் போறேன். இனிமேல் சேர்ந்து வாழறதைப் பத்தி பேசிட்டு வராதீங்க.”

“ஆராதனா, இப்பகூட நீ உன் வீட்டுக்குப் போகலாம்னுதான் சொல்றே. ஆனா நான் நம்ம வீட்டுக்குப் போய் நாம சேர்ந்து வாழலாம்னு சொல்றேன். இதுலயே யார் மேல தப்புன்னு உனக்குப்  புரிஞ்சிருக்கணும்.”

“நீங்க வார்த்தைல விளையாடினாலும் நான் ஒத்துக்க மாட்டேன். என் மேல தப்பு கிடையாது. நீங்க உங்களோட பிடிவாதத்துக்காக எங்க அப்பா மேல பழி போட்டுப் பேசறீங்க. பரவாயில்லை, எங்க அப்பா அப்பவே சொன்னார், அவசரப்பட்டு உனக்கு ஒத்துவராத வாழ்க்கையை நீ தேடிட்டிருக்கேன்னு சொன்னார்.

நான்தான் உங்களை ரொம்ப நம்பிட்டேன். நான் கேட்டு எதையும் எங்கப்பா மறுத்தது கிடையாது. நான் கேட்காமலேயே எனக்கு எல்லாம் செய்வார். ஆனா இது ஒரு சாதாரண விஷயம். ஏற்கனவே எல்லா வசதிகளோட இருக்கற என் வீட்டுக்குப் போகலாம்னு நான் சொல்றேன். ஆனா அதைக்கூட நீங்க எனக்கு செய்ய மாட்டேங்கறீங்க.

இந்த மாதிரி ஏமாற்றங்கள், என் ஆசைக்கு நேர்மாறா நடக்கறது இதெல்லாம் வாழ்க்கைல நான் பார்த்ததே இல்ல. எங்க அப்பா மாதிரி என்னைப் பார்த்துப்பீங்கன்னு நினைச்சேன். அவரோட கால் தூசுக்குக்கூட நீங்க பெறமாட்டீங்க. நீங்க உங்க அம்மா பையனாவே இருந்துக்கோங்க.”

அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. கையில் கிடைத்த சாமான்களோடு, நேராகத் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் ஆராதனா. பெங்களூரில் திருமணத்திற்கு முன்பு அவள் தங்கி, வேலைக்குப் போய்க் கொண்டிருந்த வீடு. அவள் அப்பா அவளுக்காக வாங்கிக் கொடுத்த வீடு.

ஆசையாய்க் காதலித்து, அன்பு நிறைந்த மனதோடு திருமண வாழ்க்கையில் இணைந்த ஆராதனா சஞ்சீவ், திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே பிரிந்தார்கள்.

கேட்டதெல்லாம் கிடைக்கும், ஆசைப்பட்டது மறுக்கப்பட்டதில்லை என வளர்ந்த ஆராதனாவிற்கு, தன் விருப்பப்படி சஞ்சீவ் தனியாக வரவில்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை. சஞ்சீவிடம் தான் ஏமாந்து விட்டதாகவே தோன்றியது.

ஆனால் சஞ்சீவிற்கு இந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை. தன் அப்பா மேல் உள்ள கண்மூடித்தனமாக பாசத்தால் ஆராதனா இப்படி அவசர முடிவெடுக்கிறாள் என்பது புரிந்தது. அதனால் கொஞ்சம் ஆறப்போட்டு, பின் ஆராதனாவிடம் பேசிப் புரிய வைக்கலாம் என சமாதானம் செய்து கொண்டான்.

இந்தக் காதல் கிளிகளின் பிரிவில் சந்தோஷப்பட்டது இரு ஜீவன்கள், மதனகோபாலும், பானுமதியும். இருவருக்குமே இனிமேல் தங்கள் விருப்பப்படி தங்கள் வாரிசுகளின் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு.

அதே நேரத்தில் இரண்டு மனங்கள் கதறிக் கொண்டும் இருந்தன. சஞ்சீவின் அப்பா ராகவனும், ஆராதனாவின் அம்மா சரோஜினியும்.

யார் ஆசை நிறைவேறும்? யார் மேல் தவறு என்ற புரிதல் வந்ததா????

காதல் தொடர்ந்ததா? பாசம் வென்றதா?? பணம் ஜெயித்ததா???

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 3) – ரேவதி பாலாஜி

    நாட்டாமை… தீர்ப்பை மாத்தாதே..! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை