in ,

கால இயந்திரம் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

கால இயந்திரம் (அறிவியல் புனைவு சிறுகதை)

அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

நாங்கள், அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் மாணவர்கள்… ஒன்றாக சேர்ந்து சுற்றுலா செல்ல தீர்மானித்து ஐதராபாத் போவதென்று முடிவெடுத்தோம்.

மூன்று நாட்களில் எல்லாம் இடங்களையும் சுற்றி முடித்த பிறகு, கடைசியாக அந்த கோட்டையை பார்க்க வந்தோம். அருகிலிருந்த காடு போன்ற பகுதி எங்கள் கவனத்தை ஈர்த்தது.

எங்கள் குழுவிலேயே நானும், என் பேராசிரியர்  ரகுவரன் சாரும்  சற்று தைரியசாலிகள். மற்றவர்களிடம், நானும் ரகு சாரும் மட்டும் இந்த  காட்டுப்பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு, மாலைக்குள் ரூமுக்கு வருவதாக வாக்களித்து விட்டு காட்டை நோக்கி நடந்தோம்

காட்டுக்குள் போகப் போக, சற்று வித்தியாசமாக உணர்ந்தோம். வெளியே வெயில் போட்டு வாங்கிக் கொண்டிருக்க, அந்த அடர்த்தியான காட்டில் சில்லென்ற காற்றோடு  இலேசான இருளுமாக, ஒரு அமானுஷ்ய நிசப்தம் நிலவியது

பறவைகளின் ஒலி தவிர, வேறு எந்த சத்தமும் இல்லாமல் நிதப்தமாக இருந்தது. நானும் ரகு சாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இன்னும் சற்று உள்ளே நடந்தபின் மரத்தடியில் ஒருவரை கண்டோம்

“என்னப்பா… ஆனந்தராஜன்  ஆராய்ச்சியப் பாக்க போறீங்களா? போங்க போங்க நிறைய படம் காம்பிப்பாரு..” என்று சொல்லிவிட்டு சிரித்தார்

“இதோடு திரும்பிடுவோம் மேற்கொண்டு போக வேண்டாம்!”  என்று ரகுசார் கூற, சும்மா போய் பார்ப்போம் என்று அவரை இழுத்துக் கொண்டு சென்றேன்.

இன்னும் சற்று போனதும் ஒரு பழைய கட்டடம் தென்பட்டது. அதன் முன்னே ஏதோ ஒன்று ஒரு துணியால் மூடப்பட்டிருந்தது. நாங்கள் நெருங்கியதும் மிகவும் வயதான தோற்றத்தில் அழுக்கு உடைகளை அணிந்த ஒருவர் தென்பட்டார் .

“ஏம்பா! இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க… நீங்க யாரு?” என்றார்.

“நாங்க சென்னை அறிவியல் ஆராய்ச்சி கழகத்திலிருந்து வந்திருக்கோம்”

“வெரி குட்! வெரி குட்! சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கீங்க…”

“எதுக்காக இந்த காட்டுக்குள்ள தனியா தங்கி இருக்கீங்க?”

“மனுஷங்க தொந்தரவு இல்லாம தனிமையா ஆராய்ச்சி பண்ண, இந்த இடம் மிகவும் அருமையான, நிசப்தமான இடம்.  சில வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு டைம் மெஷினை கண்டுபிடிச்சேன். ஆனா அப்ப சென்னை அறிவியல் ஆராய்ச்சி  மையத்திலே என்னுடைய மெஷினை ஏத்துக்க மாட்டேன்னுட்டாங்க.  உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த மெஷினை நீங்க உபயோகப்படுத்தி பார்க்கலாம்” என்றார்.

“மிஷின் ஓடுதா?”  நான் சந்தேகத்தோடு கேட்க

“என்னப்பா இப்படி கேக்குற,  நான் ஒரு காலத்துல அந்த ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்தேன். காலமும், சில பேர் செஞ்ச சதியும், என்ன காட்டுக்குள்ள துரத்திடுச்சு” என்றவர், துணியை திறந்து  கால இயந்திரத்தை (time machine)  காண்பித்தார்

“தம்பி! இந்த மெஷினுக்குள்  ஏறி  அதில் உள்ள நாற்காலியில்  உட்கார்ந்து கொள், சீட் பெல்டை போட்டுக்கோ. டெம்பரேச்சர் எல்லாம் செட் பண்ணித் தான் வச்சிருக்கேன். நீ பச்சை  பட்டனை அமுக்கி, அதுல  ஒன்னு முதல் பத்து வரைக்கும் நம்பர் இருக்கும். நீ எந்த  நம்பர் அமுக்குறியோ, ஒரு  நம்பர்க்கு  100 வருஷம் என்ற கணக்கில் எதிர்காலத்துக்கு போயிடுவே”

“வேண்டாம்” என்று ரகு சார் தடுக்க

நான் ஆர்வத்துடன், “சரி நான் முதலில் போய் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அவர் சொல்லியபடியே எல்லா வித ஏற்பாடுகளையும் செய்து விட்டு,  நம்பரை அமுக்க ஆரம்பித்தேன்.

1 2 3 4 5 6 7 8 9 10… வருடம் 3021 என்று காட்டியது

கால இயந்திரம்  லேசாக சுழல, எனக்கு மிதப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. பெரியவர் சொல்லியபடி கண்களை லேசாக மூடி கொள்ள, இதோ நான் மட்டும் மேலே மிதக்கிறேன்.. மிதக்கிறேன்… மிதந்து கொண்டே போகிறேன்….

அப்ப்ப்ப்பா என்ன பிரம்மாண்ட வளர்ச்சி.. மேகத்தைத் தொடுமளவு வானுயர்ந்த கட்டடங்கள்…மெதுவாக ஒரு கட்டிடடத்திற்குள் புகுந்து பார்க்கிறேன்… எங்கேயும் மனிதர்களையே காணவில்லை.

மிஷின்கள் வேலைகளை பார்த்தபடி இருக்க… ரோபோக்களை அங்குமிங்கும் நடந்து, அவைகளை இயக்குவதை  பார்க்க முடிந்தது.

ஏதோ ஒரு குரல் கட்டளையாக ஸ்பீக்கரில் ஒலிக்க… அதற்கேற்றபடி மெஷின்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன… மனிதர்களை எல்லாம் எங்கே காணோம் என்று தேடினேன்.

அங்கிருந்த அறிவிப்பு கணனியின் தொடு திரையில் மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டேன்… 

‘மனித இனமெல்லாம் ஏறக்குறைய  அழியும் நிலைக்கு வந்து விட்டது.. ஆரம்பகால மனித இனத்தை மியூசியத்தில் பார்க்கலாம்’ என்று அறிவிப்பு வந்தது.

எப்படி அப்படியொரு மாபெரும் இனம் அழிந்து போனது என்ற ஆவலில்…அந்த மெஷினிடம் தொடு திரையில் மீண்டும் வினவ .’.2050 வரை ஓரளவு மனித இனம் பிரபலமாக இருந்தது …பிறகு கல்யாணம் என்ற முக்கியமான சடங்கு குறைந்து போனது..

அதன்பின் ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள்… ஆணும் பெண்ணுமாக வாழ்ந்தாலும் அது இறுதியில் பிரிவினையில் போய் முடிந்தது.. எனவே குழந்தைகள் பிறப்பது மிகவும் அபூர்வமாகிப் போனது.

ஒரு காலகட்டத்தில், இந்த மனிதர்களால் ஒரு பயனுமில்லை என்பதை உணர்ந்து கொண்டு, ரோபோக்கள் மனிதர்களை ஆள ஆரம்பித்தது. 

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் தண்டனை… குழந்தை பெற்றுக் கொண்டால் ஆயுள் தண்டனை… போன்ற கடுமையான சட்டங்களை இயற்றி, மீறுபவர்களை சிறையில் தள்ளியது.

அதனால் மனிதர்கள் தனித்தனியே வாழ்ந்து அப்படியே செத்துப் போனார்கள். மீதம் இருந்த மனிதர்களையும் சிறைக்குள் போட்டுவிட்டு… ஒரு ரோபோ இந்த உலகத்தின் தலைவன் ஆகிப்போனது.

இங்கே தலைமை ரோபோ ..XX 001. அவர் உருவாக்கும் ரோபோக்கள் தான் பிரஜ்ஜைகள் .X 01….X 02…X 03… அவர்களும் தலைவருக்குக் கட்டுப்பட்டு, அவருடைய சட்டதிட்டங்கள் படித்தான் வாழ  வேண்டும்.

அவர்களுக்கென்று மனமும், உணர்ச்சிகளும் கிடையாது. மூளையில் கேட்கும் குரலுக்குக் கட்டுப்பட்டு நடக்க  வேண்டும் என்பது மட்டுமே பதியப்பட்டிருக்கும். அதன்படி  நடக்க வேண்டும்

அதில் ஏதாவது அதில் குளறுபடி நடந்தால், அந்தப் பிரச்சினைக்குரிய பிரஜை …இந்த உலகத்திலிருந்து நீக்கப்படும்…அதாவது அழிக்கப்பட்டுவிடும்…’ கணனி தெரிவித்த விபரங்கள் தலை சுற்ற வைத்தது.

மேலும் கவனித்ததில்… ரோபோக்கள் பலவித சைஸ்களில் இருந்தன. மனிதர்கள் வேலை செய்வதைப் போலவே அவைகளும் வேலை செய்து கொண்டிருந்தன.

என்ன… பேப்பரும் பேனாவும் இல்லாமல் கம்ப்யூட்டரிலும், லேப்டாப்பிலும் வேலை செய்து கொண்டிருந்தன. அந்தக் கட்டடங்களின் வாசல்களில் காவலுக்கென்று, பெரிய ரோபோ நாய்கள்..

தலைமை ரோபோவை பார்க்க ஆசைப்பட்டு மெல்ல அதைத் தேடிப் போனேன். அங்கேயும் ரெண்டு சிங்கம் போல, பெரிய நாய் ரோபோக்கள் காவல் இருந்தன. அப்போது ஒரு சின்ன ரோபோ என் கையை பிடித்து இழுத்தது…

“மற்றவர்களுக்கெல்லாம் நான் தெரியாத போது.. உனக்கு மட்டும் எப்படி தெரிகிறேன் என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்”

சின்ன ரோபோ என் கையைப் பிடித்து ஒரு தூணுக்கு பின்னால் அழைத்துச் சென்றது.

“நான் ஒரு ரோபோவால் தவறுதலாக படைக்கப்பட்டவன். என்னுள் ரெண்டு சிப்கள் இருக்கின்றன.. தவறுதலாக புரோகிரோம் பண்ணப்பட்டவன். அதனால் அந்த ரோபோவுக்கு தண்டனை கிடைத்து, அவன் அழிக்கப்பட்டான். அவனை அழிக்கும் முன் என்னையும் அழிக்கச் சொன்னார்கள். ஆனால் அவன் தலைமை மேல் உள்ள கோபத்தில் என்னை அழிக்காமல் விட்டு விட்டான். நீ பார்த்த மற்ற கட்டடம் போலில்லை இது… இதற்குள் நுழைந்தால், இங்கு எல்லா இடங்களிலும் அலாரம் இருக்கிறது .உடனே அடித்து உன் வரவை காண்பித்துக் கொடுத்துவிடும்.

மற்ற இடங்களில் நீ கண்ணுக்கு தெரியாத மாதிரி இந்த இடத்தில் இருக்க முடியாது. இங்கே சென்சாரில் நீ மனிதன் என்று அறியப்பட்டாலும் சரி. ஏதோ ஒரு அபூர்வ விலங்கு என்று வகைப்படுத்தி உடனே தண்டனை கொடுத்து மின் மேடையில் தகனம் செய்யப்படுவாய்”

“ஐய்யய்யோ”என்று அலற

“கத்தாதே… சத்தம் கூட இங்கு  சென்ஸ் ஆகிவிடும்” என்று என்னை அலர்ட் செய்தது. 

எப்படியாவது அங்கிருந்து தப்பித்தால் போதும். இந்த ரோபோ உலகத்துக்குள் நம்மால வாழ முடியாது …என்று பொறியில் அகப்பட்ட எலி போல தப்பிக்க மார்க்கம் தேடி அலைந்தேன்.

எப்பா கேட்கவே பயமாக இருந்தது… தலைசுற்றியது… இந்த உலகத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றியது. இந்த  மெஷினுக்கு அடிமையாக இந்த உலகத்தில் வந்து மாட்டிக் கொண்டு இருப்பதை விட தாயகம் திரும்புவது மேல் என்ற எண்ணம் தோன்றியது.

பெரியவர் பட்டனை அமுக்கி அந்த உலகத்திற்குள் வந்து விட்டு, திரும்புவது எப்படி என்று  சொல்லிக் கொடுக்கவில்லையே என்ற பயம் வாட்டியது. தலைசுற்றியது… கண்ணை இருட்டியது

நல்லவேளையாக இந்த டைம் மெஷின் ஒரு மணி நேரம் மட்டுமே ஒரு ஆளுக்கு இயங்கும் தன்மை உடையதால், நான் கீழே வந்து மெஷின் இருக்கையில் விழுந்தேன். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்ததும் ரகு சாரை பார்த்ததும் தான் உயிரே வந்தது.

“அப்பப்பா…என்ன ஒரு பயங்கரமான அனுபவம். இப்படி ஒரு உணர்ச்சியற்ற மெஷின்கள் மனித இனத்தையே அழித்து விட்டு வெறும் ரோபோக்களே உள்ள ஒரு உலகம் 3021 காலகட்டத்தில் இருக்கும் என்றால் அந்த காலகட்டம் மிக கொடுமையானது ” என்று அதிர்ச்சியில் உளறினேன்

“அந்த உலகத்தை பார்க்க வேண்டுமென்றால்…  நீயும் போய்  பார்த்து விட்டு வா” என்று பெரியவர்  கூற, என் அனுபவத்திலேயே பயந்து போன ரகு சார்  வேகமாக வேண்டாமென தலையாட்டினார்.

பெரியவர் விடாமல், “நீ  உன் நண்பனைப் போல  காலத்தை முன்னோக்கி தள்ளி  அந்த உலகத்தை பார்க்க வேண்டாம். உனக்கு வேற ஒரு மெஷன் வச்சிருக்கேன், அதில் நீ பயணித்தால் உன்னுடைய பிறந்த வருடத்திற்கு… நீ பிறந்த நேரத்திற்கு… போய் விடுவாய். நீ பிறந்த அனுபவத்தை நீயே காண உனக்கு ஒரு வாய்ப்பு” என்றார்.

ரகு சார் லேசாக சலனப்பட தலையாட்டினார்.

“நீ பிறந்தநாள்.. பிறந்த வருடம்.. சொல்லு” என்றார்.

“நான் பிறந்தது 1962…ஆகஸ்டு 4 தேதி…” என்று ரகு சார் கூற

அருகில் இருந்த சின்ன மெஷினுக்குள் அவரை அமரச் செய்து அவருடைய பிறந்த தேதியை அதில் செட் பண்ணி, “பக்கத்திலிருக்கும் பச்சை பட்டனை மட்டும் அமுக்கு” என்று சொல்லி விட்டு பெரியவர் வெளியே வந்தார்

பயந்து கொண்டே ரகு சார் பச்சை பட்டனை அழுத்த, மெஷின்  மெல்ல சுழலத் தொடங்கியது. ரகு சார் பின்னோக்கி போய்க் கொண்டிருந்தார்.

அது அவர் பிறந்த வருடம், பிறந்த மாதம், பிறந்த நாள், நாட்காட்டியில் தெரிய, தமிழ்நாடு… பொன்னாக்குடி  கிராமம்… பாட்டி வீடு… கண்முன் விரிந்தது

ஆச்சி அங்குமிங்கும் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த பெரிய வீட்டக்கா, “ஏட்டி… பரபரப்பா எல்லாரும் அங்கிட்டும் இங்கிட்டும் போயிட்டு இருக்கீக? என்ன விஷயம்?” என்றாள்.

“நம்ம தங்கத்துக்கு பிரசவ வலி ஆரம்பிச்சுடுச்சு”

“சூட்டு வலி யாயிருக்குமோ… சீரக கசாயம் வைச்சுக் கொடுத்துப் பார்த்தீங்களா?”

“மூணு பொழுது கொடுத்தாச்சு… இது பொய் வலி மாதிரி தெரியல.. மருத்துவச்சி சொன்ன நாளும் தான் வந்திடுச்சே…”

அப்போது அங்கே வந்த மகனை அழைச்சு, “ராசா… நீ போயி மருத்துவச்சிய  கையோடு கூட்டிட்டு வா…  நம்ம தங்கத்துக்கு வலி ஆரம்பிச்சுடுச்சு” என்றவள்

மருமகளை அழைத்து, “ஏட்டி பாரு, கற்சட்டியில தண்ணிய கொதிக்க வை. சொம்புல  தண்ணியும் தம்ளர்,  பழைய துணி, மாத்து சேலை, எல்லாத்தையும் எடுத்துட்டு போயி பிரசவ அறையில வை…” 

வீடு என்னமோ மாளிகை மாதிரி பெரியதாக இருந்தாலும், அந்த ஒற்றை அறை தான் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டது. அதுவே  பிரசவத்திற்கும் சரி.. மற்ற எல்லாவற்றிற்கும் சரி .. பெண்களுக்கு ஒரே கூரையாக இருந்தது.

தங்கம் முக்கி முனங்கிக் கொண்டிருந்தாள். ஆச்சி, நாட்டு மருந்து கடைகளில் வாங்கிய வேர்கள் எல்லாவற்றையும் போட்டு ஒரு கஷாயம் வைத்தாள்.

“வாங்கிக் குடிடி… அப்பத் தான் வலி  தொடுபடியா வரும்” என்றாள்

“அம்மா முடியல… அம்மா முடியல..”. என்று தங்கம் அரற்ற

“அம்மான்னு சொல்லாத வழி விடாது…  சாமிய கும்பிடு… முருகா முருகான்னு  சொல்லு”  என்றாள் பெரிய வீட்டக்கா

“அக்கா நீ பிரசவம் முடியும் வரை கூட இரு… தா வேற, கண்ணு வேற ஆன பிறகு,  உன் வீட்டுக்கு போ” என்றாள் ஆச்சி.

“அத நீ  சொல்லணுமாட்டி… கண்டிப்பா இருப்பேன்.. தங்கத்துக்கு உதவாம வேற யாருக்கு செய்ய போறோம். பிரசவம் ஆனதும் கொடுக்கிறதுக்கு கஸ்தூரி வாங்கி  வச்சிருக்கியா?”

“வாங்கிட்டேன்கா…” என்று ஆச்சி தலையசைக்க

“வெத்தலைய ரெடியா வச்சுக்கோ… பிரசவம் ஆனதும் கஸ்தூரிய வெத்தலையில மடக்கி உடனே கொடுத்திடணும். அப்பத்தான் புள்ள பெத்தவளுக்கு வலி  தெரியாம இருக்கும்”

அதற்குள் மருத்துவச்சி வர, வீடு பரபரப்பானது.

“தொப்புள் கொடி வெட்ட கத்திரிப்பான்  ரெடியா இருக்கா? பழைய துணி ரெடியா இருக்கா” வெந்நீர் வச்சிருங்க ஆச்சி” என்று பரத்தினாள்

“பாரு எல்லாத்தையும்  ரூமுல வச்சிட்டா” என்றாள் ஆச்சி.

மருத்துவச்சி  தங்கத்தை வாகாய் படுக்க வைத்து விட்டு, லேசாக வயிற்றை அமுக்கி கொடுத்து, கைய ஆதரவா பிடிச்சிகிட்டு, “ஆத்தா…கொஞ்சம் பொறுத்துக்கோ, இன்னும் செத்த நேரத்துல புள்ள பிறந்துடும்…”

வலி தொடுபுடியாக வர வேண்டி  காத்திருக்க, தங்கம் மூணு, நாலு மணி நேரமாக வலியில் அலற… ஒரு வழியாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த வலிக்கு மதியம் 3 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

“ஆத்தா உன் மவளுக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்கு…” என்றாள் மருத்துவச்சி.

புள்ளய  வெண்ணீர் விட்டு சுத்தம் செய்து… துணியை வைத்துத் துடைத்து ..குப்புறப் போட்டு சனி எல்லாம் எடுத்து விட்டு… பக்குவமா ஆச்சி கையில் கொடுத்தாள் மருத்துவச்சி.

பாரு ஓடிப்போய் சீனிய எடுத்துட்டு வர… எல்லோரும் ஆளாளுக்கு ஒரு ஸ்பூன் சீனியை வாயில் போட்டுக் கொண்டனர். ஆச்சி ஒரு  எவர்சில்வர் தட்டில் வெற்றிலை, பாக்கு, ஒரு சீப்பு பழம்.ஒரு கிலோ சீனி தட்சணை எல்லாம் வைத்து மருத்துவச்சியிடம் நீட்டினாள்..

“ரொம்ப சந்தோஷம் ஆத்தா… நல்லபடியா  தாவேற கண்ணு வேறாக்கி கொடுத்த… புள்ளைக்கு பெயர் வைக்கயில உனக்கு சீலை எடுத்துக் கொடுக்கிறேன். பத்து படி அரிசி… இரண்டு படி அவல்… இரண்டு படி கேப்ப எல்லாம் எடுத்து பேச்சிய வைக்கச் சொல்றேன். நீ அப்புறமா வந்து வாங்கிட்டு போ ” என்றாள் ஆச்சி மனம் முழுக்க சந்தோஷத்தோடு.

வெளியே போயிருந்த ராசா சரியாக அந்த நேரத்திற்கு உள்ளே வர …”ஏலே உனக்கு மருமவன் பொறந்திருக்கான்…” என்று ஆச்சி சந்தோசமா சொல்ல

“ஏல ராசு நீ தப்பிச்சுட்டேல! பொட்ட புள்ள பிறந்தருந்தா, சீரு பண்ணியே  ஒரு வழியாயிருப்ப … சிங்கக் குட்டி பொறந்திருக்கு”என்றாள் பெரியவீட்டக்கா.

வீடு குதுகலமாக.. “சீக்கிரம் அவ மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கும் சொல்லி விட வேணாமா?”

“ராசா ஒரு நட போஸ்டாபீஸ் போய் போன் பண்ணி சம்பந்தி வீட்டுக்கு  தகவல் சொல்லிட்டு வா..”

“ஏட்டி போன்ல சொன்னா நல்லாயிருக்காது. பழமும், சீனியும் வாங்கிகிட்டு… ராசுவையும், பாருவையும்  நேரா போய் சொல்லிட்டு வரச் சொல்லு…. இங்கே இருக்கிற வீரவநல்லூர் தானே வண்டியில போனா ஒரு மணி நேரத்தில போயிடலாம். அதுதான் முறை .சம்மந்தி வீட்டுக்காரர்களுக்கு மரியாதை கொடுத்த மாதிரி இருக்கும்”

ராசு சந்தோசமாக தலையசைக்க… பாரு பட்டு புடவை கட்டிக் கொண்டு ஒரு தார் வாழைப் பழத்தோடு,  அஞ்சு கிலோ சீனியை ஒரு புது தூக்கில் போட்டு, மஞ்சள் துணி கட்டி… வண்டி கட்டிக் கொண்டு மருமகன் பிறந்த செய்தியை  தங்கத்தின் மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்ல கிளம்பினர்

ரகு சார் சந்தோஷமாய், நெகிழ்ச்சியுடன் மெஷினிலிருந்து வெளியே வந்தவர், முகம் மலர … தான் பிறந்த நாளின் நிகழ்வை காண்பித்தவருக்கு நன்றி சொல்லி விடைபெற தேடினால், அந்தப் பெரியவரை காணவில்லை.

சந்தோஷமாக வெளியே வந்த ரகுசாரின் முகமும் இருளடைந்தது. எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு வேகமாக அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்தோம்.

பாதி தூரத்தை கடந்ததும் அதே மரத்தடியில் அதே மனிதர் உட்கார்ந்திருந்தார்

எங்களைப் பார்த்ததும் உரத்த குரலில் சிரித்தவர். “என்ன பெரியவர காணுமா.. இதோ இங்கே இருக்கேன் பாருங்க” என்றவர் முகம், காட்டினுள் நாங்கள் பார்த்த அந்தப் பெரியவரின் முகத்தைப் போல இருக்க, காட்டை விட்டு ஓடத் தொடங்கினோம்

ஒருவழியாக வெளியே வந்தோம். பகலவனின் கதிரொளி முகத்தில் பளீரென்று அடிக்க… அப்படியும்  இன்னும் பயப் பிராந்தி தெளியாமல் நடந்தோம், நாங்கள் அன்று சந்தித்த அனுபவங்கள் மெய்யா.. பொய்யா… என்ற மயக்கத்தில்

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மித்ரா (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ஆர். ஸ்ரீப்ரியா, சென்னை

    நான் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ கவிஜி, கோவை